பலரை இழிவு செய்து உணர்த்தப்படும் மனிதாபிமானம் கொடூரமானது

சிலருக்கு இந்தப் பதிவு பிடிக்காமல் போகலாம். அவர்கள் மனம் அமைதியுற முன்னதாகவே வேண்டிக்கொள்கிறேன்.

* மதுரையிலிருந்து இரவில் காரில் பயணம் துவங்கவுள்ள நிலையில் மகள் கழிவறை செல்ல வேண்டுகிறாள். அனுமதிக்க மறுத்து தந்தை அழைத்துச் செல்கிறார். வழியில் மிக மோசமான விபத்தைச் சந்திக்கிறது அந்தக் கார். இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். அம்மா மற்றும் ஓட்டுனருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மற்ற யாருக்கும் எந்த முதலுதவிகூட அளிக்கப்படவில்லை. ஆபத்தான நிலையில் இருக்கும் அம்மாவை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கிருக்கும் மருத்துவர் பணிக்கிறார். சுமார் காலை 8 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்து புறப்படுகின்றனர். வழியில் உடல் நிலை மோசமடைகின்றது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுகின்றது. தாய் இறந்து போகிறார். மீண்டும் ஆம்புலன்ஸ் மதுரை நோக்கி புறப்படுகின்றது. அவர் இறந்ததை உறுதிப்படுத்த வழியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையை அணுக, அங்கிருக்கும் மருத்துவர் உறுதிப்படுத்துகிறார். அப்போது அந்தப் பெண் உதவிசெய்ய வந்த நாயகனிடம் இந்தியில் 'கழிவறை எங்கு இருக்கு?’ என்று கேட்கிறார்.
* தீபாவளி தினத்தில் காலை 11 மணி சுமாருக்குத்தான், C2 பெருங்குடி காவல் நிலையத்தில் மாமூலாக வந்த ஸ்வீட் பாக்ஸ்கள் பங்கு பிரிக்கப்படுகின்றன. பிணம் ஒன்றினை விமானத்தில் நேரடியாக அனுப்ப முயன்ற ஒரு கும்பலை விசாரிக்க வேண்டிய சூழலில் கைதி ஒருவரை ஆடிப் பாடவிட்டதோடு காவல்நிலையத்தையே ஆடவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.
* உடற்கூறாய்வு முடிந்து உடலை ஒப்படைக்கும்போது பிணவறை ஊழியர் ”தீபாவளி பார்த்துக் கவனிங்க!” எனத் தலையைச் சொறிகிறார். நாயகனிடம் காசு இல்லை, நாயகனின் நண்பனிடமும் காசு இல்லை, அம்மாவின் சவத்தின் முன்னே குழந்தை உண்டியலை உடைத்து காசை அள்ளிக்கொண்டு வந்து தர, அந்த ஊழியர் அதை அப்படியே இரண்டு கைகளாலும் வாங்கிக் கொள்கிறார்.
Ayothi (அயோத்தி) திரைப்படத்தில்தான் மேலே குறிப்பிட்ட காட்சிகள் வருகின்றன.
** குறிப்பிட்ட முதற்காட்சியில் இரவில் ரயில் நிலையத்திலிருந்து காலை சுமார் ஒன்பது மணி வரைக்கும் அந்தப் பெண் சிறுநீர் கழிக்காமல் (சாட்சிக்கு... அப்பா முந்தையை இரவில் மகள் கேட்டதை நினைத்துப் பார்க்கிறார்) இருந்திருக்கிறார் என ஒருவேளை உணர்த்த முயன்றதாக இருந்தால் அது இயல்பான சென்டிமென்ட் வகை அல்ல, அந்தப் பாத்திரத்தின் மீது கொடூரமான பச்சாதாபத்தை திணிக்க முற்படும் வக்கிரமான சென்டிமென்ட் மட்டுமே!
** தீபாவளி தினத்தன்று காவல் நிலையத்தில் ஸ்வீட் பாக்ஸ்கள் பங்கு பிரித்தல், இன்ஸ்பெக்டர் கொளுந்தியாவுக்கு பங்கு, கைதியை அழைத்து காலை நேரத்தில் ஆடிப்பாட விடுவதெல்லாம் எதன் பொருட்டு இந்தக் கதையில்? தன்னை அடித்துவிட்டதாக ஒரு கம்பவுண்டர் புகார் தெரிவித்த பிறகும், எந்த அலைக்கழிப்பு இல்லாமல் தங்கள் கடமையை(!) காவல்துறை செய்ததுதானே. 04.11.2021 காலகட்டத்திலும் சிக்கலான ஒரு கேஸ் தொடர்பான ஐந்து பேரையும் காவல் நிலையத்தில் அமர வைத்துக்கொண்டே இன்ஸ்பெக்டர் அந்த ஆட்டம் போடுகிறார் என்பதன் மூலம் இயக்குனர் சொல்ல வருவது என்ன?
** பிணவறை உள்ளிட்ட சில இடங்களில், ஊழியர்கள் 'பார்த்து செலவுக்கு கொடுங்க!’ என்று தலை சொறிவதோ அல்லது சில இடங்களில் வற்புறுத்தி வாங்குவதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதுதான். ஆனாலும் அம்மாவின் பிணத்தின் முன்னே உண்டியலை உடைத்து கைகளில் பணத்தை அள்ளிக்கொண்டு வந்து ஒரு குழந்தை கொடுப்பதை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொள்ளும் அளவுக்கு அவர்களெல்லாம் மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருக்கவே மாட்டார்கள். இந்தக் காட்சியை வைக்க எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் வேண்டும்!
2011ம் ஆண்டில் எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்' எனும் உண்மைச் சம்பவ பதிவில் திரு.சாமுவேல் ஜோதிக்குமார், திரு.சுரேஷ்பாபு ஆகியோர் செய்த உதவியை அடிப்படையாகக் கொண்டுதான் (களவாடி) திரைக்கதை அமைத்துள்ளனர். (பதிவு இணைப்பு முதல் பின்னூட்டத்தில்)
அந்தப் பதிவைப் படிக்கும்போதே மனம் கனத்துப்போகும், கண்ணீர் துளிர்க்கும். அதில் பின்னூட்டமிட்ட பலரும் அந்த மனிதநேய உதவியில் நெகிழ்ந்துருகியிருக்கின்றனர். யாரென்றே அடையாளப்படுத்தப்படாத வினோத் ஸ்ரீவத்சவா குடும்பத்திற்கு சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ்பாபு ஆகியோர் பலவகைகளில் முயன்று உதவிவிட்டு, “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனது எத்தனை உருக்கமானது!
குறிப்பாக இந்த நிகழ்வுகள் //“நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர் சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்குமேல் விருந்தினர்கள் செல்லமுடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.//
படத்தின் நோக்கம் என்ன...?
மொழி தெரியாத இடத்தில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, கடும் இழப்பைச் சந்திக்கும்போது மனித நேயத்தோடு உதவ வேண்டும்... இதைத்தானே படம் வலியுறுத்துகின்றது.
அந்தக் குடும்பத்தலைவனை அநியாயத்திற்கு வில்லன் ஆக்காமல், படம் நெடுகிலும் கம்பவுண்டர், இன்ஸ்பெக்டர், பிணவறை ஊழியர், மருத்துவக்கல்லூரி டீன் வீட்டு செக்யூரிட்டி, ஏர்-கார்கோ ஆபிஸர் என்று அத்தனை பேரையும் அல்பமான மனிதர்களாக்காமல் அந்தப் பதிவில் கடத்திய உணர்வை காட்சிப்படுத்தலில் சிறப்பாக கடத்திவிட முடியாதா என்ன?
இலங்கையில் நான் பாஸ்போர்ட் தொலைத்தபோது, விமான நிலையை காவல் நிலையத்தில் இருந்த ஒரு சிங்களக் காவலர் தன்மையோடு அனைத்து உதவிகளையும் செய்து, செல்ஃபோன் எண் கொடுத்து மேலும் உதவிகள் தேவை என்றால் அழையுங்கள் என்றார். கொழும்பு இந்திய தூதரகத்தில் காவல் பணியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஒரு மத்திய படை காவலர் மிகுந்த அன்போடும் கனிவோடும் என்னிடம் நடந்துகொண்டார். கோரோனா காலத்தில் மாவட்டம்விட்டு மாவட்டம் தாண்ட முடியாத கெடுபிடி இருந்தபோது, மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கொல்கத்தாவில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் தனிப்பட்ட முறையில் ரிஸ்க் எடுத்து ஒரு ஐபிஎஸ் அதிகாரி அனுப்பி வைத்தார். மனிதர்களிடமிருந்து மனிதம் அப்படியொன்றும் மங்கிப்போய்விடவில்லை.
இந்தக் கதை முற்றிலும் கற்பனையாக இருந்திருந்தால் மனம் உருகி அடடா என்றிருக்கலாம். இப்போதும் மனம் உருகாமல் இல்லை.
’மொழி தெரியாத இடத்தில் இழந்து தவிப்போர்’ குறித்து சசிக்குமார் இரண்டு முறை பேசும் வசனம் அத்தனை தரம். எவரையும் உலுக்கக்கூடிய ஒன்று. அந்த மகள் பாத்திரத்தில் மிகச் சிறப்பானதொரு நடிப்பின் மூலம் அந்தப் பெண் வென்றெடுக்கிறார். மேலோட்டமாக ரசித்துக் கடக்க வேண்டுமென்றால் நல்ல படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நடந்தவை நடந்தவிதமாக மட்டுமே இருந்து, திணிப்பு காட்சிகளும் செயற்கையான சென்டிமென்ட் காட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் தரமான உலகப்பட வரிசையில் வைக்க வேண்டிய கதைதான்.
ஆனால் உண்மைச் சம்பவம் ஒன்றின் வழி நெடுகிலும் மனிதர்களைக் கோரமாக்குவதன் நோக்கம் மட்டும் புரியவேயில்லை. ஒரு மனிதாபிமானத்தை உயர்த்திக்காட்ட பலரை இழிவு செய்யும் உள்நோக்கம் மிகக் கொடூரமானது.

1 comment:

kathir said...

அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…
மாதவராஜ்

https://www.mathavaraj.com/2011/09/blog-post.html?fbclid=IwAR331TqjsAbing94tZBKCJu2PV54gAJ70NHsmPG_K0scnkxiIpFGQZK94qw