முன்னறியிப்பு - Munnariyippu




இருபது ஆண்டுகாலம் சிறைக்குள் இருந்து, உறவு நட்பென எவரையும் சந்திக்காத, எல்லாவற்றையும் தத்துவமாய், எளிதானதாய் அணுகுபவனும், அவனை ஒரு பண்டமாக, கருவியாக அணுகுபவளும் ஒரு புள்ளியில் தொடங்கி, ஒரு கால் புள்ளியில் முடிக்கிறார்கள்.



ஃப்ரீலான்ஸர் எழுத்தாளர் அஞ்சலிக்கு (அபர்னா கோபினாத்), சிறைக் கண்காணிப்பாளர் ஒருவரின் சுயசரிதை எழுதும் வாய்ப்பு கிட்டுகிறது. சிறையில் இரண்டு கொலைகள் செய்த ஆயுள் தண்டனை கைதி ராகவனை (மம்முட்டி) சந்திக்கிறாள். தண்டனைக்காலம் முடிந்தும் வெளியேறாமல், இருபது ஆண்டுகளாய் சிறையில் இருக்கும் ராகவனை, அத்தனை நாட்களும் ஒருவரும் வந்து சந்திக்கவில்லை என்பதும், அவர் பரோலில் வெளியே போகவில்லை என்பதும் ஆச்சரியம் தருகிறது.



தான் கொலைகளைச் செய்யவில்லை எனச்சொல்பவனிடம் ஏன் தண்டனைக்காலம் முடிந்தும் வெளியில் செல்லவில்லையெனும்போது ”தனக்கென வெளியில் என்ன இருக்கிறது” எனக்கேட்கிறான். வெளியே காத்திருக்கும் புதுவாழ்க்கை குறித்துக் கேட்கும்போது, ”வாழ்க்கையில் புதியது, பழையதென்றில்லை, வாழ்க்கை என்பது ஒன்றுதான்” எனத் தத்துவம் பேசுகிறான். ”இல்லை வெளியில் சந்தோசமான வாழ்க்கை” எனச் சொல்ல வரும்போது, ”இங்கே சங்கடமொன்றுமில்லை” என்கிறான். கொலைகள் செய்யவில்லை என்றவனிடம் என்ன உண்மை எனக் கேட்கும்போது, ”இருள் இருக்கும் இடத்தில் ஸ்விட்ச் போட்டால் ஒளி கிடைப்பது போலே, வெளிச்சம் இருக்கும் இடத்தில் ஸ்விட்ச் போட்டால் இருள் கிடைக்கும் வகையிலான சாதனம் உண்டா!?” என்றும் கேட்கிறான்.



தன்னை ஒரு எழுத்தாளராய் நிரூபிக்க, புகழின் படிகளில் ஏற தனக்கான வாய்ப்பாக ராகவன் தென்படுகிறான். ராகவன் குறித்து கட்டுரை எழுதுகிறாள். அஞ்சலிக்கும் ராகவனுக்கும் கிடைக்கும் புகழ், தன்போக்கில் சொடுக்கி வேறு பாதையில் அஞ்சலியை இழுத்துச்செல்கிறது.



”கண்ணாடி பார்க்கும்போது கண்ணாடிக்குள்ளே இருக்கும் தனது பிம்பம் தன்னைப் பார்க்கும். கண்ணாடியை விட்டு விலகும்போது உள்ளிருக்குமா, விலகிப்போகுமா? ஆனாலும் திரும்பவும் கண்ணாடி பார்க்கும்போது அது அங்கிருந்தே பார்க்கும்” என்பது உள்ளிட்ட ராகவனின் எழுத்துக்களைக் காணும் அஞ்சலிக்கு, ராகவன் ஒரு புத்தகத்திற்கான பொக்கிஷமாய்த் தென்படுகிறான்.



வேகமாய் காலம் கரைந்தோடும் காலகட்டத்தில் இருபது ஆண்டுகளை சிறை வளாகத்திற்குள்ளும், அறைக்குள்ளும் கழித்து, உலகத்தின் நெடி உணராமல் இருந்தவனிடம் கட்டாயங்களும், நிர்பந்தங்களும் திணிக்கப்படுகின்றன. ஃப்ரீலான்ஸர் எழுத்தாளராய் ஏற்றுக்கொண்டிருந்த பணியை ஆரம்பிக்க இயலாமலும், கார்ப்ரேட் பதிப்பக நிறுவனத்திடம் ராகவனின் ஒப்புதலோடு ஒப்பந்தம் போட்ட பணியை காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாமலும் தவிக்க ஆரம்பிக்கிறாள்.



இருவரின் போராட்டங்களுக்கும் மிகச் சரியான காரணங்களுண்டு. அவரவருக்கான நியாயங்களும் உண்டு. ராகவனாய் உள்ளுக்குள் முடங்கித் தடுமாறவும், அஞ்சலியாய் உள்ளுக்குள் கொதித்துக் குமையவும் நம்மை ஆட்படுத்தி, என்னதான் நடக்கப்போகுமென அலுப்பூட்டி, அந்த திருப்பத்தின் சிலநொடிகளில் பொதுவான நியாயம் வேறு ஒன்றாகவும் இருக்கத்தானே செய்யுமென ஒப்புக்கொள்ளச்செய்கிறது.



*

சீனிவாசன் நேரமின்மையால் நடிக்காமல் விட்ட பாத்திரத்தில் மம்முட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார். துடிப்பும் தவிப்பும் ஆசையும் நிராசையுமாய் எல்லா உணர்வுகளையும் காட்டும் அபர்னா கோபிநாத்தும், மம்முட்டியும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

*

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்ல படம் அண்ணா...
அதிகம் பேச வேண்டிய கதாபாத்திரம் இல்லை என்பதால் மம்முட்டி தனது முகத்திலேயே அனைத்தையும் காட்டி நடித்திருப்பார்...

நானும் ரசித்துப் பார்த்தேன். அவரை அறைக்குள் அடைத்து வைத்த உடன் படம் ரொம்ப மெதுவாக நகரும்... இது மலையாளப் படங்களில் பெரும்பாலும் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும் அந்த கிளைமேக்ஸ்... சூப்பர்....