Showing posts with label சிந்தனைகள். Show all posts
Showing posts with label சிந்தனைகள். Show all posts

Nov 27, 2019

கீச்சுகள் தொகுப்பு - 71


என்ன செய்ய... ஒப்பனை அன்பு பேரழகுதான்!

*

நினைவில் உறங்கும் முத்தம் விழிக்கும் தருணம் இரவு!

*
எந்த ஈகோவும் பார்க்காமல், “எனக்கு இன்னிக்கு பர்த் டே... விஷ் பண்ணுங்க” எனக் கேட்பவர்கள் தம் வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறவர்களாக இருக்க வேண்டும்!

*
பதில்களுக்கென்ன தேவை!? கேள்விகளிலேயே இளைப்பாறுகையில்...!

*

இரைச்சலை நிறுத்து இல்லையேல் இடம் விட்டகல்... எவ்வளவு நேரம் காதுகளைப் பொத்துவாய்!?

*

ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கின்றதா...? கையில் இருப்பதை கீழே வைத்துவிடு!

*

'என்னைத் தெரியாதா!?' என்றாய். மௌனமாய் இருந்தேன்! 'உன்னைத் தெரியாதே!' என்கிறாய் மௌனமாய் இருக்கத் துவங்குகிறோம்!

*

எதிர்காலத்தை மட்டுமே யூகித்து திட்டமிடுவது மட்டுமேயல்ல வாழ்க்கை. நிகழ்காலத்தில் உணர்ந்ததை உணர்ந்தவித்ததில் வாழ்ந்துவிடுவதும் தான்!

*

நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருங்கள். உடம்பையும் உறவுகளையும் பத்திரமா வச்சுக்குங்க. அதிகாரத்தின் உச்சம் ஒன்று படுக்கையில் நோய்மையில் ஒரு குழந்தைபோல் குலைந்து கிடைப்பதைப் பார்க்க நோகுகிறது.

*

விழிப்பு கூட அரிதாக கொடியதுதான். காரணமேயின்றி உறக்கம் பிடிக்கா ஒரு இரவில்தான் அது தெரிய வரும்.

*
மனிதர்களிடையே ‘143’ உணர்வு மங்கும்பொழுது ‘144’ தடையுத்தரவு தேவைப்படுகிறது!

*

நரகம் என்பது மரணத்திற்கு பிறகு மட்டுமே வருவதல்ல. வாழும்போதே நேசிப்புக்குரியோரை வதைக்கும் துன்பத்தில் உதவ முடியாமல் போகும் தருணமும்தான்.

*

உடற் பிணியென்பது பெரும்பாலும் “என் பிணக்கின் மொழி கேள்” என உடல் கொள்ளும் ஊடலே!

*
சொல்வதால், எழுதுவதால் அது சொல் ஆகிறதா! சொல்லாத, எழுதாத 'சொல்’லிற்குப் பெயர் என்ன?

*

வாழ்க்கைப் பயணத்தின் மைல் கற்கள் ஆண்டுகள் அல்ல, 'மனிதர்கள்'

*

ஒரு பிரச்சனையை முடித்து வைக்க 'மன்னிப்பு கோருதல்’ எளிய தீர்வாக இருக்கின்றது. இதில் இருக்கும் நகை முரண் என்னவென்றால், மன்னிப்பு கோரியதும் முடித்துக்கொள்ளத் தயாராகும் எதிர் தரப்புக்கு அந்த மன்னிப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாது என்பதே!

*

மூச்சுணரும் அருகாமையில் பேச்சு எதற்கு!

*

சிங்கத்தின் பசி மட்டுமே மானினுடைய பிரச்சனையாக இருக்க முடியாது. வாழும் அளவிற்கு ஓடாமல் இருப்பதுவும் மானின் பிரச்சனையாக இருக்கலாம்.

*

எதுவுமே பேசிக்கொள்ளாத தினங்களிலும் உறவு, நட்புகளில் 'குட் நைட் / குட் மார்னிங்' மட்டும் சொல்லும் சம்பிரதாயமும் ஒருவித போலித்தனம்தான்!

*

பிரச்சனை என்னவென்றே புரியாமலிருப்பதுதான் பல நேரங்களில் பெரும் பிரச்சனை!

*


Nov 18, 2019

கீச்சுகள் தொகுப்பு - 70


மழையால் எப்படி இந்த இருளைக் கரைக்க முடியும்!

*

நிதானம்... பல நேரங்களில் மெதுவாக செயல்படுகிறோமே எனும் சந்தேகத்தை அளிக்கும். ஆனால் நிதானம் நின்று 'நிதானமாய்’ வென்று விடுகிறது.

*

நீங்கள் அறிமுகப்படுத்தும் எதுவுமே 'நீங்கள் அறிந்தவரையில்' மட்டுமேயானது.

*

யாருக்கெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத பெரும் சவால்களை வாழ்க்கை வழங்குகிறதோ, அவர்களிடம் ஒரு கூடுதல் திறமையையும் அதே வாழ்க்கை வழங்கிவிடுகின்றது.

*

ரகசிய அன்புதான் தித்திக்கும் என்றில்லை. தித்திக்கும் அன்பை ரகசியமாகப் பகிர காலம் பணித்திருக்கலாம். ;)

*

நிலம் குளிர்ந்தென்ன விதைகளைத் தகிக்காமல் இருக்கச் சொல்லுங்கள்!

*

பெய்ய மறுக்கும் மழை இலையின் பச்சையைத் தின்று கொழுக்கிறது!

*

நினைவில் உழலும் உறையா முத்த ஈரம் அமுதா, நஞ்சா....!

*

’வதந்தி’ மற்றும் 'வாந்தி’ ஆகிய இரண்டு சொற்களும் பங்காளிகளாகத்தான் இருக்க வேண்டும்

*

”கல்யாண வீடுனா மாப்பிள்ளையா, எழவு வீடுனா பொணமா” இருக்கனும்ங்கிறது வெறும் ஆசை மட்டுமில்ல பாஸு, குணப்படுத்த விரும்பாத ஒரு பெரும் வியாதி!


*

ஒருவரோடு ஒருவர் அன்பு பாவித்தலில் இன்னொருவருக்கு வெறுப்பு கூடும் மன வேதியியல், எப்போதுமே புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம்தான்.

*

உற்சாகம் என்பது வரம், நிலை என்பதுள்ளிட்ட எதுவுமல்ல. தான் உற்சாகமாய் இருக்கவேண்டுமென நொடிப்பொழுதில் மனதிற்குள் எடுக்கும் தீர்மானமே!

*

தப்பித்துக்கொள்ளும் முன் ”தெரிந்து கொள்ளவில்லை” என்பதை ஒப்புக்கொள்கிறேன்

*

உரையாடல்களில், விவாதங்களில், நல விசாரிப்புகளில் நாம் ஒன்றை மட்டும் மிகக் கவனமாய்த் தவிர்க்கிறோம். . . . . . . . அதன் பெயர் "உண்மை".

*

ஆழ் உறக்கத்திற்குள் ஆட்படும் அடர் இரவில் கையில் அகப்படும் இந்த வெளிச்சப் பரிசை என் செய்வேன்!

*

எதிர்பார்த்திட முடியாத ஒரு கதை எல்லோரிடம் இருக்கின்றது. அந்த எல்லோரிடமும் சொல்ல விரும்புவது, "முதலில் உன்னை பாதுகாத்துக்கொள்!"

*

எது கோழைத்தனம்....! அதிகாரத்தை வைத்து மிரட்டுவதா? மிரட்டலுக்கு பயந்து அடங்கிப்போவதா?

*

வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்த பெரும்பான்மையான முடிவுகளின் பின்னால் ஒரு ஆரோக்கியமான கோபம் இருந்திருக்கும்.

*

முத்த வாசனையென்பது உயிர்க் காற்றின் மணம்.

*

சன்னல்களைத் திறந்து ஒரு கையில் கடலையும் மறுகையில் மேகத்தையும் தொட கனவில் அனுமதியுண்டு.

*

வெறும் பாறை மேல் பெய்யும் பெருமழை எதையும் இடம் பெயர்த்தி விடுவதில்லை. ஆனால் மண் எப்போதும் தன்னை இடம் பெயர்த்திக்கொள்ள அனுமதிக்கிறது.

*

உயர்ந்திருத்தல் என்பது மற்றவர்களிலிருந்து விலகி நிற்றல் அல்ல, மற்றவர்களின் மத்தியில் உறுதுணையாய் நம்பிக்கையாய் நிற்றலே!

*

என் கனவில் புத்தன் வந்து சொல்லும் வரை பேராசையோடு காத்திருப்பது குறித்து கவலையேதுமில்லை.

*

உங்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். உங்களிடம் திறமை இருக்கிறதென இன்னொருவர் நம்பிவிட்டால் அதற்காகவேணும் உங்களை நம்ப ஆரம்பித்து விடுங்கள்!

*

“கடவுள் இருக்கிறார்!” என்பதை நீங்கள் உணர்ந்த தருணங்களைவிட, “அய்யோ.. கடவுளே நீ இருக்கியா!?” எனத் தேடிய தருணங்களே அதிகம்!

*

மூலத்தை அறியாத வரைக்கும் அப்போது அறிந்துகொள்வதே மேம்பட்டதாய் இருக்கிறது.

*

நினைவு எனும் காட்டாறு!

*

"மரணம்" எனும் பரிசுத்தமான உண்மையை எத்தனை பேருக்கு உண்மையில் பிடிக்கிறது இங்கு!

*

எல்லோருக்கும் உண்மை வேண்டுமாம்! உண்மையைச் சொல்வதும், கேட்பதும் உண்மையில் அத்தனை எளிதா!?

*

பகையின் வேரில் வெம்மை பாய்ச்ச ஒரு பெரு மழை போதும்.

*

மழையெல்லாம் வேண்டுதல் வச்சு விளம்பரம் தேடுறதுல வர்றதில்ல... அதுவா மனமிரங்கி பெருங்கருணையோட வந்திறங்கணும்...

*

கூடல் கைகூடிடா முதிர் மோகப்பொழுதொன்றில் முத்தங்கள் தின்று பசியாறுவது போலே அந்த அருவியில் எத்தனை முறைதான் நனைந்து வெம்புவதோ!?

*

ஈர விடியலில் மனம் முளைக்கும்!

*

சில புறக்கணிப்புகள் நமக்கும் தேவை, உண்மையில் அவர்களுக்கும் அவசியமான தேவை!

*

கற்றுக்கொள்தல் மிக எளிது, அறிவின் அத்தனை கண்களும் திறந்திருப்பது போதும்.

*

கற்றுக்கொள்வதை ஒதுக்க ஆரம்பிக்கிற தருணத்திலிருந்து வாழ்க்கை மெல்ல புளிப்பேறத் துவங்குகிறது.

*
மகிழ்ச்சியும் ஒரு மொழியே! :)

*


Nov 6, 2019

கீச்சுகள் தொகுப்பு - 69



உறவு முறித்தது போதும்... பகை முறி!
                       

என்ன அடைந்தோம் என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியமானது நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதுதான். அடைந்தது மறந்துபோகும். செய்தவை வாழ்நாள் முழுக்க துணை நிற்கும்!

*


தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருப்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. தொடர்ந்து தன்னையே ஏமாற்றிக் கொல்வதை விடவா தோல்வி வெட்ககரமானது!?
'ல்’ பிழையன்று!

*

நம் பலம் நமக்கே புரியும் தருணம் என்பது... சாத்தியமில்லை என நாம் நினைக்கிற ஒன்று, நம்மாலேயே சாத்தியப்படும் கணம்.

*

குழப்பத்தை தெளிவாகப் பார்!

*

மண்ணை நனைக்காத, உடையை மட்டும் நனைக்கும் மழைக்கு 'மானங்கெட்ட மழை’ எனப் பெயர் சூட்டினேன்.  'மரம் நடாதவங்களுக்கு மானம் என்ன வேண்டியிருக்கு!?’ என்றது மழை!

*

கோபத்தின் உக்கிரத்தில் தெறிக்கும் சொற்களுக்கு பொருள் சொல்ல இன்னும் டிக்‌ஷ்னரி கண்டுபிடிக்கப்பட வில்லை!

*

'போதுமெனத் தோன்றுகிறது' என்றெழுதிவிட்டு முற்றுப்புள்ளிக்குப் பதிலாக காற்புள்ளி வைத்தல் தகுமோ!?

*


ரயில் தடமெங்கும்
கலங்கி நின்று
காற்றில் கையசைக்கும்
ராத்திரியில் பெய்தோய்ந்த
ரகசிய மழை நீரின்
பிரியத்திற்கு ஈடேது!

*

சாரல் பொழியும்
ரயில் பயணத்தில்
வழிவிட்டுக் காத்திருக்கும்
சிறு நிலையத்தில்
ஆவி பறக்கும் 
சுக்குக் காப்பியொன்றும்
அத்தனை ருசியில்லைதான்
ஆயினும் அச்சூட்டின் கதகதப்பில்
நினைவில் தளும்பும்
முத்தமொன்றின் தடயமுண்டு!


*

கவிழ்ந்து தொங்கும் 
கரு மேகம்
இந்த நகரைத்
தீண்டி விழுங்குமோ!?

*

நினைவில் துயிலும்
பெரு நெல்லி முத்தம்!

*

தேய்ந்து கொண்டிருக்கும்
சிரிப்பொன்றை
புன்னகையாய் 
சேமிக்கத் துவங்குகிறேன்!


நமக்கென்று ஒரு விலையில்லை என்பது... 
கர்வத்தில் சேருமா!? அறியாமையில் சேருமா!?

*

“உனக்கு இதெல்லாம் தேவையா!?” - சில இடங்களில் கேட்க மறந்த கேள்வி, பல இடங்களில் தாங்குவதற்குத் தடுமாறும் கேள்வி! 

*

எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை ஆகாது. சிலவற்றைத் தெரிந்துகொள்வதற்காக, பலவற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது.

*

மனிதம் என்பது தன் போக்கில் எதையும் ஆகச்சிறந்ததாய் இயக்குதல். அறிவோடு மனதையும் பிணைத்து உலகை ஆக்குதல்.

*

அதீத மன இக்கட்டில் இருக்கும் யாரோ ஒருவருக்கு உங்களை அழைத்துப் பேசத் தோன்றுகிறதா!? தேர்ந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

*

சுவையான தேநீர் பருக வேண்டுமென்பது வயிற்றின் தேவையன்று, மனதின் தேவையே!

*

இக்கட்டிலிருந்து 'மீள்வேன்', சோதனையில் வென்று 'தொடர்வேன்' என ஒருவர் சொல்வதை தன்னம்பிக்கை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர 'திமிர்' என்று சொல்வது பக்குவமின்மை!

*

ஏதோ ஒரு நிறைவுறாத் தன்மை இருக்கின்றதா!? அது அவ்விதமே இருக்கட்டும். அதுதான் வாழ்க்கையை தொடர்ந்து இயக்கும் நிர்பந்தம்!

*

எல்லாப் பார்வைகளிலிருந்தும் 
எளிதாய் ஒளிந்து கொள்கிறேன்
இமைகளுக்குள்ளிருக்கும் 
விழிகளிடம் என்ன செய்ய!?

*

கோபத்தை நெகிழ்வான குரலில், மென்மையான சொற்களில் பகிரும் வித்தை தவிர்த்து, வேறென்ன வரம் வேண்டும்!

*

யாரையும் எதிர்கொண்டுவிட முடிகிறது.  'அப்பா-அம்மா இருவரும் இல்லை' என சன்னமான குரலில் அடையாளம் காட்டப்படும் பிள்ளைகளைத் தவிர!

*

அறியாமை ஒரு பாவம் என்றால் அரைகுறையாய் அறிந்து கொண்டிருப்பது பெரும்பாவம்.

*

ஒதுங்கியோ ஒளிந்தோ நிற்பதால் கடந்த காலம் பொய்யாகிவிடுமா!?

*

மௌனப் பஞ்சுப் பொதி...
சொற்களால் நனைகிறது.

*

மூச்சின் வெம்மைக்குள் இருப்பது மழையின் வாசனை!

*

தேவையில்லாத ஆணிகள்னு தெரிஞ்சும் பிடுங்கிட்டே இருக்கிறதுக்கு பேரு தியாகம், உழைப்பு கிடையாது... அதுவொரு குற்றம்!

*

மாற்றத்திற்கும் மாற்றமின்மைக்கும் இடையே ஒரு மெல்லியகோடுதான்.... அந்தக் கோட்டிற்கு நம்பிக்கை என்றும் ஒரு பெயர் உண்டு.

*

மௌனம், அது வாய்க்கும் இடங்களைப் பொறுத்து வடிவம் கொள்கிறது.


May 21, 2017

கீச்சுகள் தொகுப்பு - 68

பொதுவாகவே இரவுகள் நேசங்களால் வேயப்பட்டு விடுகின்றன...!

-

முத்தத்தின் பிழையில் சுவை கூடும் முரணுண்டு!

-

வியர்வையில் சரசமாடும் மாலைக் காற்றுக்கும் பிரியம் என்றே பெயர்!

-

பேரன்பு எனப்படுவது வேரிலும் விளையும், கிளையிலும் காய்க்கும்!

 -
  
சிறு மழையெனும் மருதாணி வாசம்

-
 
வெயில் திண்மமாய் உறைந்து கிடக்கிறது. துணிகின்றவர்களை ஊடறுத்துச் செல்லப் பணிக்கிறது.

-

பகை கொள்ள கணப்பொழுதென்றால் அதை முடிக்க அதில் காற்பொழுது போதும். எப்போதென்பதை தீர்மானிக்கும் காலம்தான் இங்கு தெய்வம்.

-

அவசியத் தேவையென்று வரும்போது, வலிக்கும் என்பதற்காக அறுவை சிகிச்சைகளுக்கு மறுப்பா சொல்ல முடியும்!?

-

உரிமைதான் உறவுகளின் இரத்த நாளம்

-

புரிந்துகொள்ளச் சிரமம் தான்! ஆனால் ஏற்றுக்கொள்ள அவ்வளவு சிரமமில்லை! :)

-
 
விவசாயம் மக்களைக் காப்பாற்றிய காலம் போய், “விவசாயம் காப்போம்” என மக்கள் சொல்லும் காலத்தில் இருக்கின்றோம் :(

-

மனதிற்குள் நீந்தும் சொற்கள் சில நேரங்களில் கண்களுக்குள் பரவி விடுகின்றன!

-

மௌனம் என்பது ஒரு மாயப் பெட்டி.... அதற்குள் எதையும் போட்டு வைக்கலாம்... தேவைப்படுகையில் கைவிட்டு எதையேனும் அள்ளிக்கொள்ளலாம்.

-
 
மனம் ஒரு மாய வசீகரம் பிணைந்த ஒரு பேராற்றல். எப்போதும் பசித்திருக்கும் ஒரு பெரும் ஜீவன்

-
 
உறவுகளை வளர்ப்பதும் சிதைப்பதும்... சொற்களைப் பயன்படுத்தும் சில தருணங்களே...!

-
 
மழையை யோசிச்சாலும், நேசிச்சாலும் அதன் ஈரம் மற்றும் குளிரோடு, கொஞ்சம் புழுக்கமும் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

-

சொற்களை வெறும் சொற்களாய்ப் பார்த்தால், அவை எழுத்துகளால் நிரப்பப்பட்ட சொற்கள் மட்டுமே!

-

மௌனமும் ஒரு விருந்தாளி போலத்தான்.

-

உதவி என்ற பெயரில் ஒருமுறை ஏமாந்து கொள்ளுங்கள். அதுவொன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால்... மீண்டும் மீண்டும் என்பது....!!!!!
 
-
 
நன்றாக யோசித்துப் பாருங்கள்... “அன்பு என்பது பல நேரங்களில் வெறும் சொற்கள் தான்!”

-

உடைதல் எளிது... முறிதல் வலிது!

-

கர்வத்தின் கரைசல் காமம்!

-
 
புன்னகைக்கும் முன் இதழ்களைக் கொஞ்சம் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். வறண்ட புன்னகை உயிரற்றது.

-
 
டைனோசர் அழிஞ்சு போனதுக்கு ஒரு சின்னப்பூச்சி கூட காரணமாக இருக்கலாம்!

-

பகிரப்படாத துக்கம் மட்டுமில்லை, பகிர முடியாத மகிழ்ச்சியும் சுமைதான்!

-
 
பேரன்பு எப்போதும் 'பிடித்ததை விட்டுக்கொடு’ என்றே கோருகிறது!

-
 
நாம் கோர்க்கும் சொற்களை வாசிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதையும் தாண்டி சேமிக்கிறார்கள் என அறியும் தருணம் குதூகலமானவை.

-

கடலுக்கடியிலும் நிலம்தான்!

-
 
எத்தனை எழுதி ஓய்ந்தாலும் தீர்ந்து போகாத கதைகளும், மனிதர்களும் இங்கு எப்போதுமுண்டு. அதனாலென்ன, இன்னும் காலம் இருக்கின்றது.

-

ஒரு விவாதத்தை மொக்கையா முறித்துப்போடும் சொற்களில் மிக முக்கியமானவை "ok leave it"

-

சில நேரங்களில்... ஓட்டம் உற்சாகம் தருவதாகவும், ஓய்வு களைப்பூட்டுவதாகவும்!

-

உங்களின் பல கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. சமாதானங்கள் மட்டுமே இருக்கின்றன!

-
எல்லாவற்றிலும் முடிவு எட்ட முடியாது... பலவற்றில் முடிவு மாதிரி ஒன்றைத்தான் எட்ட முடியும்!

-


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...