குரங்குப் பேனா சூத்திரம்ரெயான் பிலிப் நம் வீட்டிலோ அல்லது நெருங்கிய உறவிலோ அதி அழகாய் இருக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு செல்லக் குழந்தையின் பிம்பம்தான். அந்த முகமும், கண்களும், அவன் விளையாட்டும், குறும்பும் அவனைப் பார்க்கும் எவருக்கும் அவனைப் பிடிக்கும்.

தொலைக்காட்சி சமையல் குறிப்பு படப்பிடிப்பு ஒன்றில் அவன் அம்மா பங்கெடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் புகுந்து மொத்த உப்பையும் உணவுப் பண்டமொன்றில் கொட்டி நிலைகுலையச் செய்கிறான். நண்பர்களை ஒன்றாக கூட்டுச் சேர்த்துக்கொண்டு வகுப்பிற்கு தாமதமாகச் செல்கிறான். மறந்தும் கூட வீட்டுப் பாடம் செய்துவிடுவதில்லை. கணக்கு வீட்டுப் பாடம் செய்யாததற்காக தண்டிக்கும் வகுப்பாசிரியரிடமிருந்து தப்பிக்க நன்றாகப் படிக்கும் வகுப்புத் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டால் போதுமென நினைத்து காதல் கடிதம் கொடுக்கிறான்.

நன்றாகப் படிக்கும் சக மாணவன் டெசிமலை சண்டை ஒன்றில் கூர்மையான பென்சில் கொண்டு அவன் பின் பக்கம் குத்துகிறான். டெசிமலி அப்பா வீட்டுக்கு வந்து சண்டை போடும்போது ”கடவுளின் சுவை அன்பு” என சற்று முன் அப்பா ராய் பிலிப் சொன்னதையே நினைவூட்டி தப்பித்துக் கொள்கிறான். அடுத்த நாள் அது குறித்து பள்ளி முதல்வரிடம் புகார் வருகிறது. ஒரு  டாக்டரிடம் போய் ’மாறுவேடப்போட்டி’ எனச் சொல்லி தலையிலும், கையிலும் கட்டுப் போட்டுக்கொண்டு வந்து டெசிமல் தன்னை அடித்து கையை ஒடித்துவிட்டதாகப் பொய் சொல்லி தப்பித்துக்கொள்கிறான்.

”நாளை கணக்கில் வீட்டுப் பாடம் செய்யவில்லையென்றால் பள்ளி அசெம்பளியில் வைத்து ’ஆகச்சிறந்த முட்டாள் ரெயான்’ என அறிவிப்பேன்” என கணக்கு ஆசிரியர் பப்பன் மிரட்ட அவன் அதிர்ந்து போகிறான். கணக்குப் பாடம் கசக்கிறது. கணக்கை நினைத்தால் உறக்கத்திலும் வகுப்பிலும் அப்படியே சிறுநீர் கழித்துவிடுபனாக இருக்கிறான். கணக்கை நினைத்து கலங்குபவனை கனவில் கடவுள் தோன்றி வருடிக்கொடுத்து சமாதானப்படுத்தி ஆற்றுப்படுத்துகிறார்.

காலையில் பதட்டத்தோடு பள்ளி செல்லும்போது எதிரில் வரும் காரைக் கண்டு மிரண்டு, காரில் இருக்கும் முதியவரோடு சண்டை பிடிக்கிறான். “போடா கெழவா” எனத் திட்டிவிட்டுக் கடக்கிறான். பள்ளியில் பப்பன் தவறவிடும் கைபேசியை எடுத்து, முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்து அவரை போலீஸில் சிக்க வைக்கிறான்.

முன்பு ஒருமுறை சாலையில் திட்டிவிட்டுச் சென்ற தாத்தாவை, திருமண நிகழ்வொன்றில் சந்திக்கிறான். அங்கும் சண்டை துளிர்க்கிறது. தாங்கள் தாத்தா பேரன் என்பது தாத்தாவுக்கும் பேரனுக்கும் புரிகிறது. விடுமுறைக்கு கப்பல் கேப்டனாக இருந்த தாத்தா வீட்டிற்கு அப்பாவால் வலிந்து அனுப்பப்படுகிறான். தாத்தா அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. விரட்டிவிடுகிறார். சுற்றுச்சுவர் தாண்டிக் குதித்து உள்ளே செல்கிறான். நாயை விட்டு விரட்டுகிறார். நாயை வசியப்படுத்தி வருடிக்கொடுக்கிறான். தன் குறும்புகளால், செயல்பாடுகளால் அவரை ஏற்றுக்கொள்ள வைக்கிறான் ரெயான்.

விடுப்பு முடிந்து தாத்தா வீட்டிலிருந்து திரும்பும்போது அதிசய சக்தி வாய்ந்த ஒரு குரங்குப் பேனாவை எடுத்து வருகிறான். அந்தப் பேனாவின் கதை நம்பமுடியாத அதிசயம் கொண்டது. அதை வைத்திருப்பவர்களுக்குச் சிக்கல் வரும்போது, இரவில் குரங்கு பேனா சிக்கலுக்கான தீர்வுகளை எழுதி வைத்துவிடுகிறது. வழக்கம்போல் அன்றைய நாளும் வீட்டுப்பாடம் செய்யாமலேயே உறங்குகிறான். அடுத்த நாள் வகுப்பில் வீட்டுப்பாடங்கள் பரிசோதிக்கப்படும்போது, வகுப்பிலேயே ரெயான் மட்டுமே கணக்கில் வீட்டுப்பாடம் செய்தவனாக இருக்கிறான். நண்பர்கள் அதிர்ச்சியில் கேட்க அது ”குரங்குப் பேனா” செய்த மகிமையாக இருக்கலாம் என்கிறான். குரங்குப் பேனாவும் தான் சொல்லும் மாற்றங்களைச் செயல்படுத்தினால், வீட்டுப்பாடத்தில் உதவுதாகச் சொல்கிறது. ஒப்புக்கொள்கிறான்.

பள்ளியில் ”ஆசிரியர்களைச் சந்திக்கும்போது பணிந்து நின்று வணக்கம்” சொல்லச் சொல்கிறது. ரெயான் அவ்வாறே செய்கிறான். அத்தோடு அதை பள்ளியில் இருக்கும் வானொலி மூலம் அனைவருக்கும் பரிந்துரைக்கிறான். மாற்றங்களை பள்ளி ஏற்றுக்கொள்கிறது. அதை ரசிக்கிறது. அனுபவிக்கப் பழகுகிறது.

இரண்டாம் நாள் ”புன்னகையோடு அன்றைய நாளைத் துவங்கு” என்கிறது. அவனும், அவன் பள்ளியும் அதைப் பின்பற்றுகிறார்கள்

மூன்றாம் நாள் ”மதிய உணவு பாத்திரத்தை சுத்தம் செய்ய” அறிவுறுத்துகிறது. எல்லோரும் அந்த மாற்றத்தை செயல்படுத்துகிறார்கள்.

நான்காம் நாள் ”வகுப்பறையையும், சுற்றத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள” சொல்கிறது. அனைவரும் அவரவர் வகுப்பறையை சுத்தம் செய்கின்றனர்.

ஐந்தாம் நாள் பள்ளி முதல்வரை வம்பிழுத்து, சவால் விடுத்து அவரை ஒரு வகுப்பறைக்குள் நுழையச் செய்கிறான் ரெயான் அங்கே அவருடைய பிறந்தநாளை அனைவரும் கொண்டாடுகிறார்கள். கலங்கிப்போகிறார் முதல்வர். ”பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லி ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்துங்கள்” என்பதுதான் குரங்குப்பேனாவின் அறிவுரை.

ஆறாம் நாள் “தான் உண்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்” எனச் சொல்கிறது. எப்போதும் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும் முதல்வர் தன்னிடம் இருக்கும் மற்றொரு ஆப்பிளை அலுவலக உதவியாளரோடு பகிர்ந்து கொள்கிறார்.

மாற்றங்கள் வெகுவேகமாக நிகழ்ந்தேறி நல்ல பழக்கங்களாகி விடுகின்றன. குரங்குப் பேனா வீட்டுப்பாடங்களை நேர்த்தியாக செய்து தர, பள்ளியிலும் அற்புதமான செயல்களை தினந்தோறும் அறிவித்து நல்ல மாற்றங்களுக்கு
வழிவகுத்த ரெயான் அந்த ஆண்டின் சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்படுகிறான். வீட்டுப்பாடத்திற்காக அவன் காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பிய அந்த மாணவி அவனையும் பிடித்திருக்கிறது எனச் சொல்கிறாள். அடுத்த நாள் பள்ளி வாகன விபத்தில் மடிந்து போகிறாள்.

ரெயான் கலங்கிப் போகிறான். அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு ”நான் கெட்ட பையனா அம்மா?” என அழுகிறான். ”நீ செய்தது தப்புனு உணர்ந்ததால நீ கெட்ட பையன்னு தோணுது. அப்படித் தோணுதினாலேயே நீ நல்ல பையன்” எனச் சமாதானப் படுத்துகிறாள் அம்மா. தோழியின் நினைவாக பள்ளிப் போக்குவரத்து குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வுக்கு வழிசெய்கிறான்.

இப்போது ரெயான் அனைவருக்கும் பிடித்த குழந்தையாகிப் போகிறான். அழகிய கடற்கரையில் அமர்ந்திருக்கும் அந்த இறுதிக் காட்சியில் அப்பா ராய் பிலிப் வருகிறார். அவனோடு மென்மையாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அவனுக்கு நிறைய உணர்த்துகிறார். அவர் திரும்பிச் செல்லும்போது ”அப்பா” என அழைக்கிறான். அவர் திரும்பிப் பார்க்க “ஹோம் வொர்க் செய்தது நீங்களா!?” எனக் கேட்கிறான். “எந்த ஹோம்வொர்க்!?” எனச் கேட்டுவிட்டு திரையில் நம்மை நோக்கி மெலிதாய் ஆனால் அழுத்தமாகவும் அழகாகவும் புன்னகைக்கிறார்.

அது வெற்றியின் புன்னகை. திடத்தின் புன்னகை. பொறுமையின் புன்னகை. அதையெல்லாம் விட நல்லதொரு தந்தைமையின் புன்னகை. அசாத்திய சக்தி கொண்டிருந்த அந்த குரங்குப் பேனா என்பது அந்த தந்தைதான் என்பதை அந்தப் புன்னகை நொடிப்பொழுதில் உணரவைத்து அந்த தந்தைமைக்காக எழுந்து நின்று கை தட்டி வணக்கம் செலுத்த வைக்கிறது
 


”பிலிப்ஸ் அன்ட் த மங்கிப் பென்” 2013ல் வெளியான ஒரு மலையாளப் படம். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ”பிலிப்ஸ் குடும்பமும் ஒரு குரங்குப் பேனாவும்” சமீப ஆண்டுகளில் மிக அதிக முறை நான் பார்த்த படம். இன்னும் பார்க்க விரும்பும் படமும் கூட.

எல்லா வீடுகளிலும் இவ்வாறாகத்தான் ஒரு குழந்தையோ, ஒரு உறவோ ஒன்றுக்கும் ஆகாதவர்களாக, முரட்டுத்தனமானவர்களாக, தகாத செயல் செய்பவர்களாக, செயல்படாதவர்களாக அமைந்துவிடுகின்றனர். நமக்கும் அவர்கள்தான் நம் வாழ்க்கையின் மிகப் பெரிய குறைபாடாக, புலம்பலின் முதல் எழுத்தாக அமைந்துவிடுகின்றனர். இனி எவ்விதமும் அவர்களை மாற்றவோ, திருத்தவோ முடியாதென ஆழமாக மற்றும் திடமாக நம்புகிறோம். வாழ்தலில் பிழைத்துப்போகும்போது, அந்த அவநம்பிக்கையை மிகப் பெரிய காரணமாகச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்கிறோம்.

ரெயான் பிலிப்ஸுக்கு கிடைத்தது போல், அசாத்திய மாய சக்தி கொண்ட குரங்குப் பேனா, சிறியவர்களோ பெரியவர்களோ ரெயான் போன்று சிக்கல் கொண்டிருப்பவர்களுக்கு கிடைத்துவிட்டால் போதும்…. அவர்களும் தங்களுக்குள்ளும், தங்களைச் சுற்றியும் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டு, அதைப் பழக்கப்படுத்தி நல்லவர்கள் என்றதொரு அடையாளத்திற்குள் வந்துவிட முடியும்.

அழுத்தமாகச் சொல்ல விரும்புவது அப்படியானதொரு குரங்குப் பேனா கிடைப்பது ரெயான்களின் கையில் இல்லை. அது அவர்களைச் சுற்றியும் ’நீ சரியில்லாதவன்’, ’மக்கு’, ’முட்டாள்’, ’ஒன்றுக்கும் உதவாதவன்’ என முழக்கம் எழுப்பும் நம் கையில்தான் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த குரங்குப் பேனாவாக மாற வேண்டியதே நம்முடைய மிக முக்கியக் கடமையாகும். குரங்கிலிருந்து வந்தோம் என அறிவியல் சொல்லும் போது உடனிருப்பவரை நல்வழிப்படுத்த, செம்மைப் படுத்த, மீட்டெடுக்க குரங்குப் பேனாவாக மாறுதல் ஒன்றும் இழுக்கல்ல. அதைவிட அது மிகச் சிரமமானதும் அல்ல.


-

“நம் தோழி” அக்டோபர் இதழில் வெளியான கட்டுரை

கீச்சுகள் தொகுப்பு 60ஓரிரு தவறுகளைச் சரி செய்ய, ஓராயிரம்சரிகள் கூட போதுமானதாக இருப்பதில்லை!

-

தண்ணீர் தேங்குகிறது, பெருவெள்ளம் பாய்கிறது என்பதன் பின்னால் நாம் சாகடித்த ஏரி குளங்கள் விடுத்த சாபங்கள் அவை என்பதை வசதியாக மறந்துவிட்டோம

-

உச்சி என்பதும் ஒரு இடம் தான்!

-

பேய் மழைஎன்றபடி ஒதுங்குகிறவர்களுக்கு, ”இல்லை இதுதான் சாமீஎன ஏன் புரிய வைக்கவேண்டும்!?

-

சட்டென்று விடைபெற்று விடுவோம் என்பதுதான் வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யமே!

-புல்லாங்குழல் விற்பவனுக்கு எல்லா ராகங்களும் தெரிய வேண்டியதில்லை!

-

எதோ ஒரு காரணத்திற்காக காலைப் பொழுதில் யாருக்கேனும் வாழ்த்துச் சொல்வது, அந்த நாளை முழுமையாக்கிவிட்டது போல் மகிழ்ச்சியளிக்கிறது.

-

ஒரு காலத்தில் போன் கான்டாக்ட்ஸ்லயே நூறு பேர்தான் இருந்தாங்க. இப்ப எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வாட்சப்லயே 88 குரூப்ல இருக்கார்.

-
வாழ்க்கை மீதும், எவர் மீதும் குறையோ, புகாரோ எதுவுமில்லையென நினைக்கும் தருணங்கள் யாவும் நல்ல நேரமே!

-

நிழலின் அருமை நிழலிலும் தெரியும் :)

-

"என்னவாகவோ இருந்தது" பற்றிஇப்போது என்ன!?”

-

எந்த ஓவியனும் குழைத்திடாத நம்பிக்கை மை இந்த அதிகாலைக் கீழ்வானம்!

-

சக மனிதர்களிடம் நடிப்பது... சில நேரங்களில் பிழைப்பு, பல நேரங்களில்பிழை’, அரிதாகவேகலை’.

-

கணினி வழியே, கைபேசி வழியே அதிக நேரம் இணையம் பயன்படுத்தினாலும், அதில் தமிழில் எழுதத் தெரியாத தமிழர்கள் ஏராளம்!

-

இணைய இணைப்பு மந்தமாக இருந்தால், அந்த தினமே சோம்பலான நாளாக இருக்குமளவிற்கு நாம் வளர்ந்திருப்பதை(!) நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்க

-

விருட்சங்கள் யாவும் அளவெடுத்து, நாள் குறித்து, குழிதோண்டி, விதையூன்றி, நீர் வார்த்ததில் முளைத்தெழுந்தவைகளல்ல.

-

சித்திரை மாதத்து கத்திரி வெயில் ஆவணி மாதத்திலும் அடிக்கிற புண்ணியமும் கூட இந்தத் தலைமுறைக்குத்தான் சேரும்!

-

நிறைந்திருக்கும் போதாமைஏதோ ஒரு போதாமையிலிருந்துதான் அவர்கள் புலம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள். புலம் பெயர்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதே சமயம் சூழல் நெருக்கும்போது அதுவொன்றும் அவ்வளவு கடினமானதுமல்ல. நகரின் வெளிப்புறங்களிலெல்லாம் அவர்கள் அதிகமாகத் தென்படுகிறார்கள். என்னதான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டாலும் அவர்களின் முகவெட்டு சற்றேனும் வேறுபட்டிருக்கின்றதை மறுக்க முடியாது. முகவெட்டிலிருந்து தலைமுடி, உடல் வாகு, அவர்கள் உடுத்தும் உடை, அணியும் செருப்பு, கையில் கட்டியிருக்கும் கயிறு என எல்லாமே சற்று அந்நியத் தன்மையைக் காட்டுகிறது.

உடல் உழைப்பைக் கோரும் எல்லாம் நிறுவனங்களிலும் அவர்கள் மெல்ல மெல்லக் கலந்துவிட்டார்கள். ஆங்காங்கே பணியாற்றும் அவர்களுக்குள் ஒரு வலைப்பின்னல் ஏற்பட்டுவிடுகிறது. வந்திறங்கிய மூன்று நான்கு மாதங்களுக்கு பிரமிப்பாக இருக்கும் இந்த மண்ணும் மனிதர்களும் அட இவ்வளவுதானா என பழகிப்போகுமொரு தினத்திலிருந்து அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்குமென இடமாறிக் கொண்டேயிருக்கிறார்கள்.

நகரத்தின் மிக முக்கியமான இரண்டு குடியிருப்புப் பகுதிகளின் நடுவே தினம்தோறும் நான் வரும் வழியில் வரிசையாக ஐந்து வீடுகள் இருக்கின்றன. ஐந்தும் வீடுகள் என்றெல்லாம் சொல்ல முடியாது. நீளமான ஒரு கட்டிடத்தில் நான்கு சுவர்களை தடுப்பாக வைத்து ஒவ்வொன்றிற்கும் கதவு போட்டிருக்கிறார்கள். ஒரு குடும்பம் தங்கும் இடம் சுமாராக 150 முதல் 200 சதுர அடிக்குள்தான் இருக்கும். அந்த வீடு இருக்கும் வீதியில் மட்டும் இளங்காலைப் பொழுதுகளில் அவ்வப்போது ஒரு ஆண் ஒரு பெண் ஓரிரு குழந்தைகள் என தங்களுக்குள் சில அடிகள் தூரம் இடைவெளி விட்டு நடந்து வந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் தலையில் மூட்டை முடிச்சுகள் இருக்கும்.

அநேகமாக ரப்திசாகர் ரயில் வந்து சென்றிருக்கலாம். அந்த ஐந்து வீடுகளிலும் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே தென்பட ஓரிரு வீடுகளில் மட்டுமே பெண்களும் குழந்தைகளும் தென்படுவர். தினந்தோறும் வரும் வழியென்பதால் அந்த வீட்டின் முன்னே இருக்கும் முகங்களை அவ்வப்போது பார்க்கத் தவறுவதில்லை. சமகால இடைவெளியில் அங்கு நான் பார்த்து பழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் முகங்கள் சட்டென மாறிப்போவது கண்டு ஆச்சரியப்படத்தான் வேண்டியிருக்கிறது.

தம் மண்ணை விட்டுப்போவது என்பதொன்றும் அவ்வளவு எளிதான காரியமன்று. இங்கே மண் என்பது அந்த நிலத்தை, மண் வகையை மட்டுமே குறிப்பதன்று. தன் வேரை அல்லது தன் கிளையை இடம் மாற்றுவது. இந்த இடமாற்றம் மிகப்பெரிய விளைவுகளை மௌனமாக நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. இங்கிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து பெரு நகரத்தின் தகவல் தொழில்நுட்ப பள்ளத்தாக்கில் இறங்குபவனுக்கும், பீகார் மற்றும் ஒரிசாவின் சபிக்கப்பட்ட பகுதியிலிருந்து தமிழகத்தின் செழிப்பான ஒரு பகுதிக்குள் நுழைகின்றவனுக்கும் இருக்கும் மிகப் பெரிய ஒற்றுமைகள், அவரவர் திறன், தகுதிக்கு ஏற்ப பெரிய அளவில் பொருளீட்டுகிறார்கள் என்பதுதான். அதோடு அதற்கு நிகராய் தன் நிறத்தை இழக்கத் தொடங்குகிறார்கள் என்பதுவும்தான். தன் மண்ணில் தான் மகிழ்ந்திருந்த ஒவ்வொன்றோடும் புலம்பெயர்ந்த இடத்தில் இருப்பதை ஒப்பிட்டு உழலத் தொடங்குகிறார்கள் என்பதையும் கூட இணைத்துக்கொள்ளலாம். 

எது வசதியானதாகத் தோன்றுகிறதோ அதுவே ஒரு கட்டத்தில் அலுப்பூட்டுகிறது. எதை இலக்கென்று நினைத்தார்களோ, அதை எட்டியபின் அந்த உச்சியிலிருந்து இறங்க முடியாத அவஸ்தையும் ஏற்படுகிறது. மாற்றங்கள் கூடாதென்றில்லை. இந்த உலகில் மாறாமல் என்ன இருக்கின்றது. ஆனால் இந்த மாற்றங்களுக்குக் கொடுக்கும் விலை சமன் செய்யப்பட்டதா, சமன் செய்யப்படாததா, புரிந்துகொள்ளப்பட்டதா, ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதுதான் முக்கியமாகப் படுகின்றது.

 சத்தியமங்கலம் வனத்தின் ஒரு சரிவிலிருக்கும் கிராமம் அது. அங்கிருந்த மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. இன்றும்கூட அவர்களின் வாழ்க்கை முறை ஆச்சரியமானதுதான். அங்கு சென்று குடியேறிய மக்களின் வாழ்க்கை முறை வேறானது. சுமார் நாற்பது ஐம்பது ஆண்டு காலக் கலப்பு பல முரண்களைக் கொண்டது. காலம் காலமாய் அவர்கள் செய்து வந்த பயிர்கள் அங்கு சென்று குடியேறிய கொங்கு நில மக்களால் மாற்றப்பட்டிருப்பதைக் காண நேர்கிறது. அவர்களின் நிலத்திற்குள்ளும் செல்போன் கோபுரம் சிவந்து நிற்கிறது.

அந்தக் கிராமத்தின் சாலையோரம் நின்று கொண்டிருந்தேன். கூப்பிடு தொலைவில் வனம். ஒரு நபர் மட்டும் சுமார் 300 மாடுகளை அந்த சாலை வழியே ஓட்டிச் செல்கிறார். அவையாவும் நாட்டு மாடுகள். அவைகளுக்குள் பெரிதாகக் கலப்பு ஏற்படவில்லை. கிராமத்தின் வீட்டுப் பட்டிகளில் இருக்கும் மாடுகள் காலை வேளைகளில் ஒன்றாக அருகிலிருந்து வனத்தை நோக்கி விரட்டப்படுகின்றன. அவைகளுக்குத் தேவையான தீவனத்தை வனம் வைத்திருக்கிறது. அவைகளைத் தீனியாக எடுத்துக்கொள்ளவும் அந்த வனம் தனக்குள் சிறுத்தைகளையும் வைத்திருக்கிறது. கும்பலாகச் செல்லும் மாடுகள் தேடித் தேடி உண்கின்றன. சுதந்திரமாய்த் தங்களுக்குள் புணர்ந்து கொள்கின்றன. பசியாறியவுடன் அருகிலிருக்கும் நீர் நிலைகளில் நீரைப் பருகிவிட்டு தத்தமது பட்டியை தானாகவே மாலைப் பொழுதுகளில் வந்தடைந்து விடுகின்றன. அவை இடும் சாணம் சேகரிக்கப்படுகிறது.

சமவெளிப் புத்தி, ஒவ்வொரு மாட்டையும் வியாபாரக்கண்ணோடு பார்க்கிறது. ஒரு மாட்டின் விலை இவ்வளவு போகுமா, அவ்வளவு போகுமா என்று. அடுத்து இந்த மாட்டின் மூலமாக என்ன லாபம் கிடைக்கும் என்பதையும் கணக்கிடுகிறது. ஈரோடு பகுதியிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு அங்கு சென்று நிலம் வாங்கி(!) மஞ்சள் கரும்பு என விவசாயம் செய்பவரிடம் அவர்களின் பெருந்தொகையான மாடு வளர்ப்பு குறித்துக் கேட்டால் “இத வளர்த்துறதே சாணிக்கும் கறிக்கும்தான். சாணி வாங்குறதுக்கு ஆளு வருது. மாட்ட கேரளாவுக்கு கறிக்கு வித்துருவாங்க. எவன் பால் பீச்சி ஊத்துறான்”. மாடு என்பதை பாலுடன் மட்டும் பொருத்திப் பார்க்கும் சமவெளிப் புத்தி அந்த மாடுகளை கறவைக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. 

ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை செம்மையானது, போற்றுதலுக்குரியவைதான். ஆனால் இங்கிருந்து புலம்பெயர்ந்தவர்கள் புதிது புதிதாய் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். காலம் காலமாய் கடைபிடித்து வந்த வாழ்க்கை முறையின் சங்கிலிக் கண்ணியின் துண்டிப்பைச் சகிக்கவும் முடியாமல். புதிதாய் வந்து மோதும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒரு குழப்பமான நிலையிலேயே அவர்கள் நாட்களைக் கடந்து போகிறார்கள்.

ஒடியன் லட்சுமணன் தமிழில் எழுதியிருக்கும், எழுத்து வடிமற்ற இருளர்களின் மொழிக் கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது.

அஞ்சு இட்டிலிக்கூ
ஆறு
ஏக்கரே கொடாத்து

காலேவாயிலே
 

கல்லூ சொமக்கே நா  
மண்ணுபாசோ விடுகாதில்லே  
ம்க்கூம்  
எல்லா சூளேயும்  
இச்சாதாஞ் செவக்கு

(ஐந்து ட்டிலிக்கு விலை ஆறுஏக்கர். இருளனிடம் கைப்பற்றிய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கிறார்கள் கீழ்நாடுக்காரர்கள். மண்ணை பிரிய மனம் இல்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட ண் சுமக்கிறான்.)

ஏதேதோ காரணங்களின் அடிப்படையில் புலம்பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது அல்லது தவிர்க்க முடியாததென நாமே நம்பத் தொடங்கி விட்டோம். எல்லாப் புலம்பெயர்தலுக்குப் பின்னும் ஒரு போதாமை இருக்கத்தான் செய்கின்றது. புலம்பெயர்ந்தபின் பெயர்ந்தவருக்கோ அல்லது வந்திறங்கிய நிலத்திலிருப்பவருக்கோ ஒரு போதாமை மௌனமாய் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. போதாமை வென்று கொண்டேயிருக்கிறது.-
”தமிழன் அமுதம்” திருவனந்தபுரம் பூஜப்புரைத் தமிழ்ச்சங்க இதழில் வெளியான கட்டுரை