பேச வேண்டியது பெற்றோர்களிடமே!

மாணவர்களுக்கான பயிலரங்குகளின் நிறைவில் அதை ஏற்பாடு செய்யும் உயர்மட்டத்தில் உரையாடும்போது எப்படியும் “உண்மையில் நாம் உரையாட வேண்டியது, மாணவர்களிடம் மட்டுமே இல்லை... முக்கியமாக ஆசிரியர்களிடம், இன்னும் மிக முக்கியமாக பெற்றோர்களிடமே!” எனச் சொல்வதுண்டு.
அவர் என் நீண்ட நாள் நண்பர். அவ்வப்போது சந்திப்பது, உரையாடுவது உண்டு. கடந்த மாதத்தில் ஒருநாள் அவருடைய மகன் படிக்கும் கல்லூரியில் இருந்து அழைத்தார். மகனை அழைத்துக்கொண்டு வருகிறேன், அவனோடு உரையாட வேண்டுமென்றார். முதல் இரண்டு ஆண்டுகளில் மிகக் கணிசமான அரியர்ஸ். கல்லூரியிலிருந்து நேரில் வரச் சொல்லி அழைத்துவிட்டார்கள். மகனிடம் நான் பேச வேண்டும் எனும் வேண்டுகோளில் ஒரு வற்புறுத்தல் இருந்தது.
என்னை அறிந்திராத பிள்ளைகளிடம் தனிப்பட்ட முறையில் பேசி கவுன்சிலிங் கொடுக்கும் அனுபவம் பெரிதாக இல்லை. இதுவரை சுமார் பத்துப் பேரிடம் மட்டுமே பேசியிருப்பேன். என் களம் பயிலரங்குதான். பயிலரங்கிற்குப் பின் தொடர்பில் இருப்பவர்களுடன் என்னால் உரையாட முடியும். முன்பின் தொடர்பில்லாத தனி ஒருவரின் பிரச்சனைகளுடன் உரையாடுவது எளிதானதல்ல. ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கொண்டிருக்கையில் அவர் வற்புறுத்தலாக வருகிறேன் எனச் சொல்லிவிட்டார்.
வந்தபோது அவரை வெளியே அனுப்பிவிட்டு மகனோடு சுமார் ஒரு மணி நேரம் உரையாடினேன். அற்புதமான பையன். ஒரு தெளிவான வடிவத்திற்குள் வந்தோம். தனித்த பிள்ளைகளிடமும் இனி தயக்கமின்றி உரையாடலாம் எனும் நம்பிக்கையை முதல் சந்திப்பிலேயே தந்தான்.
அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னிரவு வரை அவர் தந்தையிடமிருந்து விசாரிப்பு வருமெனக் காத்திருந்தேன். அடுத்தடுத்த நாட்களும். ஒரு வாரம் கடந்தது, நானே பொறுக்க முடியாமல் அவரைத் தொடர்பு கொண்டு, ‘நான் உங்க பையன்கிட்ட என்ன பேசினேனு என்கிட்டதான் கேட்கல, அவன்கிட்டியாச்சும் கேட்டீங்களா!?’ என்றேன். கேட்டதாகவும் அவன் ஒரு இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டதாகவும், மகன் குறித்து என்னிடம் பேசத் தயக்கமாக இருந்ததாகவும் கூறினார். என்கிட்ட பேச என்ன தயக்கம் என்றேன். இத்தனைக்கும் நாங்கள் மணிக்கணக்கில் பேசிக் கொள்கிறவர்கள். சரி நாளை அழைக்கிறேன் என்றார். இன்னும் அந்த ‘நாளை’ வரவில்லை.
நானும் அது அவ்வளவுதான் என மறந்து போயிருந்தேன். வற்புறுத்தலாய் மகனை அழைத்து வந்தவர், அதன்பின் என்ன ஏது என எதுவுமே விசாரிக்காதது அழுத்தம் தரக்கூடியதே.
மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மாணவத்தனமான குரல். பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். அடையாளம் தெரியாமல் யார் எனக் கேட்டேன். தம் தந்தையின் பெயரைச் சொன்னவுடன் புரிந்து கொண்டேன்.
”சொல்லு கண்ணு!”
“அங்கிள்... நான் ரொம்பத் தெளிவாயிட்டேன் அங்கிள். ஒரு அஷ்யூரன்ஸ் தர்றேன் அங்கிள், எல்லாத்தையும் ஒதுக்கிவச்சுட்டு, ஒழுங்கா படிச்சு, சஸ்சஸ்ஃபுல்லா டிகிரி வாங்கிடுவேன் அங்கிள்”
மிகுந்த உற்சாகப் பேசினான். நான் அது குறித்து வேறு எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை
“ரைட்டு தம்பி. என் நம்பர் வச்சுக்க, தேவைப்படும்போது பேசு, ஈரோடு வந்தா மீட் பண்ணு” என்றேன்.
“ஷ்யூர் அங்கிள்” என அழைப்பைத் துண்டிக்கவிருந்தவனிடம் கேட்டிருக்ககூடாதுதான் ஆனாலும் கேட்டேன்...
“ஏந் தம்பி, நாம அன்னிக்குப் பேசினதைப் பத்தி உங்கப்பா உன்கிட்ட எதும் பேசினாரா!?”
“ஜஸ்ட் ஒருதடவ கேட்டார் அங்கிள். பெருசா எதும் கேட்கல”
“உங்ககிட்ட!?” எனும் கேள்வியை என்னிடம் அவன் கேட்காததற்கு, அந்த நண்பர் தம் மகனுக்கு நன்றி சொல்லிக்கொள்ள வேண்டுகிறேன்.
மீண்டும் முதல் பத்திக்கு....