Showing posts with label நகரம். Show all posts
Showing posts with label நகரம். Show all posts

Jan 6, 2017

எச்சூஸ்மீ மிஸ்டர் முதுமை!

மனிதர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை நடத்துவது குறித்து இருக்கும் பயம், ஒரு கட்டத்தில் மெல்ல தம் மீது படரும் முதுமை மீதானதாகத் திரும்பி விடுகிறது. முதுமையை எதிர்கொள்ள அவர்கள் வைத்திருக்கும் இரண்டு வழிகள், ஒன்று தனக்கு வயதாகிவிட்டது என்பதை அடிக்கடி ஒப்புக்கொள்வதன் வாயிலாக அதையொட்டி ஏதேனும் சலுகையோ, பரிதாபமோ தேடிக்கொள்வது. மற்றொன்று, பல்வேறுபட்ட ஒப்பனைப் பொருட்கள், ஆடைகள் மூலமாய் தன் வயதை மறைக்கப் பிரயத்தனம் எடுப்பது.

இந்த அனுதாபம் தேடிக்கொள்ளும் முயற்சி, தன் இயல்பான வேகத்தைக் கூட்டி முதுமையை நோக்கி அவர்களை இழுத்துச் சென்று விடுகிறது. அறிந்தோ அறியாமலோ அதையே திரும்பத் திரும்பச் சொல்வதால், அவர்கள் விரும்புவதும் அதுவாகவே அமைகின்றது. ஒப்பனைகள் மூலம் இளமையாக தங்களை உலகுக்கு மட்டுமே காட்ட முயல்வதும்கூட ஒருவித ஏமாற்றுதானே!?. அது தற்காலிகமாக தன்னம்பிக்கை தருவதாகத் தோன்றினாலும், திடீரென ஒரு புள்ளியில் எல்லாவற்றையும் சட்டெனக் கலைத்து விடுவதாக, முறித்துப் போடுவதாக அமைந்துவிடுகிறது. அதிலிருக்கும் போலித்தன்மையே ஒரு கட்டத்தில் மிகப் பெரிய ஒவ்வாமையக் கொடுத்துவிடுகிறது.

இந்த இரண்டிலும் ஆட்படாத வெகு சிலரின் செயல்பாடுகள் மட்டுமே - வயதை மறைக்க முயலாமல், அனுதாபம் தேடாமல் - தன்னைக் கவ்வும் முதுமையை எதிர்கொள்ள மனம் மற்றும் உடலளவில் ஆரோக்கிய வழியில் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதாக இருக்கின்றன. அவர்கள் தங்களால் இயன்ற எல்லா வழிகளிலும் வயதை பொருட்படுத்தாமல் இருப்பதற்கான காரியங்களை மேற்கொள்ளத் துவங்குகின்றனர். இதன் மூலம் முதுமையை மறைப்பது அவர்களின் நோக்கமாக இருப்பதில்லை. முதுமையின் ஆளுமைக்கு எதிராகத் தங்களை வலுப்படுத்தி நிறுத்திக் கொள்வது மட்டுமே.

வயது கூடக்கூட இளமை தீர்வதையும்ம், முதுமை சேர்வதையும் மிக இயல்பாக நாம் உணர்கிறோம். நினைத்த மாத்திரத்தில் ஒரு இடத்தில் தாண்டிக் குதிக்கவோ, சட்டென ஒரு இடத்தில் ஏறிப் பார்க்கவோ, ஓடவோ, எதையேனும் இழுக்கவோ, தூக்கவோ தயக்கம் ஏற்படுகிறது. இப்படியான செயல்களைச் செய்கையில் உணரும் தடுமாற்றங்களை இளமை தீர்வதற்கான அறிகுறி எனக் கொள்கிறோம். ஆனால் எல்லாமுமே பயிற்சியில் சாத்தியம் என்பதையும், தொடர்ந்து பழகுவதை நிறுத்தும்போதுதான் பெரும்பாலும் அது இயலாததாக மாறுகிறது என்பதையும் மறந்து விட்டதும் இம்மாதிரியான முடிவுக்கு ஒரு காரணம்.





ன்னுடைய இளம் பருவம் முழுவதும் கிராமத்தில் - அதுவும் விவசாய நிலத்தில் இருந்ததால், எல்லாக் காலமும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உழைப்பைச் செலுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம் இருந்தது. பல சமயங்களில் ஆர்வத்தினாலும், சில நேரங்களில் நிர்பந்தத்தினாலும், விவசாயப் பணிகளில் ஈடுபடுவோருடன் இணைந்து சரி சமமாக நின்று கடினமான உடல் உழைப்பு வேலைகளைச் செய்த அனுபவம் உண்டு. கிராமங்களில் எல்லா வயதினரும் தங்களால் இயன்ற அளவு உழைத்தே தீர வேண்டிய நிர்பந்தம் இயல்பாகவே அமைந்த ஒன்று.

ஒரு கட்டத்தில் காலம் நகர்ப்புற வாழ்க்கைக்கு நகர்த்துகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பிள்ளையின் கல்வி எனும் காரணங்களை முன்வைத்து முழுதாய் நகரத்தின் பிடிக்குள் பிணைத்துக் கொண்டாயிற்று. எல்லாவிதமான பசபசப்புகளோடு நகரமும் தனக்குள் பிடித்து வைத்துக் கொண்டது. நகரம் வேறு மாதிரியான சுழற்சியை மிக சீக்கிரத்தில் கற்றுக் கொடுத்து விட்டது. வெயில் ஒத்துக் கொள்வதில்லை. மழை சிரமம் கொடுக்க ஆரம்பித்தது. குளிர் ஒவ்வாமையைக் கொண்டு வந்தது. இரவு பகல் எல்லாவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

பின்னிரவுப் பொழுது வரை ஊரும், வீடும் அடங்குவதில்லை. ஒன்பது மணிக்குள் ஒரு தூக்கம்தூங்கி விடுவோம் என்றிருந்த நிலை மாறி, ’சராசரியாக பத்து முதல் பதினொரு மணிக்குள் தூங்கினால் போதும்என்ற மனநிலையைத் திணித்து விட்டது. விடியல் ஐந்து மணியாக இருந்த காலம் மாறி, ஏழு மணிக்கு எழுவதொன்றும் ஆச்சரியமானதாக இல்லை. சில வீடுகளில் பிள்ளைகள் எழுந்து, குளித்து, உடையணிந்து, உணவு உண்டு பள்ளிக்குக் கிளம்பும் நேரத்திலும்கூட தந்தைகள் கூச்சமற்றுத் தூங்குவதை வெகு எளிதாகக் காணவியலும்.

நகரம் தந்திருக்கும் இன்னொரு மாய வாய்ப்பு, ஓய்வுக்கும் உழைப்பிற்கும் வித்தியாசம் இல்லாதது போன்றதொரு வாழ்க்கை முறையை அனுமதித்திருப்பது. வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என வாழ்க்கை சுருங்கச் சுருங்க, சொகுசு கூட ஆரம்பித்துவிட்டது. உடல் உழைப்பே இல்லாமல், உணவில் நேர்த்தி இல்லாமல், உறக்கத்தில் ஒழுங்கு இல்லாமல் ஒவ்வொரு வயதாகத் தீர்க்கும்போது, இரண்டு மடங்காய் உடல் குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் அச்சம் எழுகிறது. விளைவாகஇனிமேலாச்சும் எதாச்சும் செய்யனும்எனும் வரியை, ஆசையைச் சொல்ல ஆரம்பிக்கின்றோம். ஆனாலும் அப்படி எதாச்சும் செய்வது” ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அப்படி எதாச்சும் செய்யணும்’ என்ற முயற்சியில்தான் உடற்பயிற்சிக் கூடம் செல்வது, யோகா கற்றுக்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது, மிதிவண்டி ஓட்டுவது உள்ளிட்டவை தொடங்குகின்றன. இப்படியானவற்றைச் செய்யத் தொடங்கியவர்களில், தொடர்கிறவர்களைவிட கைவிட்டவர்களே மிக அதிகம் என்கின்றது வரலாறு.

தினசரி மதுபானக் கடைகளைத் தேடிச்சென்று, வரிசையில் நின்று, காசு கொடுத்து மது அருந்துபவர்களின் எண்ணிக்கையைவிட, காலைப் பொழுதில் விரைந்து எழுந்து, குறைந்தபட்சம் உடலுக்காக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எத்தனை வரி விதித்தாலும், விலையேற்றம் நிகழ்ந்தாலும், அது குறித்துக் கவலைப்படாமல் புகைப்பதில் மாயச் சுகம் உணர்பவர்களைவிட, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களுக்கு கவனம் கொடுப்பவர்களும், செலவு செய்பவர்கள் மிகக் குறைவுதான்.

எதைச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்எனக் கேட்பது எத்தகையதொரு நகைமுரண். ஒவ்வொரு முறையும் இரண்டரை அங்குல நாக்கு இன்னும் இன்னும்எனக் கேட்டு விடுகிறது. வருத்தப்பட்டு பாரம் சுமப்பதென்னவோ வயிறுதான். நாக்கின் அடிப்பகுதியைக் கடந்து விட்டால் ருசியை நாம் அறிவதில்லையெனும் தெளிவு வந்துவிட்டாலே, பசி தணிந்த பிறகும் ருசி தூண்டுகிறதே என்பதற்காக உணவுப் பண்டங்களை வயிற்றில் திணிப்பது குறைந்துபோகும்.

திரைப்படம், தொலைக்காட்சி, இணைய அரட்டைகள் என இரவுகளைக் கருணையின்றி கரைப்பது ஒரு வியாதியாகிப் போய்விட்டதுஅவையனைத்துமே சொல்லொணாச் சுகம் தரும் அடங்காப் போதையூட்டிகள். அந்தச் சுகமும், போதையும் நம்மைக் கிறங்கடிப்பவை. போகப்போக கூடுதல் அழுத்தத்தையும், அதிலிருந்து அச்சத்தையும் ஊட்டுபவை. ஆழ்ந்துபோய் சிக்கிவிட்டால் ஒருபோதும் அவை தம் அரக்கப் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க விரும்புவதில்லை.

முதுமையும், முதிர்வும் காலத்தின் கட்டாயம். அதை எவ்விதமும் மறுப்பதோ, புறக்கணிப்பதோ இயலாத ஒன்று. அதை அதன் போக்கில் அனுமதிப்பதென்பது எவ்வகையிலும் தவறானதோ, குற்றமானதோ இல்லை. ஆனால் அதை நம் சோம்பல், உணவுப் பழக்கம், வேறு ஒவ்வாத பழக்கம் ஆகிய காரணங்களினால் முன்கூட்டியே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதென்பது எந்த வகையில் நியாயமாகும்!?.

பொதுத்துறை நிறுவனமொன்றில் பணியாற்றும் என் நண்பரின் மேலதிகாரி ஓய்வு பெறும் வயதை நெருங்கி விட்டவர். ஆனால் ஒருபோதும் முதுமை ஆளுமை செய்வதை அனுமதிக்காதவர். ஆம், இன்றளவும் அவர் தினசரி 35 கி.மீ தூரம் ஓடுகிறார். அதுவும் காலணிகளின்றி வெறும் கால்களில். இளமையாக, திடகாத்திரமாக இருக்கும் பலரும் அருகிலுள்ள கடைக்குச் செல்வதற்குக்கூட வாகனங்களைப் பயன்படுத்தியே தீருவேன் என்ற அளவிற்கு சோம்பியிருக்கும் இக்காலத்தில் அறுபதுகளை நெருங்கும் ஒருவர் வெறும் கால்களில் தினந்தோறும் ஓடுகிறார் என்பது, பத்தோடு பதினொன்றெனக் கடந்து போகும் செய்தியன்று.

வயது கூடுவதை அனுபவிக்க நாம் கம்பீரமானதொரு உடலைத் தயாரித்து வைத்துக் கொள்வது எதனினும் முக்கியமானது. உடல் மீது நாம் செலுத்தும் எந்த வன்முறையையும் உடனடியாக உடல் புறந்தள்ளி விடுவதில்லை. ’இதில் ஏதேனும் நியாயங்கள் இருக்குமாஎன ஆராய்கின்றது. ஏதேனும் இருப்பின் ஏற்றுக்கொள்ள முனைகின்றது. ‘முடியவே முடியாது, கூடவே கூடாதுஎன்பதைத்தான் புறக்கணிக்க முடிவு செய்யும். முதலில் முரண்டு பிடிக்கும், பின் ஒத்துழைக்க மறுக்கும், இறுதியாக எச்சரிக்கை செய்யும், அதையும் மதிக்காவிட்டால் சிதைவைத் தொடங்கும்.

வழங்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையைச் செலுத்தும் லகான் பெரும்பாலும் நம் கைகளிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அதை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் மனமும், உடலும் நம்மோடு ஒத்துழைக்கும்.

உடலினை உறுதி செய்திட உதவும் செயல்களைத் தொடர்வோம். அப்படியேதும் இல்லையெனில் இப்பொழுதே ஏதேனும் ஒன்றைத் தொடங்குவோம். அதை புத்தாண்டின் உறுதிமொழியாய் பழகுவோம்.

இப்போதும், எப்போதும் உறுதியாக நம்புவது.... ‘நம்மால் இயலும்’!

-

நம்தோழி ஜனவரி 2017




Apr 2, 2014

ஊர்ப் பண்டிகை Vs விடுமுறை தினம்



கடந்த ஒரு வாரமாகவே வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஈரோட்டைச் சார்ந்த நட்புகளில் ஒருவரேனும் தினமும் ஈரோடு மாரியம்மன் குறித்து விசாரித்து விடுகிறார்கள். ”பண்டிகை எப்படிப் போகுது” எனக் கேட்கும்போது நல்லாப்போகுதுங்க என பொதுவாகச் சொல்லிவிட வேண்டியதாகிறது. 

 

ஊரைவிட்டு எவ்வளது தூரம் விலகியிருந்தாலும் உள்ளுர் பண்டிகைமீது அவரவருக்கு ஒரு பிரியம் ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றது. உள்ளூர் பண்டிகைமேல் கொண்டிருக்கும் பிரியம் சற்று சோபையான அழகுகொண்டது. ஒவ்வொரு ஆண்டு பண்டிகையும் ஒவ்வொருவித நினைவுகளை மீட்டித்தரும் சாத்தியங்களுண்டு

கல்லூரி காலத்தில் NSS-ல் இருந்ததால் மூன்று வருடங்கள் மாரியம்மன் கோவிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் கோவில் வளாகத்திற்குள் ஆண் காவலர்கள் வருவதில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெண் காவலர்களும், NSS மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனாலோ என்னவோ வரும் கூட்டத்திடம் எங்களுக்கு கொஞ்சம் கூடுதல் மரியாதை கிடைக்கும். மூங்கில் தடுப்புகள் வைத்து நிறுத்தி நிறுத்தி விட்டாலும் கட்டுக்கடங்காமல் பொங்கிப்பொங்கி கம்பத்தில் தண்ணீர் ஊற்ற வரும் கூட்டத்தின் வேகத்தைப் பார்க்கையில் மிரட்சியாக இருக்கும். இத்தனை பேர் ஊரில் இருக்கிறார்களா என அப்பொழுதெல்லாம் தோன்றும். தலையில் தீர்த்தக்குடம் வைத்து மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று பக்தியை வெளிப்படுத்த நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இருபது வருடங்கள் கழித்து இப்பொழுதும் அப்படியே இரவு பகல் காத்திருந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்திட கூட்டம் அம்முகிறதா எனத் தெரியவில்லை.

ஆளரவமற்ற EVN சாலையில் மூன்று மணியளவில் மின்வாரிய அலுவலக வாயிலருகில் காலை இருவர் நெருப்பிட்டு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். மார்கழி, தை மாதமாக இருந்திருந்தால் குளிர் காய்கிறார்களோ என நினைத்துக்கொள்ளலாம். இந்தக் கோடையில் என்ன செய்வார்களாக இருக்கும் என யோசிக்கும்போதே, மின்வாரிய அலுவலக கேட் முன்பக்கத்தில் கும்பலாக கெடாக்கறி அரிந்து கொண்டிருந்தார்கள். பெருந்துறை ரோட்டில் சக்தி சூப்பர் மார்கெட் தாண்டுகையில் ஒரு ஆட்டை வெட்டி ரத்தத்தை ரோட்டில் சிந்தவிட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லாம் மாரியம்மன் பண்டிகை மகிமை எனத் தோன்றியது.

ஈரோடு நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும், பிழைப்பின் பொருட்டு இங்கு நகர்ந்து குடியேறியவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமுண்டு. எவர் வீட்டின் முன்பு வாகனங்கள் நிற்கிறதோ, வீடுகளுக்குள் உறவுகள் இருக்கிறதோ, எங்கே கறிக்குழம்பு வாசனை வருகிறதோ அவர்களுக்கெல்லாம் இது பண்டிகை தினம். அப்படிப்பட்ட வீடுகளிலிருந்து அழைப்பும் வராமல், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்ட ஒரு தினத்தை வீடுகளுக்குள் முடங்கி டிவியோடு மல்லுக்கட்டுபவர்களுக்கு போர் அடிக்கும் அதிகாரப்பூர்வமில்லா ஒரு விடுமுறை தினம்.

ஆனாலும் இங்கு குடியேறியிருக்கும் வெளியூர் சனம் பெண்டு பிள்ளைகளோடு கோவில் கடைகளை வலம் வந்து, டெல்லி அப்பளம் சாப்பிட்டு ஓரளவு திருப்தியடைந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் பெரும்பான்மையான வீதி முனைகளில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியிருக்கும். இப்பொழுதெல்லாம் அவை குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால் கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும்.

இன்றைக்கு நான் ஆச்சரியமாக உணர்ந்தது, திருவிழா தினமான இன்று பிரப் சாலையின் ஒரு வழியில் பேருந்தை அனுமதித்திருந்ததுதான். அந்தளவுக்கு கூட்டம் குறைந்துவிட்டதா அல்லது போக்குவரத்தை சீராக பராமறிக்கும் அளவிற்கு திறனடைந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

ஈரோட்டிலேயே படித்து, ஈரோட்டிலேயே தொழில் செய்து, ஈரோட்டிலே வாழ்ந்து என வாழ்நாளின் பாதிக்காலம் ஈரோட்டிலேயே கடந்திருந்தாலும், இது எங்கள் ஊர் பண்டிகை என்ற உணர்வு ஏனோ வரவில்லை. மாதக்கணக்கில் கோலாகலாமாய் கொண்டாடப்பட்டாலும், விதவிதமான கடைகள் என சாலையோரம் நிரம்பியிருந்தாலும் கூட, இதைவிட ஒரே ஒரு நாள் நடக்கும் சொந்த ஊரின் மாரியம்மன் பண்டிகைமேல் சற்று கூடுதல் பிரியமும் உரிமையும் இருக்கின்றது. என்னைப்போல் ஊரைவிட்டு நகருக்குள் குடியேறியவர்களின் நிலை இருதலைக்கொள்ளி எறும்புதான். இங்கிருக்கும் திருவிழாவிலும் ஆத்மார்த்தமாய் ஒன்ற முடியாது. ஊரில் நடக்கும் திருவிழாவிலும் அந்த ஒரே ஒரு நாளுக்கு மட்டும் போய் முழுமையாக ஒட்டமுடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றியமைக்கிறது. மாற்றியமைக்கப்படுவதில் சில சிதைந்தும் போவதை மறுக்க முடியாது.

வங்கிப் பரிமாற்றங்கள், கட்டணங்கள் செலுத்துதல், எழுதுதல், வரைதல், பயணச்சீட்டு பதிதல் இப்படி எல்லாவற்றையும் கனிணியில், இணையத்தில் செய்து முடித்துக்கொள்ள நினைக்கும் இந்த தலைமுறைக்கு கடவுளின் அருளும் எதாவது ஒரு இணையப்பக்கத்தில் கிடைத்துவிட்டால் போதுமே என்ற மனோபாவத்திற்கு ஆட்படப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

-




Jan 29, 2014

எல்லா நாட்களும் ஒன்றேயல்ல!


ஒரு நாளை எப்படி கடக்கலாம் அல்லது கடத்தலாம்? ரசித்துக் கடத்தலாம், ருசித்தும் கடத்தலாம். இறுக்கிப் பிடித்துக்கொள்ளலாம், பிடித்து கசக்கி எறியலாம், உதாசீனப்படுத்தி ஒதுங்கி நின்றுகொள்ளலாம். எல்லாம் நம் கையில்தான். இசைவாய் உடனிருக்கும் சூழலின் கையிலும் கூட

மற்ற தினங்களுக்கு இருக்கும் நிறத்தைவிட ஞாயிறுகளின் நிறம் சற்றும் சோபையானது. இன்னும் இலக்கியத்துவமாய்ச் சொல்லவேண்டுமெனில் அந்த சோபை கொஞ்சம் கவித்துனமானது. சில ஞாயிறுகளில் நான் வாசல் தாண்டி படியில்கூட கால் வைத்ததில்லை. சனி இரவு கூடடைந்து திங்கள் காலை வெளியேறும் போதுதான் உணர்வேன் கிட்டத்தட்ட 36 மணி நேரம் ஒரு 500-1000 சதுரடி பரப்புக்குள் மூழ்கிகிடந்ததை. மாறாக சில ஞாயிறுகளின் 24 மணி நேரத்தின் 90 சத நேரத்தை பரபரப்பு விழுங்குவதுண்டு.

விருப்பத்தின் பேரில் சட்டென மேற்கொள்ளும் ஞாயிறு பயணங்களுக்கு எப்போதும் கூடுதல் புத்துணர்வுண்டு. ஒரு பெருநகரத்தின் விடுமுறை பரபரப்புக்குள் குவியும் மக்கள் மத்தியில் ஒரு பொழுதைத் தொலைப்பது வரமென்றே சொல்வேன். ஞாயிறுகளில் வீதிகளில் எதையாவது வாங்க அலைபவர்களுக்கு, தேடுபவர்களுக்கு மற்ற நாட்களின் பரபரப்பு இருப்பதில்ல. திங்கட்கிழமை வீதிகளில் சுத்துபவர்களுக்கு அந்த வாரத்தின் துவக்கத்தில் சுத்துகிறோம் என்பதோடு அந்த வாரத்தை எதிர்கொள்ளும் கனம் இருக்கும். வாரத்தின் மத்தியில் சுற்றுபவர்களுக்கு கடந்த நாட்களுக்கு நிகராக மீதி நாட்கள் மிச்சம் இருக்கும் பொறுப்பு இருக்கும். வார இறுதி நாட்களில் சுற்றுபவர்களுக்கு தீரப்போகும் வாரத்தின் இறுதி சுமூகமாய் கடந்திடவேண்டும் என்ற பதைபதைப்பு இருக்கும். ஞாயிறுகளில் வீதிகளில் சுற்றுவோருக்கு அப்படி ஒரு கனம், பொறுப்பு, பதைபதைப்பு இருப்பதில்லை.

எத்தனையெத்தனை முகங்கள். எத்தனையெத்தனை குறிப்புகள். எத்தனையெத்தனை உணர்வுகள். எத்தனையெத்தனை இறுக்கங்கள். எத்தனையெத்தனை தளர்வுகள். உரக்க மலையாளத்தில்சம்சாரித்துக்கொண்டிருக்கும் ஒருவன் சமீபத்தில் பார்த்த மலையாளப் படத்தை நினைவூட்டுகிறான். நமக்கு தேவையே இல்லாத பொருளுக்கு அல்லது அவசியப்படாத ஒரு பொருளுக்கு சாலையோர வியாபாரி வலிய வந்து, சிறிது தூரம் துரத்தி வந்தும் விலை சொல்கிறான்.  தேவையோ இல்லையோ ஆனாலும் பேரம் பேசுதலில் ஒரு சுகம். 850 ரூபாய் விலை சொல்லும் பொருளை 150 ரூபாய்க்கு வாங்கும் சாத்தியங்கள் சாமார்த்தியம்தானா எனத் தெரியவில்லை.


ஸ்கூட்டரில் அப்பாவின் பின்இருக்கையில் பின்பக்கமாய்த் திரும்பி அவர் முதுகில் தன் முதுகை சாய்த்துக்கொண்டு தன்போக்கில் காற்றில் ஓவியம் வரையும் குழந்தை விரல்களில் பிகாசோவின் மிச்சம் கொஞ்சம் ஒட்டியிருக்கலாம்.

புதிதாய் நுழையும் வீதியில் தேநீரோ, சிற்றுண்டியோ, மதுபானமோ வரிசையாய் இருக்கும் கடைகளில் எதுவெனத் தீர்மானிப்பதில் சற்றேனும் ஊசலாடுகிறோம். கடைகளிலிருந்து வெளியேறும் ஒரு சைனீஷ் அல்லது திபெத்திய முகம், அந்தக் கடை குறித்து ஒரு கணம் அந்நியத்தன்மையை ஏற்படுத்தி மெல்ல சமநிலைக்கு நகர்த்துகிறது.

சுடச்சுட இனிப்பும் காரமும் புளிப்புமாய் பலகாரம் சுடும் கடையில் ஒவ்வொன்றாய் வாங்கி ஆளுக்கொரு கை என நட்புகளோடு பசியாறுகையில் தொலைந்த பால்யம் மீண்டு வந்து காலைக் கட்டிக்கொண்டு ஏக்கத்தோடு அண்ணாந்து பார்க்கத்தான் செய்கிறது.

கடந்துசெல்லும் இளவட்டங்கள் எவரெரையோ நினைவுக்குள் மீட்டி விடுகிறார்கள். விதவிதமான ஆடைகளில் இணையாய் நகரும் இருபாலின நட்புகள் துள்ளல் மிகுவொரு கவிதையை நினைவில் கசியவிடுகின்றனர். காலம் மாறிப்போச்சு, அதற்கேற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்த முற்போக்கை மெல்லத் திணிக்கிறார்கள். நாமும் மாறவேண்டும் என்பது அவர்களைப் போன்றேயல்ல, அதை எதிர்கொள்ளும், ஏற்கும் மனோபாவத்திற்கு.

வித்தியாசமாய் முடி வெட்டு, உடை எனக் கடந்து போகின்றவன் தன்னை மீண்டும் பார்க்க வைக்கிறான். தலைமுடிக்கு தங்கநிற வரிகளால் சாயம் பூசிக்கொண்டு, விழியகற்றாமல் ரசிக்க வைக்கும் அழகியதொரு ஆடையில்எங்கிருந்தோ வந்து திடீரென பார்வைகளில் விழுந்து கடந்து கரைந்து ஏதோ கடைக்குள் செல்பவள் மனதை வாரிச்சுருட்டிவா பின்னால்!’ என வெறித்தனமாய் இழுத்துச் செல்கிறாள். அம்மாவின் கை பிடித்துத் தொங்கிக் கொண்டே கேள்விகளால் துளைக்கும் குழந்தையின் பரபரப்பும், பதில் சொல்ல அலுக்கும் அம்மாவின் அயர்வும் கவிதைதானே!

மதுபானச் சாலையொன்றில் மிதமான இசையும், ஒளியும் எதிர்பார்க்க அதற்கு எதிராய் அமையும் தருணங்களில் மனதைஇப்படியில்லை அப்படி மாறிக்கோ!’ என மெல்ல மெல்ல பதப்படுத்த வேண்டியதாய் அமைகிறது. அதிரும் ஒலியும், மௌனமாய் ஓடும் தொலைக்காட்சியும், மேசையில் கேரம்போர்டு வைத்து விளையாடிக்கொண்டு ஆணும் பெண்ணுமாய்,  மிடறுகளாய் பியரைச் சுவைத்துக்கொண்டு அக்கம்பக்கம் பாராமல் தம் நிலை மறந்துகொண்டிருப்பதும் ஒரு தவம்தான். ருசிக்க மறுத்திருக்கும் மதுவும், நம்மைப் பார்த்து ரசித்துக்கொண்டே, என்னைக்கொஞ்சம் ருசியேனும் அழைப்புக்கு மறுப்புச்சொல்வதும் தவம்தான்.

எல்லாமும் கிடைப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் தரும் பேரங்காடியொன்றின் மூன்றாம் மாடியில் நின்றுகொண்டு மாடிவிட்டு மாடி நகரும் படிகளில் சேரும், கரையும் மனித அலைகளில் 99 சதத்திற்கு மேல் 30க்குச் சற்றே முன்னும் பின்னும் இருப்பதாகவேபடுகிறது.

ஒரு வீதியில் 250 ரூபாய்க்கு கிடைக்கும் மதுபானம், பிறிதொரு சாலையின் மூன்றாம் மாடிக் கடையில் 680 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் அந்தக் கடையின் புகைக்கும் பகுதி கண்ணாடிக்குள் ஒரே சிகரெட்டை மாற்றிமாற்றிப் புகைத்தலோடு, முத்தமும் மோகமும் பகிரும் திபெத்திய முகப் பெண்ணையும், அவளைவிட இரு மடங்கு உயரத்திலிருக்கும் தென்னிந்த தொப்பை ஆணையும் சற்றேனும் பட்டிக்காட்டான் முட்டாய்க் கடைய பார்த்த மாதிரி பார்க்கலாம். 250 ரூபாய் பானத்தை 150 ரூபாய்க்கு விற்கும் ஒரு மொத்தவிலைக் கடையில் ஒரு வார்த்தைகூடப் புரியாத மொழியில் 50 வயது ஆளோடு சண்டையிட்டு அடித்துக்கொண்டு கட்டிப் புரளும் ஒரு 20 வயது ஆளை சற்றே மிரட்சியுடன் கடக்கலாம். வேறு வேறு நிறங்களைக் கொண்டதுதான் இந்த உலகம்.

சிக்னலில் மெல்ல நெளியும் டாடா இண்டிகா காரின் இருக்கைக்குப்பின் பொருட்கள் வைக்கும் பகுதியில், ஒரே மட்டத்திலிருக்கும், நான்கைந்து வயது குழந்தைகளை நிறுத்தியபடி, நகர்வதை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. ”அடப்பாவிகளா இப்படியாடா குழந்தைகளை வச்சிருப்பீங்க!” என்ற அதிர்வுகளைப் போக்கும்வண்ணம் நம்மைப் பார்த்து கை அசைத்து டாட்டா சொல்லும் அந்த மலர்களுக்கும் நமக்கு எந்த ஜென்மத்து உறவோ தெரியவில்லை! அதுவும் வலது ஓரமாய் இருக்கும் அந்தப் பெண் குழந்தை கண்ணாடிக்குள்ளிருந்து காற்றில் வீசும் முத்தத்திற்கு இணையேது.

எல்லா நாட்களுக்கும் இருபத்தி நான்கு மணி நேரம்தான். இரவும் பகலும் தான். ஆனால் எல்லா நாட்களும் ஒன்றேயல்ல!


-



வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...