விடுதலை உருவாக்கும் சிறை

புதிரோ, சுவாரஸ்யமோ, அலுப்போ எப்படி எடுத்துக்கொண்டாலும் எல்லோருக்குமே கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடத்தான் ஆசை. ஏதோ ஒரு சூழலில் கன நேரத்தில் தோன்றும் உணர்ச்சி வேகத்தில் வாழ்வை முடித்துக்கொள்வோர், இன்னும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக வாழ்வைத் தியாகம் செய்வோர் தவிர்த்துப் பார்த்தால் வாழ்க்கையை எப்படியாகினும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆசை நிறைந்த வாழ்க்கைப்பயணம், எல்லாம் கடந்து வயது முதிர்ந்து எல்லைக் கோட்டைத் தொடும்போது, அது கொண்டாட்டத்துக்கு உரியாதாகவே நிறைவடைகிறது. அது தவிர்த்து மரண அரக்கனின் அகோரப் பசிக்கு இறையாகும் அகால மரணங்கள் திணிக்கும் வலிக்கு நிகரான வலி இந்த உலகில் எதுவுமே இல்லை.

ஒரு துளி கவனக்குறைவில் விபத்து வடிவில் சிதறுண்டு போகும் வாழ்க்கைப் பயணம், என்னவாகிவிடப் போகிறதென சிறு அலட்சியத்தோடு தள்ளிப்போட்டதால் தின்று தீர்க்கும் நோயால் தீர்ந்து போகும் வாழ்க்கைப் பயணம் என இளவயது மரணங்களைத் தாங்கும் குடும்பங்களின் சுமை, இந்த பூமியைவிட சுமையென்றே தோன்றுகிறது.

இலகுவாய் வாழ்க்கைச் சக்கரத்தை இழுத்துக் கொண்டிருக்கும் குடும்பச் சக்கரத்தில் சட்டென விடுபடும் கன்னியாக ஒரு உறவு மட்டும் விலகும் சூழலில் அந்தக் குடும்பச்சக்கரத்திற்குள் ஏற்படும் தொய்வு, அதிர்வு, தடுமாற்றம் அதன்பின் எதனைக் கொண்டு சங்கிலியில் பிணைத்தாலும் எதாவது ஒரு வகையில் அது வலு, திடம் குறைந்ததாகவே சக்கரத்தை தொய்வோடே நகர்த்திக் கொண்டிருக்கும்.

பிடிமானமாய் பிணைத்துக் கொண்டிருந்த கரத்தில், ஒன்று மட்டும் ஏதோ ஒரு காரணத்தால் நிரந்தரமாய் பிய்த்துக்கொண்டோடும் கடும் வலியைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து, தவிர்க்க இயலாமல், தவிர்க்க விரும்பாமல் அந்தக் கரத்தின் இதத்தை, இளம் சூட்டை, பிடிமானத்தை நினைத்துப் பார்க்கும் நேரங்கள் மிகக் கனமானது. இதுதான் வாழ்க்கை, இதுவும்தான் வாழ்க்கை என வாழ்க்கையைப் புரிய வைக்கும் முக்கியமான நேரங்கள் அவை.

நமக்குள் ஏற்படும் ஒரு பிரிதல் மட்டும் தானா, இதற்கு கொஞ்சம் கூடக்குறைய என, நம்மைச் சுற்றி ஒவ்வொரு மனிதருக்கும் இது போல் ஒரு ஊமை வலி இருக்கத்தானே இருக்கின்றது என்பதையும் மனதில் உள்வாங்கும் போது, வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது, விசித்திரமானது என்பது புரியத்தான் செய்கின்றது. இந்த விசித்திர வாழ்க்கைக்குத்தானா இத்தனை சூதும் வாதும் என நினைக்கும் போது, வெறுமை நிரம்பிய சிரிப்பு மனதிற்குள் வெடித்துக் கிளம்புகிறது.

எதோ நம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமா வாழ்க்கையில் இப்படிப்பட்ட இழப்பு என மனம் கனக்க சிந்திக்கும் நேரத்தில், நம்மையொத்த மனிதர்களில் நம்மோடு கலந்து, பிணைந்து சொல்லாமல் கொள்ளாமல் மண்ணாய், சாம்பலாய் மறைந்து போன மனிதர்கள் ஒவ்வொருவரும் தத்தமது குடுமத்தில் சுமக்க முடியாத சுமையை வைத்து விட்டுப் போய்த்தான் இருக்கின்றார்கள்.

உறவை இழக்கும் வலிகளை அழத் துணிவு கொண்டவர்களால் அழுது கரைக்க முடிகிறது, பேசத் தெரிந்தவர்களால் பேசிக் கரைக்க முடிகிறது, எழுதத் தெரிந்தவர்களால் எழுதிக் கரைக்க முடிகிறது. ஆனாலும், விசித்திரம் என்னவென்றால், என்னதான் கரைத்து எடுத்து கவிழ்த்து தீர்த்தாலும், வற்றாத அமுதசுரபியாய் வலி, மீண்டும் சுரந்து வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மிஞ்சுவது முரண்பட்ட ஒரு நீள் வரி மட்டுமே “இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்


24 comments:

Unknown said...

"விடுதலை உருவாக்கும் சிறை"

Amazing

Unknown said...

எல்லோராலும் இழப்பின் வலியை மட்டும் மறக்க முடியாதது ஏனோ!

நல்லா எழுதியிருக்கீங்க.

vasu balaji said...

இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்”//

மிகச் சரி.

Mahi_Granny said...

ஒவ்வொருவருக்கும் இந்த இடுகையின் ஏதோ ஒரு வரி மனதை கனக்கச் செய்யும் . ஒருவரது விடுதலை இன்னொருவருக்கு சிறை . அருமையாக எழுதியுள்ளீர்கள்

Chitra said...

உறவை இழக்கும் வலிகளை அழத் துணிவு கொண்டவர்களால் அழுது கரைக்க முடிகிறது, பேசத் தெரிந்தவர்களால் பேசிக் கரைக்க முடிகிறது, எழுதத் தெரிந்தவர்களால் எழுதிக் கரைக்க முடிகிறது. ஆனாலும், விசித்திரம் என்னவென்றால், என்னதான் கரைத்து எடுத்து கவிழ்த்து தீர்த்தாலும், வற்றாத அமுதசுரபியாய் வலி, மீண்டும் சுரந்து வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.


.......என் தந்தையின் மறைவு - ஒரு தோழியின் மறைவு - இரண்டிலும், எனது எண்ணங்களும் அதேதான்.

பழமைபேசி said...

மீண்டு வருதல் அவசியம்!

ஆறாம்பூதம் said...

மீண்டு வருதல் அவசியம்.. Move on

காமராஜ் said...

ஆமாம்.இழப்பின் வலி கொடிது கதிர்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்”//

இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறையாக இருக்கலாம்.. இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கும்.. நான் இப்படி மாற்றி யோசித்து தான் சில மரணங்களைத் தாங்கியிருக்கிறேன்..

பழமைபேசி said...

தலைவர் வாழ்க!

*இயற்கை ராஜி* said...

\இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்”/


Fantastic lines...

மோனி said...

//..இந்த விசித்திர வாழ்க்கைக்குத்தானா இத்தனை சூதும் வாதும் என நினைக்கும் போது, வெறுமை நிரம்பிய சிரிப்பு மனதிற்குள் வெடித்துக் கிளம்புகிறது..//

உணர்கிறேன் தோழமையே

sakthi said...

இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்”

இந்த வரி மனசில அப்படியே நிக்குதுங்க

ராமலக்ஷ்மி said...

//“இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்”//

உண்மை. வலி சொல்லும் வரிகள்.

சத்ரியன் said...

//இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்”//

கதிர்,

ஒளி வீசும் வரி.

க.பாலாசி said...

அடைந்துகிடக்கும் பிரிவுணர்களை கொட்ட கொட்ட வடிந்துகொண்டேயிருக்கும்.. இதுவும் ஒன்று..

Thamira said...

உறவின் இழப்பை தேர்ந்த நடையில் ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். சிறப்பான ஒரு பகிர்வு.


உங்கள் இடுகைகளில் பிழைகள் பொதுவாக இருப்பதில்லை. இன்று..

கன நேரத்தில்//

விடுபடும் கன்னியாக//

எதோ//

கொஞ்சம் கவனியுங்கள்.

தாராபுரத்தான் said...

உறவின் பிரிவை மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.ஈரோட்டுக்கு பொடிநடையா புறப்பட்டாச்சுங்க.

Unknown said...

காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். மனம் எல்லாவற்றையும் மறப்பதால் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சிவகுமாரன் said...

இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்”//

...மிக சரியாக சொன்னிர்கள். என் அப்பா இறந்தபோது நான் அழுதது அதிகமாய் அம்மாவுக்ககத்தான். ?

'பரிவை' சே.குமார் said...

"விடுதலை உருவாக்கும் சிறை"

ரொம்ப நல்லாயிருக்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

’விட்டு..விடுதலையாகி நின்று..’ என்று
எண்ணத் தோன்றுகிறது!

Unknown said...

மொத்த பதிவையும் உள்ளடக்குறது கடைசி வரி.....
அன்பிற்குரியவரின் இழப்பின் வலி சொல்லில் அடங்க மறுக்கும்...நினைத்து,நினைத்து ஏங்க வைக்கும் எத்தனை வருடமானாலும்..எத்தனை அழுதாலும் அந்த நாளுக்கு மட்டுமே...மீண்டும் வலிக்கத்தான் செய்கிறது...
இறந்தவர்க்கு விடுதலை,இருப்பவர்களுக்கு சிறை.
if once absent doesnt alter your life,then their presence has no meaning...

Unknown said...

யதார்த்தம் ஆனாலும் அதுதான் உண்மை..உங்கள் பதிவு அருமை..
தொடருங்கள் .