“பிணைந்திறுகும் பித்து” கவிதைக்கு பேரன்பிற்குரிய
*
எல்லோருக்குமினிய கனியன்
-------------------------------------------
பொதுவாக எழுத்தின் பரிமாணம் என்பது எண்ணத்தின் பரிணாம வளர்ச்சி தானே?... அது
மனநில விதை முளைப்பை கடத்தி வெவ்வேறு
வசதியான தளங்களில் நடுவது என்றே நான் நோக்குகிறேன். எழுத்தின்
பரிமாணங்கள் எதுவாக இருப்பினும் கவிதை
என்ற பரிமாணம் மனையாளின்,காதலியின்
அணைப்பில் கிடைக்கும் வெப்ப மூச்சுக் காற்றாய் நமைக்
கிளர்ந்தெழச்செய்வது.
உங்கள் கவிதைகளுக்கு நான் ஒரு கலாபக் காதலன்.உங்கள் பதங்களை நான்
சுகித்து உன்னிப்பாக அவதானித்தே வருகின்றேன்.
அப்படியே போகிற போக்கில் இசைக் குறிப்புக்களை இசைஞர்களுக்கு ராஜா
வழங்கிச் செல்வது போல் உங்கள் மொழி அந்த ராஜ இசையின் லாவகத்திற்கு இணையாக உங்கள் எண்ணத்தோடு கூடிக் கலவி ஒரு
உன்னதத்தையே சிருஷ்டிக்கிறது.
சாதாரணமாய் படித்தால் நீங்கள் மெனக் கெட்டது போலிருந்தாலும்,சரளமாய்,
சுழிப்பாய்,பிரவாகமாய்,துள்ளலாய்
உங்கள்
மொழி அள்ளிப் பருகும்,அள்ளி தலைக்கு மேல்
தெளித்துக் கொள்ளும் தீர்த்தம் போல்.
ஆஹா!...
".... வீசியெறியும் வெளிச்சத்தில் ஓவியங்கள் தீட்டுதல்...."
என்ற பதத்தில் கும்மியடிக்கும் அயோக்கியத்தனத்தில்,யோக்கியத்தை பிரித்தெடுப்பது போல்...இதற்கு ஒரு உன்னதமான மனநிலை
வேண்டும்.எப்படி பெற்றீர்கள் இதை?..
".... இசைமணிகளைப் பிரித்து மாலையாக்கி
ஆட்காட்டி விரலில் மாட்டிச் சுழற்றுகிறான்..."
என்ன ஒரு தவ மனநிலையிருந்தால் இப்படி
வரிகள் எமை ஆளும்?..ராஜாவின் விரலசைவில் நமை
ஆளும் உன்னத சங்கீதம் எழுவது போல இதுவும் ஒரு ராஜ பூபாளம்.
நானும் தான் பார்க்கிறேன்.யோசிக்கிறேன்.
நிலாகிட்ட எனக்கு இப்படி பணியத் தெரியலியே.அந்த பணிவு நிலாவே
மோகிக்கும் பதங்கள்.
"...... வேலங்குச்சி நான் வளச்சு
வில்லு வண்டி செஞ்சு தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சிக் கட்டி கொஞ்ச வாரேன்....."
என்ற அற்புதக் கலைஞன்,கவிஞன் R.V.உதயக்குமார் என்னுள் ஊற்றாய்ப் பீறிக்
கொண்டு வந்தான் நீங்கள் எரிந்து விழுந்த நட்சத்திரப் பாதையில் பயணம்
போக வேப்பமரக் கிளையுடைத்து ஏணி செய்ய பிரியப்படும் போது. கதிர்!... நீங்க யாரு?..
என்ன வாங்கி வந்திருக்கிறீர்கள்?.எப்படி?..
இந்த பரபரப்பில் இப்படி?.. என்ன விதமான
பக்குவம் உம்மிடம்...நினைப்பதையெல்லாம்
படைக்கும் சரஸ்வதி வரம்,குரு கடாட்சம் உங்கள்
மேல் அபரிமிதமாய்.வேப்ப மரக்கிளை ஏணியில் ஏறிச் செல்வது சத்தியமாய் சாத்தியம்
தான்.இப் பதத்தில்
நான் மேலும் பதமானேன்.
"..... பிரபஞ்சத்தின் செல்ல மகவாய்...."
நாம் இதற்குள் அடக்கம் என்ற தன்னடக்கம்.
"..... உலகையாளும் பேரரசனாய்....."
யப்பா!... காட்டுகிறீர்களே ரூபம்...விஸ்வரூபம்..
அடுத்து சட்டுன்னு குழந்தையாய் பால்யமடைகிறீர்களே...அப்படியே
உங்களை
மகனாய் இரு கைகளிலும் ஏந்தி,இரு தோள் சாய்த்து,தட்டிக் கொடுத்து,"... கண்ணே!..
கலைமானே!..." என்று பாட வேண்டும் போலுள்ளது.பொக்கிஷம் நீ... உனக்குத் தேவை
நல்லவர்களின் தாலாட்டு...என் தாலாட்டு இதை பிரசவித்த விரல்களை நீவி
தடவி சொடக்கு எடுப்பது...இது நான் உனக்களிக்கும் வெகுமானம்.உனக்கு
தாலாட்டுப் பாட இன்னும் வருவார்கள்.
நல்லூழ் என்று சொல்வார்களே...நல்லுழலுதல்
என்று சிலாகிப்பார்களே... மேற்கண்ட நம்மைப்
பிணைத்துள்ள அழகியல் தளைகளை தள்ளிவிட்டு, உதறிவிட்டு
நம்மால் வானேக முடியுமா கதிர்?... நம்மை நாமே காதலிக்கும்,
நம்மைப் போல பிறரைக் காதலிக்கும் யோக மனநிலை வாய்த்தவருக்கு அது
பிணைந்திறுகும் மாயக்கயிறு.சிறகடித்துப் பறக்கும் மாயவெளி.விரும்பிச் செல்லும்
மாயத்திசை.நீ..மாயன்.
பதங்களை ஒவ்வொன்றாய்ப் பதம் பிரிக்க
என் மென்முக்குகளை தொட்டுத் தடவி மேலும்
புதுப்பித்து உயிர்ப்பிக்கிறாய்..என் நாளமிலா
சுரப்பிகளில் தேனாய் சுரக்கிறாய்.நான் தேடும்
உன்னதத்தில் நானும் உன்னதம் தான் என்று என் முன் வந்து உன்னை
ஏந்திக் கொள் என்கிறாய்.சின்ன சின்ன நாசூக்கான இழைகளில் உலகை விலை பேசுகிறாய்.நான்
காதலித்துக் கொண்டிருக்கின்றேன் உன்னை...உன் ஆளுமையை...
இதை எழுத,எழுத...மகேந்திரனின் 'கண்ணுக்கு
மை எழுது'படத்தில் ராஜா பாடும் இப்பாடல்
எனை இன்பமாய் இம்சிக்கிறது.
"....பூவே!.. நீ நானாகவும்...
நீயும் என் தோளாகவும்....ஆசை..
அது ஈடேறட்டும்...எந்தன் கை கூடட்டும்..
இது என் ஆசைகள் இங்கு அரங்கேறட்டும்..
வண்ணப் பூவே!... நீ நானாகவும்...
நீயும்...என் தோளாகவும்....
வாழ்வென்பது....
வாடும் பூங்காற்றில் பூப் போன்றது...
பூவென்பது ...
நாளை எண்ணாமல் கூத்தாடுது....
பூ பூத்ததும் அது பிஞ்சாகுது...
பிஞ்சானதும் அது காயானது...
அந்தக் காயும்....அது கனியானது...
அது போல் தான் மனம் வளர்கின்றது...
என் வாழ்க்கையும் அது போலானது...
பூவே!... நீ...நானாகவும்...
நீயும்...என் தோளாகவும்......ஆசை......"
இப் பாடலுக்குப் பொருத்தமானவன் நீ...
நீ...ஒரு மானுடக் கனி...எவருக்குமினிய கனியன் நீ...என்றும் நிற்கும்
பூங்குன்றன் நீ...
வாழிய கதிர்!!.... வாழிய பல்லாண்டு!!!....
ஜீவிதமான இலக்கியம் போல்....
உயிரமுது போன்ற கவிதை போல்...
என் எழுத்து வழியாய் நான் இளைப்பாற உன்
மடி தந்ததற்கு நன்றி....உன்னைத் தொழ
எனக்கு சங்கோஜமில்லை...வணங்குகிறேன்..
- சண்முகம் அறிவழகன்
06.05.2018
தாளவாடி.
-
அவர் எத்தனைதான் கவிதைக்காக எழுதினேன் எனச் சொன்னாலும், நான் அதை மறுத்து என் மீதான அன்பிற்காக கனிந்த சொற்களென்றே ஏற்கிறேன்.