Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Oct 30, 2019

உயிர் பூத்தவளின் முகம் போல


அடைமழை நாட்களில்
பகலில் தொடரும் மழையென்பது
எதிர்பாராக் கணத்தில்
நேசிப்பிற்குரியோர்
நமக்கு ஏதுவான நேரத்தில் வந்தமர்ந்து
விரல் கோர்த்து
விழி நோக்கி
நலம் விசாரிப்பற்கு ஒப்பானது

வெளிச்சத்தில் பொழியும்
மழை தரும் மகிழ்ச்சியை
யாரிடம் எப்படி வெளிப்படுத்தினாலும்
ஏதோ ஒரு நிறைவுறாத் தன்மை
தளும்பிக் கொண்டேயிருக்கும்.

சில நிறைவுறாத் தன்மைகள்
கருவறையில்
உயிர் பூத்தவளின் முகம் போல
நிறைந்த அழகினைப்
பூசியிருக்கும் தன்மை கொண்டவை.

Aug 2, 2017

ஈரப்பொழுதில் புகை வழி அஞ்சலி

திங்கட்கிழமை உறங்கச் செல்லும்போது, வீட்டிலுள்ள எல்லாக் குழாய்களிலும் தண்ணீர் நின்று போயிருந்தது. இது அவ்வப்போது நடப்பதுதான். ஆனால் அவை யாவும் பகற்பொழுதுகளில் நடப்பவை. இந்த வீட்டிற்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. மூன்று ஆழ்துளைக் குழாய்க் கிணறுகள் இருந்தும், மாநகராட்சி இணைப்பு இருந்தும்.... எத்தனைஇருந்தும்இருந்தென்ன... ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் லாரி மூலம்தான் வந்து சேர்கிறது.

மொத்தமாக இருக்கும் நான்கு வீடுகளுக்கும் சேர்த்து நீர் நிர்வாகத்தை வீட்டு உரிமையாளரே கவனித்துக் கொள்கிறபடியால், தண்ணீர் குறித்து பெரிய பதட்டமில்லைதான். ஆனால் இரவு பத்து மணியளவில் தண்ணீர் தீர்ந்துள்ளதால், நள்ளிரவில் லாரியில் தண்ணீர் வந்தாகவேண்டுமோ!? என்ற கேள்விதான் மிரட்டிக் கொண்டிருந்தது. உறங்கச்செல்லும் நேரமென்பதால் அப்போதைக்கு தண்ணீர் தேவை பெரிதாக இல்லை. அடுத்து வாய் கொப்பளிக்கத் தேவைப்படும் தண்ணீர் ஏதோ ஒரு நிலத்தின் ஆயிரம் அடி ஆழத்திலிருந்துதான் பெற வேண்டும் என்பதை நினைக்க மிரட்சியாகவே இருக்கின்றது. காலையில் எழும்போது, எல்லா வீடுகளுக்கும், எல்லாத் தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாவிடில் எப்படி? எனும் இம்சை விடியவிடிய கனவுகளிலும்கூட ஆட்சி செய்து கொண்டிருந்தது.

காலையில் தண்ணீர் இருந்தது. கீழ்நிலைத் தொட்டியில் இருந்து, மேலே ஏற்றப்பட்டிருக்கலாம். விடியலைச் சமாளித்தாகிவிட்டது. பகலில்தான் முன்னப் பின்ன எல்லாம் கிடைத்துவிடுமே. இரவு நினைவிலும், கனவிலும் மிரட்டிய தண்ணீர் குறித்த தகிப்பு ஓய்ந்தும், மறந்தும் போயிருந்தது.

ஆனால் இப்படி லாரியில் தண்ணீர் வாங்கிப் புழங்குவதை நினைக்க வெட்கமாய் இருக்கின்றது. அந்த வெட்கத்தின் காரணம் தண்ணீர் இருக்கும் இடத்தைவிட்டு தண்ணீர் இல்லா இடத்திற்கு புலம் பெயர்ந்ததில் இருக்கும் வசதி அல்லது சொகுசு என்பதே. மழை என்று யார் எங்கு பகிர்ந்தாலும் ஒரு புழுக்கம் சூழ்கிறது. முட்டையை மந்திரித்து வைத்துவிடலாமா எனும் அளவுக்கும்கூட. அது இயலாமையின் கொதிப்பு. எந்தப் பாவத்தின் விளைவுகளை யாம் இப்போது அறுவடை செய்கிறோம் எனத்தெரியவில்லை. இப்படியாய்ப் புலம்புவது வாடிக்கையாய்ப் போனது. புலம்பாத கணங்களை, தண்ணீர் குறித்து மிரளாத கணங்களை நினைக்கும்போது சித்தம் கலங்கி புத்தி பேதலித்துவிட்டதோ எனும் பயம் பயம் கூடுதலாய் வருகிறது.

செவ்வாய் இரவில் மழை வந்துவிட்டது. ’சட்டென மாறுது வானிலை’ என்பதுபோல் சட்டென மாறிப்போனது வெப்பநிலை. மழை கொண்டு வரும் குளிருக்கு நிகராய், இதம் தரும் ஏசிகள் ஏதும் இங்குண்டா? மழை தொடங்கியவுடன் வாட்சப் குழுமத்தில் மழை… மழை எனும் குரல்கள் பெய்யத் தொடங்கிவிட்டன. என் குரலும்தான். மழையென்று முன்பு யாரோ சொன்னபோது வந்த கொதிப்பு, இப்போது வேறு எவருக்கேனும் வருமோ என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றவில்லை. அட அதுதான் நமக்கு வந்துடுச்சுல்ல என்ற சமாதானத்தில் அதெல்லாம் அடங்கித்தான் போகின்றது. அப்போதைக்கு அந்த மழையே போதுமெனத் தோன்றியது. பேராசை என்னத்துக்கு?

வழக்கத்தைவிட கூடுதல் நேர உறக்கம். அதுதானே அந்த குளிர்ந்த இரவுக்குச் செய்யும் மரியாதை. மரியாதை தீர்ந்த பிறகு வழக்கம்போல் மிதிவண்டியோடு வெளியில் கிளம்புகிறேன். ஆங்காங்கே சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியிருக்கின்றது. தேங்கிக்கிடக்கும் சேற்று நீரைக் காண்கையில் இன்னும் கூடுதல் பிரியம் மழை மீது. எதிரில் பார்க்கும் எந்த மனிதரும் நேசிக்கக் கூடியவராய்த் தெரிகின்றனர்.



போக்குவரத்திற்கு திறந்துவிடப்படாத அந்த வட்டச்சாலையில் ஆங்காங்கே நடந்தும், ஓடிபடியும் மனிதர்கள். அவற்றில் பல முகங்கள் நன்கு பழகியவை. அதில் ஒருவர் எப்போதும் எனக்கு ஆர்வத்தைத் தூண்டுபவர். அவர் தன் நடைக்கு முன்போ பின்போ கையில் ஒரு சிகரெட்டோடு அமர்ந்திருப்பார். காலைப்பொழுதுகளில் சிகரெட்டோடு அவ்வப்போது நான் சந்திக்கும் ஒரே மனிதரும்கூட. மூன்று நாட்களுக்கு முன்பு ‘சிகரெட் வாங்க இந்தக் கடையில் விடு’ என வேண்டிய நண்பரிடம் ‘எப்ப சிகரெட்டை விடப்போறீங்க!” என்று கேட்டிருந்தேன். நண்பரிடம் கேட்டதையெல்லாம் பழகியிராத அந்த நபரிடம் கேட்டுவிட முடியாது. ஆனால் கேட்கும் ஆர்வமுண்டு. அந்த சாலைக்குள் நுழைந்ததும் தவிர்க்காமல் தேடும் முகம் அவருடையது. காரணம் அவரைக் கடக்கும்போதெல்லாம் மெல்ல புகை வழியும் சிகரெட்டை உறுத்துப் பார்ப்பதில் ஒரு வன்ம திருப்தி உண்டெனக்கு. வழக்கமாய் அவர் சிகரெட் புகைக்கும் இடத்தில் இன்றில்லை, அந்த இடத்திலிருந்து சில அடிகள் தொலைவில் ஒரு ரோஸ் நிற ஊதுபத்தி பை கிடந்தது. அது ஊதுபத்திப் பை எனத் தெரிந்ததே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் அடிக்குச்சிகளைப் பார்த்துத்தான். யார், எப்படி இங்கே தவறவிட்டிருப்பார்கள் எனும் சிந்தனைகளோடு சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தேன்.

நிமிடங்களும், எனக்கான தொலைவும் கரைந்தன. மீண்டும் அதே இடத்தைக் நெருங்குகிறேன். அவர் அமர்ந்திருக்கிறார். காற்றெங்கும் நறுமணம். திடுக்கிடலோடும் ஆச்சரியத்தோடும் நறுமணத்தை உணர்கிறேன். ஊதுபத்தி நினைவிற்கு வருகிறது. கிடந்த இடத்தின் அருகிலேயே சாலையோர ஈர மண்ணில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. வாசனையை உள்வாங்கியபடி காற்றின் வேகத்தில் புகையாய்க் கரையும் ஊதுபத்திகளைக் கவனித்தபடி கடக்கிறேன். ஊதுபத்திகளைப் பார்க்கும் என்னை அவர் உற்றுப் பார்க்கிறார். அவர்தான் கொளுத்தியிருக்க வேண்டுமென்ற நினைப்பில் அவரைப் பார்த்துப் புன்னகைக்கிறேன். ஆமாம் என்பதுபோல் மெல்லமாய் தலையசைப்பதுபோல் தோன்றுகிறது. என் புன்னகை பெரிதாகிறது. நட்பு பூத்த கணமென்றும் அதைக் கருதலாம். இந்த நிகழ்வுகள் யாவும் மழையும், மழையின் குளிர்வும் கொடுத்த கொடையென்றும் கருதியபடி தொடர்கிறேன். மழை இனிது என உலகம் கருதும் கோடானு கோடிக் காரணங்களில் இதையும் இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். புதிதாய் தன் பகுதிக்குள் வந்திருக்கும் முழுமையடையாத அந்த வட்டச் சாலையில் விரையும் ஏதோ ஒரு வாகனத்தில் சிக்கி, ஞாயிற்றுக்கிழமை காலை நாயொன்று சிதறிக்கிடந்த இடமும்கூட அதனருகில்தான். அதற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கிலும்கூட, இந்த ஈரப்பொழுதில் அந்த ஊதுபத்திப் பை யாரிடமிருந்தோ தன் தொடர்பை துண்டித்துக்கொண்டு விழுந்திருக்கலாம் என்பதுதான் அது.


கருத்துகளுக்குள் கருத்து இருக்கிறதோ இல்லையோ…. எல்லாச் செயல்களுக்குள்ளும் காரணங்கள் இருக்கலாம்தானே!?

May 17, 2017

கொடுங்கீற்றுகளை

வெயிலின் கொடுங்கீற்றுகள்
எதையும் யாம் மறுதலிக்கவில்லை
வீணடிக்கவில்லை
குறை பகிரவில்லை

இதோ வந்துவிடும்
எனும் நம்பிக்கைக்குள்
முடிந்து வைத்திருக்கும்
மழைப் பொட்டலத்திற்குள்தான்
புதைத்துக் கொண்டிருக்கிறோம்!

May 30, 2016

மோகம் கொண்டதொரு பெருமழை



மழைச்சத்தம் கேட்கிறது. சமீப மாதங்களில் காதில் விழும் முதல் மழையோசை. ஊரில் இல்லாத நாட்களில் இரண்டு முறை பெய்துபோன அடையாளங்களைப் பின்னர்தான் கண்டிருந்தேன். வாசலுக்குச் செல்கிறேன். மழை சிதறித் தெறிக்கும் அளவிற்கு இன்னும் பெய்திருக்கவில்லை. நனையும் திட்டம் ஏதுமில்லை. திட்டமிடுவதற்கான யோசனை கூட இல்லை. விரும்பி நனைந்த மழைகளைவிட, தவிர்க்க முடியாமல் நனைந்த மழைகளே அதிகம். மழை பேரிறைச்சலாய் சடசடத்தபடி இருக்கிறது. எதிர்வளாகத்திற்குள் காற்றுகேற்ப மழை ஆடுவது தெரிகிறது. சாலையின் மையத்திற்குச் சற்று விலகி ஒரு கார் நிற்கிறது. கண்ணாடிகளில் கருப்புத்தாள் ஒட்டப்படவில்லை என்பதால் மழை கழுவிய கண்ணாடியின் உள்ளே பளிச்செனத் தெரிகிறது. முன்னிருக்கையில் ஒரு பெண் சாய்ந்திருக்கிறார். மடிமேல் ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

பகல் மழையில் கண்ணாடிக்குள் இருப்பது அலாதியான அனுபவம். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பெண் மழையை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இருக்கலாம். குழந்தை துள்ளிக் கொண்டிருக்கிறது. தன் உடலை வளைத்து கழுத்தை மடக்கி மழைத் துளி அம்புகளாய்ப் பாயும் கண்ணாடியில் முகம் பதித்து தன் முகத்தில் மழைத்துளியை வாங்கிக் கொள்கிறது. அந்த அற்புதமான காட்சி, அந்த நொடியிலேயே எனக்கும் அப்படியொரு கண்ணாடி வேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகிறது.

இரவு மழையில் கார் பயணம் வாய்த்தால் முன்னிருக்கையில் அமர்ந்து, குனிந்து முகத்தை திருப்பி கண்ணாடியில் வைத்துப் பாருங்கள். விரையும் காரின் வெளிச்சத்தில் வந்து மோதும் மழைத்துளிகள் தரும் பரவசமும் பேரானந்தமும் வார்த்தைகளில் வெளிப்படுத்தவியலாதது. எங்கிருந்தோ இருளில் முளைத்து கணப்பொழுதில் கண்ணாடிக்கு வெளியே அம்பு போல் பாயும் மழையை நேரம் கரைவது தெரியாமல் ரசிக்கலாம்.

கண்ணாடியில் முகத்தின் மீது மோதும் மழை குறித்து மனக்காட்சிகள் விரியத் தொடங்குகையில் மழை சட்டென ஓய்ந்து போகிறது. ஏமாற்றத்துடன் திரும்புகிறேன். வெயிலற்ற பின் மதியப்பொழுதில் வேகமெடுத்து வந்திருந்த பெருமழையொன்று சற்று நேரத்திலெல்லாம் தன்னைச் சிறு மழையெனவாக்கி காணாமல் போயிருப்பதை நான் ஒப்புக்கொள்ள மறுப்பதெப்படி? யாரைத் தேடி வந்த மழையெனத் தெரியவில்லை. யாருக்கு அந்த மழை தேவைப்பட்டதென்றும் தெரியவில்லை. ஆனால் அந்த மழை விட்டுச் சென்றிருக்கும் உருக்கம், நீங்கள் எந்த மனநிலையிலிருந்தாலும் உங்களைப் பதம் பார்ப்பவை. கூடவே தார் சாலையிலிருந்து எழும்பிவரும் தேய்ந்த டயர் அழுக்குடன் மழை ஈரமும் கலந்த வாடை முகம் சுழிக்கவும் குமட்டலை ஏற்படுத்தவும் செய்பவை. செம்மண் நிலத்தின் வாசனை வேண்டுமென மனம் ஏங்குகிறது. நகரச்சாலை வாசனை மறுக்க மறுக்க நிரம்புகிறது.



காத்திருந்த காலத்தில், கணப்பொழுதில் ஓரப்பார்வை காட்டிவிட்டு கரைந்து போகும் மழை தரும் வெறுமையை உணர்தல் ஒரு கொடுமையான அனுபவம். எவருக்கேனும் அழவேண்டும் எனும் மனநிலையிருந்தால் அவர்களுக்கென பிரத்தியேகமான ஒரு சூழ்நிலையை அந்தச் சிறு மழை பரிசளித்துவிட்டுச் சென்றிருக்கிறது. அறையில் சூழ்ந்திருக்கும் கசகசப்பு உடலை அழுத்தமாய்ப் பற்றிக்கொண்டு விட மறுக்கிறது. முருங்கை மரத்தில் அப்பியிருக்கும் புழுக்களைப் போல் அதன் அழுத்தம். இன்னும் சொல்லப்போனால் உடல் முழுக்க மென் அசைவுகளோடு நெளியும் புழுவாய் இறுமாப்போடும், அழுத்தத்தோடும் அப்பியிருக்கிறது வெக்கை.

கோடை நாட்களில் தவிர்க்க முடியாத விருப்பம் மழையை வேண்டுதல்.  மழைக்கான அறிகுறிகளற்ற நாட்கள் வாழ்வின் மீதான நம்பிக்கைகளையே பதம் பார்ப்பவை. வெயில் தணிந்து மேகம் கறுத்து, மெல்ல காத்து வீசும் நாட்களில் வந்து பரவும் புதுநம்பிக்கை வாழ்க்கையில் பூக்கும் ஒரு அழகிய மலர். வருவதற்கான அனைத்துக் குறிப்புணர்த்தல்களையும் காட்டிய அந்த மழை வாராது போனாலும் கூட அப்போது பூத்திருந்த புதுநம்பிக்கையானது எளிதில் வாடிப்போகாத ஒன்று.

இன்றைய மழையோடு பிணக்குக் கொள்ள ஏதுமிருப்பதாக தோன்றவில்லை. எந்தச் செடியின் வேருக்கும் இந்த மழை தன்னைப் பங்கிட்டுக் கொடுத்திருக்காதெனினும் தலை துவட்டலாய் இலைகளை வருடியிருக்கலாம். ’எனக்கு வழியொன்றும் மறந்து போகவில்லை, வந்து போகும் உறவில்தான் இருக்கிறேன்’ என்பதை நினைவூட்டவும்கூட வந்திருக்கலாம்.

ஆழத்தோண்டும் கிணற்றில் ஏதோ ஒரு பாறை உடைவில் மெல்லத் தெரியும் ஈரமாய் இந்த மழை காட்சியளித்துப் போயிருக்கின்றது. வெம்மையில் கொதித்தடங்கும் உழுத செம்மண் நிலத்தின் வரிக்கோடுகளில் புள்ளி வைத்துக் கோலம் போட வந்தவளாய் மழையாய் கருதிக்கொள்கிறேன். செம்மண் தொட்ட கணத்தில் மேழும்பிய வாசனையொன்று, பிரியத்துக்குரியவரின் வாசனை போல் மனம் முழுக்க நிரம்புகிறது. மனதிற்குள் ஒரு சாரல் மழை தொடங்கியிருக்கிறது.

இனி மண் நனைக்க மோகம் கொண்டதொரு பெருமழை வருமென காத்திருக்கலாம்!

-

Nov 11, 2014

பெயர் சூடிடா மழையொன்று வந்திருக்கிறது





மழை வரும்போல்
இருக்கின்றது
இது எந்த மழையாக
இருக்கும்

முதற்சந்திப்பில்
மாடிப்படியொன்றில்
ரோஸ் நிற சுடியில்
ஆறேழு மழைத்துளிகளின்
தழும்பு சுமந்தபடி
இறங்கிய போது
வந்திருந்த மழையா!

சாக்லெட் இணைத்த
வாழ்த்து அட்டை தந்து
கரைத்துவிடுவதுபோல்
கண்களையே
பார்த்திருந்த பொழுது
திறந்த வாழ்த்து அட்டையிலிருந்த
பெயர் மேல் சொட்டியதே
அந்த மழையா!

தீபாவளி வாரமொன்றில்
பாட்டியின் நினைவில் நனைந்து
காய்ன் போனொன்றிலிருந்து
தேம்பிய பொழுது
சாரலாய் நனைத்ததே
அந்த மழையா!

அமாவாசை இரவொன்றில்
ரயில் நிலைய வழியனுப்பில்
உருட்டி மிரட்டிவிட்டு
ஏமாற்றிப்போனதே
அந்த மழையா!

ஆறு மணிக்குள் விண்ணப்பம்
அளிக்கவேண்டுமென
அவசரமாய் விரைந்த மாலையில்
ஆலமரத்தடியில் ஒதுங்கவைத்து
அடித்து மிரட்டி நனைத்து
அலைக்கழித்ததே
அந்த மழையா!

கடைசிச் சந்திப்பென்றானபின்
கொஞ்சம் மல்லிகை மட்டும்
வாங்கித்தாவெனச்சொல்லி
தலையில் சூடியபடி
வெளுத்த வானத்தைப் பார்த்து
இன்னிக்கு
மழை வந்திருக்கலாமென்றபோது
வராது போன அந்த மழையா!

இதிலெந்த மழையாகவும்
இல்லாமல் போனாலுமென்ன
கவிதையெழுதிய
இந்த தினத்தின்
மழையென்று
இருந்துவிட்டுப் போகட்டுமே!

-

Oct 27, 2014

சனியம்புடிச்ச மழ



மீண்டும் மழை. சரியாக இரண்டு நாள் வெட்டாப்பு. அடைமழைக் காலத்தில் மழை ஓய்ந்து கிடைக்கும் இடைவெளியை வெட்டாப்பு எனச் சொல்வோம். இந்த வெட்டாப்பு அழகியதொரு ஆசுவாசம். மழையற்றுக் கிடந்த ஊரில் பத்து நாளுக்கு மேல் தொடரும் அடைமழை ஒரு கட்டத்தில் அலுப்பூட்டத்தான் செய்கின்றது. யாரை அலுப்பூட்டுகிறது என்பதும் மிக முக்கியம். மழைக்குப் பழக்கப்பட்ட மலைப்பகுதி மனிதர்கள் நம்மைப்போல் ஒருபோதும் மழையை நிந்திப்பதில்லை. குறுகிய பாதையில் எதிர் சாரியிலிருந்து கடப்பவரோடு ஒரு இணக்கம் பாவிப்பது போல் மழையோடு இணக்கம் பழகுபவர்கள் அவர்கள்.

வெட்டாப்பு முடிந்து அமைதியாய்க் கிடக்கும் மதியப் பொழுதொன்றில் மழை வந்திருக்கிறது. பத்து நாட்களில் மனிதர்கள் மழையோடு சற்றே இணக்கம் கொண்டிடப் பழகிவிட்டார்கள். எவரிடமும் மழை குறித்து கடுகடுப்பும், எரிச்சலுமில்லை. நசநசனு பெய்யுதே எனும் அலுப்பில்லை. மாறாக மழையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளவும் வேடிக்கை பார்க்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

கட்டிட முகப்பொன்றில் மழைக்கு ஒதுங்கியிருக்கும் 25 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இரண்டு பெண் குழந்தைகளோடு அமர்ந்திருக்கிறார். வெள்ளை வேட்டி அணிந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் சுமார் இரண்டு வயதுதான் இருக்க வேண்டும். இரட்டைப் பிறவிகள் போலவும் தோன்றுகின்றனர். அவர் கால் நீட்டி அமர்ந்தபடி மடியில் ஒரு பெண்ணை கவிழ்த்துப் போட்டு அதன் முதுகில் கை போட்டிருக்கிறார். முதுகின் மேலிருக்கும் கையிலிருக்கும் கடிகாரத்தை மற்றொரு குழந்தை விரலால் குத்திக்கொண்டிருக்கிறது. படுத்திருக்கும் குழந்தை அந்த மற்றொரு குழந்தையிடம் இடைவிடாமல் உரையாடியபடி இருக்கிறது. மழை அடித்துப் பெய்கிறது. அவரிடம் மழை விடுமா விடாதா என்பது குறித்த தவிப்பேதும் தோன்றவில்லை. இரண்டும் அவர் குழந்தைகளாக இருக்குமா? அவர்களின் அம்மா எங்கே? ஒருவேளை அவருடைய சகோதரியின் குழந்தைகளாக இருக்குமா? குழந்தைகள் இரண்டும் மிக அணுக்கமாக அவரோடு விளையாடிக் கொண்டேயிருக்கின்றன. மொத்தத்தில் குழந்தையின் அம்மா எங்கே? இவர்கள் எங்கே பயணிக்கிறார்கள் எனும் கேள்விகள் மண்டையைக் குடைகிறது. அம்மாவோடு இருக்கும் இருக்கும் குழந்தைகள் குறித்து பொதுவாக இப்படியான பதட்டக்கேள்விகள் உருவாகுவதில்லை.

காற்றில்லாமல், சுழற்றிச் சுழற்றி அடிக்காமல் மண்மீது பிரியமாய் விழுந்து புரண்டு கரையும் மழை அழகினும் அழகு. சாலையில் அமைதியாய் ஆனால் அடர்த்தியாய் பெய்த வண்ணம் இருக்கிறது மழை. சாலையின் ஒரு பகுதியில் கோணல்மாணலான ஒரு அரை வட்ட வடிவத்தில் பெருந்துளிகளாய் விழுந்துகொண்டிருக்கிறது. வட்டத்தின் எல்லையில் தண்ணீர் மொத்தமாய் இருக்கிறது. எப்படி அரைவட்டம் எனக் கேள்வி வருகிறது. மேலே கிளை நீட்டிய வேம்பு. மரத்தில் மோதி இலை கிளை தழுவி வரும் துளி தடித்த உருவமாய் வருகிறது. மரத்தின் விளிம்பில் சீராக பெய்யும் மழையும், மரத்தடி மழையும் கூடும் இடத்தில் தண்ணீர் தடிமனாய்க் கரைகிறது.

சாலையில் கார்கள் மட்டும் சீறிக்கொண்டிருக்கின்றன. எப்போதாவது ஒரு பைக் செல்கிறது. மழை வருவதற்கு முன் மழையில் நனையலாம் என்றிருக்கும் பெருவிருப்பம், மழை வரும் நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து நிறைவேறாமல் போய்விடுகிறது. நிறைவேறவில்லை என்பதைவிட விருப்பமற்றே போய்விடுகிறது.

சேலையை சற்றே உயர்த்திக்கட்டிய ஒரு பெண் கையில் தூக்குப்போசியோடு, முதுகில் திராட்சைக்கொத்து போல் ஒரு பலூன் கொத்தினைச் சுமந்தபடி மழையில் நடந்து கொண்டிருக்கிறார். வித்தியாசமான காட்சியாய் இருக்கிறது. அடர் ரோஸ் வண்ண பலூன்களுக்கு மத்தியில் ஓரிரு வெள்ளைப் பலூன்கள் இருக்கின்றன. அவை தீபாவளிக்காக எதாவது ஒரு ஷோரும் முகப்பில் கட்டப்பட்ட பலூன்களாக இருக்கலாம். அந்தப் பலூன்களை எதிர்கொள்ளப்போகும் குழந்தைகளின் குதூகலம் ஒரு நொடி மனதில் வந்து போகிறது. அடர்த்தியாய் மோதும் மழை குறித்து எந்தத் தயக்கமுமற்று நடந்துகொண்டிருக்கிறார். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கெனும் பழமொழி அந்த பலூன் மீது மோதிச் சிதறும் துளிகளில் மின்னுகிறது.

எத்தனை வருடங்களுக்கு முன்பு இப்படியான அடைமழை இருந்ததென நினைவில்லை. மழைக்கும் அடை மழைக்கும் அழகிய வேறுபாடுண்டு. இது ஐப்பசியின் கொடை. அடைமழை என்பது மிகச்சிறிய வயது அனுபவமாக மட்டுமே நினைவிலிருக்குறது. இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் பேய்மழையாக அடித்து பாலங்களை உடைத்து நொய்யலில் கரை புரண்டோடிய நாளில்தான் கடைசியாகப் பெருமழையைப் பார்த்தது.

பொதுவாக மனிதர்கள் இதுபோன்ற மழைகளுக்கு பழக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் இந்த நிலம் எத்தனையெத்தனை மழைகளைக் கண்டிருக்கும். பொழிந்து தழுவியோடும் இந்த மழையை போன்றே எண்ணற்ற மழைகள் பெய்தோய்ந்திருக்கலாம், எனினும் இதுவொரு புது மழைதானே.

கிராமத்து சனம் ஒருவரையொருவர் எப்போது எங்கு சந்தித்துக் கொண்டாலும் முக்கியமாய்க் கேட்கும் கேள்வி “அப்புறம் ஊர்ல மழைங்ளா” என்பதுதான். நலம் விசாரித்தலின் மிக முக்கியக்கூறு இது. மழையை மட்டுமே நம்பி நிலம், நிலத்தை மட்டுமே நம்பி மக்கள் என இருந்த காலத்தின் அதி அவசியக்கேள்வி அது.

சிலபல ஆண்டுகளாகப் பருவம் தப்பி, பகிர்வில் பாதகம் செய்து வரும் மழை இந்த ஆண்டுதான் முறைப்படி தன் மடி திறந்திருக்கிறது. ஒரு இடத்தில் மழை பெய்யும், அதே நேரம் 500-1000 அடி தொலைவில் மழையின் சுவடற்றுக் கிடக்கும். நீளமாய்க் கிடக்கும் பத்து ஏக்கர் விளைநிலத்தின் ஒரு பகுதியில் மழை, மறு பக்கத்தில் மழையில்லை என்பது போன்ற வேடிக்கையான கொடுமைகளும் நிகழ்ந்ததுண்டு.



துவைத்த துணிகள் காய்வதில்லை. கடை வீதிக்குப் போய் வர முடியவில்லை. குழந்தைகளுக்கு சளி பிடிக்கிறது. சிலருக்கு காய்ச்சலும் வருகிறது. மழையென பள்ளிகளுக்கு திடீரென அறிவிக்கப்படும் விடுப்புகளால் ஏற்படும் குழப்பங்களாலான கடுப்பு. எங்கும் சேறும் சகதியுமாய் இருக்கிறது. பேருந்துகளில் ஒழுகுகின்றன. தாழ்வான பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் நிற்கிறது என்பது போன்ற சிற்சில சிரமங்கள் புறந்தள்ளக் கூடியவையன்றுதான்.

தண்ணீர் தேங்குகிறது, பெருவெள்ளம் பாய்கிறது என்பதற்குப் பின்னால் நாம் சாகடித்த ஏரி குளங்கள் விடுத்த சாபங்கள் அவை என்பதை வசதியாக மறந்துவிட்டோம். வீட்டில் உருவாகும் எல்லாக் குப்பைகளையும் கேரி பேக்கில் மூட்டைகட்டி சாக்கடையில் வீசியதையும் மறந்துவிட்டோம். ஐந்து - பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பேய்மழை அடித்தாலும் கூட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் பழக்கமில்லை. மழைக்காகிதம் எனும் அந்தக் கால ப்ளாஸ்டிக் காகிதங்களுக்குள் புத்தகப் பையை வைத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு கொட்டும் மழையில் வீட்டிற்கும் பள்ளிக்கும் சென்று வந்த தலைமுறைதான் நாலு துளி விழுந்தவுடனே டிவியில் ஃப்ளாஷ் நியூஸ் தேடுகிறது, ஆட்சியர் பிள்ளைகளுக்கு லீவு அறிவித்து விட்டாரா என்று.

பங்குனி சித்திரையில் வெயிலும் கொளுத்தக்கூடாது, மார்கழி தையில் குளிரும் மிதமாய் இருக்க வேண்டும். ஐப்பசியில் அடைமழையும் பெய்யக்கூடாது. வாழ்க்கை மட்டும் எப்போதும் சுகமாய் இருக்க வேண்டுமென்பதே பெரும் ஆசையாய் நமக்கு.

அறுபது எழுபது அடி ஆழம் என்பதுதான் கிணறுகளில் அதிகபட்ச ஆழாமாய் இருக்க, அதை வைத்து மட்டுமே எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்ட சமூகம், இன்று அறுநூறு எழுநூறு அடி ஆழத்திற்குப் போய் குடிப்பதற்காகக் கொஞ்சம் தண்ணீர் தேடுகிறோம். சில பகுதிகளில் ஆயிரம் அடி போர் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லையென்பது மிகச்சாதாரணம். அவ்வளவு ஆழத்தில் கிடைக்கும் நீரில் அந்த மண்ணுக்கே உரிய எந்த சுவையும் நாம் உணர்வதேயில்லை. ஒட்டுமொத்தமாய் ஒரே ஒரு சுவை சப்பென இருக்கும் உவர்ப்புசுவை மாத்திரமே. சபிக்கப்பட்டவர்களாய் மாறிப்போன நம்மை எப்போதாவதுதான் கனிந்த தன் முலைக்காம்புகளின் மீது இயற்கையன்னை புதைத்துக் கொள்கிறாள். பாக்கெட் பால் மட்டுமே சுவைத்த தலைமுறைக்கு நேரடியாய் தாய்ப்பாலைச் சுவைப்பதில் ஏற்படும் தடுமாற்றமும் ஒவ்வாமையுமே ”சனியம்புடிச்ச மழ… எப்பப்பாரு நொசநொசனு பேஞ்சுட்டே இருக்கு” என்பது.

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...