காத்திருத்தல்






வெளுத்த வானம் சுமக்கும் மௌனம்
பசி கொண்ட மிருகமாய் வறட்சி
நம்பிக்கை நூலில் சிக்குண்டு
நகரும் நாட்களோடு விவசாயி...


-0-


டைவிடாத அடைமழை
வற்றிப்போன வாடிக்கையாளன் வருகை
திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...

-0-


காற்றில் வரும் சாம்பார் வாசம்
களித்துச் சிரிக்கிறது விழித்த பசி
மீந்து போன உணவுகளோடு விழும்
எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...

-0- 


-------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------

தொடரும் மீறல்கள்


தவறுகள் நிகழ்வதற்கான முக்கிய காரணமாக இருப்பது அதனை ஒட்டிய தேவையா? அல்லது எளிதாக கிடைக்கும் வாய்ப்புகளா?

மேலோட்டமாக பார்க்கும் போது, தேவை என்பதாக தோன்றினாலும், பெரும்பாலும் வாய்ப்புகள்தான் தவறுகளை ஊக்குவிக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

சிக்னல்களில், ஒரு வழிப் பாதையின் நுழைவுகளில் நிற்கும் போக்குவரத்துக் காவலருக்கு பயந்து போய்த்தான் விதிமுறைகளை பெரும்பாலும் கடைப் பிடிக்கிறோம். எவ்வளவு அவசரமாக இருப்பினும் காவலர் நிற்கும் போது, பிடிபட்டு விடுவோம் எனப் பயந்துதான் அதை மீற மறுக்கிறோம். அப்படி மீற மறுக்கும் சிக்னல்களில், நுழைய மறுக்கும் ஒரு வழிப்பாதைகளில், போக்குவரத்துக் காவலர் இல்லாத போது, யாரோ ஒருவர் கடக்கும் போது அவரைப் பின் தொடர்ந்தோ அல்லது நாமாகவோ சீக்கிரம் கடந்து விடலாம் என்று போவது, ஒரு போதும் மனதில் குற்ற உணர்வாகத் தோன்றுவதேயில்லை.

வாங்கும் சம்பளம் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு போத வில்லையென்ற காரணத்திற்காக ஒருவர் லஞ்சம் வாங்குவதாக தெரியவில்லை. தான் அதிகாரமிக்கவர் என்ற காரணத்தினாலும், லஞ்சம் கேட்டால் கொடுப்பதற்கு மனிதர்களும் இருப்பதாலேயே, நிறைய சம்பாதித்தாலும் இன்னும் முறை தவறிய வகையில் சம்பாதிக்க எளிதான வாய்ப்பாக, தான் வகிக்கும் பதவி அமைவதாலும், ஒரு மனிதன் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் சர்வ சாதாரணமாக லஞ்சம் பெறுகிறான்.

சிக்னலை மதிக்காமல் கடந்து அல்லது ஒரு வழிப்பாதையில் திடீரென புகுந்து இன்னொரு வாகன ஓட்டியை நிலைகுலையச் செய்பவன் என்றுமே அதற்காக பெரிதாக வருத்தப் படுவதில்லை.

இன்னொருவனின் வயிற்றில் நூதனமான முறையில் அடித்துப் பிடுங்கப்பட்ட பணம் என்றாலும், அதற்காக ஒருபோதும் அவன் வருத்தப்படுவதில்லை.

"என்ன நான் மட்டுமா இப்படிச் செய்கிறேன். எல்லோரும் தானே இப்படிச் செய்கிறார்கள். அவர்கள் நிறுத்தட்டும் அப்புறம் வேண்டுமானால் நானும் நிறுத்துகிறேன்" என்ற சொத்தைச் சமாதானம் மிக எளிதாக எல்லோரிடமும் விரவிக்கிடக்கிறது.

சிக்னலை முறை தவறித் தாண்டி பிடிபடும் போது, ஒரு வழிப் பாதையின் பாதியிலோ பிடிபடும் போது அல்லது லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபடும் போது மட்டுமே தான் செய்த காரியம் தவறு என்று உரைக்கிறது.

மாட்டுவதற்கு முந்தைய நிமிடம் வரை தவறில்லை என்று நினைத்திருந்த ஒரு செயல், மாட்டிக்கொள்ளும் விநாடியிலிருந்து தவறு என்று புதிய பரிணாமம் கொள்கிறது.

தேவை என்பதையும் தாண்டி, எளிதாக கிடைக்கும் வாய்ப்பும், அதனால் எந்த தண்டனையும் கிடைத்துவிடாது என்ற புத்திக்கூர்மையின் அடிப்படையில் எழும் அசட்டு நம்பிக்கையும் தான் தவறுகள் தோன்றுவதற்கு பெரும்பாலும் காரணங்களாக இருக்கின்றன.


சரி இதற்கான தீர்வு...

சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும் என்ற ஒரு கூற்று. சில கோணங்களில் இது சரியாக இருந்தாலும். சட்டங்கள் என்பது மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்தப் பட்ட ஒன்று. மனிதனால் உருவாக்கி மனிதனால் கையாளப்படுவதால் சட்டம் சில நேரங்களில் இளகத்தான் செய்கிறது.

பிடிபட்டு விட்டால் மட்டும் அது தவறு, பிடிபடாதவரை அது தவறாக இருப்பதில்லை என்ற முரண்பட்ட மனோநிலை சிதைந்து, இன்னொரு மனிதனை ஏதோ ஒரு வகையில் பாதிக்கச் செய்கிற எல்லாமே அடிப்படையில் தவறானது என்ற எண்ணம் வலுவாக வரவேண்டும். அந்த எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒழுக்கமாக உருவெடுக்கும் வரை, மீறல்கள் தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.






-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

என்ன நல்லதைக் கொடுத்துவிட முடிந்தது

வீராவேசமான விமர்சனம்
இரத்த வாடை சுமக்கும் இசம்
தட்டி வளர்க்கப்படும் சாதி வெறியால்
என்ன நல்லதைக் கொடுத்துவிட முடிந்தது
வெற்று வெறியூட்டலைத் தவிர்த்து


பசி வயிற்றைக் கிள்ளுகிறவனுக்கு
நோய் உடலை உருக்குபவனுக்கு
சாதியும் இல்லை, இசமும் இல்லை
தர்க்கமும் இல்லை, தாக்குதலும் இல்லை
அவனைப்போல் இன்னொருவனும் இல்லை...

சாலையோரம் குப்பையாய் கிடக்கும்
மனநிலை பிறழ்ந்த மனித மூட்டை

எரியும் தார் சாலையில் செருப்பில்லாமல்
கருகும் அழுக்குச் சட்டைக் குழந்தை

கடமையைச் செய்ய காசு பிடுங்கும்
சில கேடுகெட்ட அதிகாரம் படைத்தவன்

என்னைச் சுற்றி இரவு உணவு இல்லாமல்
படுக்கைக்கு செல்லும் பாவப்பட்டவர்கள்

எல்லா இசத்திலும், சாதியிலும்
இருக்கத்தானே செய்கிறார்கள்

எதையோ பிடுங்கிக் கத்தை கட்டிட
இதில் நீயென்ன நானென்ன பெரிசு

வெள்ளைக்காரன் போடும் சட்டைக்கு
சேர்த்த சாயம் ஊறியதில் செத்துப்போனது
எந்தச் சாதிக்காரனுக்கான தண்ணீர் என்பதற்கு
எவரும் சண்டை போடவில்லை


சுழலும் நாற்காலியில் குளிரும் அறையில்
வார்த்தை வசப்படும் சிலருக்கு
முப்பத்தி சொச்ச பொத்தான்களின் மூலம்
விமர்சனங்களால், இசங்களால்
செத்துக் கொண்டிருக்கும் சாதிகளால்
தேடலோடு படிக்க வருபவனுக்கு
தேவையில்லாததைத் திணிக்க முடிகிறது


ஒன்று மட்டும் புரிகிறது
தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்




-------------------------------------------------------------------------


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

தே.மு.தே.பி

அவன்...

தேர்தலுக்கு முன்...
சீறிமறையும் வாகனத்தின் சக்கரங்களில்
சிதறிப் படியும் புழுதியில் வாக்குறுதிகளை
வரைந்து வைத்து விட்டுப்போனான்

தேர்தலுக்குப் பின்...
பறவையின் எச்சத்தில் விழுந்த விதையில்
விளைந்த மரத்தின் நிழலில்
வேட்டைக்காரனாய் ஓய்வெடுக்கிறான்






இவன்...

தேர்தலுக்கு முன்...
காந்தி நோட்டு குவாட்டர் கோழி பிரியாணி
நேர்ந்து விட்டான் தாடி மீசை தலைமுடியை
தலைவனின் கட்சி ஜெயிக்க...

தேர்தலுக்குப் பின்...
பொய்த்த பருவமழை காய்ந்தது காடும் கனவும்
நேர்ந்து விடுகிறான் இரட்டைச்சேவலை
ஆட்சியைத் தொலைத்து தேர்தல் கொண்டுவர





-------------------------------------------------------------------------
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

அக்கரைப் பச்சை

பிரியா காலையிலிருந்தே கொஞ்சம் பரபரப்பாக இருந்தாள். பள்ளிக்கு செல்லும் 11 வயது மகனிடம் வழக்கத்திற்கும் மீறி பாசம் வழிந்தது. காலை நேரப் பரபரப்பில் கணவனிடம் கூட எந்தச் சிடுசிடுப்பும் இல்லை. 34வது வயதில் இது தேவைதானா? சரிதானா? என்று லேசான அயற்சி கூட இருந்தது. ஆனாலும் மனதில் குறுகுறுப்பு கொஞ்சம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மதியம் சந்தித்தே ஆக வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். சந்திக்க மறுக்க முடியவில்லை என்பதை விட மறுக்க விரும்பவில்லை.

அது சென்னையின் பிரபல மருந்து விற்பனை செய்யும் நிறுவனம், பிரியாவுக்கு கணக்கியல் பிரிவில் முக்கியப் பொறுப்பு. இந்த தீபாவளி வந்தால் ஏழு ஆண்டு நிறைகிறது. மூன்று வருடங்களாக இணைய வசதியுடன் வழங்கப்பட்ட கணினி மிகப் பெரிய தோழனாக மாறியிருந்தது. தனக்கென தனி கேபின் கிடைக்க, சுதந்திரம் கூடுதலாக கிடைத்தது. ஆரம்பத்தில் கணினி கற்கவில்லையென்றாலும் உபயோகப்படுத்த ஆரம்பித்த பின்னர், இணையமும், மின்னஞ்சல்களும், அதையொட்டி யாகூ சாட்டும் தவிர்க்க முடியாத விருப்பமாக மாறியிருந்தது. தன் பெயரை அனாமிகா என தன் மின்னஞ்சல் முகவரிக்கு பெயர் சூட்டிக்கொண்டாள்.

ஒரு மாதமாகிறது அவன், பிரியாவின் மனதில் நுழைந்து. அவன் தொடர்ந்து அனுப்பிய வித்தியாசமான மின்னஞ்சல்களின் வழியே மிகப்பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தினான். ஒருநாள் யார் நீங்கள் என்று மின்னஞ்சல் வழியே திருப்பிக் கேட்க, “ஸ்ரீ, சென்னை”யென பதிலளித்து அதிலொரு கேள்வியை தொக்கி விட்டிருக்க, மீண்டும் பதிலளிக்க... அதற்கு மீண்டும் ஒரு பதிலோடு கேள்வியும் சேர்ந்து வர........ அந்த நாள் கழிந்தது.

அடுத்த நாள் மின்னஞ்சலைத் திறக்க காலை வணக்கம் எனச் சொல்லி ஒரு பூங்கொத்தோடு வசிய மருந்தைச் சுமந்து கொண்டு மின்னஞ்சலில் வந்திருந்தது. நன்றி என்று திருப்பி அனுப்பிய பதிலுக்கு உங்களோடு இணையத்தில் உரையாட முடியுமா என வந்தது.

வேறு வேலைகளில் மூழ்கி, பின் மின்னஞ்சலை திறந்த போது இன்னும் மூன்று மின்னஞ்சல் அவனிடமிருந்து, உடல் எடையை சீராக வைத்திருப்பது, மனம் அழகாக இருக்க கடைபிடிக்க வேண்டிய நல் சிந்தனைகள், நகைச்சுவை துணுக்குகள் என.

படித்த போது பெரிதும் அறியாத தகவல்களாக இருந்தன.

மீண்டும் உரையாடல் பெட்டியில் வந்தான்...

“மின்னஞ்சல்களைப் பார்த்தீர்களா!”

“ம்... பார்த்தேன், நன்றி”

“பிடிச்சிருக்கா”

“என்ன்ன்ன!!??”

“நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் பிடித்திருக்கா”

“ம்ம்ம்... மோசமாக ஒன்றும் இல்லை”

அடுத்த நாள் காலை கணியை திறந்தவுடனே மின்னஞ்சல் பெட்டியைத் திறக்க வேகவேகமாக மனது கைகளுக்கு கட்டளையிட்டது. இன்று இன்னொரு பூங்கொத்து... உடனே உரையாடல் பெட்டியில் அந்த தகவல் ஒளிர்ந்தது “இனிய அனாமிகா, உங்கள் அழகு போல் உங்களுடைய இந்த நாள் சிறக்கட்டும். அன்புடன் ஸ்ரீ”.

ஒரு கணம் கண்கள் படபடத்தது. மனதில் ஒரு மகிழ்ச்சி மின்னல் போல் வந்தது. பிரியா அதை தவிர்த்திருக்கலாம், ஆனாலும் மனது சிலிர்த்தது.

“ஹேய்... நான் அழகென்று யார் சொன்னது” என பொய்க் கோபத்தோடு கேட்டாள்.

“அய்யோ, கோவிச்சுக்க வேணாம். நான் உங்கள் மனதை குறிப்பிட்டு சொன்னேன், உங்கள் மனது அழகானதில்லையா” உடனே சுதாரித்தான்,

“ம்ம்ம் சரி” அவனின் சாமார்த்தியம் புரிந்தது, அவன் பயந்தது பிடித்தது.

“மனது அழகானதுதானே” மீண்டும் தூண்டிலை வீசினான்.

“ம்ம்ம்.. என் மனது சுத்தமானது” என்றாள்

“உங்கள் மனது இவ்வளவு அழகாக இருக்கும்போது, நீங்களும் அழகாகத்தான் இருப்பீர்கள்” அடுத்த கேள்வி தெறித்தது

வழிகிறான் என்று தோன்றினாலும், அந்த சாதுர்யம் பிடிக்காமல் இல்லை. “சும்மா சாட்தானே” என பிரியா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

வார்த்தைகள், வரிகளாயின... வரிகள் வாடிக்கைகளாயின, நிறைய விசயங்கள் இருவருக்கும் ஒத்துப்போயின, வாங்க டீ சாப்பிடலாம் என சாட்டில் அழைத்தான், மதியம் ஒரு மணிக்கும் மேல் இன்னும் சாப்பிடப் போகலையா என்று அக்கரையோடு விசாரித்தான்...

நாட்கள் நகர நகர, நட்பு வட்டம் இறுகியது. குடும்பம் பற்றி பரஸ்பரம் விசாரித்தார்கள். அவன் வயது 38, திருமணமானவன், மகன் பள்ளியில் படிப்பதாக உண்மையையும், மனைவி வீட்டிலிருக்கிறாள் என்ற சின்னப் பொய்யையும் சொன்னான்.

அவளும் பொய் சொன்னாள், வாகன உதிரிப்பாகம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் கணவனைக் கல்லூரி பேராசிரியர் என்றும், மகனுக்கு பதிலாக மகள் என்றும் கவனமாகச் சொன்னாள்.

வார விடுமுறை கழிந்த அடுத்த நாள், மகனின் பள்ளிக்குச் சென்று பள்ளிக் கட்டணம் கட்டி விட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக கணினியைத் திறக்க, “ஹாய், குட்மார்னிங், என்னாச்சு, எப்படி இருந்தது விடுமுறை, நீங்கள் இல்லாமல் எனக்கு பொழுதே போகவில்லை” என்பது போன்று 67 வரிகள், அக்கரையைச் சுமந்து கொண்டு அவளுக்காக காத்திருந்து அசர வைத்தது. இறுதி நாள் என்றிருந்தும், மகனின் பள்ளிக் கட்டணத்தை வங்கியில் செலுத்த நேரமில்லை என்று சொல்லிவிட்டுப் போன கணவன் மீது இருந்த கோபம் மேலும் கூடுதலானது.

இணைப்புக்கு வந்ததும் பதறிக்கொண்டு கேட்டான், என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா, ஏன் தாமதம், எங்கே வராமல் போய்விடுவீர்களோ என பயந்ததாக, திரும்ப பதிலளிக்குமுன் அடுத்தடுத்து வரிகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தது.

“டேய் ஸ்ரீ... ப்ளீஸ் ஸ்டாப் இட், மூச்சுமுட்டுது, எதுக்குடா இத்தன கேள்வி, ஒரு வேலையா பேங்க் போயிட்டு வந்தேன் அதனால லேட்” என்றாள்

“என்ன சொன்னீங்க டேய், எதுக்குடா வா” என்றான்

“ஆமாண்டா... ராஸ்கல்” என்றாள்

“ஏண்டி அப்படிச் சொல்றே, நீ இல்லாம பதறிட்டேன் தெரியுமா”

“என்னது டீ யா”

“நீ டா சொன்னா, நான் டீ சொல்லுவேன்டி”

“சொல்லிட்டு போடா” என்றாள்

அடுத்த நாள் அரட்டையின் போது “டியர்” என்ற வார்த்தை வந்தது.

அடுத்த இரண்டு நாள் கழித்து, உரையாடலில் இவள் கோவித்துக் கொண்டது போல் நடித்த போது “கோவிச்சுக்காதடி டார்லிங்” என்றான்.

“என்னது டார்லிங்கா” மீண்டும் பொய்யாய் ஒரு கோபம்

“ஸாரி...டி பிடிக்கலைனா சொல்லலை”

“அப்படியில்லை, சரி அந்த மேட்டர விடுடா”

அடுத்த வார விடுமுறையை கடத்துவது இருவருக்குமே கடினமாக இருந்தது. ஆனாலும் தன் செல்போன் நெம்பரைக் ஒருபோதும் கொடுக்க மறுத்து விட்டாள். மின்னஞ்சல் மூலம் மட்டுமே உரையாடலாம் என்பதில் மிக மிக உறுதியாக இருந்தாள்.

அடுத்த பதினைந்து நாட்கள் மகிழ்ச்சியாக உரையாடலோடு ஓடியது. தினம் 500-700 வரிகளுக்கு குறையாமல் அரட்டையடித்தார்கள். அவன் தான், அவளைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அழுத்தமாகச் சொன்னான். பிரியா சந்திக்க வேண்டிய அவசியமென்ன, சந்திக்க வேண்டாம் என்றாள். மீண்டும் மீண்டும் வேண்டினான்.

மூன்று நாட்கள் கடுமையான போராட்டம் மற்றும் வற்புறுத்தலுக்குப் பின் அடுத்த நாள், மதிய உணவிற்கும், மதிய சினிமாவிற்கு செல்லவும் அரை மனதாக ஒப்புக்கொண்டாள்.

அந்த குறிப்பிட்ட இடத்தில் காரில்காத்திருப்பதாகவும், அவளை பிக்கப் செய்து கொள்வதாகவும், காரின் எண்ணைக் குறிப்பிட்டு, கருப்பு வண்ணக் கார், பின் கதவைத் திறந்து வைத்திருப்பதாகவும், வந்து காரில் ஏறிக்கொள்ளும் படியும் மிகப்பெரிய அளவிலான திட்டத்தைத் வடிவமைத்தான். அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு காத்திருப்பதாக சொல்ல, பலத்த சிந்தனைக்குப் பிறகு, புத்திக்கும், மனதிற்குமான போட்டியில், இறுதியில் மனது வெல்ல அதற்கு ஒப்புக்கொண்டாள். கிளிப்பச்சை நிறச் சேலையில் வருவதாக அடையாளம் சொல்லியிருந்தாள். அவனுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அது.

ரசிம்மன் வழக்கத்தைவிட முன்னதாகவே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். ஸ்ரீ நிவேதா என்ற தன் முதல் காதலியின் நினைவாக தன்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்ரீ007 என்ற பெயர் வைத்திருந்தான். பெண்களுடன் இணையத்தில் உரையாடுவது என்றால் அத்தனை இஷ்டம் அவனுக்கு. தனக்கு வரும் மின்னஞ்சல்களில் பெண்களின் பெயரில் வரும் முகவரிகளை தனியே பொறுக்கி எடுத்து, இதுவரை 430 முகவரிகளைச் சேர்த்து வைத்துள்ளான். அவைகளை சேர்த்து ஒரு குழுவாக சேர்த்து வைத்துக் கொண்டு தினமும் தவறாமல் குறைந்தது, ஒரு வித்தியாசமான மின்னஞ்சலாவது அனுப்புவதில் ஒரு சுகம் அவனுக்கு.

ஒரு சிலர், யார் நீங்கள், எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பாதே, தொந்தரவு செய்யாதே என்று கூறியதும் உண்டு அதேசமயம் நாட்டின் பல மூலைகளிலிருந்து, மின்னஞ்சல் உரையாடலில் கிட்டத்தட்ட 25 பெண் தோழிகள் கிடைத்தாலும், சென்னையில் கிடைத்தது அனாமிகா மட்டும்தான், ஆனாலும் தினம் தினம் மனது தேடித்தேடி வலை வீசிக் கொண்டேயிருந்தது.

அனாமிகா அன்று மதிய உணவிற்கும், சினிமாவிற்கும் ஒப்புக் கொண்டதில், சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான், மிகப் பெரிதாக ஏதோ சாதித்தது போல் சந்தோஷம் கரை புரண்டோடியது. வழக்கத்திற்கு மாறாக மகனை குளிக்க வைத்து, அவனுடையை தேர்வு எப்போது எனக் கேட்டு, நன்றாகப் படிக்க வேண்டும் என்று அன்போடு அறிவுரை வழங்கி, கொஞ்சம் முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பினான்.

ஒரு கணம் மனைவிக்கு ஏதும் துரோகம் செய்கிறோமா என்று தோன்றியது. சும்மா லன்சும், ஒரு சினிமாவும் தானே சாப்பிடப் போகிறோம் என மனது சமாதானப் படுத்திக் கொண்டது. இந்த நட்பில் வரும் நாட்களில் லன்ச் என்பதைத் தாண்டி ஏதாவது வாய்ப்புக் கிடைக்கும், பட்சத்தில் அதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கும் மனது தயாராக இருந்தது.

காலையிலிருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. எப்போது 12 மணியாகும் என மனது பழியாய் காத்துக்கிடந்தது. நண்பனிடம் முக்கிய தேவைக்காக என்று சொல்லி வாங்கிய காரின் சாவி, பாரமாகத் தோன்றியது.

சரியாக 12 மணிக்கு காரைக் கிளப்பி, 12.15 மணிக்கெல்லாம் அந்த குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். கருப்பு கண்ணாடியை ஏற்றிவிட்டு, ஏசியை இயக்கி, நான்கு திசைகளிலிலும் விழியை பரபரப்பாக மேயவிட்டிருந்தான். அடுத்த 15 நிமிடம் கடப்பது ஒரு யுகமாக இருந்தது. 12.30ஐ நெருங்க நெருங்க மனது படபடத்தது. வயிற்றுக்குள் ஒரு காற்றுப் பந்து உருளுவதாக உணர்ந்தான். 12.30த் தாண்டி 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் பதட்டம் கூடுதலானது. ஒருவேளை கார் அடையாளம் தெரியாமல் தடுமாறுகிறாளா அல்லது வராமல் ஏமாற்றிவிட்டாளா, பதட்டம் கொஞ்சம் கூடுதலானது. குளிரும் ஏசியில் இதயம் நடுங்கியது, உடம்பு சூடாக முறுக்குவது போல் தோன்றியது.

பதட்டமான மனதோடு கண்ணை ஒரு நிமிடம் இறுக்க மூடி ஏதோ பிராத்தித்த போது “பிளக்” என பின் கதவு திறந்தது, விருக்கென திரும்பிப் பார்த்தபோது, அவன் மனைவி பிரியா என்கிற அனாமிகா காருக்குள் ஏறிக்கொண்டிருந்தாள், போன கல்யாண நாளுக்கு வாங்கிக் கொடுத்த கிளிப்பச்சை நிறச் சேலையில்.
-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

கருப்பா இருக்குறவங்கதான் சூப்பரா பேசுவாங்க

“அடுத்த கூட்டத்திற்கு பேச்சாளர் யாருங்க”

இரண்டு வாரங்களுக்கொரு முறை வியாழக்கிழமை தோறும் நடக்கும் எங்கள் அரிமா சங்கத்தின் நிகழ்முறைக் கூட்டத்தின் பேச்சாளர் பற்றி நண்பர் தனபாலன் அவர்களிடம் கேட்டேன்.

“சாத்தூர்ல இருந்து லட்சுமண பெருமாள்னு ஒருத்தர்ங்க”

“ஓ, அப்படியா ரொம்ப நகைச்சுவையா பேசுவாராமே, அவர் பற்றி என் நண்பர் காமராஜ் எழுதியிருக்கிறார்” என்றேன்

“ம்ம்ம்.. “பூ” படத்தில கூட நடிச்சிருக்காராம்”

“ஆமாங்க அது பத்தித்தான் படிச்சேன்”

“ஆனா என்ன கேரக்டரலே நடிச்சிருக்கார்னு தெரியல” என்றார்

எனக்கும் எழுத்தாளர் “லட்சுமணபெருமாள்” பற்றிய ஆர்வம் தொற்றிக்கொண்டது. அன்றிரவே நண்பர் அடர் கருப்பு காமராஜ் அவர்களுக்கு போன் செய்து அவர் பற்றிக் கேட்டேன். அவரும் அவர் பற்றி சிலாகித்து மகிழ்ந்து பேசினார். ஆர்வம் இன்னும் கூடிப்போனது.

எங்க சங்கத்தில் ஒரு செல்லப்பிள்ளை இருக்கிறார், செயலாளர் மகேஸ்வரன். செல்லமாக நாங்கள் அழைப்பது “கைப்புள்ள”. ஆர்வம் மிகு அரிமா உறுப்பினர், எல்லாவற்றிலும் ஆர்வமாக ஈடுபட்டு, பல இடத்தில் என்னை செல்லமாய் சிக்க வைப்பவர். ஆனால் சூதுவாது தெரியாத புள்ள அது. அதனாலதான் என்கூட எல்லாம் குப்ப கொட்ட முடியாது.

அடுத்த நாள் சந்திக்குபோது “மகேசா... நம்ம கூட்டத்துக்கு வரப்போற “லட்சுமண பெருமாள்” பத்தி நம்ம நண்பர் எழுதியிருப்பதைப் பார் என்று காமராஜ் அவர்களின் வலைப் பக்கத்தைத் திறந்து காண்பித்தேன். படித்துவுடன் முகம் முழுதும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. எதற்கு மகிழ்ச்சியென்று நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாம் நாடோடிகள் பட ஸ்டைல்தான். நான் மகேஸின் நண்பன், காமராஜ் என் நண்பர், லட்சுமண பெருமாள் காமராஜின் நண்பர், அப்போ, அவர் மகேஸ்க்கும் நண்பராகி விட்டார்.

அடுத்த நாளே அவர் போன் நம்பர் பெற்று அவருடன் பேசத் துவங்கி விட்டார்.

நான் “பூ” படம் பார்க்கவில்லை, அதனால் எந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார் என்ற போராட்டம் எனக்கில்லை. ஆனால் நம்ம கைப்புள்ள “பூ” படத்தை ரசித்து ரசித்துப் பார்த்து விட்டார், அவருக்கும் அவர் எந்த பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதில் துக்குனியூண்டு சந்தேகம் இருந்தாலும், அவராகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தார். “தல பூ படத்தில் சூப்பரா நடிச்சிருந்தார் தெரியுமா” என்றார்.

“இல்ல மகேசு.. நான் படம் பார்க்கலைபா, சரி என்னவா நடிச்சிருக்காரு”

“ச்சே என்ன ஆளு நீ, பூ படம் பார்க்கலையா”

“இல்லய்யா பார்க்கல, தப்புதான்... சரி என்ன கேரக்டர்ல நடிச்சிருக்காரு”

“ஹீரோவோட அப்பா தல, பேனாக்காரர்னு சொல்லுவாங்க”

“ஓ... நானும் டிவியில பார்த்திருக்கேன் மகேசு, வண்டி ஓட்டுவாரா ஒரு சீன்ல”

“ம்ம்ம் பார்த்திருக்கேல, சூப்பர நடிச்சிருக்கார்தானே, அப்போ சூப்பரா பேசுவார்தானே”

“மகேசா, காமராஜ் கிட்டே கேட்டேன், கலக்கலா பேசுவாரம், கவலைய விடு” என்றேன்

அதுமுதல் தினம் தினம் அவரிடம் பேசுவதும், “அய்யா... எப்போ கிளம்பறீங்க, எப்படி வரப்போறிங்கனு” லட்சுமண பெருமாள் அவர்களே பயப்படும் அளவிற்கு நம்ம ஆளு அவர வரவேற்க தயாராயிட்டாரு.

வியாழக்கிழமை காலையிலேயே நம்ம கைப்புள்ள போன் செய்து “தல, நம்மாளு மத்தியானம் ட்ரெய்ன்ல வாறாரு, நீங்களும் நானும்தான் பிக்கப் பண்ண போகனும்” என்றதோடு காலை பத்து மணிக்கே என் அலுவலகம் வந்து விட்டார்.

ஒரே குஷியாக தென்பட்டார், போனை எடுத்து நெம்பரைப் போட்டு “அய்யா, எங்கிட்டு வர்றீங்க” என ஆவலோடு கேட்டார். (நம்மாளுக்கு சொந்த ஊர் போடிநாயக்கனூர்),

“தல அவரு திண்டுக்கல்லு தாண்டிட்டாராம், எப்படியும் ஒரு மணிக்கு வந்துருவார்னு” நினைக்கிறேன்.

பக்கத்தில இருந்த நண்பர்களில் ஒருவர் கேட்டார் “யாருங்க, என்ன விஷயம்”

“அட உங்களுக்கு தெரியாத, இன்னைக்கு எங்க லயன்ஸ் மீட்டிங்கு லட்சுமண பெருமாள்னு ஒருத்தர் வார்றாருங்க, பூ படத்தில கூட நடிச்சிருக்காரு, சூப்பரா பேசுவாராம்”

“ஓ... படத்தில என்னவா நடிச்சிருக்காரு”

“அதாண்ணே, அந்த வண்டிக்காரரா வருவாரில்ல, பேனாக்காரர்னு கூட கூப்பிடுவாங்கல்ல, நல்ல கருப்பா, களையாக, நம்ம நாகராஜ் மாதிரி அழகா இருப்பாரு தெரியுமா?”

பக்கத்தில இருந்த நாகராஜ் திக்கென அதிர்ச்சியோட பார்க்க

நான் பொறுக்க முடியாம “ஏ மகேசா... நாகராஜை ஏன் இதுல இழுக்கிற, அதுதான் மத்யானம் வந்துடுறாருல்ல, யாருன்னுதான் பார்த்துடுவோம்”

“தல ஒன்னு தெரியுமா, அந்த ஏரியாக்காரங்களே நல்லா கருப்பா, களையா இருப்பாய்ங்க, இன்னொன்னு தெரியுமா கருப்பா இருக்குறவங்கதான் சூப்பரா பேசுவாங்க தெரியுமா”

அட ஆமா! நம்மாளு லாஜிக்காத்தான் பேசுறாரே, அப்பிடின்னு நானும் கொஞ்சம் கொஞ்சமாக மகேஸ்வரன் பேச்சில் மயங்க, டிவியில் பார்த்த “பூ” பட பேனாக்காரர் என் மனதிற்குள் வண்டியோட்ட ஆரம்பித்துவிட்டார்.

சிறிது நேரத்தில் தன்னுடைய எடுத்து வருவதாகக் கூறி என்னை ஸ்டேஷனுக்கு போக தயார இருக்கச் சொல்லி விட்டு வீடு வரை சென்று விட்டார்.

நானும் ஆர்வம் தாங்காமல் நண்பர் காமாராஜ்க்கு போனை போட்டு “தலைவா, இந்த லட்சுமண பெருமாள் எப்படிங்க இருப்பாரு”

“ஏன் தோழா என்னாச்சு” எனக்கேட்டார்

“இல்லைங்க, பூ படத்தில என்ன கேரக்டர்லே நடிச்சாரு”

“ஹீரோக்கு மாமனா வருவாருங்க”

“ஓ... அந்த பேனாக்காரர் கேரக்ட்டரா” எல்லாம் கைப்புள்ள புண்ணியம்.

“இல்ல தோழா! மாமன் கேரக்டர்ல வருவாரு, ஏன் நீங்க படம் பார்க்கலியா”

“சும்மா கேட்டேன் தலைவா, இன்னிக்கு எங்க கூட்டத்துக்கு வந்துட்டிருக்காரு, அதான் கேட்டேன். எப்படி இருப்பாரு கருப்பா இருப்பாருங்ளா”

“நல்லா கேட்டீங்க போங்க, சும்மா செவச்செவனு, ஒசரமா, வெள்ளை வேட்டி சட்டையில சும்மா பளிச்சுனு வருவாரு பாருங்க”

எனக்குள் ஓடிக்கொண்டிருந்த பேனாக்காரர் வண்டி குடை சாய்ந்தது போல் இருந்தது.

“மவனே, மகேசா வாடா... உனக்கு இருக்கு இன்னைக்கு” என்று மனதிற்குள் கொதித்துக் கொண்டு காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் போன் வந்தது “தல ட்ரெயின் வந்திருச்சாம், வெளிய வாங்க, நான் வந்திட்டிருக்கிறேன், அப்படியே போய்டலாம்”

மனதிற்குள் கருப்பு சிவப்பான மேட்டர சொல்லலாமா வேண்டாமா என்று நினைப்பதற்குள்

“மவனே நாலு நாள வண்டிக்காரர், பேனாக்காரர்னு கொன்னியே, அனுபவினு” நினைச்சிக்கிட்டு

“மகேசா, நான் ஓட்றேன், நீ அவர ரிசீவ் பண்ணி, ஒன்னா உட்கார்ந்து பேசிட்டு வாங்க” னு நான் காரை பிடுங்கிக் கொண்டேன்.

“அய்யா எங்கிருக்கீங்க, இதோ முன்னாடிதான் இருக்கோம், அப்படியே வெளியே நடந்து வாங்க, ம்ம்ம், நான் செவப்பு சட்ட போட்ருக்கேன்” நம்ம கைப்புள்ள ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்திட்டிருந்தார்.

“நான் அப்படி ஓரமா நிக்கிறேன்” என வண்டியோடு நகர்ந்தேன்

இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை, போன் அடித்தது எடுத்தால் நம்ம கைப்புள்ள.

“தல அய்யா வந்திட்டாரு, வண்டிக்காரர் இல்ல தல, எண்ணை மில் காரரு இவுரு”

“மகேசா நான் தான் படம் பார்க்கலையே, எனக்கெப்படித் தெரியும்” என்று பேசி முடிப்பதற்குள்

“அய்யா... வாங்க, முன்னால உட்காருங்க” என்று கதவு திறந்து, அவரை ஏற்றிவிட்டு சடக்கென பின் சீட்டில் பாய்ந்து உட்கார்ந்து, பின் பக்கமாய் தலையைச் சாய்த்தார்.

“கண்ணாடி வழியே மகேஸ்வரனைப் பார்த்தேன்” தலையை இட வலமாய் சிலுப்பிக் கொண்டிருந்தார்.

“ம்... கைப்புள்ளைக்கு இப்போதான் கண்ணக் கட்டும் போல”னு மனசில நினைச்சிக்கிட்டு வண்டிய ஸ்டார்ட் செய்தேன்

“ நீங்க காமராஜ் பிரண்டுங்களா” என்றார் லட்சுமண பெருமாள்

“ஆமாங்க, பிளாக்ல எழுதறது மூலமா, அவரு நண்பருங்க, ஆனா ரொம்ப நல்ல நண்பருங்க” என்றேன். பேனாக்காரர் இவரில்லை என்று சொல்லிய புண்ணியத்திற்காக.


டிஸ்கி:
1. சிவப்பாக இருந்தாலும், லஷ்மண பெருமாள் அவர்கள் அற்புதமாக, சிரிக்க சிரிக்க, கரிசல் காட்டு மொழியில் பேசி அசத்தினார்.

2. இன்று காலையில் வந்த கைப்புள்ள “தல ஒருதடவையாவது அந்த பேனாக்காரர நம்ம மீட்டிங்குக்கு கூட்டிட்டு வந்திடனும்” என்றார் ஒரு வித ஏக்கத்துடன்

-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

கூடுகட்டாத பறவைகளுக்காக


-------------------------------------------------------------------------


இந்தத் தையோடு நாற்பது நிறைகிறது
இல்லத்தரசியாக யாருமில்லை
உடன் பிறந்தோர் ஒதுங்கிவிட
ஒத்தையாய் நிற்கிறான் முதிர்ந்தவன்

பின்னிரவில் வீசிவிடும் குளிரில்
உழைத்த களைப்போடு கடக்கும் வீதியில்
தார் சாலை வெதுவெதுப்பில் துயிலும் நாய்களில்
ஒன்று உற்று குலைக்கிறது அவன் போலவே

துணையில்லாத படுக்கையில்
உறக்கம் கலையும் மைய இரவில்
அண்டை வீட்டு கொலுசு சப்தத்தில்
அதிருகிறது மனது

புண்ணுக்குள் ஜனித்த புழுவாய்
நெளியும் காமம் இறுகிக் குழைந்து
எங்கோ ஒரு வலியை வைத்திருக்கிறது
கெட்டித்துப்போன வெற்று மௌனமாகவே

நரம்பை அறுக்கும் மதுவில்
பேசிச் சலிக்கும் நாவில்
பார்த்து ஓய்ந்த கண்ணில்
தீர்வதில்லை அந்த அடர் வெறுமை

தோப்புகளிலிருந்து தொலை தூரத்தில்
பொட்டலில் முளைத்த விதையாய்
தனியே வெயிலில் தவிக்கிறான்
தன்னில் கூடுகட்டாத பறவைகளுக்காக



-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

மின்னல் போல் வருபவன்

-------------------------------------------------------------------------

சரியாக பத்து வருடங்களுக்கு முன் செப்டம்பர் மாத ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு எனக்கு என் நண்பனின் நண்பனிடமிருந்து அலைபேசிக்கு அழைப்பு வருகிறது...ஆற்றில் குளிக்கச் சென்றதாகவும், அதில் என் நண்பனைக் காணவில்லையென்று. அதிர்ச்சியில் பதறினேன் “காணோம்னா எங்கே, எப்படி”

அவனிடம் நான் பழகி இரண்டு வருடங்கள்தான் இருக்கும், இது நாள் வரை என் வாழ்க்கையில் சந்தித்த நண்பர்களில் மிகப்பெரிய யதார்த்தவாதி அவன். ஒரு விடயம் தொடர்பாக ஆலோசனை கேட்கும் போது, நமக்கு சாதகமாக ஆலோசனை சொல்லும் போது, அவன் மட்டும் நடைமுறை சாத்தியம் என்னவோ அதை மட்டும் தான் சொல்லுவான், அது நான் விரும்பத்தகாத கூற்றாகக் கூட இருக்கும், ஆனாலும் அவன் சொல்லுவதுதான் மிகச்சரியாக இருக்கும்.

எங்கள் ஊரின் மிகப்பெரிய வழக்கறிஞர் ஒருவரின் மைத்துனன் அவன். தன் சகோதரியின் வீட்டிலேயே தங்கி தன் மாமாவுடன் உதவியாக இருந்தான். அப்போதுதான் சட்டம் முடித்திருந்தான். செப்டம்பர் கடைசி வாரத்தில் தன் மாமாவுடன் நீதி மன்றத்தில் இணைவதாக கூறியிருந்தான். வழக்கறிஞராக மிகப்பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது.

பழகிய இரண்டு வருடத்தில் சில முறை மட்டுமே அவன் மது அருந்தி அதுவும் சிறிதளவு அருந்துவதை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அடிக்கடி, அதிக அளவில் குடிப்பதை அறிந்தேன். ஏன் என்ன காரணம் என்று கேட்டால் தத்துவார்த்தமாக, எல்லாக் குடிகாரனும் சொல்லும் சொத்தை சமாதானத்தை என்னிடமும் சொன்னான்.

அந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு என்னிடம் பேசினான், ராசிபுரத்தில் இருக்கிறேன், ஒரு கிடாவெட்டு விருந்து. மாலை ஈரோடு திரும்புவதாக கூறினான். ஈரோடு வரும் வழியில் பள்ளிபாளையம் தாண்டும் போது மாலை நான்கு மணிக்கு, காவிரியில் குளிக்க நான்கு பேரும் சென்றிருக்கிறார்கள். தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. அற்புதமாக நீச்சல் அடிக்கக் கூடியவன். இன்னும் அதிகமாக தண்ணீர் போகும் போதும் கூட ஒரே நாளில் இரண்டு, மூன்று முறை அந்த ஆற்றை நீச்சலிலேயே கடக்கும் வல்லமை படைத்தவன்.


ஆனால் அன்று ஆற்றில் இறங்கி நீந்தி கால்வாசி ஆற்றைக் கடக்கும் போது தீடீரென மூழ்கியிருக்கிறான். ஒரு விநாடி மேலே எம்பி “டேய் முடியல” என்றிருக்கிறான், அவ்வளவுதான் எங்கே என்றே தெரியவில்லை. உடன் வந்தவர்கள் சில அடிகள் தூரத்தில் இருந்திருக்கின்றனர். சில நிமிடங்கள் ஏதோ விளையாட்டாக சொல்கிறான் என்று நினைத்து, இன்னும் சில நிமிடங்களில் ஏதோ விபரீதத்தை உணர்ந்து கூச்சலிட அந்தப் பகுதி மீனவர்கள், துணி வெளுப்போர் பரிசல் போட்டு வந்து பரபரப்பாய் தேடியும் அவன் எங்கே என்றே தெரியவில்லை.

எதுவும் முடியாத நிலையில் எனக்கு முதல் அழைப்பு வந்தது. அவனுடைய சகோதரியிடம் தகவல் சொல்லவேண்டி.

காணாமல் மட்டும் போனதாக மனது நினைத்தது. இறந்திருப்பான் என நினைக்கக் கூட தயங்கியது. எங்காவது தண்ணீருக்குள்ளேயே நீச்சல் அடித்து, ஏதோ ஒரு இடத்தில் கரையேறியிருப்பான், நிச்சயம் கண்டுபிடித்து விடுவோம் என ஒரு நம்பிக்கை.

பதட்டம், குழப்பம், வேதனை, பயம், நம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாம் அடுத்த சில மணி நேரங்கள் மனதைப் பிசைந்தது. காவல்துறை, தீயணைப்புத்துறை என யார் யாரோ வந்தார்கள், வெளிச்சம் மங்கி இருள் சூழ ஆரம்பித்தது. ஆறு ஓங்காரமாய் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. இரவு பத்து மணிவரை அந்த ஆற்றங்கரையில் குறுக்கும் மறுக்குமாய் ஓடி, பழகிய முகத்திடமெல்லாம் ஏதாவது நம்பிக்கையான ஒரு வார்த்தை வராதா எனத் தேடினேன். அதே நேரம் நம்பிக்கையும் வேகமாக கரைய ஆரம்பித்தது.

“சரி காலையில் வந்து தேடுவோம்” என எல்லோரும் கலைந்து அவரவர் வீடு செல்ல, அலைபேசியை இறுகக் கையில் பிடித்தபடி, மூட மறுக்கும் இறுக்கமான விழிகளோடு எப்போது விடியும் எனக் காத்துக்கிடந்து, விடிந்தும் விடியாமல் ஆற்றங்கரைக்கு ஓடி வந்தால், இரவு நடந்த கவலையான பரபரப்பு இல்லாமல் அந்தப் பகுதி நபர்கள் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அதன்பின் ஒவ்வொருவராய் வர பல முறைகளில் இறுகிய மனதோடு தேடுதல் வேட்டை துவங்கியது, இனி உடல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து, தேடித்தேடி செவ்வாய்கிழமை இரவு நீரில் நொதித்துப் போன உடலை மட்டும் எடுத்தோம்.

சில நாட்களுக்குப் பின் அவன் இறந்த போது அலைபேசியில் அழைத்தவனைச் சந்தித்து பேசிய போது “ஏங்க எத்தன தடவ இந்த ஆத்த கிராஸ் பண்ணியிருக்கான், ஆனா, அன்னைக்கு மட்டும் குடிக்காம இருந்திருந்தா செத்துருக்க மாட்டான்” என்றான்.

குடிக்க நினைக்கும் போது, எப்போதாவது குடிக்கும் போதும், குடிப்பவர்களைப் பார்க்கும் போதும் அவன் ஒரு மின்னல் மாதிரி நினைவில் இன்னும் வந்து கொண்டேயிருக்கிறான்.

-------------------------------------------------------------------------

கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு...

__________________________________________________________ __________________________________________________________


விடியற்காலை நேரம், எங்கள் தோட்டத்திற்கு அருகில் செல்லும் அந்த சாலையில், நின்று கொண்டிருக்கிறேன். குறிப்பிட்ட இடைவெளியில் மட்டும் பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல் சிறிதும் இல்லாத சாலை அது. நீண்ட நாட்களுக்குப் பின் அந்தச் சாலையில், அந்த அதிகாலை நேரத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

பெயர் இல்லாத, வெளிர் மஞ்சள், வெளிர் நீலம் வரி வரியாக பூசப்பட்ட பேருந்துகள், நான் நின்று கொண்டிருந்த குறுகிய நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் கடந்து கொண்டிருக்கிறது. முன் பக்க கண்ணாடியில் ஒரு எண் மட்டும் பெரிதாக எழுதப்பட்டிருக்கிறது.

அந்த காலை நேரத்திலும் பேருந்துகள் நிரம்பி சென்று கொண்டிருந்தது. அருகில் இருந்த உறவினரிடம் கேட்டேன்


“என்னங்க இது, பேர் போடாம நிறைய பஸ் போகுது”


“எல்லாம் சிப்காட்கு ஆள் கூட்டிட்டுப் போறங்க” என்றார்.

புதிதாக உருவாகும் பின்னலாடை நிறுவனங்களில், ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க, நிறுவனம் சார்பில் பழைய பேருந்துகளை வாங்கி, 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை அனுப்பி, கிராமப் பகுதியில் இருக்கும் ஆட்களை வேலை செய்ய வலை விரித்து, பிடித்துக் கொண்டு வருவது.

காலை 6 மணிக்கு, பேருந்து நிறுவனத்திலிருந்து 60-70 கி.மீ தள்ளி இருக்கும் ஊர்களிலிருந்து புறப்பட்டு, பெரும்பாலும் கிராமங்கள் வழியாக சுற்றிச்சுற்றி பின்னலாடை நிறுவனத்தை நோக்கி வருகிறது. “தொழில் தெரியுமா நல்லது, தெரியாத அது அதை விட நல்லது, எளிதில் கற்றுக்கொள்ளலாம்.” ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் 130-150 ரூபாய் சம்பளம், வீட்டிற்கு அருகிலே வந்து அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப கொண்டு வந்து விட்டு விடுவர். (12 மணி நேரம் ஷிப்ட் (காலை 8 முதல் இரவு 8), கிட்டத்தட்ட நின்று கொண்டேயிருக்க வேண்டும், காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்குத் தான் வீடு வந்து சேர முடிகிறது எனவும் ஒரு சிலர் வருத்தப் படுவதுண்டு)

காலங்காலமாக விவசாய நிலங்களில் கூலிகளாக இருந்தவர்கள், மிகக் குறைந்த அளவிலான நிலம், வைத்திருந்தவர்கள், கால்நடைகளை வைத்து பால் கறந்து ஊற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டியவர்கள் என பல தரப்பட்ட கிராம மக்கள் திடீரென காலை நேரங்களில் கிராமத்தின் மையச் சாலையில் ஹாரன் அடித்து அழைக்கும் பேருந்துகளுக்கு மகுடி இசைக்கு பணியும் பாம்பு போல் மயங்கி சாரை சாரையாய் போவதை உணர முடிகிறது. வெயிலில் வேலை செய்ய வேண்டியதில்லை, கோவணம் கட்டிக் கொண்டோ, சேலையை எடுத்துச் சொருகிக் கொண்டோ சேற்றில், மண்ணில் வேலை செய்ய வேண்டியதில்லை.

விளைவு விவசாய விளை நிலங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை.


ஒவ்வொரு முறை விதைக்கும் போதும், இந்த போகத்திற்கு விதைக்க, மூன்று, நான்கு முறை களையெடுக்க, அறுவடை செய்ய ஆள் கிடைக்குமா என்ற அவ நம்பிக்கையுடனே ஆரம்பிக்கின்றனர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்.

சாலை ஓர விளை நிலங்கள் மிக எளிதில் ரியல் எஸ்டேட் வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வாங்கப் பட்ட நிலம் உடனே, சமன்படுத்தப் பட்டு, வேலி போடப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு, சாக்கடைகள் கட்டப்பட்டு, பூங்காக்களுக்கென நிலம் (கொடுமை விளைந்து கொண்டிருந்த நிலத்தை கற்பழித்து விளையாட பூங்கா அமைப்பது) ஒதுக்கப்பட்டு குடும்பப் பெண்ணாய் இருந்த நிலம் சீவி சிங்காரிக்கப்பட்டு கடை பரப்பப்பட்டது. சில வாரங்களில் போட்ட முதலீட்டில், எண்ணிப்பார்க்க முடியாத அளவு லாபத்துடன் வீட்டு மனைகளாக விற்கப்படுகிறது.

அடுத்தடுத்த பேருந்துகள் ஆட்களோடு பறந்து கொண்டிருந்தது.

“என்னங்க இத்தன பஸ் போகுது” என்றேன்

இனிமே இங்க யாரும் விவசாயம் பண்ண முடியாது, காட்ல கூலிக்கு ஆளு அம்பே கெடைக்கிறதில்ல, இருக்கற தண்ணிக்கு ஏதாவது மரத்த வெக்கோனும், இல்லைனா நல்ல விலைக்குப் போனா வித்துப்போட்டு, பணத்தை வச்சி பொழச்சிகோனும், இனுமே விவசாயங்கறது நாய் படற பாடு ஆயிப்போச்சு” என்றார்.

இப்பிடியே போன அப்புறம் சோத்துக்கு எங்க போவங்களோ தெரியல” அவர் மனைவி.

“ப்ச்...” என்று உதடு பிளுக்கினார்.


“தண்ணீரும், சோறும் தந்த மண்ண விட்டு...” முதல் நாள் ஒரு தொலைக்காட்சியில் கேட்ட கருத்தம்மா படப் பாடல் வரி நினைவுக்கு வந்து, மனதைப் பிசைந்தது.






-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

சிலிர்த்துச் சிரிக்கும் இரத்தம்



செதுக்கப்பட்ட கற்கள் கொண்டு
சீராய் அடுக்கப்பட்ட படிகளின்
இடையே அழகிய பூச்செடியாய்
அமர்ந்திருக்கிறாய் நீ...

ற்று நோக்கிச் சிரிக்கும்
உன் கூர் விழிகளில்
ஒளிந்து கிடக்கின்றன
ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்

பகிர்ந்து கொள்ளாமல்
கண்ணாமூச்சியாடும் காதல்
பரிதவிக்கிறது
காற்றில்லா வெற்றிடத்தில்...

ன்னை நோக்கி வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
இயல்பை மீறி மூச்சு வாங்கி
பாதத்தின் பிடிமானம் குழைகிறது...

“மனதைப் படி” என நீட்டிய புத்தகத்தோடு
மோதிரவிரலில் சுருக்கென
உன் விரல் சுண்டியதில்
சிலிர்த்துச் சிரிக்கிறது இரத்தம் ...

ன் கைகளில் இருந்து பிரிந்த புத்தகம்
என் கைகளில் தவழும் விநாடிகளில்
எடை போட முடியாத கனத்தோடு
ஏந்துகிறேன் வாழ்க்கையை...

விடியும் வரைத் தேடி வட்டமிட்ட
எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
இனியவனே உன்னை நேசிக்கிறேன்
கிழக்கில் சூரியன் விழித்தெழுகிறது..


~

வௌவ்வால் தத்துவம்

சங்ககிரி மலை மீது இருக்கும் கோட்டைக்கு நீண்ட நாளாக போகவேண்டும் என்ற ஆசை. திடீரென அந்த ஞாயிற்றுக் கிழமை, நான், வலைப்பதிவு நண்பர்கள் ஆரூரன், பாலாஜி மூவரும் சங்ககிரியில் ஒன்றிணைந்தோம்.

காலை 11.30 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம், வெயில் உச்சந்தலை வழியே மெல்ல கசிந்தது. ஆஹா தப்பு பண்ணிட்டமோ, இந்த வெயில்ல வந்திருக்கக் கூடாதோ என வெயில் உறைக்க ஆரம்பித்த பின் மனதிற்கு உறைத்தது.

இனி என்ன செய்யமுடியும், பத்துப் படி ஏறும் முன்னே, “வெயில் சுடுது திரும்பிப் போய்டாலாமானு” கேக்க முடியுமா? கூட வர்றங்க நாளைக்கு நாம வெயில் சுடுதேனு சொன்னத ஒரு இடுகையா போட்டுட்டா நம்ம டங்குவாரு அந்து போய்டுமே என்று, நானும் நம்பி ஏற ஆரம்பிச்சப்பவே, காலையில வீட்டில் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்த கோழிக்கறி ஞாபகத்திற்கு வந்தது.

இப்பவே திணறுதே, க்க்கும்ம்ம்ம் எப்போ ஏறி, எப்போ இறங்கி, எப்பொழுது வீடு போய்ச் சேருவோம். இன்னைக்கு மதியம் கோழிக்கறி அவ்வளவுதானானு ரொம்ப ஃபீலோட பத்துப் படிகள் வேகமா ஏறி திரும்பிப்பார்த்த... பாலாஜி மட்டும் பக்கத்தில நிற்கிறாரு...

ம்ம்ம்ம்ஹூம்... ஆரூரனைக் காணவில்லை, எங்கேயென்று தேடினால்

சும்மா பி.சி.ஸ்ரீராம் கணக்காக, படிக்கட்டு, மதில் சுவரு, அதில இருக்கிற கல், பக்கத்தில சிந்தியிருந்த மண் என்று சும்மா கண்ணுல பட்டதையெல்லாம் கிர்க்..கிர்க் என போட்டோவா எடுத்து தள்ளிட்ருக்காரு..

“சா............ர் வாங்க போலாம்”னு கத்திக் கூப்பிட்டாலும் அவர் வருவாருனு தோணல...
அதனால............ ............ கூப்பிடல.

முதல் படியிலேயே போட்டோ பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே, இன்னும் எத்தன படி இருக்கோனு, திப்புசுல்தான் மேல பாரத்தப் போட்டு, (அவர்தான் இதையெல்லாம் கட்டிய புண்ணியவான்), மூச்சு வாங்க ஏற ஆரம்பித்தோம்.

ஐந்து நிமிடம் நடந்திருப்போம், மூன்று சிறுவர்கள் சிட்டாக பறந்து எங்களை கடந்து ஓடினார்கள். கையில் ஒரு கேரி பேக், அதில் சில தண்ணீர் பாக்கெட்டுகள்.

என்னடா.. இந்த வெயில்ல இந்த பசங்க ஏறுகிறார்களேனு ஆச்சரியமா “தம்பீ எங்கடா போறீங்கனு” கேட்க, “வௌவ்வால் பிடிக்க போறோம்” னு சொல்லிட்டு தெறிச்சு ஓடினார்கள்.

இது என்னடா கொளுத்தற வெயில்லே எங்கபோய் இந்தப் பயபுள்ளைக வௌவ்வால் புடிக்கப் போகுதுனு ஒரு சந்தேகம் வேற.

மூச்சிறைக்க ஒரு வழியாக அரை மணி ஏறிய பிறகு ஒரு மசூதியில் போன்ற சின்ன மண்டபத்தில் அந்த படிகள் முடிந்தது.

அங்கே பார்த்தால், எங்களைத் தாண்டி ஓடி வந்த அந்த சிறுவர்கள் சட்டையில்லாமல், வெறும் அரை ட்ரவுசரோடு பரபரப்பாக குதித்துக் கொண்டிருந்தார்கள்.

“பசங்களா... என்றா பண்றீங்க, இங்க”

“வௌவ்வால் புடிக்கிறம்ணா”

“வௌவ்வாலா, எங்க இருக்கு வௌவ்வால்”

“அந்த சொரங்கத்லணா”

திப்பு சுல்தான் கோட்டை பற்றியும், அவர் பாதாளச் சுரங்கம் தோண்டி அது வழியாக வந்து போனதாக என் பாட்டி சொன்ன கதை நினைவுக்கு வந்தது.

அந்தச் சிறுவன் கை காட்டிய இடத்தைப் பார்த்தால் ஒரு குறுகிய பாதையோடு சுரங்கத்துள் செல்லும் இருண்ட பாதை இருப்பது தெரிந்தது.

“ஏம்பா, இதுதான் திப்புசுல்தான் கட்டின சுரங்கமா”

“தெரியலண்ணா”

இருட்டு அடர்த்தியாக இருந்தது. பத்தடி தூரத்தில் வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. குகையில் இருட்டு நனைந்த பனை மரம் போல் அப்பிக்கிடந்தது. எப்படி இந்த இருட்டில் இந்தப் பையன்கள் புழங்குகிறார்கள்.

“வௌவ்வால் புடிச்சு என்ன பண்ணுவீங்க”

“தீயில சுட்டு திம்போம்ணா”

வௌவ்வால் பிடித்து, இறக்கையைப் பிய்த்து, கம்பியில் குத்தி, தீயில் சுட்டு சாப்பிடுபவர்களைச் சின்ன வயசில் பார்த்த ஞாபகம் வந்தது.

“சரி உள்ளே எவ்வளவு தூரம், போக முடியும்”

“கொஞ்ச தூரம்தான்ணா, பயங்கர இருட்டா இருக்கும், லைட் இருந்தாத்தான் போக முடியும், சும்மா போனீங்னா ரிஸ்க்ண்ணா”

“சரி... எத்தன வௌவ்வால் புடிச்சிருக்கீங்க, காட்டுங்க பார்க்கலாம்”

“இல்லண்ணா... உள்ள புடிச்சிட்டிருக்காங்க”

“யாரு”

“பெரிய பசங்க, உள்ள புடிச்சிட்டிருக்காங்க”

ஒரு ஆர்வத்தில் அந்த சுரங்கப் பாதைக்குள் ஒரு பத்தடி தூரம் நடந்திருப்போம். உடல் முழுதும் இருட்டு ஒட்டியது போல் இருந்தது. நீண்ட காலமாக உள்ளே போகும் போது வெளிச்சத்திற்காக எரித்திருந்த டயர் நாற்றமும், சுரங்கப் பாதையின் வீச்சமும் ஒன்றாய் சேர்ந்து சுவாசத்தை கடினப்படுத்தியது.

மனது திடுக்கென்றது. கொட்டிக் கிடக்கும் இருட்டில், மூச்சை அடைக்கும் நாற்றத்தில் எப்படி உள்ள சிறுவர்கள் இருக்கிறார்கள். அப்படி என்ன கிடைத்துவிடும் இந்த வௌவ்வால் பிடிப்பதில்.

என் மனது குறுக்கும் நெடுக்குமாக கணக்குப் போட்டது. என்ன கிடைக்கும் இந்த வௌவ்வால் பிடிப்பதில். எது இவர்களை இவ்வளவு கடினப்பட்டு, சிரமப்பட்டு வௌவ்வால் பிடிக்க வைக்கிறது. வறுமையா, இவர்களின் பெற்றோர் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என மீண்டும் மனது இடது, வலதுமாக புத்திசாலித்தனமாக கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

சில நிமிடங்களில் அந்த இருட்டு சுரங்கத்திலிருந்து திமுதிமுவென ஆறு “பெரிய” பையன்கள் குதித்துக் கொண்டு வந்தனர். கைகளில் ஒரு பழைய கொசு வலை இருந்தது. கொசுவலையை உதறினார்கள், எட்டு வௌவ்வால்கள் விழுந்தன.

எல்லோரும் உடலிலும் இருட்டுக்கு நிகராக அழுக்கு அப்பிக் கிடந்தது. பெரும்பாலும் மேலாடையில்லை.

கனமான மனதோடு, “இவ்வளவு சிரமப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து வௌவ்வால் பிடிக்கிறீங்களே, ஒரு வௌவ்வால் எவ்வளவு விற்கும்” என கேட்டபோது.

ஒரு பையன் சத்தமாக சிரித்துக்கொண்டே சொன்னான் “இது விக்கறது இல்லண்ணா, நாங்களே சுட்டு சாப்பிடுவோம்”

அந்த பையன்களைப் பற்றி விசாரித்தபோது, பெரிய பையன்களில் ஐந்து பேர் லாரி பட்டறையில் காண்ட்ராக்ட்டாக வெல்டிங், டிங்கரிங், பெயிண்டிங் என நன்றாக சம்பாதிப்பது தெரிந்தது


“சரி தம்பி, ஒரு வௌவ்வால் என்ன விலைதான் போகும்”.

ஒரு வௌவ்வால் பத்து ரூபாய் என்றால் கூட மொத்தம் எண்பது ரூபாய் தானே போகும், இதுக்குப் போயி இந்த ரிஸ்க் எடுக்கிறார்களே என என் புத்தி அதிலேயே சுத்தியது.

“அதெல்லாம் தெரியாதுண்ணா. இது லீவுல ஜாலிக்காக நாங்க சேந்து பண்றதுங்க, இந்த ஜாலிக்கும், சந்தோஷத்துக்கும் எப்பிடிங்ண்ணா விலை சொல்ல முடியும்?”

எதையும் பணம், எதிலும் லாபம் என்ற நகரத்துப் புத்தியில் பளீரென்று அறைந்தது போல் இருந்தது.

சிறுவனாக கிராமத்தில் வாழ்ந்த காலத்தில் கள்ளிப்பழம் பறித்து முட்களை கல்லில் உரைத்து, அப்படியும் நாக்கில் முள் குத்த சாப்பிட்டதும், விடிகாலை இருட்டில் யாரும் வரும் முன் கால்களில் குச்சி கிழிக்க ஓடிப்போய், இரவு விழுந்திருந்த பனம் பழம் எடுத்து வந்து வீட்டில் பத்திரப்படுத்தி விட்டு, மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வந்து, அதை சுட்டு சப்பி சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

அதற்கெல்லாம் என்ன விலை!!! விடையொன்றும் தென்படவில்லை.

இருட்டு சுரங்கத்திலிருந்து வெளியே வந்த போது கண் கூசியது போல்,
மனது கூசும் அளவிற்கு மனதுக்குள் வெளிச்சம் பிரகாசமாக அடித்தது.





டிஸ்கி: டெர்ரரா !!!! கருஞ்சிவப்பு நிறத்துல பேசினது நான். நீல எழுத்தில பேசுனது அந்தப் பசங்க. கடைசியா பச்சை எழுத்தில இருப்பது தான் வௌவ்வால் கத்துக்கொடுத்த பாடம் (தத்துவம்!!!!, சும்மா கேயஸ் தியரிக்காக)




-------------------------------------------------------------------------
முழுவதும் படித்தீர்களா, பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.



விதைப்போம் அன்பை விருதுகள் மூலம்



ஏதோ காரணத்தால் தங்களைக் கவர்ந்ததால் என்னை உற்சாகப் படுத்தும் பொருட்டும், தங்கள் அன்பை என் மனதில் நிரப்பும் பொருட்டும்

Scrumptious Blog
விருதினை
எனக்கு அளித்த
வானம்பாடிகள்
ரம்யா
ஆகியோருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்பித்து...




தங்கள் இடுகை மூலம் என்னைக் கவர்ந்த நண்பர்களுக்கு இதை அளிக்கிறேன். யாருக்கு அளிக்கலாம் என்று நினைத்தபோது நீண்ட பட்டியலைப் பார்த்து எனக்கே மூச்சு முட்டியது, விருதை பத்து நபர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்ற நியதியின் படி இவர்களிடம் மட்டும் இப்போது பகிர்ந்துள்ளேன்.

தொடர்ந்து என்னை வசீகரித்து வரும் இடுகையாளர்கள்...

பழமைபேசி
செந்தில்
பாலாஜி
பிரியமுடன் வசந்த்
நாடோடி இலக்கியன்
இரும்புத்திரை அரவிந்த்

சீமாங்கனி
ஞானசேகரன்
ஆரூரன்
நிலாமதி

விருது பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துகள், உங்கள் மனம் கவர்ந்த பத்து நண்பர்களிடம் நீங்களும் பகிர்ந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

அவர்களின் கடமை

ஏரி குளம் வாய்க்கல் வரப்பு
சித்தாளுக்கு மண் நிரப்பி நிமிர்ந்து
தூக்குவதோடு நிறைகிறது அவன் கடமை

கழுத்து சுளுக்கச் சுமந்து கொட்டி
அலுக்காமல் மீண்டும் மீண்டும்
சுமப்பதில் தொடர்கிறது அவள் கடமை

காதலோ, காமமோ நிமிடங்களின்
எண்ணிக்கையில் நிறைந்து தளர்ந்து
தூக்கத்தில் தொடர்கிறது அவன் கடமை

கருவாக தாங்கி வளர்ப்பதா
வேண்டாமென கலைத்து வீசுவதா
வியர்த்து தூக்கம் துறப்பது அவள் கடமை

அவரவர் கடமையிலிருந்து
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை
-------------------------------------------------------------------------
முழுவதும் படித்தீர்களா பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.