மனிதர்களுக்கு
குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை நடத்துவது குறித்து இருக்கும் பயம், ஒரு கட்டத்தில் மெல்ல
தம் மீது படரும் முதுமை மீதானதாகத் திரும்பி விடுகிறது. முதுமையை
எதிர்கொள்ள அவர்கள் வைத்திருக்கும் இரண்டு வழிகள், ஒன்று தனக்கு
வயதாகிவிட்டது என்பதை அடிக்கடி ஒப்புக்கொள்வதன் வாயிலாக அதையொட்டி ஏதேனும் சலுகையோ,
பரிதாபமோ தேடிக்கொள்வது. மற்றொன்று, பல்வேறுபட்ட ஒப்பனைப் பொருட்கள், ஆடைகள் மூலமாய் தன்
வயதை மறைக்கப் பிரயத்தனம் எடுப்பது.
இந்த
அனுதாபம் தேடிக்கொள்ளும் முயற்சி,
தன் இயல்பான வேகத்தைக் கூட்டி முதுமையை நோக்கி அவர்களை இழுத்துச் சென்று
விடுகிறது. அறிந்தோ அறியாமலோ அதையே திரும்பத் திரும்பச் சொல்வதால்,
அவர்கள் விரும்புவதும் அதுவாகவே அமைகின்றது. ஒப்பனைகள்
மூலம் இளமையாக தங்களை உலகுக்கு மட்டுமே காட்ட முயல்வதும்கூட ஒருவித ஏமாற்றுதானே!?.
அது தற்காலிகமாக தன்னம்பிக்கை தருவதாகத் தோன்றினாலும், திடீரென ஒரு புள்ளியில் எல்லாவற்றையும் சட்டெனக் கலைத்து விடுவதாக,
முறித்துப் போடுவதாக அமைந்துவிடுகிறது. அதிலிருக்கும்
போலித்தன்மையே ஒரு கட்டத்தில் மிகப் பெரிய ஒவ்வாமையக் கொடுத்துவிடுகிறது.
இந்த
இரண்டிலும் ஆட்படாத வெகு சிலரின் செயல்பாடுகள் மட்டுமே - வயதை மறைக்க
முயலாமல், அனுதாபம் தேடாமல் - தன்னைக் கவ்வும்
முதுமையை எதிர்கொள்ள மனம் மற்றும் உடலளவில் ஆரோக்கிய வழியில் தன்னைத் தயார்படுத்திக்
கொள்வதாக இருக்கின்றன. அவர்கள் தங்களால் இயன்ற எல்லா வழிகளிலும்
வயதை பொருட்படுத்தாமல் இருப்பதற்கான காரியங்களை மேற்கொள்ளத் துவங்குகின்றனர்.
இதன் மூலம் முதுமையை மறைப்பது அவர்களின் நோக்கமாக இருப்பதில்லை.
முதுமையின் ஆளுமைக்கு எதிராகத் தங்களை வலுப்படுத்தி நிறுத்திக் கொள்வது
மட்டுமே.
வயது
கூடக்கூட இளமை தீர்வதையும்ம், முதுமை சேர்வதையும் மிக இயல்பாக நாம் உணர்கிறோம்.
நினைத்த மாத்திரத்தில் ஒரு இடத்தில் தாண்டிக் குதிக்கவோ, சட்டென ஒரு இடத்தில் ஏறிப் பார்க்கவோ, ஓடவோ, எதையேனும் இழுக்கவோ, தூக்கவோ தயக்கம் ஏற்படுகிறது.
இப்படியான செயல்களைச் செய்கையில் உணரும் தடுமாற்றங்களை
இளமை தீர்வதற்கான அறிகுறி எனக் கொள்கிறோம். ஆனால் எல்லாமுமே பயிற்சியில்
சாத்தியம் என்பதையும், தொடர்ந்து பழகுவதை நிறுத்தும்போதுதான்
பெரும்பாலும் அது இயலாததாக மாறுகிறது என்பதையும் மறந்து விட்டதும் இம்மாதிரியான முடிவுக்கு
ஒரு காரணம்.
என்னுடைய
இளம் பருவம் முழுவதும் கிராமத்தில் -
அதுவும் விவசாய நிலத்தில் இருந்ததால், எல்லாக்
காலமும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உழைப்பைச் செலுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம் இருந்தது.
பல சமயங்களில் ஆர்வத்தினாலும், சில நேரங்களில்
நிர்பந்தத்தினாலும், விவசாயப் பணிகளில் ஈடுபடுவோருடன் இணைந்து
சரி சமமாக நின்று கடினமான உடல் உழைப்பு வேலைகளைச் செய்த அனுபவம் உண்டு. கிராமங்களில் எல்லா வயதினரும் தங்களால் இயன்ற அளவு உழைத்தே தீர வேண்டிய நிர்பந்தம்
இயல்பாகவே அமைந்த ஒன்று.
ஒரு
கட்டத்தில் காலம் நகர்ப்புற வாழ்க்கைக்கு நகர்த்துகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பிள்ளையின்
கல்வி எனும் காரணங்களை முன்வைத்து முழுதாய் நகரத்தின் பிடிக்குள் பிணைத்துக் கொண்டாயிற்று.
எல்லாவிதமான பசபசப்புகளோடு நகரமும் தனக்குள் பிடித்து வைத்துக் கொண்டது.
நகரம் வேறு மாதிரியான சுழற்சியை மிக சீக்கிரத்தில் கற்றுக் கொடுத்து
விட்டது. வெயில் ஒத்துக் கொள்வதில்லை. மழை
சிரமம் கொடுக்க ஆரம்பித்தது. குளிர் ஒவ்வாமையைக் கொண்டு வந்தது.
இரவு பகல் எல்லாவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
பின்னிரவுப்
பொழுது வரை ஊரும், வீடும் அடங்குவதில்லை. ஒன்பது மணிக்குள் ‘ஒரு தூக்கம்’ தூங்கி விடுவோம் என்றிருந்த நிலை மாறி,
’சராசரியாக பத்து முதல் பதினொரு மணிக்குள் தூங்கினால் போதும்’
என்ற மனநிலையைத் திணித்து விட்டது. விடியல் ஐந்து
மணியாக இருந்த காலம் மாறி, ஏழு மணிக்கு எழுவதொன்றும் ஆச்சரியமானதாக
இல்லை. சில வீடுகளில் பிள்ளைகள் எழுந்து, குளித்து, உடையணிந்து, உணவு உண்டு
பள்ளிக்குக் கிளம்பும் நேரத்திலும்கூட தந்தைகள் கூச்சமற்றுத் தூங்குவதை வெகு எளிதாகக்
காணவியலும்.
நகரம்
தந்திருக்கும் இன்னொரு மாய வாய்ப்பு,
ஓய்வுக்கும் உழைப்பிற்கும் வித்தியாசம் இல்லாதது போன்றதொரு வாழ்க்கை
முறையை அனுமதித்திருப்பது. வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என வாழ்க்கை சுருங்கச் சுருங்க, சொகுசு கூட ஆரம்பித்துவிட்டது. உடல் உழைப்பே இல்லாமல்,
உணவில் நேர்த்தி இல்லாமல், உறக்கத்தில் ஒழுங்கு
இல்லாமல் ஒவ்வொரு வயதாகத் தீர்க்கும்போது, இரண்டு மடங்காய் உடல்
குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் அச்சம்
எழுகிறது. விளைவாக “இனிமேலாச்சும் எதாச்சும்
செய்யனும்” எனும் வரியை, ஆசையைச் சொல்ல
ஆரம்பிக்கின்றோம். ஆனாலும் அப்படி ”எதாச்சும்
செய்வது” ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
அப்படி
’எதாச்சும்
செய்யணும்’ என்ற முயற்சியில்தான் உடற்பயிற்சிக் கூடம் செல்வது,
யோகா கற்றுக்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது,
மிதிவண்டி ஓட்டுவது உள்ளிட்டவை தொடங்குகின்றன. இப்படியானவற்றைச் செய்யத் தொடங்கியவர்களில், தொடர்கிறவர்களைவிட
கைவிட்டவர்களே மிக அதிகம் என்கின்றது வரலாறு.
தினசரி
மதுபானக் கடைகளைத் தேடிச்சென்று,
வரிசையில் நின்று, காசு கொடுத்து மது அருந்துபவர்களின்
எண்ணிக்கையைவிட, காலைப் பொழுதில் விரைந்து எழுந்து, குறைந்தபட்சம் உடலுக்காக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும்
குறைவுதான். எத்தனை வரி விதித்தாலும், விலையேற்றம்
நிகழ்ந்தாலும், அது குறித்துக் கவலைப்படாமல் புகைப்பதில் மாயச்
சுகம் உணர்பவர்களைவிட, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிகுந்த
உணவுப் பொருட்களுக்கு கவனம் கொடுப்பவர்களும், செலவு செய்பவர்கள்
மிகக் குறைவுதான்.
’எதைச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்’ எனக் கேட்பது
எத்தகையதொரு நகைமுரண். ஒவ்வொரு முறையும் இரண்டரை அங்குல நாக்கு
‘இன்னும் இன்னும்’ எனக் கேட்டு விடுகிறது.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பதென்னவோ வயிறுதான். நாக்கின் அடிப்பகுதியைக் கடந்து விட்டால் ருசியை நாம் அறிவதில்லையெனும் தெளிவு
வந்துவிட்டாலே, பசி தணிந்த பிறகும் ருசி தூண்டுகிறதே என்பதற்காக
உணவுப் பண்டங்களை வயிற்றில் திணிப்பது குறைந்துபோகும்.
திரைப்படம், தொலைக்காட்சி,
இணைய அரட்டைகள் என இரவுகளைக் கருணையின்றி கரைப்பது ஒரு வியாதியாகிப்
போய்விட்டது. அவையனைத்துமே
சொல்லொணாச் சுகம் தரும் அடங்காப் போதையூட்டிகள். அந்தச் சுகமும்,
போதையும் நம்மைக் கிறங்கடிப்பவை. போகப்போக கூடுதல்
அழுத்தத்தையும், அதிலிருந்து அச்சத்தையும் ஊட்டுபவை. ஆழ்ந்துபோய் சிக்கிவிட்டால் ஒருபோதும் அவை தம் அரக்கப் பிடியிலிருந்து நம்மை
விடுவிக்க விரும்புவதில்லை.
முதுமையும், முதிர்வும் காலத்தின்
கட்டாயம். அதை எவ்விதமும் மறுப்பதோ, புறக்கணிப்பதோ
இயலாத ஒன்று. அதை அதன் போக்கில் அனுமதிப்பதென்பது எவ்வகையிலும்
தவறானதோ, குற்றமானதோ இல்லை. ஆனால் அதை நம்
சோம்பல், உணவுப் பழக்கம், வேறு ஒவ்வாத பழக்கம்
ஆகிய காரணங்களினால் முன்கூட்டியே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதென்பது எந்த வகையில்
நியாயமாகும்!?.
பொதுத்துறை
நிறுவனமொன்றில் பணியாற்றும் என் நண்பரின் மேலதிகாரி ஓய்வு பெறும் வயதை நெருங்கி விட்டவர். ஆனால் ஒருபோதும் முதுமை
ஆளுமை செய்வதை அனுமதிக்காதவர். ஆம், இன்றளவும்
அவர் தினசரி 35 கி.மீ தூரம் ஓடுகிறார்.
அதுவும் காலணிகளின்றி வெறும் கால்களில். இளமையாக,
திடகாத்திரமாக இருக்கும் பலரும் அருகிலுள்ள கடைக்குச் செல்வதற்குக்கூட
வாகனங்களைப் பயன்படுத்தியே தீருவேன் என்ற அளவிற்கு சோம்பியிருக்கும் இக்காலத்தில் அறுபதுகளை
நெருங்கும் ஒருவர் வெறும் கால்களில் தினந்தோறும் ஓடுகிறார் என்பது, பத்தோடு பதினொன்றெனக் கடந்து போகும் செய்தியன்று.
வயது
கூடுவதை அனுபவிக்க நாம் கம்பீரமானதொரு உடலைத் தயாரித்து வைத்துக் கொள்வது எதனினும்
முக்கியமானது. உடல் மீது நாம் செலுத்தும் எந்த வன்முறையையும் உடனடியாக உடல் புறந்தள்ளி விடுவதில்லை.
’இதில் ஏதேனும் நியாயங்கள் இருக்குமா’ என ஆராய்கின்றது.
ஏதேனும் இருப்பின் ஏற்றுக்கொள்ள முனைகின்றது. ‘முடியவே முடியாது, கூடவே கூடாது’ என்பதைத்தான் புறக்கணிக்க முடிவு செய்யும். முதலில் முரண்டு பிடிக்கும், பின் ஒத்துழைக்க மறுக்கும்,
இறுதியாக எச்சரிக்கை செய்யும், அதையும் மதிக்காவிட்டால்
சிதைவைத் தொடங்கும்.
வழங்கப்பட்டிருப்பது
ஒரே ஒரு வாழ்க்கைதான்.
அந்த வாழ்க்கையைச் செலுத்தும் லகான் பெரும்பாலும் நம் கைகளிலேயே வழங்கப்பட்டிருக்கிறது.
அதை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் மனமும்,
உடலும் நம்மோடு ஒத்துழைக்கும்.
உடலினை
உறுதி செய்திட உதவும் செயல்களைத் தொடர்வோம்.
அப்படியேதும் இல்லையெனில் இப்பொழுதே ஏதேனும் ஒன்றைத் தொடங்குவோம்.
அதை புத்தாண்டின் உறுதிமொழியாய் பழகுவோம்.
இப்போதும், எப்போதும் உறுதியாக
நம்புவது.... ‘நம்மால் இயலும்’!
-
நம்தோழி ஜனவரி 2017
-
நம்தோழி ஜனவரி 2017
3 comments:
வழங்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையைச் செலுத்தும் லகான் பெரும்பாலும் நம் கைகளிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அதை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் மனமும், உடலும் நம்மோடு ஒத்துழைக்கும்.
--------------
சரியாகச் சொன்னீர்கள் அண்ணா..
அருமையான கட்டுரை...
சரியாக சொன்னீர்கள் கதிர்..... நன்றி!!!
Kindly link me with your blog
Post a Comment