Nov 16, 2010

கானல் வரி - வாசிப்பு அனுபவம்

பிறத்தியாரின் நாட்குறிப்புகளையோ, கடிதங்களையோ வாசிப்பதில் ஒரு குரூரம் கலந்த ஆர்வம் இருக்கத்தானே செய்கின்றது. அதுவும் ஒருத்தியின் கணவனுக்கும், இன்னொருவனின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதல், அது நகர்த்தி நிறுத்திய காமம் என்பது குறித்த ஒரு பெண்ணின் கடிதத்தைப் படிக்க ஆர்வம் இல்லாமலா போய்விடும். அதுவும் ஒரு பக்கம் இரண்டு பக்கம் அல்ல…. அறுபது பக்கங்கள். ஒரு கடிதத்தை மூச்சு முட்ட தொடர்ந்து வாசிக்கும் வேகத்தோடு நகர்த்தி செல்கிறது கதை.

எந்தக் காதலிலும் காமத்திலும் இல்லாத குறுகுறுப்பை, ஆர்வத்தை ஒருவனின் மனைவி மாதவிக்கும், இன்னொருத்தியின் கணவன் மௌலிக்கும் இடையே நிகழும் இந்தக் காதலும், காமமும் கூடை நிறைய கொண்டு வந்து சேர்க்கிறது. விபச்சாரி(ரன்)கள் மேலும், அவர்களின் வாடிக்கையாளர்கள் மேலும் படியும் இகழ்ச்சியைவிட, திருமண பந்தத்திற்குள் ஆட்பட்டோர் பிறர் மேல் கொள்ளும் காதல் மேல், கூடுதல் இகழ்ச்சி மனோபாவத்தை மனதிற்குள் விதைப்பது என்னவோ ஆச்சரியம்தான்.



மாதவிக்கும், மௌலிக்கும் இடையே ஏற்படும் காதல் இன்றைக்கு இணையத்து மின் அரட்டைகளில் வழமையாக நிகழும் காதல்களின் ஒரு பிரதிதான். இந்தக் காதல்களின் அவசியம் என்னவென்று பார்த்தால், அவசியம் என்பதையும் தாண்டி மிக எளிதாக, மலிவாக கம்பிகள், காற்றலைகள் வழியே கிடைப்பது என்ற வசதிதான். ஒத்த சிந்தனை என்ற கண்ணியை தொடுக்கிறது. கிடைக்கும் நேரம், வாய்ப்பு, இனிப்பு தடவி தட்டச்சும் வார்த்தை, அடுத்தவன் மனைவி / கணவன் என்ற குறுகுறுப்பு, மிக எளிதாக தொடர்ந்து கண்ணிகளைக் கோர்த்து நீளச் செய்கிறது.

மாதவிக்கும், மௌலிக்கும் இடையே மிக எளிதாய்க் கிடைத்த வாய்ப்புகளே காதலிக்க வேண்டும் என்ற மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கி, துளி துளியாய் அதை நிரப்பிக் கொள்வது போல் ஒரு பிம்பத்தை கொடுக்கிறது. மாதவியின் கூற்றில் அந்த வெற்றிடம் மௌலியால் நிரம்பியதாகவே அறிவிக்கவும் செய்கிறது. காதலை மிதமிஞ்சிக் கொண்டாடுகிறாள், எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொடுத்த அதே காதல், எல்லையில்லா வலியையும் கொடுப்பதை மாதவின் தொடர் வார்த்தைகளில் அனுபவிக்க முடிகிறது.

மாதவி எழுதும் கடிதம் என்பதால், மாதவிக்குத் தெரிந்த மௌலி  மட்டுமே வரிகளில் வார்த்தைகளாக நிரம்புகின்றன. இந்தக் கதையின் (கதைதானே!) இரண்டு பாத்திரங்களும் கவிதைப் பித்து பிடித்த இரண்டு வலைப்பூ எழுத்தாளர்கள். எல்லோருக்குள்ளும் ஏற்படுவது போன்று ஒரு மரியாதையான அறிமுகத்தின் பின்னணியில் தொக்கி நிற்பது பாவனைப் பேச்சுகள். சில காரணங்களால் தற்காலிகமாக துணையைப் பிரிந்திருந்த இருவருக்குமிடையே இணையச் சிலந்தி ஈர வலையை பின்னுகிறது.

வேறு வேறு தேசங்களில் இருந்தாலும் சிலந்தி வலை இருவரையும் அருகருகே பிடித்துப் பிணைக்கிறது. வலையில் பிணைந்தவர்கள் வாழ்க்கையிலும் பிணைகிறார்கள். வெற்றிடங்கள் நிரம்பியதாக ஒருவருக்கொருவர் நம்புகின்றனர். திளைக்கத் திளைக்க காதல் பிணைப்பதில் மனைவிகள் / கணவர்கள் கண்டிப்பானவர்களாகவும், காதலிகள் / காதலன்கள் கனிவானவர்களாகவும் இருப்பது போல் இருவருக்குள்ளும் தோன்றுவதில் வியப்பில்லாமல் இல்லை. அவளுக்குள் அத்தனை சங்கீதம் நிரம்பியிருந்ததை அவன் தான் கண்டு பிடித்து மீட்டுகிறான்.  பல ஊர்களில் சந்திக்கிறார்கள், கொஞ்சம் சண்டை பிடிக்கிறார்கள், கூடலில் எல்லாச் சண்டையும் குலைகிறது. கூடல் காதலை கெட்டிப்படுத்துவதாக அவர்களை நம்ப வைக்கிறது. வழக்கம் போல்  கூடல்(கள்) காதலின் வர்ணத்தை நீர்க்கச் செய்கிறது.

ஆனாலும் காலம் தாழ்த்திப் புரிகிறது அன்பென்ற பெயரில் வதை செய்ததும் குரூரமாகத் துன்புறுத்தியதும். காலம்தானே எல்லாவற்றையும் உணர்த்துகிறது. அதேபோல் அதிர்ச்சியும் ஒளியும் இணைந்திருக்கும் மின்சாரம் போல் அவர்களுக்குள் அன்பும், வதையும் சேர்ந்திருப்பதை காலம் உணர்த்துகிறது.

ஆளுதல் என்னவென்று தெரியாமல் பெண்ணை ஆள நினைக்கும் ஆண் இனத்தின் பிரதியின் பலவீனம் வெளிப்படும் நேரமே, வெற்றுச் சந்தேக விதைகளை வளர்த்தெடுப்பது. பிறன் மனையை  விழையும் பேராண்மைக்கு(!) அவள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு நிகராக, அவளுடைய ஒழுக்கத்தின் மேல் அவ நம்பிக்கையை அவனின் மத்திய தர மனோபாவம் புகுத்தவே செய்கிறது. அதற்கு மாதவி வைத்திருக்கும் ஆண் நட்புகள் உரம் போடச்செய்கிறது. காலம் மாதவிக்கு மௌலியை காதலன் போலவும், விரோதி போலவும் பக்கங்களைப் புரட்டி வாசித்துக் காட்டுகிறது.

எல்லா நினைவுகளையும் இறக்கி வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வரையப்பட்ட கடிதத்தின் முதல் பக்கத்திலேயே முடிவு இப்படி இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும், யூகித்த முடிவே கடைசிப் பக்கத்தில் இருந்தாலும், ஏனோ மாதவியை உள்ளங்கையில் ஏந்திக் கொண்டு மிகுந்த வலியோடு, வதையோடுதான் கடைசிப் பக்கத்தைக் கடக்க முடிகிறது. வலியை முழுக்க உணரவைத்ததற்கு எழுத்தில் இருக்கும் ஈர்ப்பும், அந்நியத்தன்மையற்ற போக்குமே காரணம் என்று சொல்லலாம்.

பக்கங்களை நகரவிடாமல் வார்த்தைச் சிலந்தி சிறை பிடித்து தன் வலையின் கோடுகளில் கட்டிப்போடுவது போல் வாசிப்பை கனமாக்கிய புத்தகம். அடிக்கோடிட்ட பல வரிகளை மடித்து எழுதினால் அழகழகாய் கவிதைகள் பூக்கும் என்பது உண்மை. அதே அடிக்கோடிட்ட வரிகள்தான், அந்த இடத்தை கடக்க முடியாமல் சிந்தனைக் கிளைகள் பரப்புவதையும் மறுக்க முடியாது.

இது யாரும் அறியாத கதையோ, வித்தியாசமான கதையாகவோ சொல்ல முடியவில்லை. பெண்ணால், பெண் பார்வையில் எழுதப்பட்ட துணிச்சலான படைப்பு. மிக முக்கியமான ஒன்று வித்தியாசமான, சுவை மிகுந்த எழுத்து. எடுத்தால் கீழே வைக்க விடாமல் படிக்க வைப்பதில் தமிழ் நதி வென்றிருக்கிறார்.

புத்தகம் : கானல் வரி | ஆசிரியர் : தமிழ்நதி | வெளியீடு : உயிர்மை | பக்கம் : 79 | விலை ரூ.50

குறிப்பு: சாய்ந்த எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து நேரிடையாக  திருடப்பட்டவை

__________________________

Nov 14, 2010

பூவில் வழிந்த சுடு கண்ணீர்


ஆழித்தீ எரிய ஒரு சொட்டு
நெருப்பு போதாதா?
ஒற்றை வார்த்தையில்
ஆரம்பித்தது யுத்தம்

வார்த்தைகளைத் துப்பித் தீர்த்தது
எலும்பு நரம்பில்லா நாக்கு பீரங்கி
விழுந்த வார்த்தைகள் துள்ளிக்குதித்தன
அறுபட்ட பல்லி வாலாய்

செத்து விழுந்தது
அன்புத் தளிர்கள்
எரிந்து பொசுங்கியது
இதய நரம்புக் கற்றைகள்

தாலிக்கயிற்று பந்தமும்
தாம்பத்திய நூலும்  
நைந்து போனது சிற்சில
வார்த்தைகளின் சூட்டில்

வழக்கமான சண்டையென
டிவியில் நீந்திய குழந்தைக்கு
காதும் மனதும் மட்டும்
களவு போனது யுத்த களத்துக்கு

களவு போன காது
கண்களையும் கூடக் களவாட
உயிரும் உடலும் நகர்ந்தது
யுத்த களத்தின் மையத்திற்கு

சண்டை வேண்டாமென
சமாதானம் தேடிய பூவில்
வழிந்தோடியது கண்ணீர்
வழக்கமில்லா கடும் சூட்டோடு

ஓயாத சண்டை உக்கிரத்தை ட்ட
இரு கை கூப்பி இறுதியாய்ச் சொன்னது
”என்னைக் கொன்னுட்டு எந்தத்
தொந்தரவுமில்லாம சண்ட போடுங்க”

உதிர்ந்த ஒற்றை வரியின்
ஒரு சில வார்த்தைகளில்
ஒப்பந்தம் ஏதுமில்லாமலே
செத்துப்போனது யுத்தம்

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளைப்
பெற்றெடுப்பதாக யார் சொன்னது
பிள்ளைகள் பிரசவிக்கும்
பெற்றோர்கள் ஒன்றா இரண்டா!?

_____________

Nov 12, 2010

இருட்டு


பழகிச் சலித்த இடமெனினும்
கோரப்பல் கூரிய நகமென
எதையாவது மனக்குகையில்
நிரப்பித்தான் வைக்கிறது
புதிதாய் புகுந்தாளும் இருள்...

மெதுவாய் பாதம் பாவி
கலைக்காமல் கைகள் துழாவி
இருளில் சுற்றும் மாயப்பிசாசை
கண்கள் தின்று தீர்க்க
கரைகிறது அச்சக்குன்று...

இருளே ஆதியும் அந்தமும்
கருவறையோ கல்லறையோ
உடனிருப்பது இருளேயெனினும்
இடைவந்த வெளிச்ச மோகம்
இருளைத் தின்று வாழ்கிறது!

______________

Nov 10, 2010

மாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வு


காலவோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும் மனிதர்களைச் சந்திக்காத தருணம் என்று எதைச் சொல்ல முடியும். அப்படிச் சந்திக்கும் மனிதர்களில் ஒரு சிலர் நட்பாய் மனதோடு இருக்கமாய் ஒட்டிக் கொள்வதுண்டு. தொடர்ந்து ஓடும் ஓட்டங்களில் அப்படிப் பட்ட நட்புகளை அடிக்கடி சந்திக்காமல் இருந்தாலும் கூட, மனதை விட்டு அகலாமல் ஆணித்தரமாய் இருக்கும் நட்புகள். அப்படிப்பட்ட ஒரு நண்பன் திருப்பூரைச் சார்ந்த “சந்துரு”.

திருப்பூர் நகரை எதற்காக நினைத்தாலும் பளிச்சென மனதில் மின்னலடிப்பது சந்துரு என்ற அந்த நண்பன் தான். அவரோடு சேர்ந்து திருப்பூரில் சுத்தாத வீதிகள் இல்லை, போகாத பயணங்கள் இல்லையென்றே சொல்லலாம்.  எந்தவித தயக்கமும் இல்லாமல் புழங்கிய வீடு. அன்பால் பின்னிப் பிணைந்த கணவனும் மனைவியுமாய் என் குடும்பத்தோடு மிக நெருங்கிய உள்ளங்கள்.

திருப்பூர் நகரத்து சந்தடியில் பரபரப்பாய் தன் தொழிலில் இயங்கிக் கொண்டிருந்தவரிடம் எதேச்சையாய் ஒரு நாள் பேசும் போது திடீரென ஒரு வரி வீர்யமாய் வந்து விழுந்தது “கதிர், மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்”. ஒரு விநாடி என் காதில் விழுந்ததை சற்றும் நம்பாமல், திரும்பத் திரும்பக் கேட்டேன் “என்ன, உண்மையாவா?”

என்னால் நிச்சயமாக நம்ப முடியவில்லை. கிராமம் நாலுகால் பாய்ச்சலில் நகரத்தை நோக்கி ஓடி வரும் நேரத்தில், திருப்பூர் போன்ற தொழில் நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கிய பயணத்தையும், கிராமத்து தொழிலை நோக்கிய பார்வையையும் எண்ணும் போது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

கோவை சூலூருக்கு அருகே பண்ணை வேலைகள் ஆரம்பமானது, அடுத்தடுத்து அவ்வப்போது பேசும் நாட்களில் பண்ணை வேலைகள் குறித்து பேசுவதும், மாடுகள் வாங்குவது குறித்துப் பேசுவதும் என எங்கள் உரையாடல்கள் பண்ணை குறித்தே அதிகம் இருந்தது. கட்டிட வேலை, மாடுகள் கொள்முதல், கறவைக்கான கருவிகள், வாகனம் என முதலீட்டில் பாரத ஸ்டேட் வங்கியும் கை கொடுக்க இன்று சுரபி பால் பண்ணை மிக அழகாய் தன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலங்கள் கரைந்ததில் நகரத்துச் சாயல் படிந்த நண்பரின் கனவு மாட்டுப் பண்ணை மிக அழகாய் செழித்து நிற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடு வகைகள், திட்டமிட்ட வளர்ப்பு முறை, ஆரோக்கியமான தீவனம், மிகச் சிறந்த மருத்துவ கவனிப்பு என ஒரு நிபுணத்துவம் வாய்ந்த தொழில் முறையில் விவசாயம் சார்ந்த மாட்டுப் பண்ணை நவீனத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.

நகரத்துத் தொழில் நிமித்தம் சொகுசான வாழ்க்கை, சொகுசான பயணம் என்று சொகுசாய் வாழ்ந்து பார்த்த நண்பனை, இன்று கடிகாரத்தில் எழுப்பும் மணி வைக்காமலே அதிகாலை மூனரை மணிக்கு பண்ணைக்கு ஓடுவதை அறியும் போது ஆச்சரியமும், பிரமிப்பும் என்னைச் சூழ்கிறது. தினமும் காலையும் மாலையும் பண்ணை நிர்வாகம், பால் விற்பனை என சுழன்று ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.

மனம் விட்டுப் பேசும் நேரங்களில், ”எப்படி இதுல ஆர்வம் வந்துச்சு” என மனதைக் கிளறும் போது ”தினமும் மக்கள் பயன் படுத்தும் பொருளாக இருக்கவேண்டும், அதில் கலப்படம் இல்லாமல் மிகத் தரமாக கொடுக்க வேண்டும்” என்ற கொள்கையே இதற்குக் காரணம் உத்வேகத்தோடு பேசுகிறார். நேர்மையான, நல்ல வியாபாரக் கொள்கை கொண்டவரின் ”சுரபி பாலு”க்கு சூலூர் பகுதியில் மிகப் பெரிய வரவேற்பு மக்கள் தரத்தின் பொருட்டு அளித்திருக்கிறார்கள் என்பது விற்பனை முறையை உற்று நோக்கும் போது தெளிவாகிறது.

பண்ணையில் கறக்கும் பாலை மற்ற நிறுவனங்களுக்கு விற்காமல், நேரிடையாக தாங்களே கடைகள் அமைத்து நேரிடையாக விற்பதால் வாடிக்கையாளர் வரை தரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் கூறுகிறார். கூடவே தங்கள் பண்ணையின் பால் மட்டுமல்லாது, அருகிலிருக்கு விவசாயிகளிடமும் ஒப்பந்த அடிப்படையில் பால் கொள்முதல் செய்து தங்கள் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கிறார்கள்.


பண்ணை முகப்பு - பதிவர்கள் ஆரூரன், பழமைபேசி மற்றும் சந்துரு

பண்ணையில் சந்துரு

தீவனக் கலப்பு

கறவைக் கருவிகள்

உணவு, மருத்துவ திட்டமிடல் விபரங்கள்

நேர்த்தியான பண்ணை மற்றும் சிறந்த பால் விநியோகத்தைக் கண்டு பொதிகை தொலைக்காட்சி இவர்களுடைய பண்ணைக்கு நேரில் வந்து ஒரு கலந்துரையாடலை பதிந்து ஒளிபரப்பியது குறிப்பிடத் தகுந்தது. புதிதாய் பால் பண்ணைத் தொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு தன்னுடைய ஆலோசனைகளை மகிழ்ச்சியோடு தெரிவித்தும் வருகிறார். (தொடர்புக்கு: சந்துரு 98428-42049, e-mail : surabidairy@gmail.com)

பொருளீட்டுவது மட்டுமே நோக்கமாக இல்லாமல், பொருளீட்டுவதில் ஒரு நியாயத்தையும் கற்பிக்க நினைக்கும் ”சந்துரு” மற்றும் அவருடைய கனவுத் திட்டமான சுரபி பால் பண்ணை வளர்ந்தோங்கங்கட்டும்.

 ___________________________________________

Nov 5, 2010

தீபாவளியும் தீய்ந்த முறுக்கும்




வெய்யத்தாழ விறகடுப்புக்கூட்டி
விறகோடு விறகா 
விரல்களும் எரிய

இனிப்போ காரமோ
எண்ணைச் சட்டியில் விழும்
வியர்வைத்துளி ருசியோடு..
அத்தையைத் துணைக்கு வச்சு
அம்மாவும் பாட்டியும்
 

வெந்தும் வேகாமலும்
தீய்ந்தும் கருகியும்
சுட்டுச் சுட்டுப்போடும்
முறுக்கு, ஜிலேபி, லட்டுகளை

சுடச்சுடத் தின்று,
ஆறமர ஆறவைத்துத் தின்று
அக்கம்பக்கம் கொடுத்து
பாதிக்குமேல் பத்திரப்படுத்தி
பலநாள் தின்பதில்
ருசித்துக் கழியும்
தீபாவளி நோம்பி….

அடையாரோ
கிருஷ்ணாவோ
ஹால்திராம்ஸோ

வடிவாய் நறுக்கி 
வழவழ காகிதம் போர்த்தி
வண்ணப் பெட்டி
காற்றுப்புகா பையென
எடைபோட்டு வாங்கிவரும்
இனிப்பு காரங்களில்
தீய்ந்து போய்க்கிடக்கிறது
தீபாவளி ருசி!


_________________

Nov 2, 2010

போக்கத்த பொழப்பு


”நாந்தா, யென்ன பண்றது, எதப் பண்ணாலும் பொழைக்கத் தெரியாத போங்குன்னு சொல்றாங்க”

”மவராசனுங்களா, நீங்களே சொல்லுங்க, நானென்ன தப்பு பண்ணன்னு”

”எங்கப்பெ குடிச்சழிச்சது போவ மிச்சமுட்டதுல்ல எனக்கு ஒன்னேமுக்கா, தம்பிகாரனுக்கு ஒன்னேமுக்கான்னு, தண்ணிக்கு கொறைச்சல்லதா வயக்காடு.”

”கெணரு பொதுவுதான். ஆளுக்கொரு நாளைக்கு தண்ணி மொற, அவனுக்கு தெக்குப் பக்க பங்குல கொட்டாயி, எனக்கு வடவரத்துல., கொட்டாயிக்குப் பக்கத்துல தனித்தனியா பெரிய தொட்டி கட்டி, வூடு வாசல் கட்டுத்தரன்னு நல்லாத்தான் இருந்துச்சு”

எங்கம்மா செத்தப்பொறவு, அது வட்டிக்யுட்ருந்த காசுல, காரியம் கருமாதின்னு செலவு போவ தலைக்கு முப்பதாயரம் ரூவா வந்துச்சு”

அம்மாளுக்கு எரும வச்சு பாலூத்துறதுன்னா கொள்ள ஆச. தண்ணிப்பஞ்சம் இருந்த காலத்துல கூட கொடம்போட்டுக்கிட்டு அமுத்துப் பைப்புக்கு போயி தண்ணி கொண்டாந்து எருமய வளர்த்துச்சு. அதெல்லாம் ஒரு காலம். கடைசி காலத்துல எருமை ஒன்னு ஊட்ல இல்லீங்ற கவலையே பெருங்கவல அதுக்கு.,

செரி அம்மா காசு தானே அது நாவகார்த்தமா எரும வாங்கலாம்னு, சந்தைக்குப் போயி தலச்சன் கெடாரியா, கிட்டக்கி ஈனற மாதர, நல்ல செனையா ஒன்னு வாங்கியாந்தேன். சந்தைக்கு போயி புரோட்டா தின்னது, புரோக்கருக்கு கொடுத்ததுன்னு, வண்டியேத்தி கொண்டு வந்த செலவு வரைக்கும், முப்பதாயிரம் முடிஞ்சு கைக்காசு ஒரு ஆறுநூறு ரூவா செலவாயிடுச்சு”

பாக்குற விவசாயம் பத்தலைன்னு, பக்கத்துக்காட்டுக்கு அப்பப்ப கூலி வேலைக்கும் போன பொண்டாட்டிகாரி மொனகிட்டே கெடந்தா, இருக்குற பகுமானத்துல எரும வச்சு சம்பாதிக்ரையாக்கும்னு.

அம்மா மேல நம்ப பாசமா இருந்தானேன்னு, தம்பிக்காரன கேட்டேன்,
”தென்றா, நீய்மு எருமகிரும வாங்கறயா?”

அவன் அப்பவே சொன்னான், ”இல்லீணா நான் பிசுனசு பண்றேனு”

”அட என்றா பிசுனசுன்ன்னு” கேட்டதுக்கு

”இப்பவெலாம் சொல்ல மாட்டேன். சொன்னா நீ ஊரு முச்சூடும் போய்ச் சொல்லுவே, பொறுத்துப் பாரு, ஒரு வரசம் கழிச்சு, உம்பட எரும பெருசா, எம்மட பிசுனசு பெருசான்னுன்னான்”

நானும் மாட்டுத்தீவனம், தவுடு, பருத்திக்கொட்டை, வக்கிப்பில்லுன்னு வாங்கியாந்து வச்சுக்கிட்டு, காத்தாலயும், வெய்யத்தாழவும் எருமய வாய்க்கா வறப்புன்னு மேயவுட்டுக்கிட்டிருந்தேன்”



ரெண்டு நா கழிச்சு, தம்பிகாரனூட்டுக்கு மினிடோருல அஞ்சாறு பொட்டி வந்து எறங்குச்சு. கூடவே பளபளன்னு பிளாஸ்டிக் கேனு நெறையா எறங்குச்சு

மேய்ஞ்சிக்கிட்டிருந்த எருமய புடிச்சுக் கட்டிப்போட்டு, வெசையாப் போயி “”தென்றா இது”ன்னு கேட்டா, ”தண்ணி மெசின்னுனான்.”

”தண்ணிக்கெதுக்குடா மெசினு”ன்னேன்

“அட இதுல தண்ணிய சுத்தம் பண்ணிக் குடுத்தா லிட்ரக்கு ஒரு ரூவா கிடைக்கும்னான்”

மெசினு ஒன்னு நாலாயிரம் ரூவான்னு அஞ்சு மெசினும், பத்தாயிரம் ரூவாக்கு தண்ணிக் கேனும் வாங்கியாந்தானாம்.

”தென்னடா, நானு பாலு விக்கிலாம்னு இருக்கேன், நீ தண்ணி விக்கப்போறியா”ன்னு சொல்லிட்டு வந்தேன்.

மொதத்தடவ தண்ணிய போட்டு, குடிச்சுப்பாருன்னு கொண்டாந்து குடுத்தான். கொஞ்சம் ருசியாத்தான் இருந்துச்சு.

அடுத்த நாள்ல இருந்து டிவிஸ் வண்டீல அஞ்சஞ்சு கேணா கட்டிக்கிட்டு அப்ப்டியே காலணிப் பக்கம், பஞ்சாயத்தாபிஸ் பக்கம்னு நாலஞ்சு தடவ போய்ப்போட்டு போய்ப்போட்டு வந்தான்.

“தென்றா பண்றீன்”னதுக்கு, ”கால்னீல கேனு இரவதுன்னு வாங்ராங்ணான்னான்”

எருமைக்கு தண்டு நறுங்கிருச்சு, மேய்சலுக்கு புடிக்கிறதில்லை, எப்பவேணா கண்ணுப் போட்ரும்போல இருந்துச்சு.

முதல்ல ரெண்டு நட போனவன், இப்ப எடப்பட்ட நேரத்லியு ரெண்டு கேனு, மூனு கேனுன்னு வேற போயிட்ருந்தான்”

வெடிகாத்தால கெடாரிக்கன்னாப் போட்டுச்சு, நஞ்சு போட்டபொறவு, சீம்பால பீச்சி பாதிய காச்ச சொல்லீட்டு, மீதிய தம்பி கொட்டாய்க்கு கொண்டு போனா, புருசம் பொண்டாட்டிக்கு பேசக்கூட நெரமில்லாம கேனக் கழுவறதும், தண்ணி புடிக்றதும்னு கெடந்தாங்க.

செரி, ரெண்டு நாள்ல நல்ல பாலும் திரும்பீறும், நாமுளும் பால்காரனுக்கு ஊத்துனா படி இரவத்தஞ்சுக்குத்தான் போவும், கால்னீல ஊத்னா, முப்பது வெரைக்கும் போவும்ண்டு, சின்னவங்கிட்ட “டேய், ராசு கால்னீல ஆராவது பால் வேணும்னு கேட்டாச் சொல்றா”ன்னு வந்துட்டேன்.

மொதக்கறவைனாலும் காத்தால நாலு படி, பொழுதோட நாலு படின்னு கறவ பரவால்ல. கோழிகூப்ட எந்திருச்சு பாலப்பீச்சிட்டு, கட்டுதர சுத்தம் பண்ணீட்டு கேன எடுத்துக்கிட்டு கால்னீ சுத்தறதுக்குள்ளயே போழுது மேல வந்துறுச்சு.

அல்லாரும், எனக்கு குடு, உனக்கு குடுன்னு போட்டி போட்டுக்கிட்டு வாங்னாங்க.

”ஏனுங், தண்ணீக்காரக்கு அண்ணன்னு சொல்லி தண்ணி கலந்துறாதீங்னு ஒரம்மா சொல்லுச்சு”
இன்னொரம்மா, ”தண்ணீ, பாலுன்னு அண்ணனும் தம்பியும் நல்ல யாவாரந்தான்னு” பெரும பேசுச்சு

எல்லாம் இளிச்சிளிச்சு பேசுனாங்களே தவர காசு தர, வாரக் கணக்கு, மாசக் கணக்குன்னு இழுத்தடிச்சாங்க. தம்பிக்கார மட்டும் தண்ணிய வெச்சாப் போதும்னு காசுக் குடுத்துட்டாங்க

தலச்சன் கெடாரின்னாலும் பால் கறக்க மடி பூவாட்டம் நல்லாத்தான் இருந்துச்சு. நாலு மாசத்துல கெடா சேத்துனதுல்ல பயிராச்சு. செரியான நேரத்திக்கு செனப் புடிக்குதேன்னு சந்தோசப் பட்டப்பவே, கறவ வத்தாரம்பிச்சிடுச்சு, தீவனத்துல கொறச்சலில்ல, பாலு மட்டும் படி எட்லருந்து அஞ்சுக்கும் ஆறுக்கும் எடப்பட்றுச்சு. கால்னீல காசுக்கு இழுத்த ரெண்டு வூட்டுக்கு, இதச்சொல்லி பால நிறுத்த வேண்டியதப்போச்சு.

தம்பி சளைக்காம தெனத்திக்கும் தண்ணிக் கேனோட ஓடிக்கிட்டேயிருந்தான். கன்னும் பெருசாச்சு, கறவை ஒரு நேரமாச்சு, எண்ணி எட்டாவது மாசம் பாலு வத்திப்போச்சு. தீவனதுக்கும், தவுட்டுக்கும், முடிஞ்ச வெச்ச காச அவுத்து செலவு பண்றதாச்சு.

செரியா ஒரு வருசம் முடிஞ்சுது. சொன்ன மாதரயே தம்பிக்காரன் வந்தான்
”ஏண்ணா, இந்தக் கருமத்தவுட்டுப்போட்டு நீயும்தான் தண்ணி செமக்குறதுதானேன்னான்”

எனக்கு, கருக்குன்னுச்சு, “தேண்டா இப்டிச்சொல்றேன்னு” கேட்டா

சொல்றான் பாருங்க கணக்கு, ”மனுச மக்கா, பாலு வாங்காம காபி, டீத்தண்ணி குடிக்காம கூட இருந்துருவாங்க போல, தண்ணிக்கு அத்தன டிமாண்டுண்ணா, தெனத்திக்கும் 20-25 கேனு வச்சா 400-500 ரூவா கை மேல காசு வந்துறுது. நுப்பதாயரத்துப் போட்டு எனக்கு எல்லாச் செலவும் போவ மாசத்திக்கு பத்துன்னு சீட்டுப்போட்டதுல லட்சத்தி சில்றல சீட்டுப்பணம் இருக்குது…. எருமயக் கட்டிட்டு கெடக்றியே உங்க்ட்ட எவ்வளவு இருக்குது”ன்னு கேட்டான்

கருமாந்தரம் நானெங்க எழுதியா வெச்சேன். வாய்க்கணக்காப் போட்டுப்பார்த்தா, மொத்தமா பாலூத்துன காசு நாப்பத்தாஞ்சாயரம் கணக்கு வந்தது, மாட்டுத்தீவன மூட்ட, தவுடு வக்கிப்பில்லுன்னு போனதே நுப்பத்தஞ்சாயரம். இருக்குற கன்னு கெடாரிங்றதால ஒரு மூனு நாலுக்கு போவும். மேய்ச்ச கூலிக்கு வூட்டுக்குப் பாலும், காட்டுக்குச் சாணியும் கெடச்சது போவ முக்கி முக்கி கணக்குப்போட்டாலும் பத்தாயிரத்து மேல கணக்குல வரலையே,

”தென்றா கொடுமயிது, தண்ணிய புடிச்சு பாட்டல்ல அடச்சு குடுத்தா படி பாஞ்சு ரூவான்னும், கேன்ல வித்த இரவதுபடி இரவத்துஞ்சுன்னு வாங்றாங்க, விக்கரவன்னு லட்சத்தலயும் கோடிலயெல்லாம் சம்பாதிக்கலாமாட்ருக்குது. ஒரு சீவனக்கொண்டாந்து கட்டி வளர்த்து, ராத்திரி பகலா பராமரிப்புப் பண்ணி, சாணியெடுத்து, நோவு நொடி வரமா பாத்து, பச்சப் புல்லாப் போட்டு, தவுடு புண்ணாக்குன்னு வெச்சு, தின்னதயும், குடிச்சதயும் இரத்தமா ஊறவச்சு,  அதப் பாலா மாத்திக் கொடுக்றத, எட்டி ஒதச்சாலும் தாங்கிட்டு கறந்து கொண்டாந்து வித்தா, மிஞ்சர காசுல பிஞ்ச கோவணத்துக்கு மாத்துத் துணிக்குக்கூட பத்தாது போலன்னு” சொல்லிட்ருக்கும் போது, வூட்டுக்குள்ளருந்து இதெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த பொண்டாட்டிகாரி போன வேகத்துல கீழ கெடந்த மட்டைய எடுத்து எருமைய ரெண்டு சாத்து சாத்துனா, அவ அங்க சாத்துன சாத்து, பிஞ்ச சீமாத்த சாணியில நலச்சு என்ற மூஞ்சியில அடிச்ச மாதர இருந்துச்சுங்க..

”நாந்தா, யென்ன பண்றது, எதப் பண்ணாலும் பொழைக்கத் தெரியாத போங்குன்னு சொல்றாங்க”


***********************

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...