முக்கியமான துறை ஒன்றில் உயர் பொறுப்பில் இருப்பவர். சில நேரங்களில்
என்னிடம் ஆலோசனைகள் கேட்பார். இரண்டு நாட்களுக்கு பயணத்தில் இருந்தபோது
பின்னிரவில் வாட்சப்பில் அவரிடமிருந்து “யாராவது நம் குறைகளை துல்லியமாக சுட்டிக் காட்டினால் என்ன
செய்யனும்?” என்ற கேள்வி ஒளிர்ந்தது.
“நிதானமாக என்னவென உள்வாங்க வேண்டும். அதில் உண்மை இருப்பின்
ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதில் தந்ததோடு, மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
சிறிது நேரத்தில் அவருக்கு வந்திருந்த ஒரு கடிதத்தின் சில பகுதிகள்
ஸ்க்ரீன் ஷாட் வடிவில் அனுப்பி வைக்கப்பட்டன.
அவருக்கு கீழே பணியாற்றும், அவரைவிட
வயது குறைவானவரிடமிருந்து, அவருடைய சமீபகால நடவடிக்கைகள்
குறித்த விமர்சனக் கடிதம் அது. என்னிடம் பகிரப்பட்ட கொஞ்சம் பகுதிகளை
வாசித்தவரையில், அந்தக் கடிதத்தில் பெரும் அக்கறை இழையோடியது
புரிந்தது. அதே நேரம் மிகக் கூர்மையான, கடுமையான
விமர்சனங்கள். ஏறத்தாழ தோலுரித்த தன்மை.
அவருக்கு வந்திருந்த விமர்சனத்தில் என் பார்வைக்கு வந்தது 10-15%
இருக்கலாம். அதிலிருந்த சிலவற்றை எனக்குப் பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.
பாகற்காய் ஜூஸில் கொஞ்சம் நிலவேம்பைக் கலந்ததுபோல் இருக்கத்தான் செய்தது.
ஒருநாள் கழித்து... எதிலிருந்து தொடங்குவது எனத் தெரியாமல்...
“எனக்கு அனுப்பினதை வச்சு பார்க்கும்போதே விமர்சனம் ரொம்ப
கடுமையா இருந்த மாதிரி இருந்துச்சே!” என்றேன்
“நேர்மையாகவும் இருந்தது!”
“ம்ம்ம்...”
“ரொம்ப பதட்டமாகிட்டேன். ஆனா நிதானத்தை கை விட்றக்கூடாதுனு
என்னைக் கட்டுப்படுத்தி மீண்டும் மீண்டும் வாசிச்சேன். இதோ இப்பவும் படிக்கிறேன்,
இனியும் படிப்பேன். எவ்ளோ வலி கொடுத்தாலும், அது
என் நல்லதுக்குத்தான் என்பதில் சந்தேகம் இல்லை. எதும் கோவமெல்லாம் இல்லை. எனக்கு
கீழே இருந்தாலும், இப்ப இன்னும் கூடுதலா மதிக்கிறேன்”
என்றார்
“ம்ம்ம்ம்ம்ம்....”
“உண்மையச் சொல்லனும்னா இன்னும் கடுமையா இருந்ததையெல்லாம்
உங்ககிட்ட சொல்ற தைரியம் வரல. அதனாலதான் கொஞ்சம் மட்டுமே அனுப்பினேன்."
“ஓ... அப்படியா... இனிமே எதாச்சும் தேவைன்னா நான் உங்ககிட்ட
அட்வைஸ் கேட்டுக்கிறேன்”
“ஏ......ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!?”
“அனுப்பின கொஞ்சூண்டு படிச்சு, அதில்
என்னை பொருத்திப் பார்த்ததுக்கே ஆடிப்போய்ட்டேன். முழுசா படிச்சிட்டு, இன்னும் கூடுதலா மதிப்பேன்னு சொல்றதெல்லாம் வேற லெவல் ஆச்சே!”
*
முதலில் அவர் கேட்டபோது ‘நிதானமாக என்னவென
உள்வாங்க வேண்டும். அதில் உண்மை இருப்பின் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லியிருந்தாலும், சொல்லுதல் யார்க்கும்
எளிய தானே!
விமர்சனம் பல நேரங்களில் அவ்வளவு நேர்மையாக எல்லாம் வந்துவிடுவதில்லை.
அதிலிருக்கும் சிக்கல், குறிப்பிட்ட ஒரு
விசயத்திற்கான விமர்சனம் வருவதாக இருந்தாலும், அது சுற்றமும்
நட்பும் சூழ, உடன் இருந்த அனைத்து விசயங்களையும்
இணைத்தபடிதான் வரும். அதில்தான் நேர்மை சிதறிப்போய்விடுகிறது.
விமர்சனம் என்பது மருந்து. நஞ்செனினும் தூயது புகட்ட வேண்டும் என்கிறபோது
மருந்தும் தூய்மையானதாக, தேவையான அளவில்
மட்டுமே இருத்தல் நலம். சரியான மருந்தை மறுப்பேதுமின்றி ஏற்பது எதனினும் மிகவும்
முக்கியம்.
1 comment:
அந்த விமர்சனத்தையும் சேர்த்து இங்கு வெளியிட்டு இருந்தால் உங்களைப் போல இதை படிப்பவர்களும் தங்களை பொருத்தி பார்த்து என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்று முடிவு எடுக்க வாய்ப்பு கிடைத்திருக்குமே
Post a Comment