Nov 6, 2019

கீச்சுகள் தொகுப்பு - 69



உறவு முறித்தது போதும்... பகை முறி!
                       

என்ன அடைந்தோம் என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியமானது நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதுதான். அடைந்தது மறந்துபோகும். செய்தவை வாழ்நாள் முழுக்க துணை நிற்கும்!

*


தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருப்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. தொடர்ந்து தன்னையே ஏமாற்றிக் கொல்வதை விடவா தோல்வி வெட்ககரமானது!?
'ல்பிழையன்று!

*

நம் பலம் நமக்கே புரியும் தருணம் என்பது... சாத்தியமில்லை என நாம் நினைக்கிற ஒன்று, நம்மாலேயே சாத்தியப்படும் கணம்.

*

குழப்பத்தை தெளிவாகப் பார்!

*

மண்ணை நனைக்காத, உடையை மட்டும் நனைக்கும் மழைக்கு 'மானங்கெட்ட மழைஎனப் பெயர் சூட்டினேன்.  'மரம் நடாதவங்களுக்கு மானம் என்ன வேண்டியிருக்கு!?’ என்றது மழை!

*

கோபத்தின் உக்கிரத்தில் தெறிக்கும் சொற்களுக்கு பொருள் சொல்ல இன்னும் டிக்‌ஷ்னரி கண்டுபிடிக்கப்பட வில்லை!

*

'போதுமெனத் தோன்றுகிறது' என்றெழுதிவிட்டு முற்றுப்புள்ளிக்குப் பதிலாக காற்புள்ளி வைத்தல் தகுமோ!?

*


ரயில் தடமெங்கும்
கலங்கி நின்று
காற்றில் கையசைக்கும்
ராத்திரியில் பெய்தோய்ந்த
ரகசிய மழை நீரின்
பிரியத்திற்கு ஈடேது!

*

சாரல் பொழியும்
ரயில் பயணத்தில்
வழிவிட்டுக் காத்திருக்கும்
சிறு நிலையத்தில்
ஆவி பறக்கும் 
சுக்குக் காப்பியொன்றும்
அத்தனை ருசியில்லைதான்
ஆயினும் அச்சூட்டின் கதகதப்பில்
நினைவில் தளும்பும்
முத்தமொன்றின் தடயமுண்டு!


*

கவிழ்ந்து தொங்கும் 
கரு மேகம்
இந்த நகரைத்
தீண்டி விழுங்குமோ!?

*

நினைவில் துயிலும்
பெரு நெல்லி முத்தம்!

*

தேய்ந்து கொண்டிருக்கும்
சிரிப்பொன்றை
புன்னகையாய் 
சேமிக்கத் துவங்குகிறேன்!


நமக்கென்று ஒரு விலையில்லை என்பது... 
கர்வத்தில் சேருமா!? அறியாமையில் சேருமா!?

*

உனக்கு இதெல்லாம் தேவையா!?” - சில இடங்களில் கேட்க மறந்த கேள்வி, பல இடங்களில் தாங்குவதற்குத் தடுமாறும் கேள்வி! 

*

எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை ஆகாது. சிலவற்றைத் தெரிந்துகொள்வதற்காக, பலவற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது.

*

மனிதம் என்பது தன் போக்கில் எதையும் ஆகச்சிறந்ததாய் இயக்குதல். அறிவோடு மனதையும் பிணைத்து உலகை ஆக்குதல்.

*

அதீத மன இக்கட்டில் இருக்கும் யாரோ ஒருவருக்கு உங்களை அழைத்துப் பேசத் தோன்றுகிறதா!? தேர்ந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

*

சுவையான தேநீர் பருக வேண்டுமென்பது வயிற்றின் தேவையன்று, மனதின் தேவையே!

*

இக்கட்டிலிருந்து 'மீள்வேன்', சோதனையில் வென்று 'தொடர்வேன்' என ஒருவர் சொல்வதை தன்னம்பிக்கை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர 'திமிர்' என்று சொல்வது பக்குவமின்மை!

*

ஏதோ ஒரு நிறைவுறாத் தன்மை இருக்கின்றதா!? அது அவ்விதமே இருக்கட்டும். அதுதான் வாழ்க்கையை தொடர்ந்து இயக்கும் நிர்பந்தம்!

*

எல்லாப் பார்வைகளிலிருந்தும் 
எளிதாய் ஒளிந்து கொள்கிறேன்
இமைகளுக்குள்ளிருக்கும் 
விழிகளிடம் என்ன செய்ய!?

*

கோபத்தை நெகிழ்வான குரலில், மென்மையான சொற்களில் பகிரும் வித்தை தவிர்த்து, வேறென்ன வரம் வேண்டும்!

*

யாரையும் எதிர்கொண்டுவிட முடிகிறது.  'அப்பா-அம்மா இருவரும் இல்லை' என சன்னமான குரலில் அடையாளம் காட்டப்படும் பிள்ளைகளைத் தவிர!

*

அறியாமை ஒரு பாவம் என்றால் அரைகுறையாய் அறிந்து கொண்டிருப்பது பெரும்பாவம்.

*

ஒதுங்கியோ ஒளிந்தோ நிற்பதால் கடந்த காலம் பொய்யாகிவிடுமா!?

*

மௌனப் பஞ்சுப் பொதி...
சொற்களால் நனைகிறது.

*

மூச்சின் வெம்மைக்குள் இருப்பது மழையின் வாசனை!

*

தேவையில்லாத ஆணிகள்னு தெரிஞ்சும் பிடுங்கிட்டே இருக்கிறதுக்கு பேரு தியாகம், உழைப்பு கிடையாது... அதுவொரு குற்றம்!

*

மாற்றத்திற்கும் மாற்றமின்மைக்கும் இடையே ஒரு மெல்லியகோடுதான்.... அந்தக் கோட்டிற்கு நம்பிக்கை என்றும் ஒரு பெயர் உண்டு.

*

மௌனம், அது வாய்க்கும் இடங்களைப் பொறுத்து வடிவம் கொள்கிறது.


Nov 5, 2019

இன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir.


நீண்ட நேர கடும் பயணத்திற்குப் பிறகான இரவில் கிட்டும் ஆழ்ந்த உறக்கம் அலாதியானது. எத்தனை தூங்கினாலும் சில நொடிகளில் எழுந்தது போலவே இருக்கும். திங்கட்கிழமை இனிதே விடிந்தது. அடுத்த திங்கட்கிழமை வரை நாட்கள் பரபரப்பாக இருக்கும் எனும் மனநிலை சூழ்ந்தது. கடந்த ஆண்டு போல் காலை மாலை என இந்த ஆண்டு நிகழ்ச்சிகளைத் திட்டமிடவில்லை. கடந்த ஆண்டு ஒரே நாளில் இரு நிகழ்ச்சிகள் மற்றும் இடையே பயணங்கள் என்பது மிகுந்த நெருக்கடியைக் கொடுத்திருந்தது.

ஏறத்தாழ ஒராண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கை பாடசாலைப் பிள்ளைகளை சந்திக்கச் செல்கிறேன். முதல் நாள் வழக்கம்போல் மொழிச் சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும். இருவருக்கும் தமிழ்தான் என்றாலும், நம்ம ஊர் சொற்களுக்கும், அவர்கள் பாவிக்கும் சொற்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்களோடு உரையாடும்போதுதான் நினைவில் உறங்கிக் கிடக்கும் சில சொற்கள் மெல்ல மேலெழும்பி வரும். ஒருவாறாக இலங்கை தமிழ்ச் சொற்களை பயணத்தின் இறுதிக்குள் பழக்கப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்வேன்.

*

புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை.

நான் பாடசாலைக்குள் நுழையும்போதே மாணவிகள் தயாராக அமர்ந்திருந்தனர். அதிபர் அருட்சகோதரி சாந்தி மேரி முகப்பில் நின்று வரவேற்றார். கடந்த ஆண்டு நிகழ்வில் பங்கெடுத்த மூத்த மாணவிகளில் சிலர், இந்த ஆண்டு பங்கெடுக்கும் மாணவிகளிடம் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து, எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வைத்திருந்திருந்தார்கள். மிகுந்த உற்சாகத்தோடு இருந்த மாணவிகளின் சிறப்பான பங்கேற்போடு முதல் நிகழ்வே மிகத் திருப்தியாக அமைந்தது.



*

கண்ணன்குடா மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், அந்த வலயத்தின் பல்வேறு பாடசாலைகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்து நடத்தப்படும் பயிலரங்கு. பயிலரங்கிற்குச் செல்லும் வழியில் வலயகக் கல்வி அலுவலகத்தில் நடந்த நவராத்திரி விழா நிகழ்வு பூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வலயகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் பிரத்யேகமான முயற்சிகள் எடுத்து ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். வலயக மற்றும் மாகாண கல்வித் துறை சார்ந்த உயர் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அற்புதமான வரவேற்புடன் நிகழ்வு தொடங்கியது. மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் , ஸுரநுதன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்தனர்.




~

வலயகத்தில் இருக்கும் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிலரங்கு. நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்திருந்த வலயக கல்வி பணிப்பாளர், வேறு பணிகள் இருப்பதால், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டு, நிகழ்ச்சி நிறைவடைவதற்குள் வந்து விடுகிறேன் என்றவர், முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது துவங்கியவுடன் சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்ல முடியாமல் என்னை இருக்க வைத்துவிட்டீர்கள் என்றபடி, நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள், நிறைவில் வருகிறேன் என்றார். எனினும் தொடர்ந்து நிகழ்ச்சி முழுக்க அமர்ந்திருந்தார். ஏறத்தாழ தானும் ஒரு பங்கேற்பாளர்போல நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்தும் கொண்டார். நிறைவடைந்ததும், நிகழ்வின் துவக்கத்திலும் இடையிலும், பணி நிமித்தம் செல்ல நினைத்ததாகவும், நிகழ்ச்சி தன்னை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறியதை எனக்கான பாராட்டாக எடுத்துக் கொண்டேன்.




*
புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

பாடசாலையில். தன்னார்வ அமைப்பான CERI ஒரே தினத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8 மணி முதல் 10.30 மணி வரை பாடசாலை ஆசிரியர்களுக்கும், 10.45 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை பிள்ளைகளுக்கு பயிலரங்கு நடத்தப்பட்டது. CERI தன்னார்வ பணியாளர்கள் எல்லா விதங்களிலும் உடனிருந்து நிகழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அமைப்பின் மேலாளர் எபினேசர் மற்றும் பணியாளர்கள் மிகுந்த அன்பிற்கு உரியவர்கள்.



*

வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை

நவராத்திரி பூஜைகள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வழக்கமான அரங்கத்திற்குப் பதிலாக மாற்று அரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் ஒலி / ஒளி அமைப்புகள் மட்டும் சவாலாக இருந்தன. அதை சரி செய்திட அங்கிருந்த ஆசிரியர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மகத்தானது. எத்தனை சவால்கள் இருந்தாலும் அதனால் என்ன என்பது போல் மாணவிகளின் தரமான பங்களிப்பு பெரிதும் கை கொடுத்தது.


*

ஒரு வார காலத்தில் ஆறு பயிலரங்குகளில் ஏறத்தாழ 250 ஆசிரியர்கள் மற்றும் 850 மாணவ மாணவியர்களைச் சந்தித்து உரையாடிய நிறைவு இந்த முறை ஏற்பட்டது. நகரத்துப் பிள்ளைகள் ஒரு பக்கம், உள்ளடங்கிய கிராமத்துப் பிள்ளைகள் இன்னொரு பக்கம் என மாறி மாறிப் பயணித்து, இரண்டு தரப்புகளோடு கலந்துரையாடி பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன.

ஆசிரியர்களுக்கான அமர்வுகளில் பகிரும் அனைத்தையும் உள்வாங்கும் வேட்கை அவர்களிடமிருந்ததை உணர்ந்தேன். இலங்கையில் பாடசாலைகள் அரசு வசம் தான். இந்தப் பயிலரங்கில் சந்தித்த ஆசிரியர்கள் புத்தகம் வாசிப்பதில் பேரார்வம் காட்டினர். ஒவ்வொரு அமர்விலும் புத்தகங்களை எப்படி பெற்றுக்கொள்வது என ஆர்வமுடன் கேட்டனர். கைவம் வைத்திருந்த #வேட்கையோடு_விளையாடு புத்தகங்கள் அனைத்தையும் வேட்டையாடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.



ஆண்டு முழுக்க நிகழும் இது போன்ற பயணத்தில், வழி தோறும் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கைகள் பற்றிக் குலுக்கி, தமக்கு சரியான கதவுகளைக் காட்டியிருக்கிறீர்கள் என்கிறார்கள்.

"இன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir. அது நான்தான் .. Thank you so much appa" என்று ஒரு முகம் தெரியாத மகள் எழுதியது தொடங்கி... ஒரு கடிதம் எழுதுங்க என்று 15 நிமிடம் ஒதுக்கிய நேரத்தில், நான் நிறைய எழுத வேண்டும் என அனுமதி வாங்கி 45 நிமிடங்கள் எழுதி, நிகழ்ச்சி முடித்ததும் தன் குடும்பம், அவர்களின் தேவை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு கதறி அழுதது வரை...
"
பயிலரங்கு நிகழ்வுகள் என்பது, எனக்கு ஒருவரை புதிதாய் சந்திக்கும் அனுபவத்தையும், அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு நேரமாக இருப்பதாயும் மட்டும் அமைவதில்லை. அது தேவையானவர்களுக்கு சரியான கதவுகளைத் திறந்துவிடும் அதி முக்கியத் தருணம்.

- அக்டோபர் முதல் வாரம்’ 2019

#KathirSLTrip #SriLanka #Batticalo #SLTB


Nov 1, 2019

ஈரோடு டூ மட்டக்களப்பு


இதுவரை இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணங்களில் இந்தமுறை சற்று கனமான பயணம் என்றே சொல்ல வேண்டும். பெரிதாக ஒன்றும் யோசிக்க வேண்டாம், புத்தகங்களின் கனம் தான். ஏற்கனவே வேட்கையோடு விளையாடுகணிசமாக அங்கு சென்று சேர்ந்து வரவேற்பு பெற்றிருந்த நிலையில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை. புத்தகங்களைக் கொண்டு சேர்க்க வேண்டியது ஒருவகையில் கடமையும்கூட. ஆகவே அளந்து அளந்து புத்தகங்களின் எண்ணிக்கையை முடிந்தவரை கூட்டிக் கொண்டேயிருந்தேன். அத்துடன் பதினான்கு நாட்கள் பயணம் என்பதால் உடைகளின் எண்ணிக்கையும் அதிகம்.

காலை 9.30க்குத்தான் விமானம். எனினும் ரயில் குறித்த நேரத்திற்குள் சென்றடைந்ததால் திருச்சி விமான நிலையத்தை காலை ஐந்து மணிக்கே சென்றடைந்திருந்தேன். விமான நிலையம் உறக்கத்திலிருந்து எழவில்லை என்பதாகவே உணர்த்தியது. ஒரு பன்னாட்டு விமான நிலையம் இத்தனை அமைதியாக இருக்குமா என ஆச்சரியமாகவே இருந்தது. நுழைவாயிலில் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரி உள்ளே சென்றுவிட்டால் நீங்கள் வெளியில் வரமுடியாது!’ என்பதை அறிவுறுத்தியே அனுப்பினார். நான் சென்றபோது, காத்திருப்பு பகுதியில் ஒருவரும் இல்லை.

பொழுது விடிந்து, விமான நிலைய பொறுப்பாளர்கள் மெல்லச் சேர, பயணிகளின் எண்ணிக்கையும்கூட, மெல்ல பரபரப்பிற்குள் மூழ்கத் தொடங்கியது விமான நிலையம்.

*



கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கியபோது முந்தைய பயணங்களில் கண்டிருந்த நெரிசலைக் காண முடியவில்லை. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெரிதாக அதிகரிக்கவில்லை என நினைத்துக் கொண்டேன். இத்தனைக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கொழும்பில் தங்கும் திட்டம் இல்லை. அடுத்த நாள் காலை 8 மணிக்கு மட்டக்களப்பு நகரில் நிகழ்ச்சி என்பதால், கடந்த ஆண்டு போலவே பகல் நேரத்தில் பயணித்து சென்றடைய முடிவு செய்திருந்தேன். கடந்த ஆண்டு கட்டுநாயக்கவில் இருந்து நேரடியாக கதுருவெல சென்று அங்கிருந்து மட்டக்களப்பு சென்றடைந்தேன். அதுவொரு மிகப்பெரிய அனுபவமும்கூட. இந்தமுறை கடந்த ஆண்டு அனுபவத்தை வைத்து சற்று முன்கூட்டியே திட்டமிட்டதால், ட்ராவல்ஸ் பேருந்து எடுக்க திட்டமிட்டிருந்தேன். என் நேரம், சுரேனா ட்ராவல்ஸ் ஞாயிற்றுக்கிழமை தம் பயணத்தை ரத்து செய்திருந்தது. ஆகவே SLTB (இ.போ.ச) பேருந்துதான் என்பதால் மனதை நன்கு திடப்படுத்தி வைத்திருந்தேன். பகல் நேரத்தில் கொழும்பு புறக்கோட்டையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒரே ஒரு பேருந்துதான். மதியம் 2.15 மணிக்கு புறப்படும் என்றும், பயண நேரம் ஆறு மணி நேரம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்னுடைய இருக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆறுதலான விசயம், அது சன்னலோர இருக்கை. பேருந்தில் நுழைந்து பார்த்தபோது, அந்த சன்னல் இருக்கையில் ஒரு தம்பி அமர்ந்திருந்தார். பதிவினைக் காட்டிபிறகும், அவர் ரொம்பவும் குழம்பிக் கொண்டேயிருக்க, நடத்துனர் வந்து உள்பக்க இருக்கையில் அமருமாறு அவரிடம் சொன்னார். பேருந்து முழுக்க நிரம்பிய நிலையில் குறித்த நேரத்தில் பேருந்து புறப்பட்டது. அந்தத் தம்பி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். மட்டக்களப்பா எனக் கேட்டேன். காத்தான்குடி எனச் சொல்லிவிட்டு சில நிமிடங்களில் தூங்க ஆரம்பித்தார். ஏழெட்டு விதமான வடிவங்களில் தூங்கிக் கொண்டே வந்தார். அத்தனை வடிவங்களிலும் என் தோளில் சாய்ந்து கொள்வதை மட்டும் அவர் தவறவிடவேயில்லை.

பேருந்து வேகம் பிடித்தது. மீண்டும் கடந்த ஆண்டு பயணத்தைத்தான் ஒப்பிட்டாக வேண்டும். அந்தப் பேருந்துபோல் கை காட்டிய இடங்களிலெல்லாம் நிற்கவில்லை. ஏற்கனவே பேருந்து நிரம்பியிருந்ததால், எங்கும் நிற்காமல் சீறிக்கொண்டேயிருந்தது. மொத்த தொலைவு சுமார் 320 கி.மீ.  கூகுள் மேப்பில், சென்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து மட்டக்களப்பிற்கான வழித் தடத்தைப் போட்டு தூரம் குறைவதை அவ்வப்போது பார்த்தபடியே இருந்தேன். கசகசத்த வெயில் மெல்லத் தணிந்து, நடு இலங்கைக்கே உரிய குளிர்ந்த சூழல் ஆக்கிரமித்தது. கடந்த ஆண்டு குருநாகல் மற்றும் இன்னொரு இடத்தில் பேருந்து நிலையத்திற்குள் எல்லாம் சென்று வந்தது. இந்த முறை அப்படி எங்கும் நகரங்களின் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் ஓடிக் கொண்டேயிருந்தது.

குருநாகல், தம்புள்ள கடந்ததும், பாதித் தொலைவு கடந்துவிட்ட தெம்பு வந்துவிட்டது. சிற்றுண்டிக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அதுவரை விதவிதமாக அமர்ந்திருந்த தம்பி, வெளியேறி சிற்றுண்டி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு பேருந்து புறப்படும்போது ஓடி வந்து அமர்ந்தார். கையில் ஒரு மிக்சர் பொட்டலத்தை உடைத்து வைத்து மறு கையில் கொட்டி சாப்பிட்டுக் கொண்டே வந்தவர், என்னிடமும் நீட்டினார். மறுத்தேன். மீண்டும் மீண்டும் புன்னகையோடு வற்புறுத்தித் தந்தார். தோளில் தொடர்ந்து தூங்குவற்கான பிரதியுபகாரமாய் இருக்கலாம். மரியாதைக்காக கொஞ்சம் வாங்கிக் கொண்டேன். மொய் வைத்துவிட்ட நிம்மதியில், அடுத்த நொடி நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார்.

பொலருவ ரயில் நிலையம் அருகே பேருந்து நின்றபோது மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்தது. அடுத்தது கதுருவால. அங்கிருந்து பேருந்து சீறிப் பறக்கும் எனத் தெரியும். போக்குவரத்து நெரிசல் மிகக் குறைவாக இருந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஓட்டுனருக்கு பசித்திருக்கும்போல இரண்டாவது சிற்றுண்டி நிறுத்தமாக ஓட்டமாவடியில் நின்றது. இந்த முறை நான் கீழே இறங்கவில்லை. தம்பி சட்டென முழித்து விரைந்து இறங்கினார். திரும்பி வரும்போது இன்னொரு பதார்த்தத்தோடு வந்திருந்தார். நல்லவேளை எனக்கு பங்கு எதுவும் தரவில்லை. மீண்டும் பேருந்து புறப்பட்டது.




பயணச்சீட்டு பதிவு செய்யும்போது இணையத்தில் பயண நேரம் ஆறரை மணி நேரம் என்று குறிப்பிட்டிருந்தாலும், எட்டு மணி நேரம் ஆகுமெனத் தெரியும். அதைத்தான் கூகுள் மேப்பும் சொல்லியிருந்தது. அப்படி ஏதும் மேஜிக் நடந்துடாதா எனும் எதிர்பார்ப்பும் இருந்ததை மறுக்க முடியாது. பேருந்து மட்டக்களப்பு நகரைத் தாண்டி கல்லடி பாலத்திற்குள் நுழைந்தது. நினைத்தது போலவே, நேரம் 10.15 மணியை எட்டியிருந்தது.  பைகளோடு எழுந்து முன் நகர்ந்து வந்தேன். எனக்கான நிறுத்தத்தில் பேருந்து நின்றது.

விடுதிக்கான பாதை திருப்பத்தில் இராணுவ வீரர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான்கு ஆண்டு கால பயணத்தில் மட்டக்களப்பில் முதன்முறையாக இராணுவத்தைப் பார்க்கிறேன். அங்கும் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருந்ததால், நிறுத்தப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.

இரவு ஒரு மணிக்கு தொடங்கிய பயணம் ஒருவழியாக 21 மணி நேரத்தில் நிறைவுக்கு வந்திருந்தது. முன்பே தகவல் கொடுத்திருந்ததால் விடுதி மேலாளர் வருகைக்காகக் காத்திருந்தார். அறையில் நண்பர் வாங்கி வைத்திருந்த சரவணபவ நெய் மசால் தோசையும் காத்திருக்கும் எனத் தெரியும்.

Oct 30, 2019

உயிர் பூத்தவளின் முகம் போல


அடைமழை நாட்களில்
பகலில் தொடரும் மழையென்பது
எதிர்பாராக் கணத்தில்
நேசிப்பிற்குரியோர்
நமக்கு ஏதுவான நேரத்தில் வந்தமர்ந்து
விரல் கோர்த்து
விழி நோக்கி
நலம் விசாரிப்பற்கு ஒப்பானது

வெளிச்சத்தில் பொழியும்
மழை தரும் மகிழ்ச்சியை
யாரிடம் எப்படி வெளிப்படுத்தினாலும்
ஏதோ ஒரு நிறைவுறாத் தன்மை
தளும்பிக் கொண்டேயிருக்கும்.

சில நிறைவுறாத் தன்மைகள்
கருவறையில்
உயிர் பூத்தவளின் முகம் போல
நிறைந்த அழகினைப்
பூசியிருக்கும் தன்மை கொண்டவை.

Oct 24, 2019

நஞ்செனினும் தூயது புகட்டு


முக்கியமான துறை ஒன்றில் உயர் பொறுப்பில் இருப்பவர். சில நேரங்களில் என்னிடம் ஆலோசனைகள் கேட்பார். இரண்டு நாட்களுக்கு பயணத்தில் இருந்தபோது பின்னிரவில் வாட்சப்பில் அவரிடமிருந்து  யாராவது நம் குறைகளை துல்லியமாக சுட்டிக் காட்டினால் என்ன செய்யனும்?” என்ற கேள்வி ஒளிர்ந்தது.

நிதானமாக என்னவென உள்வாங்க வேண்டும். அதில் உண்மை இருப்பின் ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று பதில் தந்ததோடு, மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் அவருக்கு வந்திருந்த ஒரு கடிதத்தின் சில பகுதிகள் ஸ்க்ரீன் ஷாட் வடிவில் அனுப்பி வைக்கப்பட்டன.

அவருக்கு கீழே பணியாற்றும், அவரைவிட வயது குறைவானவரிடமிருந்து, அவருடைய சமீபகால நடவடிக்கைகள் குறித்த விமர்சனக் கடிதம் அது. என்னிடம் பகிரப்பட்ட கொஞ்சம் பகுதிகளை வாசித்தவரையில், அந்தக் கடிதத்தில் பெரும் அக்கறை இழையோடியது புரிந்தது. அதே நேரம் மிகக் கூர்மையான, கடுமையான விமர்சனங்கள். ஏறத்தாழ தோலுரித்த தன்மை.

அவருக்கு வந்திருந்த விமர்சனத்தில் என் பார்வைக்கு வந்தது 10-15% இருக்கலாம். அதிலிருந்த சிலவற்றை எனக்குப் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். பாகற்காய் ஜூஸில் கொஞ்சம் நிலவேம்பைக் கலந்ததுபோல் இருக்கத்தான் செய்தது.

ஒருநாள் கழித்து... எதிலிருந்து தொடங்குவது எனத் தெரியாமல்...

எனக்கு அனுப்பினதை வச்சு பார்க்கும்போதே விமர்சனம் ரொம்ப கடுமையா இருந்த மாதிரி இருந்துச்சே!என்றேன்

நேர்மையாகவும் இருந்தது!

ம்ம்ம்...

ரொம்ப பதட்டமாகிட்டேன். ஆனா நிதானத்தை கை விட்றக்கூடாதுனு என்னைக் கட்டுப்படுத்தி மீண்டும் மீண்டும் வாசிச்சேன். இதோ இப்பவும் படிக்கிறேன், இனியும் படிப்பேன். எவ்ளோ வலி கொடுத்தாலும், அது என் நல்லதுக்குத்தான் என்பதில் சந்தேகம் இல்லை. எதும் கோவமெல்லாம் இல்லை. எனக்கு கீழே இருந்தாலும், இப்ப இன்னும் கூடுதலா மதிக்கிறேன்என்றார்

ம்ம்ம்ம்ம்ம்....

உண்மையச் சொல்லனும்னா இன்னும் கடுமையா இருந்ததையெல்லாம் உங்ககிட்ட சொல்ற தைரியம் வரல. அதனாலதான் கொஞ்சம் மட்டுமே அனுப்பினேன்."

ஓ... அப்படியா... இனிமே எதாச்சும் தேவைன்னா நான் உங்ககிட்ட அட்வைஸ் கேட்டுக்கிறேன்

ஏ......ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!?”

அனுப்பின கொஞ்சூண்டு படிச்சு, அதில் என்னை பொருத்திப் பார்த்ததுக்கே ஆடிப்போய்ட்டேன். முழுசா படிச்சிட்டு, இன்னும் கூடுதலா மதிப்பேன்னு சொல்றதெல்லாம் வேற லெவல் ஆச்சே!

*

முதலில் அவர் கேட்டபோது நிதானமாக என்னவென உள்வாங்க வேண்டும். அதில் உண்மை இருப்பின் ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று சொல்லியிருந்தாலும், சொல்லுதல் யார்க்கும் எளிய தானே!

விமர்சனம் பல நேரங்களில் அவ்வளவு நேர்மையாக எல்லாம் வந்துவிடுவதில்லை. அதிலிருக்கும் சிக்கல், குறிப்பிட்ட ஒரு விசயத்திற்கான விமர்சனம் வருவதாக இருந்தாலும், அது சுற்றமும் நட்பும் சூழ, உடன் இருந்த அனைத்து விசயங்களையும் இணைத்தபடிதான் வரும். அதில்தான் நேர்மை சிதறிப்போய்விடுகிறது.

விமர்சனம் என்பது மருந்து. நஞ்செனினும் தூயது புகட்ட வேண்டும் என்கிறபோது மருந்தும் தூய்மையானதாக, தேவையான அளவில் மட்டுமே இருத்தல் நலம். சரியான மருந்தை மறுப்பேதுமின்றி ஏற்பது எதனினும் மிகவும் முக்கியம்.

Oct 23, 2019

மாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் - இந்து தமிழ் திசை கட்டுரை

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சொன்ன ஒரு மந்திரம்தான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. வாய்ப்புகளைத் தவறவிடாதே என்பதுதான் அந்த மந்திரத்தின் உட்பொருள். நம் வாழ்க்கை உயர இதுபோன்ற ஒரு சொல், ஒரு செயல் போதும்” என்கிறார் எழுத்தாளர், பேச்சாளர், மனிதவளப் பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஈரோடு கதிர் (எ) கதிர்வேலு பழனிசாமி.

பள்ளி, கல்லூரிகள், இலக்கியக் கூட்டங்கள், புத்தகத் திருவிழாக்களில் இவர் தவிர்க்க முடியாத ஆளுமை. இவர் எழுதியவை நான்கு புத்தகங்கள். அவற்றில் இரண்டு பிரபல வார இதழ்களில் தொடராக வெளிவந்தவை. இவைதவிர, இணையத்திலும் 850 படைப்புகள் எழுதியுள்ளார்.

தமிழகம் முழுக்க பேச்சாளராக அறியப் பட்டுள்ள இவர், தமிழகம் மட்டுமின்றி, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் சிறப்பு அழைப்பாளராக, மனிதவளப் பயிற்சியாளராகவும் தொடர்கிறார். தொலைக்காட்சி, வார, மாத இதழ்கள், பண்பலை என பெரும்பாலான ஊடகங்களிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அருகேயுள்ள சின்னியம்பாளையம்தான் கதிரின் ஊர். அரசு ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி வரை கல்விப் பயணம். எழுத்தாளராக, பேச்சாளராக மாற கதிருக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது அவர் நடத்திவரும் ‘சிகரம்’அச்சகம். ஏறத்தாழ 19 ஆண்டுகள் அச்சகப் பணியில் இருந்துவிட்டு, 2008-ல் இணையத்துக்கு மாறினார். அவரிடம் பேசினோம்.

“ஈரோட்டை விட்டு விலகிய, உள்ளடங்கிய கிராமத்தில், அரசுப் பள்ளியிலேயே படித்து, நகர்ப்புறத்துக்கு இடமாற்றம் செய்வது அத்தனை எளிதானதல்ல. பார்வையில்படும் எதுவுமே மிரட்சியூட்டும். இயல்பாகவே மொழி, பழக்கவழக்கம், அனுபவம், தகவல்கள், அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தன்னம்பிக்கை தளர்ந்திருக்கும். அப்படியான பின்னணியில் இருந்து நகரத்துக்குள் நுழைந்து, எழுத்தாளராக, பேச்சாளராக தகவமைத்துக்கொள்ள முயன்றவன் நான்.



சமூகவலைதளங்களில் தொடங்கிய பயணம்...
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளும், சில எதிர்பாராத மாயங்களை நிகழ்த்திவிடுகிறது. கல்லூரி நாட்களில் துணுக்கு, கவிதை என கிறுக்கிக் கொண்டிருந்தாலும், ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஒரேயொரு வரிகூட எழுதாத சூனிய வெளியில் இருந்த எனக்கு, 2008-ல் இணையத்தின் வாயிலாக எழுத முடியும் என்பது தெரிய வந்தது.

என்னைச் சுற்றி நடப்பதை பகிரத் தொடங்கிய பயணம், இன்று பலரது வாழ்க்கையை செழுமைப்படுத்தும் புத்தகம் வரை தொடர்கிறது.
உணர்வுகளையும், மனதில் தேங்கிய காட்சிப் படிமங்களையும் சொற்களாக மாற்றிப் பதியத் தொடங்கியதுதான் எழுத்துத் துறையின் ஆரம்பம். இதில், பெரிய வாய்ப்புக் களமாக அமைந்தவை சமூக வலைதளங்களான ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை.

இப்படி சமூக வலைதளங்களில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த எனக்கு `நம் தோழி’ மாத இதழில் தொடர் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெளியான, உலகத் திரைப்படங்கள் குறித்த கட்டுரை, என்னை வெளியுலகுக்கு அறிமுகம் காட்டியது. தொடர்ந்து, குங்குமம் வார இதழில் ‘உறவெனும் திரைக்கதை’ என்ற தலைப்பில் 25 வாரங்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

மாணவ, மாணவிகளை சந்திக்கும் வாய்ப்பு மற்றும் அனுபவங்களை முன்வைத்து, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கான, ‘வேட்கையோடு விளையாடு’ கட்டுரைத் தொடர் புதிய தலைமுறையின் கல்வி வார இதழில் வெளிவந்தது. கிளையிலிருந்து வேர் வரை, பெயரிடப்படாத புத்தகம், உறவெனும் திரைக்கதை, வேட்கையோடு விளையாடு ஆகிய நான்கு புத்தகங்களுமே இரண்டாம் பதிப்பைக் கண்டுள்ளன. குறிப்பாக, ‘வேட்கையோடு விளையாடு’ வெளியான 5 மாதங்களில் இரண்டாம் பதிப்பைக் கண்டது.

ஓராண்டில் 25 ஆயிரம் மாணவர்கள்...
எழுத்தாளர் என்ற நிலையைத் தொடர்ந்துகொண்டு, பேச்சாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராக மாறினேன். ஓராண்டில் சராசரியாக 25 ஆயிரம் மாணவ, மாணவிகளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கிடைத்த அனுபவங்களே ‘வேட்கையோடு விளையாடு’ கட்டுரைத் தொடர்கள். பதின் பருவ மாணவி தொடங்கி, 50 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் வரை பலரையும் இந்தப் புத்தகம் ஆழ்ந்து யோசிக்கவும், தன்னை உணர்ந்து கொள்ளவும் வைத்துள்ளது.

புத்தக திருவிழாக்கள், பொது அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள் என பல்வேறு மேடைகளில் பேசி வருகிறேன்” என்கிற கதிர், இன்றைய கல்விச்சூழல், இளைய தலைமுறையின் எதிர்மறை எண்ணங்கள், சமூகத்தை அவர்கள் அணுகும் முறை, பெற்றோருடனான உறவு-முரண் ஆகியவை குறித்து அதிகம் கவலைப்படுபவராக உள்ளார்.

இதற்காக, பிள்ளைகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கான பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இளைய தலைமுறையை நெறிப்படுத்த, அவர்களது சூழலைப் புரிந்துகொண்டு, அவர்களோடு இணைந்து, அவர்களை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு வலியுறுத்துகிறார்.

“பயிலரங்குகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தாலும், உண்மையில் பெற்றோரிடமே உரையாட வேண்டிய தேவையே அதிகம் உள்ளது. கல்வி என்பதே வாழ்வின் ஆதாரம் என்று மாறிவிட்ட இக்காலத்தில், முழுப் பொறுப்பையும் ஆசிரியர்கள், பிள்ளைகள் மீது மட்டுமே சுமத்திவிட்டு, செலவு செய்வது மட்டுமே தமது பொறுப்பு என்பதே பெற்றோரின் மனநிலையாக உள்ளது. பிள்ளைகளை வடிவமைப்பதில், தயார்படுத்துவதில் பெற்றோர்களும் முன்நிற்க வேண்டும்” என்கிறார் கதிர்.

சமூக வலைதளங்களை நேர்மறையாக பயன்படுத்தும் வகையில், நண்பர்களுடன் இணைந்து ‘ஈரோடு வாசல்’ எனும் வாட்ஸ்அப் குழு வாயிலாக இரண்டு ஆண்டுகளில் பலரையும் பேச்சாளராக, எழுத்தாளராக, படைப்பாளியாக, கதை சொல்லியாக, வாசிப்பாளராக மாற்றியிருக்கிறார்.

“இந்த மாற்றங்களுக்குப் பின்னால் இருப்பது, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சக பயிற்சியாளர் சொன்ன மந்திரம்தான். `ஒரு வாய்ப்பு வரும்போது முடியாது என்று நீ கை விட்டால், வேறு யாரும் அதை செய்யாமல் இருக்கப்போவதில்லை. அந்த வாய்ப்பை யாரோ ஒருவர் செய்யத்தான் போகிறார். அந்த யாரோ ஒருவராக நீயே ஏன் இருக்கக் கூடாது’ என்பதுதான் அந்த மந்திரம். ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல் போதும். உடைவதற்கும்... உயர்வதற்கும்...” நம்பிக்கையுடன் கூறி விடை கொடுத்தார் ஈரோடு கதிர்.

-எஸ்.கோவிந்தராஜ்

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...