Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Sep 19, 2013

கேரி பேக்


காலை நேரம். கொஞ்சம் மருந்தும் காலைச் சிற்றுண்டியும் கடையில் வாங்க வேண்டிய சூழல். ஒரு பெரிய, இரண்டு சிறிய பாத்திரங்களோடு புறப்பட்டேன். மருந்துக் கடையில் ‘சிரப்’ ஒரு பாட்டிலும், மூன்று மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மருந்துக்கு கை நீட்டினேன், மருந்துப் பாட்டில், மாத்திரையோடு ஒரு கேரி பேக்கை அந்தப் பையன் நீட்டினான். 

இப்பொழுதெல்லாம் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும் கூட,”விய்ஷ்க்” என பிய்த்து,”ப்பூ” என ஊதி ஒரு கேரி பேக்கில் போட்டுக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். 

“தம்பி…. கேரி பேக் வேணாம்” என்றேன். 

“பரவால்ல சார் வாங்கிக்கங்க” என்றான். 

மறுத்து விட்டு மருந்துப் பாட்டில், மாத்திரை மட்டும் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பினேன். திடீரென அந்தப் பையனை திரும்பிப் பார்க்கத் தோன்றியது. பார்த்தேன். அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லி முடித்திருக்க, அந்தப் பெண் கண்கள் சிலிர்க்க சிரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களைப் பார்ப்பதை கண்டவுடன், சிரிப்பை நிறுத்தி தங்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பது போல் நகர்ந்தார்கள். 



சிற்றுண்டிக் கடையில் ஆறு இட்லிகள் வேண்டுமென்று கூறி பாத்திரங்களைக் கொடுத்தேன். இட்லிகளை பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டு, சாம்பார் மற்றும் சட்னிகளை தயாராக வைத்திருந்த பாலித்தீன் மூட்டை முடிச்சுகளாக அள்ளிக் கொடுத்தார். 

அதை மறுத்து விட்டு, என்னிடமிருந்த பாத்திரத்தில் ஊற்றித் தருமாறு கேட்டேன். பணியாளர் மறுத்தார். ஏனென்று கேட்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாகத் தான் கொடுக்கச் சொல்லி தங்களுக்கு உத்தரவென்று சொல்லிவிட்டு என்னை எளிதில் ஒதுக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க, நான் ஒருவித வெறுமை நிறைந்த கோபத்துடன், பணம் கொடுக்குமிடத்தில் இருந்த நபரிடம் “ஏங்க நா கொண்டுவந்த பாத்திரத்தில் ஊத்தித் தராம, பிளாஸ்டிக் பொட்டலமா தர்றீங்க” என சற்றே எரிச்சலோடு கேட்டேன். 

“யார் சார் இப்பல்லாம் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வர்ராங்க! எல்லாரும் பிஸி, வர்ற வேகத்ல சட்னு, கட்டி வச்சிருக்க சாம்பார், சட்னினு ஈஸியாக வாங்கிட்டு போறாங்க, அது தான் எங்களுக்கும் ரொம்ப ஈஸிங்க” எனச் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரிடம் “சார் குடுங்க” என்று என்னை எளிதாகப் புறந்தள்ளினார். 

மனது சுருங்கி வெளியில் வந்தேன், அங்கேயே மேசை மேல் வைத்து பொட்டலங்களைப் பிரித்து சாம்பார், சட்னியை பாத்திரத்தில் ஊற்றலாமா என்று நினைத்தேன், எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என வெட்கப்பட்டது வெட்கங்கெட்ட மனது. 

சாலையோரம் இறைபட்டு கிடக்கும் கசங்கிய கேரி பேக்குகள் போல் மனது கசங்கிப் போனது. எந்த நாகரிகம், கேரி பேக்குகளுக்காக மனிதர்களை இப்படி அடிமைப்படுத்தியது. நான்கு கடைகளில் நான்கு பொருட்கள் வாங்கினால் நான்கு கேரி பேக்குகள் இலவசமாய்க் கிடைக்க, நமது கைகள் மகிழ்ச்சியோடு வாங்கி ஊஞ்சலாட்டிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.

வீட்டுக்கு போனவுடன் கசங்கிய அந்த கேரி பேக் குப்பைத்தொட்டி ஓரத்திலோ, சன்னல் வழியாகவோ தூக்கி வீசப்படுகிறது. சில சமயம் பின்னர் பயன்படுமென்று அரிசி மூட்டை சந்திலே சொருகி வைக்கப்பட்டு கிடக்கிறது. சில நாட்களில் அதுவும் வீதிக்கு வருகிறது. பெரும்பாலும் அந்த நாள் குப்பை கேரி பேக்கில் மூட்டையாகக் கட்டப்பட்டு வாசலில் குப்பை சேகரிப்பவருக்காக வைக்கப்படுகிறது. 

கேரி பேக்குகளுக்கு இணையாக, உபயோகித்தவுடன் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டம்ளர்களும், பாட்டில்களும், தட்டுகளும் பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கின்றன. பயன்படுத்திய பின் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களில், வெறும் பத்து சதவிகிதம் கூட மறு சுழற்சிக்காக சேகரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் சாலையோரமும், பயன் படுத்தாமல் கிடக்கும் காலி இடங்களிலும் படர்ந்து பரவிக் கிடக்கின்றன.
காமுகனின் மனதில் ஊறும் வெற்றுக் காமம் போல், மண்ணோடு ஊடுருவிக் கிடக்கிறது. மண்ணில் ஊறிய இந்த பிளாஸ்டிக் சனியன் மண்ணோடு மண்ணாக மட்கிப் போக எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்? மிக எளிதாக பிளாஸ்டிக்கை மண்ணில் கலக்கச் செய்யும் கொலை பாதகத்தை மனித சமுதாயம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டேயிருக்கிறது. 

மழை கொட்டி வெள்ளம் வடிந்த பின் ஒவ்வொரு சாக்கடை பள்ளத்தின் குறுக்கே இருக்கும் குழாய்களிலும் கொத்துக் கொத்தாக பிளாஸ்டிக் குப்பைகள் குட்டிச் சாத்தான்கள் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான சாட்சியம் மனித சமூகத்திற்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணி. சாக்கடைகள் அடைபட்டு கலங்கிய கழிவுநீர் சர்வ சாதாரணமாய் வீடுகளுக்குள் வருவதை சிறு முகச் சுழிப்போடு நகரத்தில் மன்னிக்கவும் நரகத்தில் வாழும் மனித சமூகம் சகித்து வாழப் பழகிவிட்டது. 
அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் இந்த பிளாஸ்டிக் நகரத்தின் தரை முழுதும் பரவி விடலாம். மழை நீர் மண்ணில் செல்ல வாய்ப்பற்று நிலமெல்லாம் மலடாகிவிடலாம். பெய்யும் நீரும் சாக்கடை அடைப்புகளை மேவி ஆற்றுக்கு ஓடி கடலை எட்டிவிடலாம். நகரத்தின் தாகம் தீர்க்க எங்கிருந்து நீர் கிடைக்கும், 2000 அடி தோண்டுவோமா இல்லை 3000 அடி இல்லையில்லை 10,000 அடி அல்லது பூமிப் பந்தின் மறுபக்கம் வரை தோண்டுவோமா, நம் விஞ்ஞானம் தொண்ட வைக்கலாம், ஆனால் விஞ்ஞானத்திற்கு தண்ணீரை சிதைத்து சீரழிக்கத் தெரியும், புதிதாய் ஒரு சொட்டு தண்ணீரை உருவாக்கத் தெரியுமா? 

கடந்துபோகும் வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்த வரி என் கண்ணுக்குள் எரிச்சலோடு தகிக்கிறது... 

“மூன்றாம் உலகப் போர் - தண்ணீருக்காக!” 

-
பொறுப்பி :  மீள் இடுகை சற்றே மாற்றப்பட்ட வடிவில்

-

நன்றி: தி இந்து

Mar 6, 2012

எங்க ஊரு ஈரோடு


காவிரியும் பவானியும் கலந்து பெருக்கெடுத்து ஓடும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய நகரமே ஈரோடு. ஆற்றுக்கும் நகருக்கும் இடையே வெகு அழகாய் கடந்து போகிறது காலிங்கராயன் கால்வாய். தாழ்வாய் ஓடும் ஆற்றங்கரையோரம் இருக்கும் நிலம் பயனுறவே கி.பி 1282ல் அமைக்கப்பட்ட கால்வாய் அது. காலிங்கராயன் கால்வாய் குறித்துப் பக்கம்பக்கமாப் பேசலாம். அருகில் ஓடும் ஆற்றின் கரையிலேயே உயரமான நிலப்பரப்பில் ஓடும் தொழில்நுட்பம் மிகுந்தது அந்தக்கால்வாய்.

ஒரு நகரம் என்பது உயிரற்ற பொருளாக இருக்க முடியாது. அதுவும் கிட்டத்தட்ட ஒரு உயிரினத்தின் உடல் போன்றுதான். எனக்கு ஈரோடு நகரை பருந்துப்பார்வை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மனிதன் கிழக்குப் பக்கம் தலை வைத்து தன் கைகளை விரித்து மல்லாந்து மேற்கில் கால் நீட்டி படுத்திருப்பது போலவே தோன்றும்.

நானறிந்த நகரங்களில் ஈரோடு நகரை மிக அழகான நகரம் என்று என்னால் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. அதே சமயம் மிகக் கச்சிதமான ஊர் என்றும், மிக அமைதியான நகரம் என்றும் மிகுந்த பெருமையாகச் சொல்வேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு என்று எதையாவது பட்டியலிடலாம். ஆனால் ஈரோடுக்கு அடையாளமாகச் சொல்லவிரும்புவது அமைதி என்பதைத்தான்.

உண்மையில் பார்த்தால் ஈரோடு என்பது பல பெருமைகளை உள்ளடக்கிய நகரம். பகுத்தறிவுப் பகலவன் பெரியாரைத் தந்த மண். கணித மேதை ராமானுஜத்தை தந்த மண். பாரதியின் கடைசி உரையை கேட்கும் வாய்ப்பை பெற்ற மண்.

இன்று ஈரோடின் அடையாளமாகத் திகழ்வது மஞ்சளும், இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் துணிவகைகளுமே. சுற்றுவட்டார மாவட்டங்களிலும் விளையும் மஞ்சளைச் சந்தைப்படுத்தும் மஞ்சள் மண்டிகள் மற்றும் ஏலவிற்பனை, இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கைத்தறி, விசைத்தறித் துணிகளை விற்பனை செய்ய வாராவாரம் கூடும் ஜவுளிச்சந்தை, பெருந்துறை சாலையில் வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனைகள், நகரத்தின் புறவெளிகளில் பெருகி வரும் கல்வி நிறுவனங்கள் என அக்கம் பக்கம் இருக்கும் கிராமத்து மக்களை நகரம் வெகுவேகமாக ஈர்த்து வருகின்றது.

வெகு வேகமாய் மாறிவரும் உலகத்தின் ஓட்டத்தில் ஈரோடு நகரமும் நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவந்தாலும் நகரத்தின் மையத்தில், இன்னும் கட்டடம் முளைக்காத கொஞ்சம் மிச்சமிருக்கும் நிலத்தில் சோளம் விதைத்து அறுவடை செய்யும் வித்தியாசத்தைக் கொண்டுள்ள நகரம். 

பிரப் சாலை என அழைக்கப்படும் பிரதானச் சாலையை மையப்படுத்தி இரு பக்கமும் பிதுங்கிப்பிதுங்கி வளர்ந்து வரும் நகரம். பிரப்சாலையின் மேற்குப் பக்க நீட்சியாக பெருந்துறை செல்லும் சாலையில் இன்று வேகுவேகமாக நாலு கால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டிருகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டிலிருந்து எந்தப்பக்கம் இருக்கும் நகரங்களுக்குச் சென்றாலும், விவசாய நிலங்கள் மட்டுமே பசுமை போர்த்திக்கிடக்கும். இப்போது சாலையோரங்கள் தோறும் வண்ணக் கட்டிடங்கள் முளைத்து சுற்றிலும் இருக்கும் எல்லா நகரங்களோடும் இணைந்து, தன்னை சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக பெயர் மாற்றிக்கொண்டுள்ளது. பெயர் மாற்றிக்கொண்டாலும் அதற்கான அடையாளமாக எதுவும் இன்னும் பதிக்கத் தொடங்கவில்லை. 

தமிழகத்தின் வடமேற்குப் பகுதியின் மையம் என்றே ஈரோட்டைச் சொல்லலாம். பவானி, அந்தியூர், மேட்டூர், குமாரபாளையம், சங்ககிரி, சேலம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், சித்தோடு, கோபி, சத்தி,   பெருந்துறை, திருப்பூர், கோவை, காங்கயம், தாராபுரம், பழனி, கரூர், திருச்சி, மதுரை என அனைத்து திசைகளிலிருந்தும் சாலைகள் வழியே பிணைந்து கிடக்கின்றது ஈரோடு.

நகரத்தின் தென் பகுதியில் நீண்டு கிடக்கிறது ஈரோடு ரயில் நிலையம். இந்தியாவின் பெருநகரங்களை இணைக்கும் தொடர்வண்டிகள் தினந்தோறும் ஈரோடு வழியே தடதடத்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொடர்வண்டி நிலையத்தை ஒட்டியிருக்கும் இரயில்வே குடியிருப்பும் அதன் மைதானமும் அழகியல் நிறைந்த ஒரு தோப்பு போன்ற அமைப்புக்கொண்டது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி இடது பக்கம் திரும்பினால் மேட்டூர் சாலை துவங்கும். அதன் வழியே நகரின் மையப்பகுதியான அரசு மருத்துவமனை சந்திப்பை அடையலாம். சந்திப்பின் மையத்தில் எம்ஜிஆர் விரல் சுட்டி சிலையாய் நின்று கொண்டிருப்பார். எம்ஜிஆர் விரல் சுட்டும் திசையில் நகர்ந்து, உயர்ந்த மருத்துவ கட்டிடங்களைக் கடந்து செல்கையில், ஈரோடு பகுதி மக்களை ஆட்டுவிட்டுக்கும் நோய்களின் கொடுமையை அறியலாம். இன்னும் கடந்தால் நம்மை வரவேற்பது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம். எதிர்புறம் பிரியும் சாலையின் முகப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைந்திருக்கின்றன. சிறிது தொலைவு சென்றால் சம்பத் நகர் குடியிருப்பு வரும். அங்குதான் ஈரோட்டின் புகழ்பெற்ற உழவர் சந்தை அமைந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாண்டி நேராகச் சென்றால் சில திருமண மண்டபங்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என திண்டல் மலை வரை நகரம் நீண்டுகிடக்கும். திண்டலில் இருக்கும் முருகன் கோவில் இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். திண்டல் மலையைக் கடந்து அகன்று விரிந்திருக்கும் சாலை நம்மை பெருந்துறை நோக்கி அழைத்துச்செல்லும். பெருந்துறை சாலை முழுக்க பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும் ஆட்கொண்டுள்ளன.

எம்ஜிஆர் சிலை சந்திப்பிலிருந்து வடமேற்காய் பிரியும் சிறு சாலை வழியே நசியனூர் சென்றால் எளிதில் தேசிய நெடுஞ்சாலை 47-ஐ அடையலாம். வலது பக்கம் திரும்பினால் மைய, முக்கிய சாலையான பிரப்சாலை வரும். எல்லாம் விடுத்து நேராக மேட்டூர் சாலையில் சென்றால், நாம் அடைவது நகரின் முக்கியத் திரையரங்குகளையும், பேருந்து நிலையத்தையும். பேருந்து நிலையத்தைக் கடந்து இடது பக்கம் திரும்பினால் சித்தோடு, கோபி, சத்தி, மைசூர் என நீளும் சத்தி சாலை. அந்த சத்தி சாலையில்தான் பாரம்பரியம் மிக்க கல்லூரியான சிக்கய்யநாயக்கர் கல்லூரி இருக்கின்றது. 

சத்தி சாலையில் திரும்பாமல், நேராகச் செல்லும் சாலையில் சில அடிகள் சென்றால் வ.உ.சிதம்பரனார் பூங்காவும், மைதானமும் வரும். ஈரோடு நகரின் பெரும்பாலான மக்கள் காலையில் நடைபன்றும் தேயாமல் இருக்கும் மைதானம். அந்த மைதானத்தின் பின் புறம் நீண்டு கிடக்கும் காலியிடம்தான் ஈரோட்டின் புண்ணிய பூமியாக சில வருடங்களாக மாறியிருக்கின்றது.

அந்த புண்ணிய நிகழ்வு என்பது மக்கள் சிந்தனைப்பேரவை அமைப்பு நடத்தும் புத்தகத்திருவிழா தான். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மைதானத்தில்தான் ஈரோடு புத்தகத்திருவிழா நடந்து கொண்டிருக்கின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் அறிவுப்பசி கொண்டு தேடித்தேடி கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வாங்கிச்சென்ற புத்தகங்களின் வாசனை அந்த மண்ணில் ஆண்டு முழுதும் நீந்திக் கொண்டேயிருக்கும். 

மைதானத்தையொட்டி அமைந்திருக்கின்றது வ.உ.சி பூங்கா. எனக்குத் தெரிந்து உள்ளூர் மக்கள் அதிகம் பயன்படுத்தாத பூங்கா என்றால் இதைத்தான் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். நானறிந்த நண்பர்கள் வட்டத்தில் எவரும் பூங்காவில் சென்று இளைப்பாறியதாகவோ, பார்த்து ரசித்ததாகவோ சொன்னதில்லை.

சத்தி திரும்பும் சாலைக்கு எதிர்புறச்சாலையில் நகர்ந்தால் முதலில் வரும் இடதுபக்கப் பிரிவுதான் பவானி வழியே அந்தியூர், மேட்டூர் மற்றும் கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் வழியே சங்ககிரி சேலம், மற்றும் திருச்செங்கோடு, நாமக்கல் என இட்டுச்செல்லும், மூலப்பட்டறை சாலை. மூலப்பட்டறை பிரிவில் திரும்பாமல் நேரே நகர்ந்தால் இருமருங்கிலும் கட்டிடம் தொடர்பான பொருட்களை விற்கும் கடைகள் விரிந்து பரந்து கிடக்கும். இன்னும் கொஞ்சம் கடந்து வளைந்து நெளிந்து முட்டி மோதியெட்டினால் வரும் இடம் ”பழையபேருந்து நிலையம் என்று அழைப்பதும்கூட மறந்து போன” தற்சமயம் காய்கறி அங்காடி இருக்கும் பகுதி, அங்குதான் ஈரோடு மாவட்டத்தின் ஆகச்சிறந்த பெரிய பிரமாண்டமான நடைக்கடைகளும், துணிக்கடைகளும் உயர்ந்தோங்கி பளபளத்து நின்றுகொண்டிருக்கின்றன.

கடைகளிலிருந்து கசிந்து வரும் குளிரூட்டிகளின் குளிர் அந்தச் சாலையெங்கும் தென்றலாய் வீசும். அப்படியே ஒரு வழிச்சாலையில், நெரிசலில் நகர்ந்தால் வரும் இடம் மிகப் பழமையான மணிக்கூண்டு பகுதி, அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் வரும். நேராகச்சென்று நகரக்காவல் நிலையம் அருகே இடது பக்கம் சிறிது தூரம் சென்றால் தந்தை பெரியார் வசித்த பெரியார்-அண்ணா நினைவகம் வரும். காவல் நிலையம் தாண்டி வலதுபக்கம் திரும்பினால் வந்தடையும் இடம் பன்னீர் செல்வம் பூங்கா. 

ப.செ.பூங்காவில் துவங்கும் பிரப் சாலையில்தான் கிறிஸ்துவ தேவாலயமும், பழம்புகழ் பெற்ற சி.எஸ்.ஐ மருத்துவமனையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலும், மாநகராட்சி கட்டிடமும், டெலிபோன் பவனும், நூற்றாண்டுகளைக் கடந்த கலைமகள் மகளிர் மேல்நிலைப்பள்ளியும், செங்குந்தர் பள்ளியும் வீற்றிருக்கின்றன. இறுதியாய் முதலில் பார்த்த எம்ஜிஆரின் முதுகு வரை செல்லலாம். பெரியமாரியம்மன் திருவிழா என்பதுதான் ஈரோடு மக்களின் ஒட்டுமொத்த கொண்டாட்டத்துக்கான திருவிழா. பதினைந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்காக பிரப் சாலையே கிட்டத்தட்ட முடங்கும் என்பதுபோல் திருவிழா கடைகளும், கூட்டமும் பொங்கி வழியும்.

பன்னீர் செல்வம் பூங்காவிலிருந்து தெற்கில் பிரியும் காந்திஜி சாலையின் முகப்பில் வருவது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் அலுவலகம். நேராகச்சென்றால், டெலிபோன் அலுவலகம், தபால் நிலையம், அடுத்து ஈரோட்டின் மிகச்சிறந்த குடியிருப்பு பகுதியாக அறியப்படும் பெரியார் நகர் குடியிருப்பின் கிழக்குப்புற முகப்பு வளைவு வரும். அதிவசதி படைத்த நபர்களிலிருந்து, அருகில் ஓடும் சாக்கடைப்பள்ளம் ஓரமாக வசிக்கும் ஏழ்மை நிறைந்த மனிதர்களை வரை உள்ளடக்கியது பெரியார் நகர். 

காந்திஜி சாலையில் நேராகக் கடந்தால் வலது பக்கம் தீயணைப்பு நிலையம் அமைந்திருக்கும். அதற்கு எதிர்புறச்சந்தில் ”கோழி முட்டை” வடிவில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆனூர் திரையரங்கு அமைந்திருக்கும்.

சில அடிகள் தூரம் சென்றால் வரும் இடம்தான் காளைமாடு சிலை சந்திப்பு. தென்மாவட்டங்களிலிருந்து வரும் சாலைகளின் முகப்புப் பகுதி அதுதான். இடது பக்கம் திரும்பி பயணித்தால் ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் நுழைந்து கொல்லம்பாளையம் வழியே காங்கயம் தாராபுரம் பழனி செல்லும் சாலையும், கொடுமுடி கரூர் திருச்சி மதுரை செல்லும் சாலையும் நம்மை இரண்டாக பிரிக்கும். காளைமாடு பிரிவின் வலது பக்கம் திரும்பினால் நாம் முதலில் புறப்பட்ட ரயில் நிலையம் வரும்.

எளிமையும், நீங்கா அமைதியும் நிறைந்திருக்கும், பெருமை வாய்ந்த ஆறும், அழகிய கால்வாயும் அருகருகே பாயும் நகரத்தின் அடையாளாமாக தற்போது மாறியிருப்பது மாசடைந்த சுற்றுச்சூழல் என்றே சொல்லவேண்டும். ஈரோடு நகரையொட்டிய பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்த தோல் தொழிற்சாலைகள், சாய ஆலைகளிலிருந்து பல்லாண்டுகளாக வெளியேறிய கழிவுகள் சிறிது சிறிதாக நிலத்தடி நீரை மாசுபடுத்தி, இன்றைக்கு தண்ணீரைச் சுத்திகரிக்காமல் குடிக்கமுடியாது என்ற அளவுக்கு சேதப்படுத்தியுள்ளன. புற்றுநோய், சிறுநீரகக் கல், மலட்டுதன்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் மற்ற பெருநகரங்களோடு போட்டியிடுவதில் முன்னணியில் உள்ளது என்ற வருத்தத்தையும் பதிவாக்கியே தீரவேண்டும்.

ஒரு நகரம் என்பது மிக நீண்ட வரலாற்றினை பல யுகங்களுக்கு தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அந்த வரலாற்றின் பக்கங்கள் வளம் நிறைந்ததாக இருப்பதே நலம், வலி நிரம்பியதாக இருப்பதல்ல.

-0-

மார்ச் மாத வடக்குவாசல் பத்திரிக்கையில் கட்டுரையின் சில பகுதி வெளியாகியுள்ளது


Sep 16, 2011

ஒரு மனிதர் 10 ஆயிரம் மரங்கள்

நீங்களும் நானும் வைத்த மரங்கள் தரும் காற்றையா சுவாசிக்கிறோம்? நீங்களும் நானும் நாம் போட்ட பாதையிலா பயணிக்கிறோம்? நீங்களும் நானும் நாம் வெட்டிய குளத்திலா நீர் அருந்துகிறோம்?. இந்தக் கேள்விக்கான ஒரே பதில் இல்லை என்பதுதான். யாரோ ஒருவர்  எதன்பொருட்டோ பிரதிபலன் பாராமல் செய்த நல்லகாரியங்களில்தான் இன்று நலமாய் நம் நாட்களை நகர்த்துகிறோம். இந்த பூமி கனிம வளங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை விட, தியாகங்களால் கட்டமைக்கப்பட்டது எனச் சொல்வதே பொருத்தம். தேசம் முழுதும் ஆங்காங்கே அற்புதமான தியாக மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம் எண்ணற்ற காரணங்களுக்குப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இன்னும் புதிதுபுதிதாய் பெருமைப்படுத்தும் காரணங்கள் விளைந்துகொண்டுதான் இருக்கின்றது. அப்படி ஈரோடு பெருமிதம் கொள்ளும் ஒரு நபர்தான் நாகராஜன். சுற்றுச்சூழல் மேல் அளப்பரிய காதல் கொண்டவர்களுக்கு நிச்சயம் இவரை அடையாளம் தெரிந்திருக்கும். ஈரோடு அருகேயிருக்கும் காஞ்சிக்கோவில் நகருக்குள் நுழைந்து “நாகராஜன்” எனப் பெயர் சொன்னால் முக மலர்ச்சியோடு வழி காட்டுகிறார்கள்.


தனது 17-வது வயதிலிருந்து கடந்த 40 வருடங்களாக செடி நடுவதை வேள்வியாகக் கொண்டிருக்கும் நாகராஜனால் இப்பகுதியில் வளர்ந்து நிற்கும் மரங்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டக்கூடியது. விதைகளை தெரிவு செய்து,  பையில் முளைக்க வைத்து, செடியாக்கி, சரியான இடம் தேடி செடி நட்டு, பெரிதாகும் வரை பலமுறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து அதைக் காப்பாற்றிவரும் இவரது முயற்சியால் வளர்ந்து நிற்கும் விருட்சங்களின் எண்ணிக்கை ஒன்றல்ல இரண்டல்ல 10 ஆயிரத்திற்கும் அதிகம்.

“சிறு வயதிலிருந்தே எனக்கு மரம் வளர்க்க வேண்டும், இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உண்டு. முதன் முதலாக என்னுடைய 17வது வயதில் மரம் நட ஆரம்பித்தேன். தினமும் காலை மாலை என இருவேளையும் நேரம் ஒதுக்கி சாலை ஓரங்கள், பொட்டல்கள், புறம்போக்கு என்று கண்ணில்படும் எல்லா இடங்களிலும் குழி தோண்டி செடிகளை நட்டு வைப்பேன். ஆல், அரசு, புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை போன்ற மரங்கள் எல்லா மண்ணிலும் வளரும் தன்மையுடையவை. அதிகம் தண்ணீரும் தேவைப்படாத ரகங்கள். ஆள் உயர அளவிற்கு செடிகள் வளரும் வரை அவற்றை வேலி கட்டி, தண்ணீர் ஊற்றி பராமரிப்பேன். அதற்குப்பின் அவை தானே பிழைத்துக்கொள்ளும்.

மழைக்காலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் பிரச்சனை இல்லை, ஆனால் கோடைக்காலத்தில் எல்லா செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றுவதுதான் கஷ்டமான காரியம். தேங்காய் நார்களை சேகரித்துவந்து செடியைச் சுற்றிப் போட்டு அதன்மேல் தண்ணீர் தெளிப்பேன். காஞ்சிக்கோவில் மலைக்கோயிலைச்சுற்றி வைத்த செடிகளுக்காக மலையின் மேல் ஏறி, அங்கே பாறை இடுக்குகளில் தேங்கி இருக்கும் நீரை எடுத்து வந்து ஊற்றியதால் இன்று அந்த இடமே பசுஞ்சோலையாக மாறிவிட்டது.

ஆரம்பத்தில் நான் மரம் நடுவதைப்பார்த்த பலரும் என்னை பைத்தியகாரன் வெட்டி வேலை பார்க்கிறான் என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தொடர்ச்சியாக இந்தப் பணியை செய்து வந்தேன். இன்று அவர்களது வாரிசுகள் நான் வைத்த மரங்களின் நிழலையும், பலன்களையும் அனுபவிக்கின்றனர். தூய காற்றை சுவாசிக்கின்றனர். இதுதான் நான் அவர்களுக்கு சொல்லும் பதில்” என்று தான் பொறுமைகாத்த கதையைச் சொல்லும் நாகராஜனுக்கு, மக்களிடமும், அரசிடமும் மரம் வளர்ப்பி குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்ற ஆதங்கம் இருக்கிறது.


“காடுகளில் தன்னிச்சையாக உருவாகி வளரும் மரங்கள் தீயசக்திகளால் அழிக்கப்பட்டுவரும் வேளையில், மனிதனால் வைக்கப்படும் மரங்கள் மக்களாலேயே அழிக்கப்படுகிறது என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். குறிப்பாக சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் போன்றவர்கள் சில சில்லறை காரணங்களுக்காக சர்வ சாதரணமாக வெட்டி வீழ்த்திவிடுகின்றனர். மேலும் விறகுக்காகவும், விற்பதற்காகவும் மக்களே மரங்களை வெட்டும் அவலமும் நடைமுறையில் இருக்கிறது.

மழைநீர் சேகரிப்பு திட்டம் எப்படி கட்டாயமாக்கப்பட்டதோ அதே போல் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கவேண்டும், இருக்கும் மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பதை இந்தியா முழுவதும் கட்டாய சட்டமாக இயற்றவேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் தலைமுறையினர் தண்ணீருக்காகவும், சுத்தமான காற்றுக்காகவும் அல்லாடாமல் இருக்கும் நிலைமையை உருவாக்கமுடியும்” என்று தொலைநோக்கு சிந்தனையுடன் சொல்லும் நாகராஜனை பல அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் பாராட்டி விருதுகள் வழங்கியிருக்கின்றனர்.

ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கும் சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். நம்மிடமே சுரண்டி பணத்தை பதுக்கி வைக்கும் பதுக்கல் பேர்வழிகள் நிறைந்திருக்கும் இந்த நாட்டில் தனக்கு தீங்கு செய்யும் மனிதருக்கும் சுவாசிக்க சுத்தமான காற்றை வாரி வழங்கும் பரந்த மணம் கொண்ட மரங்களை பாதுகாக்கும், வளர்க்கும் சிந்தனை நமக்கு எப்போது வரப்போகிறது.
-------
பொறுப்பி : 11.09.2011 மதுரை திருச்சி தினமலர் சண்டே ஸ்பெஷலில் வெளிவந்த கட்டுரை
நன்றி : தினமலர். மற்றும் கார்த்தி கர்ணா


நாகராஜன் குறித்து மேலும் சில செய்திகள்:
நெசவு தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்த நாகராஜன் அவர்கள், தனது குடும்ப பொருளாதார சூழலின் காரணமாக தற்சமயம் மாதம் முழுதும் ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மிகுந்த பொருளாதார சிக்கலும், உடல்நலக் குறைவு இருந்தாலும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் மாதத்திற்கு ஒருநாள் கட்டாய விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த நாளைப் பயன்படுத்தி மரம் நடுவதை வேட்கையாகக் கொண்டிருக்கிறார். எத்தகைய சூழலிலும் தங்களது சுய உழைப்பு மூலம் மட்டுமே, தங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் அவருடைய மனைவி திருமதி. பிரேமா நாகராஜன். 


அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர்கள் வீட்டில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டிவைத்திருக்கிறார். அக்கம்பக்கம் மழைநீர் சேகரிப்புக் குறித்து கடுமையான பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார் நாகராஜன். மழைநீர் சேகரிப்பை இந்திய அளவில் கடுமையான சட்டமாக்கவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். இயற்கை குறித்து, மழை நீர் சேகரிப்பு குறித்து எங்கு அழைத்தாலும் கூட்டங்களில் அதுகுறித்த விழிப்புணர்வுக்காக பேசவும் தயாராக இருக்கிறார்.

நல்ல மனிதர்களை போற்றுவதும், காப்பதும், அவர்கள் வழி நடப்பதும் புண்ணியம் என்பதையும் மனதில் கொள்வோம். நாகராஜன் அவர்களின் தொடர்பு எண் : 04294–314752, 98652-47910 

***

திரு. நாகராஜன் மற்றும் அமரர். அய்யாசாமி அய்யா குறித்து ஏற்கனவே எழுதிய கட்டுரை கோடியில் இருவர்
***
திரு. நாகராஜன் மற்றும் அமரர். அய்யாசாமி அய்யா ஆகியோருக்கு நடத்திய பாராட்டு விழா மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா

-0-



Jul 21, 2011

கடல் சுனாமியைவிடக் கொடியது சாயக்கழிவு சுனாமி

அங்கே நாங்கள் கண்ட காட்சிகளின் அவலம்... உலக மகா சர்வாதிகாரி ஹிட்லரையே கேவிக்கேவி அழ வைத்துவிடும். 'நவீன ஹிட்லர்' ராஜபக்ஷேவையும் ரத்தக் கண்ணீர் சிந்த வைக்கும்''

ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் முதல் ஈரோடு வரை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு மிதிவண்டிப் பயணத்தினிடையே இப்படி ஒலித்த குரல்... அனைவரையும் விதிர்விதிர்க்க வைப்பதாக இருந்தது!


நதிகள் மாசுப்படுத்தப்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவிவெப்பமயமாதல், நஞ்சில்லா உணவு மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவை தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர், 'பசுமைப் பாதுகாப்பு இயக்கம்' சார்பில் இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.கருணாகரன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கொடி அசைத்து பயணத்தைத் துவக்கி வைத்தனர்.

அன்னூர், அவினாசி வழியாகச் சென்ற மிதிவண்டி பயணக் குழுவினருக்கு பழச்சாறு, இளநீர் போன்றவற்றைக் கொடுத்து ஆங்காங்கே உற்சாகப்படுத்தி வழி அனுப்பிவைத்தனர் மக்கள்.

'நதிகளைக் காப்போம், நொய்யலை மீட்போம்’ என்கிற கோஷம் முழங்க. திருப்பூர் நகருக்குள் சுமார் 18 கி.மீ. தூரம் பயணம் தொடர்ந்தபோது... சாயப்பட்டறை பிரச்னை காரணமாக பலரும் வேலை இழந்திருப்பதால், திருப்பூர் வெறிச்சோடிப் போயிருக்கும் அவலத்தை உணர்ந்த பயணக் குழுவினர், முதல் நாள் இரவு ஊத்துக்குளியில் தங்கினர்.

இரண்டாம் நாள் பயணம்... திருப்பூரின் சாயக் கழிவுகள் காரணமாக நோயுற்றுக் கிடக்கும். ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியை நோக்கிப் புறப்பட்டது. அங்கேதான் ஒலித்தன... கட்டுரையின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த வரிகள்.

அப்படிக் குமுறிய கொங்கு இளைஞர் பேரவையின்  நிறுவனர்  குமார. ரவிக்குமார், ''திருப்பூரின் சாயக்கழிவு நீர் இப்பகுதியில் ஏற்படுத்திய பாதிப்பு... சமுத்திரத்தில் கிளம்பும் சுனாமியை விட, பலநூறு மடங்கு கொடுமையை விதைத்திருக்கும் 'சாயச் சுனாமி'. கடல் சுனாமி... ஒரு நாள் நிகழ்வு. இந்தச் சாயச் சுனாமியோ... தினம் தினம் மக்களைக் கொன்று போட்டுக் கொண்டிருக்கிறது. சாயக் கழிவு என்ற பெயரில் நொய்யல் ஆற்றில் கலக்கிவிடப்பட்ட விஷம்... அந்த ஆற்றங்கரையோர மக்களை நடைபிணமாக மாற்றி வைத்துள்ளது. மண் காற்று, நீர் அனைத்தும் நஞ்சாகிப் போயுள்ளது.

ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியில் கிணறுகள் அனைத்தும் ததும்பும் அளவுக்குத் தண்ணீர் இருக்கின்றது. ஆனால், அதை கால்நடைகள்கூட குடிக்க முடியவில்லை. அங்கே விளைந்திருக்கும் தென்னை இளநீர்கூட மக்கள் பருக முடியாத அளவுக்கு விஷமாகிப் போயிருக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது. நாங்கள் மிதிவண்டியை உருட்டிச் சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுதான் நிதர்சன நிலைமை!

ஒரு குடம் குடிநீருக்காக 5 கி.மீ. தூரம் போக வேண்டிய அவலத்தில் உள்ளார்கள் இம்மக்கள். ஆண், பெண் மலடு, புற்றுநோய், தோல் வியாதி என்று பெரும்பாலானவர்கள் நோய்களுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமை... பவானி, அமராவதி என்று மற்ற ஆற்றுப் பிரதேசத்தையும் தாக்க ஆரம்பித்திருப்பது இன்னும் கொடுமை'' என்று கவலை பொங்கக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சென்னிமலை வழியாகச் சென்ற மிதிவண்டிப் பயணம், மாலை 6 மணிக்கு ஈரோட்டில் நிறைவுற்றது. மொத்தம் 180 கி.மீ. தூரம் பயணித்து, ஈரோட்டை அடைந்த பயணக் குழுவை... நொய்யல் ஆற்று பாசன சபைத் தலைவர் அ.பொ.கந்தசாமி, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர். செ. நல்லசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

”விஷச் சாயம்” என்றே ஆகிவிட்ட இன்றைய விவசாயத்தைக் காப்பாற்றவும், நாசப்படுத்தப்படும் நதிகளை மீட்கவும், வனங்களைப் போற்றவும், மண்ணை மதிக்கவும் வலியுறுத்தி நடந்த இப்பயணம், பல ஆயிரம் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான் இந்த முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி'' என்று பெருமிதத்தோடு சொன்னார். புரட்சிகர விவசாயிகள் முன்னணி அமைப்பாளர் முகிலன்.

-------
பொறுப்பி:

பசுமை விகடன் இதழில் திரு ஜி.பழனிச்சாமி(9940651071) அவர்கள் எழுதிய கட்டுரை. 

நன்றி : பசுமை விகடன், ஜி.பழனிசாமி

-0-

Mar 7, 2011

3000 பிள்ளைகளின் தந்தை மரணம்

பூமிக்காக தன் வாழ்நாள் முழுதையும் அர்பணித்து 
3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை 
சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி”  அய்யா 
இன்று இயற்கை எய்தினார்.
 
ஆழ்ந்த அஞ்சலிகளை அவர் பாதத்தில் சமர்பிக்கிறேன். 
 
 
அவர் குறித்த முந்தைய இடுகைகள்
 
 

 
அவர் இந்த உலகில் விட்டுவிட்டுப்போகும் அடையாளம் 
இன்றோ நாளையோ அழிந்துவிடப் போவதில்லை. 
 

 இயற்கையை நேசித்த மனிதன் இறுதி மூச்சை நிறுத்தி, 
இயற்கையோடு ஒன்றும் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில்
அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு 
இருந்து கொண்டுதான் இருக்கும்.

பல்லாயிரக்கணக்கான கிளைகளும்
கோடிக்கணக்கான இலைகளும்
அஞ்சலி செலுத்த அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.

நிறைவாய் வாழ்ந்து முடித்தவருக்கு
அஞ்சலியாய் சமர்பிக்கிறேன்


----- 
(விபரங்களுக்கு: ஏழூர் விஜயகுமார் 98423-44399)

-0- 

Aug 15, 2010

பாவம் சுமக்கும் சந்ததி

நாளுக்கு நாள் கரைபுரளும் பொருளாதாரத்தின் நீட்சியாக, தனிமனித விழாக்கள் வண்ணமயமாக, வெறித்தனமான ஆடம்பரத்தோடு கொண்டாடப்படுவதை கண்டும் காணாமலும் ரசித்தும் ரசிக்காமலும் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். அதேசமயம் இத்தனை ஆடம்பரம் தேவைதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

நடுத்தரக் குடும்பங்களில் கூட சர்வசாதரணமாக மூன்றாயிரம் நபர்களை ஒரு திருமணத்திற்கு அழைப்பதை கௌரவமாக நினைக்கின்றனர். மேல் தட்டு மக்களின் திருமணக் கூட்டத்தை சொல்லவே வேண்டியதில்லை.

அவர்களின் தனிப்பட்ட சொந்த ஆடம்பரங்களைக் கண்டு கொஞ்சம் முகம் சுழித்து சகித்துக் கடந்தாலும், சகிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம், விருந்துகளில் ஒவ்வொரு இலையிலும் குடிப்பதற்காக தனித்தனியாக தண்ணீர் பாட்டில்களை வைக்கும் விபரீதங்களைக் காணும் போதுதான்.

எவ்வளவு பேரை அழைத்தோம் என்ற எண்ணிக்கையை கௌரவமாக நினைப்போர், தாங்கள் உணவுக்கூடத்தில் வழங்கும் பிளாஸ்டிக் டம்ளர் அல்லது பிளாஸ்டிக் பாட்டில் மூலம் பல ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை மலடாக்குவது குறித்து சற்றும் குற்ற உணர்வு கொள்வதேயில்லை. இது எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் அல்லது என்ன நடந்தால் எனக்கென்ன என கண்டும் காணாமல் போகும் மனப்போக்கின் விபரீதம்.

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் இந்த பிளாஸ்டிக் பூதம் வெறித்தனமாக நிலத்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளது. அதுவரை விருந்துகள், விழாக்களில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர்கள் மட்டுமே முழுக்க, முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு பந்தி முடிந்தவுடன் எடுத்து, கழுவி மீண்டும் அடுத்த பந்திக்கு வைக்கும் வழக்கம் சிதைந்தது, எளிது, சுகாதாரம்(!) என்ற அற்ப காரணங்களையொட்டி யூஸ் அன் த்ரோ டம்ளருக்கு புலம் பெயர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக இலைக்கு இலை குட்டி தண்ணீர் பாட்டிலை வைப்பது வாடிக்கையாகிப் போனது. இது நாகரிகத்தின்(!) அடையாளமாகவும், விழா நடத்துவோரின் அந்தஸ்த்தை(!) வெளிக்காட்டும் ஒரு வித மனவியாதியாகவே மாறிப்போனது.

இன்னும் சில விழாக்களில் விருந்து கூடத்திற்கு வெளியே தண்ணீர் வைத்திருக்கும் இடத்தில் மையமாக நின்று கொண்டு சுற்றிலும் இருக்கும் மேசைகள் மேல் டம்ளர்களை அடுக்கி, ஒரு ஆள் தொடர்ந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருப்பார். தண்ணீர் குடிக்கச் செல்பவர் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி டம்ளரை அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, அடுத்த டம்ளரை எடுத்து குடிப்பார், இப்படியாக ஒரே நேரத்தில், ஒரே ஆள் மூன்று நான்கு டம்ளர்களை நசுக்கி எறியும் போது, பூமியின் ஜீவாதார நரம்புகள் நசுங்கிப்போவது குறித்து விருந்துக்கு செலவு செய்பவருக்கும், ஊற்றுபவருக்கும், குடிப்பவருக்கும் என யாருக்குமே துளியும் கவலையேயில்லை.

விருந்துகளில் இலைகளில் பரிமாறப்படும் 300 மி.லி தண்ணீர் பாட்டிலை உடைத்து விரித்தால், ஏறத்தாழ ஒரு சதுர அடி பரப்பு அளவுக்கு விரியும். விழாவில் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களில் சராசரியாக நாற்பது சதவிகிதம் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக பயன்படுத்தப் படுவதில்லை. மீதி யாவும் குப்பைகளோடு குப்பைகளாக கள்ள மௌனத்தோடு மண்ணை தொடர்ந்து தொடர்ந்து மலடாக்கும் பணியினை செவ்வனே செய்து வருகின்றது.

திருமணங்களின் நோக்கம் பலவாக இருந்தாலும், சந்ததிகளும் ஒரு முக்கியக் காரணம். ஒரு திருமணத்தால் விதைக்கும் பிளாஸ்டிக் விருட்சத்தை வேரறுக்கும் பாரத்தையும் வருங்கால சந்ததிமேல் சுமத்துகிறோம் என்ற எண்ணம் மெலிதாய் அடிமனதில் குறுகுறுக்க ஆரம்பித்தாலே, மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு விழா, மண்ணின் கருவறைக்கு சாவு மணியடிப்பதை நிறுத்திட முடியும்.

____________________________________________________


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...