கே.ஜி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோபி - ஆண்டு விழா

இந்த ஆண்டின் நிறைவுக்கூட்டம், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அடுத்த ஆண்டின் முதல் கூட்டமாகவும் இதை பட்டியலில் இணைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

இதே டிசம்பர்-28ல் முதன்முறையாக பொதுத் தேர்வு மாணவர்களுக்கான பயிற்சியாளராக 2016ல் களம் இறங்கினேன். அதே டிசம்பர்-28ல்தான் 2017ல் இந்தப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராகப் பேசினேன். இந்த ஆண்டு அதே டிசம்பர்-28, அதே பள்ளியில் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன்.



கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆறு அமர்வுகளில் ஏறத்தாழ 50 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சியளித்த நிலையில், ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டபோது தயக்கமும், தடுமாற்றமும் இருந்தது. எனவே ஆண்டு விழாவில் பெற்றோர்களை என் இலக்காக வைத்துக் கொண்டேன்.



உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளி, திருவிழாவிற்கு வந்தது போன்ற மனநிலையில் குவிந்திருந்த கூட்டம் வித்தியாசமான அனுபவமே. மதியம் (Atal Tinkering Lab) ஆய்வகத்தை திறந்து வைத்தது முதல் பின்னிரவு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்வரை முழுவதும் பங்கெடுத்திருந்தேன். மாணவ, மாணவிகள் பலருடன் உரையாடும் வாய்ப்பும் அமைந்தது.

*

கோவையில் உயர்கல்வி பயின்று வரும், பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தாளாளரின் வழியாக என்னிடம் பேச வேண்டும் என வந்தார். #வேட்கையோடு_விளையாடு தொகுப்பின் வாசகி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். தமது ஏழு ஆண்டு கால கல்வி வாழ்க்கை குறித்து ஒரு சொல் தடுமாற்றமின்றி ஏறத்தாழ 40 நிமிடங்கள் பகிர்ந்துகொண்டார். அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிறைந்த மிகக் கனமான, சவாலான வாழ்க்கை. காலம் விடுத்த சவால்களை அந்தந்தப் புள்ளியில் வென்றெடுத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியால் படிக்க வைக்க முடியாது என்று கூறிய தந்தையை எதிர்த்து சண்டையிட்டு தமது கல்வியைத் தொடர்ந்திருக்கிறார். காலம் கடந்திருந்தாலும், அப்படி சண்டையிட்டது தவறோ எனும் குற்ற உணர்வு மட்டும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது.

சமூகத்தில் நல்ல அறிமுகத்தோடு இருக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த மகன், திடீரென விவசாயம் செய்கிறேன் என சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அப்பா மனம் ஒப்பாமல், அந்த முடிவை குறையாகக் கருதி ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்கிறார்.

உரையின் மையம், பிள்ளைகள் தாம் உருவாக்கிய சிறகுகளின் துணையோடு அவர்கள் விரும்பிய எல்லை வரை பறக்க அனுமதியுங்கள் என்பதும், பெற்றோர்களிடம் நல்ல கல்விக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சண்டையிடுங்கள் என்பதுவும்தான்.

அந்த மாணவி “பயங்கர குற்றவுணர்ச்சில இருந்தேன். இப்ப புரியவச்சிட்டீங்க தேவையானதுக்குத்தான் சண்ட போட்ருக்கேன். தப்பில்ல!” என்றும், அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் “அது பையனோட வாழ்க்கைங்க, அவன் விரும்பினதைத்தான் செய்துக்கட்டுமே, இனிமே அவனுக்கு சப்போர்ட் பண்ணப்போறேன்” என்றும் கூறியதே இந்த ஆண்டின் நிறைவில் எனக்குக் கிடைத்த பெரும் பரிசு என்பேன்.

22 வயதாகும் மகளுக்கு ‘கல்யாணம் பண்ணி வச்சுடுறேன் அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோ!’ என வற்புறுத்திக் கொண்டேயிருந்த ஒரு தாய், “இனி கல்யாணம்னு கட்டாயப்படுத்தப் போறதில்லை, மக விரும்பினதை படிச்சுட்டு வரட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்” என்றார்.

*



இந்த மாதிரி அனுபவங்களே என்னை #வேட்கையோடு_விளையாடு தொகுப்பு எழுத வைத்தது. கேஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் இரண்டு பேர் தொகுப்பின் இரண்டு கட்டுரைகளின் நாயகிகள் என்பது, அன்று வரை எனக்கும், நிர்வாகத்திற்கும், அந்த மாணவிகளுக்கும், புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட சிலருக்கும் மட்டுமே தெரியும். ஆண்டு விழா உரையில் அவர்களின் பெயர், அடையாளத்தைத் தெரிவிக்காமல் அவர்களையே உதாரணமாகக் காட்டிப் பேசினேன்.

கலை நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் மலர்ந்த முகத்தோடு “சார்.... நா......” என்று தன் பெயர் சொன்னபோது ஒருகணம் சிலிர்த்துப் போனேன். 2018ம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வகையில் கலங்கடித்தவள். இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கூட்டங்களில் அந்தப் பெண்ணை உதாரணமாக முன்னிறுத்திப் பேசியிருக்கிறேன். குட்டி உருவமும், கூர்மையான கண்கள் மட்டுமே நினைவில் இருந்தன. முகம், நிறம், அடையாளம் என எதுவும் நினைவில் இல்லை. வேறு எங்கேனும் சந்தித்திருந்தாலும் எனக்கு அடையாளம் தெரிந்திருக்க சாத்தியமில்லை. ஆயிரக்கணக்கானோர் இருந்த அந்த கூட்டத்தில் அந்த மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரும் இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு கலவையான ஒரு மனநிலையைக் கொடுத்தது.

புதிய தலைமுறையில் தொடராக எழுதியபோது, தொகுப்பாக வெளியான பிறகு என அந்தப் பெண் வாசித்திருந்தாலும், நாங்கள் இப்போதுதான் பேசுகிறோம், சந்திக்கிறோம். இருவருக்கும் இடையே இருந்த பரவசத்திற்கு நிகராக, ஒருவித கனமும் ஒளிந்திருந்தது. என்னை எளிதாக்குவது போல், “எங்க காலேஜ் சிலபஸ்ல உங்க கவிதை இருக்கு சார், அதில் கவிஞர்னு உங்களைப் பத்தி அறிமுகப்படுத்தும்போது, எனக்குத் தெரியும், என்னைப் பத்தியும் எழுதியிருக்கார்னு பெருமையா இருக்கும் சார்” என்றாள். என் குடும்பத்தை அறிமுகப்படுத்தி, செல்ஃபி எடுத்துக் கொண்டு, எண் கொடுத்து தொடர்பில் இரு எனச் சொல்லி விடை பெற்றேன்.

*

இந்த ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராக, ஈரோடு வாசலில் இருந்து மூன்றாவது கல்வி விளையாட்டு விழா வாய்ப்பாக பாலமுரளி பங்கெடுத்ததுவும் மகிழ்ச்சிக்குரியது.



அருமையான தருணத்தை வழங்கிய பள்ளியின் செயலர் திரு.சிவக்குமார், தாளாளர் திருமதி. உமா சிவக்குமார், என் மனைவியிடம் திருஷ்டி சுத்திப் போடுங்க என வாழ்த்திய நிறுவனத் தலைவர் திரு. வி.கே.சின்னசாமி மற்றும் நட்பிற்குரிய பள்ளியின் அனைத்து ஆசிரியத் தோழமைகளும் மிகுந்த அன்பிற்குரியவர்கள்.

2017ல் அறிமுகப்படுத்தியதோடு, இந்த ஆண்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் வெற்றிவேல், ஈரோடு வாசலில் இருந்து நிகழ்வில் பங்கெடுத்த தாளவாடி கேசிடி பள்ளி தாளாளர் முதல்வர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், சாஹர் மேல் நிலைப்பள்ளி முதல்வர் திருமதி ராதா மனோகரன், தம்பி மூர்த்தி மற்றும் முதன்முறையாக பங்கெடுத்த என் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

.