மீண்டும் கனவு

கருவிழிகள் களவாடப்பட்டது போல்
திடீரென திருடப்பட்டது கனவு......

மௌனச்சூரியனின் கதிர்களால்
கருகிப்போகின்றது
சிலசமயம் மனதிற்குள் முளைக்கும்
சந்தோஷ மொட்டுக்கள்.....

இரவின் சுகத்தில் பிறந்த விடியல்....
ஒரு நாளை வாழ்ந்துவிட்ட சுகத்தோடு
தாய்மடி சேர்கிறது.....
இந்த இரவுக்குப்பின் இன்னொரு விடியல்
பிறக்குமென்ற நம்பிக்கையில்......


பிறந்த நாள்

வருடந்தோறும் வந்து
கொண்டுதான் இருக்கிறது........
இனிப்பாய் பல நேரம்,
இனிப்பை மறந்து சில நேரம்.

காலையில் கிளர்ச்சியாய்.....
வாழ்த்துகளை வாங்கி வாங்கி
அயர்ச்சியாய்......

ஆண்டுகள் கடந்து விட்டன ....
ஆனாலும் என்ன சாதித்தோம்
என்ற மலைப்பு.....

மனிதனுக்கு மனிதன் மேல்
நம்பிக்கை இருப்பதில்லை......
தவறிப்போய் நாமும்
மனிதனாகத்தானே இங்கே....

தொலைந்த மௌனம்




மேசையின் மீது உள்ள அலைபேசி ஒலி எழுப்பும்போதெல்லாம் மனது லேசாக திடுக்கிடும். காதும், வாயும் கூடவே சில சமயம் மனதும் பேசிப்பேசியே வலிக்கின்றன. வெறும் பத்து வருடங்களில் அலைபேசி நம்மை வெறித்தனமாக அடிமைப்படுத்தியதை மறுக்கவே முடியாது. காலை கண் விழிக்கும்போதே அழைப்பு வருகிறது, பல் துலக்கி காபி குடிக்கும்போதும் பல நேரம் பேசுகிறோம். நானெல்லாம் குளிக்கும் போதும் கூடவே எடுத்து செல்லுபவன். தட்டில் விழும் உணவின் நிறமும்அளவும் கூட சில நேரம் பேசும் (அ) சுவாரசியத்தில் தெரிவதில்லை. இதில் நல்ல வேலையாக சுவை குறித்து குறை கொள்ள நேரம் இல்லை. பார்த்த இடமெல்லாம் கை காதோடு அணைந்து கொண்டேயிருக்கிறது. யாரைப்பார்த்தாலும் பேச்சு பேச்சு என எல்லா நேரமும் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. ஏன் இப்படி பேசுகிறோம், எதை அடைய இப்படி பேசுகிறோம். சரி பேசிப்பேசி எதைத்தான் அடைந்துவிட்டோம்? பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன் நினைத்து பார்த்தால் நாம் இப்போது பேசுவதில் நூறில் ஒரு பங்குதான் பேசி இருப்போம். அப்பொழுதெல்லாம் தொலைபேசி அலுவலகத்தில் இருக்கும் அல்லது வீட்டில் இருக்கும். வீட்டில் இருக்கும் தொலைபேசில் பேசுவது சுகமான அனுபவம். பெரும்பாலும் உறவினர்கள்தான் வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பது வழக்கம். குடும்பத்தில் உள்ள அனைவரும் மாற்றி மாற்றி பேசி மகிழ்வார்கள். ஆனால் இன்று அலைபேசி ஆறாவது விரலாக நம்முடன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பேசுகிறோம். ஆனால் எதை அடைய இத்தனை பேசுகிறோம்?. தொடர்ந்து பேசி மனதிற்குள் இருந்த அழகிய மௌனத்தை கொன்று விட்டதை ஒரு போதேனும் உணர்ந்திருக்கிறோமா?. தனிமை என்பதே மறந்துவிட்டது. தொலைந்து போன மௌனத்தை கொஞ்சம் தேடித்தாருங்களேன், அதற்குள் படபடக்கும் அலைபேசிக்கு பதில் சொல்லி விட்டு வருகிறேன்...........

ஒளி தேடும் விழிகள்


எந்த ஒரு மனிதனும் இறந்த பின்பும் இன்னொரு மனிதனுக்கு உதவ முடியும் என்றால் அது கண் தானம் மூலம் மட்டும் தான். ஆனால் கண் தானம் இன்னும் சரியான அளவில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பெரும்பாலும் 'நான் கண் தானம் செய்கிறேன்' என்று பதிவு செய்வது மட்டுமே போதும் நினைக்கிறோம். அதற்கேற்றார் போல் பெருந்தொகையான மனிதர்களைக் கூட்டி நான் கண் தானம் செய்கிறேன் எனக் கையெழுத்து இட்டு உறுதிமொழி எடுக்கிறோம். நிச்சயமாக இது சிறந்ததொரு விழிப்புணர்வுதான். அதே சமயம் அதுமட்டுமே முழுமையான கண் தானம் ஆகிவிடாது. இரத்ததானம் போன்று விரும்பும் போது, முடியும்போது அளிப்பதல்ல கண் தானம். ஒரேயொரு முறை மட்டுமே அளிக்கக்கூடியது. இங்கே உறுதியளித்துவிட்டு இறந்துபோகும் சூழலில் யாரும் தகவல் தெரிவிக்க தவறிப்போயிருந்தால் கண் தானம் நிறைவேறாது. எனவே, கண்தானம் செய்வதற்கு வெறும் பதிவு மட்டும் போதாது.

மரணம் நிகழ்ந்த ஆறு மணிநேரத்திற்குள் கண்கள் எடுக்கப்பட வேண்டும். உங்களுக்கு தெரிந்து யாரவது இறந்தால் உடனடியாக இறந்தவரின் குடும்பத்தை அணுகி, அந்த இல்லத்தில் இருக்கும் முக்கியமான நபரிடம் கண் தானம் பற்றி எடுத்துக்கூறி கண்களை தானம் வழங்க ஊக்குவியுங்கள். இறந்த நபரிடம் இருந்து பெறப்படும் இரண்டு கண்கள் இரு பார்வையற்ற நபர்களுக்கு தலா ஒரு கண்களாக வழங்கப்படுகின்றன.

இறந்தவரின் கண்களை அவர் குடும்பத்தினர் தானம் செய்ய விரும்பினால் உடனே அருகில் உள்ள கண் வங்கியை அல்லது உங்கள் பகுதியில் உள்ள அரிமா சங்கத்தினை அணுகவும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் கண்வங்கிகள் செயல்படுகின்றன. அவர்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்களே நேரில் வந்து வெறும் 10 நிமிடத்திற்குள் கண்களை எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

அரிமா சங்கங்கள் கண் தானத்திற்காக மிகச் சிறப்பாக உழைக்கின்றனர்.

.