Showing posts with label ஈரோடு சங்கமம். Show all posts
Showing posts with label ஈரோடு சங்கமம். Show all posts

Dec 19, 2011

இளஞ்சூடாய் இன்னுமிருக்கும் கைகுலுக்கல்கள் – சங்கமம் 2011


கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கமம் நிகழ்ச்சி நடந்தவுடன், உடனுக்குடன் பரபரப்பாக அதுகுறித்து இடுகையெழுதுவது வழக்கம். இந்த முறை மிகமிக குறுகிய காலத்தில் கொஞ்சம் வித்தியாசமான திட்டமிடல், அதற்கான மிகக்கடின உழைப்பு, எப்படி செய்யவேண்டும் என நினைத்தோமோ, கிட்டத்தட்ட அப்படியே செய்ததாக ஒரு மனநிறைவு என்று நிறைவடைந்ததில்ல், பலதரப்பட்ட மனோநிலைகளில் மாறிமாறி உழன்றுகொண்டிருந்த என்னால், எனக்குள் வேறு வேறு திசைகளில் பரபரப்பாய் பறக்கும் வார்த்தைகளை எட்டிப் பிடித்து உடனே வரிகளுக்குள் கோர்க்க முடியாமல் போனது.

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்மதிய நேரத்தில் இரண்டு நாட்களாகத் தொலைத்த உறக்கத்தைச் சரிசெய்ய விழுந்தாலும், எள்ளவும் தூக்கம் எட்டவில்லை. மாலை 6 மணிக்கு விஸ்வம் அண்ணன் வீட்டில் குழும நண்பர்கள் சந்திப்போம் என முடிவெடுத்திருந்ததால், அப்படியே ஒரு அரை மயக்கத்தில் அங்கு வந்து எல்லோரும் கூடிப் பேசிப்பேசி சிரித்து சிரித்து சிரித்து சிரித்து, வலித்த வயிற்றுக்கு இதமாய உணவு உண்டு பின்னரவில் பிரிந்தபோதும் என் கைகளுக்குள் வார்த்தைகள் வந்து சிக்கவில்லை
.
எங்களின் மகிழ்ச்சி, எங்களுக்குள் அலையடிக்கும் நெகிழ்ச்சியை அப்படியே எடுத்துக்கொட்டிட இப்போது நான் முயற்சிக்கும் இந்த வார்த்தைகள் சரியானவைதானா என்ற சந்தேகமும் இருக்கின்றது.



முதலில் இந்த ஆண்டு சங்கமம் தேவையா இல்லையா என்ற ஒரு நிலைப்பாடு எங்களுக்குள் சில மாதங்களாவே இருந்துகொண்டுதான் இருந்தது. அதற்கு ஒரே காரணம் வலைப்பதிவுலகம் சற்றே தொய்வாக இருந்தது மட்டுமே. ஆனாலும் தனிமனிதனாகப் போராடி எங்களை ஊக்குவித்து, இதை நடத்த வைத்தது சந்துரு அண்ணன் மட்டுமே. எனவே இந்த முறை வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் பரிட்சயம் இல்லாதிருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் நண்பர்களையும் அழைப்போம் என்று முடிவானது

நடத்தலாம் என முடிவெடுத்த பிறகு பெரிய அரங்கு வேண்டும் எனத்தேடியதில், நாங்கள் விரும்பியவண்ணம் கிடைத்தது இந்த ரோட்டரி அரங்கு. டிசம்பர் 6ம் தேதி இரவு ஏழு மணிக்கு ஆரூரன், அரங்கிற்கு முன்பணம் கொடுத்த ரசீதை என்னிடம் அளித்தபோது அதில் 18ம்தேதி எனக்குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, அதிர்ந்து கேட்டேன் “என்ன மாம்ஸ், வெறும் 11 நாள்தான் இருக்கு, எப்படி?” என்றேன் “என்ன பண்ணுவீங்களோ தெரியாது, நடத்துறோம், அதுவும் சூப்பரா” என்று சொல்ல சந்துரு அண்ணன் அழைத்து “சாப்பாடு விசயத்தை (திட்டமிடல்) முழுக்க முழுக்க  பார்த்துக்குறேன். நிகழ்ச்சிக்கு திட்டமிடவேண்டியது உங்க பொறுப்பு” எனச் சொல்லிவிட, அடுத்த நாள் மிக அவசரமாக குழும உறுப்பினர்களை அழைத்தோம். பேசினோம் பேசினோம் என்ன பேசினோம் என்று தெரியவில்லை. எந்த முடிவுக்கு வரவும் முடியவில்லை. ஆனால் சமூக வலை தளங்களில் இயங்கும் சிலரை அழைத்துப் பாராட்டுவது என்று மட்டும் ஒருவரி முடிவு எட்டப்பட்டது. யாரை எப்படித் தேர்வு செய்வது என்பது ஒரு குழுவின் பொறுப்பில் விடப்பட்டது. சிறப்புவிருந்தினராக மக்கள் சிந்தனைப் பேரவையின் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை அழைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

பட்டியல் தயாரானவுடன், நான், ஜாபர், ஆரூரன், பாலாசி, சந்துரு அண்ணன், கார்த்திக் என ஆளாளுக்கு ஒவ்வொருவரை அழைத்தும், மின் மடல் வாயிலாகவும் விழாவுக்கு வரவேண்டும் என ஒப்புதல் பெறத் துவங்கினோம். ஒப்புதல் கிடைத்தபிறகு டிசம்பர் 9ம் தேதி முறைப்படியாக அவர்களுக்கு மின்மடல் வாயிலாக அவர்களை பாராட்ட விரும்புவதையும், அதற்காக அவர்களின் சுயவிபரங்கள், குறிப்பிட்ட பல தகவல்கள், புகைப்படங்கள் என கேட்டோம்.

அடுத்த நாள் டிசம்பர் 10ம் தேதிதான் குழுமம் சார்பில் சங்கமம் குறித்து முறைப்படியான அழைப்பு என் வலைப்பக்கத்தில் விடுக்கப்பட்டது.  ஃபேஸ்புக், ட்விட்டர் உட்பட வேறு தளங்களிலிருந்தும் அழைத்ததால், பங்கேற்பாளர்களின் வருகை மின்மடல் வாயிலாக உறுதிசெய்யுமாறு கேட்டிருந்தோம். அதில் தொடந்து வந்த பதிவுகள் எங்களை மேலும் வேகம்கொண்டு இயக்கத்துவங்கியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நபர்களைப் பற்றிய விபரங்கள், படங்கள் சேகரிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்தது. ஒருவாராக அனைத்தையும் சேகரித்து ஒட்டுமொத்தமாக தயாரிப்பு பணி துவங்கியது டிசம்பர் 16ம் தேதி காலையில் தான். மே

இதை எப்படி மேடையில் வழங்குவது என்பது குறித்து மூளைக்குள் ஒரு போராட்டம் நடந்துகொண்டேயிருந்தது. எப்போதும் மண்டைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஒரு பூச்சி ஓடுவதுபோல் சிந்தனை ஓடிக்கொண்டேயிருக்கும். தேநீர் அருந்த செல்லும் வேளைகளில் கார்த்தியிடம் நகைச்சுவையாக புலம்புவதும் உண்டு, ”எப்படியாச்சும் திடீர்னு 18ம் தேதி மதியம் இரண்டு மணி வந்துடக்கூடாதா?, எப்படியோ எல்லாத்தையும் முடிச்சுட்டோம்னு இருந்திட மாட்டோமா?” என்று.

மின்மடல் வாயிலாக பதிவு செய்பவர்களுக்கு பதில் அளிப்பது, உதவி செய்வது என அனைத்து வேலைகளையும் பாலாசி எடுத்துக்கொண்டார். வெளியூரிலிருந்து வருகின்றவர்களுக்கான அறைகள், வாகனவசதிகள் ஏற்பாடு செய்வதை ஜாபர் எடுத்துக்கொண்டார். சிறப்பு விருந்தினருக்கான கவனத்தை ஆரூரன் எடுத்துக்கொண்டார்.

ஃபேஸ்புக் நண்பர் நந்தகுமாரிடம் பாராட்டு பெறுவோரை மேடைக்கு அழைக்கும் நிகழ்ச்சிக்கு என்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டேன். இருவர் போதாது என்பதால் இன்னும் சிலரை மனதிற்குள் குறித்து அணுக அவர்களின் சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த நேரத்தில் பொதிகை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ”தென்காசி தமிழ்ப்பைங்கிளி” அருள்மொழி மீரா அவர்கள் ஈரோடு சங்கமத்திற்கு வருவதாகத் தெரிவித்தையொட்டி இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று அணுகினேன். ஈரோட்டில் இருக்கும் தமது மாமியார் வீட்டுக்கு சனிக்கிழமை வருவதாகச் சொன்னார். சென்னையிலிருந்து வந்தவர் நேராக என்னைச் சந்தித்து, எப்படி நிகழ்ச்சியை வழங்கலாம் என ஆலோசித்துவிட்டு அன்று மாலையே நிகழ்ச்சியை ஒருமுறை ஒத்திகை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.

பாராட்டுப் பெறுவோரிடம் சேகரித்து வைத்திருந்த நிழற்படங்களைக் காட்சிப்படுத்தும் பணியை அகல்விளக்கு ராஜா எடுத்துக்கொண்டார். ஒருநாள் முழுக்க உணவையும் மறந்து அதற்காக உழைத்த ராஜாவின் பணி அளப்பரியது.

பாராட்டுப்பெறுபவர்களை அரங்கின் கடைசி வரிசையில் அமர்த்தி, அவர்கள் குறித்த விபரங்களை வாசிக்கும்போது, திரையில் அவர்கள் குறித்த காட்சிகள் ஓடும், அதன்பின் அவர்களை மேடைக்கு அழைத்து பாராட்டி ஒரு கேடயமும், நினைவுப் பரிசும் வழங்குவதாக ஏற்பாடு. மேடையில் சிறப்பு விருந்தினரின் கையில் அவைகளைக்கொண்டு வந்து சேர்ப்பிக்க குழந்தைகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தோம். கடைசி இருக்கையில் இருந்து மேடைக்கு பாராட்டுப் பெறுவோர் நடந்துவரும் வரையில் இருக்கும் இடைவெளியை நிரப்பிட இசைக்குழுவை ஏற்பாடு செய்யலாமா, இசைக்கோப்புகளை வைத்து சமாளிக்கலாம என யோசிப்பின் கடைசி நுனியில் சந்துரு அண்ணன் தெரிவித்த மேளதாளம் ஒருமனதாக மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலையிலிருந்து சந்துரு அண்ணனும் விஸ்வம் அண்ணனும் சமையல் பணிகளை மேற்பார்வை பார்த்துக்கொள்ள, பதாகைகள் பரிசுப் பொருட்கள் என ஜாபரும் ஆரூரனும் ஓட, அடையாள அட்டைகள், கேடயங்கள் என லவ்டேல்மேடி ஒரு பக்கம் ஓட என எல்லோரும் திசைகள் தோறும் ஓடிக்கொண்டிருந்தோம்

ஒருவாராக கிட்டதட்ட தயாரான மனோநிலையோடு சனிக்கிழமை மாலை அரங்கிற்குச் சென்று மேடையில் பதாகை பொருத்தி, நாற்காலிகள் போட்டு, ஒலிவாங்கி, காட்சிக் கருவி என எல்லாம் எங்கள் வசதிக்குப் பொருத்தி, மேளதாளக்காரர்களையும் அழைத்து ஒத்திக்கைக்குத் தயாரானோம். அருள்மொழி மீரா, நந்தகுமார் ஆகியோருடன் மீண்டும் மீண்டும் வாசிப்பு என ஒருவழியாய் ஒத்திகையை நிறைவுசெய்து பின்னிரவில் அங்கேயே உணவு உண்டு கலைந்தோம்.

அப்போதே சென்னை, மதுரைப் பதிவர்கள் என சங்கமம் களைகட்டத்துவங்கியது. அவர்களுக்கான கவனிப்பு அறைகள் என ஜாபரும், சங்கவியும் சுழன்றடித்து வேலை செய்ததைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இரவு பத்துமணிக்கு மேல், திடீரென நந்தகுமாரை  தவிர்க்க இயலாது அடுத்தநாளைய ஒரு பணி அழைக்க, அவர் என்னை அழைத்தார். அப்படி அழைத்தவர் எந்தவிதப்பதட்டத்தையும் என் மேல் திணிக்காமல் மிக நேர்த்தியாக தன் சூழலைச் சொல்லி, தனக்குப் பதிலாக எங்கள் நண்பர் மகேஷ்வரன் அவர்களை தன் இடத்தில் நிரப்பலாமா எனக் கேட்டு, அவரை அழைத்து, தன்னிடம் இருந்த கோப்புகளைக் கொடுத்து, அவரை தயார்படுத்திக்கொள்ளப் பணித்தார். இக்கட்டான சூழலை மிக நேர்த்தியாக் கடக்கச் செய்த நந்தகுமாரை நான் பாராட்டியே தீரவேண்டும்.

இரவு கலைந்த பிறகும் இருவருக்கான விபரங்கள் தயாரிப்பு பணி நிறைவடையாமல் கிடந்தது. எல்லாம் முட்த்து உறங்க செல்லும்போது இரவு இரண்டு மணி. காலை ஐந்து மணிக்கு எழுந்து, அலுவலகம் ஓடி ஒட்டுப் மொத்த தயாரிப்புகளை தொகுத்து அச்சிலெடுத்துக்கொண்டு, தொடர்வண்டியில் வந்த சில நண்பர்களை அழைத்துக்கொண்டு, ஒரு வழியாக கிளம்பி அரங்குக்குச் செல்லும்போது காலை உணவு தயாராக இருந்தது. இரவே வந்திருந்த நண்பர்கள பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.



ஒன்பது மணிக்கு அரங்கில் மக்கள் மெல்லமாய்க் கூடத்தொடங்கினர். 9.30ஐக் கடக்கும் போது முக்கால்வாசி அரங்கு நிறைந்திருந்தது. பாராட்டு பெறுவதற்காக அழைத்திருந்த நண்பர்கள் அரங்கை அடைய, பத்துமணிக்கு அரங்கு நிரம்பி வழியத்துவங்கியது. போக்குவரத்து காரணங்கள் ஓரிருவரின் தாமதைத்தையடுத்து 10.20 மணிக்கு நிகழ்ச்சியைத் துவங்கினோம்

ஆரூரன் அவர்களின் பிள்ளைகள் அருட்சுடர், அமர்நீதி தமிழ்வணக்கம் பாட, சந்துரு அண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினருக்கான அறிமுகத்தை ஆரூரன் அவர்கள் அற்புதமாக வழங்கினார். அதையடுத்து வெறும் 3 வரியில் துவங்கிய சங்கமம், இன்று எட்டியிருக்கும் இடம் குறித்த விளக்கத்தோடு, இந்த ஆண்டு சங்கமத்தின் நோக்கம் என்ன, எதற்காக இந்த அங்கீகாரம், பாரட்டுகள் எனும் உரையோடு நான், அருள்மொழிமீரா, மகேஸ்வரன் என பாராட்டுப் பெறுவோரின் விபரங்களை தொகுத்து வழங்க ஆரம்பித்தோம். அருள்மொழி மீரா மற்றும் மகேஷ்வரன் அவர்கள் வழங்கியவிதம் மிக அருமை. பாராட்டுகளும் நன்றிகளும்.

உண்மைத் தமிழன், ஜாக்கி சேகர், ஜீவ்ஸ், அதிஷா, தேனம்மை, வெயிலான், சீனா, கேஆர்பி செந்தில், சுரேஷ்பாபு, யுவகிருஷ்ணா, ரவிக்குமார், பாலபாரதி, இளங்கோவன், மகேந்திரன், ஓவியர் ஜீவா என ஒவ்வொருவரராய் மேடைக்கு வந்து நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுக் கேடயத்தினைப் பெற்று மேடையில் அமர்ந்தனர்.



மிக எழுச்சியான நிகழ்ச்சிக்குப் பிறகு, திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அந்த மேடைக்கு மிகப்பொருத்தமானதொரு உரையை வெகுஅற்புதமாக வழங்கினார். எத்தனையோ மேடைகளில் நான் அவரின் சிறப்பான உரையை கேட்டிருந்தாலும், நேற்றைய மேடை அவருக்கு ஒரு புதிய களம், அதில் மிக வெற்றிகரமான உரையை அவர் வழங்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கான நினைவுப் பரிசினை விஸ்வம் அண்ணன் வழங்கினார்.

இயக்குனர் செல்வக்குமார் அவர்களின் மனசு குறும்படத்தை ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் வெளியிட்டார்.

அடுத்து, பாராட்டுப் பெற்றவர்களை ஓரிரு வார்த்தைகளில், ஏற்புரை வழங்குமாறு ஒலிவாங்கியைக் கொடுத்தோம். ஒவ்வொருவரும் உணர்வுப் பூர்வமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதீத மகிழ்ச்சியும் கண்கலங்க வைக்கும் என்பதை மேடையில் கண்டேன். சிலருக்கு நா தழுதழுத்தது. அவர்கள் அடிமனதிலிருந்து அவர்களை அறியாமல் வந்த வார்த்தைகளைக் கண்டபோது, சங்கமத்திற்காக நாங்கள் உழைத்த உழைப்பு சரியானாதுதான் பொருத்தமானதுதான் எனத் தோன்றியது. பாராட்டுப் பெற்றவர்களில் ஒரு சிலர் நெகிழ்ந்து கலங்குவது இயல்புதான். ஆனால், மேடையில் ஒரு மூத்த பதிவர் ஏற்புரை வழங்கும்போது, அரங்கில் இருந்த ஓரிருவர் கண் கலங்கியதைப் பார்த்தபோது, உண்மையில் அதிர்ந்து போனேன். எதையோ செய்ய முயன்று எப்படியோ சரியாகத்தான் செய்திருக்கின்றோம் எனப் பெருமகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக இளங்கோவன், பாலபாரதி ஆகியோரின் ஏற்புரைகள், நிகழ்ச்சி குறித்த முக்கியத்துவத்தின் அடர்த்தியைக் காட்டியது.

நிறைவுக்கு சற்றுமுன் எங்கள் குழுமத்தின் தூண்களை ஒருமுறை மேடையேற்றி அழகு பார்த்துக்கொண்டோம். நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது போன்று இதுவும் ஒரு சுய தட்டிக்கொடுத்தலுக்குத் தேவையாகத்தான் இருக்கின்றது. செயலர் பாலாசி நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தபோது மதியம் 12.30 மணி. அடுத்த ஒரு மணி நேரத்தை பதிவர்கள் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக மேடையைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கபட்டது. என்னுடைய கணக்குப்படி 220க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர். ஃபேஸ்புக் சார்ந்த நிறையப் பெண்கள் கலந்துகொண்டனர். ஒரு மணியிலிருந்து மதிய விருந்து துவங்கியது.

நினைவுப் பரிசுக்குப் பதிலாக புத்தகம் அளித்திருக்கலாம் என்ற கருத்து நிலவியது. 15 பேர்களுக்கு ஒரே மாதிரி புத்தகத்தை தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்காது என்பதாலும், எங்கள் பகுதியின் பெருமை பேசும் துணி வகையை அளிக்கவேண்டும் என்றும் சென்னிமலையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்ட நினைவுப் பரிசை அளித்தோம்.

பாராட்டுப்பெற்ற ஒரு பதிவர் தன்னைவிட சில மூத்த பதிவர்களைப் பாராட்டியிருக்கலாம் எனக்கூறினார். இது பதிவர்களுக்கான வெறும் பாராட்டுவிழா மட்டுமல்ல. வலைதளத்தில் இல்லாமல் ஃபேஸ்புக்கில் மட்டுமே இயங்குபவரையும் நேற்று மேடையேற்றியிருக்கின்றோம். சமூகவலை தளங்களில் இயங்குவதோடு வேறுவேறு தளங்களிலும் சிறப்பாகப் பணியாற்றும் பலரைப் பட்டியலிட்டு அதிலிருந்து வடித்தெடுத்து, ஒரு முயற்சியாக இதை நிறைவேற்றியிருக்கின்றோம். இதற்காக ஒரு குழு பெரும் உழைப்பை செயல்படுத்தியிருக்கின்றது. நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக் இறுதிசெய்த பட்டியல் மட்டுமே இறுதியானது அல்ல. தமிழ்தேசமெங்கும் இது போன்ற அங்கீகார நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் மட்டுமே! இதுபோன்று அங்கீகரிக்கத் தகுதியான இணைய நண்பர்கள் நிறைய உள்ளனர் என்பதையும் அறிவேன். மிகக்குறுகிய காலத்திட்டம் என்பதாலும் சிலரைத் தவறவிட்டிருக்கிறோம் என்பதாகவும் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். அதே சமயம் எங்கள் குழு தேர்ந்தெடுத்த இந்த 15 பேர் பட்டியல் மிக மிகப்பொருத்தமான பட்டியல் என்பதில் பெருமகிழ்வுகொள்கின்றேன். மேடையில் சிறப்பிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை இங்கே காணலாம்

அன்போடு கை பற்றி குலுக்கி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டவர்கள் சிலரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. நன்றியுரையோடு விழா நிறைவுபெரும் வரை, உண்மையிலே என் சிந்தனைகள் எதும் என் கட்டுப்பாட்டில் இல்லை. அதுவரையில் நான் சந்தித்த நண்பர்களிடம் சரியாகப் பேசவோ, பழகிடவோ எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அப்படியேதேனும், யாரையாவது நான் சங்கடப்படுத்தியிருந்தால் தயைகூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்.

நிகழ்ச்சியை நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மிக நேர்த்தியாகவே நாங்கள் நடத்தியதாக நம்புகிறோம். ஒரு நடத்துனராக எங்களிடம் சிறுசிறு பிசிறுகள் இருந்திருக்கலாம். அதே சமயம் இதுபோன்ற ஒரு ஒத்துழைப்பு மிகுந்த பங்கேற்பாளர்களை நான் பார்த்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும். 9 மணிக்கு அரங்கில் அமரத் துவங்கியதிலிருந்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சியைக் கண்டு களித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். நிகழ்ச்சியை பதிவர்களிடம் எடுத்துச்செல்ல உதவிய சங்கமம், யுடான்ஸ் திரட்டிகளுக்கு நன்றிகள்.

நிகழ்ச்சியின் நேர்த்திக்கு பல வகைகளில் பெரும் உழைப்பை விதைத்த சந்துரு அண்ணன், ஆரூரன், பாலாசி, ஜாபர் (இங்கிவரை யான்பெறவே என்ன தவம் செய்தேனோ?), கார்த்திக், அகல்விளக்கு ராஜா, சங்கவி, மேடி, விஸ்வம்அண்ணன், வேலு, அருள்மொழிமீரா, மகேஷ்வரன், நந்தகுமார், வால்பையன், பவளசங்கரி, ரோகிணி, நந்து மற்றும் எங்கள் குழந்தைகள் என எல்லோருக்கும் பணிவான பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்கெடுத்த குழும உறுப்பினர்கள் இளா, அமரபாரதி, ராஜி, சரவணமூர்த்தி என அனைவருக்கும் நன்றிகள். சிறப்பு விருந்தினருக்கு பெரு நன்றி. பாராட்டுப் பெற்றவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இந்த சங்கமத்தை நடத்தியே தீரவேண்டும் என எங்களை பலவாறு ஊக்குவித்து வெற்றிகரமாக நடத்தச்செய்த சந்துரு அண்ணன் அவர்களுக்கு இந்த சங்கமத்தின் வெற்றியை சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

நிறைவுக்குப் பின் நெகிழ்ச்சியோடு கைகளை இதமாய்பற்றி தங்கள் மகிழ்ச்சியை எங்களுக்குள் ஊடுருவசெய்த உள்ளங்களின் அன்பை அப்படியே சிந்தாமல் சிதறாமல் எங்களுக்குள் பதுக்கிக்கொள்கிறோம், நாங்கள் சந்திக்கும் நபர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். கைகளை விரித்துப்  பெருமகிழ்வோடு நெஞ்சோடு நெஞ்சணைத்து மென்மையான அணைப்பில்  அன்பைப் பகிரும்போது தாயின் கருவறை சுகத்தை உணரமுடிந்தது.

மேலதிகப் படங்களுக்கு:



நன்றி

-0-

Dec 18, 2010

பகிர்தல் (18.12.2010)


தூவும் நன்றி விதைகள்:
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் வேண்டுகோளுக்கிணங்க நடத்தவுள்ள சங்கமம் 2010 நிகழ்ச்சி இலைச்சினையை முகப்பில் வெளியிட்டு, சுட்டி கொடுத்துள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம் திரட்டிகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு, பங்களிப்போடு இணைந்து நடத்தவுள்ள சங்கமம் திரட்டிக்கு நன்றிகள்.

சங்கமம்-2010 நிகழ்ச்சி குறித்து, தங்கள் வலைப்பக்கத்தில் இடுகை எழுதி, இலச்சினையை வெளியிட்டுள்ள சேர்தளம் குழுமம், பதிவுலக நட்புகள், பழமைபேசி, ச.செந்தில்வேலன், சீனா, வானம்பாடி, ராமலஷ்மி, பிரபாகர், ஸ்ரீதர், கார்த்திகை பாண்டியன், சேட்டைக்காரன், காமராஜ், சே.குமார், செ.சரவணக்குமார், விஜி, முனைவர் ப.கந்தசாமி, முனைவர். குணசீலன், டி.வி.ஆர் ராதகிருஷ்ணன், தேனம்மை, ஷம்மிமுத்துவேல், தமிழ்மலர் (யார் பெயராவது விடுபட்டிருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்) மற்றும் குழுமத்தின் அனைத்து தூண்களுக்கும் நன்றி!


நினைவுக்கு வருகிறதா?
பொருளாதார வளர்ச்சி உண்ணும் உணவில் கூட ஆடம்பரத்தையும் அந்தஸ்த்தையும் திணிப்பதை தொடர்ந்து உணர முடிகிறது. விருந்துகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்ட உணவுகளை அதிகம் என்று வீணடிப்பதை விட, தானே எடுத்துப் போட்டு (Buffet) சாப்பிடும்போதும், விலையுயர்ந்த உணவங்களில் கேட்டு வாங்கி வீணடிக்கும் உணவுகளும்தான் மிக அதிகம்.

உணவு சாதாரண கடைகளில் வீணாவதைவிட, விலையுயர்ந்த நட்சத்திர உணவங்களில் வீணடிக்கும் உணவுகளே அதிகம். சமீபத்தில் நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ, விலையுயர்ந்த உணவகத்திற்குச் சென்று வீணடித்த உணவு எவ்வளவு என்று நினைவுக்கு வருகிறதா?

அதுவரைக்கும் உள்ளத்தை உலுக்கிப் போடும் இந்தக் குறும்படத்தைக் கொஞ்சம் பாருங்களேன்!




தமிழ்மணம் விருதுகள்:
தமிழ்மணம் அறித்துள்ள விருதுகளுக்கு…..
 
  • அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் – பிரிவில் கோடியில் இருவர்  
  • பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்பிரிவில் ஒரு பயணமும், பெரிய பாடமும்
  • ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் – பிரிவில் வவுனியாவுக்குப் போயிருந்தேன் இடுகைகளைச் சமர்பித்துள்ளேன்.

பொறாமையிலும் பெருமை:
கொஞ்ச நாட்களாகவே நான் எழுதும் கவிதைகளுக்கு வரும் பின்னூட்டங்கள், வாக்குகளைவிட எதிர் கவிதைகள்தான் அதிகம் வருகின்றன. அதிலும் கொடுமை என்னவெனில், எதிர் கவிதைகள் எல்லாமே நேர்(!) கவிதைகளைவிட நன்றாக இருப்பதுதான். இதுக்குப் பொறாமைப்படுறதா இல்ல எதிர்கவிதைங்கிற பேர்ல நல்ல கவிஞர்களை உருவாக்கும் (!!!!நோ….நோ திட்டாதீங்க….) என்னை நினைத்து நானே பெருமைப் படுவதா (நோ….நோ…….நோ….. பேட் வேர்ட்ஸ், மீ பாவம்……) எனத் தெரியவில்லை!.

எரியும் விலைவாசியில் ஊற்றிய பெட்ரோல்:
இது வரை இல்லாத அளவாக ஒரே தடவையில் மூன்று ரூபாய் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்ட விடியலில்தான், மத்திய புலனாய்வுத்துறை வரலாற்றுச் சாதனையாக 34 இடங்களில் சோதனை போட்டு சாதனை படைத்துக் கொண்டிருந்தது. (இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ!). எது நடந்தாலும், பொத்திக் கொண்டு மௌனமாக கடந்து போகும் இந்திய மனோபாவம் பெரு முதலாளிகளுக்கும், இந்தியாவை குருதி, வியர்வை சிந்தி கட்டமைத்து(!) வரும் அரசியல்வாதிகளுக்கும் வெகு வசதியாகப் போய்விட்டது! (கொசுறு: எட்டிப்பிடிக்கிற தூரத்துல இருக்கிற இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நம்மூர் காசுல 45 ரூபாய்தான் என நினைக்கிறேன்)

-0-

Dec 5, 2010

சங்கமம் 2010 – தயாராகுங்கள் !

இப்பொழுதுதான் கைகள் பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றது போல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம் தணிந்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்று உருண்டோடியிருக்கிறது.
சென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடு இன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில் முன்னெடுக்க விரும்புகிறோம்.


வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்.

இடம்:
டைஸ் & கெமிக்கல் மஹால்
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
நிகழ்ச்சியில்…
நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும்
எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்
காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.
உங்கள் வருகையே எங்களின் வெற்றி!
இந்த சங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாக நடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடு அழைக்கிறேன்.

அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாக கருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்

எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
 
விபரங்களுக்கு….
கதிர்                                      99653-90054
பாலாசி                               90037-05598      
கார்த்திக்              97881-33555
ஆரூரன்                             98947-17185      
வால்பையன்                  99945-00540 
ராஜாஜெய்சிங்               95785-88925       
சங்கமேஸ்            98429-10707
ஜாபர்                  98658-39393
நண்டு நொரண்டு    94861-35426
erodetamizh@gmail.com


நன்றி

______________________ 

Dec 21, 2009

நன்றி! நன்றி!! நன்றி!!!


என்றோ மனதில் தோன்றிய ஒரு சிறு கனவு
இன்று மிகப் பிரமாண்டமாய் நிகழ்ந்தேறியது...

மிகுந்த நெகிழ்ச்சியோடு, மனதில் பொங்கும் நன்றியோடு, நீண்ட நாள் கனவு கண்ட பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம் வெற்றிகரமாய்.

சுமார் அறுபது பதிவர்கள், பத்து வாசகர்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட நண்பர்களோடு மாலை மிகச்சரியாக நான்கு மணிக்கு மிகச்சுவையான, சூடான தேநீரோடு ஆரம்பித்த சங்கமம் துல்லியமாக ஏழு மணிக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு நிறைவடைந்தது.

இனிய நண்பர் ஆரூரன் தலைமை தாங்க, புலவர் முனைவர். இராசு மற்றும் தமிழ்மணம் காசி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள...

பதிவர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசு ஆகியோர் தனிப்பட்ட தலைப்புகளில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள...

பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” துவக்கி வைக்கப்பட...

பதிவர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோரால் மிகச் சிறப்பாக கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட...

மிகச்சரியாக கூட்டம் ஏழு மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

சங்மத்திற்கான அனைத்து செலவுகளையும் ஈரோடு சார் பதிவுலக நண்பர்கள் ஆரூரன், சண்முகராஜன் , ஈரோடு கதிர், கார்த்திக், நந்து, லவ்டேல்மேடி, தங்கமணி, அப்பன், தாமோதர் சந்துரு, க.பாலாசி, பட்டிக்காட்டான், அகல்விளக்கு, பீம்பாய், இரா.வசந்த்குமார், கோடீஸ்வரன், வால்பையன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

தொடர்ந்து மூன்று மணி நேரம், அனைவரையும் அரங்கினுள் அமர்த்தி, மிக நேர்த்தியாக நடத்திய ஆரூரன் அவர்களே சங்மத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

குறிப்பாக பதிவர்கள் பாலாசி, அகல்விளக்கு, கோடீசுவரன் மற்றும் வாசகர்கள் ஜாபர், பைஜு செய்த பணிகள் மறக்க முடியாதவை.

மூத்த பதிவர்களான கார்த்திக், நந்து மிக ஆதரவாக, இணக்கமாக குறிப்பாக மிகுந்த மனோதைரியத்தை அளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

சங்கமம் குறித்து முகப்பு பக்கத்தில் வெளியிட்ட தமிழ்மணம், சங்மத்தின் முழுக் காணொளியை வெளியிடவிருக்கும் சங்கமம் லைவ் இணையதளம், படப்பதிவு செய்த ஸ்டார் வீடியோஸ் ஆகியோருக்கு நன்றிகள்.


கடந்த பல நாட்களாக அமெரிக்காவில் இருந்து என்னைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வழிநடத்திய கொங்கு வாசல் நா. கணேசன் அவர்களுக்கு நன்றி.

இருக்கும் திசைதோறும் தென்றலாய் வீசிய பதிர்வர்களின் வருகை இந்த சங்மத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை...

அந்த மகிழ்ச்சியை வெறும் நன்றி என்ற மூன்று எழுத்தால் என்னால் நிரப்பமுடியவில்லை....

ஒவ்வொருவர் கைபற்றிய போதும், புன்னகைத்த போதும், தோள் அணைத்த போதும் என் உடன் பிறந்த சொந்தமாகவே நினைத்து மனம் நெகிழ்கிறேன்...


இந்த சங்கமம் வெற்றிகரமாக நடந்ததாக யார் கருதினாலும் அதற்கு இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபருக்கும் பங்கு உண்டு.

சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம் என்று கூறி வரும்காலத்தில் அது நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன்.


சில நயம்மிகு நிழற்படங்களைக் காண இந்தச் சுட்டியை அழுத்துங்கள்

சங்கமம் குறித்த மேலதிக தகவல்களுக்கு....
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
__________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...