Showing posts with label கொய்யாமரம். Show all posts
Showing posts with label கொய்யாமரம். Show all posts

Dec 20, 2010

அடைகாத்த கூடு

பள்ளிக்கூடம் கூடும் காலை நேரங்களிலும், ஒன்னுக்குத்தண்ணிக்கு விடும் இண்டெர்வல் நேரங்களிலும், மத்தியான சோத்துக்கு எனும் மதிய இடைவெளியிலும், மாலை பள்ளி முடிந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர் எல்லையைத் தாண்டும் வரைக்கும் கிடைக்கும் நேரங்களில் தான் அத்தனை விளையாட்டுகளையும் ஆடித்தீர்க்க வேண்டும். ஊருக்குள் வீடு இல்லாமல், தனித்த தோட்டத்தில் வளர்ந்ததால் எந்நேரமும் சகவயதுப் பையன்களோடு விளையாடும் வாய்ப்பு அமைந்திருந்ததில்லை. ஊர் எல்லையைத் தாண்டி தோட்டத்துக்கும் போகும் வண்டித்தடத்தில் நுழையும் போது விளையாட்டுகளுக்கான வாய்ப்புகள் தீர்ந்துபோய்விடும்.

வீட்டைச் சுற்றிச்சுற்றி விளையாடும் வாய்ப்புகள் மட்டுமே இருந்த, அந்தச் சிறுவயது காலகட்டத்தில் நான் அதிகம் அடைகாக்கப்பட்டது தோட்டத்தில் கிணற்றுக்கு கிழக்கோரம் இருந்த படர்ந்த ஒற்றைக் கொய்யா மரத்தில் தான். வீட்டையும், கிணற்றையும் சுற்றி இருந்த நொச்சிமரம், வேப்பமரம், பாலமரம், கொய்யாமரங்களில் வழுவழுத் தன்மையோடு, கிளைகள் பரப்பி வசதியாய் இருந்தது கொய்யா மரம் மட்டுமே. கூடுதல் ஈர்ப்பு பருவங்களில் கொத்தும் குழையுமாய் காய்த்துத் தொங்கும் கொய்யாக் காய்கள். பிஞ்சிலிருந்து கனிந்த கொய்யாவரை எதையும் உண்ண முடியும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனிச்சுவை உண்டு.


விவரம் புரிந்தும் புரியாத வயதில் கொய்யா மரத்தோடு கொண்ட பந்தத்தில், ஏதோ ஒரு கிளை மேல் சாகசம் செய்ய முயன்று, தவறி விழுந்ததில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த புண்ணியத்தில் முனியப்பசாமிக்கு கிடா வெட்டுவதாக நேர்ந்து விட்டு பல வருடங்கள் ஆடி மாதத்தில் கெடா வெட்டி விருந்து நடந்ததுண்டு.

வயதுகள் கடக்க, கல்வியைக் கைக்கொள்ள எல்லைகளை நீட்டிக்க வேண்டியதானது. நினைவுகளும் மூப்படைந்து எல்லாம் மறந்தும் போனது, மரமும் விழுந்தது. வருடம் தோறும் இருந்த கெடா வெட்டு, காலப்போக்கில் இரண்டு வருடத்துக்கு ஒன்றாகி, அப்புறம் மூன்று வருடத்துக்கு ஒன்றாகி, இப்போது  கடைசியாய் எப்போது நடந்ததென மறந்தும் விட்டது.

சில வருடங்களுக்கு முன்பு, தோட்டத்துக் கிணற்றுக்கு மேற்குப் புற வாய்க்கால் ஓரம், தப்பிப் பிறந்த செடியாக ஒரு கொய்யா முளைத்து வளர ஆரம்பித்தது. வாய்க்கால் செதுக்கும் போது ”சரி இருந்துட்டு போகட்டுமே” என்று ஒதுக்கி விட்டதில் நெடுநெடுவென வளர்ந்த செடி, கிளைகள் விரித்தது மரமாக நிமிர்ந்து நின்றது. படர்ந்த உறுதியாக கிளைகளோடு, ஒவ்வொரு பருவத்திலும் மரம் கொள்ளா அளவு காய்களால் கனத்து நிற்கிறது. கைக்கு எட்டியதை எளிதில் பறித்து, எட்டாததை கொக்கி கட்டி இழுத்துப் பறித்து என எப்படிப் பறித்தாலும், இயற்கையின் மாயமாய் இலைகளுக்குள் மறைந்திருந்து, பழுத்துச் சிவந்து, வாசம் வீசி பறவைகளையும், அணில்களையும் விருந்துக்கு அழைத்து தன்னை திண்ணக் கொடுத்து, எஞ்சியவையாய் அவ்வப்போது பழத்தின் மிச்சம் விழுவதுமுண்டு.



ஒவ்வொரு முறை தோட்டம் போகும் போதும், கிணற்றைச் சுற்றி வருகையில், தவறாமல் கொய்யா மரத்தினடியில் சென்று கீழாக எட்டும் தூரத்திலிருக்கும் கிளையில் ஒரு முறை தொங்கி விட்டுப்போவது வழக்கம். 

இம்முறை பருவம் முடிந்து கிட்டத்தட்ட காய்கள் தீர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், கொய்யா மரத்தினடிக்குப் போக, ஆங்காங்கெ தென்பட்ட திரண்ட பச்சைக் கொய்யாவிலிருக்கும் கொஞ்சம் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு கலந்த சுவை நாவில் எச்சிலை ஊற வைக்க, பல வருடங்கள் கழித்து தட்டுத் தடுமாறி மரத்தில் தாவி(!) ஏறினேன். ஏறிய பிறகு மரம் இறங்கவிடவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், இலைகளுனூடாக மிதந்து வந்து தழுவிப்போன குளுகுளு காற்று, பாரத்திற்கேற்ப தொட்டிலாட்டிய கிளை, காதோரம் அவ்வப்போது கிசுகிசுக்கும் இலைகள் என நேரம் போனதே தெரியவில்லை.


”என்னப்பா இது, மரத்து மேலேயே உட்காந்திருக்கீங்க” என்ற பாப்பாவின் குரலும், “இதென்னது, கொழந்தையாட்ட மரத்துமேல ஏறிட்டு, எறங்கி வா” என்ற ஆயாவின் குரலும், மனதிற்குள் வெட்கத்தை வரவழைத்தாலும், ஆசை வெட்கத்தை மறந்து மேலேயே தங்க வைத்தது.

அவ்வப்போது அழைத்த கைபேசி அழைப்புகளுக்கும் அங்கிருந்தே ஆடியபடி பதில் சொல்லிக்கொண்டும். வேண்டும் போதெல்லாம் எட்டியெட்டி விதவிதமாய் கிடைத்த காய்களை, பழங்களை பறித்துத் தின்று தீர்த்ததில் கிட்டத்தட்ட 25-30 வருடங்களுக்கு முன்பான காலத்தை கொஞ்ச நேரம் மீட்டெடுத்த மகிழ்ச்சி மனது முழுதும் திரண்டு கிடக்கிறது இன்னும்.

விஞ்ஞானத்திற்கு ஆப்பிள் மரம் போல், ஞானத்துக்கு போதி மரம் போல், மகிழ்ச்சிக்கு(!) ஒரு கொய்யா மரம். 

அடைகாத்த கூடுகளின் இதம், மெதுமெதுப்பு, வெதுவெதுப்பு காசு பணத்திலோ, கண்ணுக்கு முன் விரிந்து கிடக்கும் அறிவியல் தொழில் நுட்பங்களிலோ ஒரு போதும் கிடைத்து விடுவதில்லை.

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...