யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி - Iratta


Iratta - மலையாளம் (Spoiler Alert)
படம் பார்த்த பலருக்கும் இறுதிக்காட்சியின் அதிர்ச்சி மிகக் கனமானதாக இருப்பதாக உணர முடிகின்றது.
அது 'எது’ சார்ந்த அதிர்ச்சி என்பது குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
வழக்கமான மலையாள த்ரில்லர் வகை. DySP பிரமோத் - ASI வினோத் ஆகிய இரட்டையர் பாத்திரங்களிலும் ஜோஜு ஜார்ஜ் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்பதையெல்லாம் சொல்ல வேண்டிய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார்.
மாலினியாக வரும் அஞ்சலியின் மீள் வருகை, அஞ்சலிக்கு இனி வாய்ப்புகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையைத் தருகின்றது.
மற்றபடி த்ரில்லர்கள் முடிக்கும்போது அவ்வளாக தொடர்பில்லாத, எதிர்பாராத ஒன்றில் கொண்டு வந்து முடிப்பார்கள். இதில் சற்றும் எதிர்பாராவண்ணம் சுருக்கென தைக்கும் ஒரு புள்ளியில் முடித்திருக்கிறார்கள். அந்தப் புள்ளிதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது.

”நான் பேசி முடிக்கும்வரை போன் கட் பண்ணிடாதே, 17 வருசம் ஆகிடுச்சு. எல்லாத் தப்பும் என்னோடதுதான். அதோட கணக்குவழக்கு எதும் வச்சுக்கல. மகள டிவில பார்த்துட்டு இருக்கேன். கம்பீரமா இருக்கா. உங்க ரெண்டு பேரையும் பார்க்கனும். அவகிட்ட என்னைப் பத்தி சொல்லிவை. அவளோட அப்பன் உயிரோட இருக்கானு தெரியும் உரிமை அவளுக்கு உண்டு” என பிரிந்துசென்ற அதுவரை பேசாதிருந்த மனைவியிடம் வேண்டும் பிரமோத்துக்கும்...

ஒரு நாள்கூட முடிவடையாத நிலையில், மகளுடன் சந்திக்க வருகிறோம் எனச் சொல்லும் அதே மனைவிடம் “வர வேண்டாம். மகள்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவள் எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம். அவள் என்னோட முகத்தைப் பார்க்க வேண்டாம். இனி எப்பவும் என்னைக் கூப்பிட வேண்டாம்.” என உறுதியாக, இறுதியாகச் சொல்லும் பிரமோத்துக்கும்...

இடைப்பட்ட தருணத்தில் அறிய வந்ததுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

*

காவல் நிலையத்தில் உடன் பணிபுரியும் இரண்டு பேரின் வாழ்விலும் வினோத் செய்தது, செய்ய முனைந்தது மற்றும் பினீஸ் சொல்லும் அந்த லாட்ஜ் நிகழ்வு அனைத்தும் வழக்கமான சினிமா வில்லன் செய்வதுதானே!

வினோத் பிரமோத்தின் மனைவி மற்றும் கைக்குழந்தையாக இருக்கும் மகளை எந்த உணர்வுகளுமற்றவனாகச் சந்திக்கிறான். பிறகு பிரமோத்திடமே எள்ளி நகையாடுகிறான்

மாலினியின் பிரச்சனையில் அவள் ‘அழகான பெண்’ என்பதற்காகவே தானே வலிய வந்து உதவுகிறான். அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்து வரும் நோக்கம் மற்றும் அந்த முதல் ’முயற்சி’யையும் நாம் அறிந்தே இருக்கின்றோம்.

இவை யாவும் ‘வில்லன்’ எனப்படும் வினோத் மீது வெறுப்பை, கோபத்தை, எரிச்சலை உண்டாக்கவே செய்தன.

இதன்பிறகு, வரும் காட்சிகளில்...
மும்பையில் பிரமோத் மனைவி-மகளைச் சந்தித்துவிட்டு திரும்பும் முன், சந்திப்பில் குழந்தைக்கென்று சில பொருட்களை வாங்கித் தந்துவிட்டு வருகின்றான்.

அந்த முதல் ‘முயற்சி’யால் மிரண்டோடும் மாலினியை தேடி அழைத்து வருகிறான். வேறொரு முகம் காட்டுகிறான். அவள் வேலை செய்யும் அங்கன்வாடி வகுப்பறையைக் கூட்டிவிடுகிறான். புடவை வாங்கித் தருகிறான். நெகிழ் மனதோடு தம் வாழ்க்கை முழுவதும் அழுக்கு என ஒப்புதல் தருகிறான். முன்பாக ஒரு மான்டேஜ் பாடல் உண்டு.

இவைகளுக்குப் பிறகு, அதுவரை வினோத் மீதிருந்த வெறுப்பு, கோபம், எரிச்சல் தணியவே செய்கின்றன.

அவனை அவன் கீழ்மைகளோடு ஏற்க(!) மனம் துணிகின்ற தருணத்தில்தான், அந்த க்ளைமாக்ஸ்.
பொதுவாகவே, எந்தவொரு குற்றமும், யாருக்கோ எனும்போது ஒரு மாதிரியும், தன்னைச் சார்ந்தவர் எனும்போது வேறொரு மாதிரியும் வடிவம் பெற்றுவிடுகின்றது. அதுதான் வினோத்திற்கும்!

ஆனால், மூன்றாவது துப்பாக்கிக் குண்டில் அங்கே செத்தொழிவது வினோத்தாக இருந்தாலும், செத்தொழிய வேண்டியது, 'யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி!’ என்றிருக்கும் எல்லா மனநிலைகளும்தான்.

போதைப் பழக்கத்தால், பணி அழுத்தத்தால், மன உளைச்சலால் என ஏதோ ஒரு காரணம் சொல்லி முடித்துவைக்கப்படும் தற்கொலை வழக்குகளின் பின்னே உண்மையில் இருக்கும் காரணங்கள் யாரும் அறியாத, யாரும் தாங்கவியலாத அளவுக்கு கொடூரம் நிறைந்ததாகவும்கூட இருக்கலாம்.
*

'நான் இருக்கேன் என்னை நம்புங்க’ எனும் அஸ்திரங்கள்

வங்கியில் ஒரு வேலையாகக் காத்திருந்தேன். எனக்கும் அடுத்த இருக்கையில் ஓர் இளம் தம்பதி. நடப்பு வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் நகைக்கடன் பெறுவது தொடர்பாக அந்த தனியார் வங்கி ஊழியருடன் உரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

நகைக்கடனுக்கு வட்டி எவ்வளவு என மனைவி கேட்டபோது 9.25% எனச் சொல்கிறார் ஊழியர். உடனே IOBயில் எவ்வளவு எனக் கேட்க, அந்த ஊழியர், வங்கி அதிகாரியை அழைக்கிறார். வந்தவர் ”IOBல சரியாத் தெரியல, அநேகமா 8.9%ஆக இருக்கலாம். இப்ப ரெப்போ ஏத்தினதால அங்கே கூடியிருக்கும், எங்க பேங்க்ல மாறலஎன்கிறார். கூடுதலாக அது கவர்மெண்ட் பேங்க், சர்வீஸ் எப்படியிருக்கும்னு உங்களுக்கே தெரியும்!என்கிறார்.

அங்கேயும் நெட்பேங்கிங் ப்ளஸ் எல்லா சர்வீஸும் இருக்கேஎன அந்தப் பெண் கேட்க, வங்கி அதிகாரி ஒருமாதிரியாக சமாளிக்கிறார். மீண்டும் அந்தப் பணியாளருடன் அவர்கள் தொடர்கின்றனர்.

ஊழியர் 'வெல்த் அக்கவுண்ட்' என்று விளக்கிக் கொண்டிருக்கிறார். கணவர் ஒற்றைக்காலில் நின்றபடி இங்கு கவனம் செலுத்தாமலேயே இருக்க, மனைவியுடன் மட்டுமே உரையாடல் மேற்கொண்டிருந்தார்.

சில நிமிடங்களுக்குள் என்ன வேலை பார்க்கிறீங்க? எங்கே, WFHல் இருக்கும் சாதக, பாதகம் குறித்தெல்லாம் உரையாடலை நகர்த்தி, அந்தப் பெண்ணை அடிக்கடி சிரிக்க வைத்து, இடையிடையே 'வெல்த் அக்கவுண்ட்' குறித்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்.

ஒருகட்டத்திற்குப் பிறகு ஏதோவொரு சமரசத்திற்கு அவர்கள் வந்தததுபோல் தோன்றியது. கடைசியாக அவர் நான் இருக்கேன் மேடம்.... நான் எல்லாம் பார்த்துக்குறேன்... என்னை நம்புங்க... ஒரு கவலையும் வேண்டாம்!எனும் அஸ்திரத்தைப் பயன்படுத்தியபோதுதான், அந்தப் பணியாளரை உற்றுப்பார்த்தேன். பார்த்த கணத்தில் என்னையுமறியாமல் சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது.

பொதுவிடத்தில், நமக்குத் தொடர்பில்லாதவற்றில் அப்படியான சிரிப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்தான். ஆனாலும் அந்த ஊழியர் பயன்படுத்திய அந்த அஸ்திரம் செய்த பாவம் அது. என்னுடைய சிரிப்பைக் கவனித்துவிட்ட அவர் என்னை நோக்கி புருவத்தை உயர்த்தியபடி சார்என்றார்.

ஒண்ணுமில்ல!என்றேன்

இல்ல சார் பரவாயில்ல சொல்லுங்க!

நீங்க தல ஃபேனா, தளபதி ஃபேனா!?”

ஏன் சார்... திடீர்னு கேக்குறீங்க... தளபதி ஃபேன்

அப்படியா.... வாரிசு பார்த்திருப்பீங்க.... எதுக்கும் நேரம் கிடைக்கும்போது துணிவு ஒருமுறை பார்த்துடுங்க!

அவர் முகத்தில் குழப்ப ரேகை ஓட ஆரம்பித்தது.

நான் இருக்கேன்... என்னை நம்புங்க!' எனக் காலம் காலமாய் வங்கி, இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் வாக்குறுதி கொடுத்தவர்களெல்லாம் சடசடவென நினைவுக்கும் வந்து போனார்கள்.

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்

 Mukundan Unni Associates - மலையாளம்

டைட்டில் கார்டில் Smoking Kills எனப் போடும்போதே ‘கொன்னு களையு’ எனும் குரலே நிமிர வைத்துவிடுகின்றது.மலையாள சினிமா இன்னுமொரு பரீட்சார்த்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவே இந்தப் படத்தை எடுத்துக் கொள்கிறேன்.
'நெகடிவ் குடோன்’ என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கும் படத்தில், அது சொல்லப்பட்ட விதத்தை ஒரு கலைப் படைப்பாக ரசிக்கும் அதே தருணத்தில், வினித் சீனிவாசன் மாதிரியான இலகுவான, எவரும் ஏற்கும் முகத்தை இதற்குப் பயன்படுத்தியிருப்பதை மிகுந்த அச்சத்தோடுதான் உள்வாங்குகிறேன். பலரின் சமூக வலைதள முகப்புப் படங்களாக 'சித்தார்த் அபிமன்யு’ மற்றும் 'ரோலக்ஸ்’ அலங்கரிப்பதுபோல 'முகுந்தன் உன்னி’யும் அலங்கரிக்கத் தொடங்கிவிடுமோ எனும் அடிப்படை அச்சமே அது!
“இப்படி ஒரு படத்தில் நீ நடிக்கலாமா!?” என வினித் சீனிவாசனைக் கேட்டபோது, அவரிடம் உதவியாளராக இருந்த இயக்குனரின் இந்தக் கதையை எந்த நடிகரும் ஏற்க மறுத்ததால், தானே நடித்தேன் என்று சொன்னாராம். ஒருவேளை தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வினித் இதைச் சரியான வாய்ப்பாக நினைத்திருக்கலாம்.
படம், இந்த உலகில் இல்லாத எந்தவொன்றையும் மிகைப்படுத்திக் காட்டிவிடவில்லை. முழுதாக உள்வாங்கிப் பார்த்து முடிக்கும்போது, தம் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளை(!) ஈட்டிய பல்வேறு ஆளுமைகளின்(!) இன்னொரு பக்கம் நினைவுக்கு வராமல் போகாது. எல்லாத் துறைகளிலுமிருந்தும் நினைவுக்கு வருவார்கள்.
“தோற்றுப் போவதைவிடச் சிறந்தது செத்துப்போய் விடுவது” என்பதைக் கோட்பாடாகக் கொண்டவன் என்னவெல்லாம் செய்வானோ அதைத்தான் ’என்னைப்போல் நான் மட்டுமே உண்டு’ எனும் இறுமாப்பு கொண்ட முகுந்தன் உன்னி செய்கிறான்.
ஒரு 'லவ் யூ' சொல்வதற்கு அவனுக்கு மனசு இளகவேண்டியதில்லை, ஹார்மோன் தூண்டப்பட வேண்டியதில்லை, ஆக்ஸிடோசின் சுரக்க வேண்டியதில்லை, அவன் வைத்திருக்கும் கணக்கு ’டேலி’ ஆனால் போதும்.
இறுதிக் காட்சியில் மீனாட்சி ”வெற்றியடைந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் Hardwork, Dedication, Perseverance கொண்டு வென்றார்கள்னு நினைக்கிறியா? அதெல்லாம் தன்னம்பிக்கை புத்தகங்களுக்கான தந்திரக் கதைகள்” எனச் சொல்லும் காட்சியை, அதனுள் இருக்கும் முரண்களோடு மிகவும் ரசித்தேன்.
எந்த Hardwork, Dedication, Perseverance, Discipline எல்லாம் இருந்தும், தன்னால் வெல்ல முடியவில்லை என்று, முகுந்தன் உன்னி பாதை மாறுகிறானோ அதன்பிறகு அவன் செய்யத் தொடங்கியதில் Hardwork, Dedication, Perseverance 100% இருந்தது, என்ன Discipline மட்டும் அவன் வடிவமைத்த உலகத்திற்கானதாக இருந்தது.
குரூரமான மரணத்தை அழகிய கவிதை வாசிப்புபோல் அவன் கருதுகையில் உள்ளுக்குள் அதிரும் நடுக்கம், நமக்கு நம்மை உணர வைக்கும்.
’தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்திவிடும், கெட்டவர்கள் கடைசி சீனில் செத்துப்போய்விடுவார்கள் அல்லது திருந்திவிடுவார்கள்’ உள்ளிட்ட நம்பிக்கை(!) கொண்டோர் படத்தைத் தவிர்த்துவிடலாம். இல்லாவிடில் தூக்கம் வராது... 😉 மற்றபடி அவரவர் விருப்பம்.

உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்

 ஒரு புத்தகம் இப்படியும் செய்யுமா என்ற பிரமிப்பின் உணர்வால் உந்தப்பட்டு இதனை எழுதுகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் எழுத்துடன் பயணிப்பதால், அதனால் பயன் பெற்றதால், பண்பட்டு வருவதால், புத்தகம் கிடைத்தபோதே "திரையெனும் திணை" மிகுந்த ஆவலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வாசிப்பின் ஊடேயும் வாசிப்பின் முடிவிலும் இப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எனவே இதை அனுபவப் பகிர்வு என்பதையும் தாண்டி "நன்றி” செலுத்தும் முகமாக எடுத்துக் கொள்ளவும்.உங்கள் புத்தகம் என்ற உற்சாகத்துடன் வாசிக்க துவங்கினேன். சில பக்கங்கள் கடந்த நிலையில், அலையடிக்கும் கடல் போல மனம் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிட்டது . கிளம்பிய எண்ணங்களை எங்காவது கொட்ட வேண்டும் எனத்தோன்றியது. எழுதத் துவங்கினால், பல பக்கங்கள் நீளும்.

நினைவு அடுக்குகளில் மறைந்தவை, மறைத்தவை, உறைந்தவை என எல்லாவற்றையும் என் முன்னே இழுத்து விட்டது இந்தக் கட்டுரைகள்.
மிகவும் அசௌகரியமாக உள்ளது. புதைக்கப்பட்ட நினைவுகள் மீண்டால் வரக்கூடிய திணறலை என்ன செய்வது எனத் தெரியாமல் உங்களிடம் இறக்கி வைக்கிறேன். என் வார்த்தைகள் பல பக்கங்கள் நீளலாம். உங்கள் நேரத்தை விரயம் செய்கிறேனோ என்ற எண்ணம் என்னை தடுக்கவும் செய்கிறது. அதைப் புறந்தள்ளி, இளைப்பாற இடம் தேடி வேறு வழியின்றி தொடர்கிறேன்

’வேட்கையோடு விளையாடு’ வாசிப்பின் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்றால், ’திரையெனும் திணை’ - உணர்தலின் அடுத்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது. வேட்கையோடு விளையாடு சுயநேசிப்பை சொல்லிக் கொடுத்தது. அதற்குண்டான வழியில் பயணிக்கும்போது, சுய நேசிப்பிற்கு சுய மன்னிப்பு தேவை என்று நான் புரிந்து வைத்திருந்தேன். இதனைப் புரட்டி போட்டுள்ளது ’திரையெனும் திணை’.

பதிமூன்று ஆண்டுகளாக உள்ளே வதைத்துக் கொண்டிருந்த ஒரு குற்ற உணர்ச்சி - என்னில் சூழ் கொண்ட ஒரு ஜீவனை கருவிலேயே அழித்தது. அந்த நினைவு வரும்போதெல்லாம் பிறக்காத அந்த குழந்தைக்காக அழாமல் இருக்க முடியாது. கணவரும் நானும் இணைத்து எடுத்த முடிவெனினும், அவரது காரணம் வேறு, எனது காரணம் வேறு. இருப்பினும் நான் மறுத்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருப்பார் என்ற குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது. ’வினாக்களற்ற விடைகள்’ வாசிக்கும்போது நினைவூட்டப்பட்ட அந்தக் குற்ற உணர்ச்சி மீண்டும் அழச்செய்தது. ஆனால் இதுவே அந்தச் சம்பவத்திற்காக, நான் சிந்தும் கடைசிக் கண்ணீராய் இருக்கும் என்பதை கட்டுரையின் முடிவில் உணர்ந்தேன்.

’நியாயமான காரணங்களால் தன் கனவில் உறுதியாக நிற்கும் ஒரு பெண் தன் கருவை கலைக்க விரும்பினால் அது அவரின் உரிமை’ - இந்தத் தவறுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று நான் என்றோ என்னுள்ளே பதிய வைத்திருந்ததை, நடந்த சம்பவத்தில தவறு எதுவுமில்லை என்று உணர வைத்தது மேற்குறிப்பிட்ட வரிகள். எப்போதாவது கீறி ரணப்படுத்தும் அந்த கூர்நினைவினை வேருடன் பிடுங்கி தூர வீசி விட்டேன் .

இத்தனை ஆண்டுகளாக என்னை நானே மன்னிக்க முடியாத ஒரு நிகழ்வு - குற்றமே இல்லை - என்பதை உணர்ந்த அந்த நொடியினை எப்படி எழுத்தில் சொல்வதென்று தெரியவில்லை.

அதே கட்டுரையில், ’அரை நூற்றாண்டுக்கு முன்பாக இயற்றப்பட்ட சட்டத்தை அப்படியே வைத்து கொண்டு மௌனம் காத்திருக்கிறோம்’ - சட்டக்கல்லாரி பாடத்திலும் சட்டசபையிலும் வைக்க வேண்டிய ‘Subject’.

ஒரு கட்டுரை மட்டுமில்லை, பல கட்டுரைகள் அதனதன் போக்கில், எனது புரிதலின் அடிப்படையில் ஒவ்வொரு வகையில் என்னைச் சுத்திகரித்துள்ளன.

’குடும்பம் விரும்புவதையே அந்த வீட்டுக்கு வந்த மருமகளும் விரும்ப வேண்டும் என்பதை ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக உணர்த்தி வெகு காலம் ஆகிவிட்டது’ - என் இருபதுகளும் இந்த வரியில்தான் ஆரம்பித்தது. அப்போது ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு முகத்தினை வைத்துக்கொண்டதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றது. ஒருகட்டத்தில் நிஜ முகமே மறந்தும் போனது. காலமும், சூழலும், கிடைத்த வாய்ப்பும், எடுத்த முயற்சிகளும் பலவற்றை மாற்றியது என்னளவில் வரமே.

நினைவு வரத்துவங்கிய பால்ய காலத்தில் தாத்தா பாட்டி வீட்டில் சில ஆண்டுகள் வளர்ந்தேன். என் தாத்தாவின் குரலைவிட பாட்டியின் குரலே எப்போதும் சத்தம் அதிகமாயிருக்கும். பாட்டி வைத்ததுதான் சட்டம். அந்தப் பாட்டியின் மகனான என் அப்பா - நல்ல 'அப்பா' மட்டும்தான். அப்பா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் அம்மாவுக்கு தந்த தழும்புகளை நினைவுபடுத்தினால், உள்ளே கசியும் ரத்தத்தின் வாசம் இப்போதும் நாசியை நெருடும்.

எப்போதும் தன் அம்மா, அப்பாவிடம் கையில் கிடைத்ததில் அடி வாங்கி அலறுவதை பார்த்து வளர்ந்த என் கணவரிடம் அதன் சாயல் எப்போதும் வந்ததில்லை.

பாட்டி, அம்மா, மாமியார், நான் இன்னும் நெருக்கத்தில் உள்ள பல 'மருமகள்'களை நினைவுக்குக் கொண்டுவந்து அலசுகிறேன். என் கதை இப்போது நன்றாகத்தானே போய்க்கொண்டுள்ளது, எதற்கு இந்த வீண் ஆராய்ச்சி எனத் தோன்றலாம் .

என் மகனும் சில வருடங்களில் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை துணையாய் மாறுவான். ஒரு அம்மாவாக ஒரு பெண்ணாக ‘சக மனுஷியின் உரிமையை’ இப்போதிருந்தே அவனுள் பதிய வைக்க வேண்டும். ’The Great Indian Kitchen’ பார்க்கும்போது தோன்றாத இந்த எண்ணத்தை, ’அவர்களுக்கு பெயர்கள் தேவையா?’ ஆழமாக விதைத்துள்ளது.

ஆண் குழந்தைக்கு ஒரு அம்மா எப்படி இதையெல்லாம் புரிய வைக்க முடியும் என்று எனக்கிருந்த பெரும் சவாலிற்கு கண்டிப்பாக இப்புத்தகம் துணை நிற்கும் .

திரைப்படங்கள் 'பாடம்' என்றால், அந்த திரைப்படத்தின் மைய கருத்தை நுணுக்கமாக மனதிற்கு கடத்தும் உங்கள் கட்டுரைகளே எனக்கு ’ஆசான்’.

’உறவுகள் இணைந்திருக்க ஆயிரம் நேச இழைகளை நெய்தாலும், விலகி இருக்க ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆயிரமாயிரம் காரணங்கள், நிலைப்பாடுகள் உண்டு’ - இந்த வரிகளைக் கட்டுரையிலிருந்து தனித்து எடுத்து சிந்திக்கிறேன். சங்கடமும் சச்சரவும் உள்ள இடங்களில் பொருத்திப் பார்க்கிறேன். பக்கமும் தூரமுமாய், ஒட்டியும் ஒட்டாமலுமாய் உள்ள உறவுகளின் நிலையினைப் புரிய வைத்த வரிகள். எதிர் தரப்பின் நியாயங்களும், அவர்தம் சூழல்களும் இப்போது விளங்குகிறது. மனதால் விலகி இருந்தாலும் அந்த உறவுகளின் மேல் புதிதாய் பிரியம் மலர்கிறது.

முப்பதுகளின் பிற்பகுதியில் கணவரை இழந்த அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க நினைத்த ஒரு மகளின் முகம் மனதை நிறைத்து விழிகளில் நீர் திரையிட வைத்தது - துணை நலம் சேறல்.

வெளிநாட்டிலிருந்து அழைத்த குடும்ப உறவு, சாணம் கொண்டு வாசல் மெழுகியது, பலகாரம், அன்றைய உணவுப்பட்டியல் என சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கேட்டு தெரிந்து கொண்டார். எப்போது பேசினாலும் அவர் அப்படித்தான். அவரது விசாரணை அவ்வப்போது சலிப்பளிக்கும். அந்தச் சமயம் என் மனநிலையை பொறுத்து அந்த விசாரணைகளை அக்கறை அல்லது அதிகாரம் என்று எதோ ஒரு பட்டியலில் சேர்த்து விடுவேன். ஆனால் அவருடன் பேசி முடித்த சில மணி நேரங்களில் இந்தக் கட்டுரையை வாசிக்க வைத்ததுதான் காலத்தின் கணக்கோ என்னவோ?

’குடும்பத்தை விட்டு விட்டு தனித்து போவோருக்கு தம்மையும் அறியாமல் ஒரு பதட்டம் இதயத் துடிப்பினூடே கலந்திருக்கும். அதை அவ்வளவு எளிதில் தணித்து விட முடியாது. அதை எந்தக் கருவி கொண்டும் அளக்கவும் முடியாது’ - இந்த வரிகளை வாசித்து முடிக்கவும், அத்தனை விசாரணைகளுக்கும் பின்னாலிருந்தது ’எது’ என்று தெளிந்தது. மனதின் ஒரு ஓரத்தில் இருந்த எண்ணக் கசடை துவைத்து காயப்போட்டது ’Pathemari’ குறித்து பேசும் ’துவைக்காத சட்டை’.

இதே கட்டுரையில் ’அப்பா எனும் வாசனையை...’ இந்த வார்த்தைகளை விட்டு நகர முடியவில்லை. ஏனெனில் என் அலமாரியில் யாருக்கும் தெரியாமல் அப்பாவின் வாசத்தை ஒளித்து வைத்துள்ளேன்.

பிரிவின் வாதைக்கு விலையேது? பிரிவை நினைத்து எத்தனை அழுதாலும் , எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வற்றாதுபோல. பிரிந்தாலும் அவர்கள் மேல் கொண்ட பிரியம் ஊறி கொண்டே இருப்பதாலோ என்னவோ.

’PAD MAN’ திரைப்படத்தைச் சொல்லும் கட்டுரையில், ஒரு தலைமையாசிரியரின் அணுகுமுறையை குறிப்பிடும் போது - ’அந்த மொழி சரி, தவறு என்று பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது’ - இந்த ஒரு வரி அந்த தலைமை ஆசிரியரின் மேல் எந்த நிழலும் விழாமல் நிதானிக்க வைக்கிறது. ஒரு இடம் நோக்கி பயணிக்கையில் வழியில் காணும் ஒரு மலையின் அழகோ, ஆற்றின் போக்கோ சில வினாடிகள் நின்று கவனித்து ஒரு உற்சாகத்தை கொடுத்து, சரி கிளம்பு என்று வழியனுப்பும். சேர வேண்டிய இடம் சேர்ந்த பின்னும்கூட இடையில் கிடைத்த அனுபவம் இனித்துக்கொண்டே இருக்கும். அதுபோலவே இந்த கட்டுரை கூட்டிச் செல்லும் இடம் வேறெனினும் இந்த வரியும் நினைவில் ஊறிக்கொண்டே இருக்கும். பார்த்த மாத்திரத்தில் யாரையும் எடை போடும் புத்தியை நிச்சயம் நிதானிக்க வைக்கும் .

நீர்ஜா திரைப்படத்தின் கட்டுரை 2018-ல் கொடுத்த தாக்கமும் அதை தொடர்ந்த உரையாடல்களும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது இருந்த புரிதலின் அடிப்படையில் - தனவேல் முருகனின் பெற்றோரையும், நீர்ஜாவின் தாயையும் , என் அம்மாவையும் ஒரே புள்ளியில் நிறுத்தியது அந்த கட்டுரை. இப்போது வாசிக்கையில் எந்த வரி அந்த வேலையை செய்ததோ, அது என்னை பார்த்து கண் சிமிட்டியது. ’அந்த கட்டுரையை வாசித்துணர்ந்த அன்றைய தினத்தில் அம்மாவிற்கு மீண்டும் ஒருமுறை நான் மகளாக பிறந்தேன்’ என்றால் அது மிகையாகாது. அன்றிலிருந்து எங்களுக்குள் ‘மாறாததும் மாற்ற முடியாததும்’ என்றிருந்த எல்லாமே திருத்தி எழுதப்பட்டு வருகிறது .

ஓட்டமுறி வெளிச்சம் திரைப்படம் - கொடூரத்தின் வலியை உயிரில் ஊடுருவ செய்கிறது உங்கள் வார்த்தைகளின் வலிமை - மிகுந்த சிரமத்துடன் அயர்ச்சியுடனும் வாசித்து முடித்தேன். அந்த படத்தை பார்க்கவே முடியாது என்ற முடிவுக்கு வரச் செய்துள்ளது கட்டுரை .

இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் சிலிர்த்ததை , சிலாகித்ததை, கரைத்ததை, கரைந்ததை எனச் சொல்லிக் கொண்டே போகலாம் .

’முனைகளிடையே நிகழும் அதிர்வு’, ’காடுகொல்லி’ - எங்கிருந்துதான் வார்த்தைகள் வசப்படுகின்றதோ?!

கடந்த 15 நாட்களாக இப்புத்தகத்துடன் பயணிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நான் உணர்த்ததில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல முற்பட்டேன். இத்தனை நீண்ட பதிவாக அமையும் என எதிர்பார்க்கவில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கட்டுரைகளை என்னால் 100% முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. மீள் வாசிப்பு செய்து, திரைப்படத்தை பார்த்து, மீண்டும் வாசிக்கும்போது வசப்படும்.

எல்லோரிடமும் உறங்கி கொண்டிருக்கும் ரகசியங்கள் ஏராளம்.
’மூன்றாம் நபருக்கு தெரிந்த ரகசியம் வெளியில் வராமல் போவதில்லை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அந்தப் பயத்திலேயே இரண்டாம் நபருக்குகூட தெரியாமல் புதைத்து கொண்டவை நிறையவே .

ஆழ்மன ரகசியங்களை கண்ணீரில் கரைந்து கொண்டே காகிதத்தில் எழுதி நெருப்பிலிடும் ஒரு பயிற்சி முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதன் பிறகு மனம் மிகவும் இலேசாகி விடும் என்பார்கள்.
அப்படி ஒரு ’மகத்தான’ அனுபவமாகவே இப்புத்தகம் அமைந்தது.

மனதின் பாரம் குறைந்துள்ளது .

’திரையெனும் திணை’ என்று எப்படி உங்கள் எண்ணத்தில் உதித்ததோ தெரியவில்லை - இந்த புத்தகத்திலேயே சில நாட்கள் வாழ்ந்திருந்தேன் என்றுதான் குறிப்பிட வேண்டும் .

#திரையெனும்திணை - உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்.

‘கண்ணாடியில் முகம் பார்க்கும் போது சற்று உற்றுப் பார்த்தால், அவர்கள் அங்கு பிரதிபலிக்கலாம்’ என்று முடியும் ஒரு கட்டுரை .

உங்கள் எழுத்தைவிட அகம் காட்டும் கண்ணாடி வேறில்லை.


*

திரையெனும் திணை பெற்றிருக்கும் மிகக் கனமானதொரு அங்கீகாரம்!