''ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டு, பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை.
'அப்பா, அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.'
இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோ, கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி.
மேலும், முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது. கேட்பதற்கு அஞ்சி அந்தக் கண்களில் இருந்து தப்பித்து ஓடுகிறோம். அவர்களைப் போலவே, ஈழத்தில் உள்ள அனை வரிடமும் துயரம் செறிந்த கதைகள் பல நூறு உண்டு.
'என்னுடைய கணவரும் மூத்த மகனும் மாத்தளனில் கொல்லப்பட்டார்கள். சின்ன மகனை, முகாமில் இருந்து ராணுவம் பிடித்துப் போய் பூஸா சிறையில்வைத்து இருக்கிறார்கள். இரண்டாவது மகன், நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டான். அவனைத் தேடி நான் ஒவ்வொரு முகாமாக அலைந்து திரிகிறேன். எவர் எவருடைய கால்களிலோ, விழுந்துப் பார்க்கிறேன். ஒரு பயனும் இல்லை.' - தனித்து நிற்கும் அந்தப் பெண்மணி நைந்து போன சேலைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக்கொள்கிறார். சிறையில் இருக் கும் கடைசி மகனைப் பார்ப்பதற் காக, அவர் அப்போது அவசரமாகக் கிளம்பிக்கொண்டு இருந்தார்.
'அவன் பெயர் ராஜு. குடும்பத் தில் பாசமுள்ள பிள்ளை. 'நான் திரும்பி வருவன் அம்மம்மாஞ்... கவலைப்படாதையுங்கோ’ என்று சொல்லிவிட்டுப் போனான். வரவே இல்லை. வீரச் சாவடைந்து விட்டதாகச் சொன்னார்கள். பார்த்து அழுவதற்கு அவனுடைய உடம்புகூடக் கிடைக்கவில்லை.' - முள்ளி வாய்க்காலில் மறைந்துவிட்ட தனது பேரனை நினைத்து விம்முகிறார் விசுவமடுவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து நல்லூரில் தற்காலி கமாகத் தங்கியிருக்கும் அந்த முதிய பெண்.
'இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்களுடைய காணி, மரங்கள் நிறைந்த சோலையாக இருந்தது. எவ்வளவோ சிரமப்பட்டு உழைத்து, கடன் வாங்கி வீட்டைக் கட்டினேன். எல்லோரும் வெளிக்கிட்டு ஓடியபோது, நாங்களும் ஓடினோம். திரும்பி வந்து பார்த்தபோது, அத்திவாரம் மட்டுமே மிஞ்சியிருக்கக் கண்டோம். சுவர்க் கற்களைக்கூடப் பெயர்த்தெடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். இன்று தறப்பாழ்களின் கீழ் வாழவேண்டி இருக்கிறது. ஆட்களற்ற வனாந்தரமாக எங்கள் ஊர் இருந்த காலத்தில், யானைகள் புகுந்து மரங்களை எல்லாம் அழித்துவிட்டன. பாம்புகள் புற்றெடுத்துக் குடி புகுந்துவிட்டன...' முன்னம் வாழ்ந்த காலங்களின் ஞாபகத்தில் ஏங்கிய விழிகளோடு வானத்தை அண்ணாந்து பார்க்கிறார் அந்தப் பெரியவர். அண்ணாந்த முகத்தில் இருந்து உருண்டு சரிகிறது ஒரு துளிக் கண்ணீர்.
வலது கை துண்டிக்கப்பட்டு இருக்க, இடது கையால் ஓங்கி ஓங்கி நிலத்தில் முளையடித்துக்கொண்டு இருக்கிறான் ஓர் இளைஞன். இறுகிய முகத்தில் சிரிப்பின் அடையாளமே இல்லை.
'எங்களுக்கு ஒருத்தரும் இல்லைஞ்... எங் களுக்கு ஒருத்தரும் இல்லை...' என்ற வார்த் தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் அந்த இளம்பெண். மே 2009-ல் நடந்தேறிய பேரனர்த்தத்தில், அவளது கணவன் செல்லடியில் சிக்கிச் சிதறிவிட்டான். 'லமினேட்’ செய்யப்பட்ட புகைப்படத்தில் தனது அப்பாவைக் காட்டு கிறது இரண்டரை வயதுக் குழந்தை.
ஏதோவொரு வகையில் போர் அனைவரையும் பாதித்து இருக்கிறது. பாதித்துக்கொண்டு இருக்கிறது. முன்னரைக் காட்டிலும் அதிக அளவிலான பிச்சைக்காரர்களைக் காண முடிகிறது. பேருந்து நிலையங்களில் அதீத ஒப்பனையுடன் நிற்கிறார்கள் சில பெண்கள். ராணுவத்தினர் பாலியல் பண்டங்களாகப் பயன்படுத்தி, தெருவில் வீசி எறியப்பட்ட பெண்களே அவர்கள். வறண்டு பறக்கும் தலை மயிரோடும் பொட்டில்லாத நெற்றியின் கீழ் இருண்ட கண்களோடும் கூடிய பெண்கள், குழந்தைகளைக் கைகளில் பிடித்தபடி அரச நிவாரணங்களுக்காக அலைந்துகொண்டு இருக்கிறார்கள். கை, கால் இழந்த அநேகரைத் தெருக்களில் கடந்து செல்ல நேரிடுகிறது.
எல்லா முகங்களிலும் சொல்லித் தீராத துயரம். வார்த்தைகளையும் புன்னகையையும் போர் தின்றுத் தீர்த்துவிட, வெறும் உடலங்களாக உலவிக்கொண்டு இருக்கிறார்கள். இறந்தவர்கள் இறந்துபோக, எஞ்சிய வர்கள் அந்த ஊழிக் கூத்தின் ஞாபகங்களில் இறுகிக் கிடக்கிறார்கள். இறந்த கால இழப்புகளுக்கும் நிகழ் கால இருப்புக்கான போராட்டமே ஈழத் தமிழர்களது இன்றைய வாழ்வு. இலங்கை அரசாங்கமோ, மீள் குடியேற்றம், புனர் நிர்மாணம், மறுவாழ்வு இன்ன பிற வார்த்தைகளைச் சலிக்காமல் உதிர்த்துக்கொண்டு இருக்கிறது.
இடுப்புக்குக் கீழ்ப் பகுதி சிதைந்துபோயிருக்க, நிலத்தில் வீழ்ந்துகிடந்து 'காப்பாற்றுங்கள்ஞ்... காப் பாற்றுங்கள்ஞ்...’ என்று கதறி அழுதவர்களைத் தூக்கி வர இயலாமல் சாவிடம் விட்டுவர நேர்ந்துவிட்ட குற்றவுணர்வை, எந்த நிவாரணத்தால் துடைத்தெறிய இயலும்? குண்டு விழுந்து கிணறான பள்ளத்துள் துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்தவர்களின் ஞாபகங் களை எந்தத் தறப்பாளைக்கொண்டு மூடுவது? பசிக் கொடுமை தாளாமல், தங்களை வளர்த்த மனிதர்களின் பிணங்களையே பிய்த்துத் தின்ற வளர்ப்பு நாய்களின் ஊளைச் சத்தத்தை எந்தச் சங்கீதத்தால் மறக்கடிக்க முடியும்? விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப் பட்ட தமது உறவுகள் திரும்பி வருவர் வருவர் என்று, முள் கம்பி வேலிகளைப் பற்றியபடி காத்திருந்து ஏமாந்த கண்களுக்கு எந்த நிவாரணத்தால் மருந்திட இயலும்?
ஆனால், ஞாபகங்களை அழிப்பதன் வழியாக முழுமையான வெற்றியைத் துய்க்க முடியும் என்பதை இலங்கை அரசாங்கம் தெரிந்துவைத்து இருக்கிறது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில், அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது பேரினவாதம். முன்னொரு காலத்தில் 'கலாசார நகரம்’ என்று கொண்டாடப்பட்டதும், கல்வியில் சிறந்தது எனப் போற்றப்பட்டதுமான யாழ் நகரம்... இன்று கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு இன்ன பிற சீர்கேடுகள் மலிந்த இடமாகிவிட்டது.
'விடுதலைப் புலிகள் இயக்கம் எல் லோரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்ததாகச் சிலர் குற்றம் சாட்டுகிறார் கள். ஆனால், புலிகள் இல்லாத குறையை இப்போது உணர்கிறோம். எங்களுடைய இளைய சமுதாயம் கட்டுப்பாடுகள் அற்ற, தான்தோன்றித் தனமான, வன்முறை மிகுந்த சமுதாயமாக மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அடிதடிகள், குழுச் சண்டைகள் சர்வசாதாரணமாகிவிட்டன' எனக் குறைப்பட்டுக்கொள்கிறார் நடுத்தர வயது மனிதர் ஒருவர். கவர்ச்சிகரமான புதிய பெயர்களுடன் சண்டைக் குழுக்கள் ஊருக்கு ஊர் உதயமாகி இருக்கின்றன. ராணுவமோ, காவல் துறையோ, அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதன் வழியாக வன்முறையை ஊக்குவிக்கின்றன. அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் பக்கம் சாய்ந்துவிடுகின்றன.
இளைஞர்கள் மத்தியில் விடுதலை உணர்வு திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சிறு நகரங்களில்கூட களியாட்ட விடுதிகள், மதுச் சாலைகளை சாதாரணமாகக் காண முடிகிறது. இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவருடனான தொடர்பு, தங்களது வாழ்க்கைத் தரத்தை, வளத்தை உயர்த்திவிடும் என்று நம்பும் அளவுக்கு தமிழ் இளை ஞர்களில் சிலர் மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மே 2009-ல் நடந்தேறிய பேரழிவுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களும் இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குப் போய் விட்டார்கள்.
'வவுனியாவில் முட்கம்பி முகாமுக்குள் அடிப்படை வசதிகளே இல்லாமல் அடைத்துவைத்து இருந்தார்கள். மீள் குடியேற்றம் என்று சொல்லி மீண்டும் வன்னிக்கு அழைத்து வந்து பள்ளிக் கூடங்களில் திரும்பவும் அகதிகளாக அமர்த்தினார்கள். இரண்டு மாதங்களுக் குப் பிறகு, சில மரச் சலாகைகளையும் தறப்பாழையும் தந்து எங்களது நிலத்தில் குடியிருக்க அனுமதித்து இருக்கிறார்கள். இங்கே எந்த ஒரு வசதியும் இல்லை. எங்கள் நிலத்தில் இருக்கிறோம் என்ப தைத் தவிர, வேறு ஒன்றுமே இல்லை' - பெருமூச்செறிகிறார் ஒரு பெண்.
'இந்த நிலம் இப்படியா இருந்தது?' என்று ஏக்கப் பெருமூச்செறியும் கண்களில் விரிகிறது பாம்புகளும் தலையும் உடலும் இழந்த அடிப்பனைகளும் வறண்ட பற்றைச் செடிகளும் நிறைந்த வனாந்தரம்.
கல்லறைகளின் மீது நிற்பதான நடுக்கம் கால்களில். வன்னியின் எந்தப் பகுதியைத் தோண்டினாலும், எலும்புகள், உக்கிக்கொண்டு இருக்கும் உடலங்கள், குருதிக் கறை படிந்த ஆடைகள், தலை மயிர், பற்கள் எனக் கொலையுண்டவர்களின் எச்சங்களைக் கண்டெடுக்க முடியும். பாரிய புதைகுழிகளைக் கொண்டமைந்ததாக இருக்கிறது வன்னி நிலம்.
தமிழர்களின் நிலை இவ்விதம் இருக்க, யாழ்ப் பாணமோ தென்னிலங்கைச் சிங்களவர்களின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் வணிகத் தளமாகவும் படிப்படியாக சிங்கள இராசதானிக் கோலம் பூண்டு வருகிறது. இவை போதாது என்று, யாழ்ப்பாணத்தில் தங்களுக்கு நிலங்கள் இருப்பதாகச் சொல்லியபடி, ஆவணங்களுடனும் பாதுகாப்புக்கு அடியாட்களு டனும் பேரினவாதிகள் வந்து இறங்கி இருக்கிறார் கள். அரச அங்கீகாரத்துடன், ஒத்துழைப்புடன் நிலக் கபளீகரம் நடைபெற்று வருகிறது. வன்னியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்கள், தறப்பாழ்களைத் தாண்டி இறங்கும் வெயிலிலும் கொட்டும் மழையி லும் அகதிகளாக அவதிப்பட்டுக்கொண்டு இருக்கி றார்கள்.
இவற்றை எல்லாம் ராஜபக்ஷே சகோதரர்கள் பிரமாண்டமான கட்-அவுட்களில் வெள்ளை வேட்டி, கோட் சூட் சகிதம் கம்பீரமாக நின்று பார்த்தபடி, சிரிப்பாய்ச் சிரிக்கிறார்கள். குடும்ப அரசியல், கருத்துச் சுதந்திர மறுப்பு, சொத்துக் குவிப்பு, ஊழல், அடியாள் அரசியல், செல்வாக்குக்கு சேவகம் என மற்றொரு தமிழகமாக 'மலர்ந்து’ வருகிறது இலங்கை!
ஈழத் தமிழர்கள் மட்டும் அல்லாது; அவர் தம் தெய்வங்களும் அகதிகளாக்கப்பட்டுவிட்டன. ஏ 9 பாதையில் இருந்த இந்து சிறு கோயில்கள் தகர்க்கப்பட்டு, அங்கு எல்லாம் புத்தர் 'குடியேற் றம்’ செய்விக்கப்பட்டுவிட்டார். செம்பருத்திக்குப் பதில் தாமரை மலர்கள்.
முறிகண்டிப் பிள்ளையார் இன்னமும் தப்பிப் பிழைத்திருக்கிறார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் சிங்களவர்கள் முறிகண்டியில் இறங்கி பிள்ளையாரை வணங்கிச் செல்கிறார்கள். அவர்களுக்கு அருகில் புழுக்களிலும் புழுக்களாக உணர்ந்தபடி நின்று வணங்கும்போது, இழக்கப்பட்ட முகங்கள் மனத் திரையில் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைகின்றன.
'எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகள் எங்கே?' என்று காட்டு மரங்கள் சஞ்சலித்துப் புலம் பும் வீதி வழி திரும்பிச் செல்கின்றோம்.
எல்லாம் கனவுபோல் இருக்கிறது. கண்களில் நிரந்தரமாக உறைந்துவிட்ட கொடுங்கனவு!
-.-.-.-.-.-
பொறுப்பி : ஆனந்த விகடனில் தமிழ் நதி அவர்கள் எழுதிய கட்டுரை
நன்றி: ஆனந்த விகடன், தமிழ்நதி
-.-.-.-.-.-
-0-