கடத்தப்பட்டிருந்த ஒளியும் ஆற்றலும்

எண்பதுகளின் பிற்பாதியில்தான்ஓஷோகாற்றில் கசிந்து வரும் சொற்களாக அறிமுகமாகியிருக்க வேண்டும். அதுவும் அநேகமாக வானொலி செய்திகளில், வார மாத இதழ்கள் வழியேதான். மொத்தத்தில் எஞ்சி நின்ற எளிய அறிமுகம்... “ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார்”. பதின் வயதிற்கு அது போதாதா? காதல் என்கிற வார்த்தையைக்கூட சொல்வதற்கும், கேட்பதற்கும் (உண்மையிலேயே) தயக்கம் இருந்த அந்தக் காலத்தில் காமம், செக்ஸ் என்பதையெல்லாம் கேட்டாலே கடுங்குற்றமாக உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். என்ன, அதிலிருந்து ஒரு பத்து ஆண்டுகள் கழித்து அவ்விதமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், தேடித் தேடி அறிந்து கொள்ள, வாசிக்க முற்பட்டிருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி பத்து வருடங்கள் கழித்து பளபளக்கும் அட்டைப்பட புத்தங்கள் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டது ஓஷோவின் தத்துவங்கள் மட்டுமே என்பதால் இன்னும் பெரிதான அறிமுகமும் நிகழ்வில்லை, நெருக்கமும் துளிர்க்கவில்லை.

அப்ப... என்ன சொல்ல வர்றேனு கேட்பது புரிகின்றது. நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ‘வைல்ட் வைல்ட் கன்ட்ரி’ (Wild Wild Country) எனும் வலை ஆவணத்தொடர் ருக்கின்றது. மொத்தமாக எப்படியும் 400 நிமிடங்கள் பிடிக்கும். இதில் ஓஷோவா பின்னர் மாறிய ரஜனீஷ் 1970களின் மத்தியில் மகாராஷ்ட்ராவில் வேகமான புகழை எட்டி வருகிறார். அவருடைய போதனைகள் அப்படி. உலகத்தின் பல முனைகளிலும் இருந்து அவருக்கு பக்தர்கள், சிஷ்யர்கள் குவிகிறார்கள். அவர்களில் ஒருவராக இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்த பதினேழு வயதுப் பெண்ணான ஷீலா, தமது தந்தை வழியாக இணைகிறார். இணையும் தருணத்தை அவர் விவரிக்கும் விதமே ரஜனீஷ் மீது நமக்கு பெரும் காதலை ஏற்படுத்தும்.ஷீலா அமெரிக்கா பயணிக்கிறார். திருமணம் செய்து கொள்கிறார். கணவரோடு இந்தியா வருகிறார். புனே ஆசிரமத்தில் தங்குகிறார்கள். உடல் நலிவினால் கணவர் இறந்து போகிறார். ஷீலா ரஜனீஷ்க்கு நெருக்கமான ஆளுமையாக மாறி, அவருடைய அந்தரங்க செயலர்மா ஆனந்த ஷீலாவாக  உருவெடுக்கிறார். ரஜனீஷ்ற்கு இந்தியாவில் எதிரிகளும், அரசியல் பகைகளும் முளைக்கின்றன. அமெரிக்கா சென்றுவிடலாம் என ஷீலா பரிந்துரைக்கிறார்

அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத நிலப்பகுதியாக இருந்த மத்திய ஓரேகான் பகுதியில் 64,229 ஏக்கர் நிலம் வாங்குகிறார்கள். அந்த நிலம், ரஜனீஷ்புரம் என பெயர் சூட்டப்படுகிறது ரஜனீஷ் சிஷ்யர்களை வைத்து அதுவொரு நகரமாக அதி அற்புதமாக கட்டமைக்கப்படுகிறது. 1980ம் ஆண்டு சிகிச்சைக்காக சுற்றுலா அனுமதியில் அமெரிக்கா சென்ற ரஜனீஷ், ரஜனீஷ்புரத்தில் மய்யம் கொள்கிறார்.

அந்த நிலப்பகுதியில் அணை ஏற்படுத்தப்படுகிறது. விவசாயம் செய்யப்படுகின்றது. அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே தயாரிக்கின்றனர். குடியிருப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. வங்கி, உணவகம், விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. விமான நிலையம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆச்சரியங்கள் மற்றும் பிரமாண்டங்கள் யாவற்றின் பின்னாலும் ஷீலா முழுக் காரணமாக இருக்கின்றார்.

ஒவ்வொரு நாளும் மாலை ஷீலா மட்டுமே ரஜனீஷை சந்திக்கிறார். அனைத்தையும் பேசுகிறார். அவர் சொன்னதாக கூட்டத்தில் தெரிவிக்கிறார். ரஜனீஷ் மற்றும் அவருடைய பக்தர்களுக்கிடையே ஷீலா மட்டுமே தொடர்பு இழையாக இருக்கிறார். ஏறத்தாழ 3.5 வருடங்கள் ரஜனீஷ் குரலைக்கூட யாரும் கேட்டிருக்கவில்லை. எனினும் அவரைச் சுற்றியே அத்தனை பேரும் இருக்கின்றனர். அதுதான் ஷீலா மீது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், அருகில் மிகச் சொற்ப எண்ணிக்கையில் அமெரிக்க குடும்பங்கள் வசிக்கும்  ஆண்டலேப் நகருடன் உரசல் ஏற்படுகிறது. இயல்பான நிற பேதம் மற்றும் மதப்பற்று காரணமாக, இந்திய ஆன்மீகவாதி மற்றும் சிவப்பு உடை பக்தர்கள் பிடிக்காமல் போயிருக்கலாம். அவர்களுக்கும் புதிதாக உருவான ரஜனீஷ்புரம் மக்களுக்கும் இடையே முட்டல் மோதல் அதிகரிக்கின்றது. ரஜனீஷ்புரம் ஒருபக்கம் பிரமாண்டமாக வளர, உள்ளூர் மக்களுடனாக சிக்கல்களும் கூர்மையாக நீண்டு கொண்டேயிருக்கின்றன.

ரஜனீஷ்புரத்தின் வளர்ச்சி குறித்து ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்த உரையாடல்கள் பல தளங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து இடங்களில் ஷீலா முன்னின்று சமாளிக்கிறார். இன்னும் சொல்லப் போனால் போரிடுகிறார். பெரும்பான்மையாக வென்றெடுக்கிறார்.

ரஜனீஷ்க்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. தங்களுக்கான பாதுகாப்பை தாமே அமைத்துக் கொள்கிறோம் என்று ஆயுதங்கள் கொள்முதல் செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களே ரஜனீஷ்புரத்தின் காவலர்களாக அமர்த்தப்படுகிறார்கள். ஏறத்தாழ ரஜனீஷ்புரம் ஓர் அரசாங்கம்போல் உருவெடுக்கின்றது. அவர்களை சமாளிக்கும் விதமாக ஆண்டலேப் நகரின் மேயராக ரஜனீஷ்புரத்தைச் சார்ந்த கிருஷ்ண தேவா மேயராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தங்களை ஆழமாக நிலை நிறுத்தும் விதமாகவாஸ்கோ கவுண்டிதேர்தலில் வென்றெடுக்க ஷீலா திட்டமிடுகிறார். தங்களின் வலிமையைப் பெருக்குவதற்காக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் உள்ள வீடற்றவர்களை பேருந்துகள் மூலம் அழைத்துவந்து அந்த நகரத்தின் மனிதர்களாக மாற்றுகின்றனர். அது மிகப் பெரிய சவால்களைத் தந்தாலும், திறம்பட செய்யப்படுகின்றது. அவர்கள் வாக்களிப்பதற்கு தயார்படுத்தப்பட்ட நிலையில்வாஸ்கோ கவுண்டிதேர்தல் கைவிடப்படுகிறது.

இந்த நிலையில் வாஸ்கோ கவுண்டி பகுதியைச் சார்ந்த 751 பேர் வயிற்றுக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உணவில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாகவும், அதை ஷீலா செய்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறார். ஷீலா அடுத்தடுத்து சவால்களைச் சந்திக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று ரஜனீஷ் ஹாலிவுட் நடிகை ஃப்ரான்கோயிஸ் ருட்டி உள்ளிட்டவர்கள் மீது கவனத்தை குவித்தது. அவர் ரஜனீஷ்க்கு மிக நெருக்கமாகிறார். அவருடைய கணவர் ஜார்ஜ் ரஜனீஷ்க்கு மருத்துவராக நெருக்கமாகிறார்.

அவர்களின் கட்டுப்பாட்டில் ரஜனீஷ் சென்றதை ஷீலாவினால் ஏற்க முடியவில்லை. அவருக்கு ரஜனீஷ் மீது அலாதியான பொஸஸிவ்னெஸ் உண்டு. ரஜனீஷ்புரத்தில் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. முக்கியமானது அனைத்து உரையாடல்களும் ரகசியமாக பதிவு செய்யப்படுவதுதான். அவற்றில் ரஜனீஷ்க்கு தெரியாமல் அவரின் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டன. அதன் வாயிலாக ரஜனீஷ் மற்றும் டாக்டர் ஜார்ஜ் இடையே நடக்கும் உரையாடல் மூலம், அவர் மருத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கலாம், கொலையும் செய்யப்படலாம் எனக் கருதும் ஷீலா, ரஜனீஷைக் காப்பாற்ற டாக்டரை கொலை செய்யத் திட்டமிடுகிறார். அதற்கான முயற்சி நிறைவேறிய நிலையிலும் மருத்துவர் சாகவில்லை. ரஜனீஷ்புரம் வளர்வதைத் தடுக்க முயன்ற அட்டர்னி ஜெனரல் டர்னரை கொலை செய்ய முன்பு திட்டமிட்ட வழக்கு விஸ்வரூபம் எடுக்கின்றது.

தான் உருவாக்கிய சாம்ராஜ்யம் சிதைவதைக் காண முடியாமல், இதற்கு மேல் ஒன்றும் செய்யவும் முடியாது எனும் நிலையில் ஷீலா தன்னுடைய நெருக்கமான குழுவினரோடு அங்கிருந்து திடீரென ரகசியமாக வெளியேறுகிறார். ஜெர்மனிக்கு பயணிக்கிறார். ரஜனீஷ் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக பேசுகிறார். பேச்சில் தன்னை இழக்கிறார். அதுவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எல்லாவற்றையும் சமாளித்து வந்த ரஜனீஷ்புரம் காவல்துறை உதவியைக் கோருகிறது.

சட்டத்தில் இருக்கும் சில சந்தர்ப்ப வாய்ப்புகளை வைத்து, தங்களுக்குத் தண்ணி காட்டிய ரஜனீஷ்புரத்தை தகர்த்த தகுந்த வாய்ப்புத் தேடிய அரசு முழு மூச்சில் களம் இறங்குகிறது. அரசாங்கம் தீர்மானமாய் ஓர் முடிவை எடுத்துவிட்டால், அதில் வென்றெடுக்காமல் விடுமா? மேயர் கிருஷ்ண தேவா அப்ரூவராக மாறுகிறார். ரஜனீஷின் வழக்கறிஞரான  ப்லிப் டோக்கெஸ் புதிய மேயர் ஆகிறார்.  மா ஆனந்த ஷீலா, கொலை முயற்சி குற்றங்களில் தேடப்படுகிறார்.

ஜெர்மனியில் 25 பேருடன் வசிக்கும் ஷீலாவிற்கு பணம் தேவைப்படுகின்றது. அதற்காக அங்கு பிரபலமாக இருக்கும் ஸ்டெர்ன் இதழில் தன் நிர்வாணப் படத்துடன் தனது கதையை அளிக்கிறார். அது உலகம் முழுக்க ரஜனீஷ் குறித்து மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது.

ஒரே நேரத்தில் ரஜனீஷ் குழுவினர் மற்றும் ஷீலா குழுவினர் கைது செய்யப்படுகின்றனர். ஷீலா மீதான குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருப்பதால் அவருக்கு இருபது ஆண்டு கால தண்டனை வழங்கப்படுகிறது. ரஜனீஷை தண்டிக்க முடியாவிட்டாலும் அலைக்கழித்து அவரை திரும்ப வரமாட்டேன் எனும் உறுதிமொழியோடு நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது. ஷீலாவும் இரண்டரை ஆண்டுகளில் விடுதலையாகிறார். 21 நாடுகளால் நுழைவு மறுக்கப்பட்ட ரஜ்னீஷ் இந்தியா திரும்புகிறார். இங்கு அவர்ஓஷோவாக பெயர் உயர்வு பெறுகிறார். சில ஆண்டுகளில் இறந்து போகிறார்.

ஆவணப்படம் முழுக்க ஆண்டிலேப் மனிதர்கள், ஷீலாவின் குழுவினர், வழக்கறிஞர் ப்லிப் அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் மற்றும் பலரும் பெரும் பங்கு வகித்துள்ளனர். ஷீலா எதிரிகளாகக் குறிப்பிட்டவர்களின் உரையாடல்களைக் கேட்டால், பல முடிவுகளுக்குப் பின்னே இருந்த மற்ற காரணங்கள் புரிபடலாம்.இந்த ஆவணப்படத்தில் ஓஷோவை உணர முடியாது. ஓஷோ குறித்து முழுமையாக எதுவும் இல்லை. ஆனால் ஓஷோவின் மௌனமான காலத்தை மேடையேற்றி உடன் நடந்த மிகப் பெரிய விஷயங்களை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் அறிய முற்படலாம். முழுக்க முழுக்க ஷீலா ஆவணப்படத்தை ஆக்கிரமிக்கிறார்ஷீலாவின் வலிமை, திட்டமிடல், போராட்டம், முடிவுகள், வெற்றிகள், தோல்விகள் என நிறையப் பாடங்கள் அறியலாம்.

ஷீலா வலிமையுற்றிருந்த 1980களின் காலமாகட்டும், நிதானமாக கூர்மையான சொற்களை எறியும் முதிர்ந்த ஷீலாவின் சமீப காலமாகட்டும், அவரின் கண்களும் பேசுவதை உணர முடியும். அந்தப் பார்வையை அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. அந்தப் பார்வையின் கூர்மைக்கு நிகராக ஒளி பாய்ச்சும் மென் நெகிழ்வு படர்ந்த ஓஷோவின் பார்வையில் இருந்து ஒளியும் ஆற்றலும் கிட்டியிருக்கலாம்.