நீங்களும் நானும் வைத்த மரங்கள் தரும் காற்றையா சுவாசிக்கிறோம்? நீங்களும் நானும் நாம் போட்ட பாதையிலா பயணிக்கிறோம்? நீங்களும் நானும் நாம் வெட்டிய குளத்திலா நீர் அருந்துகிறோம்?. இந்தக் கேள்விக்கான ஒரே பதில் இல்லை என்பதுதான். யாரோ ஒருவர் எதன்பொருட்டோ பிரதிபலன் பாராமல் செய்த நல்லகாரியங்களில்தான் இன்று நலமாய் நம் நாட்களை நகர்த்துகிறோம். இந்த பூமி கனிம வளங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை விட, தியாகங்களால் கட்டமைக்கப்பட்டது எனச் சொல்வதே பொருத்தம். தேசம் முழுதும் ஆங்காங்கே அற்புதமான தியாக மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம் எண்ணற்ற காரணங்களுக்குப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இன்னும் புதிதுபுதிதாய் பெருமைப்படுத்தும் காரணங்கள் விளைந்துகொண்டுதான் இருக்கின்றது. அப்படி ஈரோடு பெருமிதம் கொள்ளும் ஒரு நபர்தான் நாகராஜன். சுற்றுச்சூழல் மேல் அளப்பரிய காதல் கொண்டவர்களுக்கு நிச்சயம் இவரை அடையாளம் தெரிந்திருக்கும். ஈரோடு அருகேயிருக்கும் காஞ்சிக்கோவில் நகருக்குள் நுழைந்து “நாகராஜன்” எனப் பெயர் சொன்னால் முக மலர்ச்சியோடு வழி காட்டுகிறார்கள்.
தனது 17-வது வயதிலிருந்து கடந்த 40 வருடங்களாக செடி நடுவதை வேள்வியாகக் கொண்டிருக்கும் நாகராஜனால் இப்பகுதியில் வளர்ந்து நிற்கும் மரங்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டக்கூடியது. விதைகளை தெரிவு செய்து, பையில் முளைக்க வைத்து, செடியாக்கி, சரியான இடம் தேடி செடி நட்டு, பெரிதாகும் வரை பலமுறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து அதைக் காப்பாற்றிவரும் இவரது முயற்சியால் வளர்ந்து நிற்கும் விருட்சங்களின் எண்ணிக்கை ஒன்றல்ல இரண்டல்ல 10 ஆயிரத்திற்கும் அதிகம்.
“சிறு வயதிலிருந்தே எனக்கு மரம் வளர்க்க வேண்டும், இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உண்டு. முதன் முதலாக என்னுடைய 17வது வயதில் மரம் நட ஆரம்பித்தேன். தினமும் காலை மாலை என இருவேளையும் நேரம் ஒதுக்கி சாலை ஓரங்கள், பொட்டல்கள், புறம்போக்கு என்று கண்ணில்படும் எல்லா இடங்களிலும் குழி தோண்டி செடிகளை நட்டு வைப்பேன். ஆல், அரசு, புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை போன்ற மரங்கள் எல்லா மண்ணிலும் வளரும் தன்மையுடையவை. அதிகம் தண்ணீரும் தேவைப்படாத ரகங்கள். ஆள் உயர அளவிற்கு செடிகள் வளரும் வரை அவற்றை வேலி கட்டி, தண்ணீர் ஊற்றி பராமரிப்பேன். அதற்குப்பின் அவை தானே பிழைத்துக்கொள்ளும்.
மழைக்காலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் பிரச்சனை இல்லை, ஆனால் கோடைக்காலத்தில் எல்லா செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றுவதுதான் கஷ்டமான காரியம். தேங்காய் நார்களை சேகரித்துவந்து செடியைச் சுற்றிப் போட்டு அதன்மேல் தண்ணீர் தெளிப்பேன். காஞ்சிக்கோவில் மலைக்கோயிலைச்சுற்றி வைத்த செடிகளுக்காக மலையின் மேல் ஏறி, அங்கே பாறை இடுக்குகளில் தேங்கி இருக்கும் நீரை எடுத்து வந்து ஊற்றியதால் இன்று அந்த இடமே பசுஞ்சோலையாக மாறிவிட்டது.
ஆரம்பத்தில் நான் மரம் நடுவதைப்பார்த்த பலரும் என்னை பைத்தியகாரன் வெட்டி வேலை பார்க்கிறான் என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தொடர்ச்சியாக இந்தப் பணியை செய்து வந்தேன். இன்று அவர்களது வாரிசுகள் நான் வைத்த மரங்களின் நிழலையும், பலன்களையும் அனுபவிக்கின்றனர். தூய காற்றை சுவாசிக்கின்றனர். இதுதான் நான் அவர்களுக்கு சொல்லும் பதில்” என்று தான் பொறுமைகாத்த கதையைச் சொல்லும் நாகராஜனுக்கு, மக்களிடமும், அரசிடமும் மரம் வளர்ப்பி குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்ற ஆதங்கம் இருக்கிறது.
“காடுகளில் தன்னிச்சையாக உருவாகி வளரும் மரங்கள் தீயசக்திகளால் அழிக்கப்பட்டுவரும் வேளையில், மனிதனால் வைக்கப்படும் மரங்கள் மக்களாலேயே அழிக்கப்படுகிறது என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். குறிப்பாக சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் போன்றவர்கள் சில சில்லறை காரணங்களுக்காக சர்வ சாதரணமாக வெட்டி வீழ்த்திவிடுகின்றனர். மேலும் விறகுக்காகவும், விற்பதற்காகவும் மக்களே மரங்களை வெட்டும் அவலமும் நடைமுறையில் இருக்கிறது.
மழைநீர் சேகரிப்பு திட்டம் எப்படி கட்டாயமாக்கப்பட்டதோ அதே போல் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கவேண்டும், இருக்கும் மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பதை இந்தியா முழுவதும் கட்டாய சட்டமாக இயற்றவேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் தலைமுறையினர் தண்ணீருக்காகவும், சுத்தமான காற்றுக்காகவும் அல்லாடாமல் இருக்கும் நிலைமையை உருவாக்கமுடியும்” என்று தொலைநோக்கு சிந்தனையுடன் சொல்லும் நாகராஜனை பல அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் பாராட்டி விருதுகள் வழங்கியிருக்கின்றனர்.
ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கும் சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். நம்மிடமே சுரண்டி பணத்தை பதுக்கி வைக்கும் பதுக்கல் பேர்வழிகள் நிறைந்திருக்கும் இந்த நாட்டில் தனக்கு தீங்கு செய்யும் மனிதருக்கும் சுவாசிக்க சுத்தமான காற்றை வாரி வழங்கும் பரந்த மணம் கொண்ட மரங்களை பாதுகாக்கும், வளர்க்கும் சிந்தனை நமக்கு எப்போது வரப்போகிறது.
-------
பொறுப்பி : 11.09.2011 மதுரை திருச்சி தினமலர் சண்டே ஸ்பெஷலில் வெளிவந்த கட்டுரை
நன்றி : தினமலர். மற்றும் கார்த்தி கர்ணா
நாகராஜன் குறித்து மேலும் சில செய்திகள்:
நெசவு தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்த நாகராஜன் அவர்கள், தனது குடும்ப பொருளாதார சூழலின் காரணமாக தற்சமயம் மாதம் முழுதும் ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மிகுந்த பொருளாதார சிக்கலும், உடல்நலக் குறைவு இருந்தாலும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் மாதத்திற்கு ஒருநாள் கட்டாய விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த நாளைப் பயன்படுத்தி மரம் நடுவதை வேட்கையாகக் கொண்டிருக்கிறார். எத்தகைய சூழலிலும் தங்களது சுய உழைப்பு மூலம் மட்டுமே, தங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் அவருடைய மனைவி திருமதி. பிரேமா நாகராஜன்.
அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர்கள் வீட்டில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டிவைத்திருக்கிறார். அக்கம்பக்கம் மழைநீர் சேகரிப்புக் குறித்து கடுமையான பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார் நாகராஜன். மழைநீர் சேகரிப்பை இந்திய அளவில் கடுமையான சட்டமாக்கவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். இயற்கை குறித்து, மழை நீர் சேகரிப்பு குறித்து எங்கு அழைத்தாலும் கூட்டங்களில் அதுகுறித்த விழிப்புணர்வுக்காக பேசவும் தயாராக இருக்கிறார்.
அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர்கள் வீட்டில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டிவைத்திருக்கிறார். அக்கம்பக்கம் மழைநீர் சேகரிப்புக் குறித்து கடுமையான பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார் நாகராஜன். மழைநீர் சேகரிப்பை இந்திய அளவில் கடுமையான சட்டமாக்கவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். இயற்கை குறித்து, மழை நீர் சேகரிப்பு குறித்து எங்கு அழைத்தாலும் கூட்டங்களில் அதுகுறித்த விழிப்புணர்வுக்காக பேசவும் தயாராக இருக்கிறார்.
நல்ல மனிதர்களை போற்றுவதும், காப்பதும், அவர்கள் வழி நடப்பதும் புண்ணியம் என்பதையும் மனதில் கொள்வோம். நாகராஜன் அவர்களின் தொடர்பு எண் : 04294–314752, 98652-47910
***
திரு. நாகராஜன் மற்றும் அமரர். அய்யாசாமி அய்யா குறித்து ஏற்கனவே எழுதிய கட்டுரை கோடியில் இருவர்
***
திரு. நாகராஜன் மற்றும் அமரர். அய்யாசாமி அய்யா ஆகியோருக்கு நடத்திய பாராட்டு விழா மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா
-0-