Showing posts with label காகம். Show all posts
Showing posts with label காகம். Show all posts

Dec 30, 2010

இப்பவும் காக்கா கத்துதா?

உதிர்ந்து கொண்டே இருக்கிறது, உறவுகளுக்கிடையே பூசப்பட்டிருந்த பாச வர்ணம். அது ஒரு காலம், மோட்டார் ரூம் மேல் போடப்பட்டிருக்கும் டியூட் லைட் பைப் மேல் அவ்வப்போது அமரும் காகத்தில் ஏதோ ஒன்று கத்தினால் போதும், ”காக்கா கத்தியிருச்சு, ஒறம்பரை வருமாட்ருக்குதே” என யாராவது சொல்வது, பெரும்பாலும் நடந்தேறியிருக்கிறது. காகம் கரைந்து உறவினர் வரும் நாட்கள், காகத்தின் ஒரு வெற்றியாய் திரும்பத் திரும்பப் பேசப்படும். அப்படி காகம் கரைந்தும் உறவினர் எவரும் வராதது தோல்வியடைந்த நாட்களாகவே தோன்றும். காக்கைக்கு ஏற்பட்ட தோல்வி ஆச்சரியமாய் காக்கைக்கு ஒரு போதும் சோர்வைத் தந்துவிடுவதில்லை.

தொலைபேசி என்ற ஒரு கருமத்தை கண்டிராத நாட்கள் அவை. யார் எப்போது வருவார்களெனத் தெரியாத சுவாரசியம் நிறைந்த நாட்கள். காக்கை கரைந்த நாட்களில், கண்ணி வாய்க்கால் நிறுத்தத்திலிருந்து நீளும் தோட்டத்து வரப்புகளை அடிக்கடி கண்கள் சுகித்துக் கொண்டிருக்கும். காக்கைகள் வெற்றி பெறும் தினங்களில் வயல்வெளிகளில் இருக்கும் அம்மாவோ பாட்டியோ, ”அதா பாரு வர்றாங்க” எனும் குரலையொட்டி கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் உருவத்தை வைத்து வருவது ”இவுங்க” “இல்ல அவுங்க” என ஒரு வித பந்தய மனநிலை கோலோச்சும்.

பக்கத்துத் தோட்டத்து எல்லையோரம் இருக்கும் பள்ளத்து ஓரம் வரை ஓடிச்சென்று அழைத்து வர ஓடுவதில் போட்டியும் நிகழும். ஓடிச் சென்று பார்க்க, அவர்கள் வேறெங்கோ செல்பவர்களாய், உறவினர்களாய் இல்லாமல் போகும் கொடுமையும் நடக்கும். அந்த நேரத்தில் துளிர்க்கும் இயலாமை, கோபம், எரிச்சலை அப்படியே பள்ளத்தில் கரைத்து கருமாதி செய்துவிட்டுத்தான் வரவேண்டும்.

உறவினர்கள் வருகையில் குதூகலமூட்டுபவை அவர்கள் வாங்கிவரும் பலகாரமும் பன்னும், விதவிதமான தொனிகளில் இடைவிடாது விழும் அவர்கள் வீட்டுக் கதைகளும். வந்த எவரும் வந்த வேகத்தில் திரும்பியதாக நினைவில்லை. வந்த உறவு ஊருக்குத் திரும்பும் போது, கைகளில் திணிக்கப்படும் நாணயங்களில் உண்டியல்கள் அவ்வப்போது பசியாறும்.

கால ஓட்டத்தில் மோட்டார் சைக்கிள் பரவலான பிறகு, கண்ணி வாய்க்கால் பக்கம் இருந்த கண்கள், தெற்குப்புறமாய் இருக்கும் வண்டிப்பாதையில் பதிய ஆரம்பித்ததோடு காதுகளையும் தீட்டி காத்திருக்க வைத்தது. எப்போதாவது எழும்பும் வண்டியின் ”டுபு டுபு” சத்தத்திற்கேற்ப மனசு தடதடக்க ஆரம்பிக்கும். வண்டியில் வரும் உறவுக்காரர்களின் வருகையும் கூட எப்படியோ காகம் சொன்ன சோசியத்தின் பலனாகவே பலமுறை இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திற்கு சற்று முன்னர் உள்ளடங்கியிருந்த தோட்டத்திற்கும் தொலைபேசி இணைப்பு வந்ததன் தொடர்ச்சியாய், உறவினர் வருகையின் மேலிருந்த சுவாரசியமும் தொலை தூரத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டது. 

விஞ்ஞானம் எல்லாவற்றையும் தந்தது, அதையொட்டிய தேவைப் பிசாசு எல்லாவற்றையும் கலைத்து, பிரித்துப் போட்டது. வெட்டி விட்ட நொங்குக் குலை சிதறியோடுவது போல் குடும்பமும் திசைக்கொருவராய். ஏதோ ஒரு சமாதானம் எல்லாவற்றையும் அனுசரித்துக் கொண்டு பிரிந்து கிடக்க அனுமதிக்கிறது. ஒன்றா இரண்டா, கிட்டத்தட்ட உறவினர்களின் எல்லா வீடுகளிலும் இது போலவே எப்படியோ நடந்தது.

விருந்துகளுக்கு நேரில் போய் அழைக்கும் சாக்கில், உறவினர்கள் வீடுகளுக்கு அவசரகதியாய் ஒரு முறை சுற்றி வரும் முறையும் ”இனிமே நாங்களும் போன் போட்டு சொல்லிர்றோம், நீங்களும் போன் போட்டுச் சொல்லீருங்க, வந்து போயிக்கலாம்” என்ற ஒற்றைச் சமரசத்தில் குத்துயிரும் குலையுயிருமாய்.

காலம் கடந்த தலைமுறை உள்ளடங்கிய அதே கிராமத்தில், நடுத்தர வயதினர் அருகிலிருக்கும் சிறு நகரத்தில், இளம் தலைமுறையினர் பெரு நகரங்களில் என குடும்பமே உறவினர்களாய் சிதைந்து கிடக்கும் நவீன யுகத்தில், இனி குடும்பத்தை ஒன்றிணைக்கவே கத்திக் கத்தி ஓய்ந்து போக வேண்டியிருக்கும் காக்கை கூட்டங்கள்.

அவ்வப்போது உறவினன் போல் போகும் நான், ஏனோ இந்த முறை கவனித்தேன், அழகாய் சுத்தமாய் இருக்கிறது அதே இடத்தில் இடித்துக் கட்டப்பட்ட மோட்டார் ரூம், முன்பு போலவே டியூப் லைட் பைப்பும் இருக்கிறது. ”இப்பவும் காக்கா கத்துதா?” என்று நாக்கின் நுனி வரை வந்த கேள்வியை அப்படியே விழுங்கினேன்.

தோற்கடிப்பது மனிதர்கள்தான் எனத் தெரியாமல் தோற்றுப் போகும் காக்கைகள் பாவம் தானே!!??

-0-

Oct 25, 2009

காக்கை கூட்டமும் கண்தானமும்


இன்னும் நகரத்து சாயல் அதிகம் படியாத கிராமம், நகரத்தில் மகன் வீட்டிற்கு சென்ற பாட்டி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதால், நகரத்தில் அடக்கம் செய்ய விருப்பமில்லாமல், தன் சொந்த கிராமத்திற்கே உடலைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள்.

இறந்தவுடன் தகவல் வந்தது கண்தானம் செய்ய விரும்புவதாக. உடனே கண்வங்கி பிரதிநிதிகளுடன் விரைந்து சென்றோம். இன்னும் உடல் வந்து சேரவில்லை. இரவு பதினொரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, கிட்டத்தட்ட நூறு பேருக்கும் மேல் அந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள் அங்கே குழுமியிருந்தனர். பத்து ஆண்டுகளாக நகரத்து வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுப்போன மனதிற்கு ஆச்சரியமாக இருந்தது.

சில இளவட்டங்கள் சட சடவென அந்த வீட்டை சுத்தம் செய்யவும்,

“பந்தல் காரனுக்கு சொல்லப்பா”

“இருபது லிட்டர் பால் வேணும்னு சொல்லீறு”

“ஏப்பா.. லைட்டுக்கு சொல்லீட்டீங்களா?”

“சமையக்காரனுக்கு சொல்லிட்டேன், காத்தால டிபனுக்கு”

என உரிமையோடு ஆளுக்கு ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர்.

நாங்கள் மட்டும் அந்த சூழலுக்கு கொஞ்சம் புதுமையாக தெரிந்தோம். “யார் என” விசாரித்து “கண் தானம் பெற வந்திருக்கிறோம்” என்றவுடன், எங்களைச் சுற்றி ஒரு கூட்டம் நிற்பதும், தங்களுக்குள் மெலிதாக பேசுவதுமாக இருந்தனர்.

சிறிது நேரத்தில் பாட்டியின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு மேல் ஆண்களும், பெண்களுமாக கூட்டம் பிதுங்கியது. ஒருவழியாக உடலை வீட்டினுள் வைத்து சில பூசைகள் செய்த பின் கண்களை எடுக்க அனுமதித்தனர். செவிலியர்கள் தங்கள் சீருடையுடன் செல்வதைப் பார்த்ததும் எல்லோர் பார்வையிலும் ஒரு ஆச்சரிய மின்னல்

“அட கண்ண தானம் பண்றாங்கப்பா”

“அட நாளைக்கு சாம்பலா போற ஆயா கண்ணு, இன்னொருத்தருக்குத்தான் பிரயோசனப்பட்டுட்டு போகட்டுமே”

“ஏனுங்க நான் எம்பட கண்ண தானம் பண்றதுன்னா என்ன பண்ணனுங்க”

“ஏ... மாமா அவசரப்படறே... நீ செத்துப்போனா நாஞ் சொல்லியுடறேன் அவிகளுக்கு”

இப்படி ஆச்சரியமும், கொஞ்சம் நகைப்புமாக கூட்டம் கலகலத்தது.

வயதானவர்களின் மரணம் ஒரு விடுதலையாக பார்க்கப்படுகிறது. கீழே விழுந்தோ அல்லது நோய் கண்டு கட்டிலில் கிடந்து சிரமப்படாமல் வரும் மரணம் கடவுளின் பரிசாக, நல்ல சாவாக பார்க்கப்படுகிறது.

“ஆத்தாவுக்கு நல்ல சாவுப்பா... கண்ண வேற கொடுத்திட்டுப் போகுது பாரேன்”
இது மாதிரியான பேச்சுகள் மெலிதாய் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஒரு வழியாக கண்களை தானம் எடுத்துக்கொண்டு புறப்படும் போது,

“சார்... உங்க செல் நெம்பர் கொடுத்துட்டு போங்க, ஊர்ல இருக்கிற, எல்லாம் பெருசுக கண்ணையும் புடுங்கிக் கொடுத்திடறோம், முதல்ல எங்க பெரிய பாட்டி கண்ணுதான்” ஒரு குறும்பு பிடித்த இளசு

“அய்யோ... எங் கண்ண குடுக்கமாட்டேன், மேல் லோவத்துக்குப் போன கண்ணு தெரியவேணுமில்ல” மறுக்கும் பாட்டி

“அட கிறுக்குப் புடிச்ச கெழவி, செத்தப்பறம்... நீ என்ன சொல்றது, உம் பசவ புள்ளைவ செரின்னு சொன்னா, அவிங்க வந்து எடுத்துட்டு போயிருவாங்க, நீ கண்ணுக் குடுத்தீனா... உம்பட பிள்ள குட்டிவீளுக்கு புண்ணியஞ் சேரும்” அதே வயதொத்த பாட்டி உரிமையாகச் சொல்ல...

நாங்கள் கிளம்பும் போது கிட்டத்தட்ட நள்ளிரவு பனிரென்டு மணியிருக்கும், கூட்டம் வந்து கொண்டேயிருந்தது. பந்தல் போட குழிகள் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. நாற்காலிகள் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

மரணம் நிகழ்ந்த வீடு, பரபரப்பாக இருந்தது, விடிய விடிய அந்த கூட்டம் கலைவதாக தெரியவில்லை. எண்ணற்ற கிண்டல்கள், நகைப்புகள், கதைகள் விடிய விடிய பேசித் தீர்க்கப்படும். துக்க நிகழ்வுகளை தங்கள் வீட்டு துக்கமாக பார்த்து, கலந்து கொண்டு உடன் இருக்கும் அந்த கிராமத்து மனிதர்களின் சீண்டலும், விளையாட்டுப் பேச்சும் மனதிற்குள் மெலிதாக இனித்தது.

படித்தவர்கள் மத்தியிலேயே கண்தானத்திற்கு பல சொத்தை மறுப்புக் காரணங்கள் இருக்கும் நிலையில் “வீணாகப் போவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே” அல்லது “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்

(கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன். இதில் 55க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட கண்கள் நகரத்து வாசனை இன்னும் அதிகம் படராத உள்ளடங்கிய கிராமங்களிலிருந்துதான்)


அந்த கிராமத்து மக்களைப் பார்த்தபோது, உணவு கிடப்பதைக் கண்டோ அல்லது ஒரு காகம் இறந்து கிடப்பதைக் கண்டோ, ஒரு காகம் கரைந்தவுடனே பலநூறு காக்கைகள் அந்த இடத்தில் சட்டென ஒன்று கூடுவதுபோல் உணர்ந்தேன்.


விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு உச்சமான அலைபேசியின் மின் காந்த அலைகளால் நகர்ப்புறங்களில் காக்கைகள் அற்றுப் போய்விட்டதாக சமீபத்தில் படித்ததாக நினைவு..............
காக்கைகள் மட்டுமா...!!!




-------------------------------------------------------------------------


இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...