மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?

பொதுவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை. பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாதவற்றைத்தான். நிகழ்த்த முடியாதவை எனப் பட்டியலிட்டதை யாரோ ஒருவர், எதன் நிமித்தமாகவோ நிகழ்த்திடும்போது அது எளிதாக வெற்றியென அங்கீகாரம் பெற்று விடுகின்றது. சில வெற்றிகள் அப்படி நிகழ்த்த முடியாதவற்றை நிகழ்த்துமாறு நிபந்தனைகள் விதிப்பதில்லை. மிக நுண்ணியதொரு அழகியலில், மாறுபட்ட பார்வையில் தன்னை திருப்தி செய்துகொள்ளும். அப்படியான அழகியலின் வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம்தான் மஞ்ஞும்மல் பாய்ஸ்.

எல்லோரும் கதை குறித்து எழுதிவிட்டதால் ஸ்பாய்லர் அலெர்ட் எதுவும் தேவைப்படாது. கொச்சி அருகே மஞ்ஞும்மல் என்கிற ஊரிலிருந்து இளைஞர் குழுமம் ஒன்று கொடைக்கானல் சுற்றுலா செல்கின்றனர். காலங்காலமாய் இளைஞர்கள் சுற்றுலா சென்றால் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படியானதொரு கொண்டாட்டத்தோடு சுற்றுலா அமைகின்றது. இறுதியாக ஊருக்குப் புறப்படும் முன் குணா குகைக்குச் செல்கின்றனர். வனத்துறையின் தடை மற்றும் எச்சரிக்கையை மீறி உள்ளே சென்று தங்கள் வருகையினைப் பதிவு செய்யும் வகையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் என்றெழுதி கொண்டாட்டமாக இருக்கும் சூழலில் குகைக்குள் ஒரு ஓட்டையின் வழியே சுபாஷ் விழுந்துவிட, சுபாஷை மீட்டெடுக்கும் போராட்டம்தான் கதை.

குடிகார இளைஞர்கள், பொறுப்பற்ற முறையில், தடுப்பு மற்றும் எச்சரிக்கையை மீறிச் சென்று விழுந்ததை இப்படி படமாக எடுத்துக் கொண்டாடலாமா எனும் தர்க்கவாதிகளிடமிருந்து நான் விலகி நிற்கவே விரும்புகிறேன்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் என்றழைக்கப்படும் உண்மையான பாத்திரங்கள் பெயிண்ட் அடிப்பவர்கள் மற்றும் மீன் வெட்டுகின்றவர்கள். பொதுவாக இளைஞர்களின் பெரும்பாலான மலைப்பிரதேச சுற்றுலாக்களில் மது இருப்பதுண்டு. சரி தப்பு என்பது அவரவர் எண்ணம். ஆனால் மது இருப்பது உண்மை.

 2006ம் ஆண்டு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தியத் திரைப்படங்களில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் அதிகத் திரைப்படங்கள் வருவதுண்டு.




இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. இந்தப் படத்தின் வெற்றிக்கு மலையாள ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்கள்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. உண்மையில் இப்படியொரு அலையை எதிர்பார்க்கவில்லை. மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் ஏன் இப்படியொரு பேரலையை ஏற்படுத்தியது என்ற ஆச்சரியம்தான் மேலோங்கி இருந்தது.

தமிழ் ரசிகர்களிடம் ஏன் இத்தனை பரவசம் எனும் கேள்விக்கான பதில், இயக்குனரின் மிக சாமார்த்தியமான அந்த முடிவு. குட்டனும் சுபாஷும் கருவறையிலிருந்து மறு பிறப்புபோல் மேலெழும்பி வரும் கணத்தில் பளீரென குணா திரைப்படத்தின் கண்மணி அன்போடு பாடலிலிருந்துஉண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன பொன்மானே பொன்மானேஎன்றொலிக்கும் ஜானகியின் குரலுக்கு திரையரங்கம் துள்ளும் மாயமே சாட்சி. அந்தத் தருணத்தில் அந்த வரி ஒலிக்காமல் போயிருந்திருந்தால் தமிழ் ரசிகர்களிடம் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தாமல் மற்றுமொரு மலையாளப் படமாகவே இருந்திருக்கலாம்.

படத்தின் இயக்குனர் சிதம்பரம் அளித்த பேட்டிகளினூடாக அறிவது, அந்தப் பாடல் எதேட்சையாக அந்த இடத்தில் நுழைக்கப்படவில்லைஎழுதியபோதே, கண்மணி அன்போடு பாடலில் துவங்கி, ரசிகர்களை தயார்படுத்தி வைத்திருந்து, முக்கியமான அந்தக் காட்சியில்உண்டான காயமெங்கும்வரியை பொருத்துவது என்று தீர்மானித்திருக்கின்றார்.

அழுத்தம் நிறைந்த அந்தக் கணத்தில் ஆனந்தக் கண்ணீர் வர வைக்கும் ஆற்றல் குறிப்பிட்ட அந்த வரிக்கும், குரலுக்கும், அதன் இசைக்கும் இருந்ததை திரையரங்கில் காண முடிந்தது. அதுதான் ஒரு படைப்பின் அழகியல். அது தான் நிகழ்த்த விரும்பியது மற்றும் பார்வையாளனிடம் கொண்டு வர விரும்பியதன் உச்சத்தைத் தொட்டுவிட வேண்டும்.

அந்தப் பாடல் சேர்க்கை படத்தின் வெற்றிக்கான காரணமாக பார்க்கும் அதே சமயம், அதைத் தாண்டி படத்தில் ஆழமாக ஒன்றிப்போக எனக்கு சில காட்சிகளும் காரணங்களும் உண்டு.

*

சுபாஷை மீட்பதற்காக குட்டன் குழிக்குள் இறங்குகையில் 120 அடி ஆழத்தில் கயிறு தீர்ந்துவிட காவல் அதிகாரி அடுத்த கயிற்றை இணைக்குமாறு தீயணைப்பு துறை அதிகாரியிடம் சொல்கிறார். அவர் இனியும் கீழே இறங்கினால்  ஆக்ஸிஜன் கிடைக்காது, எனவே குட்டனை மேலே வர வைப்பதுதான் நல்லது என்கிறார். மேலே வருமாறு குட்டனிடம் காவல் அதிகாரி சொல்கிறார். குட்டன் மறுக்க, அவரின் குரல் அதிகாரமாக ஆணையிடுகின்றது. பொதுவாகவே அதிகாரத்தின் குரல்களில் எப்போதும் அறிவின் வாசனை இருக்காது என்பதற்கான மிகச் சரியான உதாரணம்தான் உயிரைப் பணயம் வைத்து, துணிந்து இறங்கியவனிடம்மரியாதையா மேல வந்துடுஎனும் அந்த ஆணை.

 

*

குட்டன் சுபாஷைக் கண்டு, கயிற்றில் தன் உடலோடு இணைத்துக் கட்டிக்கொள்ள மேலிருந்து, கயிறு இழுக்கும் வீரர்களான நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இழுக்கின்றனர். மெல்ல மெல்ல சாவின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்வை நோக்கி இருவரும் உயர்கின்றனர். ஒருகட்டத்தில் குறுகிய இடுக்கில் சிக்கிக்கொள்ள மேலே இழுக்க முடியாத நிலை வருகின்றது.

அனைவரும் ஏறத்தாழ நம்பிக்கை இழக்கும் கணத்தில், அதுவரை அதிர்ச்சியில், மிகுந்த மன அழுத்தத்தில் உறைந்துபோயிருந்த, அபிஷேக் குகைக்குள் வந்து நிற்கிறான். அவனைப் பார்த்தவர்கள் பதட்டத்தோடு அங்கிருந்து வெளியேறுமாறு கத்த, அதனைப் பொருட்படுத்தாது, ”எடா... லூசடிக்கடா!” எனும் தேர்ந்த யுக்தியை மந்திரம்போல் தருகிறான்.

மேலே இழுப்பதுதான் நோக்கம் என்பதற்காக ஒரே மூச்சில் இழுத்துவிட முடியாது. சிக்கிக்கொள்ளும் தருணங்களில் இன்னும் ஆற்றல் கொடுப்பதால் சிக்கல் தீர்ந்துவிடாது, தேவையான தருணங்களில் சற்று தளர்த்திக் கொண்டுதான் மீண்டும் முழு வலிமையோடு தொடர வேண்டும் என்பதை அந்தகயித்த கொஞ்சம் விட்டு இழு” (லூசடிக்கடா) மிக எளிதாக உணர்த்தி விடுகின்றது. ‘சற்றே தளர்த்தி முழு ஆற்றலைச் செலுத்துஎன்பது அந்தக் காட்சிக்கான யுக்தி மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்தின் பல தருணங்களுக்கான பாடம்.


*

ந்தப் படத்தில் ஒட்டுமொத்தமாகக் கொண்டாட என்னிடமிருருக்கும் மிக முக்கியக் காரணம், தேவையின் பொருட்டு வைக்கும், சொற்களில் விவரிக்கவியலாத அளவுக்கான அபரிமிதமான நம்பிக்கை. சாத்தானின் சமையலறை என்றழைக்கப்படும் குணா குகையின் ஆழம் யாருக்கும் தெரியாது. வரைபடம் கிடையாது. உள்ளே விழுந்தவர்கள் யாரும் அதுவரை உயிரோடு மீண்டதில்லை. சூசைட் பாய்ண்ட்-ல் தற்கொலை செய்தோரின் உடல்களை எடுத்துவரும் திறன் வாய்ந்தவர்கள்கூட குகையின் குழிக்குள் விழுந்தவர்களை மீட்டெடுத்துவர முன்வருவதில்லை.

இப்படியாக அந்தப் பகுதி கடைக்காரர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வனத்துறை, காவல் துறை மற்றும் மீட்பு படை உள்ளிட்ட அனைவரும் உயிரோடு மீட்க முடியாது என மிக உறுதியாகச் சொன்ன பிறகும், அந்த நண்பர்களை எது போராட வைத்தது என்பதுதான் என்னை இடைவிடாது ஆச்சரியமூட்டும் கேள்வி.

ஆழ்துளைக் குழாயில் விழுந்தோர், இடிபாடுகளில் சிக்கியோர், குழிக்குள் விழுந்தோர், சுரங்கத்தில் மாட்டியோர் என எத்தனையோ சூழல்களில் மீட்டெடுக்கப்படுவதில், ஏற்கனவே அப்படி மீட்டெடுத்தற்கான சில உதாரணங்கள் இருந்ததுண்டு. ஆனால் குணா குகைக்குள் விழுந்தவர் மீண்டதாக வரலாறு இல்லாதபோது, புதியதொரு வரலாற்றை உருவாக்க, அவர்களிடம் இருந்த அளவற்ற, அதுவரை யாரும் உணர்ந்திடாத நம்பிக்கையின் மூலம் என்னவாக இருந்திருக்கும்?

சுபாஷைக் கைவிட்டு ஊர் திரும்பினால், சுபாஷின் அம்மாவை எதிர்கொள்ளும்போது அவரின் எளிய கேள்விக்கும், குத்தும் பார்வைக்கும் சக எளிய மனிதர்களான அவர்களால் ஒருபோதும் பதில் தயாரித்துவிட முடியாது. அதைவிட மிக முக்கியமானது உடன் வந்த ஒருவனை ஆபத்தில் விட்டுவிட்டு, அவனுக்கு என்ன ஆனது, எப்படியிருக்கிறான் எனத் தெரியாமல், தெளிவில்லாதொரு முடிவினை தெளிவான தீர்வுபோன்று ஏற்றுக்கொள்ளும் வதைக்குள் அவர்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதுதான் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் சுமத்திய அவநம்பிக்கைக்கு சவால் விடத் துணிகின்றது. அந்த சவால் ஓங்காரமாய் ஒலிக்கவில்லை. மௌனமாக உள்ளுக்குள் ஆற்றலாய் உருவெடுக்கின்றது. யாரோடும் முரண் கொள்ளாமல் தங்களை உருவேற்றிக்கொள்கின்றனர். என்னவாகினும் போராடிப் பார்த்துவிடுவது எனும் போர்க்குணம் எழுகின்றது.

அந்தப் போர்குணம் வௌவால்கள் படையெடுத்த ஆழ்ந்த இருளை நோக்கிடேய் சுபாஷுஎன கதறிக்கொண்டேயிருந்தது, காவல் துறை பழி சொல்லி அடித்து துவைத்தபோதும் பொறுத்துக்கொண்டது, மழை பொழிந்தபோது தன்னைக் கரையாகக் கட்டமைத்தது, மீட்டுப்படை வீரர் இறங்க மறுத்தபோது தம் உயிரை பணயம் வைத்தது, இறுதியாக நட்பின் பெயரால், மனிதத்தின் பெயரால், உறுதியின் பெயரால், நம்பிக்கையின் பெயரால் வென்றெடுத்தது.

~ ஈரோடு கதிர்