புடுங்கின, புடுங்குற ஆணிகளெல்லாம்!

கடந்த பத்து பதினைந்து நாட்களாகவே வாட்ஸப்பில் தினமும் நான்கைந்து முறையாவது அக்டோபர் 31ம் தேதி போராட்டம் குறித்து ஒரு சேதியேனும் வந்துவிடுகிறது. வாட்ஸப் தவிர்த்து வைபர், லைன், டெலிகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ப்ளாக் என எங்கும் இந்தப் போராட்டம் குறித்தான செய்திகளோ, வேண்டுகோள்களோ ஏனோ என் கண்ணில் படவில்லை. மொபைல் நிறுவனங்கள் 2ஜி, 3ஜி இணையக் கட்டணத்தை அதிகப்படுத்திவிட்டன என்பதுதான் போராட்டத்திற்கான காரணம். அதைக்கண்டித்து ஒரு நாள் முழுக்க மொபைல் மூலம் 2ஜி,3ஜி நெட் பேக்குகளைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் Wi-Fi மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்தொழில் முறையில் பயன்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி சமூக வலைதளங்களுக்காகவும், மொபைல் ஆப்ஸ்களுக்காவும் கணிசமாக இணையத்தை பயன்படுத்தும் சூழலுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஆளாகிவிட்டோம்.

மொபைல் ஆப்ஸ்களில் வாட்ஸப்பில் மக்கள் ஊறித்திளைத்துக் கிடப்பதை எளிதில் காணமுடிகிறது. என் தொடர்பு எண்களில் அறுபது சதவிகிதம் பேர் வாட்சப்பில் இருக்கிறார்கள். அவர்களில் 90% பேர் தொடர்ந்து அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் ஒரு காலத்தில் மாதத்திற்கு 1ஜிபி அளவிற்கான நெட் பேக் போட்டுக்கொண்டிருந்தேன் அலுவலகத்தில் WiFi இணைப்பும், வீட்டில், வெளியில் நெட் பேக் இணைப்புமென கைபேசி 24 மணி நேரமும் இணையத்தில் இருந்தது. தடையற்ற இணையத் தொடர்பு இருப்பதாலேயே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என எல்லாவற்றின் அறிவிக்கைகளும் மின்னிக் கொண்டேயிருக்கும். விட்டில் பூச்சிக்கு அந்த மின்னும் வெளிச்சம் போதாதா? உடனே அது என்னவெனப் பார்க்கத் தோணும், அதையொட்டி நேரம் போவதே தெரியாது. ஒரு கை சாப்பாட்டில் இருக்கும், ஒரு கை மொபைலை வருடிக் கொண்டிருக்கும், ஒரு காது டிவியில் இருக்கும், மறு காது மட்டுமே குடும்பத்தினருக்கானதாய் இருக்கும். ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் அட நாமதான் எவ்ளோ பிசியா இருக்கோம் என நினைக்கத் தோணும். நாய்க்கு நிக்க நேரமுமில்லே, வேலையுமில்லே என ஊரில் சொல்வது நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

மொபைல் நெட்பேக் இணைப்பைத் துண்டிப்பதென்று ஒரு முடிவெடுத்தேன். அலுவலத்திற்கு வந்தால் கைபேசியில் இணையம் விழிக்கும், விட்டுக்கிளம்பும்போது உறங்கிவிடும். அதன் விளைவு வீட்டின் நீள, அகலம் மீண்டும் தெரிந்தது. வீட்டில் இருக்கும் மனிதர்கள் மிக அருகில் தெரிந்தார்கள். அடிமைப் பட்டுவிட்டு வெளியேறிப்பாருங்கள் அதன் சுகம் எத்தனை அற்புதமானதென்று புரியும்.

24 மணி நேரமும் இணைய இணைப்பில் ஆண்டுக்கணக்கில் கிடந்தவனுக்கு திடீரென அலுவலக நேரம் தவிர்த்து மீதி நேரம் இணையத்தைவிட்டு விலகியிருப்பதில் சில நியாயமான தடுமாற்றங்களும், சிக்கல்களும் ஏற்பட்டது. அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் 5 நிமிடமோ 10 நிமிடமோ இணையம் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தமும், அவசரமும், அவசியமும் வந்தது. அதற்கு ஏதுவான ஒரு திட்டம் ஏர்செல்லில் கிடைத்தது. 14 ரூபாய்க்கு பூஸ்டர் போட்டுக்கொண்டால் 28 நாட்களுக்கு 40KB அளவிற்கு 1 பைசா எனும் திட்டம். இதில் ஒரு 1MB பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 26 பைசா செலவாகும். அதன்பின் மொபைல் டேட்டா பயன்படுத்துவது ஒரு மாத காலத்திற்கே 100 முதல் 150 MB அளவிற்குள் சுருங்கிப் போனது.

இவ்வளவெல்லாம் கணக்குகள் போட்டு அப்படி மொபை ஆப்ஸ்களை பயன்படுத்தித்தான் தீர வேண்டுமா என்ற கேள்வி வரலாம். கால ஓட்டத்தில் சிலது தவிர்க்கமுடியாதவை. தொழில் நிமித்தமாக எனக்கு வாட்ஸப் என்பது மிகுந்த பயனுள்ளது. வாடிக்கையாளருக்குத் தேவையானது தயாராகிவிட்டது என்பதை ஒரு படத்தின் மூலம் சில நொடிகளில் நிரூபித்துவிட முடிகிறது. வங்கியில் பணம் கட்டிய விபரம், கொரியர் அனுப்பிய விபரம் உட்பட பலவற்றை உடனுக்குடன் யாருக்கும் எங்கும் அனுப்பிக்கொள்ள முடிகிறது. போனில் அழைத்து நான் சொல்றதை எழுதிக்குங்க, டைப் பண்ணி அனுப்பத் தெரியாது என்கிறவர்களிடம், காகிதத்தில் எழுதி படமெடுத்து அனுப்புங்கள் எனச் சொல்வதும், மெயில் அனுப்பினால் அதைப் பார்க்க நேரமாகும் என்பவர்களுக்கு கணினித் திரையை அப்படியே படம் பிடித்து அனுப்பிவிடுவதுமென நிறைய எளிமைப்பட்டுவிட்டது. வைபர் மூலம் வெளிநாட்டு எண்களை அழைத்துப் பேசிக்கொள்ளமுடிகிறது.

கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள் என சிரமப்படுபவர்களுக்கான கேள்வி நம் இணையப் பயன்பாட்டில் எத்தனை சதவிகிதம் அவசியத்தின் பேரில் பயன்படுத்துகிறோம். பொழுதுபோக்கும், நகைச்சுவையும், வாசிப்பும் மிக நிச்சயமாக அவசியம்தான். ஆனால் இதில் எது அதிகப்படியாய் இருக்கிறது என்பதை தராசில் ஏந்திப் பார்க்கவேண்டிய அவசரத்திலும் அவசியத்திலும் நாம் இருக்கிறோம்.

வாட்ஸப்பில் நான் மூன்று குழுமங்களில் இருக்கிறேன். ஒரு குழுமத்தில் 50 பேர், இரண்டாவதில் 17 பேர், மூன்றாவதில் 13 பேர். ஒவ்வொரு குழுமத்திலிருந்தும் சராசரியாக ஒரு நாளைக்கு 10 வீடியோக்கள் வந்துவிழுகின்றன. ஆக மூன்று குழுமத்தில் இருக்கும் எனக்கே சுமாராக ஒரு நாளைக்கு 30 வீடியோக்கள் வந்து விழுகின்றன. வீடியோ அதிகபட்சமாக 16MB அளவு வரை வருகிறது. சராசரியாக 5MB என்ற கணக்கில் எடுத்துக்கொண்டால்கூட எனக்கு வரும் 30 வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நான் பயன்படுத்தும் டேட்டா அளவு 150MB. மாதத்திற்கு கணக்குப் பார்த்தால் 4 முதல் 5GB அளவு டேட்டா வெறும் 3 குழுமம், 80 நபர்கள் இருக்கும் எனக்கே பயன்பாட்டில் வருகிறது.

என் நண்பர் ஒருவர் 16 குழுமங்களில் இருக்கிறார். ஒவ்வொருநாளும் அவர் அலுவலகத்தில் நுழையும்போது Wifi-யில் இணையத் தொடர்பு கிடைத்தவுடன் வாட்ஸப் அறிவிக்கையில் ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் செய்திகளைக் காட்டும். ஒவ்வொன்றாய் திறந்து ஓடவிட்டால் கிட்டத்தட்ட 100-200 வீடியோக்கள் இறங்கும். ஒரு நாளைக்கு அவர் பயன்படுத்தும் இணைய டேட்டாக்களின் அளவு ஏறக்குறைய 1GB அளவு.

வாட்ஸப் குழுமங்களிலிருந்து இன்று இதுவரை ஒரு வீடியோ அல்லது படத்தைக் கூட யாரும் ஃபார்வர்ட் செய்யப்பட்டு வரவில்லை என்பதைக் காணும்போது இந்த போராட்டம் மாபெரும் வெற்றிதான்(!) என ஒருவகையில் புரிகிறது.

தேவையா, தேவையில்லையா என எலி குட்டிபோடுவதுபோல் பெருகிப் பகிரும் வீடியோக்கள், படங்கள் மூலம் அதிக அளவிலான டேட்டாக்களை விழுங்குவதை மொபைல் நிறுவனங்கள் எளிதில் இனம் கண்டு கொண்டார்கள். இந்த ஒன்று போதாதா அவர்களுக்கு? ஒவ்வொரு மாதமும் கட்டணத்தை உயர்த்தத் துவங்கிவிட்டார்கள். உள்ளுக்குள் மூழ்கி சுகம் கண்டு போன நமக்கு அதிலிருந்து வெளியேறவும் முடியாமல், டாப்அப் செய்திருப்பதில் கரையும் டேட்டா அளவைக் காணவும் முடியாமல் வெடிப்பதின் ஒரு எல்லைதான் இந்த 31ம் தேதி புறக்கணிப்பும் போராட்டமும்.

தினமும் மது குடித்தே தீரவேண்டுமென்ற நிலையிலான குடி நோயாளிகளை மிகப்பெரிய எண்ணிக்கையில் உருவாக்கியபிறகு, விலையை ஏற்றுவதில் மதுக்கடைகளுக்கு என்ன தயக்கம் இருந்து விடப்போகிறது? மது அருந்துபவர்கள் ஒரு நாளைக்கு போராட்டம், புறக்கணிப்பு எனச் செய்தாலும் அதை ஏளனப் புன்னகையோடு கடந்து செல்லும் தெனாவட்டு வந்துவிடும். புறக்கணிப்பின் அடுத்த தினம், சமூகம் பெருவேட்கையோடு தனக்குப் பிடித்ததின் மேல் படையெடுக்கும் என்பது பெரும்பாலும் கண்டதுதானே.

போராட்டம், புறக்கணிப்பு என்பதோடு ஒருமுறை நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியது, வாட்ஸப் உட்பட எல்லா ஆப்ஸ்களிலும் நாம் புடுங்கின, புடுங்குற ஆணிகளெல்லாம் தேவையான ஆணிகள்தானா என்பதே!


-    -
-   


சனியம்புடிச்ச மழமீண்டும் மழை. சரியாக இரண்டு நாள் வெட்டாப்பு. அடைமழைக் காலத்தில் மழை ஓய்ந்து கிடைக்கும் இடைவெளியை வெட்டாப்பு எனச் சொல்வோம். இந்த வெட்டாப்பு அழகியதொரு ஆசுவாசம். மழையற்றுக் கிடந்த ஊரில் பத்து நாளுக்கு மேல் தொடரும் அடைமழை ஒரு கட்டத்தில் அலுப்பூட்டத்தான் செய்கின்றது. யாரை அலுப்பூட்டுகிறது என்பதும் மிக முக்கியம். மழைக்குப் பழக்கப்பட்ட மலைப்பகுதி மனிதர்கள் நம்மைப்போல் ஒருபோதும் மழையை நிந்திப்பதில்லை. குறுகிய பாதையில் எதிர் சாரியிலிருந்து கடப்பவரோடு ஒரு இணக்கம் பாவிப்பது போல் மழையோடு இணக்கம் பழகுபவர்கள் அவர்கள்.

வெட்டாப்பு முடிந்து அமைதியாய்க் கிடக்கும் மதியப் பொழுதொன்றில் மழை வந்திருக்கிறது. பத்து நாட்களில் மனிதர்கள் மழையோடு சற்றே இணக்கம் கொண்டிடப் பழகிவிட்டார்கள். எவரிடமும் மழை குறித்து கடுகடுப்பும், எரிச்சலுமில்லை. நசநசனு பெய்யுதே எனும் அலுப்பில்லை. மாறாக மழையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளவும் வேடிக்கை பார்க்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

கட்டிட முகப்பொன்றில் மழைக்கு ஒதுங்கியிருக்கும் 25 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இரண்டு பெண் குழந்தைகளோடு அமர்ந்திருக்கிறார். வெள்ளை வேட்டி அணிந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் சுமார் இரண்டு வயதுதான் இருக்க வேண்டும். இரட்டைப் பிறவிகள் போலவும் தோன்றுகின்றனர். அவர் கால் நீட்டி அமர்ந்தபடி மடியில் ஒரு பெண்ணை கவிழ்த்துப் போட்டு அதன் முதுகில் கை போட்டிருக்கிறார். முதுகின் மேலிருக்கும் கையிலிருக்கும் கடிகாரத்தை மற்றொரு குழந்தை விரலால் குத்திக்கொண்டிருக்கிறது. படுத்திருக்கும் குழந்தை அந்த மற்றொரு குழந்தையிடம் இடைவிடாமல் உரையாடியபடி இருக்கிறது. மழை அடித்துப் பெய்கிறது. அவரிடம் மழை விடுமா விடாதா என்பது குறித்த தவிப்பேதும் தோன்றவில்லை. இரண்டும் அவர் குழந்தைகளாக இருக்குமா? அவர்களின் அம்மா எங்கே? ஒருவேளை அவருடைய சகோதரியின் குழந்தைகளாக இருக்குமா? குழந்தைகள் இரண்டும் மிக அணுக்கமாக அவரோடு விளையாடிக் கொண்டேயிருக்கின்றன. மொத்தத்தில் குழந்தையின் அம்மா எங்கே? இவர்கள் எங்கே பயணிக்கிறார்கள் எனும் கேள்விகள் மண்டையைக் குடைகிறது. அம்மாவோடு இருக்கும் இருக்கும் குழந்தைகள் குறித்து பொதுவாக இப்படியான பதட்டக்கேள்விகள் உருவாகுவதில்லை.

காற்றில்லாமல், சுழற்றிச் சுழற்றி அடிக்காமல் மண்மீது பிரியமாய் விழுந்து புரண்டு கரையும் மழை அழகினும் அழகு. சாலையில் அமைதியாய் ஆனால் அடர்த்தியாய் பெய்த வண்ணம் இருக்கிறது மழை. சாலையின் ஒரு பகுதியில் கோணல்மாணலான ஒரு அரை வட்ட வடிவத்தில் பெருந்துளிகளாய் விழுந்துகொண்டிருக்கிறது. வட்டத்தின் எல்லையில் தண்ணீர் மொத்தமாய் இருக்கிறது. எப்படி அரைவட்டம் எனக் கேள்வி வருகிறது. மேலே கிளை நீட்டிய வேம்பு. மரத்தில் மோதி இலை கிளை தழுவி வரும் துளி தடித்த உருவமாய் வருகிறது. மரத்தின் விளிம்பில் சீராக பெய்யும் மழையும், மரத்தடி மழையும் கூடும் இடத்தில் தண்ணீர் தடிமனாய்க் கரைகிறது.

சாலையில் கார்கள் மட்டும் சீறிக்கொண்டிருக்கின்றன. எப்போதாவது ஒரு பைக் செல்கிறது. மழை வருவதற்கு முன் மழையில் நனையலாம் என்றிருக்கும் பெருவிருப்பம், மழை வரும் நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து நிறைவேறாமல் போய்விடுகிறது. நிறைவேறவில்லை என்பதைவிட விருப்பமற்றே போய்விடுகிறது.

சேலையை சற்றே உயர்த்திக்கட்டிய ஒரு பெண் கையில் தூக்குப்போசியோடு, முதுகில் திராட்சைக்கொத்து போல் ஒரு பலூன் கொத்தினைச் சுமந்தபடி மழையில் நடந்து கொண்டிருக்கிறார். வித்தியாசமான காட்சியாய் இருக்கிறது. அடர் ரோஸ் வண்ண பலூன்களுக்கு மத்தியில் ஓரிரு வெள்ளைப் பலூன்கள் இருக்கின்றன. அவை தீபாவளிக்காக எதாவது ஒரு ஷோரும் முகப்பில் கட்டப்பட்ட பலூன்களாக இருக்கலாம். அந்தப் பலூன்களை எதிர்கொள்ளப்போகும் குழந்தைகளின் குதூகலம் ஒரு நொடி மனதில் வந்து போகிறது. அடர்த்தியாய் மோதும் மழை குறித்து எந்தத் தயக்கமுமற்று நடந்துகொண்டிருக்கிறார். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கெனும் பழமொழி அந்த பலூன் மீது மோதிச் சிதறும் துளிகளில் மின்னுகிறது.

எத்தனை வருடங்களுக்கு முன்பு இப்படியான அடைமழை இருந்ததென நினைவில்லை. மழைக்கும் அடை மழைக்கும் அழகிய வேறுபாடுண்டு. இது ஐப்பசியின் கொடை. அடைமழை என்பது மிகச்சிறிய வயது அனுபவமாக மட்டுமே நினைவிலிருக்குறது. இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் பேய்மழையாக அடித்து பாலங்களை உடைத்து நொய்யலில் கரை புரண்டோடிய நாளில்தான் கடைசியாகப் பெருமழையைப் பார்த்தது.

பொதுவாக மனிதர்கள் இதுபோன்ற மழைகளுக்கு பழக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் இந்த நிலம் எத்தனையெத்தனை மழைகளைக் கண்டிருக்கும். பொழிந்து தழுவியோடும் இந்த மழையை போன்றே எண்ணற்ற மழைகள் பெய்தோய்ந்திருக்கலாம், எனினும் இதுவொரு புது மழைதானே.

கிராமத்து சனம் ஒருவரையொருவர் எப்போது எங்கு சந்தித்துக் கொண்டாலும் முக்கியமாய்க் கேட்கும் கேள்வி “அப்புறம் ஊர்ல மழைங்ளா” என்பதுதான். நலம் விசாரித்தலின் மிக முக்கியக்கூறு இது. மழையை மட்டுமே நம்பி நிலம், நிலத்தை மட்டுமே நம்பி மக்கள் என இருந்த காலத்தின் அதி அவசியக்கேள்வி அது.

சிலபல ஆண்டுகளாகப் பருவம் தப்பி, பகிர்வில் பாதகம் செய்து வரும் மழை இந்த ஆண்டுதான் முறைப்படி தன் மடி திறந்திருக்கிறது. ஒரு இடத்தில் மழை பெய்யும், அதே நேரம் 500-1000 அடி தொலைவில் மழையின் சுவடற்றுக் கிடக்கும். நீளமாய்க் கிடக்கும் பத்து ஏக்கர் விளைநிலத்தின் ஒரு பகுதியில் மழை, மறு பக்கத்தில் மழையில்லை என்பது போன்ற வேடிக்கையான கொடுமைகளும் நிகழ்ந்ததுண்டு.துவைத்த துணிகள் காய்வதில்லை. கடை வீதிக்குப் போய் வர முடியவில்லை. குழந்தைகளுக்கு சளி பிடிக்கிறது. சிலருக்கு காய்ச்சலும் வருகிறது. மழையென பள்ளிகளுக்கு திடீரென அறிவிக்கப்படும் விடுப்புகளால் ஏற்படும் குழப்பங்களாலான கடுப்பு. எங்கும் சேறும் சகதியுமாய் இருக்கிறது. பேருந்துகளில் ஒழுகுகின்றன. தாழ்வான பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் நிற்கிறது என்பது போன்ற சிற்சில சிரமங்கள் புறந்தள்ளக் கூடியவையன்றுதான்.

தண்ணீர் தேங்குகிறது, பெருவெள்ளம் பாய்கிறது என்பதற்குப் பின்னால் நாம் சாகடித்த ஏரி குளங்கள் விடுத்த சாபங்கள் அவை என்பதை வசதியாக மறந்துவிட்டோம். வீட்டில் உருவாகும் எல்லாக் குப்பைகளையும் கேரி பேக்கில் மூட்டைகட்டி சாக்கடையில் வீசியதையும் மறந்துவிட்டோம். ஐந்து - பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பேய்மழை அடித்தாலும் கூட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் பழக்கமில்லை. மழைக்காகிதம் எனும் அந்தக் கால ப்ளாஸ்டிக் காகிதங்களுக்குள் புத்தகப் பையை வைத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு கொட்டும் மழையில் வீட்டிற்கும் பள்ளிக்கும் சென்று வந்த தலைமுறைதான் நாலு துளி விழுந்தவுடனே டிவியில் ஃப்ளாஷ் நியூஸ் தேடுகிறது, ஆட்சியர் பிள்ளைகளுக்கு லீவு அறிவித்து விட்டாரா என்று.

பங்குனி சித்திரையில் வெயிலும் கொளுத்தக்கூடாது, மார்கழி தையில் குளிரும் மிதமாய் இருக்க வேண்டும். ஐப்பசியில் அடைமழையும் பெய்யக்கூடாது. வாழ்க்கை மட்டும் எப்போதும் சுகமாய் இருக்க வேண்டுமென்பதே பெரும் ஆசையாய் நமக்கு.

அறுபது எழுபது அடி ஆழம் என்பதுதான் கிணறுகளில் அதிகபட்ச ஆழாமாய் இருக்க, அதை வைத்து மட்டுமே எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்ட சமூகம், இன்று அறுநூறு எழுநூறு அடி ஆழத்திற்குப் போய் குடிப்பதற்காகக் கொஞ்சம் தண்ணீர் தேடுகிறோம். சில பகுதிகளில் ஆயிரம் அடி போர் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லையென்பது மிகச்சாதாரணம். அவ்வளவு ஆழத்தில் கிடைக்கும் நீரில் அந்த மண்ணுக்கே உரிய எந்த சுவையும் நாம் உணர்வதேயில்லை. ஒட்டுமொத்தமாய் ஒரே ஒரு சுவை சப்பென இருக்கும் உவர்ப்புசுவை மாத்திரமே. சபிக்கப்பட்டவர்களாய் மாறிப்போன நம்மை எப்போதாவதுதான் கனிந்த தன் முலைக்காம்புகளின் மீது இயற்கையன்னை புதைத்துக் கொள்கிறாள். பாக்கெட் பால் மட்டுமே சுவைத்த தலைமுறைக்கு நேரடியாய் தாய்ப்பாலைச் சுவைப்பதில் ஏற்படும் தடுமாற்றமும் ஒவ்வாமையுமே ”சனியம்புடிச்ச மழ… எப்பப்பாரு நொசநொசனு பேஞ்சுட்டே இருக்கு” என்பது.

-

வாழ்தலை விடவும்...


காணும் எல்லோரையும் நம் மனதிற்கு மிகவும் பிடித்துப்போய்விடுவதில்லை. எதன்பொருட்டோ சிலரை மிக நெருக்கமாகப் பிடித்துவிடும். அப்படிப் பிடித்துப் போனவர்களோடு ஏதேனும் ஒரு சூழலில் பிணக்கோ ஊடலோ ஏற்பட்டாலும், மீண்டும் நெருங்கிப்போகும் சமயத்தில் பீறிடும் அன்பினை விளக்கிட வார்த்தைகள் கிடைப்பதில்லை. பிடித்தலையும், பிடிக்காமையையும் ஏதோ ஒரு காரணத்தை தனக்குள்ளே வைத்துக்கொண்டு முடிவெடுக்கும் மனம் மிக நுணுக்கமானது. ஒருவரைப் பிடிக்காமல் போனதற்கும், பிடித்துப் போனதற்கும் என்னதான் நேரடிக்காரணமென எவ்வளோ யோசித்தாலும், இதுதான் காரணமென தீர்க்கமாய் தீர்மானித்திட முடிவதில்லை.
 
அவளைப் போலவே நீங்கள் ஒருத்தியைக் கடந்து போயிருக்கலாம். அவளுக்கு வாழ்க்கையில் வேறேதும் குறையில்லை. திருமணத்தில் எடுத்த பொருந்தா முடிவு தவிர. பொருந்தா முடிவு என்பதற்குள் நுண்ணிய சிக்கல்களுண்டு. விளைவு கையில் வலிந்து பரிசாகத் திணிக்கப்பட்ட மோசமான தாம்பத்ய வருடங்கள். வாழ்தலை விட எல்லாம் விட்டொழிந்து மரணித்துப்போவதில் கூடுதல் பிரியம் அவளுக்கு. மரணம் மிக அருகில் வந்து இரண்டொரு முறை வருடிப்போனதுமுண்டு. அவளின் துன்பங்களை அவள் பக்கமிருந்து ஓரளவு அறிவேன். தற்கொலை முயற்சிகளை விதவிதமாய் செய்பவர்களைக் கண்டால் ஒரு பயமிருப்பதுண்டு. ஒருமுறை முயன்றுவிட்டால் எப்போதிருந்தாலும் அவ்வழியேதான் முடிவு வருமென எவரோ எங்கோ எப்போதோ நம்ப வைத்ததன் வெளிப்பாடுதான் அந்தப் பயம். 

செத்தே தீரவேண்டும் என முடிவெடுத்தால், என்னிடம் அனுமதி பெற்றுவிட்டு செத்துப்போ என்பதுதான் எங்கள் நட்பிற்குள்ளிருக்கும் ஒப்பந்தம். இப்படியான ஒப்பந்தத்திற்கு சத்தியம் பெறுவதே ஒரு கசப்பான முரண்தான். வாழ்வின் மீதான அச்சங்களைக் கொண்டிருப்பவனுக்கு சத்தியங்கள் மீது சற்றேனும் நம்பிக்கை வரலாம். அச்சங்களைக் கடந்து, எல்லாம் துறந்து, வெறுத்து, மறுத்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ள நினைப்பவனுக்கு முதலில் சத்தியம் செய்தது நினைவுக்கு வருமா? சத்தியம் எனும் மெல்லிய நூல் என்ன செய்துவிடப்போகிறது. இந்த சத்தியங்கள் சம்பிராதாயங்கள் எல்லாம் ஒரு திருப்திக்குத்தான்.


மனதில் வெளிச்சமற்றுப் போயிருந்த அவளுக்கு, தன் தோழியின் வீட்டில் காய்ந்த மாலையோடு தொங்கிய தோழியின் கணவனின் நிழற்படம்தான் இதுவரை எவரும் சொல்லித்தந்திடாத வைராக்கியத்தைக் கொடுத்திருக்கிறது. தோழியின் கணவர் இறந்தது, தோழி கடினமாய் உழைத்து பிள்ளைகளை வளர்ப்பது என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும், இருள் கவிழ்ந்த மனநிலையில் அன்று அந்த நிழற்படம் ஏதோ இம்சை செய்திருக்கிறது. விபூதி சந்தனம் குங்குமத்தின் தடயங்கள் மட்டுமே படத்தில் தெரிந்தன. போன இறந்த தினத்தில் இடப்பட்டிருக்கலாம். சட்டத்திற்குள் அடங்கிக்கிடக்கும் அந்தக் கணவனின் விழிகள் இவளைத் தைப்பது போலவே உணர்கிறாள். அவனின் இல்லாமை மட்டுமே அந்தக் குடும்பத்திற்குள் நிரப்பிவைத்திருக்கும் துன்பங்கள் ஏராளம். தோழியின் தனிமை, பிள்ளைகளின் ஏக்கம், சுற்றத்தின் வரம்பு மீறல்கள், இன்னும் இத்யாதிகள். அவளோடு வந்த தம் பிள்ளைகளை ஒரு கணம் பார்க்கிறாள். அந்தப் படத்தை மீண்டும் நன்றியோடு பார்க்கிறாள். தோழியின் கணவனின் கண்களிலிருந்து கருணை கசிவதாய் உணர்கிறாள். மரணம் வெகு தொலையில் அதன் போக்கில் அமைதியாய் இருப்பதாய் நிறைவாய் உணர்கிறாள். பிடிக்காததை ஒரு கணமேனும் ஒதுக்கியோ, விலக்கியோ இந்த வாழ்க்கை எத்தனை அதி அழகானது என்பதை ரசித்து வாழ்ந்துவிட வேண்டுமென்றாள். வாழ ஆரம்பித்துவிட்டாய் என நான் சொல்லவில்லை. வாழ்ந்து கொண்டிருப்பதும் தானாகவே புரியட்டுமே!

கண்டு மாதங்கள் கடந்தும் மனதில் குறுகுறுத்துக்கொண்டிருக்கும் ஒரு படம் “பிரணயம்”. அச்சுதமேனன், கிரேஸ் யதேச்சையாக சந்தித்து காதல் கொண்டு கடிமணம் புரிந்து மகனுக்கு இரண்டரை வயதாகும்போது எதனாலோ விவாகரத்துப் பெற்று பிரிந்து விடுகின்றனர். மகன் தந்தை வளர்ப்பில். நாற்பது வருடங்கள் கரைந்த ஒரு முதுபொழுதில் மாரடைப்பு ஏற்பட்டு ஓய்விலிருக்கும் சூழலில், ஜெயப்பிரதாவை ஒரு லிப்டில் சந்திக்க நேர்கிறது. இன்ப அதிர்ச்சியில் இரண்டாம் முறை நெஞ்சுவலியில் மயங்கிவிழ, ஜெயப்பிரதாவே அவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டி வருகிறது. கலங்கிய மனதோடு வீடு திரும்ப, தத்துவத்தில் துறைப் பேராசிரியாக இருந்து ஓய்வுபெற்று, பக்கவாதத்தில் ஒரு பக்கம் விழுந்து கிடக்கும் தன் நாற்பதாண்டு காலக் கணவன் மேத்யூஸிடம் அச்சு குறித்துச் சொல்கிறாள். இரண்டு குடும்பமும் ஒரே அபார்ட்மெண்டில் வசிக்கிறது. இரண்டு குடும்பத்தினருக்கும் பழைய கதைகள் தெரிய வருகின்றன. அவர்கள் மூவருக்குள்ளும் மிகஅழகியதொரு நட்பு பூக்கிறது. மனைவின் முன்னாள் கணவனை எதிர்கொள்ளும் மேத்யூஸிடம் கொட்டிக்கிடக்கும் புரிதலும், அன்பும் பொறாமைகொள்ள வைக்கிறது. அவர்களின் நட்பை அவர்களின் இரு குடும்பமும் அதிர்ச்சியாய்ப் பார்க்கிறது. ஒரு கட்டத்தில் கொச்சைப்படுத்துகிறது. ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் மூவரும் புறப்பட்டு நெடும் பயணம் துவங்குகின்றனர். ஒவ்வொன்றையும் கொண்டாடுகிறார்கள். பயணிக்கிறார்கள், தாங்கள் மகிழ்ந்திருந்த இடங்களைப் பார்க்கிறார்கள், குடிக்கிறார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், வாழ்வின் அற்புதமான மகிழ்வினை அனுபவிக்கிறார்கள். அப்போது மேத்யூஸ் உதிர்க்கும் ஒரு அற்புத வரி “சொப்னங்கள் காண் மனோகரமானது ஜீவிதம்” (Life is beautiful than dreams). படம் பார்க்கும் நொடியில் வழமையாய் விழும் கூர்மையான வசனங்களைக் கடந்து செல்வது போல் என்னால் இந்த வரியைக் கடந்து சென்றுவிட முடியவில்லை. கனவுகள் எத்தனை வர்ணங்கள் நிரம்பிய ஒன்று. எல்லைகளை உடைத்தெறிந்து விரும்புமளவிற்கு நீட்டித்துக்கொள்ளும் அனுமதியுண்டு. பூட்டுகள் கிடையாது. சன்னல்களைத் திறந்து ஒரு கையில் கடலையும் மறுகையில் மேகத்தையும் தொட கனவில் அனுமதியுண்டு. எத்தனையெத்தனை அனுமதிகள் இருந்தென்ன பயன். மனதையும் உடலையும் உயிரையும் உலுக்க, உறையச் செய்ய, குதூகலிக்கச் செய்ய வாழ்வின் ஆசிவர்வதிக்கப்பட்ட ஒரு நிஜமான பொழுதில்தான் முடியும்.

வாட்ஸப்பில் எங்கள் நண்பர்களுக்குள் ஒரு குழு உண்டு. பெரும்பாலும் தங்களுக்கு வரும் நகைச்சுவைத் துணுக்குகளை, அரசியல், சினிமா பகடிப் படங்களை அங்கு பகிர்ந்து கொள்வதுண்டு. அவ்வப்போது குரல் குறிப்புகளையும் அனுப்பிக்கொள்வதுமுண்டு. அப்படியான ஒரு சூழலில் ஒரு நண்பர் தாம் சொல்லவிரும்பும் ஏதேனும் பொதுத் தகவலை, வித்தியாசமான கதை வடிவிலானதை தன் குரலில் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். மற்றவர்களுக்கு அதற்கு அவ்வழியாகவே மறுமொழி செய்யத் தெரியவில்லையெனினும், அவர் அனுப்பிய குரல் பதிவுகள் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அதை எல்லோருமே அவரவர் வழியில் செம்மையாக செய்ய முயன்றால், மிக முக்கிய ஆவணமாக எடுத்தாளவும் இயலும். ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டேதான் இருக்கின்றோம். எதற்கோ செய்கிறோமென்பதைவிட எதற்காகச் செய்கிறோமென கொஞ்சமே கொஞ்சம் புரிந்துகொண்டால் போதும்.

காலையிலும், இரவிலும் சம்பிராத வணக்கங்களை அனுப்பிக்கொண்டிருந்த தங்கை, சில நாட்களாய் காலையில் தான் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை, ஓரிரு நிமிட அளவிற்கு ஒரு துண்டாய் வாட்ஸப் வழியே பிடித்து அனுப்பத் துவங்கினாள். ஏதோ ஒரு மனப்போக்கில் துவங்கும் அந்த நாளின் துவக்கத்தில் ச்சிலீரென வந்து விழும் ஒரு இசைத்துண்டு சொல்வதற்கரிய ஒரு மனநிலையில் முங்கியெடுக்கும். அந்தப் பாடலின் முன்னும் பின்னுமான வரிகளைத் தேடி மனசு அசைபோடும். அது எந்தப் படமென யோசிக்கத் தோன்றும். அந்த வரிகளுடனான பழைய நினைவுகளை மீட்டியெடுக்க மனம் விழையும். ஒருநாள் ”உனக்கும் பாடவரும் தானே!” எனக் கேட்டேன். இப்போது அவள் குரலில் அவ்வப்போது ஓரிரு வரித் துண்டுகள் வந்து செவி நுழைந்து மனதை நனைத்தபடி.

ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு முயற்சி, ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு திரைப்படக் காட்சி போதுமாயிருக்கிறது. சற்றே புரட்டிப்போட… சற்றே என்ன சற்றே முழுதுமாய்ப் புரட்டிப் போடவும் கூட. வாழ்தலைவிட இனிதாய் என்ன இருந்துவிடப்போகிறதென்பதே இதன் இறுதி வரியாய் இருக்க வேண்டுமெனவும் ஏதோ ஒன்று சொல்கிறது.

-

உத்திரவாதச் சில்லுகள்


தேன் பூச்சிகள்
ஒரு போதும்
தேன் கூட்டில்
சான்றிதழ்களைச்
சேகரிப்பதில்லை

கூடு கலைத்தோ
பெட்டியில் வளர்த்தோ
சர்க்கரைப்பாகு கலந்தோ
விற்பனை செய்பவர்களுக்குத்தான்
தேவைப்படுகிறது
பளிச்சிடும் வண்ணத்தில்
ப்யூர்
ஒரிஜினல் எனும்
உத்திரவாதச் சில்லுகள்!

-