கடந்த ஒரு வாரமாகவே வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும்
ஈரோட்டைச் சார்ந்த நட்புகளில் ஒருவரேனும் தினமும் ஈரோடு மாரியம்மன் குறித்து விசாரித்து
விடுகிறார்கள். ”பண்டிகை எப்படிப் போகுது” எனக் கேட்கும்போது நல்லாப்போகுதுங்க என பொதுவாகச்
சொல்லிவிட வேண்டியதாகிறது.
ஊரைவிட்டு எவ்வளது தூரம் விலகியிருந்தாலும் உள்ளுர் பண்டிகைமீது
அவரவருக்கு ஒரு பிரியம் ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றது. உள்ளூர் பண்டிகைமேல் கொண்டிருக்கும்
பிரியம் சற்று சோபையான அழகுகொண்டது. ஒவ்வொரு ஆண்டு பண்டிகையும் ஒவ்வொருவித நினைவுகளை
மீட்டித்தரும் சாத்தியங்களுண்டு
கல்லூரி காலத்தில் NSS-ல் இருந்ததால் மூன்று வருடங்கள் மாரியம்மன்
கோவிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதெல்லாம்
கோவில் வளாகத்திற்குள் ஆண் காவலர்கள் வருவதில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெண் காவலர்களும்,
NSS மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனாலோ என்னவோ வரும் கூட்டத்திடம்
எங்களுக்கு கொஞ்சம் கூடுதல் மரியாதை கிடைக்கும். மூங்கில் தடுப்புகள் வைத்து நிறுத்தி
நிறுத்தி விட்டாலும் கட்டுக்கடங்காமல் பொங்கிப்பொங்கி கம்பத்தில் தண்ணீர் ஊற்ற வரும்
கூட்டத்தின் வேகத்தைப் பார்க்கையில் மிரட்சியாக இருக்கும். இத்தனை பேர் ஊரில் இருக்கிறார்களா
என அப்பொழுதெல்லாம் தோன்றும். தலையில் தீர்த்தக்குடம் வைத்து மணிக்கணக்கில் கால் கடுக்க
நின்று பக்தியை வெளிப்படுத்த நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இருபது வருடங்கள்
கழித்து இப்பொழுதும் அப்படியே இரவு பகல் காத்திருந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்திட
கூட்டம் அம்முகிறதா எனத் தெரியவில்லை.
ஆளரவமற்ற EVN சாலையில் மூன்று மணியளவில் மின்வாரிய அலுவலக
வாயிலருகில் காலை இருவர் நெருப்பிட்டு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். மார்கழி, தை மாதமாக
இருந்திருந்தால் குளிர் காய்கிறார்களோ என நினைத்துக்கொள்ளலாம். இந்தக் கோடையில் என்ன
செய்வார்களாக இருக்கும் என யோசிக்கும்போதே, மின்வாரிய அலுவலக கேட் முன்பக்கத்தில் கும்பலாக
கெடாக்கறி அரிந்து கொண்டிருந்தார்கள். பெருந்துறை ரோட்டில் சக்தி சூப்பர் மார்கெட்
தாண்டுகையில் ஒரு ஆட்டை வெட்டி ரத்தத்தை ரோட்டில் சிந்தவிட்டுக்கொண்டிருந்தார்கள்.
எல்லாம் மாரியம்மன் பண்டிகை மகிமை எனத் தோன்றியது.
ஈரோடு நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும், பிழைப்பின்
பொருட்டு இங்கு நகர்ந்து குடியேறியவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமுண்டு.
எவர் வீட்டின் முன்பு வாகனங்கள் நிற்கிறதோ, வீடுகளுக்குள் உறவுகள் இருக்கிறதோ, எங்கே
கறிக்குழம்பு வாசனை வருகிறதோ அவர்களுக்கெல்லாம் இது பண்டிகை தினம். அப்படிப்பட்ட வீடுகளிலிருந்து
அழைப்பும் வராமல், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்ட ஒரு தினத்தை வீடுகளுக்குள் முடங்கி
டிவியோடு மல்லுக்கட்டுபவர்களுக்கு போர் அடிக்கும் அதிகாரப்பூர்வமில்லா ஒரு விடுமுறை
தினம்.
ஆனாலும் இங்கு குடியேறியிருக்கும் வெளியூர் சனம் பெண்டு பிள்ளைகளோடு
கோவில் கடைகளை வலம் வந்து, டெல்லி அப்பளம் சாப்பிட்டு ஓரளவு திருப்தியடைந்து விடுகிறார்கள்.
முன்பெல்லாம் பெரும்பான்மையான வீதி முனைகளில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியிருக்கும்.
இப்பொழுதெல்லாம் அவை குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால்
கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும்.
இன்றைக்கு நான் ஆச்சரியமாக உணர்ந்தது, திருவிழா தினமான இன்று
பிரப் சாலையின் ஒரு வழியில் பேருந்தை அனுமதித்திருந்ததுதான். அந்தளவுக்கு கூட்டம் குறைந்துவிட்டதா
அல்லது போக்குவரத்தை சீராக பராமறிக்கும் அளவிற்கு திறனடைந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.
ஈரோட்டிலேயே படித்து, ஈரோட்டிலேயே தொழில் செய்து, ஈரோட்டிலே
வாழ்ந்து என வாழ்நாளின் பாதிக்காலம் ஈரோட்டிலேயே கடந்திருந்தாலும், இது எங்கள் ஊர்
பண்டிகை என்ற உணர்வு ஏனோ வரவில்லை. மாதக்கணக்கில் கோலாகலாமாய் கொண்டாடப்பட்டாலும்,
விதவிதமான கடைகள் என சாலையோரம் நிரம்பியிருந்தாலும் கூட, இதைவிட ஒரே ஒரு நாள் நடக்கும்
சொந்த ஊரின் மாரியம்மன் பண்டிகைமேல் சற்று கூடுதல் பிரியமும் உரிமையும் இருக்கின்றது.
என்னைப்போல் ஊரைவிட்டு நகருக்குள் குடியேறியவர்களின் நிலை இருதலைக்கொள்ளி எறும்புதான்.
இங்கிருக்கும் திருவிழாவிலும் ஆத்மார்த்தமாய் ஒன்ற முடியாது. ஊரில் நடக்கும் திருவிழாவிலும்
அந்த ஒரே ஒரு நாளுக்கு மட்டும் போய் முழுமையாக ஒட்டமுடியாது. காலம் எல்லாவற்றையும்
மாற்றியமைக்கிறது. மாற்றியமைக்கப்படுவதில் சில சிதைந்தும் போவதை மறுக்க முடியாது.
வங்கிப் பரிமாற்றங்கள், கட்டணங்கள் செலுத்துதல், எழுதுதல், வரைதல், பயணச்சீட்டு பதிதல் இப்படி எல்லாவற்றையும் கனிணியில், இணையத்தில் செய்து முடித்துக்கொள்ள நினைக்கும் இந்த தலைமுறைக்கு கடவுளின் அருளும் எதாவது ஒரு இணையப்பக்கத்தில் கிடைத்துவிட்டால் போதுமே என்ற மனோபாவத்திற்கு ஆட்படப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
வங்கிப் பரிமாற்றங்கள், கட்டணங்கள் செலுத்துதல், எழுதுதல், வரைதல், பயணச்சீட்டு பதிதல் இப்படி எல்லாவற்றையும் கனிணியில், இணையத்தில் செய்து முடித்துக்கொள்ள நினைக்கும் இந்த தலைமுறைக்கு கடவுளின் அருளும் எதாவது ஒரு இணையப்பக்கத்தில் கிடைத்துவிட்டால் போதுமே என்ற மனோபாவத்திற்கு ஆட்படப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
-
5 comments:
இனி உங்களை திருப்பூர் கதிர் என்றே உலகம் அழைக்கட்டும்.. :)
அன்பின் கதிர் - பதிவு நன்று - இரசித்து எழுதப் பட்ட பதிவு.
//
வங்கிப் பரிமாற்றங்கள், கட்டணங்கள் செலுத்துதல், எழுதுதல், வரைதல், பயணச்சீட்டு பதிதல் இப்படி எல்லாவற்றையும் கனிணியில், இணையத்தில் செய்து முடித்துக்கொள்ள நினைக்கும் இந்த தலைமுறைக்கு கடவுளின் அருளும் எதாவது ஒரு இணையப்பக்கத்தில் கிடைத்துவிட்டால் போதுமே என்ற மனோபாவத்திற்கு ஆட்படப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
//
உண்மை உண்மை - விரைவினில் நடக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஆதங்கம் உண்மைதான் அண்ணா !
// கனிணியில், இணையத்தில் செய்து முடித்துக்கொள்ள நினைக்கும் இந்த தலைமுறைக்கு கடவுளின் அருளும் எதாவது ஒரு இணையப்பக்கத்தில் கிடைத்துவிட்டால் போதுமே என்ற மனோபாவத்திற்கு // இது கொஞ்சம் நடந்து விடுமோ என அச்சம் வருது கதிர்.
உண்மை
Post a Comment