உன் குத்தமா என் குத்தமா!?

தமிழக அரசியலில் தெரிந்தோ தெரியாமலோ, நல்லதோ கெட்டதோ பெரும் பங்கு வகிப்பதுபேச்சுதான். காமராஜர் தோற்றது தமிழக மக்கள் அடுக்குமொழி வசனத்தில் மயங்கிப் போனதினாலும்தான் எனச் சொல்லக் கேட்டதுண்டு. பேச்சு ஒரு சுவை மிகுந்தகலையாக முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மகுடியாக வாசிக்கப்பட்டிருக்கலாம். ஒரு கட்டத்தில் அதேபேச்சுபேசுவதற்கும், செயல்பாட்டிற்கும் தொடர்பே இல்லாதகளைஎன மாறிப்போனதையும் மறுக்க முடியாது.

அரசியல் குறித்த ஆர்வம் தோன்றிய விடலைப்பருவ வயதில் வெற்றிக்கொண்டான் பேச்சைத்தான் அனைவரும் சிலாகித்துப் பேசுவார்கள். வெற்றிக்கொண்டான் பேச்சைக் கேட்டு ரசிக்க எதிர்க் கட்சிக்கார்களே தலையில் முக்காடிட்டவாறு வருவார்கள் என்றும் உசுப்பேற்றியிருந்தார்கள். 90களின் பிற்பாதியில் ஒரு கூட்டத்தில்தான் வெற்றிகொண்டான் பேச்சைக் கேட்டேன். ஆபாசத்திற்கொன்றும் குறைச்சலில்லை. இன்றளவும் நினைவிலிருப்பது சீதாராம் கேசரி காங்கிரஸின் தலைவராக இருந்த காலம் என நினைக்கிறேன். அநேகமாக ஜெயின் கமிசன் சிக்கல் காலகட்டமாய் இருக்கலாம். சீதாராம் கேசரி குறித்து வெற்றிகொண்டான் பேசும் போதுஏரோப்பிளைன்ல அடிபட்டு வுழுந்து முகம் சப்பளிஞ்சு போயி மூஞ்சுறு மாதிரி முகத்தோட ஒருத்தன் இருப்பானே” எனச் சொன்னது இன்றும் நினைவிலிருக்கிறது. தீப்பொறி ஆறுமுகம் பேசியதாக நண்பர்கள் சொல்லக் கேட்பதெல்லாம் இங்கு எழுதமுடியாத வாசகங்கள்.

வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் அளவிற்கு திறமையாக, சுவாரஸ்யமாக(!) பேச ஆள் இல்லையென்றாலும் மற்ற கட்சிக பேச்சாளர்களிலும் ஆபாசமாகப் பேசியவர்களைக் கண்டதுண்டு. அப்படி ஒரு பெண் பேச்சாளர் மிக ஆபாசமாகப் பேசி, அடிதடி நடந்ததாகவும் ஒருமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்.

காலம் வெகுவாக மாறிப்போயிருக்கின்றது. கிராமங்களில் கூத்துகளில் கோமாளிகள் பேசும் கெட்ட வார்த்தைகளைக் கேட்டு மிரண்டு, ரகசியமாய் ரசித்த காலமெல்லாம் மலையேறிப்போய்விட்டன. இப்போதைக்கு எல்லா வீடுகளிலும் சந்தானம், விவேக் வகையறாக்கள் தெளிக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமே பழக்கத்திலுண்டு.

அரசியல் கூட்டங்களில் காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டோ, பாஜகவோ மிகப்பெரிய முழக்கங்களையெல்லாம் முன்னெடுப்பதில்லை. 2009, 2011 தேர்தலில் நரம்பு புடைக்க முழங்கிய சீமானை, அதன்பின் காணும் வாய்ப்பே கிடைக்கவில்லை. மதிமுக கூட்டங்களில் முழக்கங்கள் இருந்தாலும் நாகரீகம் இருப்பதாகவே உணர்ந்திருக்கிறேன். தந்தி டிவி நேர்காணல்களில் நாஞ்சில் சம்பத் தடுமாறும் பொழுதெல்லாம், மதிமுகவில் கர்ஜித்த சம்பத்தா இது எனத் ஆச்சரியப்படுவதுண்டு. அடிக்கடி நடைபெறும் கழகக் கூட்டங்களில் முழக்கங்களை விட வசவுகளுக்கு இடம் அதிகமாகிவிட்டது.

”ஊர்ல இத்தன இலவச கல்யாணம், அத்தன இலவச கல்யாணம்னு பண்றாங்களே, அவங்களுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வெச்சு கொழந்த பெத்துக்கச் சொல்லு. அப்போதான் குடும்பம் குட்டி விலைவாசினு கஷ்டம் தெரியும்” என ஒருவர் பேசுவதையும்

”குடிகார நாயே” என குடிப்பழக்கமுள்ள ஒருவர் பேசுவதையும்

”ஊரெல்லாம் கூத்தியா வெச்சிருக்கியேடா!” என ஒரு பெண் முழங்குவதையும்

”நீ செத்து அனாதைப் பொணமா நாறிப்போய்டு” என தளர்ந்த வயதிலிருக்கும் ஒருவர் சபிப்பதையும்

 “நீ ஆம்பளையா இருந்தா எங்க ஊருக்கு வந்து பாருடா” என ஒருவர் சவால் விடுவதையும் கேட்டுச் சகிக்க வேண்டியதாயிருக்கிறது

பொதுவாக இம்மாதிரியான கூட்டங்களுக்கு முன்பு போல் பொதுமக்கள் கூடுவதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அடுத்த வீதியில் வந்து நிற்கும் வேன், லாரிகளிலிருந்து கும்பல் கும்பலாக இறங்கி ஒரு ஒழுங்கில் வந்து இருக்கைகளை நிரப்பிவிடுகிறார்கள். பொதுமக்களாக விருப்பப்பட்டுக் கூடுவது மிக அரிதான கூட்டங்கள். அதற்கு குறைந்த பட்சம் மிக முக்கியத்தலைவர் அந்தக் கூட்டத்தில் பேச வேண்டியதாக இருக்க வேண்டும். இம்மாதிரியான எல்லாக் கூட்டங்களிலும் கழகப் பேச்சாளர்கள் பேசுவதில்லை. அந்தந்தப் பகுதி கட்சி பொறுப்பாளர்களே அதிகம் பேசுவதை கேட்க நேர்கிறது. பேச்சாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் வேறுபாடு உண்டு. பெரும்பாலும் பேச்சாளர்கள் எனப்படுபவர்கள் அன்றைக்கு மேடையில் தோன்றும் நட்சத்திரங்களே. ஆனால் பொறுப்பாளர்கள் எனப்படுவோர் அந்தந்தப் பகுதியில் மக்கள் பிரதிநியாக இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் அல்லது வருங்காலத்தில் வந்தாகவேண்டும் எனத் துடிப்பவர்கள்.

இப்படி வெறும் உணர்ச்சிப் போக்கில் மட்டுமே பேசுபவர்கள், நம் பகுதியின் வார்டு கவுன்சிலர் பதவிக்கோ, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கோ, நகராட்சித் தலைவர் பதவிக்கோ, மாநகராட்சி தலைமைப் பதவிக்கோ, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ என கடந்த தேர்தலில் வீட்டில் வந்து வாக்குக் கேட்டவர்கள் அல்லது வரப்போகும் தேர்தலில் வந்து கை கூப்பி வாக்குக் கேட்பவர்கள்.

யார் தலைவனாய் வரவேண்டும் என்பது குறித்தெல்லாம் பொறுமையாய், தெளிவாய் யோசிக்க நமக்கு எங்கே நேரமிருக்கிறது. வெற்று முழக்கங்கள் மூலம் வாடகைக் கூட்டத்திடம் கை தட்டல் பெற்று, ஓங்கிய குரலுக்காக அல்லது அதில் தடவியனுப்பும் வன்மத்திற்காக, அதோடு அவர்கள் காட்டும் அதீத பணிவிற்காக மேல் மட்டத்தின் கடைக்கண் பார்வையில்பட்டு, மடமட வேட்டியோடு வெள்ளைச் செருப்போடு மாறி மாறி நம் வீட்டு வாசலில், சாலையோரப் பாதாகைகளில் நிற்கையில் ரெண்டுல ஒன்னத் தொடு என்பது போல் அவருக்கோ அல்லது இவருக்கோ என பொத்தானை அழுத்திவிட்டு, அவர்கள் நல்லது செய்வார்கள் எனக் காத்திருக்கிறோம்.

மேலே அவர்கள் பேசியதாக குறிப்பிட்டிருக்கும் நாலைந்து வரி வசனங்களில் வெளிப்படுத்தியிருக்கும் குணத்தின் வேர்தான் ஆழ வேரூன்றியிருக்கிறது. அதிலிருந்துதான் அவர்கள் முளைத்து கிளை பரப்புவார்கள். கனி கொடுப்பார்கள்.

ஊமத்தை வேரிலிருந்து மல்லிகைப்பூச் செடியும், கருவேலமரத்தின் வேரிலிருந்து வேம்பும் முளைக்குமென நினைப்பது யார் குற்றம்.

ரகசியக் கதவின் திறவுகோல்


வாழ்க்கைப் பயணம் எத்தனை பிரியமானதாய், ஆரவாரமானதாய், அழகானதாய் நாம் நினைத்தாலும் கொண்டாடினாலும் அதிலிருக்கும் வலிமையான ரகசியம் அது நோக்கியிருக்கும் புள்ளி மரணம் என்பதுதானே. ஒருவருக்கு மரணம் தவிர்க்க முடியாததும், அறவே பிடிக்காததுமாய் இருப்பதென்பது எத்தனை கடுமையான முரண்.

வாழ்ந்து முடித்து முதிர்ந்து ஒரு பழுத்த இலைபோல் உதிர்வதற்கும். கனியாய் கனிந்து சுவை தருமெனக் காத்திருக்கையில் ஒரு பிஞ்சு சுற்றுப்புறம் கண்டு மிரண்டு தன்னையே உதிர்த்துக் கொல்லும் தற்கொலை எனப்படும் சுயகொலைக்கும் வலி மிகுந்த வித்தியாசமுண்டு.

நான்கைந்து தின இடைவெளிக்குள் தொடர்பற்ற இரண்டு குடும்பங்களில் இரண்டு தற்கொலைகள். மிகமிகக் கொடுமையான விசயம் இறந்தவர்களின் வயது. ஒன்று கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 17 வயது பெண், மற்றொன்று பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவன்.

இரண்டு மரணங்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஒற்றுமை, இரு குடும்பத்தினராலும் அந்த மரணங்களுக்கு என்னதான் காரணமெனக் கண்டுபிடிக்க இயலவில்லை. துக்கம் விசாரிக்க வந்தவர்களில் 99% பேர் அந்தக் குடும்பத்தினர் தாங்கமுடியாமல் தாங்கும் துக்கத்தைப் பகிர்ந்துகொள்வதைவிட, அந்த மரணங்களுக்கு என்ன காரணம் என்பதை அறிவதிலேயே முனைப்பாய் இருந்தனர். குடும்பத்தினர் துக்கம், வலியுடன் சேர்ந்து மரணங்களின் காரணம் அறியாத பாரத்தையும் சுமந்தனர். காரணங்கள் இல்லாமல் ஏதும் காரியம் நடக்குமா?

நிச்சயமாக அந்தக் குழந்தைகளிடம் தம் மரணங்களுக்கானகாரணம்இருந்திருக்கலாம். அதே சமயம் அந்தக்காரணம்வாழ்வை முடித்துக் கொள்ளக்கூடிய அளவிலான காரணம்தானா என்பதைக்கூட இப்போதை சமூகச் சூழலில் அவர்களால் தீர்மானிக்க முடியுமா எனப் புரியவில்லை. சமூகச் சூழல் எனப் பொதுப்படுத்தபடும் சொல்லின் அர்த்தம் பழியைத் தூக்கி எதன்மேலோ போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்வதில்லை. அந்தத் தளிர்களுக்கு சமூகச் சூழல் என்பது என்னவாக இருந்துவிடப்போகிறது. அவர்களின் உலகம் சிறியதுதானே. இனிதானே பரந்துவிரிய வேண்டும். அப்பா அம்மா, சகோதர உறவுகள், சுற்றம், ஆசிரியர்கள், நட்புகள், காதல், பிடித்தவை பிடிக்காதவை என மிகச் சிறியதுதானே.

எந்த ஒரு குழந்தையும் இவர்களுக்கே பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்றோ, என்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குங்கள் என்றோ பிறப்பதில்லை. பெற்றோர்களாகிய நம் காதலின் பிரியத்திற்கு, காம வேட்கைக்கு, உடல் தினவிற்கு, பாதுகாப்புத் தேவைக்கு, அங்கம்பக்கத்து அங்கீகாரத்திற்கு, சொத்து வாரிசுக்கு எனப்படும் பற்பல காரணங்களாலேயே பிறந்திருக்கலாம். அப்படிப் பிறந்த குழந்தைகளைத்தான், நம் பெருமை மற்றும் ஆசைக்குவளர்க்கிறோம் என்ற பெயரில் வளைக்கிறோம்”. நாம் வளர்க்கும் குழந்தைகளோடு அந்தக் குழந்தைகளின் உலகில் நம்மால் வாழமுடிகிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

நாம் குழந்தைகளாக இருந்த காலம் வேறு, இந்தக் காலம் வேறு. அடிப்படை வேறுபாடு, நாம் குழந்தைகளாக இருந்த காலத்தில் நம் அன்றாட வாழ்க்கையை நாம் வாழ்ந்தோம். நல்லது கெட்டதுகளில் நமக்கும் பங்கிருந்தது. அப்பா அம்மா தாம் வாழும் வாழ்க்கையை மட்டுமே நமக்கும் வாழப் பணித்தார்கள். அவர்களின் சுகதுக்கங்கள் நமக்கும் புரிந்திருந்தன அல்லது புரிய வைக்கப்பட்டிருந்தன. ஆரம்பம் முதலே முறையான வாய்ப்புகளும், கண்டிப்பும் நம்மை வழி நடத்தின
இன்றைக்கு நாம் வாழ்ந்த, வாழும் வாழ்க்கையைக் குழந்தைகளுக்கு வாழக் கொடுக்கக் கூடாது என்பதுதான் முதல் வெற்றியாகப் பாவிக்கப்படுகிறது. இதுவரை நாம் வாழ்ந்திராத வாழ்க்கையைப் பிள்ளைகளுக்கு வாழக் கொடுப்பதுதான் அன்பு என நினைக்கின்றோம். தாம் விரும்பியது, கேட்டது எல்லாம் மிக எளிதாகக் கிடைத்துவிடுமென அவர்களுக்கு நாம் உணர்த்துவதுதான் அவர்கள் மேல் நாம் ஏவிவிடும் முதல் வன்முறை.

அவசரம் எனும் அடுப்புக்குள் நம்மைப் புகுத்திக்கொண்டு எப்போதும் அதன் சூட்டோடு இருக்கப் பழகிக்கொண்டோம். அந்தச் சூடு பொறுக்காமல் உள்ளுக்குள்ளேயே ஓடோடிக் கொண்டும் இருக்கின்றோம். நம்முடைய இன்மையைக் காசு சரிசெய்து நிரப்பிவிடுமெனச் சந்தேகமும் தீர்க்கமும் கலந்து நம்புகிறோம் .

எல்லாமும் கிடைக்க, காசு மட்டுமே போதும், எனவே காசு சம்பாதிக்க ஓடு என்ற பொது மனநிலைக்குப் பிள்ளைகளை வெகு வேகமாக ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் தட்டில் விழுந்து பசியாற்றும் சோற்றில் இருக்கும் சோற்றுப் பருக்கையின் வளர்ப்பையும், வரலாற்றையும் பிள்ளைகளுக்குப் படிப்பிக்காமல் வேறு என்னத்தை வாழ்க்கையில் கற்றுக் கொடுத்து விடப்போகிறோம். ஒரு சோற்றுப்பருக்கை எப்படி வருமெனக் கேட்டால் குக்கரிலிருந்து வருமென்பதே அவர்களின் அறிதலாயிருப்பது போதுமானதாயிருக்கின்றது. இங்கு சோற்றுப்பருக்கை என்பது ஒரு உதாரணம் மட்டுமே.


காசு கொடுத்தால் எதையும் வாங்கமுடியும் என்பது மட்டும் புரிந்துவிட்டால் எதையும் எப்படியும் பயன்படுத்தலாம் என்ற மனநிலைக்கு எவரும் வந்துவிடலாம். எதையும் எப்படியும் வீணடிக்கலாம் என்ற தன்மையும் எளிதில் வந்துவிடும். வீணடிப்பது அந்தப் பொருள் மட்டுமல்ல கிடைத்தற்கரிய வளமும் என்பது எத்தனை பேருக்கு புரியச் சாத்தியமுண்டு. காசு இருந்தால் மீண்டும் வாங்கிவிடமுடியும் என்ற மனநிலை வந்துவிட்டால் எதன் மேலும் பற்றற்றுப் போகும் நிலை வந்துவிடும்.


நமக்குக் கிடைக்காத எல்லா நல்லது, கெட்டதுகளுக்கும் கதவு திறந்து வைத்துவிட்டோம். நாம் வாழாத வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து பார்த்துவிட வேண்டுமென்று வாய்ப்பளித்துவிட்டு, ஏதோ ஒரு முடிச்சில் விழித்துக்கொண்டு, அவர்கள் நம்மைப்போல் இல்லையே எனப் பதறுவதும்கூட ஒரு வித வியாதியே. எந்நேரம் பார்த்தாலும் டிவி, வீடியோ கேம்ஸ் என வருத்தப்படும் பெற்றோர்களுக்கு, அந்த டிவி, வீடியோ கேம்ஸை கொடுத்ததே தாங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்வதில் என்னவோ உளச்சிக்கல் இருக்கின்றதென நினைக்கின்றேன்.

எல்லாமும் மடியில் வந்துவிழுந்துவிடும் என்ற வாழ்க்கையைப் பிள்ளைகளுக்குத் தந்துவிட்டு, ஒரு கட்டத்தில் அவர்கள் தேடிச்சென்று எடுக்க வேண்டிய நிலைவரும்போது அதைத் தேடி எடுக்கும் திறனைக் கொடுத்திருக்கிறோமா எனத் தெரியவேண்டும்.

இப்படி நுணுக்கமாய்க் கவனித்துப் பட்டியலிட ஆரம்பித்தால் அது ஒரு முடிவில்லாத் தொடராக மாறிவிடவும் சாத்தியமுண்டு. மிக அவசரமான கேள்வி குழந்தைகளோடு அவர்கள் உலகத்தில் நம்மால் வாழமுடிகிறதா? அவர்கள் உலகத்திற்குள் நுழைவதற்கான திறவுகோலை எங்கேயோ வைத்துவிட்டோம் என்பதைப் புரிந்துகொண்டால்தான் அதைத் தேடியெடுக்க வேண்டும் என்பதை உணரமுடியும்.

நமக்கும் பிள்ளைகளுக்குமிடையே விழுந்து கிடக்கும் ரகசியக்கதவினைத் திறக்க முடியவில்லை என்பதை எப்படிச் சொல்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. எப்படிச் சொல்லலாம் என்பதை நாம் எப்போதேனும் கற்றுக்கொடுத்திருக்கிறோமா!? அப்படி எதும் எங்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லையே என்பதற்கான தண்டனையாகத்தான் தங்கள் மரணங்களை நம் மடிமீது கிடத்திவிட்டுப் போகிறார்கள். காலப்போக்கில் துடைத்துவிட்டு நடைபோடுவதான நினைக்கலாம், ஆனால் அது அடிவயிற்றியில் கடும் சூடாய் தகித்துக் கொண்டிருக்கிறதென்பதை புரிந்துகொள்ளச் சற்றே அவகாசம் எடுத்துக்கொள்வோம்.