Showing posts with label வேட்கையோடு விளையாடு. Show all posts
Showing posts with label வேட்கையோடு விளையாடு. Show all posts

Jul 9, 2022

அன்பின் நிமித்தமாய்

 அடுத்தடுத்த நிகழ்வுகளில் ஒரு பள்ளி மாணவி மற்றும் ஒரு கல்லூரி மாணவி ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை 2018 மார்ச் மாதம் ஃபேஸ்புக்கில் சிறிய பகிர்வுகளாக எழுதியிருந்தேன். அந்தச் சூழலில்தான் 'புதிய தலைமுறை கல்வி’ வார இதழ் ஆசிரியர் அண்ணன் பெ. கருணாகரன் அழைத்தார்.

ஃபேஸ்புக் பதிவுகளைப் படித்ததாகக் கூறி ’அதையே கட்டுரை வடிவில் எழுதலாமே கதிர்’ என்றார்.
”சரிங்ண்ணா.... ட்ரை பண்றேன்’ என்று சொல்லிவிட்டாலும், முடியாது என்கின்ற பதிலுக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்.
பொதுவாக எழுத முடியுமா என்று கேட்டால், ‘சிரமம்’ என்றோ, ‘முடியாது’ என்றோ மறுக்க எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடும். ஆனால் அவர் சொன்னது ‘எழுதலாமே’. முடியுமா என்று ஒருவரைக் கேட்பதைவிட, ’செய்யலாமே’ என்று சொல்லி செயல்படுத்துவதை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.
எழுத ஒப்புக்கொண்டாலும் மிகுந்த தயக்கம் இருந்தது. தயக்கம் என்பது வாரத்திற்கு 750 சொற்கள் எழுத முடியுமா என்றில்லை. மாணவர்களுடனான அனுபவம் குறித்து ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமாக எழுத முடியுமா? அப்படி எழுதும் கட்டுரைகள் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற வகையென முத்திரை படிந்துவிடக்கூடாது உள்ளிட்ட தயக்கம் மட்டுமே. தயக்கங்களை கனமாய்ச் சுமந்தபடியே ஒப்புக்கொண்டேன்.
தொடருக்கான தலைப்புகளாக நிறைய யோசித்து இறுதியாக வேட்கையோடு விளையாடு என முடிவு செய்தோம்.
ஆரம்பத்தில் எத்தனை வாரங்கள் என்று தெரிந்திருக்கவில்லை. 2016ல் குங்குமத்தில் ஐந்து கட்டுரைகள் மட்டுமே எழுத முடியும் எனத் தொடங்கி உறவெனும் திரைக்கதை தொடரில் 25 கட்டுரைகள் எழுதிய அனுபவம், எத்தனை வாரங்கள் என்றாலும் இதையும் எழுதுவோம் எனும் நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.
ஒவ்வொரு வாரமும் கட்டுரையை அனுப்பிவிட்டு அவருடைய பதிலுக்காக காத்திருப்பேன். நானே எதிர்பார்த்திராத கோணத்தில் இருந்து அவருடைய பாராட்டு வரும். ஆரம்பம் முதலே அந்தப் பாராட்டு இதழ் ஆசிரியர், எழுத்தாளருக்குச் சொல்லும் பாராட்டாக மட்டுமே இல்லை. குறிப்பிட்ட ஒரு கட்டுரை எனக்கு படு வறட்சியாக இருந்தது. அந்தக் கட்டுரை குறித்தும் நேர்மையான தன் பார்வையைக் கொடுத்ததுதான் மிகுந்த மனநிறைவான அனுபவம். ஒருவேளை அந்தக் கட்டுரையை அவர் பாராட்டியிருந்திருந்தால் அதுவரையிலும் வந்திருந்த பாராட்டுகள் குறித்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கலாம். அவர் இதழ் ஆசிரியராக இருந்துகொண்டு, நல்லதொரு வாசகனாகவும் இடம் பெயர்ந்து அளித்த பாராட்டுகளே அவை. தொடர் எழுதிய காலத்தில் மகாராஷ்ட்ரா பயணத்தால் ஒருவாரம் கட்டுரை கொடுக்க முடியவில்லை. அதையும் மிக எளிதாக எடுத்துக்கொண்டார்.
தொடர் இருபத்து ஐந்து வாரங்களைத் தொட்டு 2018 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.
என்னதான் அவர் ஊக்கம் தந்து 25 வாரங்கள் என்னை எழுத வைத்து கட்டுரைகள் வாங்கியிருந்திருந்தாலும், எழுதிய காலத்தில் பாராட்டுகள் கிடைத்திருந்தாலும் முந்தைய தொகுப்புகளில் இடம் பெற்ற கட்டுரைகள் போல் இவை இல்லை எனும் எண்ணத்தில் தொகுப்பாக மாற்றுவதில் சுணக்கம் கொண்டிருந்தேன்.
சுணக்கம் என்றால் ஒருநாள், ஒரு வாரம் இல்லை. ஏறத்தாழ ஐந்து மாதங்கள். இனியும் இப்படியே விட்டால் தொகுப்பு வராமலே போய்விடும் எனும் அச்சத்தில், டிசம்பர் இறுதியில் ஒரே வாரத்தில் புத்தகமாக வடிவமைத்து 2019 ஜனவரியில் தொகுப்பாக வெளிவந்தது. வேட்கையோடு விளையாடு தொகுப்பிற்கு அண்ணன் கருணாகரன் மிக நேர்த்தியான அணிந்துரை வழங்கியிருந்தார்.
வெளியீட்டில் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுத்திருந்தேன். ஒன்று சொந்த பதிப்பில் வெளியிட்டது, இரண்டாவது முதல் பதிப்பில் 2000 நூல்கள். கட்டுரைகள் வறட்சியான தன்மை கொண்டிருப்பதாக நினைத்து சுணக்கம் கொண்டு நான் தாமதித்த புத்தகம், ஆறே மாதத்தில் இரண்டாவது பதிப்புக்குச் சென்றது. தற்போது நான்காவது பதிப்பில் தொடர்கின்றது.
இப்போதும் சொல்கிறேன், நான்தான் அந்தக் கட்டுரைகளை எழுதினேன், ஆனால் எழுத வைத்தது அவர் என் மீது வைத்த அந்த நம்பிக்கையும், கொடுத்த வாய்ப்பும்தான். அது கிடைக்காமல் போயிருந்தால் ஆங்காங்கே சில நூறு சொற்களில் அந்த அனுபவங்கள் அனைத்தும் குறுகியதொரு வட்டத்தில் முடங்கியிருந்திருக்கும்.
இதை எழுதக் காரணம், இன்று அவருடைய பக்கத்தில் நகைச்சுவையாக எழுதியிருந்த...
//
நான்லாம் உன்னால் முடியும்னு சொல்லியே பல பேரை தெறிக்க விட்டிருக்கேன்
//
எனும் பதிவுதான்.
நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், தான் அறிந்தும் அறியாமலும் அவர் பலரை ஊக்குவித்து வேறொரு இடத்திற்கு நகர்த்தியிருப்பார் என்றே நம்புகிறேன்.
வேட்கையோடு விளையாடு தொடர் முடிந்து, போதிய இடைவெளியில் இன்னொரு தொடர் ஆரம்பிக்கும் திட்டமும் அப்போது இருந்தது. கோவிட் முடக்கத்தால் இதழ் தொடர்ந்து வர முடியாமல் நின்று போனது. அடுத்து அவர் இணைய இதழாகத் தொடங்கிய கல்கோணா இதழில் நான் எழுத ஒப்புக் கொண்டும், அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக எழுத முடியாமல் போனது இன்றும் உறுத்தலாகவே இருக்கின்றது.
நிறைவாய் ஒன்று சொல்ல விரும்புகிறேன்...
அன்பின் நிமித்தமாய் திரையெனும் திணை நூலை நான் அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றேன்.

Jan 25, 2020

செம்மையா வாழ்வோம் மகேஷ்.


என் பெயருடன் ஈரோடு என ஊர் பெயரைச் சேர்ப்பேன் என்றெல்லாம் 35 ஆண்டுகளில் ஒருபோதும் நினைத்ததில்லை. 2009ல் வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய பிறகு, ஏற்கனவே கதிர்கள் இருந்ததால், வேறுபடுத்திக் காட்டுவதற்காக கதிர், ஈரோடுஎன முதலில் சொல்லி, பிறகு அது எப்படியோ ஈரோடு கதிர்என்றாகிவிட்டது. அதுவே பழகி, இப்போது நானே அப்படியாக என்னை நம்பத் தொடங்கிவிட்டேன்.

ஈரோட்டிலேயே சில நேரங்களில் ஈரோடு கதிர்என்றழைக்கப்படும்போது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். வெளியூர்களில் இது ஊர் மீதான ப்ரியம் என்று நினைத்துக் கொள்வார்கள். அதன் நிமித்தமான பாராட்டுகளும்கூட இணைவதுண்டு. ஊர் பிடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சற்று மூத்தவர்கள் சில இடங்களில் ஈரோடு கதிர் என்றவுடன், ஈரோடு தமிழன்பன் பெயரை நினைவு கூர்வதுண்டு. ஓரிரு இடங்களில் ஈரோடு சௌந்தர் பெயர் கூட அடிபட்டதுண்டு. தமிழகத்தில் எங்கு சென்றாலும், ஈரோடு என்பது ஊரின் பெயர் என்று அறிந்திருப்பார்கள்.

ஆனால் என் இலங்கைப் பயணங்களில் ஈரோடு கதிர் என்று எங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெயர் உச்சரிக்கப்பட்டாலும்... ஈரோடு என்பதை என்னவாக எடுத்துக் கொள்வார்கள் என யோசித்ததுண்டு. என் யோசனைகளை நிறுத்தம் வண்ணமாகஈரோடு மகேஷ் தெரியும். டிவியில் கண்டிருக்கோம், உங்களுக்குத் தெரியுமா!?” எனக் கேட்பார்கள். அந்தக் கேள்வியில், அவர்கள்ஈரோடு மகேஷ்தோளில் கை போட்டு உரையாடும் அளவிற்கான ஒரு நெருக்கத்தை உணர்த்துவார்கள். தமிழ் தொலைக்காட்சிகளின் வீரியம் புரிந்தது.

என்னை அவர்கள் அறிமுகப்படுத்திக் கொள்வதே, ஈரோடு மகேஷ் பெயரை நினைவில் மீட்டித்தான், ஆனால் அந்த மகேஷை எனக்கு தெரியாது என்பதுதான் அதிலிருக்கும் முரண். தெரியாது என்றால் யாரென்றே தெரியாது என்றில்லை. தொலைக்காட்சி வழியே நன்கு தெரியும் ஆனால் நேரடியாக எந்த வகையில், எவ்விதமும் தெரியாது என்பதுதான் அந்தக் குறை.

*

கடந்த வாரத்தில் ஒரு நாள் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பில்வணக்கம் நான் ஈரோடு மகேஷ் பேசுறேன்என்றது அழைத்த குரல். உண்மையில் அவருக்கு நிகரான வேறு யாரொருவர் பேசியிருந்தாலும், மிக எளிதாக அதை எதிர்கொண்டிருப்பேன். இந்தக் குரலுக்குச் சொந்தக்கார மனிதன் ஒவ்வொரு இலங்கைப் பயணத்தின்போதும் உடனிருப்பவர் என்பதால், ஏதோவொரு நெருங்கி வராத நெருக்கத்திற்குச் சொந்தக்காரர் என்பதால் பெரும் ஆச்சரியத்திற்குள்ளும், மகிழ்ச்சிக்குள்ளும் ஆட்பட்டேன்.

அவரே... அவருடைய வழக்கான, வேகமான பேச்சு நடையில் தொடர்ந்தார்.


உங்க புத்தகமெல்லாம் ஈரோடு புத்தக திருவிழாவில் வாங்கினேன். இப்ப இந்த வேட்கையோடு விளையாடு படிச்சிட்டிருக்கேன்.

“............”

என்ன பிரமாதமா எழுதியிருக்கீங்க...! அட்டகாசமா எழுதியிருக்கீங்கணே... ரொம்ப பிரமாதம்... ரொம்ப எளிமையான உதாரணங்கள்... அப்படியே பக்கத்துல இருந்து அந்த இன்சிடன்ட்ட பாக்கிற மாதிரி இருக்கு... நீங்க எழுதின சில இன்சிடன்ட் எல்லாம்... ரொம்ப நல்லாருக்கு.. ரொம்ப நல்லாருக்குணே...

“............”

நீங்க நிறைய எழுதுங்க... நிறைய எழுதனும்... நிறைய எழுதனும்.... நாங்கெல்லாம் பேசுறமே தவிர எழுதுறதில்ல. என்னை எல்லாரும் சொல்வாங்க... நீங்க நிறைய எழுதனும்...

“............”

எழுத்து வந்து மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அது என்னால எப்பயுமே ஏத்துக்கொள்ளக்கூடிய உண்மை... சமூகம் ஏத்துக்கொள்ளக்கூடிய உண்மை. புத்தகம் சமூகத்துல யாராவது ஒருத்தரோட கையில போய் நிக்கும், அந்தப் புத்தகமும், அதில் இருக்கும் வரிகளும், வார்த்தைகளும் அவர் மூலமா சமூகத்தில் நிறைய மாற்றங்களை உண்டு பண்ணும்ங்கிறது என்னோட கருத்து.

“............”

நூலகத்திலேயே கவனிக்கப்படாத நிறைய புத்தகம் இருக்கும், எடுத்துப் படிச்சோம்னா அவ்ளோ விசயம் இருக்கும். அந்த மாதிரி ரொம்ப சிறப்பா இருக்குண்ணே... மனம் நிறைந்த வாழ்த்துகள்ணே...


ஆச்சரிய அலைகளுக்குள் ஆட்பட்டிருந்த எனக்கு சொற்கள் கிட்டவில்லை. ஒற்றைச் சொற்களிலேயே பதில் சொல்லி ஒருவாறு உரையாடலை முடித்து, நனைந்திருந்த ஆச்சரியத்தில் நீண்ட நேரம் வெடவெடத்திருந்தேன்.

அடுத்த நாள் இன்னும் பெரிய இன்ப அதிர்ச்சியாக... வாட்சப் வழியே குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார்.

இனிய காலை வணக்கம்.

நேத்து திருச்சியில ஒரு பள்ளியினுடைய ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தேன். ஒரு பதினஞ்சாயிரம் பேரு கூட்டம், பேரன்ஸோட சேர்த்து. அதுல நம்ம புத்தகத்தோட பெயர் சொல்லி, உங்க பெயர் சொல்லி, இந்த மாளவிகா பத்தி எழுதியிருந்தீங்களே வெடி குண்டில் கைகள் இழந்துபோன குழந்தை பத்தி, அந்த இன்சிடன்ட சொன்னேன்.

அத சொல்றதுக்கு முன்னாடி புத்தகம், பேரு, எனக்கு எப்பவுமே அந்தப் பழக்கம். படிச்சதையோ, அடுத்தவங்க கருத்தையோ நான் சொல்ற மாதிரி சொல்ல மாட்டேன், பேரு சொல்லிதான் சொல்வேன். பேரு தெரியலீனா படிச்சே... ஞாபகம் இல்லைனு சொல்லிருவேன். உங்ககிட்ட பேசுனதுங்கிறதால ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுனு குறிப்பிட்டுச் சொன்னேன். மிகப்பெரிய வரவேற்ப பெற்றுச்சு. கல்வியினுடைய முக்கியத்துவத்தை சொல்றப்ப அது சொல்ல வேண்டிய சூழல் கரெக்டா அமைஞ்சுது. நான் அத பதிவு பண்ணேன். அந்த விசயத்தை எல்லாருமே ரொம்ப பாராட்டுனாங்க.

நான் புத்தகத்த சொன்னேன், எல்லாருமே வாங்கிப் படிங்கனு...

நன்றிணே...

இந்த நாள் சிறப்பா அமையட்டும்.

*

அவருக்கு நன்றி பகிர்ந்ததோடு #வேட்கையோடு_விளையாடு புத்தகத்தோடு ஒரு நிழற்படம் அனுப்பினால் மகிழ்வேன் என வேண்டினேன். தயங்காமல் அனுப்பி வைத்தார்.



பேரன்பும் நன்றிகளும் மகேஷ் அவர்களே... ஸாரி ஈரோடு மகேஷ் அவர்களே! 

புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் நான் எப்போதும் ஒரு வசதியான குறுகிய வட்டத்திற்குள் நிற்பவன். அதை உடைக்க வேண்டும், கைகளை நீட்ட வேண்டும் என்பதை உங்களிடமிருந்து இந்த முறை அழுத்தமாக கற்றுக்கொள்கிறேன்.

வேட்கையோடு விளையாடு உதாரணங்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதற்காகச் சொல்லவில்லை. நிகழ்கால யதார்த்தங்களை உரையில் கொண்டு வரும் உங்கள் பாங்கு எப்போதும் பிடிக்கும். சமகால படைப்புகளை நானும் பயன்படுத்துகிறேன். இனி இன்னும் கூடுதலாகப் பயன்படுத்துவேன்.

இனி எல்லோரிடமும் ஈரோடு மகேஷ் என் நண்பர் எனச் சொல்வேன் குறிப்பாக அடுத்த இலங்கைப் பயணத்தில் நீங்கள் என் நண்பர் என்பதை பேரன்பும் ப்ரியமும் சூடிச் சொல்வேன்.

வாழ்தல் அறம்.... செம்மையா வாழ்வோம் மகேஷ்.

நன்றி

Jan 15, 2020

முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு - வேட்கையோடு விளையாடு


அடுத்த புக் எப்போ? புது புக் எதும் வந்திருக்கா?” எனும் கேள்விகளைப் பலமுறை கேட்டிருந்த நிலையில்தான், வேட்கையோடு விளையாடு புத்தகம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்யும் தருணமும் வந்தது. அதையொட்டி ஆண்டு நிறைவை ஒரு தேநீர் சந்திப்போடு கடந்தால் என்ன?’ எனத் தோன்றியது. உண்மையில் அதுவொரு நன்றியறிவிப்புத் திட்டமும் கூட.



2018ல் புதிய தலைமுறை கல்வி இதழ் தொடர் எழுத வாய்ப்பளிக்க, ஒவ்வொரு வாரமும் எப்படியாவது(!) கட்டுரை கொடுத்தாக வேண்டும் எனும் நிர்பந்தத்தில் மகாராஷ்ட்ரா பயணம் சென்ற வாரம் மட்டும் கட்டுரை கொடுக்க முடியாமல் போக, தொடர்ச்சியில் ஒரு வாரம் துண்டிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அப்போதே முயற்சி செய்திருந்திருந்தால், அந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட்டிருக்கலாம். தொடர் பணிகளால் தாமதிக்க, நாட்கள் ஓடின, வாரங்கள் ஓடின... திரும்பிப் பார்த்தால் மாதங்களும் ஓடியிருந்தன. டிசம்பர் முடியும் தருவாயில், ‘இப்போதும் வெளியிடாவிட்டால், இனி எப்போது?’ எனும் கேள்வி வந்ததால், அவசர அவசரமாக புத்தகத் தயாரிப்பு நடந்து, 2019 ஜனவரி 6ம் தேதி புத்தகம் வெளியானது.

நெருக்கமான தனிப்பட்ட அனுபவங்களை, கொண்டு சேர்க்க வேண்டிய இடங்கள் குறித்த சில தெளிவுகள் இருந்ததால், சொந்தப் பதிப்பாகவே கொண்டு வர முடிவு செய்திருந்தேன். அச்சிட்ட புத்தகங்களை ஓரிரு ஆண்டுகளில் விற்றுவிட வேண்டும் என நினைத்திருக்க, முப்பது நாட்களில் 50% புத்தகங்கள், அடுத்த ஐந்து மாதத்தில் மீதி 50% புத்தகங்கள் விற்பனை என, 2019ம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது இரண்டாம் பதிப்பிற்குள் நுழைந்திருந்தது வேட்கையோடு விளையாடு. இரண்டாம் பதிப்பில் 80% தீர்ந்துள்ள நிலையில் புத்தகத்தின் ஆண்டு நிறைவு வந்தது. இந்த ஓராண்டு காலம் உடன் பயணித்தவர்களுக்கு, உதவியவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே ஆண்டு நிறைவைக் கருதினேன், ஓரளவு அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும், ஒரு புத்தகம் வெளியாவது என்பது அவ்வளவுவொன்றும் பெரிய செயல் அல்ல. அனுபவம் இருப்பின் அடுத்தடுத்து தலைப்புகளில் வெளியிட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்புறம் ஏன் ஒரு புத்தகத்தோடு நின்று கொண்டு ஆண்டு நிறைவை கணக்கு வைத்துக் கொண்டாட வேண்டும்

உண்மையில் #வேட்கையோடு_விளையாடு தொடர் முடித்த பிறகு இதுவரை பெரிதாக எதுவுமே எழுதவில்லை. எழுதியிருப்பதைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வேட்கையோடு விளையாடு ஒரு குறிப்பிட்ட இடத்தை எட்ட வேண்டும் என்பதாலும், இருப்பவற்றைத் தொகுக்கவோ, முனைந்து எழுதவோ முற்படவில்லை.

சரி... ஆண்டு நிறைவு... எதற்காக...!?

எழுதிய நான் கட்டுரைகளை எளிமையாக எடுத்துக் கொண்டிருந்தாலும், வாசித்தவர்களால் அது எடுத்துக்கொள்ளப்பட்ட விதம் வேறானது. மனதில் கனத்துக் கொண்டிருந்த அனுபவங்களை, அவ்வப்போது சில வரிகளில் சமூக வலைதளத்தில் இறக்கி வைத்துக் கொண்டிருந்த தருணத்தில், புதிய தலைமுறை கல்வி ஆசிரியர் அண்ணன் பெ.கருணாகரன் தொடராக எழுத வேண்டினார்.

சில வரிகளில் கடந்து போய்க்கொண்டிருந்த ஒன்றை முறைப்படுத்தப்பட்ட வடிவத்தில், அளவு திட்டமிட்டு எழுதுவது என்பது மனதிலிருந்து இறக்கி வைத்துவிடும் ஆசுவாசத்தை மட்டும் தந்துவிடும் செயலன்று. அதுவொரு பணி. உதாரணங்களைத் தேடிக் கோர்த்து, அவற்றை நியாயப்படுத்துவது. தானாய் வடியும் எழுத்தல்ல, செய்யும் எழுத்து. செய்யும் எழுத்தை, அதிலிருக்கும் ருசிக்காகக் கொண்டாடப்பட்டாலும், வாசமற்ற பூவின் மீது மல்லிகை வாசனையைத் தெளித்துவிட்ட மாதிரியும் சில நேரங்களில் உணர்ந்ததுண்டு. முகர்ந்து பார்க்கிறவர்களுக்கு தெரியாமல் போனாலும்கூட, தெளித்து விட்டவர்களுக்குத் தெரியும்தானே!

புத்தகம் முதலில் நட்புகளின் கை சேர்ந்தது. கதிருக்காக என வாசித்தவர்கள் மெல்ல கட்டுரைகளின் வழியே இறக்கி வைத்திருந்த என் அனுபவங்களையும், சில உதாரணங்களையும் தங்களோடு பொருத்திப் பார்க்க ஆரம்பித்தனர். அவற்றைப் பேச ஆரம்பித்தனர். அதன் வழியே, தான் கை சேரும் எல்லைகளை மெல்ல வேட்டையாடத் தொடங்கியது. தங்களுக்கான எழுத்து எனக் கருதிய நட்புகள் தன் வட்டத்தில் உள்ளோருக்கு புத்தகத்தை ஒரு பரிசுப் பொருளாக மாற்றினர். நட்புகள், அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் பரிசளிப்பதை விருப்பத்தோடு செய்தார்கள். அதன் நிமித்தமாகவே, இரண்டாம் பதிப்பில் பரிசளிப்பிற்கென இரண்டாம் பக்கம் தயாரிக்கப்பட்டது.

எட்டிய இடமெல்லாம் நேசிப்பிற்குரியதாக வேட்கையோடு விளையாடு மாறிக் கொண்டிருப்பதை உண்மையில் நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். மீள் வாசிப்பு குறித்த பகிர்வுகள் பார்வைக்கு வந்தன. குழந்தைகள் வளரும் வரை பத்திரமாக வைத்திருந்து பரிசளிப்பேன் என்ற இளம் அம்மா முதல், மூத்த வயதும் - துறை அனுபவமும் கொண்டவர் நான் முன்பே படித்திருந்தால் எங்கியோ போயிருப்பேன்!எனக் கூறியது உட்பட ஆச்சரியமான கருத்துப் பகிர்வுகள் அவ்வப்போது வந்து கொண்டேயிருந்தன. முகமறியாத சிலரின் அழைப்பு அதிர வைத்தன. முதல் கட்டுரை உள்ளிட்ட சில குறிப்பிட்ட கட்டுரைகளை வாசித்துவிட்டு, தன் பெயர் கேட்கக் கூடாது, தன் எண்ணை சேமிக்கக்கூடாது என்கின்ற நம்பிக்கை வாக்குறுதிகளோடு மனதைக் கொட்டியவர்கள் உண்டு. படிக்க முடியலைனா செத்துடுவேன்எனும் மாணவி தொடர்பான கட்டுரையை வாசித்துவிட்டு இனி குடிக்க மாட்டேன் என உறுதியளித்தவரும் உண்டு.

மிகுந்த மன நெருக்கடியில் இருக்கிறேன், மனநல ஆலோசகரைச் சந்தித்தேன். உங்களிடம் பேச முடியுமா!எனச் சொன்னவரிடம் மட்டுமே நானாக வலிந்து, ’இந்த புக் ட்ரை பண்ணிப் பாருங்களேன்என முதன்முறையாக ஒரு தீர்விற்கான வாய்ப்பாக பரிந்துரை செய்தேன். அதையும் அவர் ஒரு விற்பனை நிலையத்திலிருந்து இணையத்தின் வழியேதான் வாங்கினார். எந்தக் கட்டுரை, எந்த வரி அவருக்கான தீர்வாக இருக்குமென்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதற்கு பொருத்தமான புத்தகமும்கூட கிடையாதுதான். 150 ரூபாயில் என்ன இழந்துவிடப் போகிறார், ஒருவேளை ஏமாற்றம் தந்தால், அதையும் ஏற்றுக்கொள்வோம் என்ற நினைப்பிலேயே பரிந்துரை செய்தேன். நானே நம்ப முடியாத மாற்றங்களை அவருக்கு கட்டுரைகள் தந்திருந்தன.

இந்தப் புத்தகம் தன்னம்பிக்கை வழங்குவதாகவோ, முன்னேற்றத்திற்கான உந்துதலைத் தரும் புத்தகமாகவோ அடையாளப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். என் அனுபவங்களைத் தம் அனுபவமாகக் கருதுவோரை சற்று சிந்திக்க வைக்கவோ அல்லது சிந்தனையில் இருந்து மற்றொரு முனைக்கு இழுத்து விடவோ செய்தால் போதும் என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது. அவ்விதமாகவே பெரும்பாலும் கருதப்பட்டது.



புத்தகம் குறித்து வரும் பல்வேறு கருத்துக்களை முழுவதும் நம்பத் தொடங்கினேன். அதற்கென தனியே தொடங்கப்பட்டிருந்த வேட்கையோடு விளையாடு ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகள் யாவையும் பகிரப்பட்டன. குறிப்பாக ஜெயலலிதா காளீஸ்வரன் அவர்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏறத்தாழ, கட்டுரை அளவில் விமர்சனம் எழுதத் தொடங்கியதெல்லாம் வித்தியாசமான அனுபவம். அவற்றையே ஒரு தொகுப்பாக கொண்டுவரலாம் போல் தோன்றுகிறது.

எனக்கு நினைவு தெரிந்து, யாரிடமும் கருத்துக்களை கேட்டுப் பெற்றதில்லை. ஒரிருவரைத் தவிர, படி என யாரையும் வலியுறுத்தியதில்லை. அன்பின் நிமித்தம் மிகச் சிலருக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் பிரிக்கப்படவேயில்லை என்பதையும் அறிவேன். மிக எளிய கணக்குதான், பிரித்து படித்திருந்தால் தொடர்பு கொண்டு பேசியிருப்பார்கள்.

புத்தகம் வெளியாகி ஓராண்டினை நிறைவு செய்யும் தருணத்தில், கல்லூரி மாணவ, மாணவியர்களிடமிருந்து தொடர்ச்சியாக வரும் கருத்துகள் இன்னொரு பக்கம் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. வாழ்வின் மிகக் கடினமான தருணங்களை மிகக் குறுகிய காலத்தில் கடந்ததை ஒரே மூச்சில் நாற்பந்தைந்து நிமிடங்கள் பேசி, நிறைவாக இப்போது தனிமையின் தோழனாக வேட்கையோடு விளையாடு இருக்கிறது என முடித்தது அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த ஒரு ஆண்டில் வேட்கையோடு விளையாடு புத்தகத்திற்கென்று பிரத்யேக விமர்சனக்கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதற்கான சூழலும் அமையவில்லை. திருவையாறு நகரில் நான்கு புத்தகங்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் மட்டுமே வேட்கையோடு விளையாடு இடம் பெற்றிருந்தது. தனித்த விமர்சனக்கூட்டம், அறிமுகக்கூட்டம் என்பது குறித்து யோசனைகளும் எழவில்லை. ஆனால் நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டு நிறைவைக் கொண்டாடத் தோன்றியது.

அதற்கான எளிய அழைப்பிதழ் ஒன்று நிகழ்வு திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 48 மணி நேரம் முன்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் வாயிலாக பகிரப்பட்டது.



எவ்வளவு குறுகிய கால அவகாசம் எனினும், ஒரு நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்யலாம் எனும் தைரியத்தை ஈரோடு வாசல் அமைப்பு தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது. வேட்கையோடு விளையாடு குறித்து பேச விரும்புவோர் பெயர்கள் கேட்டிருந்தேன். ஏழு பேர் முன் வந்தனர். சிறப்பு விருந்தினர், சிறப்பு பேச்சாளர் என்று தனியே திட்டமிடவில்லை. இந்த ஏழு பேரும் விரும்பிய வண்ணம் பேசட்டும் என்பதே எண்ணம்.

அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த ஜனவரி 5ம் தேதி மாலை 5.30 மணிக்கு சரியாக நிகழ்வு துவங்கியது. நட்புகள் காதர், ப்ரவீணா, கவிஞர் கோவை சசிக்குமார், மாணவி ஸ்ரீநிதி கார்த்திகேயன், பேராசிரியர் விஜி ரவி, ஜேஸி. தென்றல் நிலவன், ராஜி ஆகியோர் புத்தகம், கட்டுரைகள் குறித்து தொகுப்பாகவும் தனித்தனி அனுபவங்களாகவும் பேசினார்கள்.

* நண்பர் காதர் மிக முக்கியமான தருணத்தில் தன் நட்பு குடும்பத்தில் மரணத் தருவாயில் இருந்தவரிடம் கொடுத்து, அவர் மகன் வாசித்து மாற்றம் கண்டிருந்ததைக் குறிப்பிட்டு பேசி, மனம் கனக்கச் செய்தார்.

* ப்ரவீணா கனமான தருணமொன்றில் புத்தகம் பேசும் குறிப்பிட்ட ஒரு விசயத்தை தான் உண்மையில் உணர்ந்து கடந்து வந்தது குறித்து பேசினார்.

* கவிஞர் சசிக்குமார் புத்தகம் குறித்து சுமார் பத்து நிமிடங்கள் பேசுவதற்காக கோவையிலிருந்து வந்திருந்தார். இத்தனைக்கும் நாங்கள் இதற்கு முன்பு சந்தித்ததுகூட இல்லை. சில மாதங்களுக்கு முன்பு புத்தகம் கிடைக்கப் பெற்றிருந்தவர், அதை வாசித்துவிட்டு என்னிடம் பேசியிருந்தார். இந்த நிகழ்விற்காக பயணித்து வந்து நெகிழச் செய்தார். புத்தகம் குறித்த தம் கருத்துக்களை மிக அழகாக எடுத்து வைத்தார்.

* ஸ்ரீநிதி கார்த்திகேயன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. சமீபத்தில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் திடீரென என்னைச் சந்தித்து சில கேள்விகளால் அதிர வைத்தவர். மிக முக்கியமான ஒரு கேள்விக்கு என்னோடு இருந்த நண்பரும் பள்ளி முதல்வருமான சுரேஷ்குமார் அவர்களைக் கோர்த்துவிட்டு தப்பித்ததெல்லாம் வேறு கதை. அதன்பிறகுதான் ஸ்ரீநிதி நண்பர் கார்த்திகேயன் அவர்களின் மகள் எனத் தெரிய வந்தது. இந்த நிகழ்வில் அவரும் பேச விருப்பம் தெரிவித்து, மிக அழகாகவும் பேசினார். தம் வயதில் இருப்போருக்கு புரியும்படி சொற்களை எளிமைப்படுத்தி எழுதவும் எனும் வேண்டுகோளையும் வைத்தார்.

* பேராசிரியர் விஜி ரவி வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தம் வகுப்புகளில் கட்டுரைகளில் இருக்கும் உதாரணங்களைக் கொண்டு சேர்ந்ததைப் பகிர்ந்தார். அவருடைய துறையில் பயிலும் இரண்டு பேர் என்னிடம் நட்பு பாராட்டவும் காரணமாக இருப்பவர்.

* ஏற்கனவே ஐந்து பேர் புத்தகத்தை தலைகீழாகப் புரட்டியிருந்த நிலையில், தான் நினைத்த பலவற்றையும் சுட்டிக்காட்டிவிட்டார்களே என்றபடி திருச்செங்கோட்டிலிருந்து வந்திருந்த நண்பர் தென்றல் நிலவன் புத்தகம் குறித்துப் பேசினார்.

* இறுதியாக ராஜி தன்னுடைய சமீபத்திய உரை நிகழ்வுகளுக்கு புத்தகம் தூண்டுதலாக இருப்பதைச் சுட்டிப் பேசினார்.



பட்டியலில் இருந்த பேச்சாளர்கள் முடித்ததும், நிகழ்விற்கு வந்திருந்தவர்களில் விருப்பம் இருந்தவர்கள் பேசத் தொடங்கினர்.

* தம் மகனின் தூண்டுதலால் #வேட்கையோடு_விளையாடு புத்தகங்களை தம் நட்புகளுக்கு பரிசளித்ததாக ஜனார்த்தன சேனாபதி கூறினார்.

* நண்பர் சதீஷ், ஆசிரியர் ரவி முத்து ஆகியோர் என்னோடு கொண்டிருந்த நட்பைச் சுட்டிப் பேசினார்கள்.

* கருங்கல்பாளையம் நூலகர் ஷர்மிளா அவர்கள், புதிய தலைமுறை கல்வி இதழில் வெளியான காலத்தில் வாசித்த நினைவுகளைப் பகிர்ந்தார்.

* கொங்கு கலை அறிவியல் கல்லூரி முன்னாள் தாளாளர் திரு.இளங்கோ அவர்கள் கல்லூரி ஆசியர்கள் அனைவருக்கும் பரிசளித்தது குறித்தும், அணிந்துரை வழங்கியது குறித்தும், புத்தகத்துடனான தமது நெருக்கமான பிணைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்.

* தொடர்ந்து தம் மாணவர்களுக்கு புத்தகத்தைப் பரிசாக வழங்கிவரும் ஜப்பானிய மொழி பயிற்றுவிக்கும் பயிற்சி மைய நிர்வாகி தம்பி குமார், புத்தகத்தை பரிசளிப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

* நண்பர் ஜேஸி. நந்தகுமார் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரும் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

* நிறைவாக நண்பர் ஆரூரன் அவர்கள் ஆழமானதொரு நிறைவுரை வழங்கினார்.

* அண்ணன் மருத்துவர் சோமு அவர்கள் பாடல் ஒன்றை பாடி மகிழ்வித்தார்.

* நிகழ்விற்கு முன்னதாக முதல் அன்பாக, சிங்கப்பூரில் இருக்கும் முத்துக்குமார்-ஜெயசுதா தம்பதியினரின் மகள் ஜீவந்திகா காணொளியில் பேசிப் பகிர்ந்திருந்தார். சிங்கப்பூர் தமிழில் அழகியதொரு அங்கீகாரம் அது.

முதலாம் ஆண்டு நிறைவினைக் கொண்டாட அரங்கு அளித்ததோடு நிகழ்வின் சிறப்பிற்கு பெரிதும் காரணமாக அமைந்த நூலகர் திருமதி ஷீலா மாரப்பன் அவர்களும், நூலகப் பணியாளர்களுக்கும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.

ஒரு புத்தகத்திற்கு எதற்கு ஆண்டு விழா எனும் கேள்விகளுக்கெல்லாம், நிகழ்வின் மகிழ்வில் பதில் கிட்டியதாய் மனது நிரம்பியிருக்க, அடுத்த அன்புப்புயல் ஈரோடு வாசல் குழுமத்தில் துவங்கியது. வாசல் வாசிக்கிறது எனும் வெற்றிகரமான திட்டம் எங்களிடம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் திட்டத்தில் 2019ம் ஆண்டு முழுக்க ஏறத்தாழ 40-50 பேர் தலா 30-50 புத்தகங்கள் வரை வாசித்து, வாசித்த புத்தகம் குறித்து ஒவ்வொரு வாரமும் தம் கருத்தை குரல் பதிவாக பகிர்ந்து வருகின்றனர். அதே பாணியில் வேட்கையோடு விளையாடு குறித்து சிறப்பு பகிர்வொன்றினை பகிருமாறு மலர் செல்வம் அவர்கள் கேட்க, பகிரப்பட்ட சில கனமாக பதிவுகள் நிறைய யோசிக்க வைத்தன.

* வாசல் குழுமத்தில் அப்துல் ஹக்கீம் புத்தகம் குறித்து பாராட்டு சாசனம் வாசித்தார்.

* அதைத் தொடர்ந்து சகோதரி யசோதா அவர்கள் தன்னை யோசிக்க வைத்த புத்தகத்தின் மிக முக்கியப் புள்ளியைப் பகிர்ந்திருந்தார்.

* நண்பர் சக்திவேல் அவர்கள் முதல் கட்டுரையில் நெகிழ்ந்ததைப் பகிர்ந்தார். கூடுதல் சிறப்பாய் 143 பக்கம் என்பதை பேரன்பின் அடையாளமாய் குறிப்பிட்டிருந்தது அழகியல்.

* மஞ்சு கண்ணன் புத்தகத்தில் இருந்து, தன்னை தேடத் தொடங்கியிருப்பதையும், முன்பே கிடைக்கவில்லை எனும் ஏக்கத்தையும் பகிர்ந்தார்.

* பேராசியர் அன்புமணி அவர்கள் தம் தாளாளர் வழியே புத்தகம் தன்னை வந்தடைந்தது தொடங்கி, நட்பாகி இன்று வாசலில் இணைந்தது வரையிலான பயணத்தை குறிப்பிட்டார். மிக ஆச்சரியமானது புத்தகத்தில் இடம் பெற்றிருந்தவர்களை கூகுளில் தேடி முகம் பார்த்தது.

* தம்பி கோடீஸ்வரனின் விமர்சனப் பார்வை எனக்குப் பிடித்திருந்தது. கட்டுரையின் பாத்திரங்கள் எதை நோக்கிப் போகிறது என்பதைத் தேடிக் களைத்து, ஒருகட்டத்தில் நத்தை உதாரணத்தின் வழியே உள்நுழைந்து பின்னும் முன்னும் பயணித்ததை தெளிவாக பகிர்ந்திருந்தார்.

* நிகழ்விலும் பிறகு இங்கும் ஈரோடு காதர் அவர்கள் பகிர்ந்த, புத்தகத்தால் நண்பர்கள் இருவருக்கு ஏற்பட்ட அனுபவம் மிகுந்த நெகிழ்வாக இருந்தது.

* வாசலில் இந்த பகிர்வுகளுக்கு முன்னெடுத்ததோடு, தனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து மலர் செல்வம் அவர்கள் பகிர்ந்ததை ஆச்சரியம் பதிந்த மனதோடு கேட்க முடிந்தது. ஒரு காலத்தில் அவருடைய உரை கேட்க தேடிப் பயணித்தது நினைவிற்கு வந்து போகின்றது.

* புத்தக வெளியீடு அன்று கட்டுரையில் இருக்கும் தமது மாணவியுடனான வாசிப்பு அனுபவம் குறித்துப் பேசி நெகிழ வைத்திருந்த தாளாளர் உமா சிவக்குமார் அவர்கள், மீள் வாசிப்பிற்கான புத்தகமாக இதைத் தொடர்ந்து கருதுவதாகக் கூறியதை பெருமைக்குரியதாக கருதுகிறேன்.

* தம்பி தனபால், இந்த புத்தகம் சேர்ந்திருந்த இடங்கள் குறித்து பேசியதோடு, சேர வேண்டிய இடங்கள் குறித்துப் பேசியது யோசிக்க வைத்திருக்கின்றது. விரைவில் அதற்கான ஒரு திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறேன்.

நிறைவாக...
அலையலையாய் வந்து மோதும் மற்றும் சூழும் பாராட்டுகள் அனைத்தும் மொத்தமாக என்னை மட்டுமே சாருமா...!? நிச்சயம் கிடையாது!
ஒரு பக்கத்தில் குவிந்து கிடந்த உண்மைகள், உதாரணங்கள், அனுபவங்கள் மற்றும் பார்த்தது , கேட்டது, உணர்ந்தது என என் கை சேர்ந்ததை குறிப்பிட்ட அந்த ஆறு மாத காலத்திற்குள் சொற்களால் சூடி இறக்கி வைத்ததைத் தவிர, வேறொன்றும் நான் பெரிதாக செய்துவிடவில்லை. ஒருவகையில் அந்தக் கட்டுரைகள் எனக்கான விடுதலைக் களம்.

கட்டுரைகள் குறித்த பாராட்டுகள் அனைத்தும், அந்தக் கட்டுரைகளுக்குள் இருக்கும் உண்மை உதாரணங்களின் தலையில் கை வைத்து தடவி வாழ்த்துவதாக மட்டுமே பகிர்வோரின் அருகில் நின்று நானும் ப்ரியமாய் கருதிக் கொள்கிறேன். மிக முக்கியமாக அந்தக் கட்டுரைகளில் அடையாளம் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவன நிர்வாகிகள் மற்றும் உதாரணங்களில் உயர்ந்தோங்கி நிற்கும் பல ஆளுமைகள், சாதனையாளர்கள் அனைவருக்கும் பங்குண்டு. மிக முக்கியமாக என்னை எழுத வைத்த புதிய தலைமுறை கல்வி இதழுக்கும் பங்குண்டு.

அனைவரின் அன்பிற்கும் தலை வணங்குகிறேன். கண்ணாடி போல் நின்று, நிகரான ப்ரியம் தோய்ந்த அன்பை பிரதிபலிக்கவே விரும்புகிறேன். தொடர்ந்து பயணிப்போம்.

*



Dec 31, 2019

கே.ஜி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோபி - ஆண்டு விழா

இந்த ஆண்டின் நிறைவுக்கூட்டம், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அடுத்த ஆண்டின் முதல் கூட்டமாகவும் இதை பட்டியலில் இணைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

இதே டிசம்பர்-28ல் முதன்முறையாக பொதுத் தேர்வு மாணவர்களுக்கான பயிற்சியாளராக 2016ல் களம் இறங்கினேன். அதே டிசம்பர்-28ல்தான் 2017ல் இந்தப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராகப் பேசினேன். இந்த ஆண்டு அதே டிசம்பர்-28, அதே பள்ளியில் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன்.



கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆறு அமர்வுகளில் ஏறத்தாழ 50 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சியளித்த நிலையில், ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டபோது தயக்கமும், தடுமாற்றமும் இருந்தது. எனவே ஆண்டு விழாவில் பெற்றோர்களை என் இலக்காக வைத்துக் கொண்டேன்.



உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளி, திருவிழாவிற்கு வந்தது போன்ற மனநிலையில் குவிந்திருந்த கூட்டம் வித்தியாசமான அனுபவமே. மதியம் (Atal Tinkering Lab) ஆய்வகத்தை திறந்து வைத்தது முதல் பின்னிரவு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்வரை முழுவதும் பங்கெடுத்திருந்தேன். மாணவ, மாணவிகள் பலருடன் உரையாடும் வாய்ப்பும் அமைந்தது.

*

கோவையில் உயர்கல்வி பயின்று வரும், பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தாளாளரின் வழியாக என்னிடம் பேச வேண்டும் என வந்தார். #வேட்கையோடு_விளையாடு தொகுப்பின் வாசகி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். தமது ஏழு ஆண்டு கால கல்வி வாழ்க்கை குறித்து ஒரு சொல் தடுமாற்றமின்றி ஏறத்தாழ 40 நிமிடங்கள் பகிர்ந்துகொண்டார். அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிறைந்த மிகக் கனமான, சவாலான வாழ்க்கை. காலம் விடுத்த சவால்களை அந்தந்தப் புள்ளியில் வென்றெடுத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியால் படிக்க வைக்க முடியாது என்று கூறிய தந்தையை எதிர்த்து சண்டையிட்டு தமது கல்வியைத் தொடர்ந்திருக்கிறார். காலம் கடந்திருந்தாலும், அப்படி சண்டையிட்டது தவறோ எனும் குற்ற உணர்வு மட்டும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது.

சமூகத்தில் நல்ல அறிமுகத்தோடு இருக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த மகன், திடீரென விவசாயம் செய்கிறேன் என சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அப்பா மனம் ஒப்பாமல், அந்த முடிவை குறையாகக் கருதி ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்கிறார்.

உரையின் மையம், பிள்ளைகள் தாம் உருவாக்கிய சிறகுகளின் துணையோடு அவர்கள் விரும்பிய எல்லை வரை பறக்க அனுமதியுங்கள் என்பதும், பெற்றோர்களிடம் நல்ல கல்விக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சண்டையிடுங்கள் என்பதுவும்தான்.

அந்த மாணவி “பயங்கர குற்றவுணர்ச்சில இருந்தேன். இப்ப புரியவச்சிட்டீங்க தேவையானதுக்குத்தான் சண்ட போட்ருக்கேன். தப்பில்ல!” என்றும், அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் “அது பையனோட வாழ்க்கைங்க, அவன் விரும்பினதைத்தான் செய்துக்கட்டுமே, இனிமே அவனுக்கு சப்போர்ட் பண்ணப்போறேன்” என்றும் கூறியதே இந்த ஆண்டின் நிறைவில் எனக்குக் கிடைத்த பெரும் பரிசு என்பேன்.

22 வயதாகும் மகளுக்கு ‘கல்யாணம் பண்ணி வச்சுடுறேன் அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோ!’ என வற்புறுத்திக் கொண்டேயிருந்த ஒரு தாய், “இனி கல்யாணம்னு கட்டாயப்படுத்தப் போறதில்லை, மக விரும்பினதை படிச்சுட்டு வரட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்” என்றார்.

*



இந்த மாதிரி அனுபவங்களே என்னை #வேட்கையோடு_விளையாடு தொகுப்பு எழுத வைத்தது. கேஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் இரண்டு பேர் தொகுப்பின் இரண்டு கட்டுரைகளின் நாயகிகள் என்பது, அன்று வரை எனக்கும், நிர்வாகத்திற்கும், அந்த மாணவிகளுக்கும், புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட சிலருக்கும் மட்டுமே தெரியும். ஆண்டு விழா உரையில் அவர்களின் பெயர், அடையாளத்தைத் தெரிவிக்காமல் அவர்களையே உதாரணமாகக் காட்டிப் பேசினேன்.

கலை நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் மலர்ந்த முகத்தோடு “சார்.... நா......” என்று தன் பெயர் சொன்னபோது ஒருகணம் சிலிர்த்துப் போனேன். 2018ம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வகையில் கலங்கடித்தவள். இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கூட்டங்களில் அந்தப் பெண்ணை உதாரணமாக முன்னிறுத்திப் பேசியிருக்கிறேன். குட்டி உருவமும், கூர்மையான கண்கள் மட்டுமே நினைவில் இருந்தன. முகம், நிறம், அடையாளம் என எதுவும் நினைவில் இல்லை. வேறு எங்கேனும் சந்தித்திருந்தாலும் எனக்கு அடையாளம் தெரிந்திருக்க சாத்தியமில்லை. ஆயிரக்கணக்கானோர் இருந்த அந்த கூட்டத்தில் அந்த மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரும் இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு கலவையான ஒரு மனநிலையைக் கொடுத்தது.

புதிய தலைமுறையில் தொடராக எழுதியபோது, தொகுப்பாக வெளியான பிறகு என அந்தப் பெண் வாசித்திருந்தாலும், நாங்கள் இப்போதுதான் பேசுகிறோம், சந்திக்கிறோம். இருவருக்கும் இடையே இருந்த பரவசத்திற்கு நிகராக, ஒருவித கனமும் ஒளிந்திருந்தது. என்னை எளிதாக்குவது போல், “எங்க காலேஜ் சிலபஸ்ல உங்க கவிதை இருக்கு சார், அதில் கவிஞர்னு உங்களைப் பத்தி அறிமுகப்படுத்தும்போது, எனக்குத் தெரியும், என்னைப் பத்தியும் எழுதியிருக்கார்னு பெருமையா இருக்கும் சார்” என்றாள். என் குடும்பத்தை அறிமுகப்படுத்தி, செல்ஃபி எடுத்துக் கொண்டு, எண் கொடுத்து தொடர்பில் இரு எனச் சொல்லி விடை பெற்றேன்.

*

இந்த ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராக, ஈரோடு வாசலில் இருந்து மூன்றாவது கல்வி விளையாட்டு விழா வாய்ப்பாக பாலமுரளி பங்கெடுத்ததுவும் மகிழ்ச்சிக்குரியது.



அருமையான தருணத்தை வழங்கிய பள்ளியின் செயலர் திரு.சிவக்குமார், தாளாளர் திருமதி. உமா சிவக்குமார், என் மனைவியிடம் திருஷ்டி சுத்திப் போடுங்க என வாழ்த்திய நிறுவனத் தலைவர் திரு. வி.கே.சின்னசாமி மற்றும் நட்பிற்குரிய பள்ளியின் அனைத்து ஆசிரியத் தோழமைகளும் மிகுந்த அன்பிற்குரியவர்கள்.

2017ல் அறிமுகப்படுத்தியதோடு, இந்த ஆண்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் வெற்றிவேல், ஈரோடு வாசலில் இருந்து நிகழ்வில் பங்கெடுத்த தாளவாடி கேசிடி பள்ளி தாளாளர் முதல்வர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், சாஹர் மேல் நிலைப்பள்ளி முதல்வர் திருமதி ராதா மனோகரன், தம்பி மூர்த்தி மற்றும் முதன்முறையாக பங்கெடுத்த என் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...