தூவும் நன்றி விதைகள்:
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் வேண்டுகோளுக்கிணங்க நடத்தவுள்ள சங்கமம் 2010 நிகழ்ச்சி இலைச்சினையை முகப்பில் வெளியிட்டு, சுட்டி கொடுத்துள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம் திரட்டிகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு, பங்களிப்போடு இணைந்து நடத்தவுள்ள சங்கமம் திரட்டிக்கு நன்றிகள்.
சங்கமம்-2010 நிகழ்ச்சி குறித்து, தங்கள் வலைப்பக்கத்தில் இடுகை எழுதி, இலச்சினையை வெளியிட்டுள்ள சேர்தளம் குழுமம், பதிவுலக நட்புகள், பழமைபேசி, ச.செந்தில்வேலன், சீனா, வானம்பாடி, ராமலஷ்மி, பிரபாகர், ஸ்ரீதர், கார்த்திகை பாண்டியன், சேட்டைக்காரன், காமராஜ், சே.குமார், செ.சரவணக்குமார், விஜி, முனைவர் ப.கந்தசாமி, முனைவர். குணசீலன், டி.வி.ஆர் ராதகிருஷ்ணன், தேனம்மை, ஷம்மிமுத்துவேல், தமிழ்மலர் (யார் பெயராவது விடுபட்டிருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்) மற்றும் குழுமத்தின் அனைத்து தூண்களுக்கும் நன்றி!
நினைவுக்கு வருகிறதா?
பொருளாதார வளர்ச்சி உண்ணும் உணவில் கூட ஆடம்பரத்தையும் அந்தஸ்த்தையும் திணிப்பதை தொடர்ந்து உணர முடிகிறது. விருந்துகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்ட உணவுகளை அதிகம் என்று வீணடிப்பதை விட, தானே எடுத்துப் போட்டு (Buffet) சாப்பிடும்போதும், விலையுயர்ந்த உணவங்களில் கேட்டு வாங்கி வீணடிக்கும் உணவுகளும்தான் மிக அதிகம்.
உணவு சாதாரண கடைகளில் வீணாவதைவிட, விலையுயர்ந்த நட்சத்திர உணவங்களில் வீணடிக்கும் உணவுகளே அதிகம். சமீபத்தில் நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ, விலையுயர்ந்த உணவகத்திற்குச் சென்று வீணடித்த உணவு எவ்வளவு என்று நினைவுக்கு வருகிறதா?
அதுவரைக்கும் உள்ளத்தை உலுக்கிப் போடும் இந்தக் குறும்படத்தைக் கொஞ்சம் பாருங்களேன்!
தமிழ்மணம் விருதுகள்:
தமிழ்மணம் அறித்துள்ள விருதுகளுக்கு…..
- அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் – பிரிவில் கோடியில் இருவர்
- பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் – பிரிவில் ஒரு பயணமும், பெரிய பாடமும்
- ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் – பிரிவில் வவுனியாவுக்குப் போயிருந்தேன் இடுகைகளைச் சமர்பித்துள்ளேன்.
பொறாமையிலும் பெருமை:
கொஞ்ச நாட்களாகவே நான் எழுதும் கவிதைகளுக்கு வரும் பின்னூட்டங்கள், வாக்குகளைவிட எதிர் கவிதைகள்தான் அதிகம் வருகின்றன. அதிலும் கொடுமை என்னவெனில், எதிர் கவிதைகள் எல்லாமே நேர்(!) கவிதைகளைவிட நன்றாக இருப்பதுதான். இதுக்குப் பொறாமைப்படுறதா இல்ல எதிர்கவிதைங்கிற பேர்ல நல்ல கவிஞர்களை உருவாக்கும் (!!!!நோ….நோ திட்டாதீங்க….) என்னை நினைத்து நானே பெருமைப் படுவதா (நோ….நோ…….நோ….. பேட் வேர்ட்ஸ், மீ பாவம்……) எனத் தெரியவில்லை!.
எரியும் விலைவாசியில் ஊற்றிய பெட்ரோல்:
இது வரை இல்லாத அளவாக ஒரே தடவையில் மூன்று ரூபாய் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்ட விடியலில்தான், மத்திய புலனாய்வுத்துறை வரலாற்றுச் சாதனையாக 34 இடங்களில் சோதனை போட்டு சாதனை படைத்துக் கொண்டிருந்தது. (இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ!). எது நடந்தாலும், பொத்திக் கொண்டு மௌனமாக கடந்து போகும் இந்திய மனோபாவம் பெரு முதலாளிகளுக்கும், இந்தியாவை குருதி, வியர்வை சிந்தி கட்டமைத்து(!) வரும் அரசியல்வாதிகளுக்கும் வெகு வசதியாகப் போய்விட்டது! (கொசுறு: எட்டிப்பிடிக்கிற தூரத்துல இருக்கிற இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நம்மூர் காசுல 45 ரூபாய்தான் என நினைக்கிறேன்)
-0-