Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Nov 23, 2016

தோற்றுப்போகும் ருசி மொட்டுகளும் அன்பும்

சுவாரசியமான அரட்டையையும் மீறிப் பசித்திருந்த வேளை. நண்பர் வீட்டில் தேநீரோடு, மென் சிவப்பு நிறத்தில் வட்ட வடிவ க்ரீம் பிஸ்கெட்கள் சிலவற்றை ஒரு தட்டில் நிரப்பிப் பரிமாறினார்கள். பசியின் உணர்வில் பிஸ்கெட்கள் கவர்ச்சிகரமாத் தெரிந்தன. தொலைக்காட்சி விளம்பரங்களில் தூள் பறத்தும் பிஸ்கெட் வகை அது. எடுத்துச் சுவைத்தேன். நீட்டி முழக்கிச் சொல்ல வேண்டியதில்லை, ஒற்றை வரியில்இதையெல்லாம் மனுசன் திம்பானா!?” னக் கேட்கலாம் போன்ற சகிக்க முடியாதொரு சுவை.

அந்த நெருடலை என் உடல் மொழியிலிருந்து கவனித்துவிட்ட நண்பர் என்னாச்சு?” என்றார். விருந்தோம்பல் இங்கிதம் என்பதையும் தாண்டி... புரிதல் உள்ள நட்பு என்பதால்என்னங்க டேஸ்ட் இது... கொடுமையால்ல இருக்கு!?” என்றேன். அந்தப் புள்ளியில் நாங்கள் இன்னும் நெருங்கிப்போனோம். “நமக்கு சகிக்கல, ஆனா புள்ளைங்க இதத்தானே திங்குதுங்கஎன்றார்

நண்பரின் பத்து வயது மகனின் மிகப் பிடித்தமான பிஸ்கெட் அது. எது இல்லையென்றாலும் பிரச்சனையில்லை, அந்த பிஸ்கெட் இல்லாவிடில் வீடு ரணகளமாகிவிடும். அன்பு எனும் நிலைப்பாட்டில் குடும்பம் அஞ்சுகிறது. பிள்ளைகளுக்கு பிடித்தது என்றால், எதையும் வாங்கித் தந்துவிடுவது என்பதே அன்பென்றாகி வெகுகாலமாகி விட்டது



இப்படியான சகிக்க முடியாத சுவையில் பிஸ்கெட் தயாரிப்பது யாருடைய தேர்வு. அதுவும் குழந்தைகளை இலக்காக வைத்து ஒரு பிஸ்கெட்டை எந்த அடிப்படை அறத்தோடு தயாரிக்கிறார்கள்? உண்மையிலேயே பிள்ளைகளின் நாக்குகள் காலப்போக்கில் இந்த மாதிரியான ருசியை விரும்பும் அளவிற்கு மாறிப்போய்விட்டனவா? அல்லது தங்கள் வியாபாரத்திற்காக பிள்ளைகளிடம் விளம்பரங்கள் மூலம் அந்த ருசியைக் கொண்டு சேர்ப்பித்துவிட்டனரா?

ஓடிவந்து தட்டிலிருக்கும் பிஸ்கெட்டை எடுத்து இரண்டாகப் பிரித்து க்ரீமை நாக்கில் அப்பி, கைகளில் எச்சில் வழிய ருசித்து ண்ணும் நண்பரின் மகனைப் பார்க்கிறேன். ‘ருசியில் தலைமுறைகளுக்கு இடையே எப்படி இத்தனை பெரிய வேறுபாடு எனும் சிந்தனையின் நீட்சியாய் என் பால்யத்திற்குள் பயணப்படுகிறேன்.

கால் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய நகர்ப்புற வாழ்வியலில் பிள்ளைகளுக்குக் கிடைத்த நொறுக்குத் தீனிகள் எவையென்று நான் அறிந்திருக்கவில்லை. கிராமம் சார்ந்த வாழ்க்கையில் எங்களுக்கு கிடைத்த ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. இப்போது போன்ற சந்தைப்படுத்தல்கள் அப்போது கிடையவே கிடையாது.

சந்தைக்கோ, திருவிழாவிற்கோ சென்றால் மட்டுமே குறிப்பிட்ட சில உணவுப் பண்டங்கள் வாங்கி வருவார்கள். மற்றபடி வீட்டில் இருப்பது, வயலில் கிடைப்பதையொட்டியே தேவைகளைச் சமாளித்துக்கொள்ள வேண்டும்

எண்ணெய் வித்துக்களாக இருப்பினும், அவற்றில் ஒவ்வொருவரையும் கவர்ந்திருப்பது கடலையும் எள்ளும்தான். கடலை என்பது எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வேர்க்கடலை அல்லது நிலக்கடலை. கடலையின் ருசியில் போதுமென நிறைவடைந்து திருப்தியடைவது இன்றளவும் எனக்குச் சாத்தியப்படவேயில்லை. கடலையை எல்லாப் பதங்களிலும் நம்மால் ருசிக்க முடியும்.

விளைந்து முதிர்ந்து இருக்கும் பருவத்தில் செடியோடு பிடுங்கி பச்சைக் காய்களை நெருப்பில் சுட்டு ருசிக்கலாம். காய்கள் எரிந்தும் எரியாமலும் இருக்க, உள்ளே புழுங்கி வெந்து புகை மணக்கும் பச்சை கடலையின் ருசி நினைத்தாலே நாவில் எச்சில் சுரக்க வைக்கும். பறித்த காய்களை வேக வைத்துச் சாப்பிடலாம். வேக வைத்த கடலை சூடாக சாப்பிட்டால் ஒரு சுசி;, ஆற வைத்து தின்றால் வேறு ருசி; அடுத்த நாள் சற்று உலர்ந்த நிலையில் சாப்பிடும்போது இன்னொரு ருசி.

உலர்த்தி, பதப்படுத்திய காய்களை இரண்டு விதங்களில் சுவைக்கப் பயன்படுத்தலாம். ஒன்று இரும்பு வாணலியில் வறுப்பது. மற்றொன்று நெருப்பில் கொட்டி எரிந்து போகாமல் பதமாக எடுப்பது. அடுத்தது பருப்பினைத் தனியாகப் பிரித்து பச்சையாகவோ, வறுத்தோ உண்ணலாம். கடலையுடன் கடித்துக்கொள்ள வெல்லமோ, கருப்பட்டியோ கிடைத்து விட்டால் வயிறு நிரம்பும் வரை உலகம் மறந்துபோகும்

நல்லெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் எள்ளும் ருசி மிகுந்த ஒரு பொருளே. வறுத்த எள்ளுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து உண்பது ருசியின் இன்னொரு உச்சம். இதில் எள்ளு மாவு என்பது கிராமத்தினருக்கே உரியதொரு சிறப்புத் தயாரிப்பு. அதுவொரு கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடு. வறுத்த எள்ளை செக்கில் இட்டு, வெல்லம் சேர்த்து உலக்கையால் மாவாக இடிக்கப்பார்கள். இடிக்கும்போது எழும் மணமே அக்கம்பக்கத்திற்கு எள்ளு மாவின் வருகையை உணர்த்திவிடும்.  எள்ளுமாவுடன் ராகிக்களி இணைத்தால் அல்வா போன்ற பதத்தில் ஒரு இனிப்பு வகை கிடைக்கும். அதன் ருசி குறித்தெல்லாம் சொற்களில் விளக்கிவிடமுடியுமென எனக்குத் தோன்றவில்லை

புளியில் இருந்து எடுத்துக் குப்பையில் போடப்படும் புளியங்கொட்டைகூட ஒரு  நொறுக்குத் தீனிதான். புளியங்கொட்டைகளை தண்ணீரில் ஊற வைத்து, உலர்த்தி அதை வறுத்து உடைத்து தோல் நீக்கினால் சற்று கடினமான பதத்தில் மணக்க மணக்கக் கிடைக்கும். பொழுது போகாத தருணங்களின் தீனி அது.

தேங்காய்த் துண்டுகளுடன் வாழைப்பழம் அல்லது வெல்லம், கருப்பட்டி இணைந்து சீரிய நொறுக்குத் தீனியாகவும், பசிப் பொழுதின் ஆபத்பாந்தவனாகவும் அமையும். பொரியுடன் பொட்டுக்கடலை, மிக்சர், வறுத்த நிலக்கடலை கலந்த கலவை திருவிழாக்காலத் தீனிகள்.

பருவங்களில் பனை மரங்களில் கிடைக்கும் நொங்கு அமிர்தத்தின் பிறிதொரு வடிவமென்றே தோன்றுகிறது. பனங்காய்கள் முற்றிப் பழுத்து விழும் காலைப் பொழுதுகள் கவர்ச்சிகரமானவை. அவற்றைத் தீயில் சுட்டுஉறைந்து கிடக்கும் கமகமக்கும் சாற்றினை உறிஞ்சிச் சுவைக்கலாம். பனம் பழத்தின் கொட்டைகள் வீணாகும் பொருளல்ல. ஒரு ஒழுங்கில் அடுக்கிப் பொறுத்திருந்தால், முளைப்பு துளிர்க்கும். அந்தப் பருவத்தில் வெட்டி உடைத்தால் ருசி மிகுந்த சீம்பு கிடைக்கும். முளைப்பு விட்ட பன்ங் கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்தால், வேர்விட்டு சில வாரங்களில் பனங்கிழங்காக விளைந்து திரண்டிருக்கும். அவற்றைப் பிடுங்கி தனித்தனியாக தீயில் சுட்டு அதன் மணத்தோடு சாப்பிடலாம். வேகவைத்து நார் உறித்து நாட்கணக்கில் சுவைத்துக் கொண்டேயிருக்கலாம்.

வயல்வெளிகளில் பயிர்களுக்கு எப்போதும் தொந்தரவாக, களையாக இருக்கும் கோரைப்புற்களின் கிழங்குகள்கூட குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மணக்கும் ஒரு இணை உணவுதான். விளைந்து நிற்கும் கம்பு, ராகிப் பூட்டைகள், எப்போதாவது வெட்டப்படும் தென்னை மற்றும் பனை மரத்தின் இளங்குருத்துகள் என ஏதேனும் ஒன்று, அதையண்டி இருக்கும் மனிதர்களின் பசி மற்றும் ருசிக்காக தம்மை ஈந்து தருவதில் வஞ்சனைகள் செய்வதேயில்லை.

இவையுள்ளிட்ட இன்னும் எத்தனையோ பதார்த்தங்கள், பொருட்கள் கிராமத்து மனிதர்களின் அன்றாடங்களில் இன்றளவும் அனைவருக்குமான  இணை உணவுகளாக, நொறுக்குத் தீனி வகைகளாக இருந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ருசி இருந்தது, தனித்த சத்துகள் இருந்தன. அவற்றை உண்பதற்கென நம்மிடம் தேவைகளும், காரணங்களும் இருந்தன. இங்கு பட்டியலிடப்படாத, இக்கணத்தில் என் நினைவுகளில் தொலைந்து போன இன்னும் எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன்.

இவை எல்லாமே ‘கால் நூற்றாண்டு காலத்திற்குள்மற்றொரு தலைமுறையின் முன்னால் காணாமல் போய்விட்ட அல்லது காணாமல் போக்கப்பட்ட பதார்த்தங்கள் என்றும் பட்டியலிடலாம். இவற்றின் இடங்களை வணிகம் சார்ந்த தயாரிப்புப் பொருட்கள் மிக எளிதாக, அதேசமயம் மிக வலுவாகப் பிடித்துவிட்டன. பெரு நிறுவனங்கள், பன்னாட்டுத் தயாரிப்புகள், விளம்பர யுக்திகள், பெரும் ஆளுமைகளின் பரிந்துரைப் பாசாங்குகள் எனும் கூட்டு வலைப்பின்னல், நம்மிடமிருந்த பொருட்களிலிருந்து நம்மையும், நம் பிள்ளைகளையும் அந்நியப்படுத்திவிட்டனநம் பிள்ளைகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை, நாம் நம் அக்கம்பக்கம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தீர்மானிக்க முடிவதில்லை. யாரோ தாங்கள் விரும்பிய வண்ணம் தீர்மானிக்கிறார்கள். தங்கள் நோக்கத்தில் நம் வீட்டுப் பிள்ளைகளின் வாயிலாக யார் யாரோ வென்றெடுக்கிறார்கள். அதற்காக இடைவிடாது திறம்படச் செயல்படுகிறார்கள். தம் மண்ணில், தம் சுற்றத்தில் கிடைத்த எல்லா நல்லவற்றைகளையும் தொலைத்த இந்தத் தலைமுறைக்கு எது ருசி, எது ஆரோக்கியம் என்பதிலேயே தெளிவின்மை நிரப்பட்டிருக்கிறது.

பெற்றவர்களும்கூட தங்கள் இயலாமையைச் சமாளிக்க, பிள்ளைகளின் வாய்களை அடைக்க, பிள்ளைகளின் அசட்டு விருப்பத்திற்கேற்ப கவர்ச்சியான ஒரு நொறுக்குத் தீனியை, ஒவ்வாச்சுவை கொண்ட ஒரு பிஸ்கெட்டை, காற்றுப் பையில் அடைக்கப்பட்ட உப்பும் எண்ணையும் மிகுந்த ஒரு பதார்த்தத்தைக் கொடுத்து, அந்தச் சூழலை வென்று விடுகிறார்கள்.

தோற்றுப் போவதென்னவோ, சாயமேற்றப்பட்ட சந்தோசத்தில், மகிழ்ந்து விடுவதாய் கற்பனை செய்துகொள்ளும் பிள்ளைகளின் ருசி மொட்டுகளும், ஆரோக்கியமும் மற்றும் நம் பொருளாதாரமும், உண்மையான அன்பும் தான்!

**

நம்தோழி நவம்பர் 2016

Mar 13, 2013

முற்பகல் செய்யின்...

வாழ்க்கை அத்தனை சுயநலம் மிகுந்ததா? தன்னை ஈன்ற பெற்றோரைக் கூட முதுமையில் சோறு போட மறத்து / மறந்து விடும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தனை சுயநலங்களையும் தாண்டி, எங்காவது யாராவது ஒருவர் சகமனிதனுக்கு தன்னலம் ஏதும் பாராமல் உதவ முன்வரும்போது உள்ளபடியே மனசு நெகிழவே செய்கின்றது.

அப்படி உதவ முன்வருவோருக்கு, அவர் போலவே உதவ இயலாத, மனமில்லாத சமூகம் தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்பதுகூட இல்லை. அவர்களின் சேவையை, தியாகத்தைக் மலினப்படுத்தி நோகடிக்காமல் இருந்தாலே போதும். ஒட்டுமொத்தமாய் அவர்களை ”பொழைக்கத் தெரியாதவன்” என முத்திரை குத்தியோ, ”இப்படியெல்லாம் செய்றாங்னா எதாச்சும் காரணம் இருக்கும்” என குறை காணவோ செய்கிறது.


எப்போதும் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ, அவருக்கான பலன், அவர் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் சரியான நேரத்திலோ, காலம் தாழ்த்தியோ எப்படியேனும் வந்தடைந்தே விடுகின்றது என்பது. ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுவதில்லை. எப்போதும் தங்களைக் குறித்து மனதில் ஒரு திருப்தி இருந்து கொண்டேயிருக்கின்றது.



மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன், ஈரோட்டில் இருக்கும் ஒரு மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு சலுகை விலையில் உணவளிப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழ்மையாய் இருக்கும் 20 நோயாளிகளுக்கு 1 ரூபாய் பெற்றுக்கொண்டு மதிய உணவு அளிப்பதாகவும் சொன்னார். அதன்பின் சில நாட்கள் அந்த மெஸ்ஸிற்கு சாப்பிடச் சென்றேன். அவர்களின் சேவையில் ஒரு நேர்மைத்திறன் இருப்பதை உணர்ந்தேன். மதியம் உணவு வழங்குகையில் சில படங்களை எடுத்துவந்து அதுகுறித்து ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் கட்டுரையை என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதினேன்

 


 

அந்தக் கட்டுரை இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் வாசிக்கப்பட்டது. புதியதலைமுறை இதழ் அதையொட்டி ஒரு கட்டுரை எழுதியது. புதியதலைமுறை தொலைக்காட்சி தனதுபதிவுநிகழ்ச்சியில் மெஸ் உரிமையாளர் திரு. வெங்கட்ராமனை படம் பிடித்து ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.

இந்தச் சூழலில் திரு. வெங்கட்ராமன் தனது மகளுக்கு பொறியியில் சேர்க்கை முயன்றுகொண்டிருந்திருக்கின்றார். சுயநிதிக்கல்லூரியில் மிகுந்த செலவு செய்துதான் சேர்க்கை எனும் சூழல். சேர்க்கை தொடர்பாக தமது மகளோடு சென்னை சென்றிருந்த தினத்தில் ராமகிருஷ்ண மடத்திலிருந்து வெங்கட்ராமனுக்கு அழைப்பு வருகின்றது. இவரின் சேவையைப் பாராட்டிய மடத்தினர், யதேச்சையாக இவரின் குடும்பம் குறித்தும் விசாரிக்கின்றனர். குடும்பம் குறித்துப் பேசுகையில் மகளின் பொறியியல் கல்வி தொடர்பாக சென்னை வந்திருப்பதாகச் சொல்கிறார். மடத்தினர் தங்கள் இடத்திற்கு வரச்சொல்கின்றனர். எல்லா விபரங்களையும் முழுவதுமாக விசாரிக்கின்றனர். மடத்தின் சார்பில் SRM பொறியியல் கல்லூரியில் சேர்க்கைக்கு பரிந்துரைக்கின்றனர். இலவச சேர்க்கை அனுமதி கிடைக்கின்றது.



முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்தை சிரமப்பட்டு கட்டுகின்றனர். சிரமங்களை அறிந்த SRM நிர்வாகம் இரண்டாம் ஆண்டிலிருந்து ஆண்டுக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றிற்கும் விலக்கு அளிக்கின்றது.

மாதங்கள் நகர்கின்றன. TIMES NOW தொலைக்காட்சி வெங்கட்ராமன் அவர்களை அடையாளம் கண்டு, செய்தி வெளியிடுகிறது. அத்தோடு 2013 ஜனவரியில் நடந்த Amazing Indians விருது வழங்கும் நிகழ்ச்சியில் 14 பிரிவுகளில் விருதுகள் வழங்குகிறது. அதில் Ordinary Indians, Extraordinary stories எனும் பிரிவில் திரு. வெங்கட்ராமன் அவர்களைத் தேர்ந்தெடுத்து தம்பதிகளாக டெல்லிக்கு அழைத்து விருது கொடுத்து கௌரவித்துள்ளது.  



விழாவில் குடியரசு துணைத் தலைவர், மத்திய மந்திரிகள், முன்னால் துணைப்பிரதமர் ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. வெங்கட்ராமன் முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி கையால் விருது பெறுகிறார். விருது பெற்ற மேடையில் தனக்குத் தெரிந்த தாய்மொழி தமிழிலேயே நன்றியுரையும் ஆற்றுகிறார்.

மகளுக்கான கல்லூரி சேர்க்கை கிடைத்தபோதும், TIMES NOW விருது வாங்கிய பிறகும் நேரில் வந்து நெகிழ்ந்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார். ஏதோ சேவை செய்துகொண்டிருந்த தன்னை, ஒரு கட்டுரை பலவகைகளில் வெளிச்சமிட்டதாக நெகிழ்ந்துபோவார். அவரிடம் ஒன்றே ஒன்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றேன், ”20 நிமிடங்கள் செலவு செய்து எழுதும் வெறும் கட்டுரை மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துவிடுமா எனத் தெரியவில்லை. ஆனால் தினமும் 20 பேரின் பசியை போக்கிக்கொண்டிருந்த புண்ணியம்தான், பசியாறியவர்களின் வாழ்த்துதான் உங்களை இந்த நிலைமைக்கு உயர்த்தியுள்ளது”.

இன்றும் தினமும் 20 - 40 பேர் வரை மதிய உணவினை 1 ரூபாய்க்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.

தொடர்புகளுக்கு :  
திரு. வெங்கட்ராமன், AMV மெஸ், பவர்ஹவுஸ் ரோடு, நல்லசாமி மருத்துவமனை எதிரில், ஈரோடு-1. செல்: 96290-94020 email: 1rsmeals.amv@gmail.com



முற்பகல் செய்யின், பிற்பகல் விளைவது உண்மைதான்

-
TIMES NOW விருது காணொளி 



-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...