“அடுத்த புக் எப்போ? புது புக் எதும் வந்திருக்கா?”
எனும் கேள்விகளைப் பலமுறை கேட்டிருந்த நிலையில்தான், வேட்கையோடு விளையாடு புத்தகம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்யும் தருணமும்
வந்தது. அதையொட்டி ஆண்டு நிறைவை ‘ஒரு தேநீர் சந்திப்போடு
கடந்தால் என்ன?’ எனத் தோன்றியது. உண்மையில் அதுவொரு
நன்றியறிவிப்புத் திட்டமும் கூட.
2018ல்
புதிய தலைமுறை கல்வி இதழ் தொடர் எழுத வாய்ப்பளிக்க, ஒவ்வொரு
வாரமும் எப்படியாவது(!) கட்டுரை கொடுத்தாக வேண்டும் எனும் நிர்பந்தத்தில்
மகாராஷ்ட்ரா பயணம் சென்ற வாரம் மட்டும் கட்டுரை கொடுக்க முடியாமல் போக, தொடர்ச்சியில் ஒரு வாரம் துண்டிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.
அப்போதே முயற்சி செய்திருந்திருந்தால், அந்த ஆண்டு ஈரோடு
புத்தகத் திருவிழாவில் வெளியிட்டிருக்கலாம். தொடர் பணிகளால் தாமதிக்க, நாட்கள் ஓடின, வாரங்கள் ஓடின... திரும்பிப்
பார்த்தால் மாதங்களும் ஓடியிருந்தன. டிசம்பர் முடியும் தருவாயில், ‘இப்போதும் வெளியிடாவிட்டால், இனி எப்போது?’ எனும் கேள்வி வந்ததால், அவசர அவசரமாக புத்தகத்
தயாரிப்பு நடந்து, 2019 ஜனவரி 6ம் தேதி
புத்தகம் வெளியானது.
நெருக்கமான
தனிப்பட்ட அனுபவங்களை, கொண்டு சேர்க்க வேண்டிய
இடங்கள் குறித்த சில தெளிவுகள் இருந்ததால், சொந்தப்
பதிப்பாகவே கொண்டு வர முடிவு செய்திருந்தேன். அச்சிட்ட புத்தகங்களை ஓரிரு
ஆண்டுகளில் விற்றுவிட வேண்டும் என நினைத்திருக்க, முப்பது
நாட்களில் 50% புத்தகங்கள், அடுத்த
ஐந்து மாதத்தில் மீதி 50% புத்தகங்கள் விற்பனை என,
2019ம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது இரண்டாம்
பதிப்பிற்குள் நுழைந்திருந்தது வேட்கையோடு விளையாடு. இரண்டாம் பதிப்பில் 80%
தீர்ந்துள்ள நிலையில் புத்தகத்தின் ஆண்டு நிறைவு வந்தது. இந்த
ஓராண்டு காலம் உடன் பயணித்தவர்களுக்கு, உதவியவர்களுக்கு
நன்றி செலுத்தும் முகமாகவே ஆண்டு நிறைவைக் கருதினேன், ஓரளவு
அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும், ஒரு புத்தகம் வெளியாவது
என்பது அவ்வளவுவொன்றும் பெரிய செயல் அல்ல. அனுபவம் இருப்பின் அடுத்தடுத்து
தலைப்புகளில் வெளியிட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்புறம் ஏன் ஒரு புத்தகத்தோடு
நின்று கொண்டு ஆண்டு நிறைவை கணக்கு வைத்துக் கொண்டாட வேண்டும்?
உண்மையில் #வேட்கையோடு_விளையாடு தொடர் முடித்த பிறகு இதுவரை பெரிதாக எதுவுமே எழுதவில்லை. எழுதியிருப்பதைத்
தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வேட்கையோடு விளையாடு ஒரு
குறிப்பிட்ட இடத்தை எட்ட வேண்டும் என்பதாலும், இருப்பவற்றைத்
தொகுக்கவோ, முனைந்து எழுதவோ முற்படவில்லை.
சரி...
ஆண்டு நிறைவு... எதற்காக...!?
எழுதிய
நான் கட்டுரைகளை எளிமையாக எடுத்துக் கொண்டிருந்தாலும்,
வாசித்தவர்களால் அது எடுத்துக்கொள்ளப்பட்ட விதம் வேறானது. மனதில்
கனத்துக் கொண்டிருந்த அனுபவங்களை, அவ்வப்போது சில வரிகளில்
சமூக வலைதளத்தில் இறக்கி வைத்துக் கொண்டிருந்த தருணத்தில், புதிய
தலைமுறை கல்வி ஆசிரியர் அண்ணன் பெ.கருணாகரன் தொடராக எழுத வேண்டினார்.
சில
வரிகளில் கடந்து போய்க்கொண்டிருந்த ஒன்றை முறைப்படுத்தப்பட்ட வடிவத்தில்,
அளவு திட்டமிட்டு எழுதுவது என்பது மனதிலிருந்து இறக்கி வைத்துவிடும்
ஆசுவாசத்தை மட்டும் தந்துவிடும் செயலன்று. அதுவொரு பணி. உதாரணங்களைத் தேடிக்
கோர்த்து, அவற்றை நியாயப்படுத்துவது. தானாய் வடியும்
எழுத்தல்ல, செய்யும் எழுத்து. செய்யும் எழுத்தை, அதிலிருக்கும் ருசிக்காகக் கொண்டாடப்பட்டாலும், வாசமற்ற
பூவின் மீது மல்லிகை வாசனையைத் தெளித்துவிட்ட மாதிரியும் சில நேரங்களில்
உணர்ந்ததுண்டு. முகர்ந்து பார்க்கிறவர்களுக்கு தெரியாமல் போனாலும்கூட, தெளித்து விட்டவர்களுக்குத் தெரியும்தானே!
புத்தகம் முதலில் நட்புகளின் கை சேர்ந்தது. கதிருக்காக
என வாசித்தவர்கள் மெல்ல கட்டுரைகளின் வழியே இறக்கி வைத்திருந்த என் அனுபவங்களையும்,
சில உதாரணங்களையும் தங்களோடு பொருத்திப் பார்க்க ஆரம்பித்தனர்.
அவற்றைப் பேச ஆரம்பித்தனர். அதன் வழியே, தான் கை சேரும்
எல்லைகளை மெல்ல வேட்டையாடத் தொடங்கியது. தங்களுக்கான எழுத்து எனக் கருதிய நட்புகள்
தன் வட்டத்தில் உள்ளோருக்கு புத்தகத்தை ஒரு பரிசுப் பொருளாக மாற்றினர். நட்புகள்,
அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் பரிசளிப்பதை
விருப்பத்தோடு செய்தார்கள். அதன் நிமித்தமாகவே, இரண்டாம்
பதிப்பில் பரிசளிப்பிற்கென இரண்டாம் பக்கம் தயாரிக்கப்பட்டது.
எட்டிய
இடமெல்லாம் நேசிப்பிற்குரியதாக வேட்கையோடு விளையாடு மாறிக் கொண்டிருப்பதை
உண்மையில் நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். மீள் வாசிப்பு குறித்த பகிர்வுகள்
பார்வைக்கு வந்தன. குழந்தைகள் வளரும் வரை பத்திரமாக வைத்திருந்து பரிசளிப்பேன்
என்ற இளம் அம்மா முதல், மூத்த வயதும் - துறை
அனுபவமும் கொண்டவர் ‘நான் முன்பே படித்திருந்தால் எங்கியோ
போயிருப்பேன்!’ எனக் கூறியது உட்பட ஆச்சரியமான கருத்துப்
பகிர்வுகள் அவ்வப்போது வந்து கொண்டேயிருந்தன. முகமறியாத சிலரின் அழைப்பு அதிர
வைத்தன. முதல் கட்டுரை உள்ளிட்ட சில குறிப்பிட்ட கட்டுரைகளை வாசித்துவிட்டு,
தன் பெயர் கேட்கக் கூடாது, தன் எண்ணை
சேமிக்கக்கூடாது என்கின்ற நம்பிக்கை வாக்குறுதிகளோடு மனதைக் கொட்டியவர்கள் உண்டு. ’படிக்க முடியலைனா செத்துடுவேன்’ எனும் மாணவி
தொடர்பான கட்டுரையை வாசித்துவிட்டு இனி குடிக்க மாட்டேன் என உறுதியளித்தவரும்
உண்டு.
’மிகுந்த
மன நெருக்கடியில் இருக்கிறேன், மனநல ஆலோசகரைச் சந்தித்தேன்.
உங்களிடம் பேச முடியுமா!’ எனச் சொன்னவரிடம் மட்டுமே நானாக
வலிந்து, ’இந்த புக் ட்ரை பண்ணிப் பாருங்களேன்’ என முதன்முறையாக ஒரு தீர்விற்கான வாய்ப்பாக பரிந்துரை செய்தேன். அதையும்
அவர் ஒரு விற்பனை நிலையத்திலிருந்து இணையத்தின் வழியேதான் வாங்கினார். எந்தக்
கட்டுரை, எந்த வரி அவருக்கான தீர்வாக இருக்குமென்றெல்லாம்
எனக்குத் தெரியாது. அதற்கு பொருத்தமான புத்தகமும்கூட கிடையாதுதான். 150 ரூபாயில் என்ன இழந்துவிடப் போகிறார், ஒருவேளை
ஏமாற்றம் தந்தால், அதையும் ஏற்றுக்கொள்வோம் என்ற
நினைப்பிலேயே பரிந்துரை செய்தேன். நானே நம்ப முடியாத மாற்றங்களை அவருக்கு
கட்டுரைகள் தந்திருந்தன.
இந்தப்
புத்தகம் தன்னம்பிக்கை வழங்குவதாகவோ, முன்னேற்றத்திற்கான
உந்துதலைத் தரும் புத்தகமாகவோ அடையாளப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக
இருந்தேன். என் அனுபவங்களைத் தம் அனுபவமாகக் கருதுவோரை சற்று சிந்திக்க வைக்கவோ
அல்லது சிந்தனையில் இருந்து மற்றொரு முனைக்கு இழுத்து விடவோ செய்தால் போதும்
என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது. அவ்விதமாகவே பெரும்பாலும் கருதப்பட்டது.
புத்தகம்
குறித்து வரும் பல்வேறு கருத்துக்களை முழுவதும் நம்பத் தொடங்கினேன். அதற்கென தனியே
தொடங்கப்பட்டிருந்த வேட்கையோடு விளையாடு ஃபேஸ்புக்
பக்கத்தில் கருத்துகள் யாவையும் பகிரப்பட்டன. குறிப்பாக ஜெயலலிதா காளீஸ்வரன்
அவர்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏறத்தாழ, கட்டுரை அளவில்
விமர்சனம் எழுதத் தொடங்கியதெல்லாம் வித்தியாசமான அனுபவம். அவற்றையே ஒரு தொகுப்பாக
கொண்டுவரலாம் போல் தோன்றுகிறது.
எனக்கு
நினைவு தெரிந்து, யாரிடமும் கருத்துக்களை
கேட்டுப் பெற்றதில்லை. ஒரிருவரைத் தவிர, படி என யாரையும்
வலியுறுத்தியதில்லை. அன்பின் நிமித்தம் மிகச் சிலருக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள்
பிரிக்கப்படவேயில்லை என்பதையும் அறிவேன். மிக எளிய கணக்குதான், பிரித்து படித்திருந்தால் தொடர்பு கொண்டு பேசியிருப்பார்கள்.
புத்தகம்
வெளியாகி ஓராண்டினை நிறைவு செய்யும் தருணத்தில், கல்லூரி
மாணவ, மாணவியர்களிடமிருந்து தொடர்ச்சியாக வரும் கருத்துகள்
இன்னொரு பக்கம் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. வாழ்வின் மிகக் கடினமான
தருணங்களை மிகக் குறுகிய காலத்தில் கடந்ததை ஒரே மூச்சில் நாற்பந்தைந்து நிமிடங்கள்
பேசி, நிறைவாக இப்போது தனிமையின் தோழனாக வேட்கையோடு விளையாடு
இருக்கிறது என முடித்தது அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த
ஒரு ஆண்டில் வேட்கையோடு விளையாடு புத்தகத்திற்கென்று பிரத்யேக விமர்சனக்கூட்டம்
எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதற்கான சூழலும் அமையவில்லை. திருவையாறு நகரில்
நான்கு புத்தகங்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் மட்டுமே வேட்கையோடு விளையாடு இடம்
பெற்றிருந்தது. தனித்த விமர்சனக்கூட்டம், அறிமுகக்கூட்டம்
என்பது குறித்து யோசனைகளும் எழவில்லை. ஆனால் நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டு
நிறைவைக் கொண்டாடத் தோன்றியது.
அதற்கான
எளிய அழைப்பிதழ் ஒன்று நிகழ்வு திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 48
மணி நேரம் முன்பாக ஃபேஸ்புக், ட்விட்டர்,
வாட்சப் வாயிலாக பகிரப்பட்டது.
எவ்வளவு குறுகிய கால அவகாசம் எனினும்,
ஒரு நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்யலாம் எனும் தைரியத்தை ஈரோடு
வாசல் அமைப்பு தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது. வேட்கையோடு விளையாடு
குறித்து பேச விரும்புவோர் பெயர்கள் கேட்டிருந்தேன். ஏழு பேர் முன் வந்தனர்.
சிறப்பு விருந்தினர், சிறப்பு பேச்சாளர் என்று தனியே
திட்டமிடவில்லை. இந்த ஏழு பேரும் விரும்பிய வண்ணம் பேசட்டும் என்பதே எண்ணம்.
அழைப்பிதழில்
குறிப்பிடப்பட்டிருந்த ஜனவரி 5ம் தேதி மாலை 5.30
மணிக்கு சரியாக நிகழ்வு துவங்கியது. நட்புகள் காதர், ப்ரவீணா, கவிஞர் கோவை சசிக்குமார், மாணவி ஸ்ரீநிதி கார்த்திகேயன், பேராசிரியர் விஜி ரவி,
ஜேஸி. தென்றல் நிலவன், ராஜி ஆகியோர் புத்தகம்,
கட்டுரைகள் குறித்து தொகுப்பாகவும் தனித்தனி அனுபவங்களாகவும்
பேசினார்கள்.
* நண்பர்
காதர் மிக முக்கியமான தருணத்தில் தன் நட்பு குடும்பத்தில் மரணத் தருவாயில்
இருந்தவரிடம் கொடுத்து, அவர் மகன் வாசித்து மாற்றம்
கண்டிருந்ததைக் குறிப்பிட்டு பேசி, மனம் கனக்கச் செய்தார்.
* ப்ரவீணா
கனமான தருணமொன்றில் புத்தகம் பேசும் குறிப்பிட்ட ஒரு விசயத்தை தான் உண்மையில்
உணர்ந்து கடந்து வந்தது குறித்து பேசினார்.
* கவிஞர்
சசிக்குமார் புத்தகம் குறித்து சுமார் பத்து நிமிடங்கள் பேசுவதற்காக
கோவையிலிருந்து வந்திருந்தார். இத்தனைக்கும் நாங்கள் இதற்கு முன்பு சந்தித்ததுகூட
இல்லை. சில மாதங்களுக்கு முன்பு புத்தகம் கிடைக்கப் பெற்றிருந்தவர், அதை வாசித்துவிட்டு என்னிடம் பேசியிருந்தார். இந்த நிகழ்விற்காக பயணித்து
வந்து நெகிழச் செய்தார். புத்தகம் குறித்த தம் கருத்துக்களை மிக அழகாக எடுத்து
வைத்தார்.
* ஸ்ரீநிதி
கார்த்திகேயன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. சமீபத்தில் ஒரு பள்ளி ஆண்டு
விழாவில் திடீரென என்னைச் சந்தித்து சில கேள்விகளால் அதிர வைத்தவர். மிக
முக்கியமான ஒரு கேள்விக்கு என்னோடு இருந்த நண்பரும் பள்ளி முதல்வருமான
சுரேஷ்குமார் அவர்களைக் கோர்த்துவிட்டு தப்பித்ததெல்லாம் வேறு கதை. அதன்பிறகுதான்
ஸ்ரீநிதி நண்பர் கார்த்திகேயன் அவர்களின் மகள் எனத் தெரிய வந்தது. இந்த நிகழ்வில்
அவரும் பேச விருப்பம் தெரிவித்து, மிக அழகாகவும் பேசினார்.
தம் வயதில் இருப்போருக்கு புரியும்படி சொற்களை எளிமைப்படுத்தி எழுதவும் எனும்
வேண்டுகோளையும் வைத்தார்.
* பேராசிரியர்
விஜி ரவி வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தம் வகுப்புகளில் கட்டுரைகளில்
இருக்கும் உதாரணங்களைக் கொண்டு சேர்ந்ததைப் பகிர்ந்தார். அவருடைய துறையில் பயிலும்
இரண்டு பேர் என்னிடம் நட்பு பாராட்டவும் காரணமாக இருப்பவர்.
* ஏற்கனவே
ஐந்து பேர் புத்தகத்தை தலைகீழாகப் புரட்டியிருந்த நிலையில், தான்
நினைத்த பலவற்றையும் சுட்டிக்காட்டிவிட்டார்களே என்றபடி திருச்செங்கோட்டிலிருந்து
வந்திருந்த நண்பர் தென்றல் நிலவன் புத்தகம் குறித்துப் பேசினார்.
* இறுதியாக
ராஜி தன்னுடைய சமீபத்திய உரை நிகழ்வுகளுக்கு புத்தகம் தூண்டுதலாக இருப்பதைச்
சுட்டிப் பேசினார்.
பட்டியலில்
இருந்த பேச்சாளர்கள் முடித்ததும், நிகழ்விற்கு
வந்திருந்தவர்களில் விருப்பம் இருந்தவர்கள் பேசத் தொடங்கினர்.
* தம்
மகனின் தூண்டுதலால் #வேட்கையோடு_விளையாடு புத்தகங்களை தம் நட்புகளுக்கு பரிசளித்ததாக ஜனார்த்தன சேனாபதி கூறினார்.
* நண்பர்
சதீஷ், ஆசிரியர் ரவி முத்து ஆகியோர் என்னோடு கொண்டிருந்த
நட்பைச் சுட்டிப் பேசினார்கள்.
* கருங்கல்பாளையம்
நூலகர் ஷர்மிளா அவர்கள், புதிய தலைமுறை கல்வி இதழில் வெளியான
காலத்தில் வாசித்த நினைவுகளைப் பகிர்ந்தார்.
* கொங்கு
கலை அறிவியல் கல்லூரி முன்னாள் தாளாளர் திரு.இளங்கோ அவர்கள் கல்லூரி ஆசியர்கள்
அனைவருக்கும் பரிசளித்தது குறித்தும், அணிந்துரை வழங்கியது
குறித்தும், புத்தகத்துடனான தமது நெருக்கமான பிணைப்பு
குறித்தும் விரிவாகப் பேசினார்.
* தொடர்ந்து
தம் மாணவர்களுக்கு புத்தகத்தைப் பரிசாக வழங்கிவரும் ஜப்பானிய மொழி பயிற்றுவிக்கும்
பயிற்சி மைய நிர்வாகி தம்பி குமார், புத்தகத்தை பரிசளிப்பதன்
முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
* நண்பர்
ஜேஸி. நந்தகுமார் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரும் தம் கருத்துகளைப்
பகிர்ந்து கொண்டார்கள்.
* நிறைவாக
நண்பர் ஆரூரன் அவர்கள் ஆழமானதொரு நிறைவுரை வழங்கினார்.
* அண்ணன்
மருத்துவர் சோமு அவர்கள் பாடல் ஒன்றை பாடி மகிழ்வித்தார்.
* நிகழ்விற்கு
முன்னதாக முதல் அன்பாக, சிங்கப்பூரில் இருக்கும்
முத்துக்குமார்-ஜெயசுதா தம்பதியினரின் மகள் ஜீவந்திகா காணொளியில் பேசிப்
பகிர்ந்திருந்தார். சிங்கப்பூர் தமிழில் அழகியதொரு அங்கீகாரம் அது.
முதலாம்
ஆண்டு நிறைவினைக் கொண்டாட அரங்கு அளித்ததோடு நிகழ்வின் சிறப்பிற்கு பெரிதும்
காரணமாக அமைந்த நூலகர் திருமதி ஷீலா மாரப்பன் அவர்களும்,
நூலகப் பணியாளர்களுக்கும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.
ஒரு
புத்தகத்திற்கு எதற்கு ஆண்டு விழா எனும் கேள்விகளுக்கெல்லாம்,
நிகழ்வின் மகிழ்வில் பதில் கிட்டியதாய் மனது நிரம்பியிருக்க,
அடுத்த அன்புப்புயல் ஈரோடு வாசல் குழுமத்தில் துவங்கியது. வாசல்
வாசிக்கிறது எனும் வெற்றிகரமான திட்டம் எங்களிடம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தத்
திட்டத்தில் 2019ம் ஆண்டு முழுக்க ஏறத்தாழ 40-50 பேர் தலா 30-50 புத்தகங்கள் வரை வாசித்து, வாசித்த புத்தகம் குறித்து ஒவ்வொரு வாரமும் தம் கருத்தை குரல் பதிவாக
பகிர்ந்து வருகின்றனர். அதே பாணியில் வேட்கையோடு விளையாடு குறித்து சிறப்பு
பகிர்வொன்றினை பகிருமாறு மலர் செல்வம் அவர்கள் கேட்க, பகிரப்பட்ட
சில கனமாக பதிவுகள் நிறைய யோசிக்க வைத்தன.
* வாசல்
குழுமத்தில் அப்துல் ஹக்கீம் புத்தகம் குறித்து பாராட்டு சாசனம் வாசித்தார்.
* அதைத்
தொடர்ந்து சகோதரி யசோதா அவர்கள் தன்னை யோசிக்க வைத்த புத்தகத்தின் மிக முக்கியப்
புள்ளியைப் பகிர்ந்திருந்தார்.
* நண்பர் சக்திவேல்
அவர்கள் முதல் கட்டுரையில் நெகிழ்ந்ததைப் பகிர்ந்தார். கூடுதல் சிறப்பாய் 143
பக்கம் என்பதை பேரன்பின் அடையாளமாய் குறிப்பிட்டிருந்தது அழகியல்.
* மஞ்சு
கண்ணன் புத்தகத்தில் இருந்து, தன்னை தேடத்
தொடங்கியிருப்பதையும், முன்பே கிடைக்கவில்லை எனும் ஏக்கத்தையும்
பகிர்ந்தார்.
* பேராசியர்
அன்புமணி அவர்கள் தம் தாளாளர் வழியே புத்தகம் தன்னை வந்தடைந்தது தொடங்கி, நட்பாகி இன்று வாசலில் இணைந்தது வரையிலான பயணத்தை குறிப்பிட்டார். மிக
ஆச்சரியமானது புத்தகத்தில் இடம் பெற்றிருந்தவர்களை கூகுளில் தேடி முகம் பார்த்தது.
* தம்பி
கோடீஸ்வரனின் விமர்சனப் பார்வை எனக்குப் பிடித்திருந்தது. கட்டுரையின்
பாத்திரங்கள் எதை நோக்கிப் போகிறது என்பதைத் தேடிக் களைத்து, ஒருகட்டத்தில் நத்தை உதாரணத்தின் வழியே உள்நுழைந்து பின்னும் முன்னும்
பயணித்ததை தெளிவாக பகிர்ந்திருந்தார்.
* நிகழ்விலும்
பிறகு இங்கும் ஈரோடு காதர் அவர்கள் பகிர்ந்த, புத்தகத்தால்
நண்பர்கள் இருவருக்கு ஏற்பட்ட அனுபவம் மிகுந்த நெகிழ்வாக இருந்தது.
* வாசலில்
இந்த பகிர்வுகளுக்கு முன்னெடுத்ததோடு, தனக்குள் நிகழ்ந்த
மாற்றங்கள் குறித்து மலர் செல்வம் அவர்கள் பகிர்ந்ததை ஆச்சரியம் பதிந்த மனதோடு
கேட்க முடிந்தது. ஒரு காலத்தில் அவருடைய உரை கேட்க தேடிப் பயணித்தது நினைவிற்கு
வந்து போகின்றது.
* புத்தக
வெளியீடு அன்று கட்டுரையில் இருக்கும் தமது மாணவியுடனான வாசிப்பு அனுபவம்
குறித்துப் பேசி நெகிழ வைத்திருந்த தாளாளர் உமா சிவக்குமார் அவர்கள், மீள் வாசிப்பிற்கான புத்தகமாக இதைத் தொடர்ந்து கருதுவதாகக் கூறியதை
பெருமைக்குரியதாக கருதுகிறேன்.
* தம்பி
தனபால், இந்த புத்தகம் சேர்ந்திருந்த இடங்கள் குறித்து
பேசியதோடு, சேர வேண்டிய இடங்கள் குறித்துப் பேசியது யோசிக்க
வைத்திருக்கின்றது. விரைவில் அதற்கான ஒரு திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறேன்.
நிறைவாக...
அலையலையாய் வந்து மோதும் மற்றும் சூழும் பாராட்டுகள் அனைத்தும் மொத்தமாக என்னை மட்டுமே சாருமா...!? நிச்சயம் கிடையாது!
அலையலையாய் வந்து மோதும் மற்றும் சூழும் பாராட்டுகள் அனைத்தும் மொத்தமாக என்னை மட்டுமே சாருமா...!? நிச்சயம் கிடையாது!
ஒரு பக்கத்தில் குவிந்து கிடந்த உண்மைகள்,
உதாரணங்கள், அனுபவங்கள் மற்றும் பார்த்தது ,
கேட்டது, உணர்ந்தது என என் கை சேர்ந்ததை
குறிப்பிட்ட அந்த ஆறு மாத காலத்திற்குள் சொற்களால் சூடி இறக்கி வைத்ததைத் தவிர,
வேறொன்றும் நான் பெரிதாக செய்துவிடவில்லை. ஒருவகையில் அந்தக்
கட்டுரைகள் எனக்கான விடுதலைக் களம்.
கட்டுரைகள் குறித்த பாராட்டுகள் அனைத்தும்,
அந்தக் கட்டுரைகளுக்குள் இருக்கும் உண்மை உதாரணங்களின் தலையில் கை
வைத்து தடவி வாழ்த்துவதாக மட்டுமே பகிர்வோரின் அருகில் நின்று நானும் ப்ரியமாய்
கருதிக் கொள்கிறேன். மிக முக்கியமாக அந்தக் கட்டுரைகளில் அடையாளம் தெரிந்தும்
தெரியாமலும் இருக்கும் மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி
நிறுவன நிர்வாகிகள் மற்றும் உதாரணங்களில் உயர்ந்தோங்கி நிற்கும் பல ஆளுமைகள்,
சாதனையாளர்கள் அனைவருக்கும் பங்குண்டு. மிக முக்கியமாக என்னை எழுத
வைத்த புதிய தலைமுறை கல்வி இதழுக்கும் பங்குண்டு.
அனைவரின்
அன்பிற்கும் தலை வணங்குகிறேன். கண்ணாடி போல் நின்று, நிகரான
ப்ரியம் தோய்ந்த அன்பை பிரதிபலிக்கவே விரும்புகிறேன். தொடர்ந்து பயணிப்போம்.
*
No comments:
Post a Comment