மணல் வாசம்

மிச்சமிருந்ததில்
அள்ளி வைத்திருக்கும்
கைப்பிடி ஈர மணலின்
ஒவ்வொரு துகளிலும்
ஒவ்வொரு மழையின் வாசனை!

அந்த மழை

கை நிறைய அள்ளிய
விதைகள் யாவும்
ஊன்றப்பட்டுவிட்டன

முளைத்தால்தான் தெரியும்
இத்தனை காலமும் விதைகள்
சுமந்து கிடந்த மரங்கள்

வெளிறிய வானத்திலும்
வீசும் காற்றிலும்
துளியும் ஈரமில்லை

அன்றொருநாள் எங்களை நனைத்த
அந்த அழகிய மழையை நினைத்து
நனைந்து கொண்டிருக்கிறேன்!