நான் சென்றபோது கணேஷ், வாசலில்நின்று கருப்பு மை கிண்ணத்தை அழுந்தத் தேய்த்து கழுவிக்கொண்டிருந்தார். சரி யாரோ ’ஒரு யூத்து’ தலைக்கு சாயம் பூசியிருக்கும் போல என நினைத்துக்கொண்டேன். ’நாமும் ஒருநாளைக்கு சாயம் அடித்துப்பார்த்தால் என்ன’வென்று நினைப்பு ஊறும்போதே தலையைச் சிலுப்பி ஊற்றுக்கண்களை அடைத்துவிட்டு, ஓரமாய்க் கிடந்த நீள நாற்காலியில் அமர்ந்தேன். சலூனுக்கே உரிய இலக்கணமாய்க் கிடந்த வாரப்பத்திரிக்கையை மேலோட்டமாக புரட்டத் துவங்கினேன்.
தலைமுழுக்க சாயம் பூசிக்கொண்டு, சட்டையில்லாமல் இன்றி, வரிவரியாய் தலைமுடியைச் சீவிவிட்டு, உலர்வதற்காக சுவர்மேசை மேல் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார் ஒருவர். நின்றுகொண்டிருந்த விதத்தைப் பார்க்கும் போதே, அவர் கணேஷின் நண்பராக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. அருகில் இருந்த முடிவெட்டும் நாற்காலியில் கரடிக்குட்டிக்கு நிகரான தலையோடு ஒருவர் அமர்ந்திருந்தார். முடியென்றால்முடி, அத்தனைமுடி. அதுவும், முடி உதிர்ந்தவர்கள் பொறாமைப் படுவதெற்கென்றே அவ்வளவு முடிகள் அவர்களுக்கு படைக்கப்பட்டிருக்குமோ என நினைத்துக்கொண்டேன். இப்படி எதாச்சும் நினைத்துக்கொ’ல்ல’த்தான் முடியும், வேறென்ன செய்ய முடியும்.
அந்தக் கரடிக்குட்டி, தனக்குப் பக்கவாட்டில் பின்பக்கமாய் அமர்ந்திருக்கும், என்னை தனக்கு முன்னேயிருக்கும் பெரிய சுவர்கண்ணாடி வழி பார்க்கிறதோ என்ற சந்தேகம் வந்தது. தன்னிச்சையாக பிடரி(யில் மட்டும் இருக்கும்) முடியைக் கோதிக்கொண்டேன். கோதிக்கொண்டே திடுக்கிட்டு கரடிக்குட்டிக்கு முன்னாடி இருக்கும் கண்ணாடியைப் பார்த்தேன், அந்த கரடிக்குட்டி புன்முறுவல் பூத்ததுபோல், அதில் தோன்றியது. ”மனுசனால ஆவாதது மசுறுனால என்றா ஆவப்போகுது” எனும் வழக்கமான தன்னெழுச்சி வாசகத்தை ஒருமுறை உள்ளுக்குள் உச்சரித்துக் கொண்டேன். மேசையில் சாய்ந்தமாதிரி நின்றிருந்த சாயமேற்றப்பட்டவர் தினந்தந்தி செய்தித்தாளை அடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தவர் திடீரென,
“ஏங் கணேசா இந்தக் கொடுமையப் பாத்தியா? துபாய்ல பெட்ரோல் வெல லிட்டர் 4 ரூபா தானாம், நம்ம ஊர்லதான் ஏத்துயேத்துனு ஏத்திட்டுப் போறானுவ” என்றார்.
“மேஸ்திரி, நீயெல்லாம் பைக் வாங்குனா, ஏறாம இருக்குமா? எப்பிடியும் லிட்டரு 100 ரூபா விக்கும் பாரு” என கணேஷ் சாபம் கொடுத்தார். கணேஷ் அடிக்கடி சைக்கிளில் செல்வதைப் பார்த்திருக்கேன். சாயம் பூசிய மேஸ்திரியின் புதுபைக் வெளியில் நின்றுகொண்டிருந்தது. கரடிக்குட்டி தன் தலைக்குமேலே சாபம் கொடுத்துக்கொண்டிருந்த கணேஷை பார்க்க முயல்வது கண்ணாடிவழியே எனக்குத் தெரிந்தது.
”ஆமாம் ஏறாம என்ன பண்ணும் அதுதான் பணவீக்கம் அதிகமாயிட்டே போகுதாம்ல, பிரணாப்முகர்ஜி அதத்தான் சொல்லியிருக்கார்” என தினந்தந்தியை ஒப்பித்தார்.
”இந்த பணவீக்கம்னா என்ன மேஸ்திரி?”
”அது… வந்து… பணவீக்கம்னா பணவீக்கம்தான் கணேசு” என சமாளிக்க முயன்றார் மேஸ்திரி!
அந்தப் பதிலில் கணேஷ் நிறைவடையவில்லை. தலையை தன்னை நம்பி தேமேனு கொடுத்திருந்த கரடிக்குட்டியிடம் கேட்டார், “பணம் வீக்கம்னா என்னங்க சார்?”
கரடிக்குட்டி உதட்டைப் பிளுக்கியபோது என்னையறியாமல் என் கை பிடரியைக் கோதியது.
பெட்ரோல் விலையேறிய மகிழ்வான கொடுமையைவிட, அப்போதைக்கு இந்த மர்மமான பணவீக்கம் தான் கணேஷை ரொம்பவும் கொடுமைப் படுத்தியிருக்க வேண்டும்.
நான் ஆறேழு வருடங்களாக அங்கே முடி வெட்டிக்கொள்ளச் சென்றாலும், பொதுவாக எதுவுமே பேசிக்கொள்வதில்லை. செல்லும் நேரத்தில் கூட்டம் இருப்பின், உற்றுப்பார்ப்பேன், ”அரை மணி / ஒரு மணி” என்பதாக இருக்கும் பதில். அதைத்தாண்டி இதுவரை எதுவும் பேசிக்கொள்வதில்லை. பேசிக்கொள்ளும் அவசியமும் வந்ததில்லை.
திடீரென கத்திரி இயக்கத்தை நிறுத்திவிட்டு, என்னைப் பார்த்து “சார், பணவீக்கம்னா என்ன” என்றார்.
கத்திரி இயக்கம் நின்றதால் அலுப்பில், கரடிக்குட்டி தன் தலையை அப்படியே பின்பக்கம் மலர்த்தி கணேஷைப் பார்த்தார். கணேஷ் அனிச்சையாய் தலையைப்பிடித்து கையால் முன் நகர்த்தி அமுக்கிக்கொண்டே, என் முகத்தை ஆர்வமாய்ப் பார்த்தார். மேஸ்திரியும் என்னைப் பார்க்க, அமுக்கப்பட்ட தலையோடு கரடிக்குட்டியும் கண்ணாடி வழியே என்னை பார்த்தார்.
யாரோ கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்தவுடன் என் முன் உச்சியில் இருக்கும் கொஞ்சம் முடிகளில் இரண்டு மட்டும் கொம்பு போல் தடித்து உறுதிப்படுவதை உணர்ந்தேன். அப்படி உணரும்போது இன்னும் கொஞ்ச நேரத்தில் அது வெட்டுபடும் எனத் தோன்றியவுடன் இரண்டும் தளர்ந்து பழையபடி மடங்கிக் கிடந்தது.
“பண வீக்கம்ங்றது, ஒன்னுமில்லைங்க இன்ஃப்லெஸ்ன்னு (Inflation) சொல்வோம், அதுதான் தமிழ்ல பணவீக்கம்” என்றேன்.
அந்தக் கரடிக்குட்டிக்கு, கணேஷின் கத்திரி இயங்காத கோபமோ என்னவோ தெரியவில்லை, “அதுதான் பணவீக்கம்னா என்னனு விளக்கமாச் சொல்லுங்க சார்” என கோர்த்துவிட்டார்.
இதென்னடா வம்பாப்போச்சு என நினைத்துக்கொண்டே “ம்ம்ம்.. எப்படிச்சொன்னா புரியும்” என முனகினேன்
“சார், நீங்க புரியற மாதிரி சொல்லுங்க, நாங்க புரிஞ்சிக்கிறோம்” என்றார் மேஸ்திரி
“ம்ம்ம் அது ஒன்னுமில்லைங்க, உதாரணத்துக்கு, இப்ப முடிவெட்ட தலைக்கு ஐம்பது ரூபாய் வாங்குறீங்க தானே, அதே, நாளையில் இருந்து முடிவெட்ட வர்றவங்க ஒரு நூறு பேர் வரை தொடர்ந்து, தானாகவே முடிவெட்டிக்கிட்ட பிறகு தலைக்கு நூறு ரூபா வலிய குடுத்துட்டு போறாங்கன்னு வைங்க, அப்போ என்ன பண்ணுவீங்க, நூத்தியொன்னாவதா வழக்கம் போல் வர்ற ஆளுகிட்டேயும் ஐம்பது ரூபாக்கு பதிலா நூறு ரூபா எதிர்பார்ப்பீங்கதானே, அதுதான் ஐம்பது ரூபா வேலைக்கு நூறு ரூபா வாங்குறது ஒருவித பணவீக்கம்னு” பந்தாவாக எடுத்துவிட்டேன்.
“அண்ணே இதுல எப்படீண்ணே வெளிச்சம் வரும் என கவுண்டமணியின் பெட்ரமாக்ஸ் லைக் மாண்டிலை உடைத்த வைதேகி காத்திருந்தாள் செந்தில் போல்,
“அடப்போங்க சார், அம்பது கொடுக்கிறதுக்கே ஒரு மாதிரி பார்க்கிறாங்க, யாரு வந்து நூறு ரூபா தானாக் குடுப்பாங்க” என என் விளக்கத்தை நொறுக்கிவிட்டு கத்தியோடு கரடிக்குட்டி தலையில் மீண்டும் படையெடுத்தார்.
கணேசுக்கு புரியாதது, கத்தரி பாய்ந்த விதத்தின் வழியே கரடிக்குட்டி தெரிந்திருக்க வேண்டும். கரடிக்குட்டி சாத’ரணமாகப் பார்த்ததே எனக்கு ஏதோ பாவமாகப்பட்டது.
அதுவரை எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த பொருளாதார மேதையை எழுப்பி பணவீக்கத்துக்கு சரியான விளக்கம் என்னவென்று கேட்டேன். பயபுள்ள, எதோ டூப்ளிகேட் சரக்கடித்து மட்டையானது போல் முனகினாரே ஒழிய தீர்வாக எதையும் எனக்குள் சொல்லவில்லை.
கணேஷின் கத்திரி சப்தம், மேஸ்திரி சரசரவென புரட்டு பத்திரிக்கை சப்தம், கரடிக்குட்டியின் குறுகுறுப் பார்வையென ஒவ்வொன்றும் என்னை கடுப்போடு பார்ப்பதை என நினைக்கும்போதே, மனதிற்குள் ஏதோ விளக்கு பொளிச்சென எரிந்தது.
”ஏங்கணேசு, இப்ப முடிவெட்டுறீங்களே அந்த (கரடிக்குட்டி) அண்ணனுக்கு எவ்வளவு காசு வாங்குவீங்க” என்றேன்.
அண்ணனுக்கு எனச் சொன்னது ஒரு கூடுதல் பாதுகாப்புணர்வில். பல இடங்களில் இந்த அண்ணா பாசம்தான் பலரைக் காப்பதுண்டு.
“அம்பதுதான் சார்”
”பார்த்தீங்காளா? இப்படி மாங்குமாங்குனு மணிக்கணக்குல வெட்டிடுற அவருக்கும் அம்பது ரூபா வாங்குறீங்க, பொசுக்குனு மூனு நிமிசத்துல வெட்டியுடுற எனக்கும் அம்பது ரூபா வாங்குறீங்க, என் தலைக்கு வேலையை மீறி கூடுதல வாங்குற காசுக்குப் பேருதான் பணவீக்கம்” என்றேன்
கரடிக்குட்டிக்கு திக்கென்றிருக்க வேண்டும். ”அலோ, அவரு பேச்சைக்கேட்டு திடீர்னு ரேட்டை ஏத்தீறாதீங்க, அம்பதுதான் எடுத்திட்டு வந்திருக்கேன்” என்றவாறு வழக்கம்போல் கண்ணாடி வழியே கூர்மையாக முறைத்தார்.
”பார்த்தியா கணேசு, உன்னைய வெச்சே சார் பட்டாசு கிளப்பிட்டாருல்ல” என மேஸ்திரி வேறு கூடுதலாய்க் கிளப்பிவிட்டார்.. பரபரவென கரடிக்குட்டி இடத்தைக்காலி செய்ய, நான் சென்று அமர்ந்தேன். அதுவரை ஒருவித யோசனையில் இருந்த கணேஷ்,
“கவலையவிடுங்க சார்! உங்களுக்கும் நஷ்டம் வராத மாதிரி வேலை பண்றேன்” எனக் கூறிய கணேஷ் தலையில் தண்ணீரைப் பீச்சி விட்டு முடியைக் கோதி கர்ரக் கர்ரக் என வெட்டித்தள்ள ஆரம்பித்தார்.
ஒரு வழியாய் முடித்து எழும்போது மண்டை மட்டுமே தெரிந்தது, மண்டைமேல் அமர்ந்திருந்த முடிகள் பணவீக்கத்தைச் சரிக்கட்ட இரையாகியிருந்தது. மனசு வீக்கத்தோடு, அம்பது ரூபாயை நீட்டினேன். காசை வாங்கி கல்லாவில் போட்ட கணேஷ் சிரித்துக்கொண்டே, தலை வார சீப்பை ஒரு தட்டுத்தட்டி கொடுத்தார். கண்ணாடி அருகே நகர்ந்து சீப்பை தலையில் வைத்து சீவ இழுத்தேன். பாறை மேல் ஓட்டும் டிராக்டர் கலப்பைபோல் எகிறி எகிறி ஓடியது.
என் தலை வழியாய் பரீட்சார்த்தமாய், கணேஷ் பணவீக்கத்தை குறைக்க முயற்சித்தது புரிந்தது. ஆமாம், வழக்கம்போல் அடுத்த ஒன்றரை மாதத்தில் முடிவெட்ட வேண்டிய அவசியமிருக்காது. எப்படியும் மூன்று மாதம் வரை தாக்குப்பிடிக்கலாம்.
-0-