Showing posts with label ஆண்டுவிழா. Show all posts
Showing posts with label ஆண்டுவிழா. Show all posts

Feb 15, 2020

உங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்


அன்பிற்கினிய கவிஞர் கலாபிரியா அவர்களின் அழைப்பில் பிப்ரவரி 13ம் தேதி தென்காசி, இடைகால் மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா விருந்தினராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. கவிஞர் கலாபிரியா அவர்களின் துணைவியார் திருமதி சரஸ்வதி அம்மாள் அந்தப் பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பள்ளியின் செயலராகப் பதவி வகிக்கிறார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் ஏ.ஆர்.எஸ் (எ) ஏ.ஆர்.சுப்பையா முதலியார் அவர்கள் 1969ம் ஆண்டு இந்தப் பள்ளியைத் துவங்கியிருக்கிறார். அவருடைய 109வது பிறந்தநாள் விழா தினத்தில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

ஆண்டு விழாவில் கலந்து கொள்வதையொட்டி, அன்று காலை மாணவர்களுக்கான பயிலரங்கு நடத்தலாமா எனக் கேட்டிருந்தனர். சரியென ஒப்புக்கொண்டிருந்தேன். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ராஜசேகரன் முழுவீச்சில் என்னோடு தொடர்பில் இருந்து, எப்போது அழைத்து விபரங்கள் கேட்டாலும் கொடுத்தார்.

முதலில் 10,11,12ம் வகுப்பில் உள்ள 600 பேருக்கும் ஒரே அமர்வாக நடத்தும் திட்டத்தை முன் வைத்தனர். பொதுவாக மூன்று வகுப்பையும் ஒன்றாக அமர்த்தி பேசுவதில்லை என்பதால் தனித்தனியாக வைப்பதையே பரிந்துரை செய்தேன். நேரமின்மை காரணமாக ஒன்றாகவே நடத்துவதாக முடிவு செய்திருந்தனர். புதன் இரவு அழைத்த தலைமையாசிரியர் இடப்பற்றாக்குறை காரணமாக 11,12ம் வகுப்பை பயிலரங்கில் அமர்த்தி, 10ம் வகுப்பை அருகாமை வகுப்பில் அமர்த்தி பேசுவதை மட்டும் கேட்க ஏற்பாடு செய்கிறோம் என்றார். நான் மறுத்து, முடிந்தால் அவர்களுக்கு மதிய அமர்வுகூட ஏற்பாடு செய்யுங்கள், வெறும் பேச்சு மட்டும் கேட்பது போல் வேண்டாம் என்றேன். மாலை ஐந்து மணிக்கு ஆண்டு விழா என்பதால் அதிலும் சிரமம் இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் பத்தாம் வகுப்பிற்கு மதிய அமர்வை உறுதிப்படுத்தினர்.

புதன்கிழமை தென்காசி நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருமலைக்கோவில் சென்று திரும்பி, தென்காசியிலேயே தங்கிவிட்டு, வியாழன் காலைதான் இடைகால் சென்றடந்தேன். பேருந்து நிறுத்ததில் கவிஞர் கலாபிரியா காத்திருந்து அழைத்துச் சென்றார். நடை தூரம் தான் அவர் வீடு. இரண்டாம் முறையாகச் செல்கிறேன். இது அவருடன் நான்காவது சந்திப்பு என நினைக்கிறேன். எழுத்து, வயது, நிலம் என மிகப் பெரும் இடைவெளி இருந்தாலும், மனதிற்கு மிகப் பிரியமான அருகாமையை உணர்த்தும் தந்தையின் நெகிழ்வும், தோழமையின் நேசமும் அவரிடமுண்டு. சென்றதும் சுவையான காஃபியுடன் அந்த நாள் துவங்கியது.

வீட்டின் மாடியில் விருந்தினர் தங்குவதற்கான அறை, அலமாரிகளில் அடுக்கப்பட்ட புத்தகங்களோடு வரவேற்கிறது. அறையில் விருந்தினர் வந்து தங்கினால் எதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும் என மிக நுணுக்கமாகச் செய்யப்பட்டிருந்த வசதிகளும், பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த பொருட்களும் உபசரிப்பின் ப்ரியமிகு இலக்கணம். அவருடைய வேனல், பெயரிடப்படாத படம் நாவல்களை அன்பளித்தார்.

நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளை முழுவதுமாக முடித்து, தயாராகி கீழே வரும்போது அண்ணன் அமல்ராஜ் காத்திருந்தார். ஒவ்வொரு வருகையிலும் எப்படியாவது சந்தித்து விடுகிறவர், நான் சந்திக்க வேண்டுமென பெரிதும் விரும்பப்படுகிறவர். சரஸ்வதி அம்மாவின் உபசரிப்பில் காலை உணவு முடித்து பள்ளிக்குப் புறப்பட்டோம்.



நிறுவனரின் சிலைக்கு மாலை அணிவிப்பு, மரக்கன்று நடுதல் ஆகியவை முடிந்து காலை மூன்று மணி நேர அமர்வு 11, 12ம் வகுப்பிற்கான அமர்வு இரண்டு மணி நேரம் சுமார் 400 பிள்ளைகளுக்கு நடந்தது. மதிய இடைவெளிக்குப் பிறகு 10ம் வகுப்பிற்கான அமர்வு இரண்டு மணி நேரம் சுமார் 200 பிள்ளைகளுக்கு நடந்தது.



பிள்ளைகளுக்கான ஒரே சிரமம் நிலத்தில் அமர வைக்கப்பட்டது என்பதைத் தவிர்த்து, இருக்கும் சாத்தியங்களை வைத்து மிகச் சிறப்பான, அர்ப்பணிப்பான ஏற்பாடு. இதற்காக பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட நிர்வாகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பள்ளியின் தலைமையாசிரியர், தலைவர் திரு.சுரேஷ், செயலர் திருமதி சரஸ்வதி, கவிஞர் கலாபிரியா, அண்ணன் அமல்ராஜ் ஆகியோரும் முதல் பயிலரங்கு அமர்வில் பங்கெடுத்தனர்.



மதிய உணவிற்குப் பிறகு இரண்டாவது அமர்வு நிறைவடைந்து மீண்டும் கவிஞர் இல்லத்திற்கு திரும்பி அவசரமாகக் குளித்து ஆடை மாற்றி ஆண்டு விழாவுக்கு தயாரானபோது, பாலபாரதி வருகை தந்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன்தான் கவிஞர் கலாப்பிரியா இந்த வீட்டிற்கு வந்திருந்தேன், தென்காசி நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே முக்கியத் துவக்கப்புள்ளி. அவருடன் உரையாடி மீண்டும் பள்ளிக்கு வந்தபோது, பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது.

காலை முதல் பள்ளியின் பெரும்பான்மை பிள்ளைகளிடம் பயிற்சியாளராக ஐந்து மணி நேரம் பேசியிருந்த சூழலில், தற்போது அவர்கள் முன்பு பேச்சாளர் பாத்திரம் எடுப்பது சற்று சவாலாகத்தான் இருந்தது. மேடைக்கு வரும்போது முதல் வரிசையில் அமர்த்தப்பட்டிருந்த 10ம் வகுப்பு மாணவர்களில் ஒரு தம்பி என்னை மறித்தான். மதிய நிகழ்வில் சிறப்பாக பங்கெடுத்த மாணவன்.

சார் எனக்கு ஒன்பதாம் வகுப்புல மார்க் எடுத்ததுக்கு ப்ரைஸ் கொடுப்பாங்க. அத நீங்கதான் கொடுக்கனும்என்றான். அப்படி கொடுப்பது என் கையில் இல்லையென்றாலும் சரியென்றபடி நகர்ந்தேன். மேடை ஏறிய பிறகும் சைகை மூலம் எனக்கு நினைவூட்டினான். (வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வடிவேலு சைகை காட்டிய காட்சி மனதில் நினைவுக்கு வராமல் இல்லை)

முதலில் நான் பேச வேண்டியிருந்தாலும், காலை, மதியம் பேசியிருந்ததால் மற்றொரு பேச்சாளரான முனைவர் சங்கரராமன் அவர்களை முதலில் பேசிவிடுமாறு வேண்டினேன். பயிலரங்குகளில் தொடர்ச்சியாக பேசி ஓய்ந்த பிறகு பெரு மௌனத்தை புசிப்பவன் நான். அது ஒருவகையில் ஓய்வாகவும், முக்கியமாக உரை தயாரிப்பு அவகாசமாகவும் தேவைப்பட்டது.



மாலை 6.45க்கு மேடை என் வசம் வர 7.15 மணிக்கு உரையை நிறைவு செய்ததும், பரிசு வழங்க அழைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிள்ளைகள் அழைக்கப்பட்டனர். அந்தப் பத்தாம் வகுப்பு மாணவனும் பரிசு வாங்க வந்தான். மலர்ச்சியோடு பரிசு கொடுத்து வாழ்த்தியபோது, வாங்கிய மகிழ்ச்சியோடு ‘உங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்’ என்றான்.

இரவு ஊர் திரும்ப நெல்லையில் ரயில் பிடிக்க வேண்டியிருந்ததால் உடனடியாக புறப்பட வேண்டியிருந்தது. தென்காசி சென்று அங்கிருந்து திருநெல்வேலி வரும் திட்டம். கலாபிரியா அவர்களும், பள்ளியினரும் அதை மறுத்து நெல்லையில் விடுவதற்காக கார் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், நெல்லை சந்திப்பில் இறக்கிவிட்டனர்.

உங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்’ இது திரும்பத் திரும்ப உள்ளுக்குள் தளும்பிக் கொண்டேயிருந்தது. வேறென்ன வேண்டும் ஒரு நாளின் நிறைவில். வென்றெடுத்த தினவும், மனத் திருப்தியும். அவன் வளர வேண்டும், காலம் துணை நிற்கட்டும்.


Dec 31, 2019

கே.ஜி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோபி - ஆண்டு விழா

இந்த ஆண்டின் நிறைவுக்கூட்டம், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அடுத்த ஆண்டின் முதல் கூட்டமாகவும் இதை பட்டியலில் இணைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

இதே டிசம்பர்-28ல் முதன்முறையாக பொதுத் தேர்வு மாணவர்களுக்கான பயிற்சியாளராக 2016ல் களம் இறங்கினேன். அதே டிசம்பர்-28ல்தான் 2017ல் இந்தப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராகப் பேசினேன். இந்த ஆண்டு அதே டிசம்பர்-28, அதே பள்ளியில் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன்.



கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆறு அமர்வுகளில் ஏறத்தாழ 50 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சியளித்த நிலையில், ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டபோது தயக்கமும், தடுமாற்றமும் இருந்தது. எனவே ஆண்டு விழாவில் பெற்றோர்களை என் இலக்காக வைத்துக் கொண்டேன்.



உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளி, திருவிழாவிற்கு வந்தது போன்ற மனநிலையில் குவிந்திருந்த கூட்டம் வித்தியாசமான அனுபவமே. மதியம் (Atal Tinkering Lab) ஆய்வகத்தை திறந்து வைத்தது முதல் பின்னிரவு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்வரை முழுவதும் பங்கெடுத்திருந்தேன். மாணவ, மாணவிகள் பலருடன் உரையாடும் வாய்ப்பும் அமைந்தது.

*

கோவையில் உயர்கல்வி பயின்று வரும், பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தாளாளரின் வழியாக என்னிடம் பேச வேண்டும் என வந்தார். #வேட்கையோடு_விளையாடு தொகுப்பின் வாசகி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். தமது ஏழு ஆண்டு கால கல்வி வாழ்க்கை குறித்து ஒரு சொல் தடுமாற்றமின்றி ஏறத்தாழ 40 நிமிடங்கள் பகிர்ந்துகொண்டார். அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிறைந்த மிகக் கனமான, சவாலான வாழ்க்கை. காலம் விடுத்த சவால்களை அந்தந்தப் புள்ளியில் வென்றெடுத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியால் படிக்க வைக்க முடியாது என்று கூறிய தந்தையை எதிர்த்து சண்டையிட்டு தமது கல்வியைத் தொடர்ந்திருக்கிறார். காலம் கடந்திருந்தாலும், அப்படி சண்டையிட்டது தவறோ எனும் குற்ற உணர்வு மட்டும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது.

சமூகத்தில் நல்ல அறிமுகத்தோடு இருக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த மகன், திடீரென விவசாயம் செய்கிறேன் என சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அப்பா மனம் ஒப்பாமல், அந்த முடிவை குறையாகக் கருதி ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்கிறார்.

உரையின் மையம், பிள்ளைகள் தாம் உருவாக்கிய சிறகுகளின் துணையோடு அவர்கள் விரும்பிய எல்லை வரை பறக்க அனுமதியுங்கள் என்பதும், பெற்றோர்களிடம் நல்ல கல்விக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சண்டையிடுங்கள் என்பதுவும்தான்.

அந்த மாணவி “பயங்கர குற்றவுணர்ச்சில இருந்தேன். இப்ப புரியவச்சிட்டீங்க தேவையானதுக்குத்தான் சண்ட போட்ருக்கேன். தப்பில்ல!” என்றும், அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் “அது பையனோட வாழ்க்கைங்க, அவன் விரும்பினதைத்தான் செய்துக்கட்டுமே, இனிமே அவனுக்கு சப்போர்ட் பண்ணப்போறேன்” என்றும் கூறியதே இந்த ஆண்டின் நிறைவில் எனக்குக் கிடைத்த பெரும் பரிசு என்பேன்.

22 வயதாகும் மகளுக்கு ‘கல்யாணம் பண்ணி வச்சுடுறேன் அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோ!’ என வற்புறுத்திக் கொண்டேயிருந்த ஒரு தாய், “இனி கல்யாணம்னு கட்டாயப்படுத்தப் போறதில்லை, மக விரும்பினதை படிச்சுட்டு வரட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்” என்றார்.

*



இந்த மாதிரி அனுபவங்களே என்னை #வேட்கையோடு_விளையாடு தொகுப்பு எழுத வைத்தது. கேஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் இரண்டு பேர் தொகுப்பின் இரண்டு கட்டுரைகளின் நாயகிகள் என்பது, அன்று வரை எனக்கும், நிர்வாகத்திற்கும், அந்த மாணவிகளுக்கும், புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட சிலருக்கும் மட்டுமே தெரியும். ஆண்டு விழா உரையில் அவர்களின் பெயர், அடையாளத்தைத் தெரிவிக்காமல் அவர்களையே உதாரணமாகக் காட்டிப் பேசினேன்.

கலை நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் மலர்ந்த முகத்தோடு “சார்.... நா......” என்று தன் பெயர் சொன்னபோது ஒருகணம் சிலிர்த்துப் போனேன். 2018ம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வகையில் கலங்கடித்தவள். இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கூட்டங்களில் அந்தப் பெண்ணை உதாரணமாக முன்னிறுத்திப் பேசியிருக்கிறேன். குட்டி உருவமும், கூர்மையான கண்கள் மட்டுமே நினைவில் இருந்தன. முகம், நிறம், அடையாளம் என எதுவும் நினைவில் இல்லை. வேறு எங்கேனும் சந்தித்திருந்தாலும் எனக்கு அடையாளம் தெரிந்திருக்க சாத்தியமில்லை. ஆயிரக்கணக்கானோர் இருந்த அந்த கூட்டத்தில் அந்த மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரும் இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு கலவையான ஒரு மனநிலையைக் கொடுத்தது.

புதிய தலைமுறையில் தொடராக எழுதியபோது, தொகுப்பாக வெளியான பிறகு என அந்தப் பெண் வாசித்திருந்தாலும், நாங்கள் இப்போதுதான் பேசுகிறோம், சந்திக்கிறோம். இருவருக்கும் இடையே இருந்த பரவசத்திற்கு நிகராக, ஒருவித கனமும் ஒளிந்திருந்தது. என்னை எளிதாக்குவது போல், “எங்க காலேஜ் சிலபஸ்ல உங்க கவிதை இருக்கு சார், அதில் கவிஞர்னு உங்களைப் பத்தி அறிமுகப்படுத்தும்போது, எனக்குத் தெரியும், என்னைப் பத்தியும் எழுதியிருக்கார்னு பெருமையா இருக்கும் சார்” என்றாள். என் குடும்பத்தை அறிமுகப்படுத்தி, செல்ஃபி எடுத்துக் கொண்டு, எண் கொடுத்து தொடர்பில் இரு எனச் சொல்லி விடை பெற்றேன்.

*

இந்த ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராக, ஈரோடு வாசலில் இருந்து மூன்றாவது கல்வி விளையாட்டு விழா வாய்ப்பாக பாலமுரளி பங்கெடுத்ததுவும் மகிழ்ச்சிக்குரியது.



அருமையான தருணத்தை வழங்கிய பள்ளியின் செயலர் திரு.சிவக்குமார், தாளாளர் திருமதி. உமா சிவக்குமார், என் மனைவியிடம் திருஷ்டி சுத்திப் போடுங்க என வாழ்த்திய நிறுவனத் தலைவர் திரு. வி.கே.சின்னசாமி மற்றும் நட்பிற்குரிய பள்ளியின் அனைத்து ஆசிரியத் தோழமைகளும் மிகுந்த அன்பிற்குரியவர்கள்.

2017ல் அறிமுகப்படுத்தியதோடு, இந்த ஆண்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் வெற்றிவேல், ஈரோடு வாசலில் இருந்து நிகழ்வில் பங்கெடுத்த தாளவாடி கேசிடி பள்ளி தாளாளர் முதல்வர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், சாஹர் மேல் நிலைப்பள்ளி முதல்வர் திருமதி ராதா மனோகரன், தம்பி மூர்த்தி மற்றும் முதன்முறையாக பங்கெடுத்த என் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...