உதிர்ந்து கொண்டே இருக்கிறது, உறவுகளுக்கிடையே பூசப்பட்டிருந்த பாச வர்ணம். அது ஒரு காலம், மோட்டார் ரூம் மேல் போடப்பட்டிருக்கும் டியூட் லைட் பைப் மேல் அவ்வப்போது அமரும் காகத்தில் ஏதோ ஒன்று கத்தினால் போதும், ”காக்கா கத்தியிருச்சு, ஒறம்பரை வருமாட்ருக்குதே” என யாராவது சொல்வது, பெரும்பாலும் நடந்தேறியிருக்கிறது. காகம் கரைந்து உறவினர் வரும் நாட்கள், காகத்தின் ஒரு வெற்றியாய் திரும்பத் திரும்பப் பேசப்படும். அப்படி காகம் கரைந்தும் உறவினர் எவரும் வராதது தோல்வியடைந்த நாட்களாகவே தோன்றும். காக்கைக்கு ஏற்பட்ட தோல்வி ஆச்சரியமாய் காக்கைக்கு ஒரு போதும் சோர்வைத் தந்துவிடுவதில்லை.
தொலைபேசி என்ற ஒரு கருமத்தை கண்டிராத நாட்கள் அவை. யார் எப்போது வருவார்களெனத் தெரியாத சுவாரசியம் நிறைந்த நாட்கள். காக்கை கரைந்த நாட்களில், கண்ணி வாய்க்கால் நிறுத்தத்திலிருந்து நீளும் தோட்டத்து வரப்புகளை அடிக்கடி கண்கள் சுகித்துக் கொண்டிருக்கும். காக்கைகள் வெற்றி பெறும் தினங்களில் வயல்வெளிகளில் இருக்கும் அம்மாவோ பாட்டியோ, ”அதா பாரு வர்றாங்க” எனும் குரலையொட்டி கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் உருவத்தை வைத்து வருவது ”இவுங்க” “இல்ல அவுங்க” என ஒரு வித பந்தய மனநிலை கோலோச்சும்.
பக்கத்துத் தோட்டத்து எல்லையோரம் இருக்கும் பள்ளத்து ஓரம் வரை ஓடிச்சென்று அழைத்து வர ஓடுவதில் போட்டியும் நிகழும். ஓடிச் சென்று பார்க்க, அவர்கள் வேறெங்கோ செல்பவர்களாய், உறவினர்களாய் இல்லாமல் போகும் கொடுமையும் நடக்கும். அந்த நேரத்தில் துளிர்க்கும் இயலாமை, கோபம், எரிச்சலை அப்படியே பள்ளத்தில் கரைத்து கருமாதி செய்துவிட்டுத்தான் வரவேண்டும்.
உறவினர்கள் வருகையில் குதூகலமூட்டுபவை அவர்கள் வாங்கிவரும் பலகாரமும் பன்னும், விதவிதமான தொனிகளில் இடைவிடாது விழும் அவர்கள் வீட்டுக் கதைகளும். வந்த எவரும் வந்த வேகத்தில் திரும்பியதாக நினைவில்லை. வந்த உறவு ஊருக்குத் திரும்பும் போது, கைகளில் திணிக்கப்படும் நாணயங்களில் உண்டியல்கள் அவ்வப்போது பசியாறும்.
கால ஓட்டத்தில் மோட்டார் சைக்கிள் பரவலான பிறகு, கண்ணி வாய்க்கால் பக்கம் இருந்த கண்கள், தெற்குப்புறமாய் இருக்கும் வண்டிப்பாதையில் பதிய ஆரம்பித்ததோடு காதுகளையும் தீட்டி காத்திருக்க வைத்தது. எப்போதாவது எழும்பும் வண்டியின் ”டுபு டுபு” சத்தத்திற்கேற்ப மனசு தடதடக்க ஆரம்பிக்கும். வண்டியில் வரும் உறவுக்காரர்களின் வருகையும் கூட எப்படியோ காகம் சொன்ன சோசியத்தின் பலனாகவே பலமுறை இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திற்கு சற்று முன்னர் உள்ளடங்கியிருந்த தோட்டத்திற்கும் தொலைபேசி இணைப்பு வந்ததன் தொடர்ச்சியாய், உறவினர் வருகையின் மேலிருந்த சுவாரசியமும் தொலை தூரத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டது.
விஞ்ஞானம் எல்லாவற்றையும் தந்தது, அதையொட்டிய தேவைப் பிசாசு எல்லாவற்றையும் கலைத்து, பிரித்துப் போட்டது. வெட்டி விட்ட நொங்குக் குலை சிதறியோடுவது போல் குடும்பமும் திசைக்கொருவராய். ஏதோ ஒரு சமாதானம் எல்லாவற்றையும் அனுசரித்துக் கொண்டு பிரிந்து கிடக்க அனுமதிக்கிறது. ஒன்றா இரண்டா, கிட்டத்தட்ட உறவினர்களின் எல்லா வீடுகளிலும் இது போலவே எப்படியோ நடந்தது.
விருந்துகளுக்கு நேரில் போய் அழைக்கும் சாக்கில், உறவினர்கள் வீடுகளுக்கு அவசரகதியாய் ஒரு முறை சுற்றி வரும் முறையும் ”இனிமே நாங்களும் போன் போட்டு சொல்லிர்றோம், நீங்களும் போன் போட்டுச் சொல்லீருங்க, வந்து போயிக்கலாம்” என்ற ஒற்றைச் சமரசத்தில் குத்துயிரும் குலையுயிருமாய்.
காலம் கடந்த தலைமுறை உள்ளடங்கிய அதே கிராமத்தில், நடுத்தர வயதினர் அருகிலிருக்கும் சிறு நகரத்தில், இளம் தலைமுறையினர் பெரு நகரங்களில் என குடும்பமே உறவினர்களாய் சிதைந்து கிடக்கும் நவீன யுகத்தில், இனி குடும்பத்தை ஒன்றிணைக்கவே கத்திக் கத்தி ஓய்ந்து போக வேண்டியிருக்கும் காக்கை கூட்டங்கள்.
அவ்வப்போது உறவினன் போல் போகும் நான், ஏனோ இந்த முறை கவனித்தேன், அழகாய் சுத்தமாய் இருக்கிறது அதே இடத்தில் இடித்துக் கட்டப்பட்ட மோட்டார் ரூம், முன்பு போலவே டியூப் லைட் பைப்பும் இருக்கிறது. ”இப்பவும் காக்கா கத்துதா?” என்று நாக்கின் நுனி வரை வந்த கேள்வியை அப்படியே விழுங்கினேன்.
தோற்கடிப்பது மனிதர்கள்தான் எனத் தெரியாமல் தோற்றுப் போகும் காக்கைகள் பாவம் தானே!!??
-0-