ஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு


நான்கு புத்தகங்கள் வெளியாகியிருந்தாலும், அவை வெளியான தருணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு சரி. தனியே அறிமுகக் கூட்டம், விமர்சனக் கூட்டம் என எதையும் நான் நினைத்துப் பார்த்ததேயில்லை. ஆனால் கடந்த ஆண்டிலிருந்தே, தஞ்சை எழுத்தாளி கவிஞர் கிருஷ்ணப்ரியா, புத்தகங்களுக்கு அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

வேட்கையோடு விளையாடு வெளியானதும், சில பிரதிகள் அனுப்பச் சொன்னார், அத்தோடு எப்படியாச்சும் நூல்களுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துவிட வேண்டுமென்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்கான நாளும் அமைந்தது. எப்படியும் தஞ்சை வந்தால் ஒரு நாள் ஆகும் என்பதையொட்டி, அந்த நாளை பயன்படுத்தும் விதமாக, திருவையாறு அரசர் கல்லூரி நிகழ்ச்சியை, திருவையாறு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தார்.

நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம் செய்பவர்கள் விபரங்களோடு அழைப்பிதழ் பகிரப்பட்டபோது ஆச்சரியம் மிகுந்தது. எழுத்தாளர், பேராசிரியர், ஓய்வு பெற்ற அதிகாரி, இலக்கிய ஆய்வாளர் என வித்தியாசமான ஆளுமைகள். அவர்கள் யாவரும் நான் அதுவரை அறிந்திராதவர்கள்.

அந்த நாளும் (27.08.2019), நிகழ்வின் தருணமும் வந்தது. காலை அரசர் கல்லூரி நிகழ்வு மற்றும் மதியம் இன்னொரு உரை முடித்து பரபரப்பு சற்றும் குறையாமல் மாலை நூல் அறிமுகக் கூட்ட அரங்கிற்கு வந்தோம். நிகழ்வினை திருவையாறு இலக்கிய தடம் பாரதி இயக்கமும், தஞ்சை எழுத்தாளி இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்தின. கவிதையாய் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் சிறிய அரங்கம். பெரிதும் முனைப்பெடுத்து கூட்டத்திற்கு அழைத்திருந்தன் பலன் தெரிந்தது. அரங்கில் ஏறத்தாழ அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தன. அரசர் கல்லூரி மாணவ, மாணவியர்களும் பங்கெடுத்திருந்தனர். விழா நேர்த்தியாகத் தொடங்கியது.

முதலில் பேராசிரியர் கண்ணம்மாள் மனோகரன் என்னுடைய முதல் புத்தகமான ”கிளையிலிருந்து வேர் வரை” குறித்து மிக விரிவாகப் பேசினார். அந்தப் புத்தகம் ஐந்தாறு வருடங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அவர் ஒவ்வொரு கட்டுரை குறித்துப் பேசும்போது, அந்தந்த காலத்திற்குள் நான் மூழ்கியெழும் வாய்ப்பாக அமைந்தது. எல்லாவற்றையும் ஒரே நேர்கோட்டில் அடுக்கிப் பாராட்டியதோடு அவர் முத்தாய்ப்பாக வைத்த விமர்சனம் சார்ந்த கேள்விகள் முழுக்க ஏற்புடையதாக இருந்தன.

இரண்டாவதாக, இலக்கிய ஆய்வாளர் தமிழ் இலக்கியா, ”பெயரிடப்படாத புத்தகம்” நூலை அறிமுகப்படுத்தி விமர்சித்தார். 2017 ஜனவரியில் வெளியான புத்தகம், இடையில் முதல் பதிப்பு தீர்ந்துபோய், ஏறத்தாழ ஒன்னரை வருடங்கள் கழித்து இரண்டாம் பதிப்பைக் கண்டிக்கும் நூல். அது தனக்கான இடத்தை இனிதான் அடையும் என நான் காத்திருக்கும் புத்தகமும்கூட. முழுமையான தன் வாசிப்பு அனுபவத்தை மிக ஆழமாக தமிழ் இலக்கியா எடுத்துரைத்தார். கூடவே சில கேள்விகளையும் இட்டுச் சென்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது.

மூன்றாவதாக, ”உறவெனும் திரைக்கதை” நூலை அறிமுகப்படுத்தி விமர்சிக்க எழுத்தாளர் புலியூர் முருகேசன் வந்தார். மாற்று மொழித்திரைப்படங்கள் குறித்த தம் அனுபவம், ஒருகாலத்திய எழுத்தாளர்களின் அனுபவம் ஆகியவற்றில் தொடங்கி, டிபார்ச்சர்ஸ், ஸ்பிரிட், கம்மாட்டிப்பாடம் ஆகிய படங்களுக்கான கட்டுரைகளை முன் வைத்து வலிமையானதொரு அறிமுகத்தை வைத்தார். அத்தோடு டிபார்ச்சர்ஸ் படக் கட்டுரையில் மரணத்திற்கு பிறகான நமது மற்றும் ஜப்பானியர்கள் நடைமுறைகளை அவர் சுட்டிக்காட்டியவிதம் ஆழமாகவே யோசிக்க வைத்தது.

நான்காவதாக, திரு.குப்பு வீரமணி அவர்கள் ”வேட்கையோடு விளையாடு” குறித்து பேச வந்தார். திருவையாறு நிகழ்ச்சி தீர்மானிக்கப்பட்டதிலிருந்து என்னோடு தொடர்பில் இருப்பவர். முதல் நாளிலிருந்து என்னை உபசரித்து பார்த்துக் கொண்டவர். மிக அற்புதமாக ஊக்கமூட்டக்கூடியவர். நேரம் கருதி சுருக்கமாக அறிமுகம் செய்தாலும், அதில் அன்பின் கனம் அதிகம்.

நிறைவாக... அடங்காத ஆச்சரியமும், மகிழ்வும், நெகிழ்வும் சூழ்ந்த மனநிலையோடு ஏற்புரை வழங்கச் சென்றேன். வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் கேள்விகளையொட்டி ஏற்புரையை அமைத்துக் கொண்டேன். விமர்சனங்களை மறுத்துப் பேச எதும் இல்லை. பிறிதொரு திசையிலிருந்து வரும் பார்வைகளை, அந்த பிறிதொரு திசையிலிருந்து பார்க்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவன். எல்லாமே அனுபவங்கள் தான்.

நிறைவாக நன்றியுரை நிகழ்த்த வந்த திருவையாறு தடம் இலக்கிய அமைப்பின் செயலாளர் மா.குணா ரஞ்சன் மிகுந்த அன்பிற்குரியவர். ஓர் இரவு முழுவதும் என்னைக் குறித்து இணையத்தில் தேடி, யூட்யூப் காணொளிகளைப் பார்த்து வைத்திருந்தார். காலை அரசர் கல்லூரி நிகழ்வில் மிக அழகான படங்கள் பலவற்றை எடுத்திருந்தார். மதியம் அரசர் கல்லூரி நிகழ்வில் நிறைவாக பல மாணவிகளை ஒன்று திரட்டி ஒரு குழு நிழற்படம் எடுத்தார். அதில் ஒரு மாயம் செய்யப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை, மாலை விழாவில் அந்தப் படத்தை அழகிய நினைவுப்பரிசாக மாற்றி, வழங்கி பெருமைப்படுத்தினார்.



முன்பின் அறிமுகமில்லாத நிலையிலும், எழுத்தாளி அமைப்பின் நிகழ்வு என்பதற்காக தமக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை ஆழ்ந்து வாசித்து, அதன் நிறைகுறைகளை சமநிலை மனதோடு நோக்கி, அவற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைத்த பேராசிரியர் கண்ணம்மாள், தமிழ் இலக்கியா, எழுத்தாளர் புலியூர் முருகேசன், Rtn. குப்பு வீரமணி ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றிகள். அதற்காக அவர்கள் ஒதுக்கிய நேரம் மற்றும் உழைப்பிற்கு எளிதாகவெல்லாம் ஈடு செய்ய முடியாது.

அடுத்த நாள் கரூரில் நிகழ்ச்சி இருப்பதால், விழா முடிந்ததும் உடனடியாகப் புறப்பட முனைந்தபோது பேராசிரியர் கண்ணம்மாள் மனோகரன் லேசான தயகத்தோடு அணுகினார். என்னங்க எனக் கேட்க, ஈரோட்டில் இருக்கும் கோதை அவர்களை தன்னுடைய வகுப்புத் தோழி என்று கூறி, அவர் திருவையாறு புகழ் அசோகா இனிப்பினை வாங்கித் தருமாறு கூறியதாகச் சொல்லி, ஒரு பருத்த பையை நீட்டினார். திருவையாறு அசோகா மற்றும் அல்வா இளஞ்சூடாய் அன்பைப்போலவே கையில் கனக்கத் தொடங்கியது.

நிறைவாக...
இலக்கியக் கூட்டத்தை நடத்துவது எத்தனை கடினமானது என்பதை நடத்திப்பார்த்த அனைவரும் அறிந்ததே. எழுத்தாளி அமைப்பின் மூலம் தஞ்சையில் இடைவிடாது பெரும் முனைப்போடு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருபவர் கவிஞர். கிருஷ்ணப்ரியா. இரண்டுமுறை சில நிமிட நேர சந்திப்பு என்றாலும், அதிகம் உரையாடியதில்லை. ஆயினும் என்னுடைய புத்தகங்களை எழுத்தாளி அமைப்பில்  மேடையேற்றிவிட வேண்டுமென தீர்க்கமாய் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்த கவிஞர் கிருஷ்ணப்ரியா அவர்களுக்கே, நான் அன்று அடைந்த அனைத்து மகிழ்ச்சிகளும் சென்று சேரும். நிகழ்வு நடந்த தினம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், தம் கணவரோடு கலந்து கொண்டு பங்கெடுத்த நட்பிற்கு கூடுதல் ப்ரியங்களும் நன்றிகளும்.


அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?

திருவையாறு...
இத்தனை ஆண்டுகாலமும் கேள்விப்பட்ட ஒரு ஊர் பெயர் மட்டுமே. ஒரே ஒரு முறை மட்டும் பெரம்பலூரில் ஒரு திருமண நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நாகப்பட்டினம் செல்லும் வழியில் அரியலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடையே திருவையாற்றினைக் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அந்த ஊரின் திருப்பத்தில் அசோகா இனிப்பு சாப்பிடுவதற்காக காவிரி ஆற்றின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து சாப்பிட்டது தவிர வேறெதுவும் தெரியாது.
இந்தச் சூழலில்தான் திருவையாறு அரசர் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்கள். அதன் நிமித்தமாக கவிஞர்.கிருஷ்ணப்பிரியா முன்னெடுப்பில் அங்கிருந்து ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த திரு. குப்பு வீரமணி அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார். முந்தைய நாள் இரவே சென்றடைந்த என்னை நட்புகளோடு வரவேற்றார். அன்பாக உபசரித்தார்.
நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் முடிந்தவரை பங்கேற்பாளர்களின் நிலை, பின்புலம், தேவை ஆகியவற்றை அறிந்துகொள்ள முற்படுவேன். அதன் காரணமாகவே முந்தைய தினமே திருவையாறு சார்ந்த யாரும் இருக்கிறீர்களா என ஃபேஸ்புக்கில் கேட்டு சிலரிடம் தகவல்கள் பெற்றிருந்தேன். எனினும் முழுமையான வடிவம் கிட்டவில்லை. திருச்சியிலிருந்து கல்லணை வழியாக ஆற்றையொட்டியே பயணப்பட்டத்தில் நான் கடந்தது அத்தனையும் கிராமங்கள். அங்கும் சுற்று வட்டமும் கிராமங்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
மூன்று மணி நேர அமர்வு என்பதால் LCD வேண்டுமெனக் கேட்டிருந்தேன். இரவுதான் அந்த வசதி இல்லையெனக் கூறியிருந்தார்கள். ஆகவே உரை மற்றும் உரையாடலாவே சமாளிக்கும் மனநிலைக்கு மாறத் துவங்கினேன்.
கல்லூரியின் வரலாறு சற்றே சுவாரஸ்யமாக இருந்தது. சரபோஜி மன்னரின் அந்தப்புர மாளிகையாக இருந்த கட்டிடத்தில் சமஸ்கிருத பட்டப்படிப்பு துவங்கப்பட்டிருக்கின்றது. சத்திரம் எனும் நிர்வாகத்தின் வாயிலாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரி. தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி என்று மட்டும் இதுவரை பார்த்து வந்த எனக்கு ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும் கல்லூரி என்பது ஆச்சரியமாக இருந்தது.
காலையில்தான் அந்தக் கல்லூரியில் இருக்கும் பாடப்பிரிவுகள் தெரியவந்தன. இளங்கலை தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் முதுகலை தமிழ் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. அரங்கு குறித்து விசாரித்தபோது, அடுத்த இடி இறங்கியது. நாற்காலி வசதி இல்லை, அனைவரும் கீழேதான் அமர வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.
நிலத்தில் அமர்வது அவர்களுக்குப் பழகியிருந்தாலும், பயிற்சியாளராக எனக்கு நாற்காலிகளில் அமர்த்தப்படாத பிள்ளைகளிடம் உரையாடுவது பெரும் சவாலானது. கீழே அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் நடப்பது, எந்நேரம் கழுத்து வளைந்தபடி நம்மையே அவர்கள் பார்க்க வேண்டும் என நினைப்பது எல்லாமே சிரமத்திற்குரியது.
LCD இல்லை, நாற்காலிகள் இல்லை. தலைக்கு மேலே வெள்ளம்... இனி சாண் என்ன முழமென்ன என்ற மனநிலையில் இருந்தேன்.
நிகழ்ச்சி குறித்த எந்த விளக்கங்களுமின்றி, எல்லோரும் மீட்டிங் ஹால்ல உட்காருங்க என்றுதான் அழைத்து வரப்பட்டிருப்பார்கள் எனப் புரிந்துகொண்டேன். அனைத்து மாணவிகளும் நிலத்தில் அமரவைக்கப்பட்டிருக்க, மிகச் சொற்பமாய் இருந்த மாணவர்கள் மட்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் பெருந்தொகையான மாணவிகளுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் என்பது ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதன் காரணமாகவும் படிப்பு என்ன பெரிய படிப்பு என்ற மனநிலை இருந்திருக்கலாம்.
என்ன நிகழ்ச்சி என்று தெரியாது, எப்போது முடியுமென்று தெரியாது, பேசுபவர் குறித்தும் அறிமுகமில்லை, நிலத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுள்ளிட்ட எந்தக் குறையும், குழப்பமும் இல்லாமல் அந்த மாணவிகள் தம் பார்வைகளில் ஒரு கூர்மையைத் தக்க வைத்திருந்தனர்.
முதல் நாள் பயணம், இரவு உறக்கமின்மை, ஏற்பாடுகளில் சில தடுமாற்றங்கள் என என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை அலுப்பு, சலிப்புகளையும் சில நிமிடங்களில் துடைத்தெறியும் வீரியம் அவர்களிடமிருந்தது. உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களையும் தனக்குள் பத்திரப்படுத்தும் பசி அவர்களிடமிருந்தது. முந்தைய நிகழ்வுகள் எத்தனையோ மனதிற்குள் நிழலாடினாலும், இவர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.


ஒன்னரை மணி நேரம் கழிந்து தேநீர் இடைவேளை விட்டபோது, சூழ்ந்து கொண்டு “அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?” எனக் கேட்டார்கள். ஆச்சரியமாக ஏன் எனக் கேட்டேன். “கொஞ்சம் தான் பேசியிருக்கீங்க, ப்ளீஸ் சார் நிறையப் பேசுங்க சார்!” எனக் கெஞ்சலாகக் கேட்டதை இங்குதான் முதன்முறையாகப் பார்த்தேன்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும், ஆட்டோகிராஃப் வாங்க குவிந்தவர்களிடம், (அது ஒரு ஆர்வ விளைவு மட்டும்தானே) இதை வாங்கி என்ன செய்யப்போறீங்க எனக்கேட்டேன் “என்னைப் பத்தின வரையறையை அதில் எழுதி வச்சுக்குவேன்” என்றார்கள் பலரும்.
இத்தனை நெகிழ்வான அனுபவத்திற்கு முக்கியக் காரணமாக இருந்த கவிஞர்.கிருஷ்ணப்ரியா மற்றும் திரு. குப்பு வீரமணி ஆகியோருக்கு ப்ரியம் நிறைந்த நன்றிகள். நிகழ்விற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு தஞ்சையிலிருந்து தமது கணவரோடு வந்து கலந்துகொண்ட கவிஞர் கிருஷ்ணப்பிரியா பேரன்பிற்கு உரியவர். எழுபது வயதுகளைக் கடந்திருந்தாலும், அச்சு அசலான இளைஞருக்குரிய ஆர்வத்தோடு எல்லாவற்றிலும் செயல்பட்ட அய்யா குப்பு வீரமணி அவர்கள் மிகப் பெரும் ஆச்சரியத்துக்குரிய முன் மாதிரி.
நிறைவாக பல மாணவிகளை ஒன்று திரட்டி ஒரு குழு நிழற்படம் எடுத்தார் இலக்கியத் தடம் அமைப்பைச் சார்ந்த குணா ரஞ்சன் அவர்கள். அதில் ஒரு மாயம் செய்யப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.