Jan 6, 2015

பூக்குட்டியின் ரகசியம்



படம் : இணையத்திலிருந்து


சாமிகிட்ட போன அப்பா குறித்து
பூக்குட்டியிடம்
அவர்களும் சொல்லவில்லை
அவளும் கேட்கவில்லை

அழுது புரண்டு
பேசியோய்ந்த உறவுகள்
அவரவர் கூடு நோக்கி
பறந்தாகிவிட்டது

க்ளாஸ் டீச்சரும்
மேத்ஸ் டீச்சரும்
அவ்வப்போது
பூக்குட்டியின்
தலை வருடிப்போகிறார்கள்

பகற்பொழுதுகளில்
காய்ந்த தடங்களை
கன்னங்களில் சுமக்கும் அம்மா
இரவுகளில் இடைவிடாது
நீர் வார்க்கிறாள்

போர்த்திவிடும் அப்பாவின்
விரல்களில் வழிந்த
பிரியத்தின் சாயம்
நிறமிழந்து கொண்டிருக்கிறது

அப்பா வாங்கிவரும்
அதே பெரிய சாக்லெட் மட்டும்
பூக்குட்டியின்
ஹோம்வொர்க் மேசை மேல்
தவறாமல் காத்திருக்கின்றது

புறங்கையில் ஓவியமொன்றைத்
தீட்டியபடி வழிந்தோடும்
சாக்லெட் வழிசலை
இதழ்கள் பதித்து உறிஞ்சுகையில்
துளிர்க்கும் கண்ணீரை
யாருமறியாமல்
அப்பா துடைத்துவிடுவதை
ரகசியமாகவே
வைத்திருக்கிறாள் பூக்குட்டி!

-

Dec 29, 2014

ஆறாம் அறிவு



ஐந்து அறிவுகளை மட்டும்
வைத்துக்கொண்டு
மிஞ்சியிருக்கும்
வனமொன்றில்
தத்தித்தாவியோடி
பழங்கள் பூக்கள்
இலைகள் தானியங்களில்
பசியாறியவனுக்கு
ஆறாம் அறிவின்
துணைகொண்டு
மிஞ்சிப்போனதை
பெருங்கருணையோடு
பிச்சையிட்டு
பசியாறப் பழக்கிவிட்டீர்கள்

அவ்வப்போது
அரிசி மூட்டைச் சந்தில்
சுருட்டி வைக்கும்
நெகிழிப் பைகளை
என்ன செய்வதெனத்
தெரியாத நீங்களா
அவன் சுமந்தலையும்
அந்த நெகிழிச் சாபத்தை
என்ன செய்து தீர்ப்பதெனச்
சொல்லியிருக்கப் போகிறீர்கள்!

-

Dec 23, 2014

உடைந்தொழுகும் வானம்






முடிவற்றதாய்க் கருதும்
அந்தச் சாலையோரத்தில்
பாதைகள் தீர்ந்தவன்
நிலவற்ற வானத்தின் கீழிருக்கும்
விளக்கினடியில் அமர்ந்திருக்கிறான்

நட்சத்திரங்களும்
வெண்மேகங்களுமற்ற
கருத்த வானம்
எப்போது வேண்டுமானாலும்
உடைந்துவந்து மூழ்கடிக்கலாம்

விழித்திரைகளில்
குவியும் இருளை
அழித்தழித்து விரட்டப்பார்க்கிறது
பலவீனமான அந்த விளக்கு

விளக்கிற்கும் அவனுக்குமிடைய
விட்டிலொன்று கோடுகளால்
அவளின் நினைவுகளை
விடாமல் வரைந்து கொண்டிருக்கிறது

இமை மூடும் கணப்பொழுதில்
தளும்பிய கருவானம்
உடைந்தோடி வந்து
அவனை நிரப்பிக்கொள்ள
உள்ளே தத்தளிக்கிறாள் அவள்!

Dec 15, 2014

முன்னறியிப்பு - Munnariyippu




இருபது ஆண்டுகாலம் சிறைக்குள் இருந்து, உறவு நட்பென எவரையும் சந்திக்காத, எல்லாவற்றையும் தத்துவமாய், எளிதானதாய் அணுகுபவனும், அவனை ஒரு பண்டமாக, கருவியாக அணுகுபவளும் ஒரு புள்ளியில் தொடங்கி, ஒரு கால் புள்ளியில் முடிக்கிறார்கள்.



ஃப்ரீலான்ஸர் எழுத்தாளர் அஞ்சலிக்கு (அபர்னா கோபினாத்), சிறைக் கண்காணிப்பாளர் ஒருவரின் சுயசரிதை எழுதும் வாய்ப்பு கிட்டுகிறது. சிறையில் இரண்டு கொலைகள் செய்த ஆயுள் தண்டனை கைதி ராகவனை (மம்முட்டி) சந்திக்கிறாள். தண்டனைக்காலம் முடிந்தும் வெளியேறாமல், இருபது ஆண்டுகளாய் சிறையில் இருக்கும் ராகவனை, அத்தனை நாட்களும் ஒருவரும் வந்து சந்திக்கவில்லை என்பதும், அவர் பரோலில் வெளியே போகவில்லை என்பதும் ஆச்சரியம் தருகிறது.



தான் கொலைகளைச் செய்யவில்லை எனச்சொல்பவனிடம் ஏன் தண்டனைக்காலம் முடிந்தும் வெளியில் செல்லவில்லையெனும்போது ”தனக்கென வெளியில் என்ன இருக்கிறது” எனக்கேட்கிறான். வெளியே காத்திருக்கும் புதுவாழ்க்கை குறித்துக் கேட்கும்போது, ”வாழ்க்கையில் புதியது, பழையதென்றில்லை, வாழ்க்கை என்பது ஒன்றுதான்” எனத் தத்துவம் பேசுகிறான். ”இல்லை வெளியில் சந்தோசமான வாழ்க்கை” எனச் சொல்ல வரும்போது, ”இங்கே சங்கடமொன்றுமில்லை” என்கிறான். கொலைகள் செய்யவில்லை என்றவனிடம் என்ன உண்மை எனக் கேட்கும்போது, ”இருள் இருக்கும் இடத்தில் ஸ்விட்ச் போட்டால் ஒளி கிடைப்பது போலே, வெளிச்சம் இருக்கும் இடத்தில் ஸ்விட்ச் போட்டால் இருள் கிடைக்கும் வகையிலான சாதனம் உண்டா!?” என்றும் கேட்கிறான்.



தன்னை ஒரு எழுத்தாளராய் நிரூபிக்க, புகழின் படிகளில் ஏற தனக்கான வாய்ப்பாக ராகவன் தென்படுகிறான். ராகவன் குறித்து கட்டுரை எழுதுகிறாள். அஞ்சலிக்கும் ராகவனுக்கும் கிடைக்கும் புகழ், தன்போக்கில் சொடுக்கி வேறு பாதையில் அஞ்சலியை இழுத்துச்செல்கிறது.



”கண்ணாடி பார்க்கும்போது கண்ணாடிக்குள்ளே இருக்கும் தனது பிம்பம் தன்னைப் பார்க்கும். கண்ணாடியை விட்டு விலகும்போது உள்ளிருக்குமா, விலகிப்போகுமா? ஆனாலும் திரும்பவும் கண்ணாடி பார்க்கும்போது அது அங்கிருந்தே பார்க்கும்” என்பது உள்ளிட்ட ராகவனின் எழுத்துக்களைக் காணும் அஞ்சலிக்கு, ராகவன் ஒரு புத்தகத்திற்கான பொக்கிஷமாய்த் தென்படுகிறான்.



வேகமாய் காலம் கரைந்தோடும் காலகட்டத்தில் இருபது ஆண்டுகளை சிறை வளாகத்திற்குள்ளும், அறைக்குள்ளும் கழித்து, உலகத்தின் நெடி உணராமல் இருந்தவனிடம் கட்டாயங்களும், நிர்பந்தங்களும் திணிக்கப்படுகின்றன. ஃப்ரீலான்ஸர் எழுத்தாளராய் ஏற்றுக்கொண்டிருந்த பணியை ஆரம்பிக்க இயலாமலும், கார்ப்ரேட் பதிப்பக நிறுவனத்திடம் ராகவனின் ஒப்புதலோடு ஒப்பந்தம் போட்ட பணியை காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாமலும் தவிக்க ஆரம்பிக்கிறாள்.



இருவரின் போராட்டங்களுக்கும் மிகச் சரியான காரணங்களுண்டு. அவரவருக்கான நியாயங்களும் உண்டு. ராகவனாய் உள்ளுக்குள் முடங்கித் தடுமாறவும், அஞ்சலியாய் உள்ளுக்குள் கொதித்துக் குமையவும் நம்மை ஆட்படுத்தி, என்னதான் நடக்கப்போகுமென அலுப்பூட்டி, அந்த திருப்பத்தின் சிலநொடிகளில் பொதுவான நியாயம் வேறு ஒன்றாகவும் இருக்கத்தானே செய்யுமென ஒப்புக்கொள்ளச்செய்கிறது.



*

சீனிவாசன் நேரமின்மையால் நடிக்காமல் விட்ட பாத்திரத்தில் மம்முட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார். துடிப்பும் தவிப்பும் ஆசையும் நிராசையுமாய் எல்லா உணர்வுகளையும் காட்டும் அபர்னா கோபிநாத்தும், மம்முட்டியும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

*

Dec 8, 2014

தற்காலிக வலி நீக்கி



இந்த வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்களில் ஒன்று மரணம். ஒவ்வொருவருக்கும் தம்முடைய மரணம் மிகுந்த மிரட்சியூட்டுவதாய்த் தோற்றமளிக்கிறது. அதேசமயம் தம் உற்றாரின் மரணம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கை மீது மிகப்பெரிய அவநம்பிக்கையூட்டுவதாய் அமைந்து விடுகிறது. வாழ்க்கையின் அத்தனை வெற்றிகளையும், கெக்கலிப்புகளையும் சிதறடித்து, நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிட உடனிருப்பவரைக் கொய்துபோகும் ஒற்றை மரணத்தால் முடிகின்றது. எவருக்குத் தெரியாது, இந்த வாழ்வின் நிறைவுப் புள்ளி சாவு என்பது? ஆனால் எவருக்குத்தான் அது பிடித்ததாய், விரும்புவதாய் அமைந்துவிடுகிறது.

மரம்போல் இருக்கும் குடும்பத்தின் வேர்களாய் இருப்பவை உறவுகள். ஆணிவேரைத் தொலைத்து சல்லிவேர்களில் ஊசலாடும் மரமாகவோ, சல்லிவேரினைத் தொலைத்து ஆணிவேரின் பிடிப்பில் காலம் நகர்த்தும் மரமாகவோ நாமோ அல்லது நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று ஜீவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஒரு விபத்து, ஒரு கவனக்குறைவு, ஒரு பேராசை, ஒரு துரோகம், ஒரு சதி, இரத்த நாளத்தில் உருவாகும் ஒரு சிறு அடைப்பு, ஒரு தவறு, ஒரு மெத்தனம், ஒரு தோல்வி, ஒரு அவநம்பிக்கை, ஒரு அறியாமை, கூடுதலாய் அமையும் ஒரு மிடறு மது என இவற்றில் ஏதாவது ஒரேயொரு ‘ஒரு’ போதுமானாதாய் இருக்கின்றது, ஆசையாய்க் கட்டிக்கொண்டிருக்கும் கனவின் மேல் அமிலத்தை வார்த்துவிட்டுப் போக.

அமிலத்தின் காயங்களை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றிவிட முனைவதை அதை அனுபவித்து வருபவர்களுக்கு காலம் புரியவைத்து விடுகிறது. ஆனால் அது ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கும் தழும்புதான் எப்போதும் ஜீவிக்கும் பிரச்சனை. எதேச்சையாய் விரல்கள் ஊர்ந்துபோகும் போதோ, தன் பார்வையே வருடிப்போகும்போதோ நிரடும் தழும்புகளுக்கு குறிப்பிடும் படியான நிறமும், வடிவமும் உண்டு. அதனுள் நீங்காமல், நிறமற்று வடிவமற்று, மறைந்திருக்கும் சூன்யமான வலிக்கு நிகராய் எதையும் உருவகப்படுத்திட முடியாது.
ஒரு குடும்பத்தின் கனவு ஊஞ்சல்களின் சங்கிலியாய் இருக்கும் ஒருவனோ, ஒரு குடும்பத்தின் குலதெய்வமாய் பாவிக்கப்படும் ஒருத்தியோ, இந்த நொடி முதல் இல்லாமல் போகின்றார்கள் என்பதை உணரும் தருணம் எத்தனை கொடியது என்பதை அனுபவித்துக் கடந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

இவ்வாறாக தங்கள்மேல் ஏவிவிடப்பட்ட ஒன்றை, அதே போன்று சுமக்கும் எத்தனையோ பேருடன், விதவிதமாய் ஒப்பீடுகளுக்குள் உட்படுத்தி சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றாலும், திமிறிக்கொண்டு வெளியே வந்து தனித்து நின்று, சீழ் வைத்த புண்ணில் துளிர்க்கும் வலிபோல் மீண்டும் மீண்டும் வதைத்துக் கொண்டேயிருப்பது அதன் தனியியல்பு.

அம்மா, அப்பா, சகோதரி, சகோதரன், மனைவி, கணவன், மகள், மகன், , பேரன், பேத்தி, உற்ற தோழமை என எவர் ஒருவரை இழந்தாலும், இழப்பவர்களுக்குள் ”எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி!”யெனும் கேள்விகள் தொடர்ந்து முளை விட்டுக்கொண்டேயிருக்கும். அவர்களுக்கும் நிதர்சனம் புரியும். அவை பதிலில்லாக் கேள்விகள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் தங்களின் மிச்சமிருக்கும் நாட்களைக் கடத்த, அவர்களிடமிருக்கும் ஒரு தற்காலிக வலி நீக்கியாய் அந்தக் கேள்விகளைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதில்லை!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...