அன்பின் நிமித்தமாய்

 அடுத்தடுத்த நிகழ்வுகளில் ஒரு பள்ளி மாணவி மற்றும் ஒரு கல்லூரி மாணவி ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை 2018 மார்ச் மாதம் ஃபேஸ்புக்கில் சிறிய பகிர்வுகளாக எழுதியிருந்தேன். அந்தச் சூழலில்தான் 'புதிய தலைமுறை கல்வி’ வார இதழ் ஆசிரியர் அண்ணன் பெ. கருணாகரன் அழைத்தார்.

ஃபேஸ்புக் பதிவுகளைப் படித்ததாகக் கூறி ’அதையே கட்டுரை வடிவில் எழுதலாமே கதிர்’ என்றார்.
”சரிங்ண்ணா.... ட்ரை பண்றேன்’ என்று சொல்லிவிட்டாலும், முடியாது என்கின்ற பதிலுக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்.
பொதுவாக எழுத முடியுமா என்று கேட்டால், ‘சிரமம்’ என்றோ, ‘முடியாது’ என்றோ மறுக்க எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடும். ஆனால் அவர் சொன்னது ‘எழுதலாமே’. முடியுமா என்று ஒருவரைக் கேட்பதைவிட, ’செய்யலாமே’ என்று சொல்லி செயல்படுத்துவதை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.
எழுத ஒப்புக்கொண்டாலும் மிகுந்த தயக்கம் இருந்தது. தயக்கம் என்பது வாரத்திற்கு 750 சொற்கள் எழுத முடியுமா என்றில்லை. மாணவர்களுடனான அனுபவம் குறித்து ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமாக எழுத முடியுமா? அப்படி எழுதும் கட்டுரைகள் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற வகையென முத்திரை படிந்துவிடக்கூடாது உள்ளிட்ட தயக்கம் மட்டுமே. தயக்கங்களை கனமாய்ச் சுமந்தபடியே ஒப்புக்கொண்டேன்.
தொடருக்கான தலைப்புகளாக நிறைய யோசித்து இறுதியாக வேட்கையோடு விளையாடு என முடிவு செய்தோம்.
ஆரம்பத்தில் எத்தனை வாரங்கள் என்று தெரிந்திருக்கவில்லை. 2016ல் குங்குமத்தில் ஐந்து கட்டுரைகள் மட்டுமே எழுத முடியும் எனத் தொடங்கி உறவெனும் திரைக்கதை தொடரில் 25 கட்டுரைகள் எழுதிய அனுபவம், எத்தனை வாரங்கள் என்றாலும் இதையும் எழுதுவோம் எனும் நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.
ஒவ்வொரு வாரமும் கட்டுரையை அனுப்பிவிட்டு அவருடைய பதிலுக்காக காத்திருப்பேன். நானே எதிர்பார்த்திராத கோணத்தில் இருந்து அவருடைய பாராட்டு வரும். ஆரம்பம் முதலே அந்தப் பாராட்டு இதழ் ஆசிரியர், எழுத்தாளருக்குச் சொல்லும் பாராட்டாக மட்டுமே இல்லை. குறிப்பிட்ட ஒரு கட்டுரை எனக்கு படு வறட்சியாக இருந்தது. அந்தக் கட்டுரை குறித்தும் நேர்மையான தன் பார்வையைக் கொடுத்ததுதான் மிகுந்த மனநிறைவான அனுபவம். ஒருவேளை அந்தக் கட்டுரையை அவர் பாராட்டியிருந்திருந்தால் அதுவரையிலும் வந்திருந்த பாராட்டுகள் குறித்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கலாம். அவர் இதழ் ஆசிரியராக இருந்துகொண்டு, நல்லதொரு வாசகனாகவும் இடம் பெயர்ந்து அளித்த பாராட்டுகளே அவை. தொடர் எழுதிய காலத்தில் மகாராஷ்ட்ரா பயணத்தால் ஒருவாரம் கட்டுரை கொடுக்க முடியவில்லை. அதையும் மிக எளிதாக எடுத்துக்கொண்டார்.
தொடர் இருபத்து ஐந்து வாரங்களைத் தொட்டு 2018 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.
என்னதான் அவர் ஊக்கம் தந்து 25 வாரங்கள் என்னை எழுத வைத்து கட்டுரைகள் வாங்கியிருந்திருந்தாலும், எழுதிய காலத்தில் பாராட்டுகள் கிடைத்திருந்தாலும் முந்தைய தொகுப்புகளில் இடம் பெற்ற கட்டுரைகள் போல் இவை இல்லை எனும் எண்ணத்தில் தொகுப்பாக மாற்றுவதில் சுணக்கம் கொண்டிருந்தேன்.
சுணக்கம் என்றால் ஒருநாள், ஒரு வாரம் இல்லை. ஏறத்தாழ ஐந்து மாதங்கள். இனியும் இப்படியே விட்டால் தொகுப்பு வராமலே போய்விடும் எனும் அச்சத்தில், டிசம்பர் இறுதியில் ஒரே வாரத்தில் புத்தகமாக வடிவமைத்து 2019 ஜனவரியில் தொகுப்பாக வெளிவந்தது. வேட்கையோடு விளையாடு தொகுப்பிற்கு அண்ணன் கருணாகரன் மிக நேர்த்தியான அணிந்துரை வழங்கியிருந்தார்.
வெளியீட்டில் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுத்திருந்தேன். ஒன்று சொந்த பதிப்பில் வெளியிட்டது, இரண்டாவது முதல் பதிப்பில் 2000 நூல்கள். கட்டுரைகள் வறட்சியான தன்மை கொண்டிருப்பதாக நினைத்து சுணக்கம் கொண்டு நான் தாமதித்த புத்தகம், ஆறே மாதத்தில் இரண்டாவது பதிப்புக்குச் சென்றது. தற்போது நான்காவது பதிப்பில் தொடர்கின்றது.
இப்போதும் சொல்கிறேன், நான்தான் அந்தக் கட்டுரைகளை எழுதினேன், ஆனால் எழுத வைத்தது அவர் என் மீது வைத்த அந்த நம்பிக்கையும், கொடுத்த வாய்ப்பும்தான். அது கிடைக்காமல் போயிருந்தால் ஆங்காங்கே சில நூறு சொற்களில் அந்த அனுபவங்கள் அனைத்தும் குறுகியதொரு வட்டத்தில் முடங்கியிருந்திருக்கும்.
இதை எழுதக் காரணம், இன்று அவருடைய பக்கத்தில் நகைச்சுவையாக எழுதியிருந்த...
//
நான்லாம் உன்னால் முடியும்னு சொல்லியே பல பேரை தெறிக்க விட்டிருக்கேன்
//
எனும் பதிவுதான்.
நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், தான் அறிந்தும் அறியாமலும் அவர் பலரை ஊக்குவித்து வேறொரு இடத்திற்கு நகர்த்தியிருப்பார் என்றே நம்புகிறேன்.
வேட்கையோடு விளையாடு தொடர் முடிந்து, போதிய இடைவெளியில் இன்னொரு தொடர் ஆரம்பிக்கும் திட்டமும் அப்போது இருந்தது. கோவிட் முடக்கத்தால் இதழ் தொடர்ந்து வர முடியாமல் நின்று போனது. அடுத்து அவர் இணைய இதழாகத் தொடங்கிய கல்கோணா இதழில் நான் எழுத ஒப்புக் கொண்டும், அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக எழுத முடியாமல் போனது இன்றும் உறுத்தலாகவே இருக்கின்றது.
நிறைவாய் ஒன்று சொல்ல விரும்புகிறேன்...
அன்பின் நிமித்தமாய் திரையெனும் திணை நூலை நான் அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றேன்.

No comments: