இட்டேரி
பிரவக்குட்டி
மூட்டுக்குட்டி
வட்டில்
சோறாக்குறது
சாறுகாய்ச்சறது
மொளசாறு...
இந்த சொற்கள் உங்களுக்கு பழக்கப்பட்டதா!!!???
இவை கொங்கு மண்டலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளில் சில...
மேலே குறிப்பிட்ட வட்டார சொற்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பகிர்ந்து கொண்டவை.
இட்டேரி:
பட்டி அல்லது கட்டுத்தறையிலிருந்து விவசாய பூமி வழியாக ஆடு, மாடுகளை மற்றோரு நிலத்திற்கு ஓட்டிச் செல்வதற்கு பயன் படுத்தப்படும் பாதை. முக்கியமான செய்தி இந்தப் பாதையின் இரு பக்கமும் ஆடு, மாடுகள் விவசாய பூமியிலிருக்கும் பயிர்களை கடித்து விடாமல் இருக்க முள் செடி அல்லது கிளுவை மரம் கொண்டு வேலி அமைக்கப் பட்டிருக்கும்.
பிரவக்குட்டி, மூட்டுக்குட்டி:
ஆடுகளில் இரண்டு வகை உண்டு. செம்மறி(செம்புளி) ஆடு, வெள்ளாடு. பொதுவாக எல்லோரும் இரண்டு வகை ஆடுகளின் குட்டிகளையும் ஆட்டுக்குட்டியென்றே அழைப்பது வழக்கம். ஆனால் கொங்கு மண்டலத்தில் செம்மறி ஆட்டின் குட்டிகளை பிரவக்குட்டி எனவும், வெள்ளாட்டின் குட்டிகளை மூட்டுக்குட்டி எனவும் அழைப்பதுண்டு.
வட்டில்:
சாப்பிடப் பயன்படுத்தும் வட்டிலை இன்று தட்டு என்றோ அல்லது பிளேட் என்றோ அழைக்கிறோம். தட்டு என்பது முழுவதும் தட்டையாக இருப்பது. அதுவே பெரிதாக இருந்தால் அதன் பெயர் பராத்து. வட்டில் என்பது தட்டையாக இருந்து விழிம்பு வளைந்து உயரமாக இருக்கும். இன்று எங்கும் வட்டிலை வட்டில் என்று அழைப்பதில்லை.
சோறாக்குதல்:
நாம் வெகு இயல்பாக பயன்படுத்தும் சாதம் அல்லது ரைஸ் என்பதின் உண்மையான பெயர் சோறு. சோறாக்குதல் என்பது மிகப் பெரிய அர்த்தம் பொதிந்த வார்த்தை இது... அரிசியை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வக்கும் போது அரிசி சோறாக பெருகி வரும். சோறாக பெருகுவதைத்தான் சோறாக்குதல் என்பர்.
சாறுகாய்ச்சுதல்:
நாம் வெகு இயல்பாக பயன்படுத்தும் குழம்பு அல்லது சாம்பார் என்பதின் உண்மையான பெயர் சாறு. சாறுகாய்ச்சுதல் என்பது தேவையானவற்றை போட்டு காய்ச்சியெடுத்தால் வருவதுதான் சாறு.
மொளசாறு:
நாம் ரசம் என்றழைப்பது தான் மிளகு சாறு. மிளகு கொண்டு (மிளகாய் சிலி நாட்டிலிருந்து 15ம் நூற்றாண்டில் வந்தது) காய்ச்சுவது மிளகு சாறு, இது மருவி மொளசாறு என்றழைக்கப்பட்டது.
........................................................................................................................................
இந்த வார்த்தைகளை திரு. பெருமாள்முருகன் பகிர்ந்து கொண்டு விளக்கியபோது எனக்கு முழுக்க முழுக்க என் ஆயாவின் (இங்கு பாட்டியை ஆயா என்றுதான் அழைப்போம்) நினைவு வந்தது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் ஆயா மேலே குறிப்பிட்ட அனைத்து வார்த்தைகளையும் (வட்டாராச் சொற்கள்) மிக இயல்பாக பயன்படுத்தி வந்தார். கடந்த 25 வருட காலத்தில் என் ஆயாவும் கூட இந்த வார்த்தைகளை (கிராமத்தில் வசித்தாலும்) கட்டாயமாக புறந்தள்ளிவிட்டு கொஞ்சம் நெருடலோடு எங்களுக்காக சாப்பாடு எனவும், குழம்பு எனவும், ரசம் எனவும் உபயோகப்படுத்துவதை உணர்கிறேன். அதே ஆயா தன் வயதொத்த மற்ற பாட்டிகளுடன் பேசும்போது அந்த வட்டாரச் சொற்கள் உயிர் வாழ்வது மெலிதாக காதுகளிலும் விழத்தான் செய்கிறது.
இன்று மதியம் சாப்பிடும் போது வட்டிலில் சோறு போட்டு, சாறு ஊத்தி சாப்பிடுவோம் என்ற போது நேற்று என்னுடன் கூட்டத்திற்கு வந்த நண்பர் சேது மிக சத்தமாக சிரித்தார்.
வட்டாரச் சொற்கள் ஏன் இன்று தீண்டத்தகாத சொற்கள் போல் புறந்தள்ளப்பட்டுவிட்டன.
நாகரீகம் என்ற நினைப்பில் நாம் பயன்படுத்தும் சொற்கள் எந்த வகையில் இவற்றை விட மேம்பட்டவை?