தன்வினை தன்னை நம்பியோரையும் சுடும்!

சில சினிமாக்களை வெறும் இரண்டு மணி நேரப் பொழுதுபோக்கு எனக் கடந்துவிட முடிவதில்லை. அப்படி கடக்க முடியாத ஒரு படம் மலையாளத்தில் வெளியான 'சப்பா குரிசு'. படம் பார்த்துவிட்டு படம் குறித்து ஃபேஸ்புக்கில் சில வரிகள் எழுதியிருந்தேன். "படம் நல்லாருக்கா?" என்ற உரையாடல்களில், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது "நெஜமாகவே நெட்ல அப்படி இருக்குதா?" என்ற இருவரின் கேள்விதான். 

"நெட்ல இண்டியன் ஸ்கேண்டல் வீடியோனு தேடிப்பாருங்க, அப்ப புரியும்!" என்றேன். 

கேட்டவர்கள் இருவரும் பெண்கள் என்பதால், ஒருவேளை அவர்கள் தேடியிருந்தால் அதுகுறித்து மேற்கொண்டு என்னிடம் கேட்கவோ பேசவோ ஏதும் இல்லாமல் போயிருக்கலாம். அதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு கிடைத்த வீடியோ காட்சிகளில் பெரும்பாலும் பெண்களே பலிகடாக்களாக இருந்திருக்கும் சாத்தியம் அதிகம் என்பதே. 

காமம் நிதர்சனமானது. வெகு இயல்பானது. வெகு அழகானதும் கூட. தெரிந்தோ தெரியாமலோ அது குறித்த விழிப்புணர்வை, கல்வியைக் கொடுக்காமல், அதைப் பொத்திவைத்து ஒரு எட்டாப் பொருளாக, பாவமாக, குற்றமாக பாவனைகள் ஏற்படுத்தி, எட்டாப் பொருள் கிட்டினால் ஏற்படும் பரவசத்தில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறோம். 

ஒரு காலத்தில் வயது வந்தவர்களுக்கான படங்கள், காட்சிகள் கிடைப்பது அரிதினும் அரிது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒன்றோ இரண்டோ திரையரங்குகள் மட்டுமே தீனி போடும். இன்றைக்கு இணையத்திலும், எம்எம்எஸ் வழியாகவும் வேண்டிய நொடியில் கிட்டுகின்றன. முன்பெல்லாம் அதெற்கென நடிகர்கள் நடித்து, இயக்கிய படம், காட்சிகள் மட்டுமே கிடைக்கும். 

ஆனால் இன்றைக்கு கிடைப்பவை 90 சதவிகிதம், நிஜமாய் நிகழ்ந்தேறிய காட்சிகள். இருளும் ஒளியுமாய், சில சமயம் தலையைப் திருப்பிப் பார்க்க வேண்டிய கோணத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 

மிக மிக அரிதாக அதற்கென நடிப்பவர்கள், வெகு அரிதாக கணவன் மனைவியாக இருப்போர், பெரும்பாலும் காதல் இணைகள், அதைவிடப் பெரும்பாலும் பிறன்மனை உறவுகள் என இணையத்தின் காம வெளியெங்கும் நிரம்பிக் கிடக்கின்றனர். "எப்படி, ஏன் இவை பதிவாகின்றன?" என்பதற்கு மிகமுக்கியமான பதில் - ஆர்வம், அதீத ஆர்வம், ஆர்வக் கோளாறு, கொஞ்சமே கொஞ்சமேனும் எதிர்காலத்தில் தன் பாதுகாப்பிற்காக அல்லது அவர்களை சமாளிக்க அல்லது மிரட்டுவதற்கான வக்கிரம் என்பது மட்டுமே.

வெப்கேம் உரையாடல்களின் போது பதிவு செய்துகொள்வது, கையில் செல்போனில் உள்ள கேமரா மூலம் சுயமாகப் பதிவு செய்துகொள்வது, செல்போனை ஒரு இடத்தில் பொருத்தி பதிவு செய்து கொள்வது என சுயமாக, விரும்பி, தெரிந்து, நம்ம போன் தானே என்னவாகிவிடப்போகிறது என்ற அசட்டு நம்பிக்கையில்தான் நிறைய நடக்கின்றன. அப்படியான காணொளிகளில், பெரும்பாலும் அதில் தென்படும் பெண்கள் ரொம்பவும் தயங்குவார்கள், அய்யே இதெல்லாம் வேணாம் என பலகீனமாக எதிர்ப்பார்கள். ஆனாலும் அவர்களின் கண்களில் பயம், எச்சரிக்கை உணர்விற்குப் பதிலாக அந்த ஆடவனுடன் அந்த நேரத்தில் கொண்டிருக்கும் பிரியத்தால், மீட்டிவிடப்பட்ட மோகத்தால், நம்மையே கொடுக்கிறோம் இதனால் என்னவாகிவிடப் போகிறதென்ற ஆழ்ந்த அசட்டு நம்பிக்கையால், தன்னைப் பகிர்ந்ததோடு தன்னை அல்லது தங்களைப் பதிவுசெய்யவும் அனுமதித்து விடுகிறாள். 

சில காணொளிக் காட்சிகளில் மட்டுமே அதில் ஈடுபடும் ஆடவனும் தெரிவான், மற்றபடி முழுக்க முழுக்க அதில் பெண்ணே வியாபித்திருப்பாள். இன்னொரு வகை, தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமென்று ஆழ்ந்திருக்கும் தருணத்தில், அதைக் காணும் ஏதோ ஒரு ஜோடி விழிகள் தன் செல்போன் வழியே அதை பதிவு செய்வதும் நடக்கின்றது. இப்படிப் பதிவு செய்யப்படுவதற்கு காரணம், பெரும்பாலும் அதை மீண்டும் மீண்டும் ரசிக்க வேண்டும் என்பது மட்டுமே! 

'சப்பா குரிசு' படத்தில் வரும் இரண்டு பேர் ஒரு பெருநகரத்தில் சமகாலத்தின் இரண்டு துருவங்களாக இருப்பவர்கள். நாணயத்தின் பூ, தலை என்பது போல மிக நெருக்கத்தில் அமைந்துவிட்ட துருவங்கள் என்றும் சொல்லலாம். 

கட்டுமானத்துறையை நிர்வகிக்கும், வசதிகளும், தோழிகளும் நிறைந்த அர்ஜூன் (ஃபகத் பாசில்) ஒவ்வொருவரும் இதுதான் சொகுசு என நினைக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவன். தன்னிடம் பணிபுரியும் சோனியாவோடு (ரம்யா நம்பீசன்) மிக நெருக்கமாக இருக்கிறான். புதிய வியாபாரம் ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும் தருணத்தில் இருக்கிறார்கள். அவனுக்கு வேறொரு பெண்ணோடு திருமணம் உறுதியாகிறது. தனிமையாய் தனது வீட்டில், ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்புகளை தனது ஐபோனில் பதிவு செய்து கொண்டிருப்பவனின் அழைப்பு மணி அடிக்கிறது. வந்திருப்பது சோனியா என்பதால், கதவு திறக்கும் நொடியில் அவள் முக பாவனையைப் பதிவு செய்துகொண்டே உள்ளே அழைத்து, அணைப்பு முத்தமென ஐபோனில் பதிந்தபடி அடுத்தடுத்து முன்னேறுகிறான், அவள் ஓரிரு முறை தட்டிவிட்டு தடுக்கிறாள். அவளின் ஆசையும் நம்பிக்கையும் அதைவிடப் பெரிதாக இருக்கின்றது. அருகிலொரு பெட்டிமீது பதிவாகும் வகையில் வைத்துவிட்டு முன்னேறுகிறான். 



ரப்பர் பேண்ட் போட்டு சுற்றிய நோக்கிய 3310 போனை வைத்துக்கொண்டு, தனது அன்றாடங்களுக்கு போராடிக் கொண்டிருக்கும், ஒரு சூப்பர் மார்கெட் துப்புரவாளனான அன்சாரிக்கு (வினித் சீனிவாசன்) ஒரு சாலையைக் கடப்பதிலும், எதிரில் நடக்கும்போது யாரேனும் இடித்தால் அதைச் சமாளிப்பதிலும் கூட தடுமாற்றம் உண்டு. தினமும் சிக்கனமாய் மெஸ்ஸில் சாப்பிடும்போதும், பணியிடத்தில் அடிமையாக பாவிக்கும் மேலாளரிடமும் அவமானப்பட்டு நொந்துபோகிறான். அங்கிருக்கும் பெண்ணொருத்தி இவனையே நோக்குகிறாள், அவன் பார்வையை விரும்புகிறாள், இவனிடமே பேச விழைகிறாள், அவன் மீது பிரியம் காட்டுகிறாள். 

அர்ஜூன் சோனியா இடையே அர்ஜூன் திருமணம் குறித்து பிரச்சினை எழும் இக்கட்டான தருணத்தில் போன் தொலைந்து, அதை எப்படி இயக்குவதென்று கூடத்தெரியாத அன்சாரியின் கையில் கிடைக்கிறது. 

பயன்படுத்துவது எப்படியெனத் தெரியாமல் போனை அணைத்து வைத்திருக்கும் அன்சாரிக்கும், அந்த போனிற்குள் அந்தரங்கத்தின் வாயிலாக, மொத்த வாழ்க்கையும் அடமானம் வைத்துவிட்டு, போனை மீட்க தொடர்ந்து தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கும் அர்ஜூனுக்கும் இடையே அவ்வப்போதான உரையாடல்கள் எனத் தொடங்குகிறது கண்ணாமூச்சி போராட்டம். 

சிங்கம் போல் இருந்தாலும், அந்த போனிற்காக அன்சாரி சொல்வதற்கெல்லாம் ஆடும் நிலைக்கு கீழே இறங்குவதும், போனிற்குள் என்ன இருக்கிறதென்று தெரியாமலே, எதுவும் செய்யத் தயாராக இருக்கும் அர்ஜூனை வைத்து தன்னை அவமானப்படுத்திய வாடிக்கையாளர், மேலாளரைப் பழிவாங்கும் அன்சாரி, தன்னையொரு சக்தி வாய்ந்தவனாகவும் உணர்கிறான். 

போனை திருப்பித் கொடுத்துவிடலாம் என தீர்மானிக்கும் சூழலில் போன் பேட்டரி தீர்ந்துவிடுகிறது. தெரிந்த மொபைல் கடையில் சார்ஜ் போட போனைக் கொடுக்கிறான். அன்சாரி போனைத் திருடி வந்திருக்கிறான் என நினைத்த கடைக்காரர் சார்ஜ் போட்டுவிட்டு திருப்பித் தந்த அடுத்த காட்சியில் அர்ஜூன் - சோனியா அந்தரங்கம் இணையத்திலும், எம்எம்எஸிலும் உலகத்திற்கு விருந்தளிக்கப்படுகிறது. அந்தப் புள்ளியில் திருமணம் நின்று, வியாபாரம் கெட்டு, தற்கொலை முனைக்குச் செல்லும் சோனியா என எல்லாம் சிதைந்துபோகிறது. 

இணையத்தில் எளிதாய்க் கிடைக்கும் ஒரு ஸ்கேண்டல் வீடியோவை ரசிக்கும் கண்களுக்கும், அதில் கிளர்ச்சியுறும் ஹார்மோன்களுக்கும், அப்படிப்பட்ட அந்தரங்கக் காணொளிகள், நிழற்படங்கள், உரையாடல்கள் எவ்வளவு பெரிய காதலில், கட்டாயத்தில் அல்லது நம்பிக்கையின் மேல் கட்டமைக்கப்பட்டிக்கும் என்பது தெரிந்திருக்க வாய்ப்புண்டா எனத் தெரியவில்லை. 

ஒரு குறுகுறுப்பிற்காக, விளையாட்டாக, ஆர்வக் கோளாறில், விஷமத்தனமாக என ஏதோ ஒரு காரணத்தினால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வின்மேல் இருந்த காதல், பிரியம், நம்பிக்கை அல்லது கட்டாயம், எந்த வகையிலும் தொடர்பில்லாத எவரோ ஒருவரின் மூலம் கட்டவிழ்க்கப்பட்டு கடை பரப்பப்பட்டு, அதில் ஈடுபட்டிருந்தோரை நிலைகுலைய வைத்து சூன்யமாக்கிவிடுகிறது. 

கோயில் கருவறையில் பெண்களோடு அர்ச்சகர், கல்லூரி வளாகத்தில் தோழியோடு மாணவன், வகுப்பறையில் ஆசிரியையோடு தலைமையாசிரியர், நிறுவனப் பெண்களோடு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என சமீபத்தில் அதிர்வுகளை உண்டாக்கிய காணொளிகளில் அந்த அர்ச்சகர், மாணவன், தலைமையாசிரியர், அதிகாரி என அனைவருமே, தங்கள் முழு விருப்பத்தின் பேரில், சுய அறிவோடு, அந்தப் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பதிவு செய்திருக்கின்றனர். அந்தக் காட்சிகளை அவர்களாகவே விருப்பட்டு வெளியிட்டிருக்க சாத்தியங்கள் மிகக் குறைவு. கைபேசி பழுது நீக்க கொடுத்த இடத்தில், கணினியோடு இணைத்து சார்ஜ் போடக்கொடுத்த இடத்தில் என அந்தக் காட்சிகள் உருவப்பட்டு, இணையத்தில் வெளியாகி, சில நிமிட இசைவுக்கு அவர்களின் தலைமுறையே எதிர்பார்க்காத அளவு, தாங்க முடியாத அளவுக்கு சேதாரங்களை, அவமானத்தை, காயத்தை அளித்துவிட்டுப் போய்விடுகின்றன.. 

நம் அந்தரங்கங்கள், தொடர்புகள், தனிப்பட்ட முக்கிய விபரங்கள், வியாபார விபரங்கள், வங்கிப் பரிமாற்றங்கள், பயணங்கள் உட்பட அனைத்துமே கையடக்க போன் அல்லது கணினியில் சுருங்கி அடைபட்டுவிட்ட சூழலில் அதைத் தொலைத்தால் எத்தனை ஆபத்து என்பதையும், அல்பத்தனமாய் ஆர்வக்கோளாறின் காரணமாய்ப் பதிவு செய்யப்படும் அந்தரங்கங்கள் எத்தனை கொடூரமான ஆபத்து என்பதையும் உணர்த்தும் பாடம் தொடர்ந்து தொடர்ந்து மக்களுக்கு நடத்தப்பட்டே தீரவேண்டும். 'சப்பா குரிசு' அப்படிப்பட்ட ஒரு பாடம் தான். 

-

நன்றி :  தி இந்து

-

அது போதும்!



மழை கொட்டித் தீர்த்த விடியல் கொள்ளை அழகு. விடிவதற்கு முன்பே தெருவிளக்கு வெளிச்சத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் தண்ணீரைத் தாண்டி காலை நடைக்காகச் செல்வதில் அலாதி சுகம். வழக்கமான நேரம்தான், வழக்கமான வீதிதான், வழக்கமான நடைதான். எனினும் அதிகாலை நடையின்போது வீதிகள் காட்டும் முகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமானது.

வீதித் திருப்பத்தில் இருக்கும் மரமல்லி மரத்தைப் பார்த்தபோது, முந்தைய சந்திப்பில் சிதறிக் கிடந்திருக்கும் பவழமல்லியைப் பார்க்கத் தவறியது நினைவுக்கு வந்தது. மல்லி எங்கு கிடந்தாலும் தன் வாசத்தின் மூலம் தான் அங்கேயிருக்கிறேன் எனச் சொல்லி விடுகிறது.

ஒவ்வொரு காலையிலும் மரமல்லி கொத்துக்கொத்தாய் உதிர்ந்து கிடக்கும். தூரத்திலிருந்து பார்க்கும்போதே, சோடியம் விளக்கு வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு கிடக்கும். பெருக்கப்படாத மரத்தடியில் தினமும் விழும் பூக்கள் குப்பையாய் தேங்கிக்கிடக்க, அதன்மேல் வெள்ளையாய் உதிர்ந்து கிடக்கும் மல்லி என்னை அள்ளிக்கொள் என்றழைக்க, ஒருபோதும் தவறுவதில்லை. என்றைக்காவது சட்டெனக் குனிந்து ஒன்றோ இரண்டோ பூ எடுத்து, நாசியருகே வைத்து மூச்சைஆழ்ந்து இழுப்பதுண்டு. வேகமாய் மூச்சை இழுக்கையில் பெரிதாகப் பூவின் வாசத்தை உணர்ந்துவிட முடிவதில்லை. இயல்பான சுவாசத்தின்போது பூ கசியவிடும் வாசனையே இயல்பாய் ஒரு சுகந்தத்தை தருகின்றது. கடக்கும் கால்களும், வாகனச் சக்கரங்களும் கருணையின்றி மலர்மேல் கடந்து போவதை பலமுறை காண்பதுண்டு. குறைந்த பட்சம், அந்த மரத்தைக் கடக்கையில் எந்தப் பூவையும் மிதித்துவிடாமல் ஒதுங்கிச் செல்வது மட்டுமே, என்னால் சாத்தியமாகிறது.




ஒன்று மிக மிகச் சொற்பமாய் மட்டுமே மரமல்லி உதிர்ந்துகிடந்தன. ஓரளவு தெளிவாயிருந்த மரத்தடியில், இரவு பெய்த மழைத் தண்ணீர் ஓடிய தாரைகள் தெரிந்தன. எத்தனை பூக்கள் என எண்ணிவிடும் அளவுக்கே கிடந்தன. மரமல்லிக்கு எதும் சீசன் இருக்குமோ, இனி உதிர்வது குறையுமோ என்ற சந்தேகம் எழுந்தது. அநேகமாய் இரவு அடித்த மழையில் பூக்கள் கொட்டி அடித்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். அதனால் இப்போது கொஞ்சம் பூக்களே உதிர்ந்திருக்கலாம் எனத் தோன்றியது.

மரத்தை அண்ணாந்து பார்த்தேன். சோடியம் விளக்கு வெளிச்சம் இலையில் பட்டு மின்னிக் கொண்டிருந்தது. அவ்வளவாய் பூக்கள் கண்ணில் படவில்லை. மரத்தைப் பிடித்து உலுக்கிப் பார்க்கலாமா எனத் தோன்றியது. உலுக்குதல் எளிதல்ல என மரத்தின் பருமன் சொன்னது. மரத்தைவிட்டு தேவையான தூரம் கடந்திருந்தேன்.

வெள்ளை ஷூ அணிந்து கதர் வேட்டி சட்டையில் திடகாத்திரமாய் வழக்கமாய்  நடக்கும் அந்தப் பெரியவர் எதிரில் வந்து கொண்டிருந்தார். எவரையும் அண்ணாந்து பார்த்துப் பேசவைக்கும் உயரம் கொண்ட அவருக்கு வயது 70 க்குமேலும், எடை 90 கிலோவிற்கு மேலும் இருக்கலாம். மார்பை நிமிர்த்தியவாறு சீரான வேகத்தில் தொய்வின்றி நடக்கும் அவரைக் காணும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நொடிப்பொழுதேனும் கொஞ்சம் விரைப்பாய் நடை போடவைக்கும்.

டவர் லைன் தாண்டும்போது பாலு எதிரில் வந்தார். நீண்ட கால நண்பர். அந்த நீள வீதியில் மட்டுமே திரும்பத் திரும்ப நடப்பவர். ஒவ்வொரு முறையும் எதிர் திசையில் மட்டுமே அவரைக் காண்பதுண்டு. அவர் என்னை ஒதுங்கியோ, நான் அவரை ஒதுங்கியோ அல்லது முன்பின் என ஒரே திசையிலோ நாங்கள் ஒருபோதும் நடந்ததில்லை. தினமும் எதிரெதிரே சந்தித்தாலும் பேசிக்கொள்வதில்லை. கொஞ்சம் தூரத்திலேயே ஒருவரை ஒருவர் கவனித்து விடுவோம். 10 அடி தூரத்தில் இருக்கையில் பெரிய புன்னகையோடு வணக்கம் சொல்லும் பாவனையில் கை உயர்த்திக் கொண்டே இருவருமே கடந்து விடுவதுண்டு.  சொற்கள் தேவைப்படாத சிநேகத் தருணங்கள் ஒருவித அழகு.

தார் சாலையில் மழைபெய்த ஈரம் மட்டுமிருந்தது. பாதளச்சாக்கடைக்கு தோண்டிய, இன்னும் தார் ஊற்றப்படாத வீதிகளில் மட்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படித் தேங்கிக்கிடந்த நீரில் பாட்டி ஒருவர் என்னவோ செய்து கொண்டிருந்தார். தெரு விளக்கு வெளிச்சம் அவர் மீது விழுந்து மொத்தமாய் கொண்டிருந்தது. செம்புலப் பெயல் நீர் தகதகதத்தது. ஒரு பெரிய கேரி பேக்கில் நீரை அள்ளிக் கொண்டிருந்தார். தண்ணீரில் மீன் பிடிக்கிறாரோ எனத் தோன்றியது. நேத்து பெய்த மழையில் எப்படி மீன் இருக்கும் என்றது புத்தி. அகலமான துண்டு அல்லது வேட்டி கொண்டு வாய்க்காலில் மீன் பிடித்த காலமும், பெரிய ஜவுக்காயிதத்தில் தண்ணீரை அள்ளி மீன் கிடைக்குமா எனத் தேடிய நாட்களும் நினைவில் வந்தது.

மலையாளிகள் இருவர் வழக்கம்போல் மலையாளத் தமிழில் உரக்கப் பேசிக்கொண்டே கடந்தார்கள். ஏன் இவர்கள் இருவரும் மலையாளத்தில் பேசிக்கொள்ளாமல் தமிழில் பேசிக்கொள்கிறார்கள் எனப் புரியவில்லை.

நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர் பைக்கில் நின்றவாறு, வாசல் கேட்டின் உள்பக்கம் நின்றிருந்த அவர் வயதொத்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். காலை 5 மணிக்கு சாவகாசமான சாயங்கால அரட்டைபோல் அமைந்த அந்தக் காட்சி ஆச்சரியமாய் இருந்தது.

ஒரு வீட்டின் முன்பிருக்கும் செடியில் காவி வேட்டிக்காரர் பூ பறித்துக்கொண்டிருந்து தெரிந்தது. சில வாரங்களுக்குமுன் ஒரு மாலைப் பொழுதில் காலனி பூங்காவில் பெருசுகள் மத்தியில் கொஞ்சம் அதிகாரத் தோரணையோடு பேசிக்கொண்டிருந்தார். புல்வெளியில் ஓடும் குழந்தைகளை அங்கிருந்தே விரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொழுதில் தினமும் எதாவது ஒரு வீட்டு செடிகளிலிருந்து சில பூக்களைப் பறித்து தான் வைத்திருக்கும் கேரி பேக்கில் சேகரித்துக் கொண்டேயிருப்பார்.

வீதிகளைக் கடந்து அந்த முக்கிய சாலையில் இணையும்பொழுது, இருவர் சரசரவென என்னை முந்திக்கொண்டு நடந்தனர். அதில் ஒருவர் எதாவது சிக்னலில் தென்படும் போக்குவரத்துக் காவலர். ஏட்டு மட்டத்தில் இருக்கவேண்டும். இன்னும் ஏட்டாக இருப்பாரா அல்லது எஸ்.எஸ்.ஐ நிலைக்கு உயர்ந்திருப்பாரா என நினைக்கையிலேயே அவர்களுக்கும் எனக்குமிடையேயிருந்த இடைவெளி வளர்கிறது. 



’எப்படி அவர்கள் மட்டும் இத்தனை வேகமாய் நடக்க முடிகிறது, நம்மால் முடியாதா?’ என நானும் நடையை எட்டிப்போடுகிறேன். வேகம் கூடியும் இடைவெளி சுருங்கவேயில்லை. வியர்வை புதிதாய்க் கிளைவிடுகிறது. மூக்கில் சுவாசித்தது போதாமல் வாயாலும் சுவாசிக்க வேண்டியிருப்பதை உணர்கிறேன். மூச்சுக்காற்றில் அணிந்திருந்த கண்ணாடியில் ஆவி படர்வது தெரிகிறது. புழக்கப்பட்ட வார்த்தைகளில் சொல்லவேண்டும் நுரை தள்ளிக்கொண்டிருந்த நிலையை உணரத் துவங்கினேன். ’இது தேவையா!?’யென என்னையே கேட்டேன். ”தேவையில்லை”யென என்னிடமே சொன்னேன். இயல்புக்கு வந்தேன். ஆனாலும் இப்போது வேகம் கூடியிருந்தது. வலது பக்க வீதியில் நுழைகிறேன்

முதல் வீடு காவல்துறை கண்காணிப்பாளர் வீடு. கேட் ஓரம் சென்ட்ரி நின்று கொண்டிருக்கிறார். நிற்கும் துப்பாக்கியை ஒரு கையில் பிடித்தவாறு, மறு கையில் மலரொன்றை முகத்தருகே சுழற்றிக்கொண்டிருக்கிறார். அது நந்தியாவட்டை பூவாகயிருக்கலாம். எப்போதோ நந்தியா வட்டை பூவைப் பறித்து அப்பா கண் இமைகளில் அமுக்கி, இது கண்ணுக்கு குளிர்ச்சி எனச்சொன்னது நினைவுக்கு வருகிறது. கையில் கேமரா இருந்திருக்கலாம் எனத்தோன்றியது. மாவட்ட ஆட்சியர் வீட்டு வாசலோரம் ஒருவர் உதிர்ந்துகிடந்த பூக்களைக் கூட்டி சாக்கடையில் தள்ளிக்கொண்டிருக்கிறார். ஆட்சியரின் கேம்ப் ஆபீஸ் வருகிறது. கடந்த ஆண்டு நண்பர் ஆல்பர்ட்டோடு ஆட்சியரை இந்தக் கேம்ப் ஆபிஸில் சந்தித்துப்பேசியது நினைவுக்கு வருகிறது. வளாகத்திற்குள் அவர் வாக்கிங் போய்க்கொண்டிருப்பாரா என எட்டிப்பார்க்கிறேன். உள்ளே அவரின் வெள்ளை ஸ்கார்பியோ நடுச்சாம மழை நீர்த்துளிகளோடு மின்னுகிறது. காரின் மேற்பகுதி முழுதும் மேலேயிருந்து உதிர்ந்திருக்கும் மரமல்லிப் பூக்களால் போர்த்தப்பட்டிருக்கிறது. ’வெள்ளை பூக்கள் போர்த்திய வெள்ளைக்கார்’ என்றொரு வரி மனதில் முளைக்கிறது.

இரண்டாம் திருப்பத்தில் மீண்டும் ஒரு மரமல்லி மரம். ஓரமாய் கொஞ்சம் இடம்விட்டு தெரு முழுக்க பூக்கள் விழுந்து கிடக்கின்றன.  இங்கு மட்டும் எப்படி இத்தனை பூக்களென நினைத்துக்கொண்டே கடக்கிறேன்.

காலை நடை துவங்கிய நாள் தொட்டே முந்தைய நாள் பயணப்பட்ட தடத்தில் முடிந்தவரை செல்லக்கூடாது என்பது தீர்மானம். திருப்பங்களில் மனம் எங்கே திரும்ப பணிக்கிறதோ அதன் வழியில் நீள்வதே அன்றைய பாதை. கிட்டத்தட்ட எல்லா நாளும் ஆறுமணிக்குள் வீடு திரும்பி ஏகாந்தமாய் முதல் மாடியில் இருக்கும் வீட்டு வாசலில் வியர்வையோடு அமர்ந்து வீசும் தென்றலில் உலரும் போதையின் மீது பெருங்காதல்.

வீதியோர அரளிச்செடியில் ஒரு பெண் பூ பறித்துக் கொண்டிருக்கிறார். இருளும் விளக்கொளியும் கலந்த ஒய்யார வெளிச்சத்தினடியில் குழந்தையொன்று நின்று கொண்டிருக்கிறது. ’இவ்வளவு சீக்கிரத்தில் குழந்தை முழிச்சிக்குதே’ ஆச்சரியம் சூழ்கிறது. வீட்டில் மகள் இந்த நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள். பள்ளி நாட்களில் அவளை எழுப்ப குறைந்தபட்சம் அரைமணி நேரப் போராட்டம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சின்னப்பிஞ்சு இத்தனை காலையில் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறதே என நினைத்துக்கொண்டே, குழந்தையைப் பார்த்து பெரிதாய் புன்னகைக்கிறேன். என்னைப் பார்த்து தலையை ஆட்டியவாறே இதுவரை கண்ட அனைத்துப் பூக்களையும் ஒன்றாய்க் கோர்த்த அளவில் புன்னகையொன்றை வீசுகிறது. மெல்லிய மின்சாரம் பாய்ந்ததுபோல் உற்சாகம் தோன்றுகிறது. வேகத்தைக் குறைத்து ’வா’ என சாடைகாட்டியபடி கடக்கிறேன். ’மாட்டேன்’ என இடவலமாய் தலையசைத்துச் சிரிக்கிறது. சில அடிகள் கடந்திருப்பேன், குழந்தை பின்னால் ஓடிவருகிறது என்ற உணர்வு தோன்ற திரும்பிப் பார்க்கிறேன். பின் தொடர்ந்து ஓடிவந்துகொண்டிருந்தது. நின்று ’வா’வென கை நீட்டுகிறேன். வந்த வேகத்தில் என் கையில் தட்டிவிட்டு தன் அம்மாவை நோக்கி ஓடுகிறது. அந்த பெண் முகத்தை அப்போதுதான் பார்க்கிறேன் முகமெங்கும் மலர்ச்சியாய் தன்னை நோக்கி ஓடிவரும் பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அந்த மழலை கொடுத்த புன்னகைப் பரிசும், உற்சாகமும் அந்த தினத்திற்கு ரொம்பவே போதுமெனத் தோன்றுகிறது.


-

தீராப்பசி





காரிருள் கவ்விய
நிலவற்ற பொட்டலில்
துணையிருந்து
இருள் தின்ற
ஒற்றை விளக்கின்
திரியை
போதுமென
நசுக்கி விட்டேன்

இடைவிடாது 
துளைக்கும் காற்றில்
சுரந்து குவியும் இருளை
இனி
நான் தின்ன வேண்டும்
இல்லையெனில்
இருள்
என்னைத் தின்ன
அனுமதிக்க வேண்டும்!

-