ஒரு பேச்சாளனின் டைரிக் குறிப்பு


உங்க ஸ்பீச் கேட்ட அன்னிக்கு ராத்திரி என்னவோ தூக்கமே வரலைங்க. என்னென்னவோ செய்றேன் தூக்கமே வரல. எனக்குத் தெரிஞ்சு அப்படி ஆனதே இல்லை. ஏன் எதுக்குனும் யோசிக்கிறேன். இப்பவரை தெரியல. ஆனா உங்களோட அந்தப் பேச்சு என்னவோ டிஸ்டர்ப் பண்ணிடுச்சுஎன அந்தப் பள்ளியின் தாளாளர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் குறும்புன்னகையோடு மட்டுமே நின்று கொண்டிருந்தேன். உண்மையில் அப்படியான ஒரு பாராட்டை நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் பாராட்டப்பட்ட சூழல் அப்படி.

காலை ஒன்பது மணிக்கு துவங்கி தலா இரண்டரை மணி நேரம் என மூன்று அமர்வுகள் பயிலரங்கை முடித்துவிட்டு நிறைவான மனதோடு தேநீர் அருந்திக்கொண்டிருந்த போதுதான் தாளாளர் அவ்விதம் சொன்னார். அருகிலேயே பள்ளியின் செயலரான அவரின் கணவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்த தருணத்தில்தான் அப்படிச் சொன்னார்.

அவர்களின் பள்ளி ஆண்டு விழா நிகழ்வில் என்ன பேசினேன் என்பது நினைவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கலந்திருந்த கூட்டம். பந்தல் போட்டிருந்தார்கள். மாலை நிழலில் பந்தலுக்குள் இருந்தோரை என்னால் இனம் காண முடியவில்லை. ஆசிரியர்கள் எங்கே! பெற்றோர்கள் எங்கே! மாணவர்கள் எங்கே என என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலேயே சற்று யோசித்தபடியே அங்கும் இங்குமாய் மனதால் தாவித்தாவி பேசி முடித்தேன். பொதுவாக இப்படியான கூட்டங்களுக்குச் செல்லும்போது, காத்திருக்கும் நேரத்தில் முன்னதாகவே கூட்டத்திற்குள் ஒருமுறை வலம் வந்து யார் யார் எங்கெங்கே என்பதை அறிந்து சற்று தெளிவாகத் தயாராகிவிடுவேன். அன்றைக்கு அப்படிச் செய்யாமல் பிழை செய்துவிட்டேன். அந்த உறுத்தல், தடுமாற்றம் எனக்கு மட்டுமே உரித்தானது. வெளியில் தெரிய நியாயமில்லை.

நீங்க அன்னிக்கு பேசிட்டிருக்கும்போதே ஸ்டூடன்ஸ்க்கு ஒரு ட்ரெயினிங்க்கு உங்களைக் கூப்பிடனும்னு சார்கிட்டே சொல்லிட்டிருந்தேன்என அருகாமையில் இருக்கும் ஆசிரியரைச் சுட்டினார் செயலர். மனதை சமநிலையில் வைக்க முயற்சித்தபடி செவி கொடுக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு என்ன பேசினேன் என்ற யோசனையே மனதிற்குள் ஓடியது.

காலையில் எட்டு மணிக்கு பள்ளிக்குள் நுழையும்போதே செயலர் வரவேற்றார். ஆசிரியர்கள் சீருடையில் இருந்தார்கள். அதே சீருடையில் செயலரும். “என்ன சார் நீங்களும் யூனிபார்ம்ல இருக்கீங்க!?”. ”மண்டே மட்டும் டீச்சர்ஸ்க்கு யூனிபார்ம்ங்க. அவங்களுக்கு எடுக்கும்போது எனக்கும் ஒரு செட் எடுத்துடுவாங்க!” எனப் புன்னகைத்தார்.

பள்ளி, கல்லூரி நிகழ்வுகளுக்கு ஒரு பேச்சாளரைத் தீர்மானிப்பதில் இரண்டு மூன்று வகைகள் உண்டு. நாடறிந்த பேச்சாளரை கௌரவத்தின் அடிப்படையில் நிர்வாகம் தீர்மானிக்கும். ஓரளவு கேள்விப்படும், அறியப்படும் பேச்சாளார்கள் முதல்வர்கள், ஆசிரியர்கள் மட்டத்தில் தீர்மானிக்கப்படும். கல்லூரி நிகழ்வுகளுக்கு சில வேளைகளில் மாணவர்கள் சார்பிலும் தீர்மானிக்கப்படுவதுண்டு. இந்த உரைக்கு நிர்வாகத்தினரின் நண்பரின் வழியாக அழைக்கப்பட்டு சென்றிருந்தேன்

பொதுவாக உரைக்கு அழைக்கப்படுவதில், இந்த நிகழ்வுக்கு இந்த உரைதான் வேண்டும், அதற்கு இந்தப் பேச்சாளர்தான் வேண்டும் எனும் தெளிவு அரிதாகவே அமைகின்றன. அப்படியாக ஒரு பேச்சாளன் தெரிவு செய்யப்பட்டு, மேடை வழங்கப்பட்டால், அந்த மேடைக்காக உயிரைக் கொடுத்து உரை தயாரிக்கலாம் என்பதே என் கருத்து. மேடையை நிரப்புவதற்காக சில தருணங்களில் நாம் அழைக்கப்படுவதும், எது வேணாப் பேசுங்க என பணிக்கப்படுவதும் மனதிற்கு அத்தனை உகந்ததாக அமைவதில்லை. ஆனாலும் வளர வேண்டிய தருணத்தில் அவற்றை மறுக்கவும் முடிவதில்லை.

காலையில் தொடங்கி மாலை வரை தாளாளரும், செயலரும் மாறி மாறி பயிலரங்கில் அமர்ந்திருந்தார்கள். முடிந்தவுடன் பயிலரங்கை குறித்துப் பேசுவதை விடுத்து, ஆண்டு விழாவில் பேசிய உரை குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். நான் ஆண்டு விழாவில் பேசிய அடுத்த இரண்டாம் நாள், அதே குழுமத்தின் மற்றொரு பள்ளி ஆண்டு விழாவிற்கு தமிழகத்தின் பெரும் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். தொலைக்காட்சி பிரபலம். சில உரைகளைக் கேட்டிருக்கிறேன். ஒன்றோடு ஒன்று கோர்க்கக்கூட முடியாத அரதப் பழசான நகைச்சுவைத் துணுக்குகளை ஒருவித தொணியில் கோர்த்து தெளிக்கும் அவரின் உரைகள் மீது எந்த ஈர்ப்பும் இல்லை

பேச்சாளர்களில் சிலர் குறித்து விமர்சனங்களும், சிலர் குறித்து அலாதியான மரியாதையும் எனக்கு உண்டு. என்னை யாரோடும் பொருத்திப் பார்க்க மாட்டேன். உண்மையில் எந்தப் பேச்சாளராக இருந்தாலும், அவர்களிடமிருந்து செய்ய வேண்டியது அல்லது செய்யக்கூடாதது என ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள முயன்று கொண்டேயிருப்பேன்.

நானாக அந்த விழா குறித்துக் கேட்கவில்லை. அவராகவே அந்த விருந்தினர் குறித்துச் சொல்லிவிட்டு, அவருக்கு பதிலா உங்களைக் கூப்பிட்டிருக்கனும்ங்க என்றபோது சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் ன்பதை மீண்டும் உறுதி செய்து கொண்டேன். அந்தப் பாராட்டைம்ம்ம்... நாம யாரு.. கெத்துல்லஎன எடுத்துக்கொள்ளாமல், பாதையில் வலுவாகப் பயணிக்க இன்னும் என்னைத் தயார்படுத்த வேண்டுமெனத் தோன்றியது.நான் மிகவும் மதிக்கும் பேச்சாளர், எனக்குச் சொன்ன அறிவுரைஎப்போது 100% பயமேயில்லாமல் ஒரு மேடையில் ஏறுகிறோமோ அன்றோடு பேசுவதை விட்டுவிட வேண்டும்என்பதுதான். ஒவ்வொரு மேடைக்கும் சற்று அழுத்தத்தையும் பயத்தையும் என்னோடு வைத்திருப்பதை ஆரோக்கியமாகவே கருதுகிறேன். எங்கேனும் பிடிபட்ட ஒரு உதாரணத்தை, சம்பவத்தை, செய்தியை என் பாணியில் உரையாக மாற்றுவதற்காக சில பல மணி நேரங்கள் யோசித்து, தேடி அதன்பின்பே ஒரு வடிவமாகக் கொள்கிறேன். ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தித்தான் பேச வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறேன். சமீபத்தில்கூட பயிலரங்கில் ஒரு உதாரணத்தை முன் வைப்பதற்காக மட்டும் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் தேடினேன். அந்த வகையில் என் தயாரிப்புகள் மீது எனக்கு பெரும் பிரியம் உண்டு.

மேடையில் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டால், அது எனக்கான ஒரு மணி நேரமாகத் தோன்றாது. அரங்கில் ஆயிரம் பேர் இருந்தால் அது ஆயிரம் மணி நேரமாகத் தோன்றும். அந்த ஆயிரம் மணி நேரத்திற்கு நேர்மை செய்ய வேண்டுமெனும் அழுத்தம் எப்போதுமிருக்கும். அதுவே என்னை இயக்குகிறது. உரை என்பது ஒன்றைத் தேடிச் சேகரித்து வந்து கேட்பவரிடம் கடத்தும் காரியம். அதற்கு நியாயம் செய்தே தீர வேண்டும். அந்த நியாத்தில் கேட்போரை குதூகலிக்கச் செய்ய வேண்டும் எனும் சமாதானம் புறந்தள்ளப்பட வேண்டும். ஏதாவது ஒன்றை இடம் பெயர்த்த வேண்டும்.

உரையோ பயிலரங்கோ என்னிடம் கூர்மையாய் இருக்கும் ஒரு நோக்கம், கலந்துகொண்டோரின் உறக்கத்தை அன்றிரவு சில நிமிடங்களுக்கு தள்ளிப் போடவேண்டும் என்பதே. ’என்னவோ அவர் சொன்னாரே!’ எனும் சிந்தனைக்கே அந்த ஓரிரு நிமிடங்கள். பள்ளி விழா உரை குறித்தும், தன் உறக்கமின்மை குறித்தும் சொன்ன பள்ளித் தாளாளரின் பாராட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் பொறுப்போடு, இன்னும் உத்வேகத்தோடு இனி வரும் உரைகளுக்கு தயாரிக்க உழைக்க வேண்டிய அங்கீகாரமாகவும் அதைக் கொள்கிறேன்.

ஆகச்சிறந்த உதாரணங்கள்


சவால்களும், இழப்புகளும், துன்பங்களும், தோல்விகளும் வாழ்க்கையை உறைந்துபோகப் பணிக்கும் தருணங்களில், குலைந்து நிற்பவர்களிடம் பகிர்ந்துகொள்ள இந்தக்கணத்தில் உயிரோடு இருப்பதற்காக நிம்மதி கொள்ளுங்கள். உயிரோடு இருந்துவிட்டால் எங்கிருந்தும், எதை நோக்கியும் இன்னொருமுறை துவங்கிவிடலாம்எனும் சொற்கள் என்னிடமுண்டு. உயிரோடு இருப்பதே போராட்டமாய் இருந்துவிட்டால்? இந்த வாழ்க்கையின் அதிகபட்ச தேவை உயிரோடு இருப்பதுதான். 

மரணத்தை தண்டனையாக, விடுதலையாக, தப்பித்தலாகக் கருதுவோர் உண்டு. கனவுபோல் எல்லோரையும் மரணத்தின் அண்மை உரசிப் பார்க்கவே செய்கின்றது. சிலருக்கு அது நீள் கனவாய் அமைந்து நிஜமாய் மாறிவிடுகிறது. மரணம் கண்ணுக்குத் தெரியாத வரைக்கும்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யங்கள். மரணம் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால்? மரணம் அண்மித்துவிட்டதென அறிவிக்கப்படும்பொழுது, வாழ்க்கையை அதன் முழு நீள அகலத்திற்கும் வாழ்ந்துவிட எத்தனை பேரால் இயலும்

மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் எல்லோருக்கும் பொதுவான அறிவிப்பாக தன்னை அறிவித்து விடுவதில்லை. மற்றவர்கள் வாழ்வதற்காக சுவாசித்தால், மரணம் அறிவிக்கப்பட்டவர்கள் சாகாமல் இருக்கச் சுவாசிக்கிறார்கள். சேலம் மாநகரத்தின் வரலாற்றில் புதிதாய் இணைக்கப்படும் பக்கங்களில் மஸ்குலர் டிஸ்ட்ரோபிஎனும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நம்பிக்கை மனுஷிகளுக்குஇடம் கொடுத்தே தீரவேண்டும். 

பதின்ம வயதிலிருந்த வானவன் மாதேவியை தசைச்சிதைவு நோய் முதலில் தன்வசப்படுத்தத் தொடங்குகின்றது. அடுத்து தங்கை வல்லபியும் நோயின் பிடிக்குள் சிக்குகிறார். அக்காவுக்கு என்ன நடக்கிறதோ, அதுதான் தனக்கும் நடக்கும் எனும் பக்குவம் மட்டுமே வல்லபிக்கு கூடுதல் ஆறுதல். கருணையற்ற நோய் அவர்களை முற்றிலும் முடக்கி விடுகிறது. பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சிரமப்பட்டுச் சென்றவர்கள், முடியாமல் மேற்படிப்பை வீட்டிலிருந்தே தொடர்கிறார்கள்.

நிற்க, நடக்க, கைகளைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு நோய் அவர்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. போன் பேசக்கூட கைகளை உயர்த்த முடியாத நிலையில், போனை காதருகே பிடிக்க மற்றவரின் உதவி தேவைப்படுகிறது. பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் முறையில் வாதையை மென்று விழுங்குகிறார்கள். தங்களைப் போன்றே பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உதவிட ஆதவ் அறக்கட்டளைஎனும் அமைப்பைத் துவங்கி அதன் மூலம் சிகிச்சை மையம் நடந்துகின்றனர். 

பாதிக்கப்பட்ட ஏழைப் பிள்ளைகளை, தங்கள் செலவில் அழைத்து வந்து, இயன்ற சிகிச்சைகளை அளிக்க ஏற்பாடு செய்கின்றனர். தசைச்சிதைவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒருங்கிணைந்த மையம் ஒன்றினை பெரும் நிதியீட்டலின் மூலமாகத் தற்போது அமைத்து வருகிறார்கள். அந்த மையத்திற்காக நிதி திரட்டுகையில், பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றின் சமூகப் பங்களிப்பு நிதியைப் பெற்றுத் தர நான் முன்வந்தேன்.‘‘பன்னாட்டு நிறுவனங்களின் உதவியை நாங்கள் ஏற்க மாட்டோம்என நிர்த்தாட்சண்யமாக மறுத்த உறுதி கண்டு வருந்தினாலும், வியந்து போனேன். சகோதரிகளின் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, உதவும் குணத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், ஆவணப்பட இயக்குனர் கீதா இளங்கோவன் 2014ம் ஆண்டு நம்பிக்கை மனுஷிகள்எனும் ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார். இருபதுகளில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீபனுக்கு கணிதம், இயற்பியலுடன், ‘ஜேன் வைல்டுமீதும் காதல் வருகிறது. 

ஒருநாள் நடை பிறழ்ந்து கீழே விழுந்து அடிபடுகிறார். மருத்துவர் மோட்டார் நியூரான்எனும் நரம்பியல் இயக்க நோய் தாக்கியிருப்பதாக தெரிவிக்கிறார். கைகள், கால்கள், மற்ற அங்கங்கள் ஒவ்வொன்றாக முடங்கும்; இன்னும் இரண்டு வருடங்கள் மட்டுமே உயிரோடு இருக்கமுடியுமென தேதி குறிக்கிறார். ‘‘மூளை வேலை செய்யுமா?’’ எனக் கேட்க, “பாதிப்பில்லைஎன்கிறார். ஸ்டீபன் தனித்திருக்க விரும்புகிறார். தன்னைத் தேடுவோரிடமிருந்து தப்பிக்க வீட்டிற்குள்ளேயே முடங்குகிறார். வீட்டிற்கு வரும் ஜேனை போகச் சொல்கிறார். உறுதியான மனநிலையோடு ஜேன் தன் காதலைப் பகிர, மனதளவில் மீள்கிறார். திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. கால்கள், கைகள், உடல் இயக்கம், பேச்சு, உணவு உட்கொள்ளல் என ஒவ்வொன்றாய் முடங்குகின்றன. கருந்துளைகள் குறித்த அவரது ஆராய்ச்சிக் கட்டுரை பெரும் பாராட்டைப் பெற்றுத்தருகிறது. 

இனி நடக்க முடியாது என்பதை உணரும் ஸ்டீபன் சக்கர நாற்காலிக்கு மாறுகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த சூழலில் கருந்துளைகள் குறித்து அவரின் கோட்பாடுகள் உலகப்புகழ் பெற்றவராக மாற்றுகிறது. குழந்தைகள், கணவனின் உடல்நிலை, அவரின் புகழ், சூழல், தன் கனவை அடையமுடியாத இயலாமை ஆகியவற்றால் களைத்து அயர்ச்சியடைகிறார் ஜேன். இசையாசிரியர் ஜோனாதன் பிள்ளைகளுக்கு பியானோ கற்றுத்தர வீட்டிற்கு வருகிறார். 

ஜோனாதன், ஸ்டீபனின் குடும்ப நட்பாகி அவர்களோடு நேரம் செலவழிக்கிறார். ஸ்டீபனுக்கு பெரிதும் உதவியாய் இருக்கிறார். இந்நிலையில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு தந்தை ஸ்டீபனா அல்லது ஜோனாதனா என ஸ்டீபனின் அம்மா கேட்க, அதிர்ச்சியடைகிறார் ஜேன். அந்த உரையாடலைக் கேட்கும் ஜோனாதன் வருத்தத்தோடு விலகிச் செல்கிறார். ஜோனாதனின் நட்பை இழக்க விரும்பாத ஸ்டீபன் அவரைத் தேடிச்சென்று அழைக்கிறார்.

உடல் பாதிப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது. தொண்டையில் துளையிட்டு குழாய் பொருத்தப்பட்டதால், பேசும் திறனை முற்றிலும் இழக்கிறார். சக்கர நாற்காலியில் கணினியின் ஸ்பீச் சின்த்தசைஸர்இணைக்கப்படுகிறது. அதன் துணைகொண்டு அவர் எழுதும் ‘‘தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்நூல் உலகளவில் விற்பனையில் சாதனை புரிகிறது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழமுடியுமென விதிக்கப்பட்ட ஸ்டீபன், ஜேனின் துணையோடு முப்பதாண்டுகளைச் சிறப்பாக வாழ்ந்து கடக்கிறார். 

அதுவரை அர்ப்பணிப்போடு தன்னைக் கவனித்த ஜேனை அன்பின் காரணமாய் தன்னிடமிருந்து விடுவிக்க விரும்புகிறார். சூழலையும் அவர் மனநிலையையும் புரிந்துகொள்ளும் ஜேன் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று ஜோனாதனுடன் இணைய, செவிலியராக வந்த எலைனுடன் காதல் கொண்டு இணைகிறார் ஸ்டீபன். நிறைந்த அரங்கொன்றின் மேடையில் ஸ்டீபன் உரையைத் துவங்கும்போது, முதல் வரிசையிலிருக்கும் பெண்ணொருவர் பேனாவைத் தவறவிடுகிறார். 

தாம் எழுந்து சென்று அதை எடுத்து அந்த மாணவியிடம் தருவதாகக் கற்பனை செய்யும் ஸ்டீபன், நோய் அவரை இத்தனையாண்டு காலம் எவ்வாறு முடக்கிப் போட்டது எனக் கலங்குகிறார். உரையில் மனித முயற்சிகளுக்கு எல்லைகளேதும் கிடையாது. ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். வாழ்க்கை எவ்வளவு மோசமானதாகத் தெரிந்தாலும், அதில் செய்வதற்கும் வெல்வதற்கும் ஏதோ இருக்கிறது. வாழ்க்கை இருக்கும்போது, நம்பிக்கையும் இருக்கும்என்கிறார்.உலகப்புகழ் பெற்ற இயற்பியல் கோட்பாளரான ‘‘ஸ்டீபன் ஹாக்கிங்தம் நோயோடு ஐம்பது ஆண்டுகள் இயைந்து, 74 வயதினைக் கடந்து வாழ்கிறார். அவரின் முதல் மனைவி ஜேன் வைல்டு எழுதிய ‘‘மை லைஃப் வித் ஸ்டீபன்எனும் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு 2014ம் ஆண்டு வெளியான ஆங்கிலப் படம் த தியரி ஆஃப் எவ்ரிதிங்”, வாழ்க்கையை நம்பிக்கையின்மை கொண்டு பூட்டி வைக்கும் ஒவ்வொருவரின் கையிலும் திறவுகோல்களைத் தருகின்றது.

கிடைச்சிருக்கிற இந்தப் பிறவியில எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லது செஞ்சிடணும்எனும் வானவன் மாதேவியும், “வாழ்க்கையென்பது ரொம்ப எளிமையானதுங்கஎனும் இயலிசை வல்லபியும், ‘‘வாழ்க்கை எவ்வளவு மோசமானதாகத் தெரிந்தாலும், அதில் செய்வதற்கும் வெல்வதற்கும் ஏதோ இருக்கிறதுஎனும் ஸ்டீபன் ஹாக்கிங்கும், வாழ்க்கை மீதான அத்தனை கேள்விகளுக்கும் பதிலாகவும், புகார்களுக்குத் தீர்வாகவும் இருப்பவர்கள்.

எதுவாகினும் வாழ வேண்டுமெனத் துணிவதற்கு நிகர் வேறெதுவுமில்லை. வாழ்ந்திடத்தான் மிகப்பெரிய மனோதிடம் வேண்டும். உடல் மீது கெடுதிகள் ஏவி விடப்படும் தருணங்களில், அதிலிருந்து தப்பிப் பிழைத்து, விரும்பிய வண்ணம் வாழ்க்கையை வாழ்ந்திட நம்மிடமிருக்கும் துணிவும், நம்பிக்கையும்தான் வாழ்க்கையின் ஆணிவேர். வாழ்க்கையில் தெளிவின்மை கொண்டோருக்கு, இரத்தமும் சதையுமான நம்பிக்கையாய், வாழ்நாள் சாட்சியங்களாய் இருப்பவர்களே இந்த வானவன் மாதேவி, இயலிசை வல்லபி, ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர். தமக்கு வழங்கப்பட்ட, பிழையாய் வழங்கப்பட்ட வாழ்க்கையில் ஒருபோதும் தம்மளவில் பிழை செய்யாமல் நேர் செய்தவர்கள். 

தம் வாழ்க்கையைப் பாடமாக்கி பதில்களையும், தீர்வுகளையும், மந்திரச் சொற்களையும், நம்பிக்கையையும் நமக்கு வழங்கிட இவர்கள் எதிர்நீச்சல் போட்டபடியே இருக்கின்றனர். அந்த எதிர்நீச்சலின் அத்தனை வாதைகளுக்கும் பின்னால் அவர்கள் நமக்களித்திருக்கும் பாடங்களை புரிந்துகொள்கிறோமா, நம்பிக்கைகளை மனதில் விதைத்துக் கொள்கிறோமா என்பது மட்டுமே நம்முன் இருக்கும் கேள்வி. இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படியான கொடுமை எனும் புதிர் கேள்விக்கு, ’மற்றவர்களுக்கான உலகின் ஆகச்சிறந்த உதாரணங்கள் இவர்கள்எனும் பதிலையே தர விரும்புகிறேன்.

-

குங்குமம் வார இதழில் எழுதிய உறவெனும் திரைக்கதை தொடரின் இறுதிக் கட்டுரை

வானவன் மாதேவி மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோருக்கு அஞ்சலிகள்

அமைதியாய் மூச்சிரைப்போம்


தூய்மை குறித்து
புனிதம் குறித்து
குரலொன்று எதிரொலிக்கிறது.
அது தூய்மையில்
தோய்ந்த குரலா?

தாய்மை மொழி
சாதி எழுத்து
காதல் பக்தி  
காமம் சிந்தனை
தூய்மையென எதை
ஆய்வுக்குட்படுத்துகிறீர்கள்

தூமைக்குள்ளிருந்து துளிர்த்தோம்
விட்டுத்தராமல்
பற்றிக்கொள்ளாமல் மொழியேது
எதிர்பார்ப்பின்றி எழுத்தா
தங்கியதெல்லாமே முதற்காதலா
தேவையின்றி தொழுதலெதற்கு
அழுகில்லாக் காமமேது
வடிகட்டா சிந்தனையேது...

வா
முதலில் கொஞ்சம் அமைதியாய்
மூச்சிரைப்போம்!

ரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி!


சனிக்கிழமை கூடலூர் கல்லூரியில் பயிலரங்கை முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகும்போதே மதியம் 2.30 மணி. கல்லூரி முதல்வர் தானும் ஈரோடுக்கு வரும் திட்டம் இருப்பதால் உதகை வழியில் செல்லலாம் என்றார். அவருக்கு தனி வாகனம் இருந்ததால், நான் சாம்ராஜ் நகர், சத்தி வழியே ஈரோடு வருகிறேன் எனச் சொல்லி தனித்து புறப்பட்டேன். கூடலூரில் இருந்து முதுமலை, பந்திப்பூர், குண்டல்பேட், சாம்ராஜ் நகர், ஆசனூர், திம்பம், பண்ணாரி, சத்தி, கோபி வழியே ஈரோடு.
முதுமலை வனம் சுமார் பதினைந்து கி.மி, பந்திப்பூர் வனம் சுமார் பனிரெண்டு கி.மி தேசிய நெடுஞ்சாலை. அந்த இருபத்தேழு கி.மீ தொலைவிற்குள் நான் எண்ணிய வரையில் 97 வேகத்தடைகள். இதெல்லாமுமா கணக்கெடுப்பீர்கள் எனும் கேள்வி வரலாம். ஒரே ஆண்டில் அந்தச் சாலையில் நான்காவது பயணம். ஆகவே இந்த முறை எண்ணிவிட வேண்டுமெனத் தோன்றியது. சுல்தான் பத்தேரியிலிருந்து குண்டல்பேட் வரும்போதும் அப்படித்தான் வேகத்தடைகள்.

வேகத்தடைகளை நினைத்து அயர்ச்சி வந்தாலும் மரியாதையாக ஏற்றுக்கொண்டேதான் தீர வேண்டும். காரணம் அந்தக் காட்டில் வாழும் எல்லா உயிரனங்களுக்கும் சாலைகளைக் கடக்க உரிமை உண்டென்பதால் எந்தக் குறையும் சொல்லாமல் நிதானித்து, நேரம் திட்டமிட்டு பயணப்படுவதே இருதரப்பிற்கும் நல்லது.

உதகை வழி தவிர்த்து மீண்டும் சாம்ராஜ் நகர் வழி தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அன்பிற்கினிய நண்பர்கள் சுரேஷ் மற்றும் ஆசிரியர் அறிவழகன் ஆகியோரே. முதல் நாள் போகும் வழியிலேயே ஆசிரியர் அறிவழகன் அவர்களை திம்பத்தில் சந்தித்துவிட்டாலும், அவரின் அன்பிற்கு அந்த நேரம் போதாதது என்பதால் திரும்பி வரும்போது வருகிறேன் எனச் சொல்லியிருந்தேன். திரும்பும் பயணத்தில் இரவு தங்கி காலையில்தான் செல்ல வேண்டுமென வற்புறுத்தியிருந்தார். அடுத்தடுத்த பணிகளால் இயலாது எனத் தெரிந்திருந்தும் மையமாக தலையசைத்துச் சென்றிருந்தேன். போகும் போதே, சாம்ராஜ்நகர் வழி தவிர்த்து தாளவாடி - தெரக்னாம்பி வழியைத் தேர்ந்தெடுத்திருந்தேன். காரணம் அந்த நிலத்தைப் பார்க்கும் ஆசை.
குண்டல்பேட்டில் எரிபொருள் (நம் ஊரை விட 2-3 ரூபாய் லிட்டருக்கு குறைவு) நிரப்பிக்கொண்டு புறப்பட்டபோது, சுரேஷ் அழைத்தார். ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகிறேன் என்றேன். குண்டல்பேட் - சாம்ராஜ் நகர் சாலை குறைவான அகலமே இருந்தாலும், அற்புதமான சாலையமைப்பு. 2002ம் ஆண்டிலிருந்து அந்த சாலை வழியே பயணப்படும் அனுபவம் உண்டு. இந்த முறை மட்டுமே, சாலையோர ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடாமல் கடந்திருந்தேன்.

தாளவாடியில் சுரேஷ் கே.சி.டி பள்ளியை திட்டமிட்டபடியே நேரமான ஐந்து மணிக்கு முன்பே எட்டிவிட்டேன். ஆசிரியைகள் அனைவரையும் காத்திருக்க வைத்திருந்தார். சில நிமிடங்கள் அவர்களிடம் மரியாதை நிமித்தம் பேசி அனுப்பிவிட்டு, நானும் அவரும் கடந்த ஓராண்டுகள் குறித்துப் பேசி என மிக வேகமாக அரை மணிப் பொழுதைக் கரைந்திருந்தோம்.

இருவரும் மறந்திருந்தது அன்றைய தேதியை. அது பிப்ரவரி 24 . அதிலிருக்கும் சிறப்பே, கடந்த ஆண்டு அவர்களின் பள்ளி ஆண்டுவிழா அதே பிப்ரவரி 24ம் தேதிதான் நடந்தது. அதில் நான் தான் சிறப்பு விருந்தினர். அந்த விழாவிற்கும் கூட நான் இதே ஐந்து மணிக்குக்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் சென்றிருந்தேன். அந்த தேதி குறித்த நினைவின்றி, திட்டமிடல் ஏதுமில்லாமல், நாங்கள் இருவரும் மீண்டும் அதே பள்ளியில், அதே தேதியில், அதே நேரத்தில் ஒன்றாக இருந்திருக்கிறோம் என்பதை அடுத்த நாள் அறிந்தபோது சிலிர்த்துப் போனேன்.

இரவுக்குள் ஈரோடு திரும்ப வேண்டுமென்பதால், முடிந்தவரை விரைவாக அங்கிருந்து ஆசிரியர் அறிவழகன் சார் வீட்டிற்குச் சென்றோம். சூசையபுரம் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியாராக இருக்கும் அறிவழகன் அவர்களின் மாணவர்தான் சுரேஷ். முப்பதுகளில் இருக்கு சுரேஷ் அவர்களின் வாழ்க்கை இன்றைய மாணவர்களுக்கு ஊக்கம் தரும் ஒரு வரலாறு.

அறிவழகன் சார் குறித்து சுரேஷும், அவரின் மாணவியான உமாவும், ஏற்கனவே மிகப் பெரிய பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். பிம்பம் என்பதைவிட பிரியம் என்றே சொல்ல வேண்டும். அவரை அவர்கள் இருவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் மேலான ஒரு ப்ரியத்தை என்னுடனான உரையாடல் மூலம் அவரும் திரட்டி வைத்திருந்தார். நினைக்கும் பொழுதெல்லாம் இனிக்கும் பிரியம். அவர் ஒரு மிகப் பெரிய வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர். இவை யாவற்றையும் கடந்து ‘பிள்ளைகளுக்கான ஆசிரியர்’. ஈரோடு வாசல் வழியாக மிகுந்த நெருக்கத்திற்குள் வந்தவர்களுள் மிகவும் முக்கியமானவர்.அரை மணி நேரத்தில் கிளம்பிவிட வேண்டும் எனும் நிர்பந்தம் எனக்குள் பெரும் நெருக்கடியாக இருந்தது. ஆறு மணிக்கு கிளம்பினால் எப்படியும் ஈரோட்டை ஒன்பது மணியளவில் அடைந்துவிடலாம். ஆசனூர், திம்பம் என வனத்தில் பயணிப்பது பின்னிரவில் உகந்ததல்ல. திம்பம் மலைப்பாதையில் வாகனம் பழுதடைந்தால், இரவு முழுக்க காத்திருக்க வேண்டிய ஆபத்தும் உண்டு. அதனால் எப்படியும் ஆறு மணிக்கு கிளம்பிவிடும் முடிவோடு உரையாட ஆரம்பித்தோம். மூவரும் வசதியான ஒரு முக்கோன வடிவில் அமர்ந்து உரையாட ஆரம்பித்தோம். ஆசிரியரும் மாணவரும் என அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பாக நான். எங்களோடு நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியரின் துணைவியாரும் இணைந்துகொண்டார். அவர்களின் பள்ளி நாட்கள், பள்ளி அமைப்புகள், தாளவாடி, வனம், ஃபேஸ்புக், கடந்த ஆண்டு விழா, ஈரோடு வாசல், உள்ளத்தனையை உடல், எழுத்து, வாசிப்பு, உறவெனும் திரைக்கதை, உலக சினிமாக்கள், தேர்வுகள், நாப்கின் சேலஞ், மாணவிகள், ஆசிரியர்கள் என எல்லாவற்றையும் அரை மணி நேரத்தில் பேசி முடித்திருப்போம் என்றா நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு அரைமணியாக கடந்தோடுகிறது. கடக்கும்பொழுதெல்லாம் அடுத்த இந்த அரை மணியோடு எழுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து தோற்றுக் கொண்டிருக்கையில், உரையாடல் மட்டும் வென்று கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் ஆசிரியரின் துணைவியார் வெளியில் சென்று திரும்பும்போது ஒரு ஆசிர்வாத் கோதுமை மாவு பாக்கெட் கையிலிருந்தது. சாப்பிட எதும் வேண்டாம் போகிற வழியில் பார்த்துக் கொள்கிறேன் என மறுத்தும் அடுத்த இருபது நிமிடத்திற்குள் சப்பாத்தி, தக்காளி, பருப்பு என அசத்திவிட்டார். எத்தனை பேசியும் ஓயாதா, தீராத உரையாடல். இத்தோடு முடிக்கலாம் என நினைக்கும்போது ஆசிரியர் ஒரு கேள்வியை பந்துபோல் வீசுவார், நேரத்தை மறந்து நான் மட்டையாளனாய் அந்தக் கேள்வியோடு விளையாடிக் கொண்டிருப்பேன்.வெகு அரிதாகவே இப்படியான ஒரு உரையாடல் அமையும். சமீப ஆண்டுகளின் எல்லா நிகழ்வுகளிலும், என்னை ஏதோ ஒன்று ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒன்றில் ஈடுபடும்போது, மனது வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கும். ஆனால் அன்று, எல்லாம் மறந்து துறந்து, உரையாடலுக்குள் மூழ்கிப்போன அந்தத் தருணம் உயிர்ப்பு மிகுந்தது. மனதைச் சலவை செய்து புத்துணர்வாக்குவது. நிறைந்த நினைவுகளோடு விடைபெற்றபோது நேரம் இரவு 9.05 மணி.

அந்த நேரத்திற்குள் வீட்டிலிருப்பேன் மாலை அழைத்தபோது வாக்குறுதி கொடுத்திருந்தேன். வெளியில் வந்து வண்டியை எடுத்ததும், வீட்டிற்கு அழைத்து வர்ற வழியில் லேட்டாகிடுச்சு, பண்ணாரிகிட்ட வந்துட்டிருக்கேன். எப்படியும் பத்தரை மணிக்குள் வந்துவிடுவேன் என்ற பொய்யைச் சொல்லிவிட்டு ஆசனூரை நோக்கி வாகனத்தை விட்டேன். அந்தப் பொய்க்கு தலை வாரி பூச்சூடி பவுடர் இட பண்ணாரி சோதனைச் சாவடியில் ஒரு காரணம் காத்திருப்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. 

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரைப் பார்த்து, “அப்புறங்க குப்புசாமி நல்லாருக்கீங்ளா!?” என்பதைக் கேட்டு அவர் அதிர்ந்து போய் மகிழ்ச்சியும், குழப்பமுமாய் விழித்தார்.  எலக்ட்ரீசியனாக வேலை செய்துகொண்டிருந்த அவர், திடிரென ஒருநாள் காவலர் தேர்வுக் சென்று, தேர்ச்சி பெற்று பணியில் இணைந்த காலத்தில் பார்த்தது. அதன்பின் இப்போதுதான் 21 ஆண்டுகள் கழித்து அவரைப் பார்க்கிறேன். அப்புறமென்ன அங்கே ஒரு முக்கால் மணி நேர அரட்டை. இப்படியாக மதியம் 2.30 மணிக்கு கூடலூரில் புறப்பட்டவன், உரையாடல்களைச் சுமந்துகொண்டு ஒரு வழியாக இரவு 1.00 மணியளவில் வீட்டையடைந்தேன். அந்தத் தருணத்திலும்கூட மிகுந்த புத்துணர்வோடு இருந்ததுதான் அழகிய முரண்.