டேஷ் இன் இந்தியாவும் விவசாயிகளை வேர் அறுத்தலும்!


ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் கார் பறந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நண்பர், “அடேங்கப்பா... ஊரெல்லாம் சுத்தமாக மாறிடுச்சு. செம டெவலப்மெண்ட் போல” என்கிறார் ஒரு கசப்பான புன்னகையை வழியவிடுகிறேன். 

உண்மையிலேயே இது வளர்ச்சியா!? தன் இருப்பிலிருந்து மாறுவது எல்லாமே வளர்ச்சியாகிவிடுமா?. ஒரு குழந்தை வளர்வது, உயரத்திற்கேற்ற பருமன் கூடுவது வளர்ச்சி. உடலில் ஏதாவது ஒரு பகுதி மட்டுமே பெரிதாவது வளர்ச்சியா? பொதுவாக இங்கே வீக்கம் வளர்ச்சிபோல் உணர்த்தப்படுகிறது. புற்றுநோய் கட்டியும் கூட தன் இயல்புநிலையில் இருந்து கூடுதலாய் வளர்வதுதான். இது வீக்கம், இது புற்று என வகைப்படுத்தத் தெரியாத சமூகம் வேறுவழியின்றி அதை வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது.

50 கி.மீ தூரத்திற்கு ஒருமுறை பணம் செலுத்திவிட்டு அந்தச் சாலையே நமக்குச் சொந்தம் எனும் நினைப்பில் 160 கி.மீ வேகம் வரை விரைகின்றீர்களே, அந்தச் சாலைகளின் புவியியல் நமக்குத் தெரியலாம். ஆனால் அதன் வரலாறு தெரியுமா?

சாலை எங்கெல்லாம் தன்னை விரிவுபடுத்தி, நளினப்படுத்திக்கொள்ள முனைகிறதோ, அங்கெல்லாம் முதலில் காவு கேட்பது சாலைகளின் இருமருங்கிலும் வரிசையாக நின்றிருந்த மரங்களை. நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் 200-300 புளியமரங்களோ, வேப்பமரங்களோ இருந்தன. இன்றைக்கு நாற்கரச் சாலையில் ஒரே ஒரு மரத்தைக்கூட காணமுடியவில்லை.

அடுத்து காவு கேட்பது அந்தப்பகுதியில் காலம்காலமாய் வாழ்ந்து வந்தவர்களின் வேர்களைத்தான். ஒரு ரௌடியின் மனோபாவத்தோடு விரிவாக்கத்திற்காகவும், நகரங்களைச் சுற்றிச் செல்லும் புறவழிச்சாலைகளை அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அதற்காக எந்த வகையிலும் பொருந்தாத தொகை ஒன்று வழங்கப்படுகிறது. அதோடு ”நீ காலம்காலமாகப் பயன்படுத்திய நிலம் இனி உனக்கு சொந்தமல்ல” என வெளியேற்றிவிட்டுச் சொல்கிறது, ”இனி என் சாலையில் கால் வைத்தால் காசு கொடுக்க வேண்டும்”.

சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால் விபத்துகள் குறையும் என்றார்கள். முன்பெல்லாம் 100 கி.மீ தூர பயணத்தில் சராசரியாக 5 விபத்துகளுக்கான அடையாளங்களைக் காணலாம். ஆனால் இப்போது அப்படிக் காண முடிவதில்லை. ஆகவே விபத்துகளே நடப்பதில்லையா?. உண்மையில் முன்பைவிடக் கூடுதலாகவே விபத்துகள் நடக்கின்றன. முன்புபோல் வாகனங்கள் நாள் கணக்கில் அகற்றப்படாமல் கிடப்பதில்லை. சில மணி நேரங்களில் அக்கற்றப்பட்டுவிடுகின்றன. சாலையைக் கடக்க முனையும் உள்ளூர்வாசிகள், சாலையின் அகலம், அதில் சீறி வரும் வாகனங்களின் வேகம் பற்றிய அறிந்திராததால் இழக்கும் உயிர்களை, உடல் உறுப்புகளை நினைத்தால் நடுங்குகிறது.

நெடுஞ்சாலைகளில் 90% சாலையோரப் பகுதி விவசாய நிலமாக இருந்தவை. கால்வாய்ப் பாசனம் இருந்தால் நன்செய், கிணறு மட்டும் இருந்தால் புன்செய், மழையை நம்பியிருந்தால் மானாவாரி. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் 90% நிலங்கள் விவசாயத்தைத் தொலைத்துவிட்டன. ஆவின் பால், உணவகம், இட்லி தோசையுடன் பாயாசமும் தரும் பஞ்சாபி உணவகம், தொழிற்சாலைகள், வீட்டு மனைகள், பள்ளி கல்லூரிகள், இடம் வாடகைக்கு என்ற பலகை தாங்கிய காலி இடங்கள், வாகனப் பணிமனை, பெட்ரோல் நிலையங்கள், விடுதிகள், செடிப்பண்ணை, திருமண மண்டபங்கள் என ஏதேதோ நிரம்பியிருக்கின்றன.

அங்கிருந்த விவசாயம் என்ன ஆனது? அந்த விவசாயிகள் எங்கே போனார்கள்? அந்த விவசாயத்தின் கூலிகளாய் இருந்தவர்கள் என்ன ஆகியிருப்பார்கள்? நிலத்தை விற்றவர்கள் முதலாளிகளாக, நிதிநிறுவன அதிபர்களாக அவதாரம் எடுத்தனர். கூலிகளாக இருந்தவர்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்கின்றனர், அதில் பலர் நிறுவனங்களில், ஏடிஎம்-களில் செக்யூரிட்டிகளாகவும், வீட்டு வேலை செய்யும் பெண்களாகவும் மாறுகின்றனர்.

வளரும் நாடுகளில் திணிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்களில் உலக வங்கியும், வெளிநாட்டு நிறுவனங்களும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றன. அவர்களுக்கு இங்கிருக்கும் சாலைகள் விரிவாக்கம் பெறுவதின் மேல், நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதன் மேல் ஏன் இத்தனை அக்கறை என்பது அவ்வளவு எளிதில் புரிந்துவிடாத ஒன்று. பெரும்பாலும் விரிவாக்கப்படும் சாலைகள் அந்தந்தப் பகுதி மக்களுக்கு அதிகப் பயன் தருகின்றன என்பதைவிட, எங்கோ இருக்கும் ஒரு பெருநிறுவனத்தின் பொருட்களை, நாட்டின் இன்னொரு பகுதிக்கு அதிவிரைவில் எடுத்துச்செல்லும் வகையிலான சாலைகளை முன்னுரிமை கொடுத்து கட்டமைக்கப்படுகின்றன. 

இந்தியா போன்று தன் விழுமியங்களை பாதுகாக்க முனையும், ஒட்டு மொத்த உலக தட்பவெப்பத்திற்கு, மண்ணிற்கு, விளைச்சலுக்கு சவால் விடும் சூழல்களை கொண்டுள்ள வளர்ந்து வரும் ஒரு நாட்டின் மீது கார்ப்பரேட் எனப்படும் மாஃபியாக்களுக்கு ஒரு பெரிய கண் உண்டு. அவர்கள் சொந்த நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் தாதாவாகவோ, வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளின் அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்தும் தாதாக்களாகவோ இருக்கலாம். அவர்களின் முதல் நோக்கம் வளர்ச்சி என்பதான ஒரு மாயை குறித்த ஒரு ஏக்கத்தைத் தூண்டிவிடுவது. அடுத்து வளரும் நாடுகளில் காலம் காலமாக சுயசார்போடு, கட்டுக்கோப்போடு, நிலைத்த தன்மையோடு வாழும் மக்களை, அவர்களை அறியாமலேயே கொஞ்சம் ஆழத்தில் இறங்கி அவர்களின் முக்கிய வேர்களை அறுத்துவிடுவது.

கையகப்படுத்திய நிலத்திற்குச் சொந்தமானவனையும், அதில் வேலை செய்தவனையும் நேரடியாக வேர் அறுத்து உடனடியாக வெளியேற்றினார்கள். சாலையோரம் நிலம் வைத்திருப்பவனை, அவனையறியாமல் “காசு, பணம், துட்டு.. மணி..மணி” எனும் மாயையில் அவன் காலம்காலமாக செய்து வந்ததை நூதனமாக நிறுத்தச்செய்து அவனை மெல்ல வெளியேற்றும் திட்டத்தோடு வேரை மட்டும் அறுத்துவிட்டார்கள். இனி கொஞ்சம் கொஞ்சமாக அவனும் உதிர்வான். பணம், வாய்ப்பு இல்லாதாலும் தன் பூர்வீகத்திலிருந்து ஒருவன் வெளியேறலாம், கூடுதல் பணம், கூடுதல் வாய்ப்பு என்றும் ஒருவனை வெளியேற்றலாம்.

100 கிமீ தொலைவிற்கு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 ஏக்கர் நிலங்கள் விவசாயத்தைக் கைவிடுகின்றன. 5000 ஏக்கர் நிலம் சார்ந்த விவசாயிகள், விவசாயக் கூலிகளின் வேர்கள் அறுக்கப்பட்டுவிட்டதை அவர்கள் உணர்வதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

*

ஈரோடு மாவட்டத்தை மேட்டூர் வலதுகரை, காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ் பவானி கால்வாய்கள் பெரிதும் வளப்படுத்துபவை. இதில் அகலமான, மிக நீளமான கீழ்பவானி கால்வாய் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்டது. காலிங்கராயன் கால்வாய் 730 வருடங்களுக்கு முன்பு பவானி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு காவிரி ஆற்றுக்கே சவால் விடும் வகையில் ஆற்றைவிட உயரமான ஆற்றை ஒட்டிய வறண்ட நிலங்கள் பயன்பெறும் வகையில் வெட்டப்பட்டது.

காலிங்கராயன் கால்வாயில் சாய, தோல் கழிவுகள் கலக்கின்றன எனச் சொல்லி கரைகள், தளம் கான்க்ரீட்டால் நிரப்பப்பட்டுள்ளது. கடைமடைக்கு தண்ணீர் போவதில்லை, நீர் கசிந்து வீணாகின்றன என்ற காரணங்களால் கீழ்பவானி வாய்க்காலுக்கு கான்கிரீட் சுவரும் தளமும் அமைக்க 1200 கோடிக்கு மேல் உலகவங்கி செலவு செய்ய பல வருடங்களாக தயார் நிலையில் இருக்கின்றது.

மேலோட்டமாகப் பார்த்தால் நீர் வீணாவதைத் தடுக்கவும், கடைமடைக்கு தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தவும் கான்க்ரீட் அவசியம் என்ற வாதம் சரியாகப்படலாம். ஆனால் 200 கி.மீ தொலைவு இருக்கும் கால்வாயின் கரைகள் கான்க்ரீட் ஆக்கப்பட்டால், அந்தக் கரைகளில் இருக்கும் 2 லட்சம் மரங்கள் என்னவாகும், அதை நம்பிய பறவைகள் பூச்சிகள் என்ன செய்யும் என்பதற்கு பதிலுண்டா? நீர் கசிந்து வீணாகின்றன என்பதைப் போன்ற முட்டாள்தனமான வாதம் உலகில் வேறொன்றுமில்லை. கால்வாயில் ஓடும் நீர் மண் உறிஞ்சப்படுவதால் வீணாகின்றன எனச் சொன்னால், இனி ஆற்றுக்கும், அணைக்கும் கூட கான்க்ரீட் போட்டுவிடுவதுதானே நல்லது.

கீழ்பவானி கால்வாயில் நேரடியாக இரண்டு லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறதென்று சொன்னால், மறைமுகமாக நிலத்தடி நீர் உயர்வதின் வாயிலாக, கசிவுநீர்க் குட்டைகள் நிரம்புவதன் மூலமாக மூன்று லட்சம் ஏக்கர் பயன் பெறுகின்றன. கால்வாய் கான்க்ரீடாக்கப்பட்டால், சில ஆண்டுகளில் அந்த மூன்று லட்சம் ஏக்கர் நிலமும் முற்றிலும் மானாவாரி நிலமாக மாற்றப்படும். விவசாயம் முழுதும் நலிந்துபோகும். அந்த நிலங்களை நம்பியிருந்த விவசாயிகள், விவசாயக் கூலிகள் வேறு வழியின்றி மனம் வெதும்பி வெளியேறவேண்டி வரும். நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படும். ஒட்டுமொத்தமாக நிலங்கள் ஏதாவது கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கேற்ப ஒரு  தொழிற்பேட்டையாக கையகப்படுத்தப்படலாம்.



*


இதோ இப்போது கெய்ல் நிறுவனம் மாட்சிமைதாங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை கையில் வைத்துக்கொண்டு தயாராக நிற்கிறது. அநேகமாக தமிழகத் தேர்தல்வரை கள்ளமௌனம் காக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்பின் தன் அசுரபலத்தை விளைநிலங்களின் மீது எந்தவித கருணையுமின்றி பாய்ச்சும். மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த தேசத்தில், விவசாயத்தை முன்னிறுத்தும் இந்த தேசத்தில் மக்களைக் குறித்தோ, விவசாயம் குறித்தோ எந்தவிதக் கவலையும், கவனமுமின்றி தன் கோரத்தனத்தை செயல்படுத்தும்.

குழாய்கள் பதிக்கப்படும் நிலமனைத்தும் அதை நம்பி வாழ்வோரிடமிருந்து அந்நியப்படுத்தப்படும். அவர்களுக்கே கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும். ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிக்கப்படும். அந்த நிலத்தின் பயன்பாடு, விலை காயடிக்கப்படும். மிக எளிதாக விவசாய சமூகம் முடமாக்கப்படும்.

அந்த நிலத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவனே குற்றவாளி என சட்டம் பாய்ச்சப்படும். அசம்பாவிதங்களில் அவன் பாதிக்கப்பட்டால் நிறுவனம் கள்ளமௌனம் சாதிக்கும். மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.

அப்போ, வளர்ச்சியே தேவையில்லையா? எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போடுவது சரியா? ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெறமுடியும், ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, நகர விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது என எல்லா நேரங்களிலும் இப்படியான எதிர்ப்புக் குரல் எழும்பும், பின்னர் அடங்கிவிடும் என புத்திசாலித்தனமாக வஞ்சனைகள் நிரப்பி, நினைத்த ஒவ்வொன்றையும் நிறைவேற்றிவிடுவது ஒன்றும் சிரமமில்லைதான்.

ஆனால்… இதெல்லாம் உண்மையிலேயே யாருக்காக செய்கிறீர்கள்!?

பூர்வகுடிகளின் வேர்களை அறுத்துவிட்டு மெல்லமெல்ல அவர்கள் குழம்பி, மனம் வெதும்பி, நொந்து, இயலாமைக்கு ஆட்பட்டு சிதைந்துபோவதை உறுதிப்படுத்துவதற்குப் பெயர் வளர்ச்சி என்றால், அது வளர்ச்சியில்லை… அழுத்தமாகச் சொல்லவிரும்புவது “அது புற்றுநோய்க்கு நிகரான ஒன்றுதான்”

இந்தப் போக்குக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு 'டேஷ் இன் இந்தியா' என்று சொல்லி கோடிட்ட இடங்களை நிரப்பக் கோருகிறேன்.

-

நன்றி : தி இந்து

-

கனவை நோக்கிய நெடும்பயணம்





கற்பனை செய்ய முடியாததொரு வேகத்தில் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. காலம் என்று எதைச் சொல்ல? இதோ இப்போது லாவகமாய் நழுவும் இந்த நொடியா, தத்தித் தாவும் நிமிடமா, கடக்கும் மணிப்பொழுதா, தன் போக்கில் கரையும் இரவும் பகலுமா? இவை எவற்றையும் கணக்கில் கொள்ள முடியாதபடி, ஆண்டுகளே அவசரமாய்த் தீர்கின்றன. சமீபத்தில் நடந்தது என நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் யோசித்துப் பார்த்தால் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்பொழுதுதான் நிகழ்ந்ததுபோல் இருப்பவையெல்லாம் எப்பொழுதோ நடந்து முடிந்து போனதாக இருக்கின்றன.

நாள், வாரம், மாதம், வருடம் என்பதில் எதுவும் மாறிவிடாத போதும், காலம் மட்டும் எப்படி விரைந்து ஓடுகின்றது!? இன்றைய நாட்களில் ஆக்கிரமிப்புகள் கூடிப்போய்விட்டதுதான் நாட்கள் வேகமாக ஓடுவதான தோற்றத்தைத் தருகிறதோ எனத் தோன்றுகிறது. நாள் துவங்கும்போதே ஏதோ ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று எனக் களைத்து நிமிர்கையில், நாள் தீர்ந்து போய்விடுகின்றது.

எப்போதும் இதுபோல் இருந்ததில்லையே. வாழ்ந்த காலம் வேறாகவும் வாழும் காலம் வேறாகவும்தான் இருக்கின்றன. வாழப்போகும் காலம் இன்னும் வேறானதாக, ’இப்படித்தான் இருக்கும்’ எனக் கற்பனை செய்யமுடியாததாக இருக்கலாம். இப்படியாக யோசிப்பதும், பேசுவதும் நிகழ்காலத்தின் மீது எப்போதும் புகார் வாசிக்கும் ஒருவித மனநிலையா!? அப்படியாகவே இருப்பினும்,  நிகழ்காலம் குறைகளற்றதாக எப்படி இருக்க முடியும்.

கால் நூற்றாண்டு காலம் பின்னோக்கி எந்த ஒரு தினத்திற்குச் சென்று பார்த்தாலும், அப்படியான நாட்களை ஆக்கிரமிக்க ஒன்றுமே இல்லையென்பதுதான் உண்மை. வாழ்க்கையில் ’இது வேண்டும், இப்படியாக இருக்க வேண்டும்’ எனும் கனவுகள் இல்லை. பெரிய தேவைகளற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். கனவுகள் இரவுகளொடும், உறத்தோடும் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன.

இன்றைய நாட்களை எந்நேரமும் எதுவோ ஒன்று ஆக்கிரமித்திருக்கின்றது. புதிய உருவாக்கங்கள் வாழ்வின் அங்கங்களாக மாறத்தொடங்கிவிட்டன. நேற்று அடைந்தது இன்றும், இன்று அடைவது நாளையும் பழையதாகிவிடுகின்றன. புதிதாய், மிகப் புதிதாய்த் தேவை எனும் வேட்கையோடு பயணம் நீள்கிறது. புதிது புதிதாய் வேண்டும் எனும் தேடலை, ஆசையை, இவை தேவையில்லாத ஆசை / பேராசை எனும் வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது.

ஆக்கிரமிப்பு மிகுந்த நாட்களை இலகுவானதாய்க் கடந்திட மிகுந்த திட்டமிடலும், ’எதிர்காலத்தில் இப்படியாக வேண்டும்’ எனும் தீர்க்கமான கனவும் அவசியமாக இருக்கின்றது. திட்டமிடாத அன்றாடங்கள் நெருக்கடி மிகுந்ததாக இருக்கின்றன. எதிர்காலத்தில் இது வேண்டும், இப்படி இருக்க வேண்டும் எனும் தெளிவற்ற வாழ்க்கை குழப்பம் சூழ்ந்ததாகவே அமைகின்றது.

ஒவ்வொரு நாளும் நம் முன் புதிய வாய்ப்புகளை முன்னிறுத்துக்கின்றன. சில நாட்கள் சிலவற்றை முற்றிலும் புறந்தள்ளி ’இவை பயன்பாட்டுக்கு உகந்ததன்று’ என முடக்குகின்றன. இவை இரண்டையும் சமன் செய்து வாழ்க்கையை நகர்த்திட, எதிர்காலம் குறித்த நம்பிக்கை மிகுந்த கூரிய பார்வையும், அந்த பார்வைக்கான கற்றலும், அதைச் செயல்படுத்துவதற்கான உழைப்பும் அவசியம்.

எதிர்காலத்தில் நமக்கு எது தேவை என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்து இப்போது கவலைப்பட வேண்டியதில்லை. அப்படியான கவலைகளற்ற கனவுதான் பாரதிக்கு இருந்திருக்க வேண்டும். பாரதியின் துணிச்சல்மிகு கனவுகளில் என்னை எப்போதும் உலுக்கிக் கொண்டிருப்பவை இரண்டு

”காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற கவிதை வரிகள் நினைக்கும் கணந்தோறும் வியப்பேற்படுத்துவது ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பு எப்படி பாரதியால் அப்படியொன்றை தன் விருப்பமாக, கனவாகக் கொண்டிருக்க முடிந்தது என்பதுதான்.

தனக்கு வேண்டுவதைக்கூட ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதிலிருந்து எளிதாகத் தேடி எடுத்துக்கொள்ளவே தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில் ’காசியில் பேசும் உரையை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி வேண்டும்’ என நினைக்க எத்தனை துணிச்சலும் பேராவலும் இருந்திருக்க வேண்டும். ’அப்படியான கருவி எப்படியிருக்கும், எத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், எதன் மூலம் இயங்கும்’ என எதையுமே கற்பனை செய்திட முடியாத காலத்தில், தான் விரும்பும் காரியத்தைச் செய்ய ஒரு கருவி வேண்டும் எனக் கற்பனை செய்வது அல்லது கனவு காண்பது நிகழ்ந்திருக்கின்றது.

இக்கருவி செய்யும் கனவை விடவும், கூடுதலான வேட்கை நிறைந்த கனவொன்றும் பாரதியிடமிருந்து தெறித்ததை மறந்துவிட முடியாது. அடிமை விலங்கொடிக்க தேசம் முழுதும் வேள்வி நடந்த காலகட்டத்தில் விடுதலையை அடைந்தே விட்டதாகவே கனவு கண்டிட்ட துணிச்சல்தான் அது.

”ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”
எனும் கனவோ, தீர்க்கதரிசனமோ பாரதிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

பின்வருவதை முன் உணர்வதே தீர்க்கதரிசனம் எனில், பாரதியிடம் தீர்க்கதரிசனம் எனும் வல்லமை இருந்தது; பின்னால் வருமா வராதா என்று தெரியாதபோதும், அது தனக்கு வேண்டுமெனும் தீராத கனவு இருந்தது. கனவு அவரால் அடையக்கூடியதாகவோ, அவர் காலத்திற்குள்ளேனும் அடைக்கூடியதாகவோ இல்லாவிடினும், அவர் கண்ட கனவை காலம் மெய்யாக்கியது.

தீவிரமும், வேட்கையும், தேடலும் நிறைந்தவொரு கனவுதான் நமக்கும் மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. ஒரு கனவை தீர்மானிப்பது மட்டுமே போதுமானதாக இல்லை. தீர்மானித்த கனவின் பாதையில் தெளிவு கொள்ளுதல் முதல் தேவை. கனவை நோக்கிச் செல்வதென்பது ஒரு நெடும்பயணம். அந்த நெடும்பயணத்தை எங்கு துவக்குகிறோம் என்பதிலிருந்து, கடக்கும் தொலைவின் ஒவ்வொரு படிநிலையையும் உணர்ந்து, தெளிந்து, மகிழ்ந்து பயணித்தல் அவசியம்.

கனவை நோக்கிய நெடும்பயணத்தில் ஒவ்வொரு நிலையை எட்டுவதையும் ”வெற்றி” என்கிறோம். அப்படியான எட்டல்களும், கருதும் வெற்றிகளும் இணைந்த தொகுப்புதான் அந்தப் பயணப்பாதை. கிட்டும் ஒவ்வொரு வெற்றியும் பயணத்திற்கான உந்து சக்தி. அடையும் ஒவ்வொரு தோல்வியும் அனுபவச் சேர்க்கை.

ஒட்டுமொத்தக் கனவை நோக்கிய பயணமோ, அதிலிருக்கும் இலக்குகளை நோக்கிய பயணமோ, அது முதலில் கோருவது நேர்மையான, அர்ப்பணிப்பு மிகுந்த பங்கேற்பை மட்டுமே. அதில் பிறழ்ச்சி ஏற்பட்டால் பயணம் மிகப்பெரிய தொய்வைச் சந்திப்பதை தவிர்க்கமுடியாது. கோரும் உழைப்பை பொய்யின்றி, சமரசமின்றி, வெற்றுச் சமாதானங்களின்றி முழுத்திறனோடு அளிக்கவேண்டும்

உதாரணத்திற்கு உழைப்பு கோரப்படும்போது அளிக்கப்படும் பதில்கள்….. ”நான் செய்கிறேன் / செய்வேன்” (I will do) அல்லது ”செய்ய முயற்சிக்கிறேன்” (I will try to do”)  என்பதுதான். ஒரு காரியத்தில் ”நான் செய்கிறேன்” என்பதை முழு ஒப்புக்கொள்ளலாகக் கருதலாம். ”செய்ய முயற்சி செய்கிறேன்” என்பதில் உண்மை முயற்சிகள் இருக்கலாம்; அல்லது மகிழ்வூட்டும் பதிலாகவோ, கேட்பவரை திருப்தி செய்வதற்கான பதிலாகவோ இருக்கலாம்.

“நாளை வருகிறாயா!?” எனக் கேட்கப்படுவதில், ”ஆமாம் வருகிறேன்” எனப் பதில் சொல்பவர்களில் 80% பேர் அவ்விதமே வருகிறார்கள். ”ஐ வில் ட்ரை” எனச் சொல்பவர்களில் 80% பேர் வருவதே இல்லை. முயற்சி செய்தலை நிகழ்த்தாமல், முயற்சி செய்கிறேன் என்பதை ஒரு தப்பித்தலுக்கான பதிலாக மட்டும் பிரகடனப்படுத்துகிறார்கள்

பயிலரங்கு ஒன்றில் ”Try” குறித்து உரையாடுகையில் நான்கு பேரைச் சுட்டி, ”எழுந்து நிற்க முயற்சி செய்யுங்கள்” என்றேன். நால்வரும் எழுந்து நின்றனர். ”ஏன் எழுந்து நிற்கிறீகள்?” எனக் கேட்டேன். சற்று குழம்பியபடி ”நீங்க தானே எழுந்திருக்கச் சொன்னீர்கள்!?” என்றனர். நான் ”எழுந்து நில்லுங்கள் என்றா!?” சொன்னேன் என அழுத்தமாகக் கேட்டேன். தங்களுக்குள் கிசுகிசுப்பாய் பேசிவிட்டு “இல்லை…. எழுந்திரிக்க ட்ரை பண்ணச் சொன்னீங்க!”

“எழுந்திருக்க ட்ரை பண்ணுங்கனுதானே சொன்னேன். எழுந்திரிக்கச் சொல்லலையே….!”

“ட்ரை பண்ணினாலே எழுந்து நிற்க வேண்டியதாகி விடுகிறது”

உண்மையில் முயற்சித்தல் என்பது எழுந்து நிற்பதல்ல, எழுந்து நிற்க முயற்சி செய்தல் மட்டுமே. அதாவது கால்களை சற்று வலுப்படுத்தி, உடலை இருக்கையிலிருந்து மேல் நோக்கி பெயர்த்துதல். முயற்சி என்பது வெறும் ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிடுதல் எனில், அதை மட்டுமே செய்துவிட்டால் போதும். இருக்கையிலிருந்து ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிட்டு அதோடு நின்றுவிட முடியுமா!? அப்படி நிற்பதை உடல் ஏற்றுக்கொள்ளாது. அந்த ஒரு அங்குல உயரத்தில் எவ்வளவு நேரம் சமநிலை பாவித்துத் தொடரமுடியும். இங்குதான் ’செய் அல்லது செத்துமடி’ எனும் பாடத்தை உணர்த்துகிறது முயற்சி.

எழுந்து நிற்க முயற்சி செய்ததில் நாற்காலியிருந்து சுமார் ஒரு அங்குலம் உயரத்தில் கால்களின் பலத்தில் மட்டுமே நிற்கிறோம். அச்சூழலில் வலி தவிர்க்க, சமநிலை காப்பாற்ற இருக்கும் வழிகள் ஒன்று வீழ்ந்துவிட வேண்டும் அல்லது எழுந்து நின்று விடவேண்டும். வீழ்வதற்காக முயற்சி செய்யவில்லை, எழுவதற்காகத்தான் அந்த முயற்சியினை மேற்கொண்டோம் என்பதால் அது நம்மையுமறியாமல் நிகழ்ந்து விடுகின்றது.

செயல்களில் காட்டும் அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும், தீவிரமும் வெற்றிகளைக் கையகப்படுத்தும். வெற்றிகளின்  தொகுப்பு தானாகவே கனவினை வசப்படுத்தும்.

-

நம் தோழி பிப்ரவரி இதழில் வெளியான கட்டுரை

-