Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Jan 4, 2018

நம்மைத் தாண்டும் நம் பிள்ளைகள்

நம்பிக்கை மட்டும் வைக்கத் தயாரெனில், மிகத் தைரியமாக சில தீர்மானங்களை எடுக்கலாம். நம்பிக்கை என்பது நம்மீது மட்டும் வைப்பதில்லை. மற்றவர்கள் வைப்பதும் சேர்த்துத்தான். 2017 ஆண்டின் இறுதியில் நம் குழந்தைகள் மேல் ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது எனும் கேள்வி எழுந்தது. நான் யோசித்தது, விரும்பியது ஒன்றே ஒன்றுதான். நம் குழந்தைகள் பேச வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கக் கூடாது. எதுவேணாலும் பேசிக்கொள்ளலாம். அவ்வளவே!

ஆண்டு முழுவதும் ஈரோடு வாசல் குழுமத்தின் வாயிலாக நிறைய வித்தியாசமான முயற்சிகளைப் பரிசோதனை செய்திருந்த நம்பிக்கையை இந்தமுறை குழந்தைகள் மீது நகர்த்த விரும்பினேன்.  ஏறத்தாழ நான்கு வாரங்களுக்கு முன்பே குழுமத்தில் அறிவித்து, அதற்கென ஒரு நடத்துனர் குழு அமைத்து முழுப் பொறுப்பையும் அவர்களிடம் விட்டுவிட்டோம்.

இந்தத் திட்டத்தில் நான் எவ்வகையிலும் தலையீடு செய்யாமல் அதற்காக தாங்களாகவே வந்து விரும்பி பொறுப்பெடுத்து அணியாக செயல்படத்தொடங்கிய மஞ்சு, மகேஷ்வரி, வனிதா, தனபாக்கியம், சுமதி ஆகியோரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுவதே என் தீர்மானமும் கூட.



நிகழ்ச்சி என்பது 6ம் வகுப்பு 12ம் வகுப்பு வரையிலான ‘வாசல்’ பிள்ளைகளை மேடையில் உரை நிகழ்த்த வைப்பது மட்டுமே. சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் பேசலாம். எது குறித்து வேண்டுமானாலும் பேசலாம். குறிப்பிட்ட தலைப்பு, முறையான உரை என எந்த நிபந்தனையும் இல்லை என்பதே நிகழ்ச்சியின் பலம் எனக் கருதினேன். தான் சென்று வந்த சுற்றுலா, பள்ளி, விளையாட்டு, பார்த்த சினிமா, வாசித்த புத்தகம், தன் கிராமம், தனக்குப் பிடித்த உறவு என எது குறித்தும் நிபந்தனைகளின்றி பேசலாம் என அறிவித்தோம். போட்டி கிடையாது, முதலிடம், இரண்டாமிடம் எனும் வகைப்படுத்தல் கிடையாது.

நடத்துனர் குழு தனி வாட்சப் குழுமத்தில் அவர்களாகவே செயல்பட்டார்கள். ’ஈரோடு வாசலில்’ வந்து முட்டி மோதி, பேச்சாளர்கள் பட்டியலைத் தயாரித்தார்கள். யார் வழி நடத்த யார் பின்பற்ற எனக் குழம்பினார்கள். ஒரு கட்டத்தில் திட்டம் உண்டா இல்லையா என (நீள் ஓய்வில்) குழம்பிப்போனார்கள். நிகழ்ச்சிக்கு முந்தைய தினம்தான் எப்படியும் நடத்திவிடுவது என முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து பம்பரமாய் சுழன்று வேலை செய்தார்கள்.

பங்கெடுக்கும் பிள்ளைகளுக்கான அழகிய, மதிப்பு மிகு நினைவுப்பரிசு. மற்ற குழந்தைகளுக்கு நினைவுப்பரிசு. குழந்தைகளுக்கான குளிர்பானம், சிற்றுண்டி. மற்றவர்களுக்கான தேநீர் சிற்றுண்டி என அனைத்தும் அவர்களாகவே முடிவு செய்து ஏற்பாடு செய்து.... நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் நிறைவோடு செல்லும் வகையில் அனைத்தையும் மிகச் செம்மையாக செய்திருக்கிறார்கள்.

6ம் வகுப்பு 2 பேர், 7ம் வகுப்பு 2 பேர், 9ம் வகுப்பு நான்கு பேர் என களம் இறங்க எட்டுப் பேர் தயாராக இருந்தார்கள். முதலில் குழந்தைகளை இயல்பாக்கும் நோக்கத்தோடு அவர்களுக்கான விளையாட்டோடு துவங்கியது. 9ம் வகுப்பில் படிக்கும் நிஷாந்த், நிரஞ்சன், நதிவதனா, அமர்நீதி, 7ம் வகுப்பில் படிக்கும் நித்தின், ஸ்ரீதிக்‌ஷா, 6ம் வகுப்பில் படிக்கும் நேத்ரா, குறளினி ஆகியோர் மட்டுமே மேடையை அலங்கரிக்க, பெற்றோர்களும் உற்றார்களும் அவையில் அமர்ந்திருக்க உரை நிகழ்வு தொடங்கியது.



நம் கைகளுக்கும் கால்களுக்குமிடையே ஓடிக்கொண்டிருந்த நம் வீட்டுப்பிள்ளைகள் இத்தனை திறன் வாய்ந்தவர்களா...என தங்களைப் பேச்சாளர்களாக அறிவித்துக்கொண்ட எட்டுக் குழந்தைகளின் பெற்றோர்களும் ஆச்சரியத்தில் உறைந்து நின்ற தருணம் அது.

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை - ஒரே தளத்தில் வைப்பது நீதியன்றுதான்... ஆனால் அந்த எட்டுப்பேரும் அந்த நீதியன்று எனப் போராடவில்லை. யார் ஆறாவது யார் ஏழாவது யார் ஒன்பதாவது என பார்வையாளர்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கான தரமான தயாரிப்பு மற்றும் திறன் வாய்ந்த உரை. மேடைக் கூச்சம், தடுமாற்றம் என எதுவும் இல்லாமல் ஒருவருக்கொருவர் சளைக்காமல் அடித்து விளையாடினார்கள். சிலர் பயன்படுத்திய தமிழ்ச் சொற்கள் மற்றும் உடல் மொழி கண்டு வியந்து நின்றோம்.

எட்டுப் பேர்களில் யாரும் யாரிடமும் போட்டி போடவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். இனி போட்டி போடுவார்கள். அவர்களுக்குள்ளாக கற்றுக் கொள்வார்கள். திறன், நுணுக்கம் கூட்டுவார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில்... அவர்களைப் பாராட்ட அன்று அரங்கிலும் சரி... இங்கும் சரி எனக்கு இன்னும் பொருத்தமான சொற்கள் கிட்டவில்லை. அந்த அரங்கில் மிரண்டு போய்தான் நின்றேன். ந்த மிரட்சியைத்தான் மிகப் பெரிய வாழ்த்தாக, பாராட்டாக அவர்கள் தலையில் சூட்டினேன்.

எத்தனையோ மேடைகளில் மாணவர்கள் அல்லாத பலதரப்பட்ட வயதினரை களம் இறக்கிய அனுபவம் உண்டு. வயது முதிர முதுமை கூடுவது போலவே எதிர்மறையும் கூடுவதால், அம்மாதிரியான வாய்ப்புகளில் அவர்களின் தடுமாற்றம் கண்டு பெரும் அயர்ச்சி உணர்வதுண்டு.


ஆனால் இந்தக் குழந்தைகள் தாம் தகுதி வாய்ந்த பேச்சாளர்கள் என்பதை உரக்கச் சொல்லிவிட்டார்கள். வர இயலாத பிள்ளைகள் எதிர்காலத்தில் இவர்களோடு அணி திரள்வார்கள். வாழ்த்தி வரவேற்போம். உடன் துணை நிற்போம். இவர்கள் அனைவரும் நம் எல்லோரையும் தாண்டி உயரம்  போய் சிலிர்க்க வைப்பார்கள்.

Nov 23, 2016

தோற்றுப்போகும் ருசி மொட்டுகளும் அன்பும்

சுவாரசியமான அரட்டையையும் மீறிப் பசித்திருந்த வேளை. நண்பர் வீட்டில் தேநீரோடு, மென் சிவப்பு நிறத்தில் வட்ட வடிவ க்ரீம் பிஸ்கெட்கள் சிலவற்றை ஒரு தட்டில் நிரப்பிப் பரிமாறினார்கள். பசியின் உணர்வில் பிஸ்கெட்கள் கவர்ச்சிகரமாத் தெரிந்தன. தொலைக்காட்சி விளம்பரங்களில் தூள் பறத்தும் பிஸ்கெட் வகை அது. எடுத்துச் சுவைத்தேன். நீட்டி முழக்கிச் சொல்ல வேண்டியதில்லை, ஒற்றை வரியில்இதையெல்லாம் மனுசன் திம்பானா!?” னக் கேட்கலாம் போன்ற சகிக்க முடியாதொரு சுவை.

அந்த நெருடலை என் உடல் மொழியிலிருந்து கவனித்துவிட்ட நண்பர் என்னாச்சு?” என்றார். விருந்தோம்பல் இங்கிதம் என்பதையும் தாண்டி... புரிதல் உள்ள நட்பு என்பதால்என்னங்க டேஸ்ட் இது... கொடுமையால்ல இருக்கு!?” என்றேன். அந்தப் புள்ளியில் நாங்கள் இன்னும் நெருங்கிப்போனோம். “நமக்கு சகிக்கல, ஆனா புள்ளைங்க இதத்தானே திங்குதுங்கஎன்றார்

நண்பரின் பத்து வயது மகனின் மிகப் பிடித்தமான பிஸ்கெட் அது. எது இல்லையென்றாலும் பிரச்சனையில்லை, அந்த பிஸ்கெட் இல்லாவிடில் வீடு ரணகளமாகிவிடும். அன்பு எனும் நிலைப்பாட்டில் குடும்பம் அஞ்சுகிறது. பிள்ளைகளுக்கு பிடித்தது என்றால், எதையும் வாங்கித் தந்துவிடுவது என்பதே அன்பென்றாகி வெகுகாலமாகி விட்டது



இப்படியான சகிக்க முடியாத சுவையில் பிஸ்கெட் தயாரிப்பது யாருடைய தேர்வு. அதுவும் குழந்தைகளை இலக்காக வைத்து ஒரு பிஸ்கெட்டை எந்த அடிப்படை அறத்தோடு தயாரிக்கிறார்கள்? உண்மையிலேயே பிள்ளைகளின் நாக்குகள் காலப்போக்கில் இந்த மாதிரியான ருசியை விரும்பும் அளவிற்கு மாறிப்போய்விட்டனவா? அல்லது தங்கள் வியாபாரத்திற்காக பிள்ளைகளிடம் விளம்பரங்கள் மூலம் அந்த ருசியைக் கொண்டு சேர்ப்பித்துவிட்டனரா?

ஓடிவந்து தட்டிலிருக்கும் பிஸ்கெட்டை எடுத்து இரண்டாகப் பிரித்து க்ரீமை நாக்கில் அப்பி, கைகளில் எச்சில் வழிய ருசித்து ண்ணும் நண்பரின் மகனைப் பார்க்கிறேன். ‘ருசியில் தலைமுறைகளுக்கு இடையே எப்படி இத்தனை பெரிய வேறுபாடு எனும் சிந்தனையின் நீட்சியாய் என் பால்யத்திற்குள் பயணப்படுகிறேன்.

கால் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய நகர்ப்புற வாழ்வியலில் பிள்ளைகளுக்குக் கிடைத்த நொறுக்குத் தீனிகள் எவையென்று நான் அறிந்திருக்கவில்லை. கிராமம் சார்ந்த வாழ்க்கையில் எங்களுக்கு கிடைத்த ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. இப்போது போன்ற சந்தைப்படுத்தல்கள் அப்போது கிடையவே கிடையாது.

சந்தைக்கோ, திருவிழாவிற்கோ சென்றால் மட்டுமே குறிப்பிட்ட சில உணவுப் பண்டங்கள் வாங்கி வருவார்கள். மற்றபடி வீட்டில் இருப்பது, வயலில் கிடைப்பதையொட்டியே தேவைகளைச் சமாளித்துக்கொள்ள வேண்டும்

எண்ணெய் வித்துக்களாக இருப்பினும், அவற்றில் ஒவ்வொருவரையும் கவர்ந்திருப்பது கடலையும் எள்ளும்தான். கடலை என்பது எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வேர்க்கடலை அல்லது நிலக்கடலை. கடலையின் ருசியில் போதுமென நிறைவடைந்து திருப்தியடைவது இன்றளவும் எனக்குச் சாத்தியப்படவேயில்லை. கடலையை எல்லாப் பதங்களிலும் நம்மால் ருசிக்க முடியும்.

விளைந்து முதிர்ந்து இருக்கும் பருவத்தில் செடியோடு பிடுங்கி பச்சைக் காய்களை நெருப்பில் சுட்டு ருசிக்கலாம். காய்கள் எரிந்தும் எரியாமலும் இருக்க, உள்ளே புழுங்கி வெந்து புகை மணக்கும் பச்சை கடலையின் ருசி நினைத்தாலே நாவில் எச்சில் சுரக்க வைக்கும். பறித்த காய்களை வேக வைத்துச் சாப்பிடலாம். வேக வைத்த கடலை சூடாக சாப்பிட்டால் ஒரு சுசி;, ஆற வைத்து தின்றால் வேறு ருசி; அடுத்த நாள் சற்று உலர்ந்த நிலையில் சாப்பிடும்போது இன்னொரு ருசி.

உலர்த்தி, பதப்படுத்திய காய்களை இரண்டு விதங்களில் சுவைக்கப் பயன்படுத்தலாம். ஒன்று இரும்பு வாணலியில் வறுப்பது. மற்றொன்று நெருப்பில் கொட்டி எரிந்து போகாமல் பதமாக எடுப்பது. அடுத்தது பருப்பினைத் தனியாகப் பிரித்து பச்சையாகவோ, வறுத்தோ உண்ணலாம். கடலையுடன் கடித்துக்கொள்ள வெல்லமோ, கருப்பட்டியோ கிடைத்து விட்டால் வயிறு நிரம்பும் வரை உலகம் மறந்துபோகும்

நல்லெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் எள்ளும் ருசி மிகுந்த ஒரு பொருளே. வறுத்த எள்ளுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து உண்பது ருசியின் இன்னொரு உச்சம். இதில் எள்ளு மாவு என்பது கிராமத்தினருக்கே உரியதொரு சிறப்புத் தயாரிப்பு. அதுவொரு கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடு. வறுத்த எள்ளை செக்கில் இட்டு, வெல்லம் சேர்த்து உலக்கையால் மாவாக இடிக்கப்பார்கள். இடிக்கும்போது எழும் மணமே அக்கம்பக்கத்திற்கு எள்ளு மாவின் வருகையை உணர்த்திவிடும்.  எள்ளுமாவுடன் ராகிக்களி இணைத்தால் அல்வா போன்ற பதத்தில் ஒரு இனிப்பு வகை கிடைக்கும். அதன் ருசி குறித்தெல்லாம் சொற்களில் விளக்கிவிடமுடியுமென எனக்குத் தோன்றவில்லை

புளியில் இருந்து எடுத்துக் குப்பையில் போடப்படும் புளியங்கொட்டைகூட ஒரு  நொறுக்குத் தீனிதான். புளியங்கொட்டைகளை தண்ணீரில் ஊற வைத்து, உலர்த்தி அதை வறுத்து உடைத்து தோல் நீக்கினால் சற்று கடினமான பதத்தில் மணக்க மணக்கக் கிடைக்கும். பொழுது போகாத தருணங்களின் தீனி அது.

தேங்காய்த் துண்டுகளுடன் வாழைப்பழம் அல்லது வெல்லம், கருப்பட்டி இணைந்து சீரிய நொறுக்குத் தீனியாகவும், பசிப் பொழுதின் ஆபத்பாந்தவனாகவும் அமையும். பொரியுடன் பொட்டுக்கடலை, மிக்சர், வறுத்த நிலக்கடலை கலந்த கலவை திருவிழாக்காலத் தீனிகள்.

பருவங்களில் பனை மரங்களில் கிடைக்கும் நொங்கு அமிர்தத்தின் பிறிதொரு வடிவமென்றே தோன்றுகிறது. பனங்காய்கள் முற்றிப் பழுத்து விழும் காலைப் பொழுதுகள் கவர்ச்சிகரமானவை. அவற்றைத் தீயில் சுட்டுஉறைந்து கிடக்கும் கமகமக்கும் சாற்றினை உறிஞ்சிச் சுவைக்கலாம். பனம் பழத்தின் கொட்டைகள் வீணாகும் பொருளல்ல. ஒரு ஒழுங்கில் அடுக்கிப் பொறுத்திருந்தால், முளைப்பு துளிர்க்கும். அந்தப் பருவத்தில் வெட்டி உடைத்தால் ருசி மிகுந்த சீம்பு கிடைக்கும். முளைப்பு விட்ட பன்ங் கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்தால், வேர்விட்டு சில வாரங்களில் பனங்கிழங்காக விளைந்து திரண்டிருக்கும். அவற்றைப் பிடுங்கி தனித்தனியாக தீயில் சுட்டு அதன் மணத்தோடு சாப்பிடலாம். வேகவைத்து நார் உறித்து நாட்கணக்கில் சுவைத்துக் கொண்டேயிருக்கலாம்.

வயல்வெளிகளில் பயிர்களுக்கு எப்போதும் தொந்தரவாக, களையாக இருக்கும் கோரைப்புற்களின் கிழங்குகள்கூட குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மணக்கும் ஒரு இணை உணவுதான். விளைந்து நிற்கும் கம்பு, ராகிப் பூட்டைகள், எப்போதாவது வெட்டப்படும் தென்னை மற்றும் பனை மரத்தின் இளங்குருத்துகள் என ஏதேனும் ஒன்று, அதையண்டி இருக்கும் மனிதர்களின் பசி மற்றும் ருசிக்காக தம்மை ஈந்து தருவதில் வஞ்சனைகள் செய்வதேயில்லை.

இவையுள்ளிட்ட இன்னும் எத்தனையோ பதார்த்தங்கள், பொருட்கள் கிராமத்து மனிதர்களின் அன்றாடங்களில் இன்றளவும் அனைவருக்குமான  இணை உணவுகளாக, நொறுக்குத் தீனி வகைகளாக இருந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ருசி இருந்தது, தனித்த சத்துகள் இருந்தன. அவற்றை உண்பதற்கென நம்மிடம் தேவைகளும், காரணங்களும் இருந்தன. இங்கு பட்டியலிடப்படாத, இக்கணத்தில் என் நினைவுகளில் தொலைந்து போன இன்னும் எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன்.

இவை எல்லாமே ‘கால் நூற்றாண்டு காலத்திற்குள்மற்றொரு தலைமுறையின் முன்னால் காணாமல் போய்விட்ட அல்லது காணாமல் போக்கப்பட்ட பதார்த்தங்கள் என்றும் பட்டியலிடலாம். இவற்றின் இடங்களை வணிகம் சார்ந்த தயாரிப்புப் பொருட்கள் மிக எளிதாக, அதேசமயம் மிக வலுவாகப் பிடித்துவிட்டன. பெரு நிறுவனங்கள், பன்னாட்டுத் தயாரிப்புகள், விளம்பர யுக்திகள், பெரும் ஆளுமைகளின் பரிந்துரைப் பாசாங்குகள் எனும் கூட்டு வலைப்பின்னல், நம்மிடமிருந்த பொருட்களிலிருந்து நம்மையும், நம் பிள்ளைகளையும் அந்நியப்படுத்திவிட்டனநம் பிள்ளைகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை, நாம் நம் அக்கம்பக்கம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தீர்மானிக்க முடிவதில்லை. யாரோ தாங்கள் விரும்பிய வண்ணம் தீர்மானிக்கிறார்கள். தங்கள் நோக்கத்தில் நம் வீட்டுப் பிள்ளைகளின் வாயிலாக யார் யாரோ வென்றெடுக்கிறார்கள். அதற்காக இடைவிடாது திறம்படச் செயல்படுகிறார்கள். தம் மண்ணில், தம் சுற்றத்தில் கிடைத்த எல்லா நல்லவற்றைகளையும் தொலைத்த இந்தத் தலைமுறைக்கு எது ருசி, எது ஆரோக்கியம் என்பதிலேயே தெளிவின்மை நிரப்பட்டிருக்கிறது.

பெற்றவர்களும்கூட தங்கள் இயலாமையைச் சமாளிக்க, பிள்ளைகளின் வாய்களை அடைக்க, பிள்ளைகளின் அசட்டு விருப்பத்திற்கேற்ப கவர்ச்சியான ஒரு நொறுக்குத் தீனியை, ஒவ்வாச்சுவை கொண்ட ஒரு பிஸ்கெட்டை, காற்றுப் பையில் அடைக்கப்பட்ட உப்பும் எண்ணையும் மிகுந்த ஒரு பதார்த்தத்தைக் கொடுத்து, அந்தச் சூழலை வென்று விடுகிறார்கள்.

தோற்றுப் போவதென்னவோ, சாயமேற்றப்பட்ட சந்தோசத்தில், மகிழ்ந்து விடுவதாய் கற்பனை செய்துகொள்ளும் பிள்ளைகளின் ருசி மொட்டுகளும், ஆரோக்கியமும் மற்றும் நம் பொருளாதாரமும், உண்மையான அன்பும் தான்!

**

நம்தோழி நவம்பர் 2016

Aug 29, 2016

பிள்ளைகளை புகார் சொல்லலாமா?



நாற்பது வயதைத் தாண்டுவோருக்கு சில பிரத்யேக குணங்கள் உருவாகிவிடுகின்றன எனத்தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பதின்வயதுப் பிள்ளைகள் குறித்த மனவருத்தம் மற்றும் குறைப்படுதல் முக்கியமானது. ஒருவகையில் அதில் உண்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ”வீட்டில் வேலைகள் எதும் செய்வதில்லை, அருகில் கடைக்குப் போய் வருவதில்லை, சொந்தங்களோடு உறவு பேணுவதில்லை, எப்போதும் செல்போன், டேப்லெட்டில் கேம்ஸ் விளையாடுகிறார்கள், டிவி பார்க்கிறார்கள்என்பது ள்ளிட்ட புகார்களை இல்லந்தோறும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

தில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. வெறும் புகார்கள், மனத்தாங்கல்கள் என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இப்போதைய பதின் வயதுப் பிள்ளைகளின் உலகம் நாம் பார்த்திராதது. அறிவியலும் தொழில்நுட்பமும் சார்ந்த உலகத்தினராய் அவர்கள் வளர்வதாலோ என்னவோ அருகாமை மனிதர்களோடு தொடர்பற்றுப்போய் விடுகிறார்கள்.

பதின்வயதின் மையத்திலிருந்தே அவர்களை அவர்களுக்கான பிரத்யேக உலகம் தனக்குள் வாரிச்சுருட்டிக் கொள்கிறது. கடந்த தலைமுறையினருக்கு மகிழ்ச்சியூட்டியாய் இருந்த பெரும்பாலான செயல்கள் ஏதும் இப்போது அவர்களுக்கு அவசியப்படுவதில்லை. அவர்களுக்கு மகிழ்ச்சியூடும் பலவற்றில் எதுவும் பெரியவர்களுக்கு புரிவதில்லை; புலப்படுவதில்லை.

இந்த மனவருத்தமும் ஆதங்கமும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்த மாதிரியான இடைவெளிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, பதின்வயதுப் பிள்ளைகளை ஒட்டுமொத்தமாய் எடை போடுதல் மாபெரும் குற்றமாய்த் தோன்றுகிறது. ஒருவகையில் அவர்கள் வேறு ஒரு அற்புத உலகத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை உணர்வதும் அறிவதும் அவசியமான ஒன்று.

*

பெரம்பூர் ரயில் நிலையம். காலை 4 மணி இருக்கும். அந்தக் காலைப்பொழுதில் வேடிக்கை பார்க்க  வேண்டுமெனத் தோன்றியது. அந்த நான்கு மணி காலைப் பொழுது தெளிவான அமைதியை தன்னகத்தே கொண்டிருந்தது. பொள்ளாச்சியிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில் தன் சுமையில் கொஞ்சம் இறக்கி வைக்கும் முகமாய் நின்று அமைதி காக்கிறது. ரயிலில் இருந்து இறங்கிச் செல்வோர் முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளைச் சுமந்ததாய் இருக்கின்றன.

அவர்களிடையே வரிசையாய்ச் செல்லும் ஆட்டுக்குட்டிகள் போல் சிறுவர் படையொன்று நடைமேடையின் முன்புறத்திலிருந்து வருகின்றது. இருவராய் வரும் வரிசையில் முதல் ஆளாய் வருகிற சிறுவனின் கையில் அவன் உயரத்தில் பாதி அளவில் பெரிய கோப்பை ஒன்று இருக்கின்றது. எங்கோ விளையாட்டுப் போட்டிக்கு சென்று திரும்புகிறார்கள் எனப் புரிந்தது.

கோப்பையைச் சுமக்கும் சிறுவனின் பின்னால், இரண்டு சிறுவர்கள் எதிரெதிராய்த் திரும்பி இரண்டு கைகளையும் கோர்த்து ஒரு நாற்காலிபோல் அமைத்திருக்க, அந்த கைகளில் ஒரு சிறுவன் அமர்ந்து சிரித்தபடி இருக்கிறான். சுமப்பவர்களின் நடைக்கு ஏற்ப காற்றில் மிதப்பதுபோல் உயர்ந்து தணிகிறான். பார்த்த நொடியில் தம் அணியின் தலைவனைத் தூக்கி வருகிறார்களோ எனத் தோன்றியது. அணித் தலைவனை இப்படியெல்லாம் அதிகாலை நான்கு மணிக்கு ரயில் நிலையத்தில் தூக்கி வருவது அதிகப்படியான அலட்டல் என மனம் நினைக்கும்போதே என்னை அவர்கள் கடக்கிறார்கள்.

அவர்களின் கைகளில் அமர்ந்திருந்த சிறுவன் நான் பார்ப்பதைக் கவனித்ததும் வெட்கமாய்ப் புன்னகைக்கிறான். அப்போதுதான் அவன் இடது கால் முட்டியில் தடிமனான கட்டு போடப்பட்டிருப்பதைக் காண்கிறேன். சில நொடிகளுக்கு முன்னாள் அலட்டல் என நினைத்த அவசரப்புத்திக்காக நான் வெட்கப்பட்டேன்.

ஒரு வெற்றிக்குப் பிறகு, அந்த வெற்றியின் அடையாளமான ஒரு கோப்பையைத் தூக்கிச் செல்வதன் பெருமையைவிட, அணியில் காயம் அடைந்தவனை ஒரு பேரரசனைச் சுமந்து செல்வது போல் தூக்கிச்சென்ற அந்தப் பிள்ளைகளிடம் இருந்த பெருமை சொற்களுக்குள் அடங்காதது. அடக்கவும் கூடாதது.

*

கிழினியை எல்லோருக்கும் பிடிக்கும். தன் வயதுக்கு மீறிய பக்குவம் கொண்ட பெண் அவள். எல்லோருடனும் ப்ரியம் பாவிப்பாள். எதையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள். நட்புகளை நளினமாகக் கையாள்வாள். அவள் அன்பு செலுத்தும் விதமும் அலாதியானது.

தன் அம்மாவை, தானும் ஒரு அம்மாபோல் நடத்துவாள். சாலைகளில் நடந்து போகுபோது அம்மாவைப் பத்திரமான திசைக்கு நகர்த்தி நடத்திச் செல்வாள். ஒருமுறை கனவு ஒன்றில் விழித்தழுத அம்மாவைப் பார்த்தவள், அன்றிலிருந்து அம்மா எப்போது புரண்டு படுத்தாலும், அதை அனிச்சையாய் உணர்ந்து மெல்லத் தட்டிக் கொடுப்பாள் அதில் தாய்மை உணர்வு வழிந்து பெருகும். யாரும் எப்போதும் எதிலும் முகம் சுழிக்க முடியாத ஒரு படைப்பு அவள்

படிப்பில் திறமையாய் இருக்கும் அவள் எல்லாக் காலங்களிலும் மற்ற பிள்ளைகளுக்கு கல்வி குறித்த சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள். அவளிடம் சந்தேகம் கேட்டுவிட்டால் எப்படியும் தீர்வு கிட்டிவிடும் எனும் நம்பிக்கையை எல்லோருக்கும் கொடுத்திருந்தாள். எப்போதும் அவளிடம் உதவி கேட்கலாம்; கேட்காவிட்டாலும் கூட வலியச் சென்று உதவுவாள்.
ஆமாம் மகிழினிக்கு இன்னொரு முகமும் உண்டு. அது தேர்வு அறைகளில் மட்டுமே வெளிப்படும் முகம். தேர்வு எழுதும்போது மட்டும் எப்போதும், பதில் தெரியாத யாருக்கும் காப்பியடிக்க உதவ மாட்டாள். அந்த ஒரு வியத்தில் அவளை உடனிருக்கும் நண்பர்களும், தோழிகளும் கசப்பாய் எதிர்கொள்வார்கள்.

எல்லாத்திலும் நல்ல பிள்ளையா இருக்கேஏம் பாப்பா எக்ஸாம்ல மட்டும் அப்படி ஸ்ட்ரிக்டா நடந்துக்குறேஎன்ற அம்மாவிடம் அவள் புன்னகையோடு சொன்னாள், அம்மாநான் ஒருதடவை வேணா ஹெல்ப் பண்ணிடலாம், ஆனா நான் ஹெல்ப் பண்றதால ஒவ்வொரு முறையும் எக்ஸாம் ஹால்ல வேற யாராச்சும் ஹெல்ப் பண்ணுவாங்கனு எதிர்பார்ப்பு வந்துடாதா?. அந்த தப்பான எதிர்பார்ப்பு வர்றதுக்கு நான் காரணமா இருந்துடக்கூடாது. நான் அவங்களுக்கு உதவி செய்யலைங்ற கோபம் வேணா வந்துட்டுப் போகட்டும்ஆனா நான் இப்படி உதவி செஞ்சுட்டா, அதுவே பழக்கமாயிடும். அந்த அர்த்தமில்லாத நம்பிக்கைய நான் தரத் தயாரில்லஎன்றாள்




ப்பா வீட்டுக்குள் நுழையும்போதேஎன்னங்கஉங்க மக பண்ணின கூத்தக் கேட்டீங்ளாஅவங்க கெமிஸ்ட்ரி மிஸ் நொந்துட்டாங்களாம்என்ற அம்மாவை குறுகுறுப்பாக பார்த்தாள் நந்திதா.

வியம் இதுதான். நடந்த முடிந்த முன்பருவத்தேர்வில் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்ணாக ஐம்பது மதிப்பெண் பெற்றிருந்திருந்தாள் நந்திதா. வேதியியல் ஆசிரியைநான் மூணு செக்னுக்கு சப்ஜெட் எடுக்றேன். நீ ஒருத்திதான்  ஃபிப்டி வாங்கியிருக்கே!” என மகிழ்ந்து பாராட்டி விடைத்தாளைக் கொடுத்திருக்கிறார்.

தன் இருக்கைக்குத் திரும்பிய நந்திதா, விடைத்தாளை முழுவதுமாகப் புரட்டிப் பார்த்துவிட்டுமேம்.. ஒரு மிஸ்டேக் பண்ணியிருக்கேன். நீங்க அதுக்கு மார்க் பிடிக்காம விட்டுட்டீங்கஎனச்சொல்லி அதற்கு கால் மதிப்பெண் கழிக்க வைத்திருக்கிறாள். மாலையில் அந்த ஆசிரியை நந்திதா அம்மாவை அழைத்துஎன்னங்க உங்க பொண்ணு இப்படி இருக்கா!?” எனச் சொல்லியிருக்கிறார்.

இவளுக்கு எதுக்குங்க தேவையில்லாத வேலை. அதான் அம்பது போட்டுட்டாங்ல்லஅதை ஏன் போய்ச் சொல்லி குறைக்கனும்! இவளையெல்லாம் என்ன பண்றது போங்கஅம்மா நீட்டி முழக்கநான் எழுதுனதுக்கு எனக்கு மார்க் போட்டா மட்டும் போதும்மா. தப்புக்கு போட்ட மார்க்கை வச்சு ஐம்பது வாங்கி என்னாகப்போவுதுஎன்றாள் நந்திதா
நெகிழ்ந்து போன அவள் அப்பா மகளை வாரிக்கட்டிக் கொண்டு அம்முக்குட்டி! நீ நாப்பத்தஞ்சு என்னநாற்பது கூட வாங்கிக்கோ! இந்த நேர்மை இருக்கு பாருஅது உன்னை எங்கியோ கொண்டு போய்டும்என்றார்.

*

புன்னகையோடு தம் விளையாட்டுத் தோழனை பல்லக்கு போல் சுமந்து சென்றவர்களும், ’காப்பி அடிக்கவிட மாட்டேன் என உரத்து நிற்கும் மகிழினியும்தனக்கு பெரும் சாதனையாக, பாராட்டுக்குரியதாக, சதமாகக் கிடைத்த முழு மதிப்பெண்ணை, தான் செய்திருந்த தவறை எடுத்துக்காட்டி விட்டுக்கொடுத்து நிமிர்ந்து நிற்கும் நந்திதாவும்… இவர்களில் யாரும் வளர்ந்து, ஆயிரமாயிரம் அனுபவங்கள் பெற்றிருக்கும் பெரியவர்கள் கிடையாது. வெறும் பதின் வயது பிள்ளைகள் மட்டுமே

சக தோழனைச் சுமந்து உதவுதலுக்கும், எல்லோரின் எதிர்காலத்திற்காகவும், பகையே வரினும் தம் கொள்கையில் உறுதியைக் கடைபிடித்தலுக்கும், தனக்கு உரிமையில்லாதது தனக்கு வரவேண்டியதில்லை என்பதில் தெளிவாக இருப்பதற்கும் வயது பெரிதாகத் தேவைப்படவில்லை. வலிமையான மனதும் நல்ல சிந்தனையும்  போதும்.

எப்போதும் பதின் வயதுப் பிள்ளைகளைக் குறை சொல்லும் பெரியவர்களிடம், அந்த உறுதியும், நேர்மையும் எந்த அளவிற்கு இருக்கிறதென்பதும் ஆய்வுக்குரிய ஒன்றுதான். மனதில் நெகிழ்வும், உறுதியும் வலிமையும் மிகுந்து நிற்கும் இந்தப் பதின்வயதுப் பிள்ளைகள், நாம் கண்டு மகிழ வேண்டிய உதாரணங்கள். சிலபல வேளைகளில் நமக்கு ஆகச்சிறந்த வழிகாட்டிகளும் கூட!

-

நம் தோழி ஆகஸ்ட் இதழில் வெளியான கட்டுரை

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...