பேச வேண்டிய
உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.
இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, தொட, விவாதிக்கத் தயங்கிய
ஒரு உண்மை குறித்து பேச முனைந்த இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு முதல்ப் பாராட்டுகள்.
தினந்தோறும் உடலைச் சுத்திகரிக்க உருவாகும் மலம், சிறுநீர் போல்,
ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தந்த கர்ப்பப்பை
தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும்
உதிரம் ஏன் ”தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது. இரத்தத்தை மாற்றி தாய்ப் பாலைத் தருவதைப்
புனிதமாக கருதும் சமூகம், அதே பெண் தன் கர்ப்பப்பையை சுத்திகரித்து வெளியேற்றும் உதிரத்தை
ஒரு தீண்டத்தகாத பொருளாக, மறைக்க வேண்டிய சங்கடமாக, தீட்டாக பாவிப்பது எந்த வகையில்
நியாயம் என்பது புரியவில்லை.
என் வாழ்வுலகம் சார்ந்த பெண்கள், இந்த மாத சுழற்சியில் உதிரம்
கழியும் செயலில் உடல் ரீதியாகத் துவண்டு, தளர்ந்து, பொறுக்க முடியாமல் வலி பொறுத்துக்
கடப்பதை உணர்ந்திருக்கிறேன், அதேநேரம் அவர்களுக்கு அந்த நிகழ்வை சமூக ரீதியாகக் கடப்பதில்
இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளில் அடைபட்டிருக்கும்
அவலம் குறித்து செவிட்டில் அறைந்து வலி தெறிக்கத் தெறிக்கத் தருகிறது மாதவிடாய் ஆவணப்படம்.
மாதவிடாய் என்றால் என்ன என்பது கூட, அதை மாதந்தோறும் சந்தித்துவரும்
பெண்களுக்கு அறிவியல் ரீதியாக மிகத்தெளிவாக விளக்க வாய்ப்பளிக்காத கல்விச்சூழலும் இருக்கும்
சமூகத்தில் இதை யார் எப்படி யாருக்கு புகட்டுவது?
சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என
எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள்
ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது,
அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி
வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இன்னும் மதுரை தேனி மாவட்ட கிராமங்களில் மாதவிடாய் காலத்தில்
தனிமைப்படுத்தபட்டு தள்ளிவைக்க ”முட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில்
உபயோகிக்க தனிப் பாத்திரங்களும் இருப்பதைக் கண்டு கிராமத்தைச் சபிக்கவே தோன்றுகிறது.
சாதியைச் சொல்லி உருவாக்கப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர்களைவிடவும் சம்பிரதாயங்களைச்
சொல்லி இன்னும் கடைபிடிக்கும் ”முட்டு வீடு” மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன்
சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை
என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
நூறு ரூபா கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும்
விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத
சூழலில் இருப்பதுபோல், பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் இதற்கான ’நாப்கின்’னை மாற்ற
வாய்ப்பற்று இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் காணத் துன்பமே மிகுகிறது.
பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அழிக்க வெகு அரிதாக, சில இடங்களில்
மட்டுமே பொருத்தமான இயந்திரங்கள், வாய்ப்புகள் கொண்ட சூழல் அமைந்திருக்கின்றன. பொதுக்
கழிப்பிடங்களில், வேறுவழியின்றி தூக்கிவீசப்படும் பயன்படுத்திய நாப்கின்களை சுத்த செய்ய
அங்கு பணியில் இருக்கும் பெண்கள் படும் துன்பமும் கொடியதாக இருக்கின்றது.
சமூக நலன் கருதி இதைத் தயாரித்த தென்னக ரயில்வே நிர்வாகத்தின்
துணைப்பொதுமேலாளர் திரு. இளங்கோவன் (geetaiis@gmail.com) அவர்களுக்கும், இயக்கிய திருமதி கீதா
இளங்கோவன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வொருவரும் மிகுந்த
கடமைப்பட்டுள்ளோம். இந்தப்படத்தின் குறுந்தகடு இலவசமாக தரப்படுவதாகவும் அறிகிறேன்.
பல தரப்பட்ட சூழல், பலதரப்பட்ட, பல நிலைப்பெண்கள் என மிகுந்த
உழைப்பில், அருமையான திட்டமிடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஒவ்வொருவரும்
மிக நிச்சயமாகக் காணவேண்டும்.
இந்த உலகின்
பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், உடனடியாக தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி,
தன் மகள், தன் தோழிக்கு, இயற்கையான ஒரு நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை
ஏற்படுத்தித் தரவேண்டும்.
இது ஆணுக்கான பெண்களின் படம் என
அடித்தலைப்பு சூட்டப்பட்டிகிறது, நான் இது குடும்பத்திற்கான படம் என்றே பார்க்கிறேன்.
படத்தை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை.
சேர்க்க முடியும், சேர்ப்போம்.
நன்றி தமிழ் மரபு அறக்கட்டளை
-