காலை நேரம். கொஞ்சம் மருந்தும் காலைச் சிற்றுண்டியும் கடையில் வாங்க
வேண்டிய சூழல். ஒரு பெரிய, இரண்டு சிறிய பாத்திரங்களோடு புறப்பட்டேன்.
மருந்துக் கடையில் ‘சிரப்’ ஒரு பாட்டிலும், மூன்று மாத்திரைகளையும்
வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மருந்துக்கு கை நீட்டினேன்,
மருந்துப் பாட்டில், மாத்திரையோடு ஒரு கேரி பேக்கை அந்தப் பையன்
நீட்டினான்.
இப்பொழுதெல்லாம் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும்
கூட,”விய்ஷ்க்” என பிய்த்து,”ப்பூ” என ஊதி ஒரு கேரி பேக்கில் போட்டுக்
கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
“தம்பி…. கேரி பேக் வேணாம்” என்றேன்.
“பரவால்ல சார் வாங்கிக்கங்க” என்றான்.
மறுத்து விட்டு மருந்துப் பாட்டில், மாத்திரை மட்டும் வாங்கி பேண்ட்
பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பினேன். திடீரென அந்தப் பையனை
திரும்பிப் பார்க்கத் தோன்றியது. பார்த்தேன். அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ
சொல்லி முடித்திருக்க, அந்தப் பெண் கண்கள் சிலிர்க்க சிரித்துக்
கொண்டிருந்தார். நான் அவர்களைப் பார்ப்பதை கண்டவுடன், சிரிப்பை நிறுத்தி
தங்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பது போல் நகர்ந்தார்கள்.
சிற்றுண்டிக் கடையில் ஆறு இட்லிகள் வேண்டுமென்று கூறி பாத்திரங்களைக்
கொடுத்தேன். இட்லிகளை பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டு, சாம்பார் மற்றும்
சட்னிகளை தயாராக வைத்திருந்த பாலித்தீன் மூட்டை முடிச்சுகளாக அள்ளிக்
கொடுத்தார்.
அதை மறுத்து விட்டு, என்னிடமிருந்த பாத்திரத்தில் ஊற்றித் தருமாறு
கேட்டேன். பணியாளர் மறுத்தார். ஏனென்று கேட்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாகத்
தான் கொடுக்கச் சொல்லி தங்களுக்கு உத்தரவென்று சொல்லிவிட்டு என்னை எளிதில்
ஒதுக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க, நான் ஒருவித வெறுமை நிறைந்த
கோபத்துடன், பணம் கொடுக்குமிடத்தில் இருந்த நபரிடம் “ஏங்க நா கொண்டுவந்த
பாத்திரத்தில் ஊத்தித் தராம, பிளாஸ்டிக் பொட்டலமா தர்றீங்க” என சற்றே
எரிச்சலோடு கேட்டேன்.
“யார் சார் இப்பல்லாம் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வர்ராங்க! எல்லாரும்
பிஸி, வர்ற வேகத்ல சட்னு, கட்டி வச்சிருக்க சாம்பார், சட்னினு ஈஸியாக
வாங்கிட்டு போறாங்க, அது தான் எங்களுக்கும் ரொம்ப ஈஸிங்க” எனச்
சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரிடம் “சார் குடுங்க” என்று என்னை எளிதாகப்
புறந்தள்ளினார்.
மனது சுருங்கி வெளியில் வந்தேன், அங்கேயே மேசை மேல் வைத்து பொட்டலங்களைப்
பிரித்து சாம்பார், சட்னியை பாத்திரத்தில் ஊற்றலாமா என்று நினைத்தேன்,
எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என வெட்கப்பட்டது வெட்கங்கெட்ட மனது.
சாலையோரம் இறைபட்டு கிடக்கும் கசங்கிய கேரி பேக்குகள் போல் மனது கசங்கிப்
போனது. எந்த நாகரிகம், கேரி பேக்குகளுக்காக மனிதர்களை இப்படி
அடிமைப்படுத்தியது. நான்கு கடைகளில் நான்கு பொருட்கள் வாங்கினால் நான்கு
கேரி பேக்குகள் இலவசமாய்க் கிடைக்க, நமது கைகள் மகிழ்ச்சியோடு வாங்கி
ஊஞ்சலாட்டிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.
வீட்டுக்கு போனவுடன் கசங்கிய அந்த கேரி பேக் குப்பைத்தொட்டி ஓரத்திலோ,
சன்னல் வழியாகவோ தூக்கி வீசப்படுகிறது. சில சமயம் பின்னர் பயன்படுமென்று
அரிசி மூட்டை சந்திலே சொருகி வைக்கப்பட்டு கிடக்கிறது. சில நாட்களில்
அதுவும் வீதிக்கு வருகிறது. பெரும்பாலும் அந்த நாள் குப்பை கேரி பேக்கில்
மூட்டையாகக் கட்டப்பட்டு வாசலில் குப்பை சேகரிப்பவருக்காக வைக்கப்படுகிறது.
கேரி பேக்குகளுக்கு இணையாக, உபயோகித்தவுடன் தூக்கியெறியும் பிளாஸ்டிக்
டம்ளர்களும், பாட்டில்களும், தட்டுகளும் பார்க்கும் இடமெல்லாம் பரவிக்
கிடக்கின்றன. பயன்படுத்திய பின் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களில்,
வெறும் பத்து சதவிகிதம் கூட மறு சுழற்சிக்காக சேகரிக்கப்படுவதில்லை.
பெரும்பாலும் சாலையோரமும், பயன் படுத்தாமல் கிடக்கும் காலி இடங்களிலும்
படர்ந்து பரவிக் கிடக்கின்றன.
காமுகனின் மனதில் ஊறும் வெற்றுக் காமம் போல், மண்ணோடு ஊடுருவிக்
கிடக்கிறது. மண்ணில் ஊறிய இந்த பிளாஸ்டிக் சனியன் மண்ணோடு மண்ணாக மட்கிப்
போக எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்? மிக எளிதாக பிளாஸ்டிக்கை மண்ணில்
கலக்கச் செய்யும் கொலை பாதகத்தை மனித சமுதாயம் எந்த குற்ற உணர்ச்சியும்
இல்லாமல் செய்து கொண்டேயிருக்கிறது.
மழை கொட்டி வெள்ளம் வடிந்த பின் ஒவ்வொரு சாக்கடை பள்ளத்தின் குறுக்கே
இருக்கும் குழாய்களிலும் கொத்துக் கொத்தாக பிளாஸ்டிக் குப்பைகள் குட்டிச்
சாத்தான்கள் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான சாட்சியம் மனித
சமூகத்திற்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணி. சாக்கடைகள் அடைபட்டு கலங்கிய
கழிவுநீர் சர்வ சாதாரணமாய் வீடுகளுக்குள் வருவதை சிறு முகச் சுழிப்போடு
நகரத்தில் மன்னிக்கவும் நரகத்தில் வாழும் மனித சமூகம் சகித்து வாழப்
பழகிவிட்டது.
அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் இந்த பிளாஸ்டிக் நகரத்தின் தரை முழுதும்
பரவி விடலாம். மழை நீர் மண்ணில் செல்ல வாய்ப்பற்று நிலமெல்லாம்
மலடாகிவிடலாம். பெய்யும் நீரும் சாக்கடை அடைப்புகளை மேவி ஆற்றுக்கு ஓடி
கடலை எட்டிவிடலாம். நகரத்தின் தாகம் தீர்க்க எங்கிருந்து நீர் கிடைக்கும்,
2000 அடி தோண்டுவோமா இல்லை 3000 அடி இல்லையில்லை 10,000 அடி அல்லது பூமிப்
பந்தின் மறுபக்கம் வரை தோண்டுவோமா, நம் விஞ்ஞானம் தொண்ட வைக்கலாம், ஆனால்
விஞ்ஞானத்திற்கு தண்ணீரை சிதைத்து சீரழிக்கத் தெரியும், புதிதாய் ஒரு
சொட்டு தண்ணீரை உருவாக்கத் தெரியுமா?
கடந்துபோகும் வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்த வரி என் கண்ணுக்குள் எரிச்சலோடு தகிக்கிறது...
“மூன்றாம் உலகப் போர் - தண்ணீருக்காக!”
-
பொறுப்பி : மீள் இடுகை சற்றே மாற்றப்பட்ட வடிவில்-
நன்றி: தி இந்து
4 comments:
என்னால் முடிந்த மட்டும் இனி கேரி பேக்கின் உபயோகத்தைத் தவிர்த்து விடுகிறேன் என்று உறுதியளிக்கிறேன்.
-வீரா
நல்ல பகிர்வு...
கேரி பேக் உபயோகத்தைத் தவிர்ப்போம்..
நான் தமிழ் தி இந்துவில் வாசித்தேன்.
பிளாஸ்டிக் பைகள் தவிற்க்கப்பட வேண்டும். நிலத்தடி நீரை நிலட்திர்குள் செல்லவிடாமல் செய்கின்ற கேரிபேக் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அரக்கன் தான்!!
கேரி பேக் அனைவரும் தவிர்க்க வேண்டிய ஒன்று. நல்ல பதிவு.
Post a Comment