Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Apr 7, 2020

நம்பிக்கை மீது நம்பிக்கை வை!

சிலர் ‘எனக்குள்ள ஒண்ணு தோணுச்சுனா அப்படியே நடந்துடும்’ என்று தமது உள்ளுணர்வு குறித்து சொல்வதுண்டு. சில வேளைகளில் அது அச்சமாகவும் வெளிப்படும். இன்னும் சிலர் தாம் ஒன்றை நினைத்தால், சொன்னால் அப்படியே நடந்துவிடும் என்று சொல்வார்கள். இந்த இரண்டு குறித்தும் நான் கிஞ்சித்தும் கவலைப்பட்டதில்லை. காரணம் எனக்கு இதுவரை உள்ளுணர்வு இப்படி எதையும் சுட்டிக்காட்டியதில்லை. அதேபோல் நான் நினைத்தபடியோ, சொல்லியபடியோ எதுவுமே நடந்ததவும் இல்லை.
இன்னொரு வகையினர் இருக்கின்றனர். அவ்வகையினர் மற்றவர்களுக்கு ஏதேனும் சொன்னால், அந்த மற்றவர்களுக்கு அது அவ்விதமே நடந்துவிடும் என்பார்கள். எனக்கும்கூட அப்படி ஒருவர் சொல்லி, ஓரிரண்டு சம்பவங்கள் அவ்விதமே நடந்தது. நடந்தவை சவாலானவை என்பதால், ‘இனிமே எதுக்காச்சும் நீ வாய் தொறந்தேன்னா கொல வுழும்’ என்று விளையாட்டாக மிரட்டி வேறு வைக்க வேண்டியதாகிப் போனது. எனினும் இந்த மூன்று விதமான நம்பிக்கைகைகள்(!) குறித்து, எனக்கு மிக நெருக்கமான அனுபவமோ அல்லது நம்பிக்கையோ ஏற்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு மனதில் ஒரு சிந்தனையோட்ட கேள்வி எழுந்தது. ‘எல்லோரும் எல்லாவற்றையும் கைவிட்டிருக்கும் இந்தச் சூழலில், காற்று மாசு, ஒலி மாசு, நுகர்வுகள், எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட ஏதேதோ குறைந்திருப்பது போலவே மரணங்களும் குறைந்திருக்கின்றனவா? விபத்துகளுக்கு வாய்ப்பே இல்லை. மது விற்பனையில்லை. எப்போதும் மூச்சுத் திணறும் மருத்துவமனைகள்கூட பெரும்பாலும் முடங்கிக் கிடைக்கின்றன அல்லது தேவையே ஏற்படவில்லை. இந்த நாட்களில் உறவு மற்றும் நெருங்கிய நட்பு வட்டத்தில் மரணச் செய்தி எதுவும் கேள்விப்படவில்லையே!’ என்ற சிந்தனை நிழல் நினைவிலிருந்து தேய்வதற்குள் இரண்டு மரணங்கள் குறித்த தகவல் வந்து சேர்ந்தது.


இரண்டிலும் இருந்த பொருத்தம்தான் மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. இரண்டுமே மாரடைப்பு. இருவருமே 40-50 வயதிற்குள் இருந்தவர்கள். கிடைத்த மிகப் பெரியதொரு வாழ்க்கை ஐம்பது வயதிற்குள் அவசரமாக முடிந்தது போலவே, அவர்களின் அடக்கமும் மிக மிக அவசரமாக உற்றார் உறவினர்கள் இன்றி நிகழ்ந்தது கடும் வலியைத் தந்து கொண்டிருக்கின்றது.
ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தவன் ‘இந்த நாட்களில் சாவுகளைக் கேள்விப்படவில்லையே’ என ஏன் சிந்தித்தேன். சிந்தனைகள் உருளும்போது, தலையை உலுக்கி வளராமல் வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் உருவாகும் சிந்தனையை எப்படித் தடுப்பது. அந்த மரணங்கள் யதேட்சையாகவே நிகழ்ந்திருக்கலாம்கூட, எதற்காக அப்படியான சிந்தனைகள் எனும் கேள்வி மீண்டும் மீண்டும் மோதிக் கொண்டேயிருக்கின்றன. இன்றைய நிலையை ஒட்டியும்கூட அந்த சிந்தனை வந்திருக்கலாமோ?
மரணத்தை தவிர்க்கவே முடியாது, அதை கணிக்கவும்கூட முடியாதுதான். எனினும் முதுமை சார்ந்த மரணங்கள் எதையும் கேள்விப்படாத இந்தத் தருணத்தில், அடுத்தடுத்து நிகழ்ந்த வாழ வேண்டிய வயதில் நிகழ்ந்த இந்த இரண்டு அதிர்ச்சி மரணங்கள் இந்த நாட்கள் குறித்தான பயத்தையும் கூடுதலாக விதைக்கின்றன.
இது யாரும் எதிர்கொண்டு, இந்த நாட்கள் இப்படித்தான் இருக்கும் என சமாதானம் சொல்ல முடியாத வகை நாட்களே. வீட்டில் முடங்கிக் கிடப்பது, தம் தொழில் சார்ந்த துறைகள் முடங்கிக் கிடப்பது, எதிர்காலம் எப்படியிருக்கும், வரவு செலவுகள் என்னாகும், வசூலிக்க வேண்டிய தொகை, கட்ட வேண்டிய கடன், யாரையும் சந்திக்க முடிவதில்லை, எந்நேரமும் அதே செய்திகள் ஓடுகின்றன உள்ளிட்டவை குறித்து அதீதமாய் சிந்தித்து குழப்பிக் கொள்ளாமல் இருப்பதுதான் இப்போதைய முதல் தேவை.
இங்கு எது முடங்கியிருந்தாலும், எது வீழ்ந்து போனாலும், எது சிதைந்து கொண்டிருந்தாலும் அது தனக்கு மட்டுமில்லை, ஊரிலும் உலகத்திலும் உள்ள பலருக்கும் நிலை அப்படித்தான் எனும் தெளிவும் நிதானமும் தேவை.
வாழ்ந்து பழக்கமில்லாத, ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத நாட்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். தொற்று - நோய் – மரணம் என்பதைச் சுற்றியே எல்லாம் இயங்கிக் கொண்டிருப்பதாய் கூரிய மாய நகங்கள் நம்மைப் பிறாண்டிக் கொண்டிருக்கின்றன.
இந்த நாட்கள் எப்படியானதாகினும், நடந்து, ஓடி, தாண்டி, மிதித்து, தவழ்ந்து, ஊர்ந்து கடந்து சென்று விடுவோம். வேறொரு நாட்களில் நின்றபடி, ‘கடந்த அந்த நாட்கள் இருக்கே... அதை எப்படிக் கடந்தேன் தெரியுமா!’ என்று பெரும்பாலானோர் கதை பேசக் காத்திருப்போம்.
கவனமும் அதீத நிதானமும் தேவை. உடல் நலம் மிக முக்கியம், அதைவிட மன நலம், மன பலம் மிக மிக முக்கியம். ஏற்கனவே நம் மீதும், சக மனிதர்கள் மீதும், எதிர்காலத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மீது படிந்திருக்கும் தூசிகளை ஊதிவிட்டு இறுகப்பற்றிக்கொள்வோம்.
- ஈரோடு கதிர்
*
ஒலி வடிவில் கேட்க :
https://anchor.fm/erodekathir/episodes/ep-ecgea9

Dec 8, 2014

தற்காலிக வலி நீக்கி



இந்த வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்களில் ஒன்று மரணம். ஒவ்வொருவருக்கும் தம்முடைய மரணம் மிகுந்த மிரட்சியூட்டுவதாய்த் தோற்றமளிக்கிறது. அதேசமயம் தம் உற்றாரின் மரணம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கை மீது மிகப்பெரிய அவநம்பிக்கையூட்டுவதாய் அமைந்து விடுகிறது. வாழ்க்கையின் அத்தனை வெற்றிகளையும், கெக்கலிப்புகளையும் சிதறடித்து, நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிட உடனிருப்பவரைக் கொய்துபோகும் ஒற்றை மரணத்தால் முடிகின்றது. எவருக்குத் தெரியாது, இந்த வாழ்வின் நிறைவுப் புள்ளி சாவு என்பது? ஆனால் எவருக்குத்தான் அது பிடித்ததாய், விரும்புவதாய் அமைந்துவிடுகிறது.

மரம்போல் இருக்கும் குடும்பத்தின் வேர்களாய் இருப்பவை உறவுகள். ஆணிவேரைத் தொலைத்து சல்லிவேர்களில் ஊசலாடும் மரமாகவோ, சல்லிவேரினைத் தொலைத்து ஆணிவேரின் பிடிப்பில் காலம் நகர்த்தும் மரமாகவோ நாமோ அல்லது நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று ஜீவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஒரு விபத்து, ஒரு கவனக்குறைவு, ஒரு பேராசை, ஒரு துரோகம், ஒரு சதி, இரத்த நாளத்தில் உருவாகும் ஒரு சிறு அடைப்பு, ஒரு தவறு, ஒரு மெத்தனம், ஒரு தோல்வி, ஒரு அவநம்பிக்கை, ஒரு அறியாமை, கூடுதலாய் அமையும் ஒரு மிடறு மது என இவற்றில் ஏதாவது ஒரேயொரு ‘ஒரு’ போதுமானாதாய் இருக்கின்றது, ஆசையாய்க் கட்டிக்கொண்டிருக்கும் கனவின் மேல் அமிலத்தை வார்த்துவிட்டுப் போக.

அமிலத்தின் காயங்களை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றிவிட முனைவதை அதை அனுபவித்து வருபவர்களுக்கு காலம் புரியவைத்து விடுகிறது. ஆனால் அது ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கும் தழும்புதான் எப்போதும் ஜீவிக்கும் பிரச்சனை. எதேச்சையாய் விரல்கள் ஊர்ந்துபோகும் போதோ, தன் பார்வையே வருடிப்போகும்போதோ நிரடும் தழும்புகளுக்கு குறிப்பிடும் படியான நிறமும், வடிவமும் உண்டு. அதனுள் நீங்காமல், நிறமற்று வடிவமற்று, மறைந்திருக்கும் சூன்யமான வலிக்கு நிகராய் எதையும் உருவகப்படுத்திட முடியாது.
ஒரு குடும்பத்தின் கனவு ஊஞ்சல்களின் சங்கிலியாய் இருக்கும் ஒருவனோ, ஒரு குடும்பத்தின் குலதெய்வமாய் பாவிக்கப்படும் ஒருத்தியோ, இந்த நொடி முதல் இல்லாமல் போகின்றார்கள் என்பதை உணரும் தருணம் எத்தனை கொடியது என்பதை அனுபவித்துக் கடந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

இவ்வாறாக தங்கள்மேல் ஏவிவிடப்பட்ட ஒன்றை, அதே போன்று சுமக்கும் எத்தனையோ பேருடன், விதவிதமாய் ஒப்பீடுகளுக்குள் உட்படுத்தி சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றாலும், திமிறிக்கொண்டு வெளியே வந்து தனித்து நின்று, சீழ் வைத்த புண்ணில் துளிர்க்கும் வலிபோல் மீண்டும் மீண்டும் வதைத்துக் கொண்டேயிருப்பது அதன் தனியியல்பு.

அம்மா, அப்பா, சகோதரி, சகோதரன், மனைவி, கணவன், மகள், மகன், , பேரன், பேத்தி, உற்ற தோழமை என எவர் ஒருவரை இழந்தாலும், இழப்பவர்களுக்குள் ”எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி!”யெனும் கேள்விகள் தொடர்ந்து முளை விட்டுக்கொண்டேயிருக்கும். அவர்களுக்கும் நிதர்சனம் புரியும். அவை பதிலில்லாக் கேள்விகள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் தங்களின் மிச்சமிருக்கும் நாட்களைக் கடத்த, அவர்களிடமிருக்கும் ஒரு தற்காலிக வலி நீக்கியாய் அந்தக் கேள்விகளைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதில்லை!

Jan 22, 2014

ஆழ்ந்த நன்றிகள்… அடச்சே... ஆழ்ந்த இரங்கல்கள்!

இப்போது அந்தக் கொசு கடிப்பது நான்காவது முறையாக இருக்கலாம். அதுவும் முழங்கைப் பகுதியில். அரைக்கை சட்டையாக இருப்பதால், நாற்காலியில் ஊன்றியிருக்கும் முழங்கைப் பகுதி கொசுவுக்கு ஏதுவாகப் போய்விடுகிறது. சிலமுறை கையை எடுத்து மறு உள்ளங்கையில் வைத்து ’கும்மாயம் கும்மாயம்’ சுற்றுவதுபோல் தேய்த்துக்கொண்டேன். முதலில் கடித்தபோது பெரிதாக உரைக்கவில்லை. எந்தக் கடி அதிக எரிச்சலை உண்டாக்கியதெனத் தெரியவில்லை. கையைக் கொஞ்சம் சொறிந்துகொண்டேன். அருகில் கொசு பறப்பது தெரிந்தது. அடிக்கடி முளைக்கும் வன்மக் கொம்பு விர்ரென நீண்டது. கொசுவை கைகளால் அடித்து வீழ்த்துவதில் எப்போதும் ஒரு பெரு மிதப்பு உண்டு. அது என்ன வகையான உணர்வென்றெல்லாம் தெரியவில்லை. இரு கைகளையும் நீட்டி கொசுவை பின் தொடர்ந்து அடிக்க முயலும்போது தப்பித்துவிட்டது. சுவற்றில் ஒரு மூலைக்குச் சென்ற கொசு ஒரு மாதிரி தவிப்பது தெரிந்தது. உற்றுப் பார்க்க, சிலந்தி வலையில் சிக்கியிருப்பது புரிந்தது.



சில நூலிழைகள்தான். உற்றுப் பார்த்தால்தான், அங்கே வலையிருப்பதே தெரிகிறது. கொசுவின் விதி இன்றைக்கு சரியில்லையெனப் புரிந்தது. இறக்கைகள் சிக்கிக்கொண்டிருந்தன. வலையில் ஏற்பட்ட அதிர்வுகளைக் கண்ட ஒரு சிலந்தி ஒற்றை நூலிழை வழியே சரசரவென நெருங்கிக் கொண்டிருந்தது. கொசுவின் உடல் துடித்துக் கொண்டிருந்தது. சிலந்தியை நாங்கள் எட்டுக்கால் பூச்சி என்போம். எட்டுக்கால்கள் இருக்கிறதாவெனப் பார்த்தேன். ஆறு கால்கள்தான் இருந்தன. அப்போ இது ஆறுகால் பூச்சியா இருக்குமோ? அல்லது இரண்டு கால்கள் உடைந்து போயிருக்குமோ எனத் தோன்றியது. இடையில் கால்கள் உடைந்திருக்குமா அல்லது பிறப்பிலேயே ஆறு கால்களோடு மட்டும் பிறந்த மாற்றுத் திறனாளி சிலந்தியாக இருக்குமா? ஆறு கால்களோடும் அதன் வாழ்க்கை நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இன்றைக்கு அதற்கு பெரியதொரு தீனியும் தானே வந்து சிக்கிக் கொண்டிருக்கின்றது.

கொசுவை அடித்துவிட்டால் என்ன? வேணாம், எட்டுக்கால் பூச்சி என்ன செய்கிறதெனப் பார்க்கலாம். ஆரம்பித்தது கொசுவுக்கும் எட்டுக்கால் பூச்சிக்குமான போர். அந்த வலையின் மற்றொரு பகுதியில் ஒரு சிறிய சிலந்திக் குட்டி இருந்தது. அதை குட்டி எனச் சொல்லவேண்டுமா, குஞ்சு எனச் சொல்ல வேண்டுமா? அந்தக் குட்டிச் சிலந்தியோடு பெரிய சிலந்தியை ஒப்பிடுகையில், அது மினியேச்சர் போலவும், சிலந்தி ஒரு டைனோசர் போலவும் தோன்றியது.

எப்போதும் சிலந்தி வலை மீது சொல்ல முடியாத ஆச்சரியமுண்டு. இவ்வளவு சிறிய ஒரு சிலந்தி எப்படி அவ்வளவு நுண்ணிய வலையைப் பின்னுகிறது. அதன் கோடுகளும் கணக்கீடுகளும் எத்தனை அதிசயம் நிறைந்தவை. ஊர் உலகத்தின் குப்பைகளெல்லாம் காற்றின் வழியே கடந்து போகையில் படிந்து அது ஒட்டையாக மாறி, நமக்கு ஒவ்வாத ஒன்றாகவும், அதற்கு பயணப்பட பயன்படாததாகவும் ஆகிவிடும் அவலமும் உண்டு.

கவனம் கொசுவின் போராட்டம் மேலும், சிலந்தியின் தாக்குதல் மீதும் குவிந்தது. இதுநாள் வரை சிலந்திக்கு எப்படி இரை கிடைக்கிறதென்றெல்லாம் யோசித்ததில்லை. இப்படித்தான் வலிய சில இரைகள் சிக்கிக்கொள்ளுமோ? எவ்வளவு கஷ்டப்பட்டு வலையமைத்திருக்குமென்று ஒரு போதும் யோசிக்காமல், போகிற போக்கில் விரல் நுனியால், ஸ்கேல் துணை கொண்டு சில சமயங்களில் சீமாறு கொண்டு என எத்தனை எளிதில் கலைத்துவிடுகிறோம். என் வீடு, என் அறை, என் இடம் இங்கு உனக்கு கூடமைக்க என்ன உரிமையென எளிதில் நசுக்குகிறோம். இதே சமூகம் தான் ஊருக்குள் எப்போதாவது நலம் விசாரிக்க வரும் யானை, புலிக்கு இத்தனை கூப்பாடு போடுகின்றது.

சிலந்தி கால்களை நிலையாக வைத்துக்கொண்டு உடலை மட்டும் முன்னோக்கி வெடுக்கென நகர்த்தி, மிருகப் பாய்ச்சலாய் முத்தமிடுவது போல் கொசு மீது மோதிவிட்டு பின்வாங்கியது. அடுத்தடுத்து சமகால இடைவெளியில் மோதிக் கொண்டேயிருந்தது. அதே சமயம் நெருங்கிக்கொண்டும் இருந்தது. நூலை அறுத்து கொசுவை விடுவித்துவிடலாமா எனத் தோன்றியது. சற்றுமுன் கொசுவை அடித்துக்கொல்ல விரட்டியபோது இருந்த கடுப்பு, கோபம், வெறுப்பு இப்போதில்லை. விடுவிக்கும் அளவுக்கு கருணையும் சுரக்கவில்லை. கை முட்டியில் கொசுக் கடியின் உறுத்தல் மீண்டும் நினைவுக்கு வந்தது. இன்னொரு கை அந்த இடத்தை மெல்ல வருடிவிட்டது. கொசுவைக் காப்பாற்றிவிட்டால் சிலந்தியை பட்டினி போட்டதாகாதா என்ற வியாக்கியானம் வேறு தோன்றியது.

கொசுவை முழுதும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது சிலந்தி. மெல்ல மெல்ல கொசுவின் இறக்கைகள் தவிர்த்த உருவம் மறையத் தொடங்கியது. ஒரு நுண்ணோக்கி கையில் இருந்தால் நன்றாக பார்க்கலாம் என புத்தி நினைத்தது. அதே நேரத்தில் “சாகட்டும் கொசு, பாவம் கொசு, பசியாறட்டும் சிலந்தி” என மனம் சுழன்று சுழன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு கொலையை, ஒரு மரணத்தை, ஒரு பசியாறலை சலனமின்றி ரசிக்கும் மனநிலை வாய்த்திருப்பது என்ன வகையான நிலைப்பாடு எனப்புரியவில்லை.

அவ்வப்போது இப்படி ஒரு நிலைப்பாடு வருகின்றது. இதில் எது சரி, எது தவறெனத் தெரியவில்லை அல்லது தெளிவில்லை. தீர்மானிக்க இயலுவதுமில்லை.

எல்லோருக்கும் அவ்வப்போது ஒரு மனநிலை அமைகின்றது. அது நிலையாக நீடித்திருப்பதில்லை. நீடித்திருக்க வேண்டுமென என்ன நிர்பந்தம் அல்லது சட்டம். சூழல்கள் தீர்மானிக்கின்றன. சூழல் ஒரு பெருவெள்ளம்போல் அதன் போக்கில் மனநிலையை உருட்டிச் செல்கின்றது.

வேறென்ன…
முதல் பத்தியில் இருந்த மனநிலைக்குச் சென்று, சொல்ல இரண்டு வரிகள் உண்டு… அவை

* கொசுக்கு ஆழ்ந்த நன்றிகள்…. அடச்சே ஆழ்ந்த இரங்கல்கள்.

* சிலந்திக்கு ஆழ்ந்த நன்றிகள்!


Dec 8, 2012

பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு

திசையெங்கும் பறந்து சிறகு விரிக்கத் துடிக்கும் சிந்தனைப் பறவையை மெல்லக் கையிலேந்தி தலைவருடி யோசிக்கிறேன். எது குறித்த சிந்தனை எப்போதும் என்னால் தவிர்க்கமுடியாததாக இருக்கின்றது என்பது குறித்து.

குழந்தையொன்று பிறந்த செய்தி, பயணம், மேலே நகரும் மேகம், கண்ணீர் துளியின் வெதுவெதுப்பு, முத்தத்தின் சுவை, பணம்-கடன்-வட்டி, சமீபத்தில் போக வேண்டிய திருமணம், நேற்றுக் கிடைத்த பாராட்டு, வாசித்த கவிதை, அடுத்த வேளை சாப்பாடு என்னவாக இருக்கும், கரண்ட் இப்போ போகுமா போகாதா?.... என இது போன்ற சிந்தனைகள் ஒவ்வொரு நாளிலும் வரலாம் வராமலும் போகலாம். ஆனால் தினமும் ஒருமுறையேனும் மனதிற்குள் தவறாமல், தவறவே தவறாமல் வந்துபோவது ”மரணம்” என்பது குறித்த சிந்தனை மட்டுமே. அந்தச் சிந்தனையின் அளவு சூழலுக்கு ஏற்ப இமை முடியின் கனத்திலோ, ஒரு இரும்புப் பொதியின் அளவிலோகூட இருக்கலாம்.

பெரிதும் மரணம் என்பது வாசிக்கவும் நினைக்கவும் ஒரு கடுமையான கறுமை நிறைந்த சொல்லாகவே உணரப்படுகிறது. மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நிதர்சனமும்கூட. மரணம் குறித்துத் திட்டமிட்டுச் சிந்திப்பதில்லையெனினும் சிந்திக்காமல் இருந்துவிட முடிவதில்லை. காரணம் வாழ்க்கை என்பதே அதை நோக்கிய பயணம்தான்.

நாற்பதினை விரைவில் எட்டிப்பிடிக்கவிருக்கும் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். இதுவரை நான் என் குடும்பத்தில் நான்கு மரணங்களைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் அதற்கு ஈடு செய்யும் வகையில், ஒரே ஒரு ஜனனத்தைத்தான் வாழ்க்கை எனக்களித்திருக்கிறது. நான் சந்தித்த மரணங்கள் முதுமை, விபத்து, நோய் என வகைப்படுத்தப்பட்டாலும் மரணம் என்பது ஒன்றே ஒன்றுதான். மரணம் ஒன்றே ஒன்று என்றாலும் அது யாருடையது, எதனால் என்று பார்க்கும் போது அது தரும் உணர்வுகள் வேறுபட்டது.

ஒவ்வொரு தினமும் எப்படியாவது யாரையாவது நினைக்கையில், சந்திக்கையில், எதையாவது காணுகையில் என… எதன் வடிவத்திலாவாது மரணம் என்ற ஒரு சொல் சிந்தனைக் குளத்திற்குள் ’சொத்’ என விழுந்துவிடுகிறது. விழுந்த சொல் எதாவது அதிசயமான நேரங்களில் சலனமேதும் ஏற்படுத்தாமல் அமைதி காப்பதுண்டு. வழக்கமான அதிசயங்களற்ற பொழுதுகளில் சலனப்படுத்தவே செய்வதுண்டு. சில தருணங்களில் சலனம் அலைகளாகவும் மாறுவதும், எப்போதாவது அது ஒரு ஆழிப்பேரலையாக மாறுவதையும் தவிர்க்க இயலுவதில்லை.

ஒவ்வொரு மரணத்தையும் முதன்முதலில் எதிர்கொண்ட சூழல்களில் மனதிற்குள் விழுந்த பித்தினை காலம் கொஞ்சம் கொஞ்சமாக சலவை செய்திருக்கின்றது. எனினும் விழுந்த இடத்தில் ஏற்பட்ட தழும்பினை மட்டும் எதனாலும் சமன் செய்திடமுடிவதேயில்லை. அது விழும் நேரத்தில் தோன்றிய வலியும், காலப்போக்கில் அது நீர்த்து நீங்கியதன் நிதர்சனமும் சிறிது சிறிதாக மனதைப் பக்குவப்படுத்தவே செய்கின்றது.



மரணம் தவிர்த்து எதனாலும் அத்தனை பக்குவத்தை, ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை தந்துவிட முடிவதில்லை. உறவுக்குள், அதுவும் உயிர் கலந்த உறவுக்குள் நிகழ்ந்த நிரந்தரப் பிரிவினால் தோன்றிய வெற்றிடத்திற்குள் எத்தனை செடிகள் முளைத்திடினும், ஒருபோதும் அந்தச் செடிகள் ஏனோ மலர்வதேயில்லை.

சமகால இடைவெளியில் விரும்பாலும் விரும்பியும் மரணங்களைக் கடந்து வந்து கொண்டேயிருக்கின்றேன். மரணம் குறித்த சிந்தனையும், உணர்வும் ஒரு பழகிய நாய்குட்டி போல மிக இயல்பாகவே உடனிருந்து கொண்டிருக்கின்றது. தினந்தோறும் அதுகுறித்த சிந்தனைச் சலனங்கள் ஏற்படுவதால், மரணம் குறித்த பயம் நீர்த்துப்போய், சகமனிதர்கள் மீதான கரிசனத்தின் அடர்த்தியைக் கூட்டச் செய்கின்றது.

கடந்துபோகும் ஒவ்வொருவரின் மரணமும் செல்லமாய்க் கண் சிமிட்டி என்னிடம் ரகசியமாய்ச் சொல்லும் வார்த்தைகள், “இன்னும் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு. மரணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்துவிடும்”

-

Dec 8, 2011

தொலைவு அறிந்திடாப் பயணம்

பிறக்கும் வரை மரணம் குறித்த பேச்சுக்கு அவசியமிருப்பதில்லை. பிறந்த நொடியிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது மரணம் என்பதை நோக்கித்தான் இந்த வாழ்க்கை என்பது. மரணம் நோக்கிய பயணமே ஒருவரின் வாழ்க்கையின் நீளம். ஆனால் அந்த நீளம் என்னவென்று தெரியாததுதான் ஒரு வாழ்க்கையின் மாயவித்தை.

மிக நீண்டதாய், செம்மைப்படுத்தப்பட்ட பாதையாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் நகரும், ஓடும் பயணத்தின் அத்தனை கொண்டாட்டங்களையும் ஒரு மரணத்தின் வாயிலாக ஒரேயடியாய் தனக்குள்ளே சுழற்றிப்போட்டு மென்று தின்றுவிட்டு இறுமாப்போடு ஏப்பம் விட்டும் சிரித்திட விதிக்கும், விதியின் முகமாய்த் தெரியும் மரணத்திற்கும் மட்டுமே சாத்தியப்படுகின்றன.

இது நடந்தேதீரும் என நம்பும் எது ஒன்றும் நடக்காமல் போகலாம் அல்லது நடக்கவே நடக்காது என நினைத்தது மிக இயல்பாக நடந்தேறலாம். எதுவும் நிரந்தமில்லாத உலகில், சர்வநிச்சயமானது, நிரந்தரமானது மரணம் என்பது மட்டுமே. யாருக்குத்தான் தாம் ஒருநாள் மரணத்தை சந்திப்போம் என்பதில் சந்தேகம் இருந்துவிடப்போகின்றது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் ஒருவரும் தயாராக இல்லை. ஒருவேளை மரணத்தின் வாசமும், தெறிப்பும் எவ்வளவு கூர்மை மிகுந்ததாக இருப்பதால் அப்படியிருக்கலாம்.

சங்கிலியாய் பிணைந்திருக்கும் நட்புகளில், உறவுகளில் சொல்லாமல் கொள்ளாமல், ஏதோ ஒரு சூழலின் பொருட்டு, மெதுவாய் தனக்குள் குழைந்து, நெகிழ்ந்து, சிதைந்து, பட்டெனச் சிதறி தன்னை எல்லோரிடமிருந்தும் துண்டித்துக்கொண்டு, மண் துகள்களாய், சாம்பல்தூசுகளாய் மனிதர்கள் கரைந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். சட்டெனத் துண்டித்துப்போகும் போது அங்கே தோன்றிடும் வெற்றிடத்தில் நசநசக்கும் ஈரமும், மருளடிக்கும் இருளும், குலைநடுங்க வைக்கும் மௌனத்தின் ஓலமும், அனலாய் தகிக்கும் வெப்பமும், மூச்சை அமிழ்த்தும் வெறுமையுமென, புரட்டிப்போடும் உணர்வுகள் அதை அனுபவிப்பர்களுக்கு மட்டும்தானே தெரியும். ஏதோ சூழலில் எந்த முன்னறிவிப்புமின்றி விட்டு விடுதலையாகி மறைந்து, கரைந்து போகின்றவர்களுக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது.

கடந்துபோகும் கால நதியில் நம்மைவிட்டு நகர்ந்து போகும் மனித உறவுகளின் எண்ணிக்கையை எண்ணிவிட எத்தனை விரல்கள் இருந்தாலும் போதாது. ஆனால், உறவுகளை தனக்குள் ஊற்றிக்கரைத்த மரணத்தால், ஒருபோதும் அவர்களை மறக்கச்செய்துவிட முடிவதில்லை. மரணத்தில் தொலைத்த நெருக்கமான ஒரே ஒரு உறவை மனதுக்குள் மீட்டிப்பாருங்கள், இதுவரை நீங்கள் நேசித்து, மரணம் கொய்துபோனவர்கள் வரிசையாய் மனதிற்குள் வந்து படபடவென சிறகடிப்பார்கள். எப்படிப் பார்க்கினும் மரணம் வழங்கும் தண்டனையை வாழ்ந்து கொண்டிருப்பவன் மட்டுமே அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

உண்மையாக அமைகின்றதா அல்லது ஒரு மாயையான உணர்வா எனத் தெரிவதில்லை, மரணம் கொய்து நம்மைப் பிரிந்தவர்கள் குறித்து எப்படிக் கணக்கிட்டுப்பார்த்தாலும் நாம் அவர்களையோ அல்லது அவர்கள் நம்மையோ அதிகம் நேசித்திருப்பதுபோல் ஒரு உணர்வு மிகுந்திருக்கத்தான் செய்கின்றது.

எத்தனை மறுத்தாலும், தடுத்தாலும், தவிர்த்தாலும் நம்மேல் ஏதோ ஒரு ஓரத்தில் மரணத்தின் வீச்சமும், கருமையும், வெம்மையும், அதீதக்குளிரும், நசநசப்பும், வறட்சியும் நீண்டு படுத்துத்தான் இருக்கின்றது. எத்தனைதான் புதிதாய் பூக்கும் உறவுகள் அதை விரட்டிவிட முயன்றாலும் ஒரு போதும் முற்றிலும் விரட்டிவிட முடிவதில்லை!

மரணம் போதித்துவிட்டுச் செல்லும் பாடம் அவ்வளவு எளிதானதல்ல. போதித்த நொடியில் அப்பட்டமாய் புரிகிறது அதன் அடர்த்தி. போகப்போக எல்லாம் நீர்த்துப்போகிறது. நீர்த்துப்போன நிலையில் மீண்டும் இன்னொரு பாடத்தை எதிர்பாரா நொடியில் வெகுவேகமாய் திணித்து விட்டு கள்ளத்தனமாய் புன்னகைக்கவும் முடிகிறது மரணத்தால். இதையெல்லாம் யார் செய்கிறார்கள், ஏன் இப்படி நிகழ்கிறது எனும் எதற்கும் பதில்களற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

மரணத்தை  எதிரியென்று விரட்டிடவா, அரசன் என்று போற்றிடவா, அசுரன் என்று மருண்டிடவா, போதிக்கும் குருவென்று வணங்கிடவா, வள்ளல் என்று கையேந்திடவா, அழித்தொழிக்கும் அரக்கன் என்று தூற்றிடவா, விடுதலையளிக்கும் நீதிமான் என்று பணிந்திடவா, சிறையிலடைக்கும் காவலன் என்று மிரண்டிடவா என்ற குழப்பம் சிந்தனைச் சிலந்தியின் இழைகளாய் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜெயிக்கிறோம், தோற்கிறோம், கொண்டாடுகிறோம், கூப்பாடு போடுகிறோம், எல்லாம் இறுதியாக ஒரு நாள் மரணத்திடம் தோற்றுப்போவதற்காவே. தோற்றுப்போனதை உணரும் போது, அதன் வலியறிய நாம் இருக்கப்போவதில்லை, அதைச் சுமக்கத்தான் அக்கம் பக்கமென அதீத அன்போடு தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் சில உறவுகளை.

-0-

Aug 26, 2011

பல இரவுகளில் ஓர் இரவு



இரவின் நிறம் கூடக்கூட அழுத்தமும் கூடத்தொடங்கியது. ஏன் உடைந்ததென்று தெரியவில்லை, அந்தக்கணத்தில் அது உடைந்திருக்கலாமாவென்றும் தெரியவில்லை. ஆனாலும் மனது சுக்கு நூறாய் உடைந்து சிதறிக் கிடந்தது. தோல்வி தோல்வி தோல்வி என எல்லாவற்றிற்கும் மனது அரற்றிக் கொண்டேயிருந்தது.

இதுவரை அணிந்திருந்த முகமூடிகள் மீது சொல்லொணா வன்மம் வந்து குடியேறியது. எப்படியேனும் முகமூடியை அணிந்து, யாரும் அறியாவண்ணம் முடிச்சிட்டு நேர்த்தியாய் மறைத்த உழைப்பு மறந்துபோனது. அப்படியே கூரிய நகங்களை இருபக்க கன்னப்பகுதியில் அழுத்தி முகமூடியை பிய்த்தெறியும் வெறியோடு இழுத்தான். சற்றும் முகமூடி அசையவில்லை, நகங்களை அழுந்த அனுமதிக்க மறுத்து கெட்டித்துக்கிடந்தது. நகங்கள் மட்டும் மடங்கி, நகக்கண்ணில் வலி பூத்தது.

முகத்தை அழுந்த தடவிப்பார்த்தான், கொஞ்சம் சுருக்கம் பாய்ந்திருந்தது. என்ன வேடம் இப்போது அணிந்திருக்கிறோமென்று புரிபடவில்லை. பூண்ட வேடங்களும், அணிந்த முகமூடிகளும் ஒன்றா இரண்டா!? எந்தக்கணத்தில் சுயம் தொலைந்ததென்பது மறந்துபோயிருந்தது. எப்போதிலிருந்து முகமூடிகள் சுயத்தை சிதைக்கத் துவங்கின என்பதும் மறந்துபோய்விட்டது. முகத்தைத் தடவிய விரல்களில், இப்போது எந்த வேடம் புனைந்திருக்கிறொமென்பதை உணரமுடியவில்லை. நெற்றி ஒரு வேடத்தை, புருவம் ஒரு வேடத்தை, கன்னம் மூக்கு மூக்கு பிரிதொரு வேடத்தை நினைவூட்டியது. கண் இமைகள் இமைக்க மறந்துபோய் விரைத்திருந்தது. உதடுகளிலொரு நிரந்தரச்சிரிப்பு அப்பிக்கிடந்தது. சிரிக்கும் உதடுகளை விரல்கள் கடக்கும் போது, உள்ளுக்குள் இருந்து பொங்கிவந்தது ஒரு குமட்டல். உள்ளுக்குள் சொல்லொணாத் துயரோடு சுமக்கும் ரணங்களில் வழியும் சீழ் குமட்டி வெளிவந்து, நிரந்தரமாய் பொய்யாய் சிரிக்கும் உதடுகளில் வழிந்தது. சீழின் நாற்றமும், உதடுகளில் படிந்திருக்கும் சிரிப்பின் போலிப்புரட்டும் சேர்ந்து அதீத அயற்சியைப் புகட்டியது.

”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற வாசகம் ஒரு கணம் மனதிற்குள் வந்துபோனது. ”எவண்டா இதச் சொன்னது” என்ற ஓங்காரக் கோபம் வந்தது. ”வாழ்வேமாயம்” என்ற வாசகம் மனதிற்குள் வந்து ”வாழ்க்கை வாழ்வதற்கே” வாசகத்தை துரத்தியடித்தது. ஏன் இப்படியொரு வாழ்க்கை வாழவேண்டும் எனத்தோன்றியது, உடன் இலவச இணைப்பாக ”ஏன் வாழக்கூடாது” என்ற கேள்வியும் வந்தது. இரண்டுமே செயற்கைத்தனமான கேள்விகளாகத்தோன்றியது. சினிமாவும் இன்னபிற பொழுதுபோக்குகளும் இது போன்ற நாடகத்தனமான பல சொற்றொடர்களை, கேள்விகளை தனக்குள் திணித்திருப்பதை உணரும் போது, எது நிஜம், எது நாடகத்தனம் என்பதே குழப்பமாய் இருந்தது.

எதை நோக்கிய பயணம் இந்த வாழ்க்கை என்பதில், ஒன்றேயொன்று மட்டும் விடையாகத் தெரிந்தது. அது மரணம். மரணம் என்பதை நினைக்கும்போதே அது அபசகுணம் என்ற உணர்வு வந்தது. அது எத்தனை நிஜமாய் இருந்தாலும் அது பற்றிச் சிந்திக்க மனதில் வலுவிருப்பதில்லை. விருப்பமுமிருப்பதில்லை. மரணிப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நினைக்கும்போதே வறட்டுப் புன்னகையொன்று உதட்டில் வந்துபடிந்தது.

மரணத்தை நோக்கிய பயணத்திற்காக மட்டுமே பிறக்கிறோம், அதை நோக்கி கடிகாரத்தின் நொடிமுள்போல், ஒவ்வொருநொடியும் ’டிக்டிக்’கென நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனத்தோன்றியது. இப்படித் தோன்றுவதும்கூட நாடகத்தனமோ எனவும்பட்டது. அவன் மேலேயே அவனுக்கு சொல்லொணாக்கோபம் கொப்பளித்து. ’எதுதாண்டா நிஜம்’?, ’எல்லாமே நாடகமோ?’ எனத் தோன்றியபோது அவன்மேலேயே அவனுக்கு அயற்சியும் அலுப்பும் கூடியது.




சிந்தனைகள் பின்னிக்கிடந்த மூளை எதையும் புதிதாய் சிந்திக்கமறுத்தது. எதைச் சிந்திக்கத் முனைந்தாலும் சிந்தனை சிக்கலையும், மரணத்தையுமே மையப்படுத்தியது. வாழ்வது வீணென்று சொன்னமனதே சாவதும் எளிதன்று எனவும் சொன்னது. மூளைக்குள் ஏதோ ஒன்று நெளிவது போலவும், அந்த ஒன்று இரண்டாகி நான்காகி எட்டாகி பதினாறாகி என நினைக்கும்போது இதுதான் பைத்தியத்தின் முதல்கட்டமென்றோ எனவும் தோணியது. சிந்தித்து சிந்தித்து மூளை களைத்துப்போய், சிந்தனைகளைத் தொலைத்து மௌனித்துக்கிடந்தது. மௌனம் சூழ்ந்திருக்கிறதென நினைக்கும்போது விழிப்புத்தட்டியது. விழிப்பெது, சிந்தனை தொலைந்த உறக்கமெது எனவும் குழப்பம் குடிபுகத் தொடங்கியது!

சிந்தனை ஊறல்கள், விழிப்பு எரிச்சல், உறக்க மௌனம் என ஒவ்வொன்றாய்க் கடந்து, வெதுவெதுப்பும், வெளிச்சமும் படியப்படிய அது விடியல் எனத்தோன்றியது. எப்போது தூங்கினோம், என்ன நடந்தது, இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா, பைத்தியம் பிடித்துவிட்டதா என்ற குழப்பத்தோடு கண்ணில் கட்டியிருந்த பூளையைத் துடைக்க, விழிகள் விடுதலையடைந்தது போன்ற உணர்வு படிந்தது.

மெதுவாய் எழுந்து கதவு திறக்க, காற்றும் வெளிச்சமும் குபீரெனப் புகுந்தது. வீதி அதன்போக்கில் கிடந்தது, தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரவர் போக்கில் நடமாடிக்கொண்டிருந்தனர். அடிக்கடி கண்ணில்படும் ஒற்றைக்கால் இல்லாத அந்த தெருநாய் ஒரு ரிதத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. முதன்முறையாக அந்த நாய்க்கு சாப்பிட எதாவது போட வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

--------------------------------------------------------------------------------------------------


 வல்லமைhttp://www.vallamai.com/blog/archives/7148/ மின்னிதழில் வந்த இடுகை. நன்றி வல்லமை.

Dec 8, 2010

விடுதலை உருவாக்கும் சிறை

புதிரோ, சுவாரஸ்யமோ, அலுப்போ எப்படி எடுத்துக்கொண்டாலும் எல்லோருக்குமே கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடத்தான் ஆசை. ஏதோ ஒரு சூழலில் கன நேரத்தில் தோன்றும் உணர்ச்சி வேகத்தில் வாழ்வை முடித்துக்கொள்வோர், இன்னும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக வாழ்வைத் தியாகம் செய்வோர் தவிர்த்துப் பார்த்தால் வாழ்க்கையை எப்படியாகினும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆசை நிறைந்த வாழ்க்கைப்பயணம், எல்லாம் கடந்து வயது முதிர்ந்து எல்லைக் கோட்டைத் தொடும்போது, அது கொண்டாட்டத்துக்கு உரியாதாகவே நிறைவடைகிறது. அது தவிர்த்து மரண அரக்கனின் அகோரப் பசிக்கு இறையாகும் அகால மரணங்கள் திணிக்கும் வலிக்கு நிகரான வலி இந்த உலகில் எதுவுமே இல்லை.

ஒரு துளி கவனக்குறைவில் விபத்து வடிவில் சிதறுண்டு போகும் வாழ்க்கைப் பயணம், என்னவாகிவிடப் போகிறதென சிறு அலட்சியத்தோடு தள்ளிப்போட்டதால் தின்று தீர்க்கும் நோயால் தீர்ந்து போகும் வாழ்க்கைப் பயணம் என இளவயது மரணங்களைத் தாங்கும் குடும்பங்களின் சுமை, இந்த பூமியைவிட சுமையென்றே தோன்றுகிறது.

இலகுவாய் வாழ்க்கைச் சக்கரத்தை இழுத்துக் கொண்டிருக்கும் குடும்பச் சக்கரத்தில் சட்டென விடுபடும் கன்னியாக ஒரு உறவு மட்டும் விலகும் சூழலில் அந்தக் குடும்பச்சக்கரத்திற்குள் ஏற்படும் தொய்வு, அதிர்வு, தடுமாற்றம் அதன்பின் எதனைக் கொண்டு சங்கிலியில் பிணைத்தாலும் எதாவது ஒரு வகையில் அது வலு, திடம் குறைந்ததாகவே சக்கரத்தை தொய்வோடே நகர்த்திக் கொண்டிருக்கும்.

பிடிமானமாய் பிணைத்துக் கொண்டிருந்த கரத்தில், ஒன்று மட்டும் ஏதோ ஒரு காரணத்தால் நிரந்தரமாய் பிய்த்துக்கொண்டோடும் கடும் வலியைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து, தவிர்க்க இயலாமல், தவிர்க்க விரும்பாமல் அந்தக் கரத்தின் இதத்தை, இளம் சூட்டை, பிடிமானத்தை நினைத்துப் பார்க்கும் நேரங்கள் மிகக் கனமானது. இதுதான் வாழ்க்கை, இதுவும்தான் வாழ்க்கை என வாழ்க்கையைப் புரிய வைக்கும் முக்கியமான நேரங்கள் அவை.

நமக்குள் ஏற்படும் ஒரு பிரிதல் மட்டும் தானா, இதற்கு கொஞ்சம் கூடக்குறைய என, நம்மைச் சுற்றி ஒவ்வொரு மனிதருக்கும் இது போல் ஒரு ஊமை வலி இருக்கத்தானே இருக்கின்றது என்பதையும் மனதில் உள்வாங்கும் போது, வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது, விசித்திரமானது என்பது புரியத்தான் செய்கின்றது. இந்த விசித்திர வாழ்க்கைக்குத்தானா இத்தனை சூதும் வாதும் என நினைக்கும் போது, வெறுமை நிரம்பிய சிரிப்பு மனதிற்குள் வெடித்துக் கிளம்புகிறது.

எதோ நம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமா வாழ்க்கையில் இப்படிப்பட்ட இழப்பு என மனம் கனக்க சிந்திக்கும் நேரத்தில், நம்மையொத்த மனிதர்களில் நம்மோடு கலந்து, பிணைந்து சொல்லாமல் கொள்ளாமல் மண்ணாய், சாம்பலாய் மறைந்து போன மனிதர்கள் ஒவ்வொருவரும் தத்தமது குடுமத்தில் சுமக்க முடியாத சுமையை வைத்து விட்டுப் போய்த்தான் இருக்கின்றார்கள்.

உறவை இழக்கும் வலிகளை அழத் துணிவு கொண்டவர்களால் அழுது கரைக்க முடிகிறது, பேசத் தெரிந்தவர்களால் பேசிக் கரைக்க முடிகிறது, எழுதத் தெரிந்தவர்களால் எழுதிக் கரைக்க முடிகிறது. ஆனாலும், விசித்திரம் என்னவென்றால், என்னதான் கரைத்து எடுத்து கவிழ்த்து தீர்த்தாலும், வற்றாத அமுதசுரபியாய் வலி, மீண்டும் சுரந்து வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மிஞ்சுவது முரண்பட்ட ஒரு நீள் வரி மட்டுமே “இறப்பவர்களுக்கு மரணம் விடுதலையாக இருக்கலாம், இழப்பவர்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கை என்றைக்குமே ஒரு கொடும் சிறைதான்


May 26, 2010

விடை தெரியாத கேள்விகள்

கோடை காலம் முடிந்தும் கொளுத்துகிறது வெயில். தார் சாலையில் பிரதிபலிக்கும் வெயிலில் கண்கள் கூசுகிறது. அரசு மருத்துவமனை சிக்னலில் பைக்கை நிறுத்துகிறேன். எனக்கு முன்னும் பின்னும் வாகனங்கள் நெருங்கி நிற்கின்றன. யாருக்கும் அந்த வெயிலில் நிற்க விருப்பமே இல்லை. சிக்னலில் இன்னும் பச்சை விழவில்லையே என்ற எரிச்சல் எண்ணையில் பொரியும் கடுகாய் எல்லோர மனதிலும் தெறிக்கிறது. வெயில் தலைவழியே உள்ளிறங்குகிறது. சிந்தனை ஒருமுகப்படாமல் சுழற்றி அடித்துக் கொண்டேயிருக்கிறது.

வலதுபுறமாய் சாலையின் நடுவே இருக்கும் சிறிய தடுப்பு சுவர் ஓரம் நிற்கிறேன். எனக்கு இடது புறம் ஒரு இன்னோவா கார் நிற்கிறது. கருப்பு தாள் ஒட்டப்படாத குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே ஒரு பெண் குழந்தை இருக்கை மேல் ஆடிக்கொண்டிருக்கிறது. நான் பார்ப்பதை கண்டு லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே தொடர்ந்து ஆடிக் கொண்டேயிருக்கிறது. என்னையறியாமல் என் உதடு புன்முறுவல் பூக்கிறது.

வலது புறச் சாலை காலியாக இருக்கிறது. சுமார் 13 வயதிருக்கும் ஒருபெண், வலது புறச்சாலையிலிருந்து தடுப்பு சுவர் தாண்டி என் பைக் முன் குதிக்கிறாள். அவளுடைய கோலத்தை பார்த்தவுடனே பளிச்சென தெரிகிறது அவள் பிச்சையெடுக்கும் பெண் என்று.

கையில் இருக்கும் சிறிய தகர டப்பாவை குலுக்குகிறாள். உடை மிக மோசமான அழுக்கோடு இருக்கிறது, குளித்தே ஓரிரு நாட்கள் இருக்கலாம். தலை முடி மிக மோசமாக பிசுக்கேறி சிக்குபிடித்திருக்கிறது. அணிந்திருக்கும் உடை தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு அழுக்கேறியிருக்கிறது. கால்களில் செருப்பு கிடையாது.

இடது புறம் காருக்குள் விளையாடிய குழந்தையும், வெயிலில் சலனமின்றி பிச்சை எடுக்கும் பெண்ணும் தராசுத் தட்டில் மேலும் கீழும் ஊஞ்சல் ஆடுவதுபோல் உணர்கிறேன்.

அதிக பட்சம் 2 நிமிடம் நிற்க வேண்டிய எனக்கே அந்த வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. எப்படி அவளால் தாங்க முடிகிறது. கொதிக்கும் தார் சாலை அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.....

என் மனதிற்குள் ஏதேதேதோ ஓடுகிறது. காசு போடலாமா, வேண்டாமா என மனதில் ஒரு ஊசலாட்டம். மேல் சட்டைப்பையில் இருந்த ஒரு நாணயத்தை எடுத்து போடுகிறேன். பின்னால் நிற்பவர் ‘இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று சலித்துக் கொள்வது கேட்கிறது. அவர் என்னை சொன்னாரா? அல்லது அந்த பிச்சைக்கார பெண்ணை சொன்னாரா? என தெரியவில்லை, திரும்பி பார்க்கிறேன் அவர் நான் திரும்புவதை உணர்ந்து வேகமாய் என்னை பார்ப்பதை தவிர்க்க வேறு பக்கம் பார்ப்பதாய் எனக்கு தொன்றுகிறது.

சிக்னலில் பச்சை விழுகிறது, தலையில் இறங்கிய வெயிலை விட மனது புழுங்குகிறது. முந்தைய நாள் பள்ளியில் தன் புத்தகத்தை காணவில்லையென ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் போனில் அழுத போது, அந்த அழுகைக்கு நான் துடித்தது நினைவிற்கு வருகிறது.


சில கேள்விகள் மனதிற்குள் உறுத்த ஆரம்பிக்கிறது. . . . . ..

• எதன் பொருட்டு இவளை அவளுடைய பெற்றோர் பெற்றெடுத்திருப்பர்.

• பிச்சையெடுக்கும் தொழில் மட்டுமே இவளுடைய எதிர்காலத்தை தீர்மானித்துவிடுமா?

• இவள் குழந்தையாய் கருவுற இவளுடைய தாயும், தந்தையும் காதலோடு கலவியில் ஈடுபட்டிருப்பார்களா? அல்லது வெறும் காமத்தின் எச்சிலா?

• இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்...... ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா?

• என்னுடைய கடமை ஒரு சில்லறைக் காசைப் போட்டுவிட்டு, வார்த்தைகளைத் தேடி வலைத்தளத்தில் எழுதி விட்டு பின்னூட்டத்திற்கு
காத்திருப்பதா?

விடை தெரியாத கேள்விகள் மனதிற்குள் பாரமாய் சுருண்டு கிடக்கிறது.

__________________________________________

May 23, 2010

இப்படியும்


என்றோவரும் மழை ஏமாறாதிருக்க
உயிரைக் கையில் பிடித்து
ஒற்றைப் பனை


*

நெருப்பாய் வெயில்
வெந்து விழுகிறது நிழல்
எப்போதும் குளிர்ச்சியாய்


 **


யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்


 ***


இளமை நீர்க்கும் மீசையில்
தேடி வெட்டும் வெள்ளையோடு
தேடாமலே கறுப்பாய் சிலவும்

****

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...