Showing posts with label டிசம்பர்-8. Show all posts
Showing posts with label டிசம்பர்-8. Show all posts

Dec 8, 2014

தற்காலிக வலி நீக்கி



இந்த வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்களில் ஒன்று மரணம். ஒவ்வொருவருக்கும் தம்முடைய மரணம் மிகுந்த மிரட்சியூட்டுவதாய்த் தோற்றமளிக்கிறது. அதேசமயம் தம் உற்றாரின் மரணம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கை மீது மிகப்பெரிய அவநம்பிக்கையூட்டுவதாய் அமைந்து விடுகிறது. வாழ்க்கையின் அத்தனை வெற்றிகளையும், கெக்கலிப்புகளையும் சிதறடித்து, நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிட உடனிருப்பவரைக் கொய்துபோகும் ஒற்றை மரணத்தால் முடிகின்றது. எவருக்குத் தெரியாது, இந்த வாழ்வின் நிறைவுப் புள்ளி சாவு என்பது? ஆனால் எவருக்குத்தான் அது பிடித்ததாய், விரும்புவதாய் அமைந்துவிடுகிறது.

மரம்போல் இருக்கும் குடும்பத்தின் வேர்களாய் இருப்பவை உறவுகள். ஆணிவேரைத் தொலைத்து சல்லிவேர்களில் ஊசலாடும் மரமாகவோ, சல்லிவேரினைத் தொலைத்து ஆணிவேரின் பிடிப்பில் காலம் நகர்த்தும் மரமாகவோ நாமோ அல்லது நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று ஜீவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஒரு விபத்து, ஒரு கவனக்குறைவு, ஒரு பேராசை, ஒரு துரோகம், ஒரு சதி, இரத்த நாளத்தில் உருவாகும் ஒரு சிறு அடைப்பு, ஒரு தவறு, ஒரு மெத்தனம், ஒரு தோல்வி, ஒரு அவநம்பிக்கை, ஒரு அறியாமை, கூடுதலாய் அமையும் ஒரு மிடறு மது என இவற்றில் ஏதாவது ஒரேயொரு ‘ஒரு’ போதுமானாதாய் இருக்கின்றது, ஆசையாய்க் கட்டிக்கொண்டிருக்கும் கனவின் மேல் அமிலத்தை வார்த்துவிட்டுப் போக.

அமிலத்தின் காயங்களை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றிவிட முனைவதை அதை அனுபவித்து வருபவர்களுக்கு காலம் புரியவைத்து விடுகிறது. ஆனால் அது ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கும் தழும்புதான் எப்போதும் ஜீவிக்கும் பிரச்சனை. எதேச்சையாய் விரல்கள் ஊர்ந்துபோகும் போதோ, தன் பார்வையே வருடிப்போகும்போதோ நிரடும் தழும்புகளுக்கு குறிப்பிடும் படியான நிறமும், வடிவமும் உண்டு. அதனுள் நீங்காமல், நிறமற்று வடிவமற்று, மறைந்திருக்கும் சூன்யமான வலிக்கு நிகராய் எதையும் உருவகப்படுத்திட முடியாது.
ஒரு குடும்பத்தின் கனவு ஊஞ்சல்களின் சங்கிலியாய் இருக்கும் ஒருவனோ, ஒரு குடும்பத்தின் குலதெய்வமாய் பாவிக்கப்படும் ஒருத்தியோ, இந்த நொடி முதல் இல்லாமல் போகின்றார்கள் என்பதை உணரும் தருணம் எத்தனை கொடியது என்பதை அனுபவித்துக் கடந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

இவ்வாறாக தங்கள்மேல் ஏவிவிடப்பட்ட ஒன்றை, அதே போன்று சுமக்கும் எத்தனையோ பேருடன், விதவிதமாய் ஒப்பீடுகளுக்குள் உட்படுத்தி சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றாலும், திமிறிக்கொண்டு வெளியே வந்து தனித்து நின்று, சீழ் வைத்த புண்ணில் துளிர்க்கும் வலிபோல் மீண்டும் மீண்டும் வதைத்துக் கொண்டேயிருப்பது அதன் தனியியல்பு.

அம்மா, அப்பா, சகோதரி, சகோதரன், மனைவி, கணவன், மகள், மகன், , பேரன், பேத்தி, உற்ற தோழமை என எவர் ஒருவரை இழந்தாலும், இழப்பவர்களுக்குள் ”எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி!”யெனும் கேள்விகள் தொடர்ந்து முளை விட்டுக்கொண்டேயிருக்கும். அவர்களுக்கும் நிதர்சனம் புரியும். அவை பதிலில்லாக் கேள்விகள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் தங்களின் மிச்சமிருக்கும் நாட்களைக் கடத்த, அவர்களிடமிருக்கும் ஒரு தற்காலிக வலி நீக்கியாய் அந்தக் கேள்விகளைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதில்லை!

Dec 8, 2012

பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு

திசையெங்கும் பறந்து சிறகு விரிக்கத் துடிக்கும் சிந்தனைப் பறவையை மெல்லக் கையிலேந்தி தலைவருடி யோசிக்கிறேன். எது குறித்த சிந்தனை எப்போதும் என்னால் தவிர்க்கமுடியாததாக இருக்கின்றது என்பது குறித்து.

குழந்தையொன்று பிறந்த செய்தி, பயணம், மேலே நகரும் மேகம், கண்ணீர் துளியின் வெதுவெதுப்பு, முத்தத்தின் சுவை, பணம்-கடன்-வட்டி, சமீபத்தில் போக வேண்டிய திருமணம், நேற்றுக் கிடைத்த பாராட்டு, வாசித்த கவிதை, அடுத்த வேளை சாப்பாடு என்னவாக இருக்கும், கரண்ட் இப்போ போகுமா போகாதா?.... என இது போன்ற சிந்தனைகள் ஒவ்வொரு நாளிலும் வரலாம் வராமலும் போகலாம். ஆனால் தினமும் ஒருமுறையேனும் மனதிற்குள் தவறாமல், தவறவே தவறாமல் வந்துபோவது ”மரணம்” என்பது குறித்த சிந்தனை மட்டுமே. அந்தச் சிந்தனையின் அளவு சூழலுக்கு ஏற்ப இமை முடியின் கனத்திலோ, ஒரு இரும்புப் பொதியின் அளவிலோகூட இருக்கலாம்.

பெரிதும் மரணம் என்பது வாசிக்கவும் நினைக்கவும் ஒரு கடுமையான கறுமை நிறைந்த சொல்லாகவே உணரப்படுகிறது. மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நிதர்சனமும்கூட. மரணம் குறித்துத் திட்டமிட்டுச் சிந்திப்பதில்லையெனினும் சிந்திக்காமல் இருந்துவிட முடிவதில்லை. காரணம் வாழ்க்கை என்பதே அதை நோக்கிய பயணம்தான்.

நாற்பதினை விரைவில் எட்டிப்பிடிக்கவிருக்கும் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். இதுவரை நான் என் குடும்பத்தில் நான்கு மரணங்களைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் அதற்கு ஈடு செய்யும் வகையில், ஒரே ஒரு ஜனனத்தைத்தான் வாழ்க்கை எனக்களித்திருக்கிறது. நான் சந்தித்த மரணங்கள் முதுமை, விபத்து, நோய் என வகைப்படுத்தப்பட்டாலும் மரணம் என்பது ஒன்றே ஒன்றுதான். மரணம் ஒன்றே ஒன்று என்றாலும் அது யாருடையது, எதனால் என்று பார்க்கும் போது அது தரும் உணர்வுகள் வேறுபட்டது.

ஒவ்வொரு தினமும் எப்படியாவது யாரையாவது நினைக்கையில், சந்திக்கையில், எதையாவது காணுகையில் என… எதன் வடிவத்திலாவாது மரணம் என்ற ஒரு சொல் சிந்தனைக் குளத்திற்குள் ’சொத்’ என விழுந்துவிடுகிறது. விழுந்த சொல் எதாவது அதிசயமான நேரங்களில் சலனமேதும் ஏற்படுத்தாமல் அமைதி காப்பதுண்டு. வழக்கமான அதிசயங்களற்ற பொழுதுகளில் சலனப்படுத்தவே செய்வதுண்டு. சில தருணங்களில் சலனம் அலைகளாகவும் மாறுவதும், எப்போதாவது அது ஒரு ஆழிப்பேரலையாக மாறுவதையும் தவிர்க்க இயலுவதில்லை.

ஒவ்வொரு மரணத்தையும் முதன்முதலில் எதிர்கொண்ட சூழல்களில் மனதிற்குள் விழுந்த பித்தினை காலம் கொஞ்சம் கொஞ்சமாக சலவை செய்திருக்கின்றது. எனினும் விழுந்த இடத்தில் ஏற்பட்ட தழும்பினை மட்டும் எதனாலும் சமன் செய்திடமுடிவதேயில்லை. அது விழும் நேரத்தில் தோன்றிய வலியும், காலப்போக்கில் அது நீர்த்து நீங்கியதன் நிதர்சனமும் சிறிது சிறிதாக மனதைப் பக்குவப்படுத்தவே செய்கின்றது.



மரணம் தவிர்த்து எதனாலும் அத்தனை பக்குவத்தை, ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை தந்துவிட முடிவதில்லை. உறவுக்குள், அதுவும் உயிர் கலந்த உறவுக்குள் நிகழ்ந்த நிரந்தரப் பிரிவினால் தோன்றிய வெற்றிடத்திற்குள் எத்தனை செடிகள் முளைத்திடினும், ஒருபோதும் அந்தச் செடிகள் ஏனோ மலர்வதேயில்லை.

சமகால இடைவெளியில் விரும்பாலும் விரும்பியும் மரணங்களைக் கடந்து வந்து கொண்டேயிருக்கின்றேன். மரணம் குறித்த சிந்தனையும், உணர்வும் ஒரு பழகிய நாய்குட்டி போல மிக இயல்பாகவே உடனிருந்து கொண்டிருக்கின்றது. தினந்தோறும் அதுகுறித்த சிந்தனைச் சலனங்கள் ஏற்படுவதால், மரணம் குறித்த பயம் நீர்த்துப்போய், சகமனிதர்கள் மீதான கரிசனத்தின் அடர்த்தியைக் கூட்டச் செய்கின்றது.

கடந்துபோகும் ஒவ்வொருவரின் மரணமும் செல்லமாய்க் கண் சிமிட்டி என்னிடம் ரகசியமாய்ச் சொல்லும் வார்த்தைகள், “இன்னும் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு. மரணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்துவிடும்”

-

Dec 8, 2011

தொலைவு அறிந்திடாப் பயணம்

பிறக்கும் வரை மரணம் குறித்த பேச்சுக்கு அவசியமிருப்பதில்லை. பிறந்த நொடியிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது மரணம் என்பதை நோக்கித்தான் இந்த வாழ்க்கை என்பது. மரணம் நோக்கிய பயணமே ஒருவரின் வாழ்க்கையின் நீளம். ஆனால் அந்த நீளம் என்னவென்று தெரியாததுதான் ஒரு வாழ்க்கையின் மாயவித்தை.

மிக நீண்டதாய், செம்மைப்படுத்தப்பட்ட பாதையாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் நகரும், ஓடும் பயணத்தின் அத்தனை கொண்டாட்டங்களையும் ஒரு மரணத்தின் வாயிலாக ஒரேயடியாய் தனக்குள்ளே சுழற்றிப்போட்டு மென்று தின்றுவிட்டு இறுமாப்போடு ஏப்பம் விட்டும் சிரித்திட விதிக்கும், விதியின் முகமாய்த் தெரியும் மரணத்திற்கும் மட்டுமே சாத்தியப்படுகின்றன.

இது நடந்தேதீரும் என நம்பும் எது ஒன்றும் நடக்காமல் போகலாம் அல்லது நடக்கவே நடக்காது என நினைத்தது மிக இயல்பாக நடந்தேறலாம். எதுவும் நிரந்தமில்லாத உலகில், சர்வநிச்சயமானது, நிரந்தரமானது மரணம் என்பது மட்டுமே. யாருக்குத்தான் தாம் ஒருநாள் மரணத்தை சந்திப்போம் என்பதில் சந்தேகம் இருந்துவிடப்போகின்றது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் ஒருவரும் தயாராக இல்லை. ஒருவேளை மரணத்தின் வாசமும், தெறிப்பும் எவ்வளவு கூர்மை மிகுந்ததாக இருப்பதால் அப்படியிருக்கலாம்.

சங்கிலியாய் பிணைந்திருக்கும் நட்புகளில், உறவுகளில் சொல்லாமல் கொள்ளாமல், ஏதோ ஒரு சூழலின் பொருட்டு, மெதுவாய் தனக்குள் குழைந்து, நெகிழ்ந்து, சிதைந்து, பட்டெனச் சிதறி தன்னை எல்லோரிடமிருந்தும் துண்டித்துக்கொண்டு, மண் துகள்களாய், சாம்பல்தூசுகளாய் மனிதர்கள் கரைந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். சட்டெனத் துண்டித்துப்போகும் போது அங்கே தோன்றிடும் வெற்றிடத்தில் நசநசக்கும் ஈரமும், மருளடிக்கும் இருளும், குலைநடுங்க வைக்கும் மௌனத்தின் ஓலமும், அனலாய் தகிக்கும் வெப்பமும், மூச்சை அமிழ்த்தும் வெறுமையுமென, புரட்டிப்போடும் உணர்வுகள் அதை அனுபவிப்பர்களுக்கு மட்டும்தானே தெரியும். ஏதோ சூழலில் எந்த முன்னறிவிப்புமின்றி விட்டு விடுதலையாகி மறைந்து, கரைந்து போகின்றவர்களுக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது.

கடந்துபோகும் கால நதியில் நம்மைவிட்டு நகர்ந்து போகும் மனித உறவுகளின் எண்ணிக்கையை எண்ணிவிட எத்தனை விரல்கள் இருந்தாலும் போதாது. ஆனால், உறவுகளை தனக்குள் ஊற்றிக்கரைத்த மரணத்தால், ஒருபோதும் அவர்களை மறக்கச்செய்துவிட முடிவதில்லை. மரணத்தில் தொலைத்த நெருக்கமான ஒரே ஒரு உறவை மனதுக்குள் மீட்டிப்பாருங்கள், இதுவரை நீங்கள் நேசித்து, மரணம் கொய்துபோனவர்கள் வரிசையாய் மனதிற்குள் வந்து படபடவென சிறகடிப்பார்கள். எப்படிப் பார்க்கினும் மரணம் வழங்கும் தண்டனையை வாழ்ந்து கொண்டிருப்பவன் மட்டுமே அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

உண்மையாக அமைகின்றதா அல்லது ஒரு மாயையான உணர்வா எனத் தெரிவதில்லை, மரணம் கொய்து நம்மைப் பிரிந்தவர்கள் குறித்து எப்படிக் கணக்கிட்டுப்பார்த்தாலும் நாம் அவர்களையோ அல்லது அவர்கள் நம்மையோ அதிகம் நேசித்திருப்பதுபோல் ஒரு உணர்வு மிகுந்திருக்கத்தான் செய்கின்றது.

எத்தனை மறுத்தாலும், தடுத்தாலும், தவிர்த்தாலும் நம்மேல் ஏதோ ஒரு ஓரத்தில் மரணத்தின் வீச்சமும், கருமையும், வெம்மையும், அதீதக்குளிரும், நசநசப்பும், வறட்சியும் நீண்டு படுத்துத்தான் இருக்கின்றது. எத்தனைதான் புதிதாய் பூக்கும் உறவுகள் அதை விரட்டிவிட முயன்றாலும் ஒரு போதும் முற்றிலும் விரட்டிவிட முடிவதில்லை!

மரணம் போதித்துவிட்டுச் செல்லும் பாடம் அவ்வளவு எளிதானதல்ல. போதித்த நொடியில் அப்பட்டமாய் புரிகிறது அதன் அடர்த்தி. போகப்போக எல்லாம் நீர்த்துப்போகிறது. நீர்த்துப்போன நிலையில் மீண்டும் இன்னொரு பாடத்தை எதிர்பாரா நொடியில் வெகுவேகமாய் திணித்து விட்டு கள்ளத்தனமாய் புன்னகைக்கவும் முடிகிறது மரணத்தால். இதையெல்லாம் யார் செய்கிறார்கள், ஏன் இப்படி நிகழ்கிறது எனும் எதற்கும் பதில்களற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

மரணத்தை  எதிரியென்று விரட்டிடவா, அரசன் என்று போற்றிடவா, அசுரன் என்று மருண்டிடவா, போதிக்கும் குருவென்று வணங்கிடவா, வள்ளல் என்று கையேந்திடவா, அழித்தொழிக்கும் அரக்கன் என்று தூற்றிடவா, விடுதலையளிக்கும் நீதிமான் என்று பணிந்திடவா, சிறையிலடைக்கும் காவலன் என்று மிரண்டிடவா என்ற குழப்பம் சிந்தனைச் சிலந்தியின் இழைகளாய் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜெயிக்கிறோம், தோற்கிறோம், கொண்டாடுகிறோம், கூப்பாடு போடுகிறோம், எல்லாம் இறுதியாக ஒரு நாள் மரணத்திடம் தோற்றுப்போவதற்காவே. தோற்றுப்போனதை உணரும் போது, அதன் வலியறிய நாம் இருக்கப்போவதில்லை, அதைச் சுமக்கத்தான் அக்கம் பக்கமென அதீத அன்போடு தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் சில உறவுகளை.

-0-

Dec 8, 2010

விடுதலை உருவாக்கும் சிறை

புதிரோ, சுவாரஸ்யமோ, அலுப்போ எப்படி எடுத்துக்கொண்டாலும் எல்லோருக்குமே கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடத்தான் ஆசை. ஏதோ ஒரு சூழலில் கன நேரத்தில் தோன்றும் உணர்ச்சி வேகத்தில் வாழ்வை முடித்துக்கொள்வோர், இன்னும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக வாழ்வைத் தியாகம் செய்வோர் தவிர்த்துப் பார்த்தால் வாழ்க்கையை எப்படியாகினும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆசை நிறைந்த வாழ்க்கைப்பயணம், எல்லாம் கடந்து வயது முதிர்ந்து எல்லைக் கோட்டைத் தொடும்போது, அது கொண்டாட்டத்துக்கு உரியாதாகவே நிறைவடைகிறது. அது தவிர்த்து மரண அரக்கனின் அகோரப் பசிக்கு இறையாகும் அகால மரணங்கள் திணிக்கும் வலிக்கு நிகரான வலி இந்த உலகில் எதுவுமே இல்லை.

ஒரு துளி கவனக்குறைவில் விபத்து வடிவில் சிதறுண்டு போகும் வாழ்க்கைப் பயணம், என்னவாகிவிடப் போகிறதென சிறு அலட்சியத்தோடு தள்ளிப்போட்டதால் தின்று தீர்க்கும் நோயால் தீர்ந்து போகும் வாழ்க்கைப் பயணம் என இளவயது மரணங்களைத் தாங்கும் குடும்பங்களின் சுமை, இந்த பூமியைவிட சுமையென்றே தோன்றுகிறது.

இலகுவாய் வாழ்க்கைச் சக்கரத்தை இழுத்துக் கொண்டிருக்கும் குடும்பச் சக்கரத்தில் சட்டென விடுபடும் கன்னியாக ஒரு உறவு மட்டும் விலகும் சூழலில் அந்தக் குடும்பச்சக்கரத்திற்குள் ஏற்படும் தொய்வு, அதிர்வு, தடுமாற்றம் அதன்பின் எதனைக் கொண்டு சங்கிலியில் பிணைத்தாலும் எதாவது ஒரு வகையில் அது வலு, திடம் குறைந்ததாகவே சக்கரத்தை தொய்வோடே நகர்த்திக் கொண்டிருக்கும்.

பிடிமானமாய் பிணைத்துக் கொண்டிருந்த கரத்தில், ஒன்று மட்டும் ஏதோ ஒரு காரணத்தால் நிரந்தரமாய் பிய்த்துக்கொண்டோடும் கடும் வலியைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து, தவிர்க்க இயலாமல், தவிர்க்க விரும்பாமல் அந்தக் கரத்தின் இதத்தை, இளம் சூட்டை, பிடிமானத்தை நினைத்துப் பார்க்கும் நேரங்கள் மிகக் கனமானது. இதுதான் வாழ்க்கை, இதுவும்தான் வாழ்க்கை என வாழ்க்கையைப் புரிய வைக்கும் முக்கியமான நேரங்கள் அவை.

நமக்குள் ஏற்படும் ஒரு பிரிதல் மட்டும் தானா, இதற்கு கொஞ்சம் கூடக்குறைய என, நம்மைச் சுற்றி ஒவ்வொரு மனிதருக்கும் இது போல் ஒரு ஊமை வலி இருக்கத்தானே இருக்கின்றது என்பதையும் மனதில் உள்வாங்கும் போது, வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது, விசித்திரமானது என்பது புரியத்தான் செய்கின்றது. இந்த விசித்திர வாழ்க்கைக்குத்தானா இத்தனை சூதும் வாதும் என நினைக்கும் போது, வெறுமை நிரம்பிய சிரிப்பு மனதிற்குள் வெடித்துக் கிளம்புகிறது.

எதோ நம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமா வாழ்க்கையில் இப்படிப்பட்ட இழப்பு என மனம் கனக்க சிந்திக்கும் நேரத்தில், நம்மையொத்த மனிதர்களில் நம்மோடு கலந்து, பிணைந்து சொல்லாமல் கொள்ளாமல் மண்ணாய், சாம்பலாய் மறைந்து போன மனிதர்கள் ஒவ்வொருவரும் தத்தமது குடுமத்தில் சுமக்க முடியாத சுமையை வைத்து விட்டுப் போய்த்தான் இருக்கின்றார்கள்.

உறவை இழக்கும் வலிகளை அழத் துணிவு கொண்டவர்களால் அழுது கரைக்க முடிகிறது, பேசத் தெரிந்தவர்களால் பேசிக் கரைக்க முடிகிறது, எழுதத் தெரிந்தவர்களால் எழுதிக் கரைக்க முடிகிறது. ஆனாலும், விசித்திரம் என்னவென்றால், என்னதான் கரைத்து எடுத்து கவிழ்த்து தீர்த்தாலும், வற்றாத அமுதசுரபியாய் வலி, மீண்டும் சுரந்து வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மிஞ்சுவது முரண்பட்ட ஒரு நீள் வரி மட்டுமே “இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்


Dec 8, 2009

எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?

வாழ்க்கையில் ஒன்றை இழந்தால், பெரும்பாலும் அதீத முயற்சி எடுத்தால், ஏதோ ஒரு கட்டத்தில் அதற்கு நிகராக இன்னொன்றைக் கொண்டு நிரப்பிட முடியும். உறவுகளின் பிரிவையும், குடும்பத்தில் நிகழும் சில அகால மரணத்தையும் மட்டும் எதைக் கொண்டும் ஈடு செய்யமுடிவதில்லை

சின்னச் சின்ன சந்தோஷங்களாக மெல்லிய சாரலாக, சில சமயம் ஆலங்கட்டி மழை போல மகிழ்ச்சி நம் மீது விழுந்து வாழ்க்கையை ஆசிர்வதித்துக்கொண்டே இருக்கும். ஆனால், துக்கம் என்பது எவ்வளவு சந்தோசச் சாரல் நம்மீது வீசிக்கொண்டிருந்தாலும், ஒரு கரிய நாளின் கனத்த பொழுதுதில் சட்டென வந்து, நம் வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்கள் மீதும் பரந்து படர்ந்து படியும். அதன் பின் அந்த வெம்மை மட்டும் தினம் தினம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட துக்கம் ஏற்படுத்திய பள்ளத்தை எது கொண்டும் நிரப்ப முடியாமல், இன்னும் எத்தனையோ குடும்பம் நாட்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

தாய் மீது கட்டிப் புரண்டு விளையாடும் நாய்க்குட்டி போல், காட்டுக்குள் தனக்கென பாதை வகுத்துக் கொண்ட சிற்றோடை போல் மகிழ்ச்சியாக கடந்து போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் குடும்பத்தில் இருக்கும் சக உறவின் எதிர்பாராத மரணம்... பூச்செடிமேல் இறங்கிய மிகப் பெரிய இடியாக அத்தனை சந்தோசங்களையும் சின்னாபின்னமாக்கி விடும்.

அந்த மரணத்தைச் சந்திக்கும் நபர், பாசமிகு தந்தையாக, காதலனாக, கணவனாக, காதலியாக, மனைவியாக, சகோதரனாக, சகோதரியாக, இளம் வயது மகனாக, மகளாக, பூப்போன்ற குழந்தையாக..... இப்படி ஏதோ ஒரு அன்பான உறவாக, இனிமேல் கிடைக்காத பொக்கிசமாக, ஆனால் என்றுமே இழக்க விரும்பாத உறவாக இருப்பார்.

சட்டென துண்டிக்கப்படும் மின்சாரம் போல், திடீரென சொல்லாமல் கொள்ளாமல், அறிந்தோ அறியாமலோ ஏதோ ஒரு காரணத்தால் மரணத்திடம் காவு கொடுக்கும் போது... அந்த குடும்பத்தின் அத்தனை சந்தோசங்களும் அந்த உறவோடு அடக்கம் செய்யப்படும்.

மரணத்தை சந்தித்த கொடுங்காலத்தில், அன்பிற்குரிய உறவை இழந்த அந்த கரிய தினத்தில் காலம் மிக வேகமாக கடந்து ஒவ்வொன்றையும் அதன் போக்கில் நகர்த்தி நடக்க வேண்டிய காரியங்களை நடத்தி விட்டுப் போய்விடும். அதன் பின் வரும் ஒவ்வொரு நாட்களின் இரவுகளும் மிக மோசமான இருளைச் சுமந்து வரும். இழப்பைத் தாங்க முடியாமல், இரவுகளில் தூக்கம் தொலைத்து, வெறுமை சுமக்கும் விடியலை நோக்கி... அப்பப்பா... அதுதான் நிஜமான நரகம். அனுபவித்தவர்களுக்கு வலி தெரியும்.

அதன்பின் அந்த குடும்பத்தில் சின்னச் சின்னதாய் சந்தோசப் பூக்கள், வேவ்வேறு கணங்களில் பூத்தாலும் அதை முழுதாய் அனுபவிக்க முடியாமல், அடி மனது கனத்தே கிடக்கும். மற்றவர்களிடம் பேசும் போது இழந்தவர்கள் பற்றிய எண்ணம் மீண்டு வரும் போதும், இழந்தவர்களின் பிறந்த நாள் வரும்போதும், இழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும்போது மனம் படும்பாடு, அடையும் வலி... எந்த வார்த்தை கொண்டு எழுத முடியும்.

எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை புதிய உறவுகளைச் சந்தித்தாலும், எத்தனை வெற்றிகளைச் சந்தித்தாலும், அந்த உறவு ஏற்படுத்தி விட்டுப்போன ஆழமான காயத்தின் மீது காலம் வேண்டுமானால் சதையையும், தோலையும் வளர்த்து ஆறிப்போனதாக காட்டலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஆறாத புண்ணாக அது தரும் வலி... முடியவே முடியாதது என்றாலும்..... அனுபவித்துத்தான் ஆக வேண்டும், ஏனெனில், அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?

________________________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...