மாணவர்களிடம் உரை நிகழ்த்துவது என்பது ஒரு வேள்விக்கு இணையான உணர்வைத் தருவது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியொரு வாய்ப்பு இன்று கிட்டியது. சென்னிமலையில் இருக்கும் எம்.பி.என்.எம்.ஜே பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் அனைத்து மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றும் வாய்ப்பு அது. ஏற்கனவே கடந்த ஆண்டில் நண்பர் பழமைபேசி அவர்கள் அதே துறை மாணவர்களிடம் உரை நிகழ்த்த வந்தபோது, என்னையும் சிறிது நேரம் மேடையேறிப் பேசப் பணித்தார்கள்.
மீண்டும் இந்த ஆண்டின் இறுதிநாளில் ”கூர்படுத்திடுவோம்” எனும் தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். நிகழ்ச்சி இரண்டு மணி நேரம், ஆகவே எப்படியும் 1.30 மணி நேரம் உரையாற்ற வேண்டும் என முதலில் சொல்லும் போதே லேசான தடுமாற்றம் சூழ்ந்தது. அவ்வப்போது மேடைகள் ஏறினாலும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் என்பது எனக்கு வசதியானது. பயற்சி வகுப்புகள் எடுத்த காலகட்டத்தில், 2 மணி நேரம் வரை தொடர்ச்சியாக எடுத்ததாக நினைவிருக்கின்றது. அதில் இடையே உரையாடும் வாய்ப்பு, சின்ன சின்ன நடவடிக்கைகள் என கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால் உரையாற்றலில் 90 நிமிடங்கள் மிகப் பெரிய அக்னிப்பரிட்சை என்றே உணர்ந்தேன். அக்னிப்பரிட்சை எனக்கு என்பதைவிட கேட்கும் மாணவர்களுக்கு என்பதுதான்.
கொஞ்சம் கூடுதல் தயாரிப்போடு என்னை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தேன். துறைத்தலைவர் K.G. பார்த்திபன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எனக்கு முன்னதாக தலைமை உரையாற்றிய தாளாளர் திருமதி. வசந்தா சுந்தானந்தம் அவர்களும், வாழ்த்துரை வழங்கிய முதல்வர் முனைவர். பழனிசுவாமி அவர்களும் மிக அருமையான ஒரு தளத்தை எனக்கு அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் இருவருக்கும் வாய்ப்பிற்கும் நல்ல தளம் அமைத்துத்தந்தற்கும் நன்றிகள் சொல்லியேயாகவேண்டும்.
அடுத்த 90 நிமிடங்களைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவ, மாணவியர்கள் குறித்த ஒரு சின்ன அழுத்தத்தோடே 10.27க்கு பேசத்துவங்கினேன். எப்போதும் பேச்சில் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒரு சூட்சுமம் இருக்கும். அப்படி இன்று எனக்கு கிடைத்த சில மாணவ மாணவியர்களை என்னை வெகு வேகமாக இழுத்துக்கொண்டு சென்றனர். அரங்கில் ஒரேயொரு சின்னச் சிரமம் சுவர்க்கடிகாரம் இல்லாதது மட்டுமே. ஒலிவாங்கி மேடையில் வைத்த கைபேசியை அவ்வப்போது வெளிச்சமூட்டிக் கொண்டே நான் உரையை நிறைவு செய்தபோது 11.55 காட்டியது.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு என்றாலும், கேட்கும் மாணவர்களுக்கு இவ்வளவு நீண்ட நெடுநேரம் என்பது கொஞ்சம் சிரமமாகவே தோன்றலாம். ஆனாலும் ஒத்துழைத்த மாணவ மாணவியருக்கு நன்றி பாராட்டியே தீரவேண்டும்.
நல்லதொருநட்பின் அடிப்படையிலும், அன்பின் அடிப்படையிலும் என்னை அழைத்த துறைத்தலைவர் நண்பர் பேராசிரியர் K.G பார்த்திபன் அவர்களுக்கும், இணைப்பேராசிரியர் திரு.மோகன், விரிவுரையாளர்கள் திரு.கோபி, திரு.அருள்ராஜ், திரு. மகேஷ்வரன் உள்ளிட்ட மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள்!
மிக மகிழ்வான அனுபவத்தோடுதான் 2011 ஆண்டு இன்று நிறைவடைகிறது என்பதில் பெருமகிழ்ச்சி!
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
-
-