Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Apr 2, 2014

ஊர்ப் பண்டிகை Vs விடுமுறை தினம்



கடந்த ஒரு வாரமாகவே வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஈரோட்டைச் சார்ந்த நட்புகளில் ஒருவரேனும் தினமும் ஈரோடு மாரியம்மன் குறித்து விசாரித்து விடுகிறார்கள். ”பண்டிகை எப்படிப் போகுது” எனக் கேட்கும்போது நல்லாப்போகுதுங்க என பொதுவாகச் சொல்லிவிட வேண்டியதாகிறது. 

 

ஊரைவிட்டு எவ்வளது தூரம் விலகியிருந்தாலும் உள்ளுர் பண்டிகைமீது அவரவருக்கு ஒரு பிரியம் ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றது. உள்ளூர் பண்டிகைமேல் கொண்டிருக்கும் பிரியம் சற்று சோபையான அழகுகொண்டது. ஒவ்வொரு ஆண்டு பண்டிகையும் ஒவ்வொருவித நினைவுகளை மீட்டித்தரும் சாத்தியங்களுண்டு

கல்லூரி காலத்தில் NSS-ல் இருந்ததால் மூன்று வருடங்கள் மாரியம்மன் கோவிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் கோவில் வளாகத்திற்குள் ஆண் காவலர்கள் வருவதில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெண் காவலர்களும், NSS மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனாலோ என்னவோ வரும் கூட்டத்திடம் எங்களுக்கு கொஞ்சம் கூடுதல் மரியாதை கிடைக்கும். மூங்கில் தடுப்புகள் வைத்து நிறுத்தி நிறுத்தி விட்டாலும் கட்டுக்கடங்காமல் பொங்கிப்பொங்கி கம்பத்தில் தண்ணீர் ஊற்ற வரும் கூட்டத்தின் வேகத்தைப் பார்க்கையில் மிரட்சியாக இருக்கும். இத்தனை பேர் ஊரில் இருக்கிறார்களா என அப்பொழுதெல்லாம் தோன்றும். தலையில் தீர்த்தக்குடம் வைத்து மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று பக்தியை வெளிப்படுத்த நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இருபது வருடங்கள் கழித்து இப்பொழுதும் அப்படியே இரவு பகல் காத்திருந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்திட கூட்டம் அம்முகிறதா எனத் தெரியவில்லை.

ஆளரவமற்ற EVN சாலையில் மூன்று மணியளவில் மின்வாரிய அலுவலக வாயிலருகில் காலை இருவர் நெருப்பிட்டு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். மார்கழி, தை மாதமாக இருந்திருந்தால் குளிர் காய்கிறார்களோ என நினைத்துக்கொள்ளலாம். இந்தக் கோடையில் என்ன செய்வார்களாக இருக்கும் என யோசிக்கும்போதே, மின்வாரிய அலுவலக கேட் முன்பக்கத்தில் கும்பலாக கெடாக்கறி அரிந்து கொண்டிருந்தார்கள். பெருந்துறை ரோட்டில் சக்தி சூப்பர் மார்கெட் தாண்டுகையில் ஒரு ஆட்டை வெட்டி ரத்தத்தை ரோட்டில் சிந்தவிட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லாம் மாரியம்மன் பண்டிகை மகிமை எனத் தோன்றியது.

ஈரோடு நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும், பிழைப்பின் பொருட்டு இங்கு நகர்ந்து குடியேறியவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமுண்டு. எவர் வீட்டின் முன்பு வாகனங்கள் நிற்கிறதோ, வீடுகளுக்குள் உறவுகள் இருக்கிறதோ, எங்கே கறிக்குழம்பு வாசனை வருகிறதோ அவர்களுக்கெல்லாம் இது பண்டிகை தினம். அப்படிப்பட்ட வீடுகளிலிருந்து அழைப்பும் வராமல், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்ட ஒரு தினத்தை வீடுகளுக்குள் முடங்கி டிவியோடு மல்லுக்கட்டுபவர்களுக்கு போர் அடிக்கும் அதிகாரப்பூர்வமில்லா ஒரு விடுமுறை தினம்.

ஆனாலும் இங்கு குடியேறியிருக்கும் வெளியூர் சனம் பெண்டு பிள்ளைகளோடு கோவில் கடைகளை வலம் வந்து, டெல்லி அப்பளம் சாப்பிட்டு ஓரளவு திருப்தியடைந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் பெரும்பான்மையான வீதி முனைகளில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியிருக்கும். இப்பொழுதெல்லாம் அவை குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால் கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும்.

இன்றைக்கு நான் ஆச்சரியமாக உணர்ந்தது, திருவிழா தினமான இன்று பிரப் சாலையின் ஒரு வழியில் பேருந்தை அனுமதித்திருந்ததுதான். அந்தளவுக்கு கூட்டம் குறைந்துவிட்டதா அல்லது போக்குவரத்தை சீராக பராமறிக்கும் அளவிற்கு திறனடைந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

ஈரோட்டிலேயே படித்து, ஈரோட்டிலேயே தொழில் செய்து, ஈரோட்டிலே வாழ்ந்து என வாழ்நாளின் பாதிக்காலம் ஈரோட்டிலேயே கடந்திருந்தாலும், இது எங்கள் ஊர் பண்டிகை என்ற உணர்வு ஏனோ வரவில்லை. மாதக்கணக்கில் கோலாகலாமாய் கொண்டாடப்பட்டாலும், விதவிதமான கடைகள் என சாலையோரம் நிரம்பியிருந்தாலும் கூட, இதைவிட ஒரே ஒரு நாள் நடக்கும் சொந்த ஊரின் மாரியம்மன் பண்டிகைமேல் சற்று கூடுதல் பிரியமும் உரிமையும் இருக்கின்றது. என்னைப்போல் ஊரைவிட்டு நகருக்குள் குடியேறியவர்களின் நிலை இருதலைக்கொள்ளி எறும்புதான். இங்கிருக்கும் திருவிழாவிலும் ஆத்மார்த்தமாய் ஒன்ற முடியாது. ஊரில் நடக்கும் திருவிழாவிலும் அந்த ஒரே ஒரு நாளுக்கு மட்டும் போய் முழுமையாக ஒட்டமுடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றியமைக்கிறது. மாற்றியமைக்கப்படுவதில் சில சிதைந்தும் போவதை மறுக்க முடியாது.

வங்கிப் பரிமாற்றங்கள், கட்டணங்கள் செலுத்துதல், எழுதுதல், வரைதல், பயணச்சீட்டு பதிதல் இப்படி எல்லாவற்றையும் கனிணியில், இணையத்தில் செய்து முடித்துக்கொள்ள நினைக்கும் இந்த தலைமுறைக்கு கடவுளின் அருளும் எதாவது ஒரு இணையப்பக்கத்தில் கிடைத்துவிட்டால் போதுமே என்ற மனோபாவத்திற்கு ஆட்படப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

-




Jan 16, 2012

ஊருக்குப் போனீங்களா?


ஆண்டுக்கு இரண்டுமுறைதான்
அதிசயமாய் பூக்கின்றன விடுப்புகள்
ஆண்டுக்காண்டு அதிகரித்தவண்ணம்
கடைசி நேரப்பயண கசங்கல்கள்
போக்குவரத்துச் செலவுக்குப் பயந்து
போகாமலே சிலகுடும்பம்

வேர்விட்ட பூர்வீகத்திலிருந்து
சூழலின் பொருட்டோ
சுயநலத்தின் பொருட்டோ
நகரத்துக்குள் வேர்களை
முடக்கிக்கொண்ட தலைமுறையின்
தற்காலிக இளைப்பாறல் இது!

பூத்துச் சிரிக்கும் பனித்துளியும்
புழுதிக்காற்றில் வீசும் பூ வாசமும்
தென்னைமரக் கீற்றின் சிலுசிலுப்பும்
வாழையிலையின் கிழிசல்களும்
வைக்கோல் போரின் வாசமும்
மீட்டுகின்றன தொலைந்த நாட்களை

விடுமுறைக்கு மட்டும் எட்டிப்பார்க்கும்
இளைய தலைமுறையை
கரைந்து பரவும் அன்போடும்
கொஞ்சம் கரையாத பொறாமையோடும்
ஏக்கமாய் எட்டியெட்டிப் பார்க்கின்றது
கடந்தகாலத் தலைமுறை!


வீறிடும் தொலைக்காட்சியில்
விளம்பரங்களுக்கிடையே
எப்போதாவது வரும்
திரைப்படக் காட்சியில்
கரைந்து தீர்கிறது
பண்டிகைப் பொழுதுகள்!

அடுத்த பண்டிகை வரை
அவர்களைச் சுமக்கவேண்டும்
அவர்களும் சுமப்பார்களென்று
தான் சுமந்த மனிதர்களை
தற்காலிகமாய் இறக்கிவிட்டு
இளைப்பாறுகிறது நகரம்!

-0

Dec 20, 2010

அடைகாத்த கூடு

பள்ளிக்கூடம் கூடும் காலை நேரங்களிலும், ஒன்னுக்குத்தண்ணிக்கு விடும் இண்டெர்வல் நேரங்களிலும், மத்தியான சோத்துக்கு எனும் மதிய இடைவெளியிலும், மாலை பள்ளி முடிந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர் எல்லையைத் தாண்டும் வரைக்கும் கிடைக்கும் நேரங்களில் தான் அத்தனை விளையாட்டுகளையும் ஆடித்தீர்க்க வேண்டும். ஊருக்குள் வீடு இல்லாமல், தனித்த தோட்டத்தில் வளர்ந்ததால் எந்நேரமும் சகவயதுப் பையன்களோடு விளையாடும் வாய்ப்பு அமைந்திருந்ததில்லை. ஊர் எல்லையைத் தாண்டி தோட்டத்துக்கும் போகும் வண்டித்தடத்தில் நுழையும் போது விளையாட்டுகளுக்கான வாய்ப்புகள் தீர்ந்துபோய்விடும்.

வீட்டைச் சுற்றிச்சுற்றி விளையாடும் வாய்ப்புகள் மட்டுமே இருந்த, அந்தச் சிறுவயது காலகட்டத்தில் நான் அதிகம் அடைகாக்கப்பட்டது தோட்டத்தில் கிணற்றுக்கு கிழக்கோரம் இருந்த படர்ந்த ஒற்றைக் கொய்யா மரத்தில் தான். வீட்டையும், கிணற்றையும் சுற்றி இருந்த நொச்சிமரம், வேப்பமரம், பாலமரம், கொய்யாமரங்களில் வழுவழுத் தன்மையோடு, கிளைகள் பரப்பி வசதியாய் இருந்தது கொய்யா மரம் மட்டுமே. கூடுதல் ஈர்ப்பு பருவங்களில் கொத்தும் குழையுமாய் காய்த்துத் தொங்கும் கொய்யாக் காய்கள். பிஞ்சிலிருந்து கனிந்த கொய்யாவரை எதையும் உண்ண முடியும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனிச்சுவை உண்டு.


விவரம் புரிந்தும் புரியாத வயதில் கொய்யா மரத்தோடு கொண்ட பந்தத்தில், ஏதோ ஒரு கிளை மேல் சாகசம் செய்ய முயன்று, தவறி விழுந்ததில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த புண்ணியத்தில் முனியப்பசாமிக்கு கிடா வெட்டுவதாக நேர்ந்து விட்டு பல வருடங்கள் ஆடி மாதத்தில் கெடா வெட்டி விருந்து நடந்ததுண்டு.

வயதுகள் கடக்க, கல்வியைக் கைக்கொள்ள எல்லைகளை நீட்டிக்க வேண்டியதானது. நினைவுகளும் மூப்படைந்து எல்லாம் மறந்தும் போனது, மரமும் விழுந்தது. வருடம் தோறும் இருந்த கெடா வெட்டு, காலப்போக்கில் இரண்டு வருடத்துக்கு ஒன்றாகி, அப்புறம் மூன்று வருடத்துக்கு ஒன்றாகி, இப்போது  கடைசியாய் எப்போது நடந்ததென மறந்தும் விட்டது.

சில வருடங்களுக்கு முன்பு, தோட்டத்துக் கிணற்றுக்கு மேற்குப் புற வாய்க்கால் ஓரம், தப்பிப் பிறந்த செடியாக ஒரு கொய்யா முளைத்து வளர ஆரம்பித்தது. வாய்க்கால் செதுக்கும் போது ”சரி இருந்துட்டு போகட்டுமே” என்று ஒதுக்கி விட்டதில் நெடுநெடுவென வளர்ந்த செடி, கிளைகள் விரித்தது மரமாக நிமிர்ந்து நின்றது. படர்ந்த உறுதியாக கிளைகளோடு, ஒவ்வொரு பருவத்திலும் மரம் கொள்ளா அளவு காய்களால் கனத்து நிற்கிறது. கைக்கு எட்டியதை எளிதில் பறித்து, எட்டாததை கொக்கி கட்டி இழுத்துப் பறித்து என எப்படிப் பறித்தாலும், இயற்கையின் மாயமாய் இலைகளுக்குள் மறைந்திருந்து, பழுத்துச் சிவந்து, வாசம் வீசி பறவைகளையும், அணில்களையும் விருந்துக்கு அழைத்து தன்னை திண்ணக் கொடுத்து, எஞ்சியவையாய் அவ்வப்போது பழத்தின் மிச்சம் விழுவதுமுண்டு.



ஒவ்வொரு முறை தோட்டம் போகும் போதும், கிணற்றைச் சுற்றி வருகையில், தவறாமல் கொய்யா மரத்தினடியில் சென்று கீழாக எட்டும் தூரத்திலிருக்கும் கிளையில் ஒரு முறை தொங்கி விட்டுப்போவது வழக்கம். 

இம்முறை பருவம் முடிந்து கிட்டத்தட்ட காய்கள் தீர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், கொய்யா மரத்தினடிக்குப் போக, ஆங்காங்கெ தென்பட்ட திரண்ட பச்சைக் கொய்யாவிலிருக்கும் கொஞ்சம் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு கலந்த சுவை நாவில் எச்சிலை ஊற வைக்க, பல வருடங்கள் கழித்து தட்டுத் தடுமாறி மரத்தில் தாவி(!) ஏறினேன். ஏறிய பிறகு மரம் இறங்கவிடவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், இலைகளுனூடாக மிதந்து வந்து தழுவிப்போன குளுகுளு காற்று, பாரத்திற்கேற்ப தொட்டிலாட்டிய கிளை, காதோரம் அவ்வப்போது கிசுகிசுக்கும் இலைகள் என நேரம் போனதே தெரியவில்லை.


”என்னப்பா இது, மரத்து மேலேயே உட்காந்திருக்கீங்க” என்ற பாப்பாவின் குரலும், “இதென்னது, கொழந்தையாட்ட மரத்துமேல ஏறிட்டு, எறங்கி வா” என்ற ஆயாவின் குரலும், மனதிற்குள் வெட்கத்தை வரவழைத்தாலும், ஆசை வெட்கத்தை மறந்து மேலேயே தங்க வைத்தது.

அவ்வப்போது அழைத்த கைபேசி அழைப்புகளுக்கும் அங்கிருந்தே ஆடியபடி பதில் சொல்லிக்கொண்டும். வேண்டும் போதெல்லாம் எட்டியெட்டி விதவிதமாய் கிடைத்த காய்களை, பழங்களை பறித்துத் தின்று தீர்த்ததில் கிட்டத்தட்ட 25-30 வருடங்களுக்கு முன்பான காலத்தை கொஞ்ச நேரம் மீட்டெடுத்த மகிழ்ச்சி மனது முழுதும் திரண்டு கிடக்கிறது இன்னும்.

விஞ்ஞானத்திற்கு ஆப்பிள் மரம் போல், ஞானத்துக்கு போதி மரம் போல், மகிழ்ச்சிக்கு(!) ஒரு கொய்யா மரம். 

அடைகாத்த கூடுகளின் இதம், மெதுமெதுப்பு, வெதுவெதுப்பு காசு பணத்திலோ, கண்ணுக்கு முன் விரிந்து கிடக்கும் அறிவியல் தொழில் நுட்பங்களிலோ ஒரு போதும் கிடைத்து விடுவதில்லை.

-0-

Nov 17, 2010

ஒரு ஏழு மணி எழவு


செல்லாத்தா செழிப்பா வாழ்ந்தது பட்டிக்காடு
புருசனுக்கு பிறகு பட்டணத்துல பையனோட
நாலாவது மாடியில பளபளன்னு தங்க(க்) கூடு
எல்லாம் வீட்டுக்கே வந்துடும் மனுசமக்கா தவிர

வேலைக்கு ஆளு, வெளுக்கறதுக்கு மெசினு
போகவரக் கார், பெரிய கலர் டிவி, ஏசி மெசின்
படுக்க பஞ்சு மெத்தை, பக்கத்திலயே கக்கூஸ்
காசு இருந்தா என்ன குறை பட்டணத்துல

நெஞ்சுல சுருக்குங்குதேன்னு கூப்பிட
பரிட்சை புத்தகத்தோட ஓடிவந்த பேத்தியும்
பதறியடிச்சு ஓடிவந்த மருமகளும்
தந்த தண்ணியில ரெண்டு வாய் எறங்கல

மேல் வீட்டு கம்பவுண்டர கூப்பிட்டுப் பார்க்க
பேச்சும் இல்ல பேசறதுக்கு மூச்சும் இல்ல
எந்தச் சிரமும் வைக்காம ஏழுமணிக்கு
செத்துப் போச்சு செல்லாத்த கெழவி

கடிகாரத்தப் பார்த்து நேரத்த குறிச்சிட்டு
பாயை விரிச்சு பாட்டி உடம்ப படுக்கைல போட்டு
கலைஞ்சு கெடக்குற வீட்ட கொஞ்சம் அடுக்குறதா
கண்ணுமூடுன பாட்டிக்கு அழுவறதான்னு நிக்க

செல்லாத்தா மகனுக்கு தகவல் வந்தப்போ
ஏழுமணி வியாபாரக் கூட்டம் பிதுங்குச்சு
கல்லா மாத்திவிடற கணக்குப்பிள்ளை லீவு
எப்படியும் கடைமூட இன்னொரு மணி ஆகும்

வெளியூருக்கு லைனுக்குப் போன பேரனுக்கு
எந்த போன்லயிருந்து கூப்பிட்டாலும் ஏனோ
தொடர்பு எல்லைக்கு வெளியவே இருக்கானாம்
எப்போ வருவானோ கொள்ளிக்குச் சொந்தக்காரன்

பங்காளி வீட்டுக்கும் ஊருக்கும் சொன்ன கையோட,
பக்கத்து வீடு, எதுத்த வீடுன்னு தட்டிச் சொல்லியும்
ஏனோ இன்னும் ஒருத்தரும் வந்து சேர்ந்தபாடில்ல
ஒருவேள ராத்திரி சோறு தின்னுட்டு வருவாங்களோ

அசையாம கிடந்த செல்லாத்தா மூஞ்சியில
அழைக்காமலே அலையலையா மொய்க்குது ’ஈ’
எல்லாம் சுளுவா கிடைக்கிற பட்டணத்துல
ஏனோ எழவுக்குத்தான் ஒரு சனத்தையும் காணல

___________________

Aug 13, 2010

சாணென்ன மொழமென்ன?




அடங்காப் பசியிலும் அவிச்சு திங்காம
கைபடாம காத்துப்படாம பத்திரப்படுத்தி
அடைகாத்த வெதப்பயறு
ஆடி மாசம் வராத தண்ணியால
பூச்சி புழுவுக்கு சோறாப்போச்சு...

வாரக்கணக்குல கருக்கிய மானம்
வழியவுட்ட ஒத்த மழைய நம்பி
ஏமாந்து வெதச்ச சோளம்
மறு மழை பேயாம போனதுல
மண்ணோட புழுங்கிப்போச்சு...

தப்பித் தவறி மொளைச்சு கிளைச்சு
தழைச்சு நின்னு தலைநிமிர்ந்து சிரிக்கையில
ஐப்பசியில வந்த அடைமழை
பேய் மழையா நின்னு பேஞ்சதுல
மூழ்கி அழுகிப்போச்சு...

வெள்ளைக்காரன் போடற துணிக்கு
வெளிநாட்டுக்கார் வாங்குன முதலாளி
வெளியேத்துன சாயத்தண்ணியில
கொஞ்ச நெலமும் செத்துப்போச்சு
குடிதண்ணியும் வெசமாச்சு...

தலைக்கு மேல அட சாணென்ன மொழமென்ன
போனது போட்டும் நடப்பது நடக்கட்டும்
எல்லா ஊருக்கும் கொடுத்துட்டாங்களாமே
கரியில்லாத கேஸ் அடுப்பும் கலர் டிவியும்
எப்படா கொடுப்பாங்க நம்மூருக்கு?
___________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...